இவ் மறையுரையை வழங்குபவர்

அருட்பணி.இயேசு கருணாநிதி
Archbishop’s House, K. Pudur, Madurai 625 007, India
Email: yesu@live.in

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)









கிறிஸ்து பிறப்பு பெருவிழா (இரவில் திருப்பலி)

வலுவின்மையின் மாற்றம்

எசாயா 9:2-7
தீத்து 2:11-14
லூக்கா 2:1-14

கிறிஸ்து பிறப்பு நிகழ்வை நாம் மூன்று விதங்களில் பார்க்கலாம்:

ஒன்று, இது ஒரு புரட்சியின் அல்லது புரட்டிப் போடுதலின் கதை. லூக்கா நற்செய்தியாளர் கிறிஸ்து பிறப்பு பற்றி பதிவு செய்யும் இடத்தில் 3 வசனங்களில் இயேசுவின் பிறப்புச் சூழலைப் பற்றிப் பதிவு செய்துவிட்டு, ஒற்றை வசனத்தில், 'அவர் (மரியா) தம் தலைமகனைப் பெற்றெடுத்தார். விடுதியில் அவர்களுக்கு இடம் கிடைக்கவில்லை' (லூக் 2:7) என எழுதுகின்றார். மக்கள் தொகைக் கணக்கெடுப்பு போன்ற மெகா ப்ராஜக்ட்கள் அரசுகளால் முன்னெடுக்கப்படும்போது, அவற்றால் பாதிக்கப்படுபவர்கள் எளிமையானவர்கள். பேறுகால வேதனையில் உள்ள பெண்ணுக்கும், அவருடைய கணவருக்கும், இவ்வாறாக, புலம் பெயர்ந்தவர்களுக்கும் இடம் மறுக்கப்படுகிறது. மக்கள் தொகை என்னும் கணக்கேட்டில் இடம் பெற முயன்ற அந்த மக்களுக்கு கணக்கேடு நடைபெற்ற இடத்தில் அனுமதி மறுக்கப்படுகிறது.

இரண்டு, இது மாற்றத்தின் அல்லது இயக்கத்தின் கதை. 'ஒன்றின் தொடக்கமல்ல. அதன் முடிவே கவனிக்கத்தக்கது' என்கிறார் சபை உரையாளர் (7:8). தொடக்கம் முடிவாக மாற்றம் பெறுகிறது. தீவனத் தொட்டியில் துணிகளில் பொதிந்து வைக்கப்பட்ட குழந்தை ஆண்டவராகவும் மெசியாவாகவும் மீட்பராகவும் மாற்றம் பெறுகிறது.

மூன்று, இது வலுவற்றவர்களின் கதை. அகுஸ்து சீசர், குரேனியு என்னும் பேரரசர்கள், பெரிய இல்லங்களுக்கு மறுக்கப்பட்ட கிறிஸ்துவின் பிறப்பு தீவனத் தொட்டியில் நடந்தேறுகிறது. பெரிய இடங்களும் மனிதர்களும் புறக்கணிக்கப்பட்டு, சிறிய இடங்களும் மனிதர்களும் முதன்மை பெறுகின்றார். இயேசுவின் பிறப்பு செய்தி, லூக்கா நற்செய்தியாளரின் பதிவின்படி, முதன் முதலாக இடையர்களுக்கு அறிவிக்கப்படுகின்றது. இடையர்கள் தூய்மையற்ற தொழில் புரிபவர்களாகவும், பொய்யர்கள் மற்றும் திருடர்கள் எனவும் அழைக்கப்பட்டனர். ஆனால், இவர்களே உலகுக்கெல்லாம் மகிழ்ச்சியூட்டும் செய்தியைப் பெற்றுக்கொள்கின்றனர்.

நிற்க.

இயேசுவின் பெற்றோர், வானதூதர்கள், இடையர்கள் என்னும் முக்கோணத்தில் நகர்கிறது இன்றைய நற்செய்தி வாசகம். இவர்களையும் இவர்களோடு நம்மையும் இணைக்கிறவர் குழந்தை இயேசுவே.

'துணிகளில் சுற்றித் தீவனத் தொட்டியில் கிடத்தப்பட்ட குழந்தை' 'ஆண்டவராகவும், மெசியாகவும், மீட்பராகவும்' மாறுகின்றார்.

நம் முதற்பெற்றோர் ஏதேன் தோட்டத்திலிருந்து வெளியே அனுப்பப்பட்ட போது ஆண்டவராகிய கடவுள் தோல் ஆடைகள் செய்து அவர்கள் அணியச் செய்கின்றார் (காண். தொநூ 3:21). மனிதர்களின் பாதுகாப்பின்மையைக் களைகின்றார் கடவுள். அவர்களை உடுத்துகின்றார்.

தீவனத் தொட்டி - வெறுமையான தீவனத்தொட்டி வறுமையின் அடையாளம். நிறைவான தீவனத்தொட்டி மகிழ்வின் அடையாளம். இங்கே குழந்தை தீவனத்தொட்டியின் வெறுமையை நிறைக்கிறது.

'ஆதாமை, ஆண்டவராகிய கடவுள் ஏதேன் தோட்டத்தை விட்டு விரட்டினார். கண்ணீரும் கவலையுமாய் சற்றுத் தூரம் கடந்து திரும்பிப் பார்க்கும் ஆதாம், ஏதேன் தோட்டத்தை ஏக்கத்தோடு பார்க்கிறார். ஆதாமை வெளியே அனுப்பியதில் கடவுளுக்கும் சற்றே வருத்தம்.

'நான் கழுதையுடன் தீவனத் தொட்டியில் உணவருந்த வேண்டுமோ?

என் குழந்தையின் வாய், கழுதைகள் உண்ணும் தீவனத் தொட்டியில் பட வேண்டுமோ?'

என்று கேட்டுக்கொண்டே ஆதாம் நகர்கின்றார்.

அவரின் பார்வையிலிருந்து தோட்டமும் மறைகின்றது, கடவுளும் மறைகின்றார்.'

ரபிக்களின் மித்ராஷ் இலக்கியம் ஒன்று இப்படிக் குறிப்பிடுகிறது.

'காளை தன் உடைமையாளனை அறிந்துகொள்கிறது. கழுதை தன் தலைவன் தனக்குத் தீனி போடும் இடத்தைத் தெரிந்துகொள்கின்றது. ஆனால், இஸ்ரயேலோ என்னை அறிந்துகொள்ளவில்லை. என் மக்களோ என்னைப் புரிந்துகொள்ளவில்லை' (எசா 1:3) என்று எசாயா இறைவாக்கினர் ஆண்டவராகிய கடவுளின் சோக வார்த்தைகளைப் பதிவுசெய்கின்றார்.

ஒரு பக்கம், கழுதையின் தீவனத் தொட்டியில் உணவருந்த வேண்டிய கட்டாயம் ஆதாமுக்கு.

இன்னொரு பக்கம், தீவனத் தொட்டி இருந்தும் அதன் பக்கம் திரும்பாத இறுமாப்பு இஸ்ரயேலுக்கு.

இந்த இரண்டுக்கும் ஒரு முற்றுப்புள்ளியாக இருக்கின்றது 'தீவனத் தொட்டியில் பொதிந்து வைக்கப்பட்ட குழந்தை.'

குழந்தை வலுவின்மையின் சார்புநிலையின் அடையாளமாக இருக்கிறது.

'இன்று உங்களுக்காகப் பிறந்திருக்கிறார்' என்பது வானதூதர்களின் செய்தியாக இருக்கின்றது. லூக்கா நற்செய்தியைப் பொருத்தவரையில் 'இன்று' என்பது வெறும் காலக்கோட்டின் நேரம் அல்ல. மாறாக, கடவுளின் நீடித்த நிலையான காலம். கடவுளுக்கு நேரம் என்பது எப்போதும் இன்றுதான். குழந்தை இடையர்களுக்காக – வலுவற்றவர்களுக்காக – பிறக்கிறது.

வலுவின்மையின் மாற்றமே கிறிஸ்து பிறப்பு.

இன்றைய முதல் வாசகத்தில் (எசா 9:2-4,6-7) மேலோங்கி நிற்கின்ற உணர்வுகள் இரண்டு: ஒன்று, மகிழ்ச்சி. போர், வன்முறை, வெறுமை என இருளில் வாழ்ந்த மக்கள் பேரொளியைக் காண்கின்றனர். இந்தப் பேரொளியை அவர்களுக்குத் தருபவர் மகிழ்ச்சியே. 'ஒளி கண்களுக்கு மகிழ்ச்சியூட்டும். கதிரவனைக் கண்டு கண்கள் களிக்கும்' (சஉ 11:8-10) என்பது போல, இஸ்ரயேல் மக்கள் ஒளியைக் கண்டவுடன் மகிழ்ச்சி அடைகின்றனர். இந்த மகிழ்ச்சிக்கு இரு உருவகங்கள் தரப்படுகின்றன: 'அறுவடை நாளில் மகிழ்வது போல,' 'கொள்ளைப் பொருளைப் பங்கிடும்போது மகிழ்வது போல.' இவ்விரு உருவகங்களும் தனிமனிதர் கொள்ளும் வாழ்வின் நிறைவைக் குறைக்கின்றன. மேலும், அடிமைத்தனத்தின் அடையாளங்களான நுகம், தடி, மற்றும் கொடுங்கோல் ஆகியவை அழிக்கப்படுகின்றன.

இறைவாக்கினர் மற்றோர் அடையாளத்தையும் கொடுக்கின்றார்: 'ஒரு குழந்தை நமக்குப் பிறந்துள்ளார்'. இந்த ஆண்மகவு, 'வியத்தகு ஆலோசகர், வலிமைமிகு இறைவன், என்றுமுள தந்தை, அமைதியின் அரசர்' என அழைக்கப்படுகின்றார். இது எதிர்நோக்கை அழைக்கின்றது. வலுவின்மையில் இருக்கின்ற குழந்தை வல்லமை பெறும் என்னும் எதிர்நோக்கை இஸ்ரயேல் மக்கள் பெற்றுக்கொள்கின்றனர்.

இரண்டாம் வாசகத்தில் (தீத் 2:11-14), மனிதர் அனைவருக்கும் கடவுளிள் அருள் வெளிப்பட்டுள்ளது என எழுதுகின்ற பவுல், 'மகிழ்ச்சியோடு எதிர்நோக்கியிருப்பது நிறைவேறும் எனக் காத்திருக்கின்றோம்' இயேசுவின் இரண்டாம் வருகையை எதிர்பார்த்துக் காத்திருக்குமாறு நம்மை அழைக்கின்றார்.

நற்செய்தி வாசகத்தில் (லூக் 2:1-14) கிறிஸ்து பிறப்பு செய்;தி இடையர்களுக்கு அறிவிக்கப்படும் நிகழ்விலும் மகிழ்ச்சியும் எதிர்நோக்கும் மேலோங்கி நிற்கின்றன. 'எல்லா மக்களுக்கும் பெரும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன்' (2:10) என்னும் வானதூதர்களின் அறிவிப்பில் மகிழ்ச்சி முதன்மைப்படுத்தப்படுகிறது. தொடர்ந்து, 'உன்னதத்தில் கடவுளுக்கு மாட்சி உரித்தாகுக! உலகில் அவருக்கு உகந்தோருக்கு அமைதி உண்டாகுக!' என்று வரவிருக்கின்ற மாட்சி பற்றிய எதிர்நோக்கு அளிக்கப்படுகிறது.

நம் வலுவின்மையில் நாம் மகிழ்ச்சி காண்பதும், வலுவின்மை மாற்றம் பெறும் என்று எதிர்நோக்குவதும் கிறிஸ்து பிறப்பின் செய்தியாக இருக்கிறது.

இன்று நாம் அனுபவிக்கும் வலுவின்மை என்ன?

உடல் அளவில் நோய், மற்றும் முதுமையின்போதும், அதிக பணி, பயணம் போன்ற நேரங்களிலும் வலுவின்மையை அனுபவிக்கின்றோம்.

அறிவு அளவில் நாம் அனுபவிக்கும் வலுவின்மை அறியாமை என வெளிப்படுகிறது. சில நேரங்களில் வாழ்வின் எதார்த்தங்கள் நமக்குப் புரிவதில்லை. 'இது ஏன் நடக்கிறது?' 'இது ஏன் எனக்கு நடக்கிறது?' என்னும் கேள்விகளுக்குப் பின்னர் ஒளிந்திருப்பது அறிவுசார் வலுவின்மையே.

உறவு நிலைகளில் நாம் கொள்கின்ற கோபம், எரிச்சல், பொறாமை, சந்தேகம் போன்றவை வலுவின்மையை ஏற்படுத்துகின்றன.

ஆன்மிக அளவில் நம் பாவங்கள் நம்மை வலுவின்மையில் வைத்திருக்கின்றன.

மேற்காணும் வலுவின்மை அனுபவங்கள் நம் வரையறை அனுபவங்களாக மாறும்போது அவற்றிலிருந்து நாம் வெளியே வருவோம் என்னும் எதிர்நோக்கு அவசியமாகிறது.

'குழந்தை' மகிழ்ச்சி மற்றும் எதிர்நோக்கின் அடையாளமாக இருக்கின்றது. ஏனெனில், இந்த உலகில் புதிய உயிர் தோன்றியுள்ளது என்பதை நாம் இதில் உணர்கிறோம். குழந்தை எப்போதும் குழந்தையாக இருப்பதில்லை. பிறந்த அந்த நொடியிலிருந்து அது வளரத் தொடங்குகிறது. குழந்தை இயங்கத் தொடங்குகின்றது.

'இன்று' இயேசு பிறந்துள்ளார். 'இன்று' என்பது வெறும் காலக்கோட்டு நேரம் அல்ல. மாறாக, இறைவன் செயலாற்றும் நீடித்த நேரம். இறைவனைப் பொருத்தவரையில் எல்லா நேரமும் இன்றுதான். இறந்த காலம் நமக்குக் குற்ற உணர்வைத் தருகிறது. எதிர்காலம் பயம் அல்லது அச்சம் தருகிறது. ஆனால், இன்றை நாம் எதிர்கொள்ளும் பொழுதில் மகிழ்ச்சியும் எதிர்நோக்கும் கிடைக்கிறது.

'உங்களுக்காக' என வானதூதரும், 'நமக்காக' என்று எசாயாவும் குழந்தையின் பிறப்பை அறிவிக்கின்றனர். குழந்தை நம் சார்பாக, நமக்குத் துணையாக இருக்கும் என்னும் நம்பிக்கை இதில் துளிர்விடுகிறது.

வலுவற்ற குழந்தையில் மெசியாவை, மீட்பரை, ஆண்டவரைக் காண்கிறோம் நாம்.

நம் வலுவின்மையில் மகிழ்வோம், வலுவின்மை மாறும் என எதிர்நோக்குவோம்.