இவ் மறையுரையை வழங்குபவர்

அருட்பணி.இயேசு கருணாநிதி
Archbishop’s House, K. Pudur, Madurai 625 007, India
Email: yesu@live.in

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)









ஆண்டின் பொதுக்காலம் 31ஆம் ஞாயிறு

செல்ஃபி வித் சக்கேயு!

சாலமோனின் ஞானம் 11:22-12:2
2 தெசலோனிக்கர் 1:11-2:2
லூக்கா 19:1-10

அவன் ஒரு மெழுகுதிரி வியாபாரி. ஆலயத்திற்குத் தேவையான தேன் மெழுகுதிரிகளைச் செய்து விற்றான் அவன். அவனை யாருக்கும் பிடிப்பதில்லை. 'அவன் மீதமான மெழுகைத் திருடி புதிய மெழுகோடு கலக்கிறான்' என்றும், 'அவன் விலையைக் கூட்டி விற்கிறான்' என்றும், 'அவன் தனக்குக் கீழிருப்பவர்களின் உழைப்பைச் சுரண்டுகிறான்' என்றும் சொல்லி மக்கள் அவனை வெறுத்தார்கள். அவனுடைய பங்கு ஆலயத்திற்கு திருத்தந்தை பிரான்சிஸ் வருவதாகச் சொல்லப்பட்டது. திருத்தந்தையைப் பார்க்க இவனுக்கு ஆசை. எப்படியாவது அவரைப் பார்த்துவிடலாம் என நினைக்கிறான். ஆனால், நாள்கள் நெருங்க நெருங்க நிறையக் கூட்டம் வந்து சேர்கிறது. 'பார்க்க முடியாமல் போய்விடுமோ?' என்ற அச்சம் இவனுக்கு வர ஆரம்பிக்கிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக ஆலயத்திற்குள் வெகுசிலரே அனுமதிக்கப்படுவர் என்றும், அதற்கான முன்பதிவு செய்ய வேண்டும் என்று சொல்லப்பட்டது. சொல்லப்பட்ட சில நொடிகளில் முன்பதிவும் முடிந்தது. பங்குத்தந்தையிடம் சென்று முறையிட்டான். கெஞ்சிக் கேட்டான். ஆலயத்திற்குள் எப்படியாவது சென்றுவிட வேண்டும் என நினைக்கிறான். திருத்தந்தை வரும் நாள் வந்தது. சட்டென்று ஒரு முடிவு எடுக்கிறான். திருத்தந்தைக்கான ஆளுயர மெழுகுவர்த்தி என்று ஒன்றை உருவாக்கி, அந்த மெழுகுதிரிக்குள் தானே நின்றுகொள்கின்றான். பவனியில் வந்த திருத்தந்தையைக் கவர்கிறது மெழுகுதிரி. ஒரு நிமிடம் நிற்கின்றார். 'இதை யார் செய்தது?' எனக் கேட்கிறார். 'நான்தான்!' எனத் துள்ளிக்குதித்து அதிலிருந்து வெளியே வருகிறான் வியாபாரி. 'இங்கே என்ன செய்கிறாய்?' 'நான் உங்களைப் பார்க்க வேண்டும்' 'நானும் உன்னைப் பார்க்க வேண்டும்.'

ஏறக்குறைய இக்கற்பனை நிகழ்வைப் போலத்தான் அரங்கேறுகிறது இன்றைய நற்செய்தி வாசகத்தின் (காண். லூக் 19:1-10) கதையாடல். 'இயேசுவைத் தன்னுடைய குட்டிக் கேமராவில் எப்படியாவது ஃபோட்டோ எடுத்துவிட வேண்டும்!' என்று நினைக்கின்ற சக்கேயுவின் அருகில் வருகின்ற இயேசு, 'நான் உன்னோடு ஒரு செல்ஃபி எடுக்க வேண்டும்!' எனக் கேட்கின்றார். சக்கேயுவின் மனதில் எவ்வளவு ஆனந்தம்! 'என்னோடவா?' 'செல்ஃபியா?' 'ஐயோ! என்னால் தாங்க முடியவில்லையே! நான் இந்த செல்ஃபியை வாட்ஸ்ஆப் டிபியாக வைத்துக்கொள்வேன்! ஸ்டேடஸ் போடுவேன்! ஃபேஸ்புக்கில் பதிவேற்றுவேன்! இயேசுவுடைய ஃபோன் நம்பர் வாங்கி அவருடைய கான்டக்ட் ப்ரொஃபைலாக வைத்துக்கொள்வேன் ... இல்லை! இல்லை! என் ஃபோனில் வால்பேப்பராக வைத்துக்கொள்வேன்!' என்று சக்கேயுவின் மனத்தில் கம்பி மத்தாப்பு ஆயிரம் எரிகிறது.

'சக்கேயு' என்ற இடத்தில் உங்களையோ என்னையோ வைத்துப் பார்ப்போம்.

'செல்ஃபி வித் சக்கேயு' என்று இயேசு சொல்வதுபோல, நம்மை நினைத்து அவர், 'செல்ஃபி வித் எக்ஸ்,' 'செல்ஃபி வித் ஒய்' என்று சொன்னால் நமக்கு எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும்?

1. சக்கேயு என்றால் யார்?

'சக்கேயுஸ்' என்றால் அரமேயம் மற்றும் எபிரேயத்தில் 'புனிதம்' அல்லது 'தூய்மை' அல்லது 'குழந்தையுள்ளம்' என்று பொருள். லூக்கா இந்தப் பெயரைத் தெரிந்தெடுத்தாரா? அல்லது கதைமாந்தரின் இயல்பான பெயரே இதுவா? என்பது நமக்குத் தெரியவில்லை.

இவரை மூன்று வார்த்தைகளால் வர்ணிக்கிறார் லூக்கா: (அ) சக்கேயு என்பவர் செல்வர் - வரிதண்டுபவர்களுக்குத் தலைவர், (ஆ) சக்கேயு இயேசுவைக் காண விரும்பினார், (இ) சக்கேயு குட்டையாய் இருந்தார்.

(அ) சக்கேயு என்பவர் செல்வர் - வரிதண்டுபவர்களுக்குத் தலைவர்

லூக்கா நற்செய்தியைப் பொருத்தவரையில் செல்வமும் கடவுளும் நேர்-எதிராக இருப்பவை(வர்). செல்வர் விண்ணரசில் நுழைவதில்லை (காண். 16:19-31), செல்வர் இயேசுவைப் பின்பற்றத் தயங்குகின்றனர் (காண். 18:18-27). இங்கே, சக்கேயுவை செல்வர் என்று சொல்வதோடல்லாமல், அவரை 'வரிதண்டுபவர்களின் தலைவர்' என அறிமுகம் செய்கிறார் லூக்கா. சக்கேயுவின் செல்வம் மட்டுமல்ல, அவர் அச்செல்வத்தை எப்படி ஈட்டினார் என்பதும் இங்கே சொல்லப்படுகிறது. சக்கேயு யூதராக இருந்தும், தன் யூத மக்களிடம் வரிவசூலிக்கும் உரோமை அரசின் கைக்கூலியாக இருக்கின்றார். ஆக, உரோமைக்கும் இவர் அடிமையாக இருக்க வேண்டும், வரி தராவிட்டால் தன் இனத்து மக்களையும் கொடுமைப்படுத்த வேண்டும். மேலும், வரிதண்டுபவர்கள் சரியாகக் கணக்குக் கொடுப்பதில்லை. இவ்வாறு, இவர் அநீத செல்வத்திற்குச் சொந்தக்காரராக இருக்கின்றார். தன்னுடைய சொந்த மக்களால் புறக்கணிக்கப்படுகின்றார். இவ்வாறு, செல்வர் என்ற நிலையில் கடவுளிடமிருந்தும், வரிவாங்குபவர் என்ற நிலையில் தன் சொந்த மக்களிடமிருந்தும் அந்நியப்பட்டு நிற்கின்றார் சக்கேயு.

(ஆ) சக்கேயு இயேசுவைக் காண விரும்பினார்

லூக் 17:15ல் தான் நலம் பெற்றதை உடலில் 'காண்கின்ற' சமாரியத் தொழுநோயாளர் உடனடியாக இயேசுவிடம் திரும்புகின்றார். இதற்கு முந்தைய பகுதியில் (காண். 18:35-43) பார்வையற்ற ஒருவர் பார்வை பெறுகிறார். இங்கே சக்கேயு இயேசுவைக் 'காண' விரும்புகிறார். 'காணுதல்' என்பது லூக்காவின் ஒரு முக்கியமான கருத்துரு. இயேசு காணிக்கையாக ஒப்புக்கொடுக்கப்பட்ட நிகழ்வில் இதை சிமியோன் வழியாக மிக அழகாக அறிமுகம் செய்கிறார் லூக்கா: 'மக்கள் அனைவரும் காணுமாறு நீர் ஏற்பாடு செய்துள்ள உமது மீட்பை என் கண்கள் கண்டுகொண்டன' (2:30-31). சக்கேயு நிகழ்விலும் 'மக்கள் அனைவரும் காணுமாறு மரத்தில் ஏறி நின்ற சக்கேயுவின் கண்கள் இயேசுவைக் கண்டுகொள்கின்றன.' இயேசுவும் நிகழ்வின் இறுதியில், 'இந்த வீட்டிற்கு மீட்பு உண்டாயிற்று' என்கிறார். ஆக, காணுதல் என்பது மீட்பைத் தேடுதல் அல்லது தேடிக் கண்டடைதல் என்றும் பொருள்கொள்ளப்படுகிறது.

இ. சக்கேயு குட்டையாய் இருந்தார்

இது அவருடைய உடல்தன்மையை மட்டும் குறிப்பது அல்ல. மாறாக, அவர் அனுபவித்த உள்ளத்து உணர்வுகளான வெட்கம், பொய், போலித்தன்மை, அவமானம் ஆகியவற்றையும் குறிக்கின்றன. நாமே இதை அனுபவித்திருப்போம். தவறு செய்யாதபோது நம்மை அறியாமலேயே நாம் நேராக நிற்போம், நெஞ்சம் நிமிர்ந்து நிற்கும். நாம் எல்லாரையும் விட பெரியவர்களாகத் தெரிவோம். ஆனால், ஏதாவது பொய் அல்லது களவு செய்யும்போது, தவறு செய்யும்போது நாம் என்னதான் நம் மனச்சான்றைச் சாந்தப்படுத்த நினைத்தாலும் நம் உடலின் தன்மையையை அது கூனாக்கிவிடும். அடுத்தவர் முன் நாம் மிகச்சிறியவர்களாகத் தெரிவது போல உணர்வோம். ஆக, சக்கேயு உடல் அளவில் குட்டையாக இருந்தாலும், உள்ளத்து அளவிலும் குட்டையாக உணர்கின்றார். மற்றவர்கள் முன் சேர்ந்து நிற்பதற்குப் பதிலாக - அவர்கள் ஒருவேளை அவரை விரட்டிவிடக் கூடும் - மரத்தில் ஏறி நின்றுகொள்கின்றார். அல்லது, தன்னுடைய தாழ்வு மனப்பான்மையை இப்படிப் போலியாக உயர்வு மனப்பான்மையாக ஈடுகட்டிக்கொள்ள விரும்புகின்றார்.

2. மற்றவர்கள் சக்கேயுவை எப்படிப் பார்த்தார்கள்?

முதலில் கூட்டத்தினர். கூட்டத்தினர் இவரை வெறுத்தார்கள். சிலர் கண்டுகொள்ளாமல் இருந்தார்கள். சிலர் அவரிடம் இணக்கமாக இருந்தால் தங்களுக்கு இவர் உதவி செய்வார் என்று போலியாக அன்பு காட்டினர். இவ்வாறாக, மற்றவர்களிடமிருந்து இவர் வெறுப்பையும், கண்டுகொள்ளாத்தன்மையையும், போலியான அன்பையும் மட்டுமே பெற்றார். மேலும், கூட்டத்தினர், 'பாவியோடு தங்கப்போயிருக்கிறாரே இவர்' என்று இயேசுவையும் வெறுக்கின்றனர்.

இரண்டாவது இயேசு. ஆனால், இயேசு அவரை 'ஆபிரகாமின் மகன்' என்றும், 'இழந்து போனதைத் தேடி மீட்டவர்' என்றும், 'குட்டையாக இருக்கும் உயர்ந்த உள்ளத்தினர்' என்றும் காண்கின்றார். மத்தேயு நற்செய்தியாளர் இயேசுவை மட்டுமே 'ஆபிரகாமின் மகன்' என அழைக்கிறார் (காண். 1:1). இங்கே, அதே தலைப்புடன் சக்கேயு அழைக்கப்படுகின்றார். 'ஏழை லாசர்' ஆபிரகாமின் மடியில் இளைப்பாறுகிறார். சக்கேயு தன்னுடைய பெயரின்படி தூய்மையாக இருந்ததால் கடவுளைக் கண்டுகொள்கிறார். நேர்மையாளர்களுக்கும் நீதிமான்களுக்கும் என ஒதுக்கிவைக்கப்பட்டிருந்த தலைப்பை கடவுளின் இரக்கத்தைப் பெற்ற சக்கேயுவுக்கும் தருகின்றார் இயேசு. அடுத்ததாக, தான் பெற்றபோது அல்லது தான் இழந்தபோதே சக்கேயு மீட்பைக் கண்டுகொள்கின்றார். இதில் கடவுளின் லாஜிக்கைப் பார்க்கிறோம். இவ்வுலகின் பார்வையில் நம்முடைய சேமிப்புக் கணக்கில் முதலில் எண்ணும் தொடர்ந்து நிறைய பூஜ்யமும் இருந்தால்தான் பணக்காரர் அல்லது ஆசிர்வதிக்கப்பட்டவர் என்ற பட்டம் கிடைக்கிறது. ஆனால், கடவுளின் பார்வையில் இழப்பவரே - ஜீரோ பேலன்ஸ் வைத்திருப்பவரே - ஆசிர்வதிக்கப்பட்டவர் என அழைக்கப்படுகின்றார். தொடர்ந்து, 'தன்னிடம் உள்ளதன் பாதியை ஏழைகளுக்குக் கொடுப்பதன் வழியாகவும், தான் ஏமாற்றியவர்களுக்கு நான்கு மடங்கு திருப்பிக் கொடுப்பதாகவும்' சொல்லும்போது, குட்டையான அவரில் உயர்ந்த மனிதரைப் பார்க்கிறார் இயேசு.

ஆக, மக்களின் பார்வையும் இயேசுவின் பார்வையும் ஒன்றிற்கொன்று முரண்படுவதாக இருக்கிறது.

3. சக்கேயு எடுத்த செல்ஃபி

'செல்ஃபி வித் சக்கேயு' என்று தலைப்பு கொடுத்துவிட்டு, 'சக்கேயு எடுத்த செல்ஃபி' என்று எழுதுவது முரணாகத் தெரியலாம். செல்ஃபி எடுக்க அழைத்தவர் என்னவோ இயேசுதான். ஆனால், இயேசுவோடு செல்ஃபி எடுத்தவர் சக்கேயுதான்.

எப்படி?

செல்ஃபியை முதலில் புரிந்துகொள்வோம். நான் இதை எழுதிக்கொண்டிருக்கும் இந்நிமிடத்தில் ஏறக்குறைய 17000 செல்ஃபிகள் சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டுக்கொண்டிருக்கும் என்பது கூகுள் கணக்கு. ஏன் நாம் செல்ஃபி எடுக்கிறோம்? யோசித்துப் பார்த்தால் மூன்று காரணங்கள் தெரிகின்றன: (அ) 'நானும் அழகுதான்' - நம்முடைய அழகியல் புரிதலைப் புரட்டிப்போட்டது செல்ஃபி எனலாம். கொஞ்ச வருடங்களுக்கு முன்னால் சின்னத்திரையிலும், வண்ணத்திரையிலும் காட்டப்பட்ட சிகப்புத் தோல் அல்லது வெள்ளைத் தோல், நீண்ட முகம் அல்லது சதுர முகம் அல்லது வட்டமுகம்தான் அழகு என்று காட்டப்பட்டது. இவர்கள்தாம் அழகின் 'மாடல்கள்' என்றும் அழைக்கப்பட்டனர். ஆனால், 'நானும் அழகுதான்' என்று எல்லாரையும் சொல்ல வைத்தது செல்ஃபி. (ஆ) 'எந்த இரண்டு செல்ஃபிக்களும் ஒன்றல்ல' - நான் அடுத்தடுத்து என்னை இரண்டுமுறை எடுத்தாலும் அவற்றை ஒப்பிட்டுப்பார்த்தால் இரண்டும் ஒன்றல்ல. ஏனெனில், நான் மாறுகிறேன் அல்லது மாற்றிக்கொள்கிறேன் என்று எனக்கு உணர்த்துவது செல்ஃபி. (இ) 'செல்ஃபி ஓர் உறைந்த கண்ணாடி' - கண்ணாடியில் நாம் பார்க்கும் உருவம் நாம் மறைந்தவுடன் மறைந்துவிடுகிறது. ஆனால், செல்ஃபி அந்தப் பிம்பத்தை உறைய வைக்கிறது. என்னை என்னோடு ஒப்பிட அழைக்கிறது செல்ஃபி.

இந்த செல்ஃபியை இயேசுவோடு சக்கேயுவும் நானும் எடுக்க என்ன செய்ய வேண்டும்?

அ. 'எழுந்து நிற்க வேண்டும்'

'எழுந்து நிற்றல்' என்பது 'நான் அடிமையல்ல' என்பதைக் குறிக்கிறது. இதுவரை தன்னுடைய கள்ளத்தனத்திற்கும், பொய்மைக்கும், ஏமாற்று வேலைக்கும், பணத்திற்கும் அடிமையாய் இருந்த சக்கேயு எழுந்து நிற்கிறார். ஆக, தீமையை வெறுத்தவுடன் நம்மை அறியாமலேயே நம்முடைய கான்ஃபிடன்ஸ் லெவல் கூடுகிறது. நாம் நம் உள்ளத்திலும் உடலிலும் உயர்ந்தவராகின்றோம். இன்று நான் அமர்ந்திருக்க அல்லது படுத்திருக்கக் காரணமான தீமை எது? இயேசுவை அன்றாடம் எதிர்கொள்ளும் நான், அவரை நற்கருணையில் என் உள்ளத்தில் வரவேற்கும் நான் ஏன் இன்னும் எழுந்து நிற்க முடியவில்லை? ஆ. 'இயேசுவுக்காக இடத்தை க்ளியர் செய்ய வேண்டும்'

செல்ஃபிக்குள் எதுவெல்லாம் வரக்கூடாதோ அதை நான் அகற்ற வேண்டும். தன்னிடமிருந்த நிறையச் சொத்து இயேசுவின் இடத்தை அடைத்துக்கொள்வதாக நினைக்கின்ற சக்கேயு உடனடியாக அவற்றை அகற்றுகின்றார். இயேசுவுக்கும் இடம் ஒதுக்குவதற்கு நான் என்னிடம் உள்ள சிலவற்றைக் க்ளியர் செய்ய வேண்டும். 'இதுவும் வேண்டும் அவரும் வேண்டும்' என்று சொன்னால் இயேசு 'அவுட் ஆஃப் ஃபோகஸ்' ஆகிவிடுவார். இ. 'வரிசையைச் சரி செய்ய வேண்டும்'

'இது இங்கே ... அது அங்கே' என்று சரி செய்ய வேண்டும். சரி செய்யும்போது தவற்றை நிவர்த்தி செய்ய வேண்டும், ஈடுகட்ட வேண்டும். களவை இரண்டு மடங்கு சரிசெய்ய வேண்டும் என்று சட்டமுறைமை சொன்னாலும், சக்கேயு 'நான்கு மடங்கு' சரிசெய்ய நினைக்கின்றார். இன்று நான் யாரையாவது ஏமாற்றினால் அவற்றுக்கு ஈடு செய்கிறேனா? எத்தனை மடங்கு?

இம்மூன்றும் நான் செய்தால், இயேசுவும் இன்று என்னோடு செல்ஃபி எடுப்பார். என்னோடு இறங்கி நிற்கும் கடவுள் அவர் என்றும், அவர் என்னை வெறுப்பதில்லை என்றும், எனக்கு அவர் இரங்குகிறார் என்றும் என் கடவுளைப் பற்றிய புதிய புரிதலைத் தருகிறது இன்றைய முதல் வாசகம் (காண். சாஞா 11:22-12:2). என்னோடு இறங்கி நிற்கும் அவர், என்மேல் இரங்கி, என் 'நல்லெண்ணத்தையும் நம்பிக்கையால் தூண்டப்படும் நற்செயலையும் நிறைவுசெய்து,' 'என் அழைப்புக்கு என்னைத் தகுதியுள்ளவராக்குகிறார்' என்று இரண்டாம் வாசகமும் (காண். 2 தெச 1:11-2:2) என்னை அழைக்கிறது. அவரருகில் செல்லும்போது, 'செல்ஃபி வித் ...' என்று அவர் நம்மைத் தழுவிக்கொள்வார். அப்போது திருப்பாடல் ஆசிரியர் போல, நாமும், 'ஆண்டவர் இரக்கமும் கனிவும் உடையவர். எளிதில் சினம் கொள்ளாதவர். பேரன்பு கொண்டவர் ... தடுக்கி விழும் யாவரையும் அவர் தாங்குகின்றார், தாழ்த்தப்பட்ட யாவரையும் தூக்கிவிடுகின்றார்' (திபா 145) என்று பாட முடியும்.

செல்ஃபி எடுக்கத் தயாரா? ஸ்மைல் ப்ளீஸ்! க்ளிக்!