இவ் மறையுரையை வழங்குபவர்

அருட்பணி.இயேசு கருணாநிதி
Archbishop’s House, K. Pudur, Madurai 625 007, India
Email: yesu@live.in

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)









ஆண்டின் பொதுக்காலம் 5ஆம் ஞாயிறு

குறையே ... இறையால் ... நிறையாய்!

எசாயா 6:1-2அ, 3-8
1 கொரிந்தியர் 15:1-11
லூக்கா 5:1-11

மத்திய அமெரிக்காவின் மறைந்து போன மாயன் நாகரீக மக்களில் நடுவில் புழங்கிய கதை இது (மெல் கிப்சன் அவர்கள் இயக்கிய 'அப்போகாலிப்டோ' என்ற திரைப்படத்தில் (2006) இக்கதை ஷாமான் ஒருவரால் சொல்லப்படுவதாக அமைந்திருக்கும்): மனிதன் ஒருநாள் காட்டில் சோகமாக அமர்ந்திருந்தான். காட்டு விலங்குகள் அவனைச் சுற்றி வந்து அவனிடம், 'நீ சோகமாக இருப்பதை எங்களால் சகிக்க முடியவில்லை. என்ன வேண்டுமானாலும் கேள். நாங்கள் உனக்குத் தருகிறோம்' என்றன. மனிதன், 'எனக்கு நல்ல கண்பார்வை வேண்டும்' என்றான். கழுகு, 'என் பார்வையை உனக்குத் தருகிறேன்' என்றது. 'யாரும் எதிர்க்கமுடியாத வலிமை வேண்டும்' என்றான். ஜகுவார், 'நான் தருகிறேன்' என்றது. 'பாதாளங்களின் இரகசியத்தை அறிய வேண்டும்' என்றான். பாம்பு, 'அதை நான் உனக்குக் காட்டுகிறேன்' என்றது. எல்லா விலங்குகளும் தன் ஆற்றலை இப்படியாக மனிதனுக்குத் தந்தன. எல்லா ஆற்றல்களையும் பெற்ற மனிதன் எழுந்து புறப்பட்டான். அப்போது மான் மற்ற விலங்குகளைப் பார்த்து, 'மனிதன் இப்போது எல்லாவற்றையும் பெற்று விட்டான். இனி அவனிடம் சோகம், வருத்தம் இருக்காது' என்றது. அதற்கு ஆந்தை மறுமொழியாக, 'இல்லை, மனிதனின் மனத்தில் ஒரு துவாரத்தை, வெற்றிடத்தை நான் பார்த்தேன். அது ஒரு தணிக்க முடியாத பசி. அது அவனுக்கு சோகத்தைத் தரும். இன்னும் வேண்டும், இன்னும் வேண்டும் என்று அவன் எல்லாவற்றையும் கொண்டு அந்த வெற்றிடத்தை நிரப்பிக் கொண்டேயிருப்பான். ஒருநாள் இந்த பூமி சொல்லும்: 'இதற்கு மேல் நீ எடுத்துக்கொள்ள என்னிடம் ஒன்றுமேயில்லை'.

மனித உள்ளத்தில் இருக்கும் இக்குறை அல்லது வெற்றிடத்தைத் தானாகவே மனிதர்கள் அறிந்துகொள்வார்களா? அவர்கள் அக்குறைகளை அறிந்துகொண்டவுடன் அக்குறைகள் எப்படி நிறைவு செய்யப்படும்? குறையுள்ள மனிதர்கள் மற்றவர்களின் குறைகளை நிறைவாக்க முடியாத நிலையில், மனிதர்கள் விரும்பும் நிறைவைத் தருபவர் யார்? என்ற கேள்விகளுக்கு விடையாக இருக்கிறது இன்றைய இறைவார்த்தை வழிபாடு.

'மனிதர்கள் எல்லாமே குறையுள்ளவர்கள்' என்று நாம் சொல்லும்போது, அது சமூக, பொருளாதார, அரசியல், ஆன்மிக, அறநெறி, உடல்நலம் என பல தளங்களைச் சுட்டிக்காட்டினாலும், நம்மை முன்னேறாமல் தடுத்து, சில நேரங்களில் நம்மைப் பின்னிழுக்கின்ற குறைகள் பெரும்பாலும் நம் உள்ளம் சார்ந்தவையே. இவற்றிலிருந்து நாம் விடுபட நாம் இறைவனோடு கைகோர்த்தால் மட்டுமே முடியும்.

இன்றைய முதல் வாசகத்தில் (காண். எசா 6:1-8) எசாயா இறைவாக்கினரின் அழைப்பு நிகழ்வை வாசிக்கின்றோம். எசாயா அழைப்பு நிகழ்வு, மோசே, கிதியோன், எரேமியா ஆகியோரின் அழைப்பு நிகழ்வுகளை ஒத்திராமல், எசேக்கியேல் இறைவாக்கினரின் (1-3) அழைப்பு நிகழ்வையே ஒத்திருக்கிறது. ஏனெனில் இந்த இரண்டு நிகழ்வுகளில் மட்டுமே ஆண்டவர் அரியணையில் அமர்ந்திருப்பது போன்ற காட்சி வருகிறது. இந்த நிகழ்வு கடவுளின் அரசவையில் நடப்பதுபோல எழுதப்பட்டுள்ளது. உசியா அரசர் மறைந்த ஏறக்குறைய கி.மு. 742ஆம் ஆண்டில் இந்நிகழ்வு நடக்கிறது. இப்படி வரலாற்று பின்புலம் காட்டப்படுவது எதற்காக என்றால், இந்த நிகழ்வு ஒரு வரலாற்று நிகழ்வு என்ற உண்மைநிலையைக் காட்டுவதற்கே. ஆண்டவர் அரியணையில் அமர்ந்திருக்கிறார். அவரது தொங்கலாடை கோவிலை நிரப்பியிருக்கின்றது. செராபின்கள் அரியணையைச் சுற்றி இருக்கின்றன. 'செராபின்' என்றால் எபிரேயத்தில் 'எரிந்து கொண்டிருப்பது' அல்லது 'எரிபவை' என்பது பொருள். இந்த செராபின்கள் வெறும் அழகுப் பதுமைகள் அல்ல. மாறாக, அவை 'படைகளின் ஆண்டவர் தூயவர், தூயவர்' என்று பாடிக்கொண்டிருக்கின்றனர். இறைவனின் பிரசன்னத்தையும், அவரைப் பற்றிச் செராபின்கள் பாடுகின்ற குரலொளியையும் கேட்கின்ற எசாயா. சட்டென தன் நிலையை உணர்கின்றார். 'நான் அழிந்தேன்!' என கத்துகின்றார். தூய்மையின் முன் தன் தூய்மையின்மையை உணர்கின்றார். எசாயா செய்த பாவம் அல்லது அவர் கொண்டிருந்த குற்றவுணர்வு என்னவென்று குறிப்பிடப்படவில்லை. உடனே நெருப்புப்பொறி ஒன்றை எடுத்து வரும் செராபின் ஒருவர் எசாயாவின் உதடுகளை தூய்மைப்படுத்துகின்றார். குற்றப்பழியும், பாவமும் அகற்றப்படுகின்றது. இவ்வளவு நேரம் நடந்தவையெல்லாம் வெறும் காட்சியாக இருக்கின்றது. இப்போது யாவே இறைவனே பேசுகின்றார். 'யாரை நான் அனுப்புவேன்? நமது பணிக்காக யார் போவார்?' எனக் கேட்கிறார். தூய உதடுகளைப் பெற்ற எசாயாவும், 'இதோ, நானிருக்கிறேன். அடியேனை அனுப்பும்' என்கிறார்.

ஆக, தன்னுடைய தூய்மையின்மையை இறைவனின் தூய்மையோடு ஒப்பிட்ட எசாயா இறைவாக்கினரின் வெட்கம் என்ற குறையை, இறைவன் நெருப்புத் துண்டால் தூய்மைப்படுத்தி அவரை நிறைவாக்குகின்றார்.

இன்றைய இரண்டாம் வாசகத்தில் (காண். 1 கொரி 15:1-11) பவுல் கொரிந்து நகரத் திருச்சபையில் விளங்கிய இன்னொரு பிரச்சினை பற்றி எழுதுகின்றார்: 'இறந்தவர் உயிர்ப்பு.' கொரிந்து நகரம் கிரேக்கச் சிந்தனையில் மூழ்கியிருந்தது. கிரேக்க சிந்தனை உடலை ஆன்மாவின் சிறை என்று கருதியதால், உடலை வெறுத்தது. நிலைவாழ்வு என்பது ஆன்மா உடலிலிருந்து பெரும் விடுதலை என்றே கிரேக்கர்கள் நினைத்தார்கள். ஆனால், பவுலோ, உயிர்ப்பு என்பதே நிலைவாழ்வு என்றும், உயிர்ப்பின்போது நம் உடலும் மாற்றம் பெறும் எனவும் எழுதுகின்றார். கிறிஸ்து உயிர்பெற்றெழுந்ததை சான்றாக வைத்து, இறந்தவர்கள் உயிர்பெற்றெழுவார்கள் என்று கொரிந்து நகர திருஅவைக்கு பவுல் தரும் இறையியல் விளக்கம் தருகின்றார்.'கிறிஸ்து நம் பாவங்களுக்காக...இறந்தார்...அடக்கம் செய்யப்பட்டார்...உயிருடன் எழுப்பப்பட்டார்' - தொடக்கத் திருஅவையில் துலங்கிய முதல் நம்பிக்கை அறிக்கை இதுவே. இதைப்போன்ற அறிக்கைகளை நாம் பிலி 2:1-13 மற்றும் கலா 3-அலும் வாசிக்கின்றோம். இந்த நம்பிக்கையின் நீட்சியாக உயிர்த்த இயேசு கேபா, யாக்கோபு என்று பலருக்குத் தோன்றியபின், இறுதியாக, 'காலம் தப்பிப் பிறந்த குழந்தையைப் போன்ற' தனக்கும் தோன்றியதாகப் பெருமை கொள்கின்றார் பவுல். இவர் இப்படிப் பெருமை பாராட்டும் நேரத்தில் இவருடைய உள்ளத்தில் உடனடியாக இவருடைய பழைய வாழ்க்கை பற்றிய நினைவு தோன்றுகிறது. தன் இறந்த காலத்தில் தான் செய்த 'கடவுளின் திருச்சபையைத் துன்புறத்திய செயல்' அவரைக் குற்ற உணர்வுக்கு ஆளாக்குகின்றது. ஆனால், 'கடவுளின் அருளால்' நான் திருத்தூதர் நிலையில் இருக்கின்றேன் எனக் கடவுளின் அருள் தன் குற்ற உணர்வைக் களைந்ததையும் நினைவுகூருகிறார் பவுல்.

ஆக, தன்னிடம் இருந்த குற்ற உணர்வு என்னும் குறையை கடவுளின் அருளாலும், அந்த அருள் உந்தித் தள்ளிய உழைப்பாலும் நிறைவாக்குகிறார் பவுல்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (காண். லூக் 5:1-11), 'இயேசு முதல் சீடரை அழைக்கும் நிகழ்வை' லூக்கா நற்செய்தியாளரின் கண்கள் வழியாகப் பார்க்கின்றோம். இது நடக்குமிடம் கெனசரேத்து ஏரிக்கரை அல்லது கலிலேயாக்கடல் பகுதி. முதல் சீடர்களை அழைத்தல் என தலைப்பு இடப்பட்டிருந்தாலும், பேதுரு மட்டுமே இங்கே முதன்மைப்படுத்தப்படுகின்றார். அவரின் சகோதரர் அந்திரேயாவின் பெயர் குறிப்பிடப்படவில்லை. மேலும், செபதேயுவின் மக்களான யாக்கோபு மற்றும் யோவானின் பெயரும் வலிந்து திணிக்கப்பட்டுள்ளன. அப்படியெனில், இந்த நிகழ்விற்கு எப்படி பெயரிடுவது? போதனை (5:1-3), அறிகுறி (5:4-10அ), அழைப்பு (5:10ஆ-11) என மூன்று இலக்கியக் கூறுகள் ஒரே இடத்தில் சேர்த்து கொடுக்கப்பட்டுள்ளன.

இந்த நிகழ்வில் 'தச்சனுக்கு தெரியுமா தண்ணீரின் ஓட்டம்?' என முதலில் சந்தேகிக்கின்ற பேதுரு, 'இரவு முழுவதும் நாங்கள் பாடுபட்டு உழைத்தும் ஒன்றும் கிடைக்கவில்லை' என்று தயங்குகின்றார். பின் அவரே, 'உம் சொற்படியே வலைகளைப் போடுகிறேன்' என வலைகளைப் போட மிகுதியான மீன்பாடு கிடைக்கின்றது. தான் கொண்ட 'சந்தேகத்திற்காக' மனம் வருந்தும் பேதுரு, 'ஆண்டவரே, நான் பாவி. என்னைவிட்டு அகலும்!' என மன்றாடுகின்றார். ஆனால், 'அஞ்சாதே' என அவரின் பயம் அகற்றும் இயேசு, 'நீ இது முதல் மனிதரைப் பிடிப்பவன் ஆவாய்' என்ற புதிய பணியைக் கொடுக்கின்றார்.

ஆக, 'சந்தேகம்' என்ற பேதுருவின் குறையை இயேசு, 'அஞ்சாதே!' என்று தேற்றி நிறைவு செய்கின்றார்.

இவ்வாறாக, முதல் வாசகத்தில் எசாயாவின் 'வெட்கம்' என்ற குறையை 'உதடுகளைத் தூய்மைப்படுத்தி' நிறைவு செய்கிறார் கடவுள். இரண்டாம் வாசகத்தில், பவுலின் 'குற்றவுணர்வு' என்ற குறையை 'திருத்தூதர் நிலை' என்ற நிலைக்கு அருளால் உயர்த்தி நிறைவு செய்கிறார் கடவுள். நற்செய்தி வாசகத்தில், பேதுருவின் 'சந்தேகம்' அல்லது 'ஐயம்' என்ற குறையை 'அஞ்சாதே' என்று நீக்கி, அவரை நிறைவுள்ளவராக்குகின்றார் இயேசு.

ஆக, குறையுள்ள ஒன்று நிறைவுள்ள இறைவனின் தொடுதலால் நிறைவுள்ளதாகின்றது. குறையை நிறைவாக்குவது இறையே என்பதும் புலனாகிறது. இன்று நாம் நம்மிடம் உள்ள குறைகளை எப்படி இனங்கண்டு, அவற்றை இறைவனின் துணையால் நிறைவு செய்வது?

1. நம் கொடைகளைக் கொண்டாடுவது

எசாயா என்னதான் தன்னைக் கடவுளின் தூய்மையோடு ஒப்பிட்டு, தன்னையே, 'தூய்மையற்றவன்' எனக் கருதினாலும், அவர் கடவுளைக் காட்சியாகக் காணும் பேறு பெறுகின்றார். தன்னுடைய சம காலத்தில் யாருக்கும் காட்சி அளிக்காத கடவுளைக் காட்சியில் கண்டவராகின்றார் எசாயா. பவுல், கடவுளின் திருச்சபையைத் துன்புறுத்தியவர் ஆனாலும், கடவுளின் அருள் அவரைச் சூழ்ந்து கொள்கிறது. அப்படிப்பட்ட நிலையில், தான் பெற்ற அருளை வீணாக்காமல் மிகுதியாகப் பாடுபட்டு உழைக்கிறார் பவுல். பேதுரு, தன் வெறுமை நிலையில் மிகுதியான மீன்பாட்டைக் கண்டுகொள்கின்றார். 'கடவுளின் காட்சி,' 'கடவுளின் அருள்,' 'மீன்பாடு' என தாங்கள் பெற்ற கொடைகளை முதலில் நினைவுகூறுகின்றனர் எசாயாவும், பவுலும், பேதுருவும். ஆக, நம் குறைகளைக் காண்பதற்கு முன் முதலில் நம்மைச் சுற்றியுள்ள நிறைகளைக் கணக்கில் எடுக்க வேண்டும்.

2. பழையதை விடு, புதியதை அணி

'நமக்காக யார் போவார்?' எனக் கடவுள் கேட்டவுடன், 'இதோ நானிருக்கிறேன், எனை அனுப்பும்' என முன் வருகிறார் எசாயா. 'ஐயோ, என் இறந்தகாலம் மிகவும் மோசமானதே!' என தற்பழி எண்ணம் கொண்டிராமல், 'நான் வருகிறேன்' என திருத்தூதுப்பணிக்கு முன்வருகின்றார் பவுல். 'ஆண்டவரே, பாவி என்னைவிட்டு அகலும்' என்று இயேசுவைத் தன்னிடமிருந்து அகற்றியவர், 'மனிதர்களைப் பிடிப்பவராக' முன்வருகிறார் பேதுரு. ஆக, நம் குறைகளைக் கண்டவுடன் அவற்றை நாம் பற்றிக்கொண்டிருக்காமல், பழையனவற்றை விட்டுவிட்டு, புதியனவற்றை அணிந்துகொள்ள முன்வருதல் வேண்டும்.

3. வலுவின்மையில் வல்லமை செயலாற்ற அனுமதிப்பது

இறையை நாம் அனுமதிக்காவிடில் அவர் நம் குறையை நிறைவாக்க மாட்டார். 'நான் வருகிறேன்' என்ற முன்னெடுப்பும், 'என் படகில் ஏறிக்கொள்ளும்' என்ற தாராள உள்ளமும் நாம் அவருக்குக் காட்ட வேண்டும். எசாயா, பவுல், பேதுருவிடம் முறையே விளங்கிய வெட்கம், குற்றவுணர்வு, மற்றும் ஐயம் என்னும் உணர்வுகள் நம்மைக் கட்டிப் போடுகின்றன. நான் என்னிடம் பொய் சொல்லும்போது வெட்கமும், மற்றவரிடம் பொய் சொல்லும்போது குற்றவுணர்வும், இறைவனிடம் பொய் சொல்லும்போது சந்தேகமும் வலுக்கிறது. இறைவன் என்னும் உண்மை இப்பொய்மைகளை அகற்றிவிட அவரை நான் அருகில் அனுமதிக்கிறேனா? அல்லது அவர் அருகில் நான் செல்கிறேனா?

இறுதியாக, என் உள்ளத்தில் உள்ள வெற்றிடமும் துவாரமும் என் ஆற்றல் இழப்புக்குக் காரணமாக இருந்தாலும், என் ஆற்றல்களை நான் கொண்டாடத் தொடங்கும்போது, என் அருகில் வருகின்ற அவர் தன் நிறைவால் என் குறையை நிறைவாக்குவார். 'நிறைவானது வரும்போது அரைகுறையானது ஒழிந்துபோகும்!' குறைகள் நிறையப்பெற்ற ஒருவர் திருப்பாடல் ஆசிரியரோடு இணைந்து (காண். திபா 138), 'ஆண்டவரே, என் முழுமனத்துடன் உமக்கு நன்றி செலுத்துவேன்' என்று பாடுவார்.