இவ் மறையுரையை வழங்குபவர்

அருட்பணி.இயேசு கருணாநிதி
Archbishop’s House, K. Pudur, Madurai 625 007, India
Email: yesu@live.in

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)









கிறிஸ்து பிறப்பு பெருவிழா (நள்ளிரவுத் திருப்பலி)

ஒளி-மகிழ்ச்சி-பயணம்

எசாயா 9:2-4,6-7
தீத்து 2:11-14
லூக்கா 2:1-14

மிகவும் பரிச்சயமான கதை ஒன்றுடன் தொடங்குவோம். பார்வையற்ற நபர் ஒருவர் ஜென் துறவி ஒருவரைச் சந்திக்க மாலை வேளையில் சென்றார். 'என்ன இந்த மாலை மங்கும் வேளையில்?' எனக் கேட்கிறார் துறவி. 'பார்வையற்ற நபருக்குக் காலையும் இருள்தான், மாலையும் இருள்தான்!' என்கிறார் வந்தவர். போதனை முடிந்து புறப்படுகிறார் பார்வையற்ற நபர். துறவி அவரிடம் ஒரு கைவிளக்கைக் கொடுத்து, 'இதை எடுத்துச் செல்லுங்கள், இரவாயிற்று!' என்கிறார். 'இது என்ன?' எனக் கேட்கிறார் வந்தவர். 'கைவிளக்கு!' 'பார்வையற்ற எனக்கு விளக்கு எதற்கு?' 'விளக்கு, உனக்கு அல்ல. உன் எதிரில் வருபவருக்கு. நீ மோதாமல் இருக்க அல்ல. உன்மேல் எவரும் மோதிவிடாமல் இருப்பதற்கு!' ஞானம் பெற்றார் வந்தவர். கொஞ்ச நேரம் கண்களை மூடுங்களேன். மூடிய நீங்கள் அப்படியே கண்கள் மூடியவாறு இங்கும் அங்கும் வேகமாக நடங்களேன்! மூடியபடி நடப்பதா? வேகமாக நடப்பதா? - இதுதான் நம் கேள்வியாக இருக்கும். 'காரிருளில் நடந்து வந்த மக்கள் பேரொளியைக் கண்டார்கள். சாவின் நிழல்சூழ்ந்துள்ள நாட்டில் குடியிருப்போர்மேல் சுடர் ஒளி விதித்துள்ளது!' எனத் துள்ளிக் குதிக்கிறார் எசாயா (முதல் வாசகம்). காரிருளில் எப்படி நடக்க முடியும்? அதாவது, காரிருள் சூழ்ந்த இடத்தில் இருப்பவர்கள் எங்கும் நகராமல் தேக்க நிலையில் இருந்தனர். சாவின் நிழல் சூழ்ந்திருந்ததால் மக்கள் எங்கும் செல்லாமல் படுத்த இடத்திலேயே கிடந்தனர். அதாவது, திடீர்னு இப்ப மின்சாரம் கட் ஆகி, மீண்டும் வந்தால் நம் முகத்தில் சிரிப்பு வருவது போல, அன்று இருளில் இருந்தவர்களுக்கு ஒளி வருகின்றது. கிறிஸ்து பிறப்பு தருகின்ற முதல் செய்தி ஒளி. மங்கள வார்த்தை திருநாளிலிருந்து ஒன்பது மாதங்கள் கழித்து என்பதாலும், குளிர்காலத்தில் தூரத்தில் தெரியும் கதிரவன் தங்கள் அருகில் வந்து தங்களுக்கு ஒளி தர வேண்டும் என்று மன்றாட வேண்டும் என்னும் உரோமை வழக்கத்தாலும் கிறிஸ்து பிறப்பு டிசம்பர் 25ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இன்றைய நற்செய்தி வாசகத்தில், லூக்கா நற்செய்தியாளர் பதிவு செய்துள்ள கிறிஸ்து பிறப்பு நிகழ்வை வாசிக்கக் கேட்டோம். இன்று கிறிஸ்து பிறப்பு நிகழ்வுகளை நம் தொழில்நுட்பப் பின்னணியில் வாசித்தால், இந்த நிகழ்வில் எந்தவொரு லாஜிக்கும் இல்லாதது போன்று தோன்றும்! 'பெயரைப் பதிவு செய்ய மரியாவும் யோசேப்பும் நீண்ட பயணம் செய்தவற்குப் பதிலாக, அவர்கள் கூகுள் ஃபார்ம் வழியாகப் பதிவு செய்திருக்கலாம்! அல்லது ஆதார் எண்களைக் கொண்டு மக்கள் தொகையைக் கணக்கிட்டிருக்கலாம்! சத்திரத்தில் இடம் கிடைக்காமல் போகலாம் என்ற காரணத்தால் மேக்-மை-ட்ரிப் வழியாக இடம் புக்கிங் செய்திருக்கலாம்! கீழ்த்திசை ஞானியர் கூகுள் மேப் பயன்படுத்தி எளிதாக வந்திருக்கலாம்!' அன்றைய நிகழ்வுகள் இன்றைய காதுகளுக்குப் புதிதாகவே இருக்கின்றன. வெளிப்படுத்தும் வார்த்தைகள் இன்று வேறு என்றாலும் உணர்வுகள் என்னவோ ஒன்றாகவே இருக்கின்றன. கிறிஸ்து பிறப்பு இரவின் குளிர் மற்றும் அமைதி நம்மை அறியாமலேயே நம்மைத் தழுவிக் கொள்ளவே செய்கின்றது. கிறிஸ்து பிறப்பு நிகழ்வு தரும் செய்தியைத் தருகின்ற இன்றைய நற்செய்தி வாசகத்திலிருந்து அன்றைய சமூக, அரசியல், பொருளாதார நிலையை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது: (அ) அரசியல் தளத்தில், கர்ப்பிணிப் பெண்களும் நீண்ட தூரம் பயணம் செய்து பெயரைப் பதிவு செய்ய வேண்டும் என்று கட்டளையிடும அதிகாரத்தின் கொடுங்கோண்மை. (ஆ) சமூகத் தளத்தில், தேவை என்று வந்த ஒருவருக்கு சத்திரத்தில் இடம் ஒதுக்கிக் கொடுக்க இயலாத மக்களின் கண்டுகொள்ளாத்தன்மை. (இ) பொருளாதாரத் தளத்தில், இரவெல்லாம் தூக்கம் மறந்து கிடைக்குக் காவல் காக்கும் தொழில் செய்யும் ஆடு மேய்ப்பவர்களின் கையறுநிலை. இப்படிப்பட்ட தளத்தில்தான் கிறிஸ்து பிறப்பு நிகழ்வு நடந்தேறுகிறது. இந்நிகழ்வு தருகின்ற முதல் செய்தி, 'ஒளி.' முதல் வாசகத்திலும், நற்செய்தி வாசகத்திலும், 'ஒளி' என்னும் அடையாளம் மிகவும் அழுத்தமாக முன்மொழியப்படுகிறது. முதல் வாசகத்தில், மக்கள் 'பேரொளியைக் காண்கின்றனர்,' 'அவர்கள்மேல் சுடர் ஒளி உதித்துள்ளது.' ஆக, ஒளி வந்தவுடன் அவர்கள் வாழ்வில் இயக்கமும் உற்சாகமும் வந்துவிடுகிறது. நற்செய்தி வாசகத்தில், வயல்வெளியில் ஆண்டவரின் மாட்சி இடையர்களைச் சுற்றி ஒளிர்கிறது. யோவான் நற்செய்தியாளரும் உருவகமாக (பகல் திருப்பலி நற்செய்தி வாசகம்), 'அவரிடம் வாழ்வு இருந்தது. அவ்வாழ்வு மனிதருக்கு ஒளியாய் இருந்தது. அந்த ஒளி இருளில் ஒளிர்ந்தது. இருள் அதன்மேல் வெற்றிகொள்ளவில்லை ... அனைத்து மனிதரையும் ஒளிர்விக்கும் உண்மையான ஒளி உலகிற்கு வந்துகொண்டிருந்தது' (யோவா 1:5,9) என்று பதிவு செய்கின்றார். தன் பணிவாழ்வில் இயேசு தன்னையே உலகின் ஒளி என்று அறிக்கையிடுகின்றார். இருளில் இருப்பவர்தான் ஒளியின் பொருளை உணர முடியும். படைப்பின் தொடக்கத்தில் ஆண்டவராகிய கடவுள் முதன் முதலாக ஒளியை உண்டாக்குகின்றார். விடுதலைப் பயண நூலில் இரவில் நெருப்புத் தூணாக ஆண்டவராகிய கடவுள் இஸ்ரயேல் மக்களோடு வழிநடக்கின்றார். இவ்வாறாக, கடவுளின் உடனிருப்பு ஒளியின் வழியாக வெளிப்படுத்தப்படுகின்றது. இன்று நம்மைச் சுற்றி விண்மீன்கள், ஒளிவிளக்குகள், மெழுகுதிரிகள் ஒளிர்ந்துகொண்டிருக்கின்றன. கிறிஸ்து பிறப்பின் இரவில் நின்றவர்களாக நாம் ஒளியை உணர்கின்றோம். 'பொழுது புலர்ந்து விடிவெள்ளி உங்கள் இதயங்களில் தோன்றும் வரை அது இருண்ட இடத்தில் ஒளிரும் விளக்கைப் போன்றது' என்று தன் திருஅவைக்கு எழுதுகின்றார் பேதுரு (2 பேது 1:19). அதாவது, கிறிஸ்து என்னும் ஒளி நம்மில் தோன்றாதவரை நாம் வைத்திருக்கும் அனைத்து வெளிச்சங்களும் சிறிய விளக்குகளே. கிறிஸ்துவே இவ்விளக்குகளை அகற்றிவிட்டு நமக்கு நிரந்தரமான ஒளியைத் தருபவர். ஒளிக்கு எதிரி இருள் மட்டும் அல்ல. ஏனெனில், ஒளி இருந்தும் அதை மூடி வைப்பதால் என்ன பயன்? அல்லது ஒளி நம் செயல்களை மற்றவர்களுக்குக் காட்டிவிடும் என்பதால் அதை நானே விரும்பி அணைப்பதால் என்ன பயன்? இன்று என் வாழ்வில் ஒளி பெற வேண்டிய இடங்கள் எவை? இரண்டாவதாக, இந்த நாளின் அடுத்த செய்தி, 'மகிழ்ச்சி.' 'ஒளி மகிழ்ச்சியூட்டும். கதிரவனைக் கண்டு கண்கள் களிக்கும். மனிதன் எத்தனை ஆண்டுகள் வாழ்ந்தாலும் அவன் தன் வாழ்நாளெல்லாம் மகிழ்ச்சியுடன் இருக்கட்டும்' என்கிறார் சபை உரையாளர் (காண். சஉ 11:7). ஆக, ஒளியிலிருந்து மகிழ்ச்சி புறப்படுகின்றது. 'கதிரவனைக் காணுதல்' என்பதற்குப் 'பிறத்தல்' என்பதும் பொருள். இன்றைய முதல் வாசகத்தில், மகிழ்ச்சி மூன்று உருவகங்களால் தரப்பட்டுள்ளது: ஒன்று, 'அறுவடை நாளின் மகிழ்ச்சி'. நாம் பட்ட கண்ணீரெல்லாம் பலன் கொடுக்கிறது என்றும், நம் உழைப்புக்கு ஏற்ற பயன் கிடைக்கிறது என்றும் நம்மை உணர வைப்பது அறுவடை. இரண்டு, 'கொள்ளைப் பொருளைப் பங்கிடும் மகிழ்ச்சி.' இது திருட்டுப் பொருளை அல்ல. மாறாக, எதிரிகள் அழிக்கப்பட்டு, அவர்கள் நாட்டிலுள்ள கொள்ளைப் பொருள் பங்கிடப்படுவது. பொருள் தரும் மகிழ்ச்சியைவிட எதிரியின் அழிவு இங்கே அதிக மகிழ்ச்சி தருகிறது. மூன்று, 'ஒரு குழந்தை பிறந்துள்ளார்.' அதாவது, ஒரு புதிய உயிர் தோன்றியது என்பது மட்டுமல்ல. மாறாக, ஆட்சிப் பொறுப்பு அவர் தோள்மேல் இருக்கும் என்பதால். ஆக, நம் சுமைகளைத் தூக்கிக்கொள்ள நமக்கு ஒரு தோள் கிடைத்துவிட்டது. ஆக, அறுவடை வழியாக உணவு, எதிரிகள் அழிவு வழியாக பாதுகாப்பு, அரசர் பிறந்ததன் வழியாக பராமரிப்பு என மூன்று நிலைகளில் மக்கள் மகிழ்ச்சி அடைகின்றனர். நற்செய்தி வாசகத்தில், இடையர்களுக்கு குழந்தையின் பிறப்புச் செய்தியை அறிவிக்கின்ற ஆண்டவரின் தூதர், 'அஞ்சாதீர்கள். இதோ, எல்லா மக்களுக்கும் பெரும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன்' என்று அனைவருக்கும் மகிழ்ச்சியை அறிவிக்கின்றார். 'ஆண்டவர்-மெசியா-மீட்பர்' என்னும் மூன்று கிறிஸ்தியல் தலைப்புகளைப் பயன்படுத்துகின்றார். 'உணவு-பாதுகாப்பு-பராமரிப்பு' என்று எசாயா அறிவித்தது போல லூக்கா மூன்று தலைப்புகளின் வழியாக மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றார். ஒளியைக் காண்கின்ற முகம் மகிழ்ச்சியால் சிரிக்க வேண்டும். மகிழ்ச்சி என்பது பொதுவானதா? தனிநபர் சார்ந்ததா? நம் உள்ளத்தில் உதிக்கிறதா? வெளியிலிருந்து வருகிறதா? நாம் மகிழ்ச்சியாக இருக்கிறோமா? அல்லது மகிழ்ச்சியாக மாறுகிறோமா? எது நிரந்தரமான உணர்வு? மகிழ்ச்சி, இன்பம், திருப்தி போன்றவற்றை என்னால் வேறுபடுத்தி அறிய முடிகிறதா? கிறிஸ்து பிறப்பு தருகின்ற மூன்றாவது செய்தி, 'பயணம்.' கடவுள் மனிதராகப் பிறந்ததே வரலாற்றில் நடந்த நீண்ட பயணம் என்று சொல்லலாம். ஆதாம் தொடங்கி, ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு, மோசே, ஆரோன், அரசர்கள், இறைவாக்கினர்கள் என தேடல் தொடர்ந்து, இன்று அது நிறைவுபெறுகிறது. கடவுள் மனிதராகப் பிறக்கின்றார். குழந்தையின் வலுவின்மை ஏற்கின்றார். 'குழந்தையைத் துணிகளில் சுற்றித் தீவனத் தொட்டியில் கிடத்தியிருப்பதைக் காண்பீர்கள். இதுவே உங்களுக்கு அடையாளம்' என்கிறார் வானதூதர். முதல் வாசகத்தில், காரிருளில் வாழ்ந்த மக்களின் நுகம் உடைத்தெறியப்படுகிறது. நுகம் உடைந்ததால் இனி அவர்கள் தங்கள் விருப்பம் போல பயணம் செய்யலாம். அவர்கள் கால்கள் கட்டின்மையைப் பெற்றுவிட்டன. நற்செய்தி வாசகத்தில், யோசேப்பும் மரியாவும் நாசரேத்திலிருந்து பெத்லமேகம் நோக்கிப் பயணம் செய்கின்றனர். வானதூதர்கள் இடையர்கள் நோக்கிப் பயணம் செய்கின்றனர். இடையர்கள் குழந்தையை நோக்கிப் பயணம் செய்கின்றனர். இரண்டாம் வாசகத்தில், புனித பவுல், 'கடவுளின் அருள் வெளிப்படுத்தப்பட்டுள்ளது' என எழுதுகின்றார். ஆக, மறைந்திருந்த ஒன்று வெளிச்சம் நோக்கிப் பயணம் செய்கின்றது. 'பாதை மாறுவதே பயணம்' என்பது வாழ்வியல் எதார்த்தம். பாதைகள் மாற, மாற பயணம் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன. பயணம் செய்தல் என்றால் என்ன? உள்ளொளிப் பயணமே நாம் இன்று மேற்கொள்ள வேண்டிய நீண்ட பயணம். ஒளி-மகிழ்ச்சி-பயணம் என்னும் செய்தியைக் கிறிஸ்து பிறப்பு நிகழ்வின் வழியாகப் பெறுகின்ற நாம், ஒளி பெற்றவர்களாக, மகிழ்ச்சி நிறைந்தவர்களாக, இறைவன் நோக்கியும், ஒருவர் மற்றவர் நோக்கியும் பயணம் செய்தல் சால்பு! கிறிஸ்து பிறப்பு பெருவிழா வாழ்த்துகள்!