இவ் மறையுரையை வழங்குபவர்

அருட்பணி.இயேசு கருணாநிதி
Archbishop’s House, K. Pudur, Madurai 625 007, India
Email: yesu@live.in

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)









ஆண்டின் பொதுக்காலம் 23ஆம் ஞாயிறு

யாவற்றையும் நன்றாக!

எசாயா 35:4-7அ
யாக்கோபு 2:1-5
மாற்கு 7:31-37

யாவற்றையும் நன்றாக!

'என் நெஞ்சே! நீ ஆண்டவரைப் போற்றிடு!

ஆண்டவர் ஒடுக்கப்பட்டோருக்கான நீதியை நிலைநாட்டுகின்றார்

... ...

ஆண்டவர் பார்வையற்றோரின் கண்களைத் திறக்கின்றார் ...

என் நெஞ்சே ஆண்டவரைப் போற்றிடு!' (திபா 146)

ஆண்டவர் யாவற்றையும் நன்றாகச் செய்கிறார். அவர் நமக்கு யாவற்றையும் நன்றாகச் செய்வதால், நாமும் யாவற்றையும் நன்றாகச் செய்ய அழைப்பு பெறுகின்றோம்.

முதல் வாசகம் (எசா 35:4-7), முதல் எசாயா (அதி 1-39) எனப்படும் பகுதியிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. எசா அதி. 35இல் நாம் ஆண்டவரின் நீதியையும் இரக்கத்தையும் ஒருசேரக் காண்கின்றோம். மூன்றாம் திக்லெத்-பிலேசர் என்னும் அசீரிய அரசர் இஸ்ரயேல் மக்களை அடிமைகளாகச் சிறைப்பிடிக்கின்றார். அசீரியாவின் படையெடுப்பிற்கான ஆண்டவரின் பதிலிறுப்பாக அமைகிறது எசாயா 35. இந்த அதிகாரத்தை இரு பிரிவுகளாகப் பிரிக்கலாம்: (அ) ஆண்டவரின் வெளிப்பாடு அல்லது ஆண்டவர் தன்னை வெளிப்படுத்துதல் (35:1-6)ளூ (ஆ) மக்கள் மீண்டும் திரும்பி வருதல் (35:7-10). நிலம் மீண்டும் வளமை பெறுகின்றது. தண்ணீர் வளமையின் அடையாளமாக இருக்கிறது.

நம் வாசகப் பகுதி இரு பிரிவுகளாக அமைந்துள்ளது: (அ) 'அஞ்சாதிருங்கள்' (35:4), (ஆ) நிலம் பெறுகின்ற மாற்றம் (35:5-7). 'உள்ளத்தில் உறுதியற்றவர்கள்' என்னும் பதம் எபிரேயத்தில், 'பந்தயக் குதிரைகள் போல ஓடும் இதயங்களைக் கொண்டவர்களே' என்று உள்ளது. பந்தயக் குதிரை மிக வேகமாக ஓடக் கூடியது. அந்த அளவுக்கு நம் இதயம் துடித்தால் அல்லது உள்ளம் ஓடினால் எப்படி இருக்கும்? கலக்கம், முடிவெடுக்க இயலாத நிலை, பயம் ஆகியவற்றை இது குறிக்கிறது. அசீரியப் படையெடுப்பு இத்தகைய தாக்கத்தை இஸ்ரயேல் மக்கள்மேல் ஏற்படுத்தியிருந்தது. 'இதோ உங்கள் கடவுள்' என்னும் சொல்லாடல், எசா 7:14இல் ஆண்டவராகிய கடவுள் ஆகாசு அரசனுக்கு வழங்கிய, 'இம்மானுவேல் - கடவுள் நம்மோடு' என்னும் அடையாளத்தின் வெளிப்பாடாக அமைகின்றது. கடவுள் 'பழிதீர்க்க வருகின்றார்.' பழிதீர்த்தல் என்பது கடவுள் நிலைநாட்டும் நீதி அல்லது, கடவுள் அநீதியைக் கண்டுக்கும் முயற்சி என்று பொருள்கொள்ளப்படலாம்.

தொடர்ந்து ஆறு வார்த்தைப் படங்களை எசாயா பயன்படுத்துகின்றார்: 'பார்வையற்றோர்,' 'காது கேளாதோர்,' 'காலூனமுற்றோர்,' 'வாய் பேசாதோர்,' 'நீரூற்றுகள்,' மற்றும் 'கனல் கக்கும் மணல் பரப்பு.' மேற்காணும் இந்த ஆறு வார்த்தைப் படங்களும் இஸ்ரயேல் மக்களை உருவகமாகக் குறிக்கின்றன: 'ஆண்டவரின் உடனிருப்பைப் பார்க்க இயலாதவர்களாக அவர்கள் இருந்தனர்,' 'அவரின் வல்ல செயல்கள் பற்றி அவர்கள் கேட்கவில்லை,' 'அடிமைத்தனத்தால் முடமாகிக் கிடந்தனர்,' 'உள்ளக் கசப்பால் வாய்பேசாமல் இருந்தனர்,' 'ஆண்டவர் இல்லாததால் நீரூற்றுகள் வற்றிப் போயின,' 'உயிர் இல்லாததால் மணல் பரப்பு கனல் கக்கியது.' ஆண்டவராகிய கடவுள் இப்போது இறங்கி வருகின்றார். அவரின் வருகை இஸ்ரயேல் மக்கள் வாழ்க்கையில் தலைகீழ் மாற்றத்தைக் கொண்டு வந்து, பழைய நிலைக்கு அவர்களைத் திருப்புகிறது: 'பார்வையற்றவர்கள் பார்க்கின்றனர்,' 'காதுகேளாதோர் கேட்கின்றனர்,' 'காலூனமுற்றோர் நடக்கின்றனர்,' 'வாய் பேசாதோர் பாடுகின்றனர்,' 'நீரூற்றுகள் பொங்கி எழுகின்றன,' 'கனல் கக்கும் மணல் பரப்பு நீர்த்தடாகமாகிறது.'

கடவுளின் முன்னெடுப்பும் நன்மைத்தனமும் இரக்கமும் முந்தைய நன்னிலைக்கு அவர்களைக் கொணர்கிறது. கடவுள் அனைத்தையும் நல்லதெனச் செய்கிறார். ஏனெனில், அவரே படைப்பின் தொடக்கத்தில் அனைத்தையும் நல்லதெனக் கண்டார் (காண். தொநூ 1:31).

இரண்டாம் வாசகம் (யாக் 2:1-5) யாக்கோபின் குழுமத்தில் நிலவிய பாரபட்சம் அல்லது வேற்றுமை பாராட்டுதல் பற்றிச் சொல்கின்றது. இத்திருமுகத்தின் ஆசிரியர் திருத்தூதரும், இயேசுவின் சகோதரரும், எருசலேம் திருஅவையின் தலைவருமான யாக்கோபு என்று குறிப்பிடப்பட்டாலும், யாக்கோபின் பெயரில் பிந்தைய காலத்தில் ஒரு யூதக் கிறிஸ்தவர் இதை எழுதியிருக்க வேண்டும் என்பதே பரவலான கருத்து. கடந்த வார வாசகத்தில், 'மேலான சமய வாழ்வு' பற்றிப் பேசிய ஆசிரியர், இந்த வாரம், 'குழும வாழ்வில் உள்ள பாகுபாடு பாராட்டுதல்' பற்றிப் பேசுகின்றார்.

யாக்கோபின் குழுமத்தில் செல்வந்தர்கள் மதிக்கப்பட்டனர், ஏழைகள் உதாசீனப்படுத்தப்பட்டனர். இதுதான் சூழல். எபிரேயத்தில் 'ஆசீர்' என்றால் 'செல்வம்' என்று பொருள். தமிழில், 'ஆசீர்' என்பதற்கு 'கடவுளின் அருள்' என்ற பொருளும் உண்டு. ஆக, அன்றைய காலத்தில் செல்வம் என்பது கடவுளின் வரம் அல்லது அருள் என்றும், ஏழ்மை என்பது கடவுளின் சாபம் என்றும் கருதப்பட்டது. செல்வந்தர்கள் சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்துபவர்களாகவும், இன்றியமையாதவர்களாகவும், தங்களுடைய நடை, உடை, அணிகலன்களால் மற்றவர்களை ஈர்க்கிறவர்களாகவும் இருந்தனர். ஆனால், ஏழைகளோ சமூகத்தில் எளிதில் காயப்படுத்தப்படுகிறவர்களாகவும், தூக்கியெறிப்படுகிறவர்களாகவும், பார்ப்பதற்கு அறுவறுப்பாகவும் இருந்தனர். செல்வந்தர்-ஏழைகள் பாகுபாடு சமூகத்தில் இருந்ததுபோல நம்பிக்கையாளர் குழுமத்திலும் இருக்கின்றது. செல்வந்தர்களுக்கு முதன்மையான இருக்கைகள் வழங்கப்பட, ஏழைகளோ வெளியே நிறுத்தப்படுகின்றனர். இதைக் கேள்விப்படுகின்ற ஆசிரியர் கோபம் கொள்கின்றார்.

'பாகுபாடு பாராட்டுவது' என்பது 'தீர்ப்பிடுவதற்கு' சமம் என்கிறார் ஆசிரியர். ஏனெனில், நாம் மனத்தில் இடும் தீர்ப்பே வெளியே செயலாக வெளிப்படுகின்றது. கடவுள் ஏழையரின் நிலையை உயர்த்தியுள்ளார் என்றும், அவர்கள் செல்வத்தில் ஏழைகளாக இருந்தாலும் நம்பிக்கையில் செல்வந்தர்கள் என்றும், நம்பிக்கையாளர் என்ற நிலையில் அனைவரும் சமமே என்றும் தன் குழுமத்திற்கு அறிவுறுத்துகின்றார். இவ்வாறக, கடவுள் அனைத்தையும் நன்றாகச் செய்துள்ளார் என்று ஆசிரியர் அவர்களுக்கு நினைவூட்டுகின்றார்.

நற்செய்தி வாசகம் (மாற் 7:31-37) மாற்கு நற்செய்தியில் மட்டுமே உள்ளது. இதை அறிகுறி அல்லது வல்ல செயல் என்று பார்ப்பதை விட, உருவகம் அல்லது உவமை என்று பார்க்கலாம். மூன்று விடயங்கள் இங்கே கவனத்திற்குரியவை: (அ) மெசியா இரகசியம் - தான் நிகழ்த்திய வல்ல செயல் பற்றி யாருக்கும் சொல்ல வேண்டாமென இயேசு கற்பிக்கின்றார். (ஆ) திக்கிப் பேசுதல் - இயேசுவிடம் கூட்டி வரப்படுகிறவர் திக்கிப் பேசுகிறார் – அவர் முழுமையான ஊமையும் இல்லை, நன்றாகப் பேசக்கூடியவரும் இல்லை. பாதி-பாதி நிலையில் இருந்தவர். இயேசுவுடன் இருந்த சீடர்களின் நிலையும் மாற்கு நற்செய்தியில் அப்படித்தான் இருக்கிறது. இயேசுவை முழுமையாக அவர்கள் இறைமகன் என்று ஏற்றுக்கொள்ளவில்லை. அதே வேளையில் அவரை நிராகரிக்கவும் இல்லை. (இ) புறவினத்து மக்கள் கூட்டத்தினர் இயேசுவைக் கண்டு வியந்து ஆர்ப்பரிக்கின்றனர். ஆனால், அவருடன் இருந்த யூதச் சீடர்கள் அவரைப் பற்றி இடறல்பட்டனர், அல்லது அவரைப் புரிந்துகொள்ள இயலாமல் இருந்தனர்.

'தீர், சீதோன், தெக்கப்போலி' போன்ற நகரங்கள் புறவினத்தாரின் குடியேற்றப் பகுதிகளாக விளங்கின. காதுகேளாதவரும் திக்கிப் பேசுகிறவருமான ஒருவரை மற்றவர்கள் இயேசுவிடம் கூட்டி வருகின்றனர். இயேசுவின் பதிலிறுப்பை ஆறு வினைச் சொற்களால் பதிவு செய்கின்றார் மாற்கு: 'கூட்டத்திலிருந்து தனியே அழைத்து,' 'விரல்களைக் காதுகளில் இட்டு,' 'எச்சில் உமிழ்ந்து,' 'நாக்கைத் தொட்டு,' 'பெருமூச்சுவிட்டு,' 'திறக்கப்படு என்று கட்டளையிட்டார்.' இயேசு மூன்று நிலைகளில் செயலாற்றுகின்றார்: (அ) தன் சமகாலத்து மருத்துவர்கள்போல எச்சில் உமிழ்ந்து பூசுகின்றார், (ஆ) ஒரு சராசரி மனிதன் போல பெருமூச்சுவிட்டு இறைவனிடம் மன்றாடுகின்றார், மற்றும் (இ) கடவுள் போல, 'திறக்கப்படு' என்று கட்டளையிடுகின்றார். 'உடனே' வல்ல செயல் நடந்தேறுகிறது. அவர் கேட்கவும் பேசவும் செய்கின்றார். 'இதை யாருக்கும் சொல்ல வேண்டாம்' என இயேசு கட்டளையிடுகின்றார். ஏனெனில், வல்ல செயல் என்பது இறைவனின் தனி அனுபவம். 'இவர் எத்துணை நன்றாக யாவற்றையும் செய்து வருகிறார்!' என்று கூட்டம் அக்களிக்கிறது. திருத்தூதர்களும், 'இயேசு சென்றவிடமெல்லாம் நன்மை செய்துகொண்டே சென்றார்' என்று அறிக்கையிடுகின்றனர் (காண். திப 10:38). காது கேளாதோர் கேட்கவும், பேச்சற்றோர் பேசவும் என்னும் சொல்லாடல்கள், இயேசுவின் சீடர்கள் வாய்திறந்து அவரைப் பற்றி அறிக்கையிடுவார்களா? இந்நிகழ்வு பற்றி வாசிக்கும் வாசகரின் இதயமும் திறக்கப்படுமா? என்னும் கேள்விகளை எழுப்புகின்றது.

இயேசு அனைத்தையும் நன்றாகச் செய்கின்றார்.

முதல் வாசகத்தில், கடவுளின் நன்மைத்தனம் அவருடைய நீதி மற்றும் இரக்கத்தில் வெளிப்படுகின்றது. கடவுளே மாற்றத்தை முன்னெடுக்கின்றார். முந்தைய நன்னிலைக்கு நாட்டையும் மக்களையும் கொண்டுவருகின்றார்.

இரண்டாம் வாசகத்தில், கடவுள் ஏழையரை நம்பிக்கையில் செல்வராக்குவதன் வழியாகவும், அவர்களின் நிலையை உயர்த்தி வாக்களிக்கப்பட்ட அரசை உரிமைப் பேறாகவும் தருவதன் வழியாகவும் தன் நன்மைத்தனத்தை வெளிப்படுத்துகின்றார்.

நற்செய்தி வாசகத்தில், மக்கள் இயேசுவிடம் விண்ணப்பம் செய்ய, இயேசுவும் அவர்களுக்குச் செவிகொடுக்கின்றார். மனித நிலையிலிருந்து இறைநிலைக்குக் கடந்து செயல்படுபவராக இருக்கிறார் இயேசு. மக்கள் இயேசுவை மெசியா என அறிக்கையிடுகின்றனர். மக்களின் வாயும் திறக்கப்படுகின்றது.

இன்றைய இறைவார்த்தையை நாம் எப்படி வாழ்வது?

இன்று உள்ளம் உறுதியற்றவர்களாக நாம் இருக்கக் காரணம் என்ன? நம்மைச் சூழ்ந்துள்ள பயங்கள் எவை? நம் வாழ்வில் நாம் மீண்டும் திரும்ப வேண்டிய பழைய நன்னிலை எது?

நான் மற்றவர்களை பாலினம், சாதி, மதம், மற்றும் பொருளாதார நிலை அடிப்படையில் பிரித்துப் பார்க்கிறேனா? நாம் ஏழைகளை மதிக்க வேண்டும். அவர்களுக்கு ஒன்றைச் செய்யுமுன், 'இதை நான் உங்களுக்குச் செய்யட்டுமா!' என்று அனுமதி கேட்க வேண்டும். ஏழைகளின் மாண்பு மனித மாண்பு என்கிறார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இயேசு எனக்கு அருகில் வரும்போது நான் அவரைக் கண்டுகொள்கிறேனா? அவரிடம் சென்று என் குறையை எடுத்துரைக்கின்றேனா? மற்றவர்களின் குறைகளுக்காகப் பரிந்து பேசுகிறேனா? 'அவர் யாவற்றையும் நன்றாகச் செய்துள்ளார்' என்று அவரைப் பற்றி அறிக்கையிடுகிறேனா? கடவுள் அனைத்தையும் நன்றாகச் செய்துள்ளார் எனில், நானும் அனைத்தையும் நன்றாகச் செய்யலாமே!

இறுதியாக,

அனைத்தும் நன்றாக இருக்கின்றன. ஏனெனில், ஆண்டவரின் இரக்கமும் நீதியும் நம்மோடு இருக்கின்றன. தீமையை யார் வேண்டுமானலும் செய்ய இயலும். ஆனாலும், யாவற்றையும் நன்மையாக நம்மால் மட்டுமே செய்ய இயலும். நம்மைக் காண்கின்ற மற்றவர்கள், 'அவர் அனைத்தையும் நன்றாகச் செய்துள்ளார்' என்று சொல்கிறார்கள் எனில், யாவற்றையும் நன்றாகச் செய்கின்ற கடவுள் நம்மோடு இருக்கின்றார்!

_________ அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்

(பொறுப்பு ஏற்பு: மேற்காணும் மறையுரைச் சிந்தனை யேசு கருணாநிதி என்ற தனிநபரின் கருத்துரு ஆகும். நான் மேற்கொண்டிருக்கும் துறை அல்லது பணிப்பொறுப்புசார் கருத்துக்களோ, அல்லது இதைப் பரவலாக்கம் செய்யும் தனிநபர் அல்லது குழுக்களின் கருத்துக்களோ அல்ல. இம்மறையுரை பற்றிய ஆழ-அகல அலசலுக்கு இனிதே அணுகவும்: +91 948 948 21 21, yesu@live.in)