இவ் மறையுரையை வழங்குபவர்

அருட்பணி.இயேசு கருணாநிதி
Archbishop’s House, K. Pudur, Madurai 625 007, India
Email: yesu@live.in

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)









ஆண்டின் பொதுக்காலம் 12ஆம் ஞாயிறு

நான் பார்க்கும் கடவுள்!

செக் 12:10-11
கலா 3:26-29
லூக் 9:18-24


நாம் எப்படி இருக்கிறோமோ, அப்படித்தான் மற்றவர்களையும், மற்றவைகளையும் பார்க்கின்றோம். அல்லது நாம் மற்றவர்களையும், மற்றவைகளையும் பார்க்கும் விதத்தை வைத்து நாம் எத்தகையவர்கள் என்பதை அறிந்து கொள்ளலாம். இல்லையா? நாம் கடவுளைப் பார்க்கும் விதமும் அப்படியே. தந்தையின் அன்பை அதிகம் உணர்ந்தவர்கள் அவரை தந்தையாகவும், தாயின் அன்பை உணர்ந்தவர்கள் அவரைத் தாயாகவும், நண்பரின் நட்பை அனுபவித்தவர்கள் அவரை நண்பராகவும், சகோதரரின் உடனிருப்பை உணர்ந்தவர்கள் அவரைச் சகோதரராகவும் பார்க்கிறோம். நம் வாழ்வில் தாங்க முடியாத இழப்புக்கள் அல்லது சரி செய்ய முடியாத தவறுகள் நடக்கும்போது அவரை கொடுங்கோலராகவும் பார்க்கின்றோம். நாம் கடவுளைப் பார்க்கும் விதம் கடவுளின் இயல்பைக் கூட்டுவதோ, குறைப்பதோ இல்லை. அது கடவுளைப் பாதிப்பதும் இல்லை. ஆனால், அவரைப் பார்க்கும் விதம் நம் இயல்பில் மாற்றத்தை, தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

நான் கடவுளைப் பார்க்கும் விதத்தைப் பொறுத்தே, நான் உலகையும், அதில் உள்ளவர்கள் மற்றும் உள்ளவைகளையும் பார்க்கின்றேன்.

தன்னை தரிசு நிலமாகவும், கடவுளைத் தண்ணீர்த் தடாகமாகவும் உருவகிக்கின்ற திருப்பாடல் ஆசிரியர் (காண். பதிலுரைப் பாடல், திபா 63:1), தன் உயிர் இறைவன் மேல் தாகம் கொண்டுள்ளதாகவும், அவரின் உடல் இறைவனுக்காக ஏங்குவதாகவும் உருகுகின்றார். மேலும், இறைவனின் உடனிருப்பை உணரும் அவர், அறுசுவை விருந்தில் நிறைவடைவதுபோல நிறைவடைகின்றார். இறைவன் இவருக்கு தாகம் தீர்க்கும் தண்ணீராகவும், பசி தீர்க்கும் உணவாகவும், பாதுகாக்கும் இறக்கையாகவும் தெரிகின்றார். ஆகையால், இவரும் எந்தவித இழப்பும், பயமும் இல்லாமல் நிறைவாக இருக்கின்றார். ஆக, திருப்பாடல் ஆசிரியர் கடவுளைப் பார்க்கும் விதத்தைப் பொறுத்தே அவர் தன்னையும் பிறரையும் பார்க்கும் பார்வையும் அமைகின்றது.

இன்றைய இரண்டாம் வாசகத்தில் (காண். கலா 3:26-29) பவுல் கிறிஸ்தவர்கள் அனைவரும் கடவுளைத் தந்தையாகவும், தங்களைத் தாங்களே அவர்களின் பிள்ளைகளாகவும் கண்டுணர அழைக்கின்றார். கடவுளைத் தந்தையாகப் பார்க்கும் ஒருவர், தனக்கு அருகில் இருக்கும் அனைவரையும் - யூதர், கிரேக்கர், அடிமைகள், உரிமைக் குடிமக்கள், ஆண், பெண் - அனைவரையும் ஒன்றாய்ப் பார்க்கின்றார். அதாவது, இவர்களுக்குள் எந்த வேறுபாடும் இல்லை. கடவுளின் மகன் அல்லது மகள் நான் என்னும் நிலை இவர்களோடு என்னை இணைக்கிறது. ஏனெனில் இவர்களும் கடவுளின் மகன்கள் மற்றும் மகள்கள். இந்த இணைப்பைச் சாத்தியமாக்குபவர் இயேசு. ஆக, கடவுளை ஒருவர் எப்படிப் பார்க்கிறாரோ, அப்படியே அவர் தன்னையும், மற்றவரையும், மற்றவைகளையும் பார்க்க வேண்டும்.

இன்றைய முதல் வாசகம் (செக் 12:10-11) புலம்பலும், அழுகையும் நிறைந்திருக்கிறது. பாபிலோனுக்கு நாடுகடத்தப்பட்ட யூதா மக்களின் வருங்கால மீட்பும், வளமும் பற்றி இறைவாக்குரைக்கும் செக்கரியா, 'அவர்கள் தாங்கள் ஊடுருவக் குத்தியவனையே உற்று நோக்குவார்கள்' என்கிறார். செக்கரியாவின் இவ்வார்த்தைகளை இயேசுவுக்குக் குறிப்பிட்டு எழுதும் நற்செய்தியாளர் யோவான், 'தாங்கள் ஊடுருவக் குத்தியவர்களை உற்று நோக்குவார்கள்' (யோவா 19:37) என்று மாற்றி எழுதுகின்றார். மேலும், இயேசுவின் இரண்டாம் வருகை பற்றி தன் திருவெளிப்பாட்டு நூலில் பதிவு செய்யும்போதும் இதை மேற்கோள் காட்டுகின்றார்: 'இதோ! அவர் மேகங்கள் சூழ வருகின்றார். அனைவரும் அவரைக் காண்பர். அவரை ஊடுருவக் குத்தியோரும் காண்பர்' (திவெ 1:7). செக்கரியா இதை இயேசுவைக் குறித்துத்தான் எழுதினார் என்பதை நாம் உறுதியாகச் சொல்ல முடியாது. யூதர்கள் இந்த சொற்றொடரை இரண்டு விதங்களில் புரிந்து கொள்கின்றனர்: (அ) 'ஊடுருவக் குத்தியவர்' இங்கே பாபிலோனியாவில் அடிமைப்பட்டிருக்கும் இஸ்ரயேல் மக்களைக் குறிக்கிறது. அல்லது (ஆ) எப்பிராயிமின் மகன் என்னும் மெசியா பற்றிச் சொல்கிறது. இந்த இரண்டாம் புரிதலை வைத்துத்தான் நற்செய்தியாளர்கள் யோவான் மற்றும் மத்தேயு (24:30) இச்சொல்லாடலை இயேசுவுக்குப் பொருத்துகின்றனர். 'எப்பிராயிம்' என்பது யூதா குலத்தைக் குறிப்பது. யூதா குலத்தில் உதித்தவர் இயேசு. ஆக, அவரே எப்பிராயிமின் மகனாகிய மெசியா.

குத்தப்பட்ட இந்த மெசியாவைக் கண்டு மற்றவர்கள் அழுது புலம்புகிறார்கள். எதற்காக இந்தப் புலம்பல்? ஒருவேளை இந்த மெசியாவின் மீட்பு முயற்சிகள் தோற்றுவிட்டன என்பதாலா? அல்லது இது காத்திருத்தலின் புலம்பலா? அல்லது இந்தப் புலம்பல் உலக இறுதியில் நடக்கும் நன்மைக்கும், தீமைக்கும் இடையேயான போராட்டத்தின் வெளிப்பாடாகக் கூட இருக்கலாம்.

நாம் இங்கே இயேசுவைக் குறிப்பதாகவே எடுத்துக்கொள்வோம். இயேசு சிலுவையில் உயிர்விட்டபோது, ஈட்டி ஒன்றால் நூற்றுவர் தலைவர் ஒருவர் ஊடுருவக் குத்துகின்றார். குத்திய அவர், அவ்வுடலிலிருந்து வெளிப்பட்ட இரத்தத்தையும், தண்ணீரையும் கண்டு, 'இவர் உண்மையான இறைமகன்' என சான்றும் பகர்கின்றார். ஆக, அவர் பார்க்கிறார். சான்று பகர்கிறார். முதல் ஏற்பாட்டில் குத்துண்டவரைக் கண்டவர்கள் தங்கள் நம்பிக்கையை இழந்து புலம்புகின்றனர். இரண்டாம் ஏற்பாட்டில் குத்துண்டவர் நாம் நம்பிக்கையில் உறுதியாக இருக்கக் காரணமாகின்றார். ஏனெனில், சிலுவை இயேசுவின் முடிவு அல்ல. சிலுவையின் இருளையும் தாண்டி உயிர்ப்பின் வைகறை ஒளிவீசுகின்றது.

ஆக, நாம் இயேசுவைப் பார்க்கும் விதம் நம் வாழ்வை நம்பிக்கையோடு நகர்த்துவதற்கு உதவி செய்கிறது.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (காண். லூக் 9:18-24) இயேசுவுக்கு ஒரு விநோதமான ஆசை வருகிறது. தான் மூன்று ஆண்டுகளாக தன் திருத்தூதர்கள் முன்னும், மக்கள் முன்னும் இறையரசை அறிவித்துக் கொண்டிருக்கிறார். புதுமைகள் செய்கின்றார். இந்தப் பின்புலத்தில் தன்னை மக்கள் யார் என்று நினைக்கிறார்கள் அல்லது தன்னை எப்படிப் பார்க்கிறார்கள் என அறிந்து கொள்ள விழைகின்றார்.

இன்றைய நற்செய்தி வாசகத்தை மூன்று உட்பிரிவுகளாகப் பிரிக்கலாம்:

அ. தன் அடையாளம் பற்றிய இயேசுவின் இரண்டு கேள்விகள் (18-20)
ஆ. பாடுகள் பற்றிய முதல் முன்னறிவிப்பு (21-22)
இ. சீடத்துவம் பற்றிய போதனை (23-24)

அ. இரண்டு கேள்விகள்
நாசரேத்து தொழுகைக்கூடத்தில் இயேசுவை நிறுத்துகின்ற லூக்கா (4:16-19), அங்கே இயேசுவை எசாயா இறைவாக்கின் (61:1-2) நிறைவாக முன்வைக்கின்றார். இயேசுவின் மனமாற்றம் பற்றிய போதனை திருமுழுக்கு யோவானின் போதனையை ஒத்திருக்கின்றது. கைம்பெண்ணின் மகனுக்கு உயிர் தருதல் (லூக் 7:11-17) மற்றும் அப்பம் பலுகச் செய்தல் (9:10-17) நிகழ்வுகள் வழியாக இயேசுவை எலியா மற்றும் எலிசா இறைவாக்கினர்களின் சாயலாக முன்வைக்கின்றார். இந்த இலக்கிய பின்புலத்தில், 'நான் யார் என மக்கள் சொல்கிறார்கள்?' என்று கேட்கின்றார் இயேசு. ஆக, இந்தக் கேள்விக்கான பதில் - 'சிலர் திருமுழுக்கு யோவான் என்றும், சிலர் எலியா என்றும், மற்றும் சிலர் முற்காலத்து இறைவாக்கினர் ஒருவர் உயிர்த்தெழுந்துள்ளார் எனவும் சொல்கின்றனர்' - என்பது எளிதாகிவிடுகிறது.

மாற்கு நற்செய்தியாளரிடமிருந்து (மாற் 8:27-30) லூக்கா இந்த நிகழ்வை எடுத்திருந்தாலும், லூக்கா மூன்று முக்கியமான இடங்களில் வித்தியாசப்படுகின்றார்:

1. இந்த நிகழ்வு நடக்கும் 'செசரியா பிலிப்பி' என்னும் இடத்தையும், 'வழியில்' என்னும் வார்த்தையையும் எடுத்துவிட்டு, 'இயேசு இறைவனிடம் வேண்டிக்கொண்டிருந்தபோது' என பதிவு செய்கின்றார். லூக்காவின் இயேசு இறைவேண்டல் செய்யும் இயேசு. தன் வாழ்வின் முக்கியமான நிகழ்வுகள் அனைத்திலும் இயேசுவை செபிப்பவராக முன்வைப்பது லூக்காவின் இயல்பு (காண். 3:21, 5:16, 6:12, 11:1, 22:40-41, 44, 46, 23:46). 2. 'மக்கள்' என்ற மாற்குவின் வார்த்தையை எடுத்துவிட்டு, 'கூட்டம்' என்று எழுதுகின்றார் லூக்கா. ஆனால், தமிழ் பொதுமொழிபெயர்ப்பில் தவறாக 'மக்கள்' என்று கொடுக்கப்பட்டுள்ளது. லூக்கா நற்செய்தியில் 'கூட்டம்' என்ற வார்த்தை முக்கியமானது. ஏனெனில் மக்கள் கூட்டமாக வருமிடங்களில் எல்லாம் இயேசுவை இறைவாக்கினர் என அறிக்கையிடுகின்றனர் (காண். லூக் 7:16).

3. 'இறைவாக்கினர்களில் ஒருவர்' (மாற் 8:28) என மாற்கு எழுதுவதை, 'முற்காலத்து இறைவாக்கினர்களில் ஒருவர்' (லூக் 9:19) என மாற்றுகின்றார் லூக்கா. இதில் பெரிய வித்தியாசம் இல்லையென்றாலும், இதை லூக் 9:8-டோடு ஒப்பிடும்போது புதிய அர்த்தம் கிடைக்கிறது. 9:8ல் இயேசு யார் என்ற கேள்வியை ஏரோது கேட்கின்றார். ஆனால் அவருக்கு விடை கிடைக்கவில்லை. அவருக்குக் கிடைக்காத விடை பேதுருவுக்குக் கிடைக்கிறது. ஆக, இயேசுவோடு அருகிருக்கும் அல்லது இணைந்திருக்கும் ஒருவரால் தான் அவர் யார் என்று அறிந்து கொள்ள முடியும். இயேசு என்பவர் பொது அறிவு அல்லது மூளையால் பெறும் அறிவு அல்ல. மாறாக, மனத்தால் பெறும் அனுபவம்.

இயேசுவின் கேள்வி சட்டென்று மாறுகிறது: 'நீங்கள் நான் யார் என சொல்கிறீர்கள்?' என்று அவர்களிடம் கேட்கின்றார். 'நீர் கடவுளின் மெசியா' என்று மறுமொழி தருகின்றார் பேதுரு. இயேசுவை மெசியா என்ற மறைமுகமாக ஏற்கனவே பதிவு செய்த லூக்கா (காண். 2:11, 26, 3:15, 4:41) இங்கே வெட்ட வெளிச்சமாக்குகின்றார். மேலும், நாசரேத்து தொழுகைக்கூடத்தில் இயேசு வாசிக்கும் இறைவார்த்தைகளும் - 'அவர் என்னை அருள்பொழிவு செய்துள்ளார்' (4:18) - இயேசு மெசியா என்பதை ஏற்கனவே முன்னோட்டமாகக் காட்டுகின்றது.

இயேசுவை இரண்டு நிலைகளில் மெசியாவாக உருவகிக்கின்றார் லூக்கா: (அ) 'இறைவாக்கினர் மெசியா' - மோசே முன்னறிவித்த இறைவாக்கினர் (இச 18:15, 18) வரிசையிலும், எசாயாவின் வார்த்தைகளின் வழியிலும் வரும் மெசியா இயேசு. இவரின் பிரசன்னத்தில், 'ஏழைகளுக்கு நற்செய்தி அறிவிக்கப்படும். சிறைப்பட்டோர் விடுதலை பெறுவர். பார்வையற்றோர் பார்வை பெறுவர். பசி மற்றும் தாகம் தீர்க்கப்படும்.' (ஆ) 'அரசர் மெசியா' - 'அவர் தாவீதின் குடும்பத்தின்மேல் என்றென்றும் அரசாள்வார்' என்ற வானதூதரின் வார்த்தைகள், அவரை அரசர் மெசியாவாகவும் அடையாளப்படுத்துகின்றன. பேதுருவின் பதிலைக் கேட்ட இயேசு, (அ) தன் சீடர்களை அமைதி காக்கவும், (ஆ) தன் பாடுகள் பற்றியும், (இ) தன்னைப் பின்பற்றுவதன் இயல்பு பற்றியும் சொல்லத் தொடங்குகின்றார்.

ஆ. பாடுகள் பற்றிய முதல் முன்னறிவிப்பு
'இயேசு எப்படிப்பட்ட மெசியா?' என்று வாசகர்கள் யோசித்துக்கொண்டிருக்கும் நேரத்தில், இயேசுவின் எருசலேம் பாடுகள் பற்றிய முதல் முன்னறிவிப்பைப் பதிவு செய்கின்றார் லூக்கா.
இங்கே இயேசு தன்னை 'மானிட மகன்' என அழைக்கிறார். 'மானிட மகன்' என்பது தானியேல் 7:13, 1 ஏனோக்கு, மற்றும் 4 எஸ்ரா நூல்களில் காணப்படும் சொல்லாடல். இங்கே இது வரவிருக்கும் மெசியாவைக் குறிக்கிறது. மானிட மகன் (அ) துன்பப்படுவார், (ஆ) உதறித் தள்ளப்படுவார், (இ) கொலை செய்யப்படுவார், (ஈ) மூன்றாம் நாள் உயிர்த்தெழுவார். 'இவை அனைத்தும் நடைபெற வேண்டும்' என்று சொல்லும்போது, இது இறைத்திட்டம் என்பதை வரையறுக்கின்றார் இயேசு.

இ. சீடத்துவம் பற்றிய போதனை
சீடத்துவம் பற்றிய இயேசுவின் இரண்டு போதனைகள் தொடர்ந்து வருகின்றன. முதல் போதனையில் 'சிலுவை' என்ற சொல் முன்னிலை வகிக்கிறது. லூக்காவின் வாசகர்களுக்கு 'சிலுவை' என்றவுடன் இயேசுதான் நினைவிற்கு வந்திருப்பார்கள். இங்கே 'நாள்தோறும்' மற்றும் 'பின்பற்றிக்கொண்டே இருக்க வேண்டும்' என்ற வார்த்தைகள் முக்கியமானவை. இயேசுவைப் பின்பற்றுதல் ஒரே நாளில் அல்லது இறந்த காலத்தில் நடந்து முடிய வேண்டிய செயல் அன்று. மாறாக, அன்றாடம் தொடர வேண்டிய செயல். இங்கே மூன்று கட்டளை வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார் இயேசு: (அ) 'உன்னையே மறு,' (ஆ) 'உன் சிலுவையை எடு,' (இ) 'என்னைப் பின்பற்றி வா.'

இரண்டாவது போதனை முதல்போதனையின் தொடர்ச்சியாக இருக்கிறது: 'உயிரை இழப்பவர் அதை காத்துக் கொள்வார். உயிரைக் காத்துக்கொள்ள நினைப்பவர் அதை இழந்துவிடுவார்.' போருக்குச் செல்லும் ஓர் வீரனுக்குத் தரும் அறிவுரை போல இருக்கிறது இது. போர்க்களத்தில் போரிடும் ஒருவன் தன் உயிரை காத்துக்கொள்ள நினைத்து பாதியிலேயே வீடு திரும்பினால் அவன் சில ஆண்டுகள் கழித்து தன் உயிரை சாதாரணமாக இழக்க நேரிடும். ஆனால், அந்த வீரன் அதை போர்க்களத்தில் இழக்கத் துணிந்தால் அவன் வீரனாக நினைவுகூறப்பட்டு என்றும் வாழ்வான். பல்வேறு வேதகலாபனை மற்றும் துன்பங்களுக்கு ஆளான முதல் கிறித்தவர்களுக்குச் சொல்லப்பட்டதாக இருந்தாலும், இங்கே வாழ்வின் நிலையாமை கோடிட்டுக் காட்டப்படுகிறது.

இன்றைய இறைவார்த்தை வழிபாடு நமக்கு வைக்கும் சவால்கள் எவை?

1. 'இவர் யார்?' - 'நான் யார்?'
இவ்வளவு நாட்கள் ஒருவர் மற்றவரைப் பார்த்து, 'இயேசு யார்?' 'இவர் யார்?' என்று சீடர்கள் கேட்டுக்கொண்டிருக்க, இன்று இயேசு அவர்களைப் பார்த்து 'நான் யார்?' 'உனக்கு நான் யார்?' என்று கேட்கின்றார். பேதுரு அவருக்குத் தெரிந்த விடையைச் சொன்னார். ஆனால், அந்த விடை முழுமை இல்லை. ஏனெனில் பேதுருவும், திருத்தூதர்களும் 'மெசியா' என்னும் மறைபொருளை முழுமையாக உணரவில்லை. அந்த மெசியா நிலையை அடைய இயேசு பட வேண்டிய துன்பமும், இறப்பும், உயிர்ப்பும் அவர்களுக்குப் பிடிக்கவில்லை. வாழ்வில் நம் இருப்பையும், தான்மையையும் (identity), உறவுநிலையையும் பற்றிய கேள்விகள்தாம் கடினமானவை. 'நீ யார்?' 'கடவுள் என்றால் யார்?' 'இயேசுவின் சீடராய் இருப்பதன் பொருள் என்ன?' இந்தக் கேள்விகளுக்கு நாம் சொல்லும் விடைகளைப் பொறுத்தே நம் மதிப்பீடுகளும், முதன்மைப்படுத்துதல்களும், அர்ப்பணமும் அமைகின்றன. நாம் வாழ்வதைப் பொறுத்தே இக்கேள்விகளுக்கான விடைகளும் அமையம். இயேசு சிலுவையை நோக்கிச் சென்றதை, அரியணை நோக்கிச் சென்றதாக தவறாகப் புரிந்து கொண்டார் பேதுரு. சிலுவையை மறைத்து அல்லது சிலுவையை மறுத்து, இயேசுவை அரியணையில் மட்டும் அமர்த்திப் பார்க்கும் ஆன்மீகம் ஆபத்தானது. அப்படிப்பட்ட ஆன்மீகத்தைக் கொண்டிருப்பவர்கள் தாங்களும் அரியணையில் அமர்ந்திருப்பதாக எண்ணிக்கொண்டு மற்றவர்களை அடக்கி ஆளத் தொடங்குவர்.

2. 'கூட்டத்தினர் யார் என்று சொல்கிறார்கள்?' - 'நீங்கள் யார் என்று சொல்கிறீர்கள்?' கூட்டத்தினர் 'அவரைப் பற்றி' அறிந்திருந்தனர். ஆனால் பேதுரு 'அவரையே' அறிந்திருக்கின்றார். எடுத்துக்காட்டாக, ஸ்மார்ட்ஃபோன் பயன்படுத்தாத ஒருவர் ஸ்மார்ட்ஃபோன் பற்றி தெரிந்ததெல்லாம் வெறும் 'பற்றிய' அறிவே. ஆனால் ஸ்மார்ட்ஃபோன் பயன்படுத்துபவர் அதைப் பற்றி பெற்றிருக்கும் அறிவு 'ஸ்மார்ட்ஃபோனையே' அறிந்திருப்பது.இரண்டிற்கும் வித்தியாசம் இருக்கின்றது. முதல் வகையான அறிவு மூளை சார்ந்தது. இரண்டாம் அறிவு இதயம் சார்ந்தது. முதல் வகையான அறிவில் அறிபொருளுக்கும், அறிபவருக்குமிடையே இடைவெளி இருக்கும். இரண்டாம் வகை அறிவில் அறிபொருளும், அறிபவரும் ஒன்றித்து விடுவர். இயேசுவைப் பற்றி நாம் மறைக்கல்வி வகுப்புகளில், நம் பெற்றோரிடம், மற்ற வழிகளில் பெற்றதெல்லாம் முதல் அறிவு. ஆனால் இயேசு என்ற மனிதர் நம்மை ஆட்கொள்ளும்போதுதான் முதல் வகை அறிவு நம்மில் எழுகிறது. முதல் வகை அறிவில் கடவுளுக்கும், எனக்கும் உள்ள உறவு, 'நான்-அது' என்ற நிலையில் இருக்கின்றது. இரண்டாம் வகை அறிவில் கடவுளுக்கும், எனக்கும் உள்ள உறவு, 'நான்-நீ' என்ற நிலையில் இருக்கின்றது. முதல் அறிவிலிருந்து இரண்டாம் அறிவிற்குக் கடப்பதே நம்பிக்கைப் பயணம். இந்த நம்பிக்கை நம் சரணாகதியில் தொடங்குகின்றது.

3. தொட்டுத் தொடரும் சீடத்துவம்
இயேசுவைப் பின்பற்றும் சீடத்துவம் - பொதுநிலை மற்றும் அருள்நிலை - இன்றும் என்றும் தொடர வேண்டியது. இங்கே சமரசத்திற்கு இடமில்லை. பிளவுபட்ட மனத்திற்கும், பாதி அர்ப்பணத்திற்கும்கூட இடமில்லை. நிபந்தனையற்ற பின்பற்றுதல் இங்கே அவசியம். சீடத்துவத்தின் பாதை தன்மறுப்பு நிறைந்தது. சீடத்துவத்தின் லாஜிக் வித்தியாசமானது - இங்கே இழப்பவர் பெற்றுக்கொள்கிறார், பெற்றுக்கொள்பவர் இழக்கிறார்.

4. இரண்டு உள்ளுணர்வுகள் நம் உள்ளத்தில் எப்போதும் இரண்டு உள்ளுணர்வுகள் ஒன்றோடொன்று சண்டையிட்டுக்கொண்டே இருக்கின்றன. 'எல்லாம் என்னுடையது, எனக்கு நிறைய வேண்டும், எல்லாமே நான்தான், நான் பாதுகாப்பாக இருக்க வேண்டும், எனக்கு எல்லாம் கிடைக்க வேண்டும்' என்று ஒரு உள்ளுணர்வு நம்மை எடுப்பவர்களாக வைத்திருக்கின்றது. மற்றொரு பக்கம், 'எல்லாம் பகிரப்பட வேண்டியது. எல்லாரும் வாழ வேண்டும். எல்லாரும் நலமாக இருக்க வேண்டும்' என்று ஒரு உள்ளுணர்வு நம்மை கொடுப்பவர்களாக வைத்திருக்கின்றது. முதல்வகை உணர்வு தன்மையப்பட்டதாகவும், இரண்டாம் வகை உணர்வு இறைமையம் கொண்டதாகவும் இருக்கின்றது. நீதிக்கான வேட்கை, அமைதியை விரும்புதல், பிரிவினைச் சுவர்களை உடைத்தல், காயங்களை ஆற்றுதல், ஒருவர் மற்றவரை ஒருங்கிணைத்தல் என அனைத்தும் இரண்டாம் வகை உணர்வின் வழியே சாத்தியமாகிறது.

5. செபமும் சிலுவையும்
இன்றைய நற்செய்தி வாசகம் 'இறைவேண்டல்' என்று தொடங்கி, 'சிலுவை' என்று முடிகிறது. இறைவனுக்கும் நமக்கும் உள்ள உறவின் அடையாளம் 'செபம்.' நமக்கும் மற்ற எல்லாவற்றுக்கும் உள்ள உறவின் அடையாளம் 'சிலுவை.' இயேசு அனுபவம் அல்லது இறையனுபவம் கிடைக்கப்பெறும் முதல் இடம் 'செபம்.' 'செபமும்', 'சிலுவையும்' இணைந்தே செல்ல வேண்டும். 'செபத்தை' பிடித்துக் கொண்டு 'சிலுவையை' விட்டால் நாம் அடிப்படைவாதிகளாக மாறும் அபாயமும், 'சிலுவையை' பிடித்ததுக்கொண்டு 'செபத்தை' விட்டால் நாம் வேரற்றவர்களாக மாறும் அபாயமும் இருக்கிறது. மற்றொரு பக்கம், நம் வாழ்வின் இன்னல்களை இறைவனிடத்தில் அடுக்கி வைக்கும் இடமாக நாம் செபத்தைப் பார்க்கிறோம். அது சால்பன்று. செபத்தைப் போலவே, சிலுவைகளும் ஓர் எதார்த்தம். நம் வாழ்வு என்ற கப்பல் கட்டப்படும் இடம் இறைவேண்டல். கட்டி முடிக்கப்பட்டவுடன் அலைகள் என்ற சிலுவைகள் மேல் நாம் அலைக்கழிக்கப்பட்டு பயணம் செய்தால்தான் நம் பயண இலக்கை அடைய முடியும். நாம் கட்டப்பட்டது துறைமுகத்தில் நிற்க அல்ல!

நான் பார்க்கும் கடவுள் என்னைப் பார்க்கிறார்...

நான் பார்க்கும் அனைத்திலும் என் கடவுளைப் பார்க்கிறேன்!