இவ் மறையுரையை வழங்குபவர்

அருட்பணி.இயேசு கருணாநிதி
Archbishop’s House, K. Pudur, Madurai 625 007, India
Email: yesu@live.in

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)









ஆண்டவரின் திருப்பாடுகளின் குருத்து ஞாயிறு

ஒவ்வொன்றுக்கும் ஒரு விலை

எசாயா 50:4-7
பிலிப்பியர் 2:6-11
லூக்கா 22:14 - 23:56

செல்டிக் மரபில் ஒரு பறவையைப் பற்றிய புனைகதை ஒன்று உண்டு. அந்தப் பறவை தன் வாழ்நாளில் ஒரே ஒருமுறைதான் பாடும். அது அந்த ஒற்றைப் பாடலைப் பாடும்போது அப்பாடல் உலகில் மற்ற எந்த உயிர்கள் பாடும் பறவையைவிட மிக இனிமையாக இருக்கும். தன்னுடைய கூட்டை விட்டுப் புறப்படும் நாளிலிருந்து இது முள் மரத்தைத் தேடும். தேடிக் கண்டுபிடிக்கும் வரை அது ஓயாது. அப்படிக் கண்டுபிடித்த அந்த மரத்தின் முட்கள் நிறைந்த கிளைகளுக்குள் தன்னையே நுழைத்துக்கொண்டு, அம்முட்களிலேயே மிகக் கூர்மையான முள்ளின்மேல் மிகவும் வேகமாக மோதும். இரத்தம் பீறிட்டு அதன் துன்பம் எல்லை மீறிப் போகும் போது கத்தி ஓலமிடும். அந்த ஓலம் வானம்பாடியின் குரலைவிட இனிமையாக இருக்கும். ஒரு நொடி உலகமே அந்தப் பாடல் முன் உறைந்து நிற்கும். கடவுள் வானத்திலிருந்து புன்னகை பூப்பார். மிகச் சிறந்ததைப் பெற வேண்டுமென்றால் மிகப் பெரிய வலியை அனுபவிக்க வேண்டும் - இப்படி முடிகிறது அந்தப் புனைகதை.

நாசரேத்து என்ற கூட்டிலிருந்து வெளியேறிய இயேசு என்னும் பறவை தன் சிலுவை மரத்தையும், ஆணிகளையும், முள்முடியையும் தேடி எருசலேமுக்குள் நுழைகிறது. எவ்வளவோ முறை எருசலேமுக்குள் நுழைந்தவர் மீண்டும் நாசரேத்து திரும்பினார். ஆனால், இந்த முறை அப்படி அல்ல. இதுவே இறுதி முறை. அவர் சிலுவையில் மோதிக் கொண்டு, ஆணிகளில் தொங்கியபோது அவர் எழுப்பிய ஓலத்தால், சிலுவையில் அவர் விட்ட இன்னுயிரால் நாம் மிகப் பெரிய மீட்பைப் பெற்றோம்.

மிகச் சிறந்ததைப் பெற வேண்டுமென்றால் மிகப் பெரிய வலியை அனுபவிக்க வேண்டும்.

மிகவும் அழகானதைப் பெற வேண்டுமென்றால் மிகப் பெரிய விலையைக் கொடுக்க வேண்டும்.

ஒவ்வொன்றுக்கும் ஒரு விலை - இதுதான் ஆண்டவரின் திருப்பாடுகளின் குருத்து ஞாயிறு நமக்குத் தரும் செய்தியாக இருக்கிறது.

எப்படி?

இன்றைய முதல் வாசகத்திலிருந்து (காண். எசா 50:4-7) தொடங்குவோம். எசாயா நூலில் உள்ள ஊழியன் பாடல்களில் இது மூன்றாவது. நான்காவது பாடல்தான் துன்புறும் ஊழியன் பாடல் என அழைக்கப்படுகிறது. அதை நாம் பெரிய வெள்ளியன்று வாசிப்போம். மூன்றாவது பாடல் இறைவனின் ஊழியனை நிராகரிக்கப்பட்ட இறைவாக்கினராகச் சித்தரிக்கிறது. இவர் தினமும் ஆண்டவருடைய குரலுக்குச் செவிசாய்க்கிறார். ஆகையால்தான் இவர் 'கற்றோனின் நாக்கை' அல்லது 'பண்பட்ட நாக்கைப்' பெற்றிருக்கின்றார். இவர் தினமும் 'நலிந்தோனை நல்வாக்கால் ஊக்குவிக்க வேண்டும்.' இதனால்தான் எசாயா அடிக்கடி நலிந்த இஸ்ரயேல் மக்களுக்கு ஆறுதலின் செய்தியைத் தருபவராக இருக்கின்றார் (காண். எசா 40:1). இறுதியாக, மற்ற இறைவாக்கினர்களைப் போல இவர் ஆண்டவருக்குத் தன் காதுகளைத் திறந்து வைத்திருக்கின்றார். அவரின் குரலைக் கேட்டு அதை மக்களுக்கு எடுத்துரைக்கின்றார்.

இருந்தாலும், இந்தப் பணியாளர்-இறைவாக்கினர் நிரகாரிப்பையும் வன்முறையையும் எதிர்கொள்ளவேண்டியுள்ளது. யாருக்குக் கடவுளின் செய்தியை இவர் சொன்னாரோ அவர்களால் இவர் அடிக்கப்பட்டு அவமானத்துக்குள்ளாகின்றார். இதே மாதிரியான நிராகரிப்பை, வன்முறையை, அவமானத்தையே இஸ்ரயேலின் மற்ற இறைவாக்கினர்களும் எதிர்கொண்டார்கள்: எரேமியா (காண். எரே 11:18-22, 15:10-18, 20:1-10), எலியா (காண். 1 அர 19:1-2), ஆமோஸ் (காண். ஆமோ 7:10-13), மற்றும் மீக்கா (காண். மீக் 2:6-11). எசாயாவும் மற்ற இறைவாக்கினர்களும் தங்களுக்குத் துன்பம் நேர்ந்தாலும் தாங்கள் மேற்கொண்ட இறைவாக்கினர் பணியைத் திறம்படச் செய்தனர். தங்கள் பணிக்கான விலை தாங்கள் அனுபவித்த நிந்தையும் அவமானமும் இறப்புமாக இருந்தாலும் அவற்றுக்கான விலையைக் கொடுக்கத் தயாராக இருந்தனர். இவர்கள் இப்படித் தயாராக இருந்ததால்தான் கடவுளின் செய்தியை மக்கள் கேட்க முடிந்தது. இவர்களின் இந்த வலியிலும் இவர்களைத் தாங்கியது இவர்கள் கடவுளின் மேல் வைத்திருந்த நம்பிக்கையே. ஆகையால்தான், 'ஆண்டவராகிய என் தலைவர் துணை நிற்கின்றார். நான் அவமானம் அடையேன். என் முகத்தைக் கற்பாறையாக்கிக் கொண்டேன். இழிநிலையை நான் அடைவதில்லை' என்கிறார் எசாயா.

இன்றைய இரண்டாம் வாசகத்தில் (காண். பிலி 2:6-11) தொடக்ககாலத் திருஅவையின் மிக அழகான கிறிஸ்தியல் பாடல் ஒன்றை வாசிக்கின்றோம். கிறிஸ்துவின் மனுவுருவாதல் நிகழ்வு தொடங்கி, பிறப்பு, பணி, பாடுகள், இறப்பு, உயிர்ப்பு, விண்ணேற்றம், மாட்சி வரையிலான அனைத்து மறைபொருள்களையும் மிக அழகாக ஏறக்குறைய பன்னிரெண்டு வரிகளில் பாடலாக வடிக்கின்றார் பவுல். மேலும், இந்தப் பாடல் வெறும் கிறிஸ்தியல் பாடலாக இல்லாமல், இதன் வழியாக 'கிறிஸ்து இயேசு கொண்டிருந்த மனநிலையே உங்களிலும் இருக்கட்டும்' என்று பிலிப்பி நகரத் திருச்சபைக்கு அறிவுறுத்துகின்றார். இந்தப் பாடலைப் பொறுத்த வரையில் இயேசு அவரின் வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் ஒவ்வொரு விலை கொடுக்க வேண்டியிருக்கிறது. அவருடைய மனுவுருவாதலின்போது அவர் 'கடவுளுக்கு இணையாயிருக்கும் நிலையை' இழக்கின்றார். மனித உரு ஏற்றபோது அவர் 'இறைத்தன்மையை' வெறுமையாக்குகின்றார். சிலுவைச் சாவுக்குத் தன்னையே கையளிக்க கீழ்ப்படிதில் என்ற பெரிய விலையைக் கொடுக்கின்றார். அதற்கு அடுத்த நிகழ்பவை எல்லாம் - விண்ணேற்றம், மாட்சி, பெயர், மற்றவர்கள் மண்டியிடதல் - இவர் தான் கொடுத்த விலையினால் பெற்றுக்கொண்டவை. இறப்பை அழிப்பதற்கு இறப்பு என்ற நுகத்திற்குக் கீழ் தன் தலையைக் கொடுக்கின்றார் இயேசு.

இப்பாடல் இயேசுவைக் கடவுளின் உண்மையான ஊழியராகவும், இறுதிவரை இறைத்திருவுளத்திற்கு கீழ்ப்படிந்திருந்தவராகவும், தான் கொடுத்த இறப்பு என்ற விலையின் வழியாக இறப்பைத் தோற்கடித்தார் எனவும் நமக்குச் சொல்கிறது.

இன்றைய நற்செய்தி வாசகமாக நாம் லூக்காவின் பதிவின்படி உள்ள இயேசுவின் பாடுகளின் வரலாற்றைக் கேட்டோம் (காண். லூக் 22:14 - 23:56). இங்கே நாம் வாசித்த கதை மாந்தர்களை ஆறு குழுக்களாகப் பிரித்துக்கொள்வோம்: (அ) இயேசுவின் சீடர்கள், (ஆ) இயேசுவின் எதிரிகள், (இ) இயேசுவுக்குத் தண்டனைத் தீர்ப்பு வழங்கியவர்கள், (ஈ) இயேசுவுக்கு உதவியவர்கள், (உ) பார்வையாளர்கள், மற்றும் (ஊ) இயேசு.

(அ) இயேசுவின் சீடர்கள் கொடுத்த விலை மிகக் குறைவு. ஏனெனில் யூதாசு பணம் பெற்றுக்கொண்டு இயேசுவைக் காட்டிக்கொடுக்கின்றார். பேதுரு மறுதலிக்கின்றார். சீடர்கள் இயேசுவைவிட்டு ஓடுகின்றனர். சீடத்துவம் என்னும் விலை கொடுக்க முடிந்தவர்களால் இறுதியில் இயேசுவுக்காக எந்த விலையும் கொடுக்க முடியவில்லை. ஆக, நிகழ்விலிருந்து தப்பி ஓடுகிறார்கள். (ஆ) இயேசுவின் எதிரிகளைப் பொறுத்தவரையில் இயேசு அவர்களின் கண்களில் விழுந்த தூசி, அவர்களின் செருப்புக்குள் நுழைந்த ஒரு கூழாங்கல். தூசியையும் கூழாங்கல்லும் அகற்றும் முயற்சியில் கண்களையும், காலையும் இழக்கத் தயாராகிறார்கள். இவர்கள் கொடுக்கின்ற விலை பொய். (இ) இயேசுவுக்குத் தண்டனைத் தீர்ப்பளிப்பவர் நேரிடையாக பிலாத்தும் மறைமுகமாக ஏரோதும். பிலாத்து உரோமை ஆளுநர். இவர் நினைத்தால் இயேசுவை விடுவிக்கவும், தீர்ப்பிடவும் முடியும். சட்டத்தின் படி இயேசு குற்றமற்றவர் (காண். 23:15-16). ஆனால், சட்டத்திற்குக் கீழ்ப்படிவதைவிட யூதத் தலைவர்களுக்குக் கீழ்ப்படிவதைத் தெரிந்துகொள்கிறார். ஏனெனில், இயேசுவால் பிலாத்துக்கு ஒரு பயனும் இல்லை. ஆனால், தலைவர்களால் இவருக்குப் பயன் உண்டு. ஏனெனில், அவர்களை வைத்து இன்னும் பதவியில் உயர்ந்துகொள்ளலாம். பிலாத்தும் கீழ்ப்படிதலை விலையாகக் கொடுத்தார். ஆனால், அது சட்டத்திற்கான கீழ்ப்படிதல் அல்ல. மாறாக, யூதத் தலைவர்களுக்கான கீழ்ப்படிதல். (ஈ) சிலுவைப் பயணத்தில் இயேசுவுக்கு உதவிய சிரேன் ஊரானாகிய சீமோன், ஒப்பாரி வைத்த பெண்கள், நல்ல கள்வன், அரிமத்தியா நகர் யோசேப்பு, கலிலேயப் பெண்கள் ஆகியோர் இயேசுவுக்காக வீதிக்கு வருகின்றனர், மற்றவரைக் கடிந்துகொள்கின்றனர், தங்கள் பொருளையும், ஆற்றலையும், நற்பெயரையும் இழக்க முன் வருகின்றனர். (உ) பார்வையாளர்கள். 'நமக்கு நடக்கும்வரை நடப்பதெல்லாம் வேடிக்கை' என்ற நிலையில் நடக்கின்ற எல்லாவற்றையும் இவர்கள் வேடிக்கை பார்க்கிறார்கள். அதிகபட்சம் இவர்களின் இழப்பு நேர இழப்பு மட்டுமே. மற்றும் (ஊ) இயேசு - இவர் தன்னுடைய சீடர்கள், தன் எதிரிகள், தனக்குத் தீர்ப்பிட்டோர் என்ற மூன்று குழுவிற்கு எதிர்மாறாக இருக்கிறார். மற்றவர்கள் தங்கள் கீழ்ப்படிதல் வழியாகத் தர முடியாத விலையை இயேசு தருகின்றார். இவருடைய இந்த விலை, 'இன்றே பேரின்ப வீட்டின் கதவுகளைத் திறந்துவிடுகிறது.'

இயேசுவின் சீடர்களும், எதிரிகளும், அவருக்குத் தண்டனைத் தீர்ப்பளித்தவர்களும், பார்வையாளர்களும் அளித்த விலை குறைவு. மனம் மாறிய பேதுரு, இயேசுவுக்கு உதவியவர்கள் போன்றோர் கொஞ்சம் கூடுதலாக விலை கொடுத்தனர். ஆனால், இயேசு ஒருவரே மிகப் பெரிய விலையைக் கொடுக்க வேண்டியிருக்கிறது - அவருடைய உயிரை இழக்கின்றார். அந்த உயிரை இழக்க அவர் கொடுக்கும் விலை தந்தையின் திருவுளத்திற்குக் கீழ்ப்படிதல். இவர் இந்த விலையைக் கொடுக்கத் தயாராக இருந்தார்: 'தந்தையே, உமக்கு விருப்பமானால் இத்துன்பக் கிண்ணத்தை என்னிடமிருந்து அகற்றும். ஆனாலும், உன் விருப்பப்படி அல்ல. உம் விருப்பப்படியே நிகழட்டும்' (காண். லூக் 22:42).

ஆக, இயேசுவின் பாடுகள் நிகழ்வில் மிக உயர்ந்த விலையைக் கொடுத்த இயேசுவே மிக உயர்ந்ததைப் பெறுகின்றார். இயேசுவின் இறப்பைக் காண்கின்ற நூற்றுவர் தலைவர், 'இவர் உண்மையாகவே நேர்மையாளர்' (காண். 23:47) என்று சான்று பகர்கிறார்.

இறுதியாக,

தவக்காலத்தின் இறுதி நாள்களில் இருக்கிறோம். இயேசு எருசலேம் நுழைந்த இந்நிகழ்வோடு இணைந்து நாமும் புனித வாரத்திற்குள் நுழைகின்றோம். ஒவ்வொன்றிற்கும் ஒரு விலை இருக்க, நான் மலிவானவற்றிற்கு என்னையே விற்கிறேனா? அல்லது மிகச் சிறந்தவற்றுக்காக இழக்கிறேனா? என்ற கேள்வியைக் கேட்போம்.

நம் ஒறுத்தல் முயற்சிகள் வழியாக, இறைவேண்டல் வழியாக, பிறரன்புச் செயல்கள் வழியாக நாம் நம் வாழ்வின் பக்குவத்திற்கான, பண்படுத்துதலுக்கான விலையைக் கொடுத்துவந்திருக்கிறோம். இவற்றையும் தாண்டி நாம் பெற வேண்டியது எது? அதற்கு நான் தரும் விலை என்ன?

இயேசுவின் எருசலேம் பயணத்திற்குக் கழுதை கொடுத்தவர்கள் சிறிய நிலையில் தங்களையே இழக்க முன்வருகிறார்கள்.

அவரை வெற்றி ஆர்ப்பரிப்புடன் வரவேற்று 'ஓசன்னா' பாடியவர்கள், வாடகைக் கழுதையில் வந்த தங்கள் இறுதி நம்பிக்கையை வரவேற்கின்றனர். தங்கள் ஆற்றலை, நேரத்தை இழக்க முன்வருகிறார்கள்.

நாம் வாழ்கின்ற எந்த அழைப்பு என்றாலும் சரி - திருமணம், குருத்துவம், துறவறம் - எல்லா இடத்திலும் சிலுவை உண்டு. இந்தச் சிலுவையை கொல்கொதா வரை சுமக்க வேண்டும். நாம் வழியில் விழுவோம். பின் எழுவோம். வலியின் வழியாக வாழ்வு பெறுவோம்.

மிகச் சிறந்ததைப் பெற மிகப் பெரிய வலியை அனுபவிக்க வேண்டும் - எசாயா அவமானத்தையும், இயேசு இறப்பையும்.

ஒவ்வொன்றுக்கும் ஒரு விலை உண்டு. மிகச் சிறந்தவற்றின் விலை மிகப் பெரியதே.

இதை எசாயாவும், இயேசுவும் உணர்ந்தனர் - நீங்களும் நானும்?