இவ் மறையுரையை வழங்குபவர்

அருட்பணி.இயேசு கருணாநிதி
Archbishop’s House, K. Pudur, Madurai 625 007, India
Email: yesu@live.in

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)









ஆண்டின் பொதுக்காலம் 2ஆம் ஞாயிறு

பொங்கல் சாட்சி!

எசாயா 49:3,5-6
1 கொரிந்தியர் 1:1-3
யோவான் 1:29-34

'நிறைவு அது நிறைவு இது.
நிறைவிலிருந்து நிறைவு நிறைந்து வழிகிறது.
நிறைவிலிருந்து நிறைவை நிறைவாய் எடுத்தாலும்
நிறைந்து நிற்பதும் நிறைவே.'
(பிரிகிரிதாரண்யக உபநிடதம் 5.1.1.)

நிறைவின் திருநாளாம் பொங்கல் திருவிழா வாழ்த்துக்கள்.

'திருவிழா' என்ற வார்த்தையை தமிழ் கூறும் நல்லுலகம் உருவாக்கிய வரலாறு மிக இனிமையானது. 'விழாதிரு!' என்ற வார்த்தையை காலப்போக்கில் 'திருவிழா' என்றானதோ! சக மனிதர்கள் தங்கள் வாழ்வியல் இன்னால்களில், இன்னல்களால் துவண்டு 'விழாதிரு'க்க உருவானவை திருவிழாக்கள்.

ஆனால், திருவிழாக்களே இன்று தமிழ் மற்றும் தமிழர் விழக் காரணமாகிவிட்டது காலக்கொடுமை.

பொங்கலின் இனிமையும், கரும்பின் சுவையும், மஞ்சளின் மணமும் ததும்பும் இந்நாளில்,

நிலங்களின் வறட்சியும், விவசாயிகளின் துர்(தற்)கொலைகளும், போலி அரசியல் வாய் ஜல்லிக்கட்டுக்களுமே எஞ்சி நிற்கின்றன.

'ஒட்டிக்கோ, கட்டிக்கோ!' 'வேட்டி வாரம்!' 'நம் பாராம்பரியம்!' என்று வேஷ்டி சட்டைக்கு விளம்பரம்,

அமேசான் போன்ற கார்ப்பரேட்டுகளில் நம் கார்டுகளைக் தேய்க்க நம் கைகளில் வந்து விழும் கரும்புக் கட்டுக்கள்,

தமிழ் மண் பற்றி அறிந்திராத அம்பானியும், அதானியும் தங்கள் கடைகளில் பொங்கல் பொருள்களை நிரப்ப,

வீரம், மானம், காதல் என்று வாழ்ந்த சங்ககாலத் தமிழன் கண்மூடி, வாய்மூடி பொங்கலைக் கொண்டாடி முடிக்கிறான்.

ஒவ்வொரு விழாவும் ஒரு சமூகத்தின் சாட்சி. ஒரு சமூகம் எப்படி வாழ்கிறது, இருக்கிறது, தன் இருப்பை நகர்த்துகிறது என்பதை வெளிப்படுத்துபவை அவை கொண்டாடும் விழாக்களே.

பொங்கல் விழா நம் மகிழ்வின் சாட்சி அல்லது சான்று.

சாட்சி என்பது ஒரு நீதிமன்றச் சொல்லாடல். ஒருவர் இப்படித்தான் என மற்றொருவருக்கு மூன்றாம் நபர் சொல்வதுதான் சாட்சி. சாட்சி சொல்பவர் யாரைப் பற்றிச் சொல்கிறாரோ அவரையும் அறிந்திருக்க வேண்டும், யாரிடம் சொல்லப்போகிறோம் என்பதையும் அறிந்திருக்க வேண்டும். அனைத்திற்கும் மேலாக தான் யார் என்பதையும் அறிந்திருக்க வேண்டும். இம்மூவகை அறிவு இருந்தால் மட்டுமே சான்று பகர்தல் நிறைவடையும்.

திருவருகைக்காலம், கிறிஸ்து பிறப்பு, எட்டாம் திருநாள், திருக்காட்சிப் பெருவிழா, ஆண்டவரின் திருமுழுக்கு என வேகமாகவும், விறுவிறுப்பாகவும் விழாக்களைக் கொண்டாடி மகிழ்ந்தோம். இந்த விழாக்கள் வழியாக நாம் பெற்றுக்கொண்ட அருளை அசைபோடவும், அதை நம்முடையதாக்கவும், அந்த அருளாகவே நாம் மாறவும் இன்று நாம் பொதுக்காலத்தைத் தொடங்குகிறோம்.

'நான் யார்?' என்றும், 'என் கடவுள் யார்?' என்றும் நான் சான்று பகர, சாட்சி சொல்ல இன்றைய இறைவாக்கு வழிபாடு நம்மை அழைக்கிறது.

  இன்றைய முதல் வாசகத்தில் (காண். எசாயா 49:3,5-6) பாபிலோனியாவில் அடிமைப்பட்டுக்கிடந்த இஸ்ரயேல் மக்களை தன் மகனாக அழைக்கும் யாவே இறைவன், 'இஸ்ரயேலே, இதுதான் நீ' என்று, எசாயா இறைவாக்கினர் வழியாக சான்று பகர்கின்றார். தான் யார் என்பதை இதன் வழியாக உணர்ந்து கொண்ட இஸ்ரயேல் தன்னை மூன்று நிலைகளில் அடையாளப்படுத்துகின்றது:

அ. ஆண்டவர் பார்வையில் நான் மதிப்பு பெற்றவன்

ஆ. கடவுளை ஆற்றலாகக் கொண்டவன்

இ. நான் ஒளியாக மாற வேண்டியவன்

முதல் இரண்டு கூறுகளும் இறைவன் தரும் வாக்குறுதிகளாகவும், மூன்றாவது கூறு இஸ்ரயேல் செய்ய வேண்டிய கடமையையும் முன்னுரைக்கின்றது.

1. என் மதிப்பு எது? என் ஆற்றல் எது?

இன்று நான் என் மதிப்பை எதில் தேடுகிறேன். இஸ்ரயேல் தன் மதிப்பை தன் சட்டத்திலும், தன் உடன்படிக்கையிலும், தன் ஆலயத்திலும், தன் ஓய்வுநாளிலும் கண்டது. ஆனால், பாபிலோனியர்கள் படையெடுத்து வந்தபோது அவர்களின் சட்டம், உடன்படிக்கை, ஆலயம், ஓய்வுநாள் என அனைத்தின் மதிப்பும் அழிக்கப்படுகின்றது. இப்போது அந்நிய நாட்டில் இஸ்ரயேல் தன் மதிப்பை எங்கே தேட வேண்டும்? தன்னிலும், தன் ஆண்டவரிலும். ஆக, உலகின் பார்வையில் மதிப்பு என நினைப்பதை நான் இழந்தாலும், ஆண்டவரின் பார்வையில் நான் மதிப்பு பெறுகிறேன். ஒருவரின் தன்மதிப்பு தான் எவ்வளவு பொருள்கள் அல்லது ஆள்கள் என்னிடம் அல்லது எனக்காக இருக்கிறார்கள் என்பதில் அல்ல. மாறாக, தான் ஆண்டவரால் எந்த அளவு அன்பு செய்யப்படுகிறோம் என்று உணர்வதில்தான் இருக்கின்றது.

இஸ்ரயேலின் ஆற்றலாக இறைவன் மாறுகின்றார்.

ஒரு கோப்பையில் ஏற்கனேவே தேநீர் நிறைந்திருந்தால் நாம் அதன்மேல் வேறு தேநீரை ஊற்ற முடியாது. கோப்பை காலியானால்தான் தேநீர் நிரப்ப முடியும். சில நேரங்களில் நாமாக நம் கோப்பையைக் காலி செய்ய வேண்டும். அல்லது கடவுள்தாமே நம் கோப்பையை வெறுமையாக்கி நம்மை நிரப்புவார்.

2. என் பணி

என் மதிப்பும், என் ஆற்றலும் இறைவனாக இருந்தால் மட்டும் போதுமா. அந்த மதிப்பும், ஆற்றலும் என்னை புதிய செயல்களுக்கு என்னைத் தூண்ட வேண்டும்.

துன்புறும் ஊழியனின் பணி என்ன?

- யாக்கோபின் குலங்களை நிலைநிறுத்துவது

- இஸ்ரயேலில் காக்கப்பட்டோடரை திருப்பிக் கொணர்வது

- பிற இனத்தாருக்கு ஒளியாக இருப்பது

துன்புறும் ஊழியன் தன் இன மக்களுக்கும், புற இன மக்களுக்கும் பணி செய்ய அழைக்கப்படுகின்றார். என்னைச் சார்ந்தவர்களையும், என்னைச் சாராதவர்களையும் தேடிச் செல்வதே என் பணியாக இருக்கிறது.

இன்றைய இரண்டாம் வாசகத்தில் (காண். 1 கொரிந்தியர் 1:1-3) கொரிந்தியருக்கு எழுதும் தன் முதல் திருமடலில் தான் யார் என்றும், கொரிந்து நகர திருஅவையின் மக்கள் யார் என்றும் சான்று பகர்கின்றார் பவுல்.

அ. நான் யார்? 'அவர் திருவுளத்தால் கிறிஸ்து இயேசுவின் திருத்தூதனாக அழைக்கப்பட்ட பவுல்.' ஆ. என் மக்கள் யார்? 'அவரோடு இணைக்கப்பெற்று தூயோராக்கப்பட்ட இறைமக்கள்.'

'அழைக்கப்பட்ட திருத்தூதன்' என்ற சொல்லாடலில் பவுலின் இருமுக வாழ்க்கை தெளிவாகிறது. ஒரு பக்கம், அவரின் பழைய வாழ்விலிருந்து கடவுள் அவரை புதிய வாழ்விற்கு அழைக்கின்றார். மறு பக்கம், மற்றவர்களுக்குப் புதிய வாழ்வை வழங்க அவர் பவுலை அனுப்புகின்றார். திருத்தூதரின் வாழ்வில், அழைக்கப்படுதலும், அனுப்பப்படுதலும் இணைந்தே செல்கின்றன.

'இறைமக்கள்' என்ற சொல்லாடலும் கடவுளின் இரண்டு அருள்செயல்களை முன்வைக்கின்றது: கடவுள் மக்களை தன்னோடு இணைத்துக்கொள்கிறார். அவர் அவர்களைத் தூயவராக்குகின்றார். கடவுளோடு ஒருவர் இணைக்கப்படும்போதே அவர் தூய்மை நிலைக்கு உயர்ந்துவிடுகின்றார்.

  இன்றைய நற்செய்தி வாசகம் (காண். யோவான் 1:29-34) திருமுழுக்கு யோவானின் முதல் சாட்சியத்தை நமக்கு படம்பிடித்துக் காட்டுகிறது. இந்த நிகழ்வில்தான் இயேசு முதல்முறையாக யோவான் நற்செய்தியில் குறிப்பிடப்படுகிறார்.

இந்த நிகழ்வு நடக்கும் இடம் யோர்தான் நதிக்கரை. தன்னிடம் வந்துகொண்டிருந்த மக்கள் கூட்டத்திற்கு திருமுழுக்கு கொடுத்துக்கொண்டிருக்கிறார் யோவான். அங்கே இயேசுவும் வருகின்றார்.

'கண்டார்,' 'சொன்னேன்,' 'சான்று கூறுகிறேன்' என்ற யோவானின் வார்த்தைகள் அவர் சொல்கின்ற சாட்சியத்தை அடையாளப்படுத்துகின்ற சொல்லாடல்களாக இருக்கின்றன.

  யோவான் இயேசுவுக்கு இரண்டு அடையாளங்களைக் கொடுக்கின்றார்:

அ. கடவுளின் ஆட்டுக்குட்டி அல்லது செம்மறி

ஆ. இறைமகன்

அ. கடவுளின் ஆட்டுக்குட்டி அல்லது செம்மறி

யோவான் நற்செய்தியில் பாஸ்கா திருவிழா தொடக்கமுதல் இறுதிவரை நிழலாடுகிறது. பாஸ்கா செம்மறியாக அறிமுகப்படுத்தப்படும் இயேசு, பாஸ்கா விழாவில் பலியிடப்படுகின்றார். இவ்வாறாக, பாஸ்கா என்ற நிகழ்வு முதலிலும், இறுதியிலும் நிற்கின்றது.

கடவுளின் செம்மறி என்ற வார்த்தை நமக்கு இரண்டு நிகழ்வுகளை நினைவுபடுத்துகிறது:

ஒன்று, இஸ்ரயேல் மக்கள் எகிப்தில் கொண்டாடிய முதல் பாஸ்கா (காண். விப 12:1-13). இங்கே பாஸ்கா என்றால் கடத்தல் என்பது பொருள். எகிப்திலிருந்து இஸ்ரயேல் மக்கள் வாக்களிக்கப்பட்ட நாட்டிற்குக் கடந்து செல்லுமுன், அவர்களின் இல்லங்களைக் கடந்து செல்கின்றார் வானதூதர். பாஸ்கா ஆடு பலி செய்யப்பட்டு அதன் இரத்தம் கதவு நிலைகளில் பூசப்படுகின்றது. இங்கே ஆட்டின் பலி இஸ்ரயேல் மக்களின் விடுதலையின் முன்னோட்டமாக இருக்கின்றது.

இரண்டு, யோம் கிப்பூர். ஆண்டு மனமாற்றத்தின் நாளன்று, அதாவது பாஸ்கா பலியிடுமுன்பு, இஸ்ரயேல் மக்கள் இரண்டு செம்மறிகளைத் தேர்ந்தெடுப்பர். அவற்றில் ஒன்று இஸ்ரயேல் மக்களின் தெருக்களில் ஓடும். ஓடுகின்ற அந்த ஆட்டின் மேல் மக்கள் எச்சில் உமிழ்வார்கள். அதை அடிப்பார்கள். முடியைப் பிடித்து இழுப்பார்கள். காயப்படுத்துவார்கள். இப்படி செய்வதால் தங்களின் பாவங்களை எல்லாம் அந்த செம்மறியின் மேல் அவர்கள் ஏற்றிவிடுவார்கள். இவ்வாறாக ஓடிச்செல்லும் செம்மறி இறுதியில் பாலைவனத்திற்குள் அடித்து விரட்டப்படும். அங்கே அது இறந்துவிடும். மற்றொரு செம்மறி அதே நாளில் தலைமைக்குருவால் திருத்தூயகத்திற்குள் எடுத்துச்செல்லப்பட்டு பலியிடப்படும்.

இயேசுவை, 'கடவுளின் ஆட்டுக்குட்டி' என அழைக்கின்ற திருமுழுக்கு யோவான் தொடர்ந்து, 'ஆட்டுக்குட்டியாம் இவரே உலகின் பாவத்தைப் போக்குபவர்' என்கிறார். ஆக, இயேசுவின் அடையாளம் விடுதலை என்பதையும், பாவம் போக்கும் பலி என்பதையும் குறிக்கிறது.

ஆ. இறைமகன்

'செம்மறி' என்ற அடையாளம் வன்முறை மற்றும் இரத்தத்தை வாசகர் மனதில் எழுப்ப, 'இறைமகன்' என்ற அடையாளம் நேர்முக உணர்வைத் தட்டி எழுப்புகிறது.

ஒருவர் மற்றவர்களின் பாவங்களுக்காக எப்படி இறக்க முடியும்? அவர் இறைமகனாய் இருந்தால் மட்டுமே முடியும்.

ஆக, இயேசுவில் இரண்டு அடையாளங்களும் கைகோர்த்து நிற்கின்றன. இயேசு இறைமகன் என்ற செய்தி தூய ஆவியார் அவர்மேல் இறங்கி வந்ததால் யோவானுக்குப் புலனாகிறது.

இவ்வாறாக, யோவானின் சான்று அவரின் தனிப்பட்ட வாக்குமூலம் அல்ல. மாறாக, அவரின் இறையனுபவம்.

இன்றைய இறைவாக்கு வழிபாடு நம் பொங்கல் திருநாளை ஒட்டி நமக்கு வைக்கும் சவால்கள் எவை?

1. நான் யார்?

தமிழன் - பச்சைத் தமிழன் - புரட்சித் தமிழன் என தமிழனுக்கு அடையாளம் தருவதாக நிறையப்பேர் நமக்கு முன்வைக்கப்படுகின்றனர். அடையாளங்கள் பல நேரங்களில் அடுத்தவரிடமிருந்து நம்மைப் பிரிப்பனவாகவும், அடுத்தவரை நமக்கு எதிர்நிலையில் நிறுத்துவதாகவும் ஆகிவிடுகின்றன. எசாயாவின் 'துன்புறும் ஊழியன்,' பவுலின் 'திருத்தூதன்,' இயேசுவின் 'செம்மறி-இறைமகன்' என்னும் அடையாளங்கள் அவர்களை மற்றவர்களிடமிருந்து பிரிக்கவில்லை. மாறாக, அடையாளங்களைக் கொண்டிருந்தவர்கள் புதிய பிறப்பு அடைவதோட அல்லாமல், மற்றவர்களின் விடுதலைக்கும் அவர்கள் காரணமாக அமைகின்றனர். இன்று நான் கொண்டிருக்கும் அடையாளம் என்னை எனக்கு அப்படி அறிமுகம் செய்கிறது? என் அடையாளம் எனக்கும், எனக்கு அடுத்திருப்பவருக்கும் விடுதலை தருகின்றதா?

2. விடுதலை அளிக்கும் துன்பம்

முதல் மற்றும் மூன்றாம் வாசகங்களில் நாம் காணும் 'துன்புறும் ஊழியன்,' மற்றும் 'செம்மறி' என்னும் அடையாளங்கள் துன்பத்தை ஒரு நேர்முகக் கண்ணோட்டத்தில் வைக்கின்றன. துன்பமே நம் வாழ்வில் வரக்கூடாது என நினைக்கிறோம். ஆனால், நம் வாழ்வை மாற்றக்கூடிய வலிகள் நிறையவே இருக்கின்றன: தாயின் பேறுகால வலி, மருத்துவரின் கத்தி தரும் வலி, படிக்கும் வலி, பணி செய்யும் வலி, பயணம் செய்யும் வலி - இவைகள் அந்த நேரத்தில் நமக்குத் தாங்க முடியாத வலியைத் தருகின்றன. ஆனால் அந்த வலியை அனுபவித்து கடந்துவிட்டால் அது நம் மகிழ்ச்சிக்கும், பிறர் மகிழ்ச்சிக்கும் காரணமாகிவிடுகிறது. ஆக, வலியை விரும்பி ஏற்றுக்கொண்டால் நமக்கு வலிப்பதில்லை. இன்று எதையும் வலிக்காமல் பெற வேண்டும், செய்ய வேண்டும் என்றும், எல்லாம் வலியே இல்லாமல் கிடைக்க வேண்டும் எனவும் நினைக்கிறோம். ஆனால், வாழ்வின் முக்கியமானவைகள் வலியோடுதான் நம்மிடம் வந்துசேர்கின்றன.

நாம் அறுவடை செய்து முதற்கனிகளைப் படைப்பது, நாம் வைக்கும் பொங்கல், நாம் அடக்கும் காளைகள், நாம் பரிமாறும் உணர்வுகள், உறவுகள், காணும் பொங்கல் என அனைத்தும் தங்களிடையே வலிகளைக் கொண்டிருக்கின்றன. இந்த வலிகளைக் கடந்து செல்லும்போதும், அவைகளை அனுபவிக்கும்போதுதான் அவை நமக்கு விடுதலையை, வாழ்வை தருகின்றன.

3. கண்டார் - சொன்னார் - சான்று பகர்ந்தார்

இந்த மூன்று வினைச்சொற்கள் திருமுழுக்கு யோவானின் ஆளுமையை நமக்குக் காட்டுகின்றன. அதாவது, என்னிடம் நிறையப்பேர் வருகிறார்கள், நான் ஓர் இறைவாக்கினர், நான் ஒரு முன்னோடி என திருமுழுக்கு யோவான் தன்னைப் பற்றி நினைத்திருந்தாலும், 'நான் மெசியா அல்ல!' என்பதை தெளிவாக உணர்ந்திருக்கின்றார். ஆக, 'நான் இது அல்ல!' என்று உணர்வதே சிறந்த ஞானம். பல நேரங்களில் 'நான் அப்படி!' 'நான் இப்படி!' 'நான் அவரைப்போல இருக்கிறேன்' 'நான் இவரைப்போல இருக்கிறேன்' என 'போல' இருக்க ஆசைப்படுகிறோம். 'போல' இருக்கும் அனைத்தும் 'போலிகளே!'

மேலும், நான் இயேசுவுக்கு எப்படி சான்று பகர்கின்றேன்? என் சான்று எதன் அடிப்படையில் இருக்கின்றது? என் சொந்த அனுபவத்திலிருந்து வருகின்றதா? அல்லது நான் படித்தவற்றில், மற்றவரிடமிருந்து கேட்டவற்றிலிருந்து வருகின்றதா? இறையனுபவத்திற்கு என்னையே திறந்து வைத்திருக்கின்றேனா?

நிற்க.

துறவி ஒருவரிடம் ஞானம் கற்கச் செல்கின்றான் சீடன்.

'நீ யார்?' கேட்கின்றார் துறவி.

'நான் ஆனந்தா!' என்கிறான் சீடன். 'அது உன் பெயர். நீ யார்?' கேட்கின்றார் துறவி.

'என் அப்பா கோபாலா. என் அம்மா ராஜம்.' 'அது உன் பெற்றோர். நீ யார்?'

'நான் ஒரு இந்தியன்!' 'அது உன் குடியுரிமை. நீ யார்?'

'நான் ஒரு எம்பிஏ!' 'அது உன் படிப்பு. நீ யார்?'

'நான் ஒரு மேனேஜர்!' 'அது உன் வேலை. நீ யார்?'

'நான் ஒரு ஹோமோ ஸேபியன்ஸ்!' 'அது உன் ஸ்பீசிஸ். நீ யார்?'

அப்படியே அமைதியாகின்றான் சீடன். அந்த அமைதியில் ஞானம் பெறுகின்றான்.

'பொங்கலோ! பொங்கல்!' என்று நம் காதுகளில் இரைச்சல் விழுந்தாலும், 'ஹேப்பி டமில் நியு இயர்!' என்று தொலைக்காட்சி பெட்டியும், நம் அலைபேசியும் வார்த்தைகளை அள்ளி இறைத்தாலும், நம் உள்ளத்தின் அமைதியில், 'நான் யார்?' 'என் இறைவன் யார்?' 'என் இனியவர் யார்?' என்ற கேள்வி நம் காதுகளில் விழட்டும்.

அந்தக் கேள்விகளுக்கு நாம் தரும் விடையே நாம் கொண்டாடும் சாட்சியப் பொங்கல்!