இவ் மறையுரையை வழங்குபவர்

அருட்பணி.இயேசு கருணாநிதி
Archbishop’s House, K. Pudur, Madurai 625 007, India
Email: yesu@live.in

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)









ஆண்டின் பொதுக்காலம் 3ஆம் ஞாயிறு

வாழ்க்கை மாற்றம்!

எசாயா 9:1-4
1 கொரிந்தியர் 1:10-13,17
மத்தேயு 4:12-23

'மாற்றம் ஒன்றே மாறாதது!' என நாம் அடிக்கடி சொல்லக் கேட்டிருப்போம்.

மாற்றங்கள் நம் வாழ்வில் தவிர்க்க முடியாதவை.

நம் உடலில் தொடங்கி, உணர்வுகள், உறவுகள், உயர்வுகள், குடும்பங்கள், சமூகம், நாடு, உலகம், பிரபஞ்சம் என அனைத்திலும் மாற்றங்கள் நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன. நம் மனதை ஒரு நிமிடம் கட்டுப்படுத்தி நம் மூளையில் ஓடுகின்ற எண்ணங்களை ஆராய்ந்து பார்த்தால், அந்த ஒரு நிமிடத்தில் நிறைய எண்ணங்கள் தோன்றி மறைகின்றன: 'பால் காசு, நாம் மதியம் பார்த்த சீரியல், வெளியே கேட்கும் சத்தம், நேற்று நமக்கு நடந்த ஏமாற்றம், நாளை நாம் செல்லும் திருமணம், அடுத்த மாதம் நடக்கும் தேர்வு' என அடுத்தடுத்து எண்ணங்கள் தோன்றி மறைகின்றன. ஆகையால்தான் கண்ணதாசனும், 'ஆயிரம் வாசல் இதயம். அதில் ஆயிரம் எண்ணங்கள் உதயம்' எனப் பாடுகிறார். நம் உடலிலும் மாற்றம் நடக்கின்றது. ஐந்து வயது இருந்தபோது எடுத்த ஃபோட்டோவை எடுத்து 10 வயது மாறி நிற்கும் சிறுவனிடம் கேட்டால் அதுவே அவனுக்கு அடையாளம் தெரிவதில்லை. ஐந்தைந்து வருடங்களில் நம் முழு உடலும், முகமும் மாற்றம் அடைகிறது. நம்மை நாமே அடையாளம் கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு மாறிவிடுகிறோம்.

நம்ம நாட்டில் ரூபாய் நோட்டில் மாற்றம், வங்கிப் பரிவர்த்தனைகளில் மாற்றம், தொலைதொடர்பு சிம் கார்டுகளில் மாற்றம், நம் தமிழகத்தில் அரசியல் மாற்றம், அவர் இவர் மாற்றம் என வேகமாக மாற்றங்கள் வந்துகொண்டே இருக்கின்றன.

சில மாற்றங்களை நாம் விரும்புகின்றோம். நம் வீட்டில் தினமும் குடித்துக்கொண்டே இருக்கும் ஒருவர் திடீரென குடியை நிறுத்திவிட்டார் என வைத்துக்கொள்வோம். அந்த மாற்றத்தை நாம் வரவேற்கின்றோம். வாழ்த்துகின்றோம்.

சில மாற்றங்களை நாம் விரும்புவதில்லை. நம்மிடம் நன்றாக பேசிக்கொண்டிருந்த ஒரு நண்பர் திடீரென்று பேச்சை நிறுத்திக்கொண்டால், நம் சொந்தக்காரார்கள் நம் வீட்டிற்கு வருவதை நிறுத்திக்கொண்டால், நன்றாக படித்துக்கொண்டிருந்த நம் மகன் திடீரென மதிப்பெண் குறைவாக வாங்க ஆரம்பித்தால் என்னும் மாற்றங்களை நாம் விரும்புவதில்லை.

இன்றைய இறைவாக்கு வழிபாடு நாம் விரும்பும் ஒரு மாற்றத்தைப் பற்றியே பேசுகின்றது.

அவமதிப்புக்குள்ளான இஸ்ரயேல் நாட்டின் பகுதி ஒளி, மகிழ்ச்சி, அக்களிப்பு என மாற்றம் அடைவதை முதல் வாசகமும், 'நான் அவருக்குரியவர்,' 'நான் இவருக்குரியவர்' என முரண்பட்டு நின்றவர்களை 'ஒரே மனமும் ஒரே நோக்கமும்' கொண்டவர்களை மாறச் செய்கிறார் கிறிஸ்து என்பதை இரண்டாம் வாசகமும், தனிவாழ்வு என்று நாசரேத்தில் வாழ்ந்தவர் பொதுவாழ்வு என்று கப்பர்நகூமுக்கு இடம் பெயர்வதையும், மீன்பிடி தொழிலில் இருந்தவர்களை மனிதர்களைப் பிடிப்பவர்களை மாற்றியதை இன்றைய நற்செய்தி வாசகமும் சொல்கிறது.

அ. அவமதிப்பிலிருந்து அக்களிப்பிற்கு

'நாம் வாழ்வதும், இருப்பதும், இயங்குவதும் அவரால்தான், அவரில்தான், ஆண்டவரில்தான்' என முழுமையாக நம்பினர் இஸ்ரயேல் மக்கள். ஏனெனில் பாலைவனத்தில் உள்ளவர்களுக்கு அப்படிப்பட்ட இறைபுரிதல்தான் இருக்கும். விளைச்சல், வியாபாரம், பாதுகாப்பு, பயணம் என எல்லாவற்றிற்கும் உறுதுணையாய் நிற்பவர் இறைவன் என்றே புரிந்துகொண்டனர். இறைவன் தான் நினைப்பது போலவே அனைத்தையும் செயலாற்றுகிறார் என்று புரிந்து கொண்ட இஸ்ரயேல் மக்கள், தாங்கள் அனுபவிக்கும் அவமதிப்பு கூட அவரிடமிருந்தே வந்தன என ஏற்றுக்கொண்டனர்.

  'நாம் உங்கள் கடவுளாய் இருப்போம், நீங்கள் எம் மக்களாய் இருப்பீர்கள்!' என இஸ்ரயேல் மக்களோடு சீனாய் மலையில் உடன்படிக்கை செய்து கொண்ட யாவே இறைவன், அவர்களைத் தொடர்ந்து வழிநடத்துகிறார். ஆனால், அவர்களும், அவர்களின் அரசர்களும் சிலைவழிபாடு செய்து, கட்டளைகளை புறக்கணித்து, ஆண்டவரின் கட்டகைளை மீறியதால் அவர் அவர்களை பாபிலோனிய மன்னம் நெபுகத்னேசர் கையில் ஒப்படைக்கின்றார். பாபிலோனியாவுக்கு நாடுகடத்தப்பட்ட மக்கள் அனுபவித்த கஷ்டங்களை 'நுகம்,' 'தடி,' 'கொடுங்கோல்' என்ற மூன்று உருவகங்கள் வழியாக எடுத்துரைக்கின்றார் எசாயா இறைவாக்கினர்.

ஒரு வண்டியில் மாடுகளை இணைக்கப் பயன்படும் நீண்ட மரக்கட்டையே நுகம். நுகம் மாட்டின் தோள்மேல் வைக்கப்படும். நுகம் அழுத்தம் தரும். நுகம் கழுத்தை தொங்க வைக்கும். நுகம் பார்வையைச் சுருக்கிவிடும். வண்டியில் உள்ள பாரம் நுகத்தின் வழியாக கழுத்தை அழுத்தும்.

'தடி' என்பது மாடுகளை அடித்து முன்னே செல்லப் பயன்படுத்தும் கட்டை. இது பாலைவனத்தில் எதிரி விலங்குகளின் கைகளிலிருந்து கால்நடைகளைத் தப்புவிக்கவும் பயன்பட்டது. தடியின் நுணி ஆணிகளைக் கொண்டிருக்கும். தடியால் அடிக்கும்போது அந்த ஆணிகள் அப்படியே சதையில் குத்தி சதைகளைக் கிழிக்கும்.

'கொடுங்கோல்' என்பது நுனியில் ஆணி அல்லது கொண்டிருக்கும் நீண்ட தார்க்குச்சி. வேகம் குறைவாக வண்டி இழுக்கும் மாட்டின் வேகத்தை அதிகப்படுத்த 'தார்க்குச்சி' கொண்டு அதைக்குத்துவர்.

இவ்வாறாக, பாபிலோனியாவில் இஸ்ரயேல் மக்களுக்கு வலியும், துன்பமும், வேதனையும், கண்ணீரும், இரத்தமும் மட்டுமே மிஞ்சின.

ஆனால், கடவுள் தன் உடன்படிக்கையை மறக்கவில்லை. தன் மக்களை மறக்கவில்லை.

அவர்கள்மேல் தன் ஒளியை ஒளிரச் செய்கின்றார். அந்த ஒளிதான் சைரசு அரசன். மெசியாகவாக வந்த அவன் அவர்களைத் தன் சொந்த நாடு திரும்ப அனுமதிக்கிறான். அவன் தந்த ஒளியால் என்ன ஆகிறது?

'நுகம்' உடைக்கப்படுகிறது. 'தடி' தகர்க்கப்படுகிறது. 'கொடுங்கோல்' ஒடிக்கப்படுகிறது.

மக்கள் புதிய வாழ்வைப் பெறுகின்றனர். அந்தப் புதிய வாழ்வை 'அக்களிப்பு' என பதிவு செய்கின்றார் எசாயா. அக்களிப்பை இரண்டு நிலைகளில் அடையாளப்படுத்துகிறார் எசாயா: (1) அறுவடை நாளில் கிடைக்கும் அக்களிப்பு, (2) கொள்ளைப் பொருளைப் பங்கிடும்போது கிடைக்கும் அக்களிப்பு. முதல் வகை அக்களிப்பு அமைதியான சூழலில் கிடைக்கும் மகிழ்ச்சி. இரண்டாம் வகை அக்களிப்பு போர்முடிந்து கிடைக்கும் மகிழ்ச்சி. இந்த இரண்டு மகிழ்ச்சிகளுமே எதிர்பாராமல் கிடைக்கக்கூடியவை. இரண்டு வகை மகிழ்ச்சியிலும் கொஞ்சம் உழைப்பும், வேதனையும் இருந்தாலும், கிடைத்த மகிழ்ச்சியின் முன்னால் அவை மறைந்துபோகின்றன. இவ்வாறாக, கடவுள் அவமதிப்பிலிருந்து அக்களிப்பிற்கு இஸ்ரயேல் மக்களின் வாழ்க்கை மாற்றுகின்றார்.

ஆ. பிளவுகளிலிருந்து ஒற்றுமைக்கு

பவுல் எழுதும் திருமுகங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு காரணத்திற்காக எழுதப்பட்டவை. அவர் கொரிந்தியருக்கு எழுதிய திருமுகங்கள் கொரிந்து நகர மக்கள் சந்தித்த பிரச்சினைகளுக்கு விடைகள் சொல்வதாக அமைந்திருக்கின்றன. சிலைவழிபாடு, பலதார மணம், பிளவு மனப்பான்மை, உட்கட்சி பூசல், நம்பிக்கையாளர்களின் ஏற்றத்தாழ்வு என பல பிரச்சினைகளுக்கு விடை சொல்கிறது அவரின் திருமுகம்.

இன்றைய இறைவாக்குப் பகுதியில் பவுல் கையாளும் பிரச்சினை பிளவு அல்லது கட்சி மனப்பான்மை.

ஒரு பங்கில் நிறைய அருள்பணியாளர்கள் பணியாற்றுகிறார்கள் என வைத்துக்கொள்வோம். ஒவ்வொரு அருள்பணியாளருக்கும் என அந்தப் பங்கில் நட்பு வட்டம் இருக்கும். அந்த நட்பு வட்டம் அடுத்த அருள்பணியாளரின் நட்பு வட்டத்தோடு இணைந்து போகாது. என்னைப் பிடிக்கும் ஒருவருக்கு எனக்கு அடுத்து வருபவரைப் பிடிக்காது. இதனால் என்ன நடக்கும்? அடுத்து வருபவர் என்ன நல்லது செய்தாலும் இவர் அவரை ஏற்றுக்கொள்ள மாட்டார்.

இது ஏன் வருகிறது?

சுட்டிக்காட்டப்படும் நிலவை விட்டுவிட்டு, சுட்டிக்காட்டும் விரலைப் பிடித்துக்கொள்வதால்தான். எல்லா அருள்பணியாளர்களும் தங்கள் விரலை இயேசுவை நோக்கி, அவரின் விழுமியங்களை நோக்கிச் சுட்டிக்காட்டுகின்றனர். ஆனால், மக்கள் இயேசுவையும், அவரின் விழுமியங்களையும் பற்றிக்கொள்வதை விடுத்து, பணியாளர்களின் விரல்களைப் பற்றிக்கொள்கின்றனர்.

'எனக்கு அப்பொல்லோதான் பிடிக்கும்!' 'எனக்கு கேபாதான் பிடிக்கும்!' 'எனக்கு பவுல்தான் பிடிக்கும்!' என பலரும், 'எனக்கு கிறிஸ்துதான் பிடிக்கும்!' என சிலருமாய் பிளவுபட்டு நிற்கின்றனர்.

இவர்களை எப்படி ஒருங்கிணைப்பது?

கிறிஸ்துவின் சாவையும், அவர்கள் பெற்ற திருமுழுக்கையும் கையில் எடுக்கின்றார் பவுல்.

'அப்பொல்லோவோ, கேபாவோ, பவுலோ' சிலுவையில் அறையப்படவில்லை. அவர்களின் பெயரால் யாரும் திருமுழுக்கு பெறவில்லை. மாறாக, கிறிஸ்துவே சிலுவையில் அறையப்படுகின்றார். கிறிஸ்துவின் பெயராலேயே திருமுழுக்கு பெறுகின்றனர்.

கிறிஸ்துவின் இறப்பும், திருமுழுக்கும் அவர்களை பிளவிலிருந்து ஒற்றுமைக்கு அழைத்துவரவேண்டும்.

திருமுழுக்கு கொடுத்தவர் வேண்டுமானால் வேறு வேறு நபர்களாக இருக்கலாம். ஆனால், திருமுழுக்கு ஒன்றே. ஆக, நம் தனிப்பட்ட அடையாளங்களை விடுத்து, பொது அடையாளங்களைப் பற்றிக்கொள்ளும்போது நாம் ஒன்றுபட்டவர்களாக மாறிவிடுகின்றோம்.

'ஒத்தக் கருத்துடையவர்களாக, ஒரே மனமும், ஒரே நோக்கமும் கொண்டிருப்பவர்களாக' மாறுங்கள் என அழைக்கிறார் பவுல்.

இ. தனிவாழ்விலிருந்து பொதுவாழ்விற்கு

30 ஆண்டு காலம் நாசரேத்தில் தனிவாழ்வு வாழ்ந்த இயேசு இன்று பொதுவாழ்விற்குள் நுழைகின்றார். பொதுவாழ்வை அவர் தொடங்க எடுத்துக்கொள்ளும் இடம் கப்பர்நகூம். உரோமைப் படையெடுப்பிற்குப் பின் பாலஸ்தீனத்தில் அதிகமாக மனித புலம்பெயர்வு நடக்கிறது. கப்பர்நகூம் யூதர்களின் நிலப்பகுதிதான் என்றாலும், அங்கே நிறைய புறவினத்தார்கள் குடியேறுகின்றனர். அரசர்களும், அரச அலுவலர்களும், ஆளுநர்களும், தலைமைக்குருக்களும், பரிசேயர்களும், சதுசேயர்களும் குடியிருந்தது எருசலேம் நகரம். அந்த நகரத்தில் சாதாரண மக்களுக்கும், சாதாரண தொழில் செய்வோருக்கும் அங்கே இடமில்லை. இயேசு தன் பணித்தளமாக எருசலேமை எடுத்துக்கொள்வதற்குப் பதிலாக, கப்பர்நகூமை எடுத்துக்கொள்கிறார்.

முதல் ஏற்பாட்டு எசாயாவின் இறைவாக்கின் நிறைவாக வருகின்றார் இயேசு. ஏனெனில், 'காரிருளில் நடந்த மக்கள் கண்ட ஒளி, சாவின் நிழல் சூழ்ந்திருப்பார் நாட்டில் குடியிருப்போர் மேல் உதித்த சுடரொளி' இயேசுதான் என முன்மொழிகிறார் மத்தேயு நற்செய்தியாளர்.

இயேசுவின் போதனை ஒரு கட்டளை வாக்கியத்தையும், ஒரு நேர்முக வாக்கியத்தையும் உள்ளடக்கி இருக்கிறது: 'மனம் மாறுங்கள். ஏனெனில் விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது.' இயேசுவின் பிறப்பு, வருகை, பாடுகள், இறப்பு, உயிர்ப்பு என அனைத்தையும் 'விண்ணரசு' என்ற ஒற்றைச் சொல்லில் அடக்கிவிடலாம். அந்த ஒற்றைச் சொல்லை நாம் உள்வாங்க நமக்குத் தேவை 'மனம் மாற்றம்.'

இயேசுவின் வாழ்வு மற்றும் மாறவில்லை. அவர் மட்டும் தனிவாழ்விலிருந்து பொதுவாழ்விற்கு வரவில்லை. அவரின் முதற்சீடர்களும் வருகின்றனர். சீமோன், அந்திரேயா, யோவான், யாக்கோபு என முதற்சீடர்களை அழைக்கின்றார் இயேசு. தங்கள் குடும்பம், வலை, மீன்பாடு, வேலைக்காரர்கள் என வாழ்ந்தவர்களை 'மனிதர்களைப் பிடிப்போராக' மாற்றுகிறார் இயேசு. அவர்களும் அனைத்தையும் விட்டுவிட்டு இயேசு அழைக்கும் மாற்றத்திற்குத் தயாராகின்றனர்.

இயேசுவும் அவருடைய சீடர்களும் இணைந்து மேற்கொண்ட இறையாட்சிப் பணியை மூன்று சொல்லாடல்கள் வழியாகப் பதிவு செய்கின்றார் மத்தேயு: (1) கற்பித்தார், (2) நற்செய்தி சொன்னார், (3) நோய்களைக் குணமாக்கினார். பொதுவாழ்வின் மூன்று பண்புகள் இவையே.

இன்றைய இறைவாக்கு வழிபாடு நமக்கு முன்வைக்கும் வாழ்க்கைப்பாடங்கள் எவை?

அ. தன்மையம் விடுத்து இறைமையம் நோக்கி

இஸ்ரயேலின் வாழ்க்கை மாற்றம், கொரிந்து நகர திருஅவையின் வாழ்க்கை மாற்றம், இயேசுவின் வாழ்க்கை மாற்றம் என்ற மூன்றிற்கும் பொதுவாக இருப்பது இறைமையம் நோக்கிய நகர்வு. தன்மையம் விடுத்து இறைமையம் நோக்கி நகர்வதே வாழ்வில் நாம் உள்வாங்கும் மிகப்பெரிய மாற்றம். தன்மையம் நம்மை அவமதிப்பு அடையச் செய்கிறது. இறைமையம் நமக்கு ஒளி தருகிறது. தன்மையம் பிளவை ஏற்படுத்துகிறது. இறைமையம் அனைவரையும் ஒன்றிணைக்கிறது. தன்மையம் வாழ்வைச் சுருக்குகிறது. இறைமையம் வாழ்க்கையை விசாலப்படுத்துகிறது.

இயேசுவின் விண்ணரசு செய்தியும் 'இறைமையம்' கொண்டிருக்கிறது. 'மனம் மாறுங்கள். என் அரசு நெருங்கிவிட்டது!' என தன்னை முன்னிலைப்படுத்தவில்லை இயேசு. 'கிறிஸ்துவை அல்ல. என்னை முன்னிலைப்படுத்துங்கள்' எனச் சொல்லவில்லை பவுல்.

இறைமைய வாழ்வு என்றால் என்ன?

அனைத்திற்கும் தொடக்கமும், இயக்கமும் இறைவன் என உணர்தலே இறைமைய வாழ்வு. நம் வாழ்வில் நடக்கும் நல்லவற்றிற்கு நாம் காரணம் எனவும், கெட்டவற்றிற்கு கடவுள் காரணம் எனவும் நினைக்கிறோம் நாம். ஆனால், அனைத்தையும் அதனதன் நேரத்தில் செய்து முடிப்பவர் அவரே என்று உணர்ந்து வாழ்ந்தால் வாழ்க்கை மாற்றம் நிச்சயம்.

ஆ. என்னைப் பின்தொடர்ந்து வா!

இயேசுவின் சீடராக இருப்பது என்றால் என்ன? சிலர் சொல்கிறார்கள் அவரின் வாழ்வை நாம் கடைப்பிடித்தால், அவரின் விழுமியங்களை நாம் வாழ்வாக்கினால் நாம் அவரின் சீடர்கள் என்று. ஆனால், அது அல்ல சீடத்துவம். சீடத்துவம் என்பது இயேசுவைப் பார்த்து வியப்பதோ, அவரை என் ஆன்மீக மீட்பராக ஏற்றுக்கொள்வதோ அல்ல. மாறாக, அவரைப் பின்பற்றுவது. 'நீர் எங்கே போகிறீர்?' என்று எந்தச் சீடரும் அவரைக் கேட்கவில்லை. தாங்கள் எங்கே செல்கிறோம் என்று தெரியாமலேயே புறப்பட்டுச் செல்கிறார்கள் முதற்சீடர்கள். ஆக, இயேசுவைப் பின்பற்றுதல் என்பது ஒரு நம்பிக்கைப் பயணம். இந்த நம்பிக்கை முதற்சீடர்களுக்கு எங்கிருந்து வந்தது? ஒருவரைக் கண்டவுடன் தன் அனைத்தையும் இழக்கும் துணிச்சலை இவர்களுக்குக் கொடுத்தது யார்?

எனக்கு இதே துணிச்சல் இருக்கிறதா?

நாம் எப்படி இயேசுவின் சீடர் ஆனோம்? - என்று நம்மிடம் கேட்டால் நாம் என்ன பதில் சொல்வோம்? நம் பெற்றோர்கள் நம்பிக்கை கொண்டிருந்ததால் அந்த நம்பிக்கையில் நாம் திருமுழுக்கு பெற்றோம். கிறிஸ்தவர்கள் ஆனோம். கிறிஸ்தவர் ஆவது வேண்டுமானால் ஆட்டோமேடிக்காக நடக்கலாம். ஆனால், சீடராவது ஒவ்வொரும் தனிப்பட்ட முறையில் செய்ய வேண்டிய ஒன்று.

  இயேசுவின் முதற்சீடர்கள் இயேசுவைத் தேடி ஓய்ந்திருக்கவில்லை. மாறாக, அவர்கள் தங்கள் அன்றாட வாழ்க்கை நிகழ்வுகளில் பிஸியாக இருக்கிறார்கள். அப்படிப்பட்டவரைத்தான் இயேசு அழைக்கின்றார். ஆக, அவரின் அழைப்பு எனக்கு எப்போது வரும்? என் வாழ்க்கை நிகழ்வுகளில் நான் வியர்வை சிந்தி நிற்கும்போதுதான் வரும். இறைவன் நம்மைக் கண்டுகொண்டால் அன்றி நாமாக அவரைப் பின்பற்ற முடியாது. ஆக, என் அழைப்பிலும் இறைவனே முதன்மை பெறுகின்றார். சீடத்துவம் என்பது இயேசு நமக்கு முன் வைக்கும் ஒரு ஆப்ஷன் அல்ல. மாறாக, அதுவே ஒரு வாழ்க்கை மாற்றும்.

இ. கற்பி - நல்லவை சொல் - குணமாக்கு

இயேசுவின் மேற்காணும் முப்பணிகள் உடனடியாக நடக்கின்றன. இந்த மூன்று பணிகளும்தான் ஒருவருக்கு விடுதலை தருகின்றன. ஒருவரை புதிய நிலைக்கு உயர்த்துகின்றன. ஒருவரின் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்துகின்றன. இன்று நான் எதைக் கற்பிக்கிறேன்? என் வாழ்வு மற்றவர்களுக்கு எதையாவது போதிக்கிறதா? நான் அல்லவை சொல்கின்றேனா? கனியிருப்பக் காய் கவர்கின்றேனா? குணமாக்குகின்றேனா? அல்லது காயப்படுத்துகின்றேனா?

இறுதியாக,

கப்பல் ஒன்று துறைமுகத்தில் நின்றது. அது புதிய கப்பல். எல்லாரும் அதைச் சுற்றி வந்து அதன் மேன்மை கண்டு வியந்தார்கள். அந்தக் கப்பல் அவர்களின் புகழ்ச்சியில் மெய்மறந்து நின்றது. தினம் தினம் மக்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே வந்தது. ஒரு கட்டத்தில் அவர்களின் புகழ்ச்சி போரடிக்க ஆரம்பித்தது. தான் உருவாக்கப்பட்டது மற்றவர்கள் தன்னைப் புகழ்வதற்காக? அல்லது மற்றவர்கள் பயணம் செய்ய உதவுவதற்கா? அந்த நாளும் வந்தது. ஒலிப்பான்கள் ஊத, மணிகள் அடிக்க, தன் பயணத்தைத் தொடங்கியது. கரையில் மென்மையாக தன் பாதங்களைத் தடவிய அலைகள், கடலில் இதன் முகத்தில் ஓங்கி அடிக்க ஆரம்பித்தன. கடற்காற்றில், வெயிலில் இது தன் நிறத்தை இழக்கத் தொடங்கியது. ஆனால், தன் வாழ்க்கை மாறியது பற்றி அது மகிழ்ந்தது.

ஏனெனில், கப்பல்கள் கட்டப்படுவது கரைகளில் நிறுத்தப்படுவதற்கு அல்ல. கடலுக்குள் சென்று பயணம் செய்யவே!

கப்பல்களின் நங்கூரங்கள் கழற்றப்பட்டால் அவைகளின் பயணம் தொடங்கும்,

என் வாழ்வின் நங்கூரங்கள் கழற்றப்பட்டால் என் வாழ்க்கையும் மாற்றம் பெறும். இல்லையா?