இவ் மறையுரையை வழங்குபவர்

அருட்பணி.இயேசு கருணாநிதி
Archbishop’s House, K. Pudur, Madurai 625 007, India
Email: yesu@live.in

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)









திருவருகைக்காலம் முதல் ஞாயிறு

புத்தம் புது நோட்டு!

எசாயா 2:1-5
உரோமையர் 13:11-14
மத்தேயு 24:37-44

ஒரு வீட்டுல மனைவி தன் கணவனிடம் சொன்னார்:

'நீங்க புது 2000 ரூபாய் நோட்டு மாதிரி!'

கணவனுக்கு ரொம்ப ஆச்சர்யம்!

'நான் அவ்வளவு மதிப்புள்ளவனா?' என திரும்பக் கேட்டார்.

'அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல! உங்கள வச்சிக்கவும் முடியல. தூக்கி எறியவும் முடியல!'

9.11 அமெரிக்காவுக்கு எப்படி மறக்க முடியாத நாளோ, அதே போல 9.11ஐ இந்தியர்களுக்கும் மறக்க முடியாததாக்கிவிட்டார் நம்ம பிரதமர் மோடி.

அதற்கு முந்தின நாள் மாலை டிவியில் தோன்றிய அவர் இன்று நள்ளிரவில் இருந்து 1000 ரூபாய் மற்றும் 500 ரூபாய்கள் செல்லாது எனவும், புதிதாய் 2000 மற்றும் 500 ரூபாய் நோட்டுக்கள் வரும் என்றும் சொல்லிவிட்டு, 'இதெல்லாம் எதுக்குன்னா, கறுப்பு பணம் ஒழிப்புக்கு!' என்று சொல்லிவிட்டு மறைந்துவிட்டார்.

டிவி பார்த்த யாருக்கும் தூக்கமில்லை அன்று!

அடுத்த நாள் ஒரே பாரட்டு மழை. இந்தியா வல்லரசாகிவிட்டது! மோடி எல்லாவற்றையும் மாற்றிவிட்டார்! என ஊடகங்கள் கொக்கரித்தன. இது போதாதென்று சினிமா கூத்தாடிகளும், 'புதிய இந்தியா பிறந்துவிட்டது!' என்று மோடிக்கு வாழ்த்து சொல்லிவிட்டனர்.

இன்றுடன் இரண்டு வாரங்கள் கடந்துவிட்டன.

கறுப்பு பணம் வைத்திருந்தவர்கள் யாரும் பிடிபடவில்லை.

பிடிபட்டவர்கள் எல்லாம் தங்கள் கடுகுப்பெட்டியில் பணம் வைத்திருந்த ஏழைகள்தாம்.

இதுவும் ஒரு மோடிமஸ்தான் வேலை என்பது இப்போது எல்லாருக்கும் தெரிந்துவிட்டது.

போதாக்குறைக்கு மோடி இப்ப எல்லா இடங்களிலும் அழ வேற ஆரம்பிச்சுட்டார்.

புதிய ரூபாய் நோட்டு கொஞ்சம் கொஞ்சமாக நம் வீடுகளை எட்டிப் பார்க்க ஆரம்பித்துவிட்டது.

இந்தப் புதிய விருந்தாளியின் வருகை மூன்று பண்புகளைக் கொண்டிருக்கின்றது:

அ. எதிர்பாராதது

அம்பானி, அதானி குழும உறுப்பினர்களைத்தவிர வேறு யாரும் புதிய நோட்டு பற்றி அறியவில்லை. யாரும் இதை எதிர்பார்க்கவில்லை.

ஆ. லாஜிக் இல்லாதது

கறுப்பு பணம் 1000 ரூபாயாக பதுக்கி வைக்கப்படுகிறது என்றால், அதற்கு குறைவாக உள்ள 100 மற்றும் 50 போன்ற நோட்டுக்களை அறிமுகம் செய்ய வேண்டும். அதைவிட்டுவிட்டு, 2000ஐ அறிமுகம் செய்துவைத்து கறுப்பு பணத்தை ஒழிக்க முயல்வது எப்படி? மோடி ஒழிக்க பார்க்கிறாரா அல்லது ஒளிக்க பார்க்கிறாரா? லாஜிக் இல்லா மேஜிக்கா மோடி பாஸ் இது!

இ. திருப்ப முடியாதது

உச்ச நீதிமன்றத்தின் படிக்கட்டுகளில் வழக்குகள் ஏறினாலும், 80 பேர் வங்கி மற்றும் ஏடிஎம் வாசல்களில் மடிந்து விழுந்தாலும் தன் முடிவை திருப்பி எடுத்துக்கொள்ள மோடி தயாராக இல்லை.

நிற்க.

இன்று புதிய திருவழிபாட்டு ஆண்டைத் தொடங்குகிறோம். திருப்பலி புத்தகம், வாசக புத்தகம், கட்டளை செபம் என எல்லாம் முதல் பக்கத்திலிருந்து தொடங்கும். புதியது என்றும் நமக்கு புத்துணர்வு தருகிறது. ஆகையால்தான் பிறந்தநாள் மற்றும் திருநாள்கள் அன்று புதிய ஆடை அணிய வேண்டும் என்பது இன்னும் வழக்கமாக இருக்கிறது.

மற்றொரு பக்கம் திருவருகைக்காலத்தின் முதல் ஞாயிறு, கிறிஸ்து பிறப்பு கொண்டாட்டங்களுக்கு நம்மை தயாரிக்கும் முகமாகவும், அதே நேரத்தில் இயேசுவின் இரண்டாம் வருகையைப் பற்றிய எண்ணம் கொண்டிருக்கவும் நம்மை அழைக்கிறது.

இன்றைய இறைவாக்கு வழிபாட்டை ஒரே வார்த்தையில் சொல்லவேண்டுமெனில், 'மாற்றம்' என்று சொல்லலாம்.

அதாவது, முன்பு இருந்தது இப்போது இல்லை. அல்லது எல்லாம் மாறிவிட்டது.

முதல் வாசகத்தில் (காண். எசா 2:1-5) 'வாள்கள் கலப்பைக் கொழுக்களாவும், ஈட்டிகள் கருக்கரிவாள்களாகவும் மாறும்' என்றும், 'ஓர் இனம் மற்றொரு இனத்திற்கு எதிராக வாள் எடுக்காது எனவும், அவர்கள் போர்ப்பயிற்சி பெற மாட்டார்கள்' எனவும் இறைவாக்குரைக்கின்றார் எசாயா. அதாவது, வன்முறைக்கும், போருக்கும், அழிவிற்கும் பயன்பட்டவைகள் இனி பசியாற்றுவதற்கும், விவசாயத்திற்கும், வாழ்விற்கும் பயன்படும் என்பதுதான் எசாயா குறிப்பிடும் மாற்றம்.

இரண்டாம் வாசகத்தில் (காண். உரோ 13:11-14) தன் அறிவுரைப் பகுதியை நிறைவு செய்யும் பவுல், அதன் ஒரு பகுதியாக, 'இறுதிக் காலம் நெருங்குதல்' பற்றி எழுதுகின்றார். 'உறக்கம்' என்பதை இப்போது இருக்கும் காலம் என்றும், 'விழிப்பு' என்பதை இறுதிக்காலம் எனவும் உருவகம் செய்யும் பவுல், உறக்கம் அல்லது இருளுக்குரிய 'களியாட்டம், குடிவெறி, கூடாஒழுக்கம், காமவெறி, சண்டை சச்சரவு ஆகியற்றை விட்டுவிட்டு, ஒளியின் ஆட்சிக்குரிய, பகலுக்குரிய ஆடைகளை அணிய' அழைக்கின்றார். இருள் பகலாக மாறிவிட்டது என்பதால் அதற்கேற்ப நம் செயல்களும் மாற வேண்டும் என்பது பவுல் குறிப்பிடும் மாற்றம்.

இயேசுவின் நிறைவுகாலப் பொழிவு என்ற பகுதியின் ஒரு சிறுபகுதியாக இருக்கும் இன்றைய நற்செய்தியில் (காண். மத் 24:37-44) இயேசுவின் போதனை, 'மானிட மகன் வரும் நாளும் வேளையும் எப்படி இருக்கும்' என்பதைப் பற்றிச் சொல்வதாக இருக்கிறது.

அந்த வருகையை மேலே நாம் குறிப்பிட்ட மூன்று அடைமொழிகளால் சொல்லிவிடலாம்:

அ. எதிர்பாராதது

மானிட மகனின் வருகையை யாரும் எதிர்பார்க்க மாட்டார்கள் என்பதை நோவா காலத்துப் பெருவெள்ளம் எடுத்துக்காட்டுடன் சொல்கிறார் இயேசு. அதாவது நோவா காலம். நிறைய மக்கள் இருக்கிறார்கள். நல்லா சாப்பிடுறாங்க. நல்லா குடிக்கிறாங்க. பொண்ணு கொடுக்குறாங்க. பொண்ணு எடுக்குறாங்க. எல்லாம் நல்லா போய்கிட்டு இருக்கு. யாரும் எதிர்பாரார ஒருநாள் வெள்ளம் வந்து எல்லாவற்றையும் அழித்துவிடுகிறது.

அதாவது, இன்னைக்கு மாதிரிதான எல்லாம் நாளும் இருக்கும் என நினைத்தவர்களுக்கு வெள்ளம் வந்த நாள் பேரழிவாக இருக்கிறது.

யாரும் அறியாமல், யாரும் எதிர்பார்க்காமல் இருந்தபோது வந்த அழிவு போல இருக்கும் மானிட மகனின் வருகை.

ஆ. லாஜிக் இல்லாதது

இரண்டாவதாக, எந்தவொரு லாஜிக் மற்றும் அறிவுசார்ந்த கேள்விக்கும் உட்படாமல் இருக்கிறது இயேசுவின் வருகை.

'வயலில் இரண்டு பேர் இருப்பார்கள். ஒருவர் எடுத்துக்கொள்ளப்படுவார். மற்றவர் விடப்படுவார்.

இருவர் மாவரைத்துக் கொண்டிருப்பர். ஒருவர் எடுத்துக்கொள்ளப்படுவார். மற்றவர் விடப்படுவார்.'

இது எந்த லாஜிக் என்று நமக்குத் தெரியவில்லை.

எதற்காக ஒருவர் எடுத்துக்கொள்ளப்படுவார், மற்றவர் விடப்படுவார் என்பதும் தெரியவில்லை.

இ. திருப்ப முடியாதது

அதாவது, திரும்ப சரி செய்ய முடியாதது.

வெள்ளம் கொண்டுவரும் அழிவும், திருடன் ஏற்படுத்தும் அழிவும் சரி செய்ய முடியாதது.

அண்மையில் சென்னை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இன்னும் எவ்வளவு வேலைகள் செய்யப்பட வேண்டியிருக்கிறது என்பதை நாம் அறிவோம்.

என்னதான் புதிய வீடுகள், புதிய தொழிற்கூடங்கள், புதிய பள்ளிகள் என கட்டிக்கொடுக்கப்பட்டாலும், அழிந்தவற்றை அவைகள் ஒருபோதும் ஈடுசெய்வதில்லை.

திருடனிமிருந்த திருடிய பொருள்கள் மீட்கப்பட்டு உரியவரிடம் கொடுக்கப்பட்டாலும், அவற்றை இழந்த அன்று அந்த உரிமையாளர் சிந்திய கண்ணீருக்கும், அடைந்த மனத்துயருக்கும் நாம் ஈடுசெய்ய முடியுமா? இல்லை!

இப்படித்தான் இருக்குமாம் மாற்றம்!

மொத்தத்தில்,

மானிட மகனின் வருகையின்போது ஒரு புதிய மாற்றம் இருக்கும் என்று இயேசு சொல்ல வருகிறார்.

அதாவது, பழையது எல்லாம் எதிர்பாராமலும், லாஜிக் இல்லாமலும், திருப்ப இயலாமலும் மாற்றம் பெறும்.

இந்த மாற்றம் வந்தே தீரும் என அடித்துச் சொல்கிறார் இயேசு.

இந்த மாற்றத்தை எதிர்கொள்ள நாம் செய்ய வேண்டியது என்ன? இரண்டு காரியங்கள்.

அதையும் சொல்கிறார் இயேசு:

அ. 'விழிப்பாய் இருங்கள்!'

'விழிப்பு' என்பது தூங்கி எழும்போது நாம் செய்யும் செயல் அல்ல. மாறாக, தூங்காமல் செய்யும் செயல்தான் விழிப்பு. அதற்காக, எந்நேரமும் கண்களைத் திறந்து வைத்துக்கொண்டே இருக்கவேண்டுமா? இல்லை.

எந்நேரமும் கண்களைத் திறந்து கொண்டே வைத்திருப்பவர் கடவுள் மட்டுமே.

ஆகவேதான், 'இஸ்ரயேலைக் காக்கின்றவர் கண்ணயர்வதுமில்லை. உறங்குவதுமில்லை' (திபா 121:4) என திருப்பாடல் ஆசிரியர் பாடுகின்றார். இப்படி விழித்திருக்கும் இறைவனிடம் நம் வாழ்க்கை அனைத்தையும் ஒப்படைத்துவிட்டால் நாம் மாற்றத்தை எதிர்கொள்ள முடியும்.

ஆ. 'ஆயத்தமாய் இருங்கள்!'

எந்நேரமும் தயார்நிலை. எந்நேரமும் ஆள்நடமாட்டம் இருக்கும், வெளிச்சம் இருக்கும் இடத்தில் திருடன் வருவதில்லை. நாம் ஆயத்தமில்லாத நேரத்தை திருடன் பயன்படுத்தி நம் உடைமையை பறித்துக்கொள்வான்.

ஒவ்வொரு பொழுதையும் இனிதே வாழ்பவர்களால் மட்டும்தான் ஆயத்தமாக இருக்க முடியும்.

10 மணிக்கு கல்யாண வீட்டிற்கு செல்ல வேண்டும் என வைத்துக்கொள்வோம். 10 மணிக்கு நாம் உடுத்தும் உடைக்கும், அதே நாள் காலை 6 மணிக்கு நாம் உடுத்திய உடைக்கும் வித்தியாசம் இருக்குமா? இருக்கும்! 6 மணிக்கு நம் ஆடை கசங்கி இருக்கும். அழுக்காக இருக்கும். நம் முகமும் பார்க்கும் கோணத்தில் இருக்காது. ஆனால், 10 மணிக்கு முகம், ஆடை என அனைத்தும் மின்னும். ஏன் 6 மணிக்கு அந்த நிலை இல்லை? ஏனெனில், 'இன்னும் நேரமிருக்கிறது!' என்பதால் நாம் ஆயத்தம் இல்லாமல் இருந்தோம். ஒருவேளை 6 மணிக்கு கல்யாணம் என்றால், நம் முகம் 6 மணிக்கே ஆயத்தமாக இருந்திருக்கும். ஆக, எந்நேரத்தையும் இந்நேரமே அந்நேரம் என்று வாழ்வதுதான் ஆயத்தநிலை.

இதைத்தான் ஸ்டீவ் ஜாப்ஸ் இப்படிச் சொல்வார்:

'தினமும் காலையில் எழுந்து கண்ணாடி முன் நின்று, 'இந்நாள்தான் இறுதிநாளா?' என என்னையே கேட்டு என் வேலையைத் தொடங்குவேன். அந்த நாளுக்கான பதில் ஒருநாள் உண்மையாகிவிடும்!'

இயேசுவின் இரண்டாம் வருகையின்போதுதான் எல்லாம் மாறுமா?

இல்லை.

மாற்றம் என்பது நாம் அனுதினம் அனுபவிக்கும் ஒன்று. நம் வாழ்வின் ஒவ்வொரு மாற்றமும் மானிட மகனின் இரண்டாம் வருகையே.

ஆக, இரண்டாம் வருகை எப்படி இருக்கும் என்று இன்று நாம் வானத்தைப் பார்க்க வெளியே ஓடிவரவோ, 'அப்படி இருக்கும், எப்படி இருக்கும்' என்று மற்றவர்கள் சொல்லும் புரளியைக் கேட்கவோ வேண்டாம்.

இரண்டாம் வருகை நம் உள்ளத்தில் நடக்கும், நம் வீட்டில் நடக்கும், நம் பணியிடத்தில் நடக்கும், நம் பயணத்தில் நடக்கும்.

ஒவ்வொரு முறையும் நம் உள்ளத்தில், வீட்டில், பணியிடத்தில், சமூகத்தில் மாற்றம் ஏற்படும்போதெல்லாம் அங்கே இயேசுவின் இரண்டாம் வருகையும் ஏற்படுகிறது.

இந்த திருவருகைக்காலத்தில் நாம் மூன்று முடிவுகள் எடுக்கலாமே!

அ. நாம் விடமுடியாத ஒரு செயலை விட முயற்சி செய்யலாம்

உதாரணத்திற்கு, எனக்கு புகைப்பிடிக்கும் பழக்கம் இருக்கிறது என வைத்துக்கொள்வோம். நிறைய முயற்சி செய்கிறேன். சில நாள்கள் நிறுத்துகிறேன். மீண்டும் சில நாள்கள் கழித்து தொடர்கிறேன்.

இதை எப்படி நிறுத்துவது?

'என்றாவது ஒருநாள் விடத்தானே வேண்டும். அந்த நாள் இந்த நாளாக இருக்கட்டுமே!' என்று முடிவெடுத்து உறுதியாக இருந்தால் புகை பிடித்தலை விட்டுவிடலாம்.

ஆ. நம்மிடம் வரும் திருடன் யார்? எது?

நாம் நினையாத நேரத்தில் திருடன் வருவான் என எச்சரிக்கிறார் இயேசு. நம் வீட்டிற்குள் வரும் திருடனைப் பற்றித்தான் பல நேரங்களில் நாம் நினைக்கிறோம். ஆனால், நம் உள்ளத்தின் மகிழ்ச்சியை திருடும் பேராசை, ஒப்பீடு, கவலை போன்றவற்றைப் பற்றி நாம் அக்கறை கொள்வதில்லை. எந்த ஒரு நிலையிலும் நம் மகிழ்ச்சி நம்மிடமிருந்து திருடு போகாமல் பார்த்துக்கொள்வோம்.

இ. நேர்முகமாக மாற்றம் கொண்டுவருவது

பிறரின் வாழ்வில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்படும் வகையில் ஏதாவது செய்வது. கிறிஸ்து பிறப்பு காலத்தில் நாம் நிறைய பிறரன்பு செயல்கள் செய்வோம், நண்பர்களுக்கு பரிசுகள் வழங்குவோம், தெரிந்தவர்களுக்கு கேக் வழங்குவோம். இவையெல்லாம் சரி. ஆனால், இவற்றையும் தாண்டி எனக்கு அருகில் இருப்பவரின் மாற்றத்திற்கு நான் ஏதாவது ஒரு வகையில் காரணமாக இருத்தல் நலம்.

இறுதியாக,

'அவர் வருவாரா?' என்ற கேள்வி வேண்டாம்.

'அவர் இன்றும் வருகிறார்' என்ற நம்பிக்கை போதும்.

அந்த நம்பிக்கையைத்தான் இன்று நாம் முதல் மெழுகுதிரியாக ஏற்றுகிறோம்.