இவ் மறையுரையை வழங்குபவர்

அருட்பணி.இயேசு கருணாநிதி
Archbishop’s House, K. Pudur, Madurai 625 007, India
Email: yesu@live.in

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)









பாஸ்கா காலம் 2ஆம் ஞாயிறு

கூட்டிலிருந்து வெளியே

திருத்தூதர் பணிகள் 5:12-16
திருவெளிப்பாடு 1:9-13,17-19
யோவான் 20:19-31

போன வாரம் உயிர்ப்பு பெருவிழா அன்று நீங்கள் யாருக்காவது 'ஈஸ்டர் முட்டை' பரிசளித்தீர்களா? கிறிஸ்துமஸ் அன்று 'கிறிஸ்துமஸ் மரம்' வைக்கும் வழக்கம் எப்படி வந்தது என்று நமக்கு காலப்போக்கில் மறந்துவிட்டதுபோல, உயிர்ப்பு பெருநாள் அன்று 'ஈஸ்டர் எக்' எப்படி வந்தது என்றும் மறந்து வருகிறது. இன்று பேக்கரிகளையும், சூப்பர் மார்க்கெட்டுகளையும் அலங்கரிக்கும் ஈஸ்டர் முட்டைகள் பல பொறிக்காமலேயே போய்விடுகின்றன. ஈஸ்டர் முட்டையின் பொருளை நாம் அறிந்துள்ளோமோ இல்லையோ, இன்றைய கார்ப்பரெட் உலகம் அறிந்திருக்கிறது. ஆகையால்தான் அதையும் ஒரு பரிசுப்பொருளாக, விற்பனைப் பொருளாக மாற்றிவிட்டது.

ஈஸ்டர் முட்டை இரண்டு விடயங்களை அடையாளப்படுத்துகிறது. ஒன்று, இயேசு. சிலுவையில் அறையப்பட்ட இறந்த அவர் கல்லறையில் அடக்கம் செய்யப்படுகின்றார். ஆக, கல்லறையில் வைக்கப்பட்ட இயேசுவை முதலில் அடையாளப்படுத்துகிறது முட்டை. இரண்டு, திருத்தூதர்கள். இயேசு சிலுவையில் அறையப்பட்ட இறக்க, தங்களையும் கைது செய்துவிடுவார்களோ என்று அஞ்சிய திருத்தூதர்கள் பூட்டிய அறைக்குள் ஒளிந்துகொள்கின்றனர். திருத்தூதர்கள் அறைக்குள் அடைந்து கிடந்ததை இரண்டாவதாக அடையாளப்படுத்துகிறது முட்டை. கல்லறை என்ற முட்டையை இயேசு தாமே உடைத்து வெளியேறுகின்றார். புதிய வாழ்வுக்குக் கடந்து செல்கின்றார். பூட்டிய அறை என்ற முட்டையை திருத்தூதர்கள் உடைத்து வெளியேற இயேசு என்ற தாய்க்கோழியின் துணை தேவைப்படுகிறது.

இன்றைய முதல் வாசகத்தில் (காண். திப 5:12-16), தூய ஆவியானவரின் வருகைக்குப் பின் துணிவுடன் இயேசுவுக்குச் சான்று பகர்ந்த திருத்தூதர்களின் வாழ்க்கை முறை பற்றி பதிவு செய்கின்ற லூக்கா, அவர்கள் வழியாக நடந்தேறிய அருஞ்செயல்கள் மற்றும் அரும் அடையாளங்கள் பற்றி இங்கே குறிப்பிடுகின்றார். இயேசுவுக்கும், திருத்தூதர்களுக்குமான இடைவெளியை மிக அழகாக பதிவு செய்கின்றார் லூக்கா. அதாவது, இயேசு அறிகுறிகளை செய்தார். ஆனால், இங்கே திருத்தூதர் வழியாக அறிகுறிகள் செய்யப்படுகின்றன. 'நம்பிக்கை கொண்டவர்கள்' ஒரே மனத்தோடு கூடி வருகின்றனர்.இந்தக் கூடிவருதல் அவர்கள் தங்கள் நம்பிக்கையில் நிலைத்திருப்பதற்கு உதவி செய்ததோடு, நம்பிக்கை குன்றியவர்களுக்கு துணிவையும் தந்தது. தங்களின் குடும்பம், பின்புலம், சமூக அந்தஸ்து, வேலை போன்றவற்றில் வேறுபட்டிருந்தாலும், இயேசுவின் மேல் உள்ள நம்பிக்கை ஒருமனத்தோடு இவர்கள் வாழ வழிசெய்கிறது. திருத்தூதர் பேதுருவை முதன்மைத் திருத்தூதராக தொடக்கத் திருஅவை ஏற்றுக்கொள்ளத் தொடங்குகிறது. அவரின் நிழல் பட்டாலே நலம் கிடைக்கும் என்ற நம்பிக்கையை மக்கள் பெறுகின்றனர். இயேசு செய்த அறிகுறிகள் பெரும்பாலும் அவரின் தொடுதலால் செய்யப்பட்டவை. இயேசு விண்ணேறிச் சென்றிபின் அவரின் தொடுதல் இனி சாத்தியமில்லை. மேலும், விண்ணேறிச் சென்ற இயேசுவால் தன் திருத்தூதரின் நிழலை வைத்துக்கூட குணம் தர முடியும். இவ்வாறாக, இங்கே முதன்மைப்படுத்தப்படுவது இயேசுவின் ஆற்றலே.

'ரிலே' ஓட்டத்தில் ஓடுவதுபோல கையில் இறையாட்சி என்னும் தீபத்தை எடுத்துக் கொண்டு ஓடிய இயேசு, அதைத் தன் சீடர்களின் கையில் கொடுத்துவிட்டார். இனி அவர்கள்தாம் அதை முன்னோக்கி எடுத்துச் செல்ல வேண்டும். 'அவர்களிடம் கொடுத்துவிட்டோம். நம் பணி முடிந்துவிட்டது' என அவர் ஓய்ந்துவிடாமல், நிழலாக இன்றும் தொடர்கின்றார். இவ்வாறாக, தன்னுடைய தொடர் உடனிருப்பின் வழியாக இயேசு திருத்தூதர்களை அவர்களின் மூடிய கதவுகளிலிருந்து வெளியேற்றுகின்றார்.

இன்றைய இரண்டாம் வாசகம் (காண். திவெ 1:9-13, 17-19) பத்முதீவுக்கு நாடுகடத்தப்படும் திருத்தூதர் யோவான் கிறிஸ்துவைக் காட்சியாகக் காண்பதையும், கிறிஸ்துவைக் கண்டபோது அவரிடம் எழுந்த உள்ளுணர்வுகளையும், இந்தக் காட்சியை எழுதி வைக்குமாறு அவருக்குக் கொடுக்கப்பட்ட கட்டளையையும் முன்வைக்கிறது. தான் திருத்தூதராக இருந்தாலும், கிறிஸ்துவையே காட்சியில் கண்டாலும், நம்பிக்கை கொண்ட நிலையில் அனைவரோடும் 'வேதனையிலும், ஆட்சியுரிமையிலும், மனவுறுதியிலும்' ஒன்றித்திருப்பதாகச் சொல்கின்றார் யோவான். ஆக, கிறிஸ்து தான் தரும் நம்பிக்கையால் இன்னும் பலரை அழிவிலிருந்து வெளியேற்றுகிறார்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில், கூட்டிலிருந்து வெளியே தம் சீடர்களை அழைக்கும் இயேசு நம்மையும் நம்முடைய சௌகரிய மையங்களிலிருந்து வெளியேற அழைக்கின்றார்.

எப்படி?

இன்றைய நற்செய்தி வாசகம் (காண். யோவா 20:19-31) மூன்று பகுதிகளாக அமைந்துள்ளது:

20:19-23 இயேசு சீடர்களுக்குத் தோன்றுதல்

20:24-29 இயேசு தோமா மற்றும் மற்ற சீடர்களுக்குத் தோன்றுதல்

20:30-31 நற்செய்தி முடிவுரை

இந்நற்செய்தி வாசகத்தின் பின்புலத்தை முதலில் புரிந்துகொள்வோம்:

இயேசு பிறந்த ஆண்டு '0' என வைத்துக் கொள்வோம். அவர் இறந்த ஆண்டு 33. யோவான் நற்செய்தி எழுதப்பட்ட ஆண்டு '100.' ஒரு தலைமுறை என்பது 40 ஆண்டுகள். இயேசுவின் இறப்புக்குப் பின் ஏறக்குறைய இரண்டு தலைமுறைகள் கடந்துவிடுகின்றன. இயேசுவைப் பார்த்த அவரின் சமகாலத்தவருக்கு அவரையும், அவரின் உயிர்ப்பையும் நம்புவது பெரிய விஷயமல்ல. ஆனால், அடுத்தடுத்த தலைமுறை வரும்போது கூடவே நம்பிக்கை சிக்கல்களும் எழுகின்றன. அப்படி முதன்மையாக எழுந்த சிக்கல்கள் மூன்று: (1) இயேசு உயிர்த்தார் என்றால், அவர் உடலோடு உயிர்த்தாரா? அல்லது ஆவியாக உயிர்த்தாரா? ஆவியாக உயிர்த்தார் என்றால், அதை உயிர்ப்பு என்று நாம் சொல்ல முடியாது. உடலோடு உயிர்த்தார் என்றால் அவர் எப்படிப்பட்ட உடலைக் கொண்டிருந்தார்? பூட்டிய அறைக்குள் நுழைந்த அவர் எப்படி உடலைப் பெற்றிருக்க முடியும்? - 'உடலா' 'ஆவியா' என்பது முதல் கேள்வி. (2) கிரேக்க தத்துவ இயல் மேலோங்கி நின்ற இயேசுவின் சமகாலத்தில், 'புலன்களுக்கு எட்டுவது மட்டுமே உண்மை' (எம்பிரிசிஸ்ட்) என்று சொன்ன தத்துவம் மேலோங்கி நின்றது. இந்த தத்துவயியலார்கள், கண்களுக்குத் தெரிவதை மட்டுமே நம்பினார்களே தவிர, கண்ணுக்குத் தெரியாத கடவுள், ஆவி, மறுபிறப்பு, மோட்சம், நரகம், வானதூதர் என எல்லாவற்றையும் கேள்விக்குட்படுத்தினர். இப்படிப்பட்டவர்களுக்கு இயேசுவின் மேலுள்ள நம்பிக்கையை எப்படி உருவாக்குவது? - இது அடுத்த பிரச்சினை. மற்றும் (3) திருத்தூதர்கள் பல நாடுகளுக்குப் பயணம் செய்து இயேசுவுக்குச் சான்று பகர்கின்றனர். திருத்தூதர் தோமா தான் அதிக தூரம் பயணம் செய்து நம் ஊர் வரைக்கு வருகின்றார். இப்படி இவர்கள் போகும் இடத்தில் இவர்களுக்கு வரும் புதிய சிக்கல் என்னவென்றால், இந்த தூர நாடுகளில் வசிப்பவர்கள், இயேசு என்ற வரலாற்று எதார்த்தத்திடமிருந்து காலத்தாலும், இடத்தாலும் அந்நியப்பட்டவர்கள். 'நீங்க அவரைப் பார்த்திருக்கிறீங்க! நம்புறீங்க!' 'ஆனா, நாங்க அவரைப் பார்த்ததில்லை. அவரை எதுக்கு நம்பணும்?' என அவர்கள் கேள்வி கேட்டால், அவர்களுக்கு சொல்வதற்காக கண்டுபிடித்த ஒரு பதில்தான்: 'கண்டதாலா நம்பினாய்! காணாமலே நம்புவோர் பேறுபெற்றோர்.' தோமாதான் அதிக தூரம் செல்ல வேண்டியிருந்ததால், தோமாவே இந்நிகழ்வின் கதைமாந்தராக்கப்படுகின்றார்.

தோமா - இயேசு - விரல் நிகழ்வு தோமாவின் நற்செய்தியிலும், அவரின் பணிகள் பற்றிய குறிப்பேட்டிலும் இல்லை. மேலும், தோமாவைப் பற்றிய மற்ற நிகழ்வுகள் (யோவா 11:16, 14:5, 21:2) அவரை 'சந்தேகிப்பவராக' நமக்கு அடையாளப்படுத்தவில்லை. மேலும், இயேசு தோமாவுக்குத் தோன்றும் நிகழ்வு ஒரு பிற்சேர்க்கை போலவே அமைந்துள்ளது. அதாவது, இயேசு தன் சீடர்களுக்குத் தோன்றி தூய ஆவி கொடுக்கின்றார். பாவம் மன்னிக்கும் அதிகாரம் கொடுக்கின்றார். அப்புறம் மறைந்துவிடுகின்றார். நற்செய்தியாளர் டக்கென்று தன் குரலை மாற்றி, 'ஆனால் இயேசு வந்தபோது தோமா அங்கு இல்லை' என்கிறார். அப்படியெனில் தோமா தூய ஆவியைப் பெறவில்லையா? அல்லது பாவ மன்னிப்பு அதிகாரம் அவருக்கு கொடுக்கப்படவில்லையா? 'சீடர்கள்' என முதலில் சொல்லுமிடத்திலேயே, 'தோமாவைத் தவிர மற்ற சீடர்கள்' என்று அவர்கள் சொல்லியிருக்கலாமே? இந்த பாடச் சிக்கல்களை வைத்துப் பார்க்கும்போது, யோவானின் திருஅவை கொண்டிருந்த இறையியல் கேள்விகளுக்கு விடையாக, நற்செய்தியாளர் உருவாக்கிய நிகழ்வே 20:24-31.

இந்நிகழ்வு இயேசு உயிர்த்த அன்றே மாலை நேரத்தில் நடப்பதாக எழுதுகிறார் யோவான். 'மூடிய கதவுகள்' என்னும் சொல்லாடல் கதையில் இறுக்கத்தை அதிகரிக்கிறது. யோவான் நற்செய்தியாளர் திருத்தூதர்களை பன்னிருவர் என அழைப்பதில்லை. யூதாசு காட்டிக்கொடுப்பவனாக மாறிவிட்டதால், அவரை உள்ளிழுக்கும் பெயரை இவர் தவிர்க்கிறார். இங்கே 'சீடர்கள்' என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறார். 'உங்களுக்கு அமைதி உரித்தாகுக!' என்று இயேசு சீடர்களை வாழ்த்துகிறார். இது ஒரு சாதாரண வாழ்த்து என்றாலும், இங்கே இயேசு நிறைவேற்றும் முதல் வாக்குறுதியாக இருக்கிறது (காண். யோவா 14:27). உலகின் பகையையும், எதிர்ப்பையும் தாங்க வேண்டிய தன் சீடர்களுக்கு (15:18-25) அமைதியை பரிசளிக்கின்றார் இயேசு. சீடர்கள் தோமாவிடம், 'ஆண்டவரைக் கண்டோம்' என்று சொல்கின்றனர். இந்த வார்த்தைகள் வழியாக யோவான் இந்நிகழ்வை 'நான் ஆண்டவரைக் கண்டேன்' என்ற (20:18) மகதலாவின் வார்த்தைகளோடு இணைக்கின்றார். அங்கே மரியாள் இயேசுவைக் கட்டிப்பிடிக்கின்றாள். இங்கே தோமா அவரின் உடலை தன் விரலால் ஊடுருவுகின்றார். இந்த இரண்டு நிகழ்வுகளும் இயேசு உடலோடு இருந்தார் என்பதற்குச் சான்றாக அமைகின்றன. இயேசுவை நேரில் கண்ட தோமா, 'நீரே என் ஆண்டவர்! நீரே என் கடவுள்' என அறிக்கையிடுகின்றார். இதுதான் யோவான் நற்செய்தியின் இறுதி நம்பிக்கை அறிக்கை. 'என்னைக் கண்டவர் தந்தையைக் கண்டார்' (14:9) என்ற இயேசுவின் வார்த்தைகள் இங்கே உண்மையாகின்றன.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் மூன்று வகையான நகர்வுகள் இருக்கின்றன:

அ. பூட்டிய அறைக்குள்ளிருந்து வெளியே

'தந்தை என்னை அனுப்பியதுபோல நானும் உங்களை அனுப்புகிறேன்' என்கிறார் இயேசு. அழைத்தலின் மறுபக்கம்தான் அனுப்புதல். அழைக்கின்ற அனைவரும் அனுப்பப்படுவர் என்பதே நிதர்சனமான உண்மை. அழைப்பு என்பது வெறும் உரிமை அல்ல. அதில், அனுப்பப்படுதலின் கடமையும் இருக்கிறது. இன்று, திருமணம், அருள்பணிநிலை என நாம் எந்த அழைப்பைப் பெற்றிருந்தாலும் அதில் அடங்கியிருக்கும் அனுப்புதலையும் நாம் உணர வேண்டும். அனுப்பப்படாமல் இருக்கும் வாழ்வு - முட்டைக்குள் அடைந்த கோழிக்குஞ்சு முட்டைக்கும் தனக்கும் ஆபத்தாய் மாறுவது போல - ஆபத்தாய் மாறிவிடும்.

இன்று நான் அடங்கியிருக்கும் பூட்டிய அறை எது? பூட்டிய அறையின் இருள், பாதுகாப்பு, மற்றவர்களின் உடனிருப்பு என்னுடைய சௌகரிய மையமாக மாறிவிடும்போது என்னால் வெளியே செல்ல முடிவதில்லை. வெளியே செல்வதற்கு நான் என் சௌகரிய மையத்தை விட்டு வெளியே வர வேண்டும். 'கடவுள் தன்மை' என்ற சௌகரிய மையத்திலிருந்து இயேசு வெளியேறியதால்தான் அவரால் மனித தன்மையை ஏற்க முடிந்தது. மேலும், நான் என்னையே அடுத்தவரிடமிருந்து தனிமைப்படுத்திப் பூட்டிக்கொள்ளும்போது என் வாழ்க்கை முழுமை அடைவதில்லை.

ஆ. கோபத்திலிருந்து மன்னிப்புக்கு

சீடர்கள்மேல் ஊதி தூய ஆவுpயை அவர்கள்மேல் பொழிந்த இயேசு பெந்தெகோஸ்தே திருநாளின் முன்சுவையை அளிக்கின்றார். மேலும், முதல் ஆதாமின்மேல் கடவுள் தன் மூச்சைக் காற்றி ஊதி அவனுக்கு வாழ்வு தந்தது போல. இங்கே தன் சீடர்களின்மேல் ஊதி அவர்களுக்குப் புதுவாழ்வு அளிக்கின்றார் இயேசு. 'நீங்கள் எவருடைய பாவங்களை மன்னிப்பீர்களோ' என்ற வாக்கியத்தை நாம் பெரும்பாலும் ஒப்புரவு அருள்சாதன உருவாக்கம் என்று மேற்கோள் காட்டுகின்றோம். அல்லது இது அருள்பணியாளர்களுக்கு மட்டுமே பொருந்துகிறது என்று சொல்கிறோம். ஆனால், இங்கே இயேசு மன்னிப்பு என்ற மதிப்பீட்டை அனைவருக்குமான மதிப்பீடாகப் பதிவு செய்கின்றார். சீடர்கள் அறைக்குள் ஒளிந்து நிற்கக் காரணம் யூதர்களின் மேல், உரோமையரின் மேல் கொண்டிருந்த பயமும் கோபமுமே. தங்கள் தலைவரை இப்படிக் கொன்றுவிட்டார்களே என்ற கோபம், தங்களையும் அதே போல செய்துவிடுவார்களோ என்ற பயம். இந்தப் பின்புலத்தில்தான் அவர்களுக்குத் தோன்றுகின்ற இயேசு அவர்களை மன்னிப்பிற்கு அழைத்துச் செல்கின்றார். ஆக, மன்னிப்பின் வழியாக நாம் நம்முடைய கூட்டை உடைத்து வெளியே செல்கிறோம்.

மன்னிக்க மறுக்கும் உள்ளம் மற்றவர்களை உள்ளே வராமல் பூட்டிக்கொள்கிறது. மேலும், அமைதியின் தொடர்ச்சியாகவே இயேசு மன்னிப்பை முன்வைக்கின்றார். மன்னிக்கின்ற மனம் அமைதியை அனுபவிக்கும். அமைதியை அனுபவிக்கும் மனம் மன்னிக்கும்.

இ. சந்தேகத்திலிருந்து நம்பிக்கைக்கு

'கண்டதால் நம்பினாய். காணாமலே நம்புவோர் பேறுபேற்றோர்' என்கிறார் இயேசு. இயேசுவின் வெற்றுக் கல்லறையை நோக்கி ஓடும் யோவான் 'கண்டார், நம்பினார்' (20:8). இங்கே தோமா இயேசுவைக் 'கண்டார், நம்பினார்.' ஆனால், இனி வரப்போகும் தலைமுறைகள் காணாமல்தான் நம்ப வேண்டும் முதல் ஏற்பாட்டில் ஈசாக்கின் பார்வை மங்கியிருந்தபோது, யாக்கோபு ஏசாவைப்போல உடையணிந்து, அவரை ஏமாற்றி தன் தந்தையின் ஆசியை உரிமையாக்கிக் கொள்கின்றார். ஈசாக்கு தன் கண்களையும், தொடுதலையும் நம்பியதால் ஏமாற்றப்பட்டார். ஆனால், ஆபிரகாம் காணாமலேயே இறைவனின் வாக்குறுதியை நம்பினார். அவரே நம்பிக்கையால் இறைவனுக்கு ஏற்புடையவராகிறார். 'நம்பிக்கை கொள்கிற உள்ளம் நஞ்சையும் எதிர்கொள்ளும்' என்பது பழமொழி. நம்பிக்கை ஒன்றே நம்மைச் செயல்படத் தூண்டுகிறது. முதல் வாசகம் சொல்லும் அறிகுறிகள் அல்லது அரும் அடையாளங்கள், இரண்டாம் வாசகம் சொல்லும் காட்சி - இந்த இரண்டும் நமக்கு நடக்கவில்லையென்றாலும், நாம் காணாமலே நம்பினால், இன்றும் என்றும் பேறுபெற்றவர்களே.

இறுதியாக, இன்று நம் ஒவ்வொருவரையும் நாம் ஒளிந்திருக்கும் அல்லது அடைந்திருக்கும் ஈஸ்டர் முட்டையிலிருந்து வெளிவர அழைக்கிறது இன்றைய இறைவாக்கு வழிபாடு. இன்றைய ஞாயிற்றை நாம் இறைஇரக்கத்தின் ஞாயிறு என அழைக்கின்றோம். இயேசுவில் நாம் இறைவனின் இரக்கத்தின் முகத்தைக் காண்கிறோம். இதையே நாம் இன்று மற்றவர்களுக்கு அளிக்கவும் அழைக்கப்படுகிறோம். இன்றைய உலகின் தேவை இரக்கமே. தன் கூட்டைவிட்டு தான் வெளியேறும் ஒருவர் தன் கட்டின்மையில், மன்னிப்பில், நம்பிக்கையில், சரணாகதியில் இரக்கம் காட்ட முடியும்.