இவ் மறையுரையை வழங்குபவர்

அருட்பணி.இயேசு கருணாநிதி
Archbishop’s House, K. Pudur, Madurai 625 007, India
Email: yesu@live.in

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)









ஆண்டின் பொதுக்காலம் 12ஆம் ஞாயிறு

உன் அலைகள் எங்கே?

யோபு 38:1,8-11
2 கொரிந்தியர் 5:14-17
மாற்கு 4:35-41

உன் அலைகள் எங்கே?

'நான் என் சுண்டுவிரலை நகர்த்தும்போது எங்கோ இருக்கின்ற நட்சத்திரத்தை நகர்த்துகிறேன்' என்பது தாவோ எண்ணம். அதாவது, நானும் பிரபஞ்சமும் ஒன்றோடொன்று இணைந்திருக்கின்றோம். செல்டிக் பண்பாட்டின் புரிதல்படி நாம் வானில் காண்கின்ற விண்மீன்கள் யாவும் இந்த உலகைக் கடந்து சென்றவர்கள் ஏற்படுத்திச் சென்ற பிரபஞ்சத் துவாரங்கள். அவற்றின் வழியே அவ்வுலகின் ஒளி இவ்வுலகை நோக்கிக் கடந்து வருகின்றது. அவர்கள் அவ்வுலகிற்குச் சென்றாலும் அத்துவாரங்கள் வழியே இவ்வுலகைப் பார்த்துக்கொண்டே இருக்கின்றார்கள். நம்முடைய பிரபஞ்சமும் நாமும் ஏதோ ஓர் ஒருங்கமைவு இணைப்பில் இருக்கிறோம் என்பதை மறுக்க முடியாது. நாள் விடிகின்றது, நாள் முடிகின்றது. நாம் பிறக்கின்றோம், நாம் இறக்கின்றோம். ஏதோ ஒரு பாடலின் இசை போல, ஓவியத்தின் ஒளி-இருள் போல எல்லாம் அதனதன் நேரத்தில் நடந்துகொண்டிருக்கின்றது.

இந்த ஒருங்கியக்கத்தில் ஏதாவது ஒரு தடை வரும்போது நம் மனம் பதைபதைக்கின்றது. அப்படி வரும் தடைகளை பதற்றமின்றி நாம் எப்படி எதிர்கொள்வது என்பதை இன்றைய இறைவார்த்தை வழிபாடு நமக்குக் கற்றுத் தருகிறது. இந்த உலகில் பிறக்கும் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு வகையில் இன்னொருவருடன் இணைந்திருக்கின்றோம். ஒருவர் மறையும்போது அவரைச் சுற்றி பிண்ணப்பட்ட வலை கிழிந்து போவதோடு, அதைத் திரும்பப் புதுப்பிக்க முடியாத நிலையும் உருவாகிவிடுகிறது.

நற்செய்தி வாசகத்தில், இயேசு தன் சீடர்களை நோக்கி, 'அக்கரைக்குச் செல்வோம் வாருங்கள்!' என்றழைத்து, அவர்களோடு இணைந்து படகில் ஏறுகின்றார். அந்த நேரத்தில் புயல் அடிக்கின்றது. கெனசரேத்து ஏரி என அழைக்கப்படும் கலிலேயக் கடல் உண்மையில் ஓர் ஏரி. சுற்றிலும் மலை சூழ்ந்திருப்பதாலும், கடல்மட்டத்திற்குக் கீழே இருப்பதாலும் பெருங்காற்று வீசும்போது இந்நீர்த்தேக்கத்தில் ஏறக்குறைய 20 அடி உயரத்திற்கு அலைகள் எழுவதுண்டு. இயேசுவின் சீடர்களில் பெரும்பாலானவர்கள் மீன்பிடித்தொழில் செய்தவர்கள், அல்லது இக்கடலைச் சுற்றி வாழ்ந்தவர்கள். ஆக, அவர்கள் அலைகளை அடிக்கடி எதிர்கொண்டதுண்டு. இந்த நிகழ்வில், பெரும் புயல் அடித்தது எனச் சொல்கின்ற மாற்கு, அங்கு நிலவிய இரண்டு சூழல்களை நம்முன் கொண்டு வருகின்றார்: ஒன்று, அமைதியான சூழல். அந்தச் சூழலில் இயேசு படகில் தலையணை வைத்துத் தூங்கிக்கொண்டிருக்கின்றார். அதற்கு எதிர்மாறான சூழல் இரண்டாவது. பரபரப்பான சூழல். அங்கே சீடர்கள் பரபரப்பாக, பயந்து போய் இருக்கின்றனர். 'போதகரே, சாகப்போகிறோமே! உமக்குக் கவலையில்லையா?' எனக் கேட்கின்றனர். இவர்கள் இயேசுவை வெறும் போதகராக (ரபி) பார்க்கின்றனர். மேலும், தங்கள் கவலையில் இயேசுவையும் இணைத்துக்கொள்ள முயற்சி செய்கின்றனர்.

இயேசு எழுந்து கடலைக் கடிந்துகொள்கின்றார். 'இரையாதே! அமைதியாயிரு!' என்பது பேயோட்டுவதற்கான வாய்ப்பாடு. அதே வார்த்தைகளைச் சொல்லி இயேசு கடலை அமைதியாக்குகின்றார். ஏனெனில், யூத மக்களைப் பொருத்தவரையில் கடல் என்பது பேய்கள் வாழும் இடமாகக் கருதப்பட்டது. தொடர்ந்து தன் சீடர்களைக் கடிந்துகொள்கின்றார் இயேசு: 'ஏன் அஞ்சுகிறீர்கள்? உங்களுக்கு இன்னும் நம்பிக்கை இல்லையா?' இவ்வார்த்தைகள் வழியாக அவர்களின் நம்பிக்கையின்மையைக் கடிந்துகொள்கின்றார் இயேசு. அதாவது, இயேசு தங்களோடு இருக்கும்போது தங்களுக்கு இறப்பு இல்லை என்பதை அவர்கள் நம்ப மறுத்தனர். இதுதான் அவர்களின் நம்பிக்கைக் குறைவான நிலை. இந்தக் கேள்விகள் சீடர்களைப் பார்த்து மட்டும் கேட்கப்படவில்லை. இந்நிகழ்வை வாசிக்கும் நம் ஒவ்வொருவரையும் பார்த்துக் கேட்கப்படுகின்றன. இவ்விரண்டு வினாக்களுக்கும் நானும் நீங்களும் தனித்தனியாக விடை அளிக்க வேண்டும். நாம் அளிக்கும் விடையைப் பொருத்தே, 'படகில் தூங்குபவரும் காற்றைக் கடிந்துகொள்பவரும் யார்?' என்ற வினாவுக்கான விடை அமையும்.

தங்களுடைய வாழ்க்கை இயல்பாகக் கடந்து போன போது இரண்டு துன்பங்களை எதிர்கொள்கின்றனர் சீடர்கள்: ஒன்று, 'அக்கரைக்குச் செல்கின்றனர்.' இக்கரையில் இருந்த தங்களுடைய பெற்றோர், பிள்ளைகள், உடன்பிறந்தோர், உறவினர்கள், நண்பர்கள், தொழில், மக்கள் ஆகிய அனைத்தையும், அனைவரையும் விடுத்து, முன்பின் தெரியாத அக்கரை நோக்கிச் செல்கின்றனர். இரண்டு, இயல்பான அமைதியில் இருக்கின்ற கடல் இயல்பு நிலையை இழந்து கொந்தளிக்கிறது. இவ்விரண்டு துன்பங்களும் அவர்களுக்கு அச்சமும் கவலையும் அளிக்கின்றன. ஆகையால்தான், 'போதகரே, சாகப்போகிறோமே!' என்கின்றனர்.

முதல் வாசகத்தில், யோபுவுக்கு ஆண்டவராகிய கடவுள் சூறாவளியினின்று அருளிய பதிலின் ஒரு பகுதியை வாசிக்கின்றோம். 'நேர்மையாளர் துன்புறுவது ஏன்?' என்ற கேள்வியைக் கேட்டு விடையைத் தேடுகிறது யோபு நூல். நேர்மையாளர் துன்புறுதலுக்கான விடையை யோபுவின் மூன்று நண்பர்கள் பாரம்பரிய இறையியலைக் கொண்டு தர முயற்சி செய்கின்றனர். அவர்களின் விடை யோபுவுக்கு ஏற்புடையதாக இல்லை. சூறாவளியில் தோன்றுகின்ற ஆண்டவர் யோபுவின் கேள்விக்கு விடையளிக்காமல் சுற்றி வளைத்து நிறையக் கேள்விகளைத் தொடுக்கின்றார். தானே அனைத்துக்கும் ஆண்டவர் என்றும், வாழ்வின் மறைபொருள் அனைத்தவர் தான் மட்டுமே என்றும் யோபுவை உணரச் செய்கின்றார். விளைவு, யோபு சரணடைகின்றார். கடல்மேல் ஆண்டவராகிய கடவுள் கொண்டிருக்கின்ற ஆற்றலை இவ்வாசகப் பகுதியில் காண்கின்றோம்.

யோபுவின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுகின்றது. அவர் தனக்குரியது அனைத்தையும் அனைவரையும் இழந்து இறந்தவர் போல, அல்லது இறப்புக்குத் துயரப்படுவது போல சாம்பலில் அமர்ந்திருக்கின்றார். பிரபஞ்சத்திற்கும் தனக்குமான நெருக்கம் உடைக்கப்பட்டது போல உணர்ந்த அந்த நேரத்திலும் இறைவனின் உடனிருப்பைக் காண்கின்றார் யோபு.

இரண்டாம் வாசகத்தில், தன்னுடைய நற்செய்தியின் மேன்மை குறித்து கொரிந்து நகரத் திருஅவைக்கு எழுதுகின்ற பவுல் தான் படுகின்ற துன்பங்கள் அனைத்தையும் முன்வைக்கின்றார். தான் படுகின்ற துன்பங்கள் அனைத்தையும் இயேசுவின் உயிர்ப்பின் ஒளி கொண்டு காண்கின்றார் பவுல். கிறிஸ்துவின் உயிர்ப்பின் வழியாக பழையது மறைந்து புதியது பிறக்கின்றது என அறிக்கையிடுகின்றார்.

பெருந்தொற்றின் இரண்டாம் அலை மெதுவாக ஓய்ந்துகொண்டிருக்கும் இந்த நேரத்தில், நம் அன்புக்குரிய பலரை நாம் அன்றாடம் இழந்துகொண்டிருக்கும் வேளையில், இரண்டாம் அலையைப் பார்த்து, ஆண்டவராகிய கடவுள், 'உன் இறுமாப்பின் அலைகள் இங்கே நிற்க!' என்று கட்டளையிடுகின்றார்.

நாம் இன்று கேட்க வேண்டிய கேள்வி எல்லாம், 'போதகரே, நாங்கள் சாகப்போகிறோமே!' என்பதல்ல, மாறாக, 'ஆண்டவரே, நாங்கள் வாழப்போகிறோமே! நாங்கள் என்ன செய்ய வேண்டும்?' என்பதுதான்.

நமக்கும் கடவுளுக்கும், நமக்கும் ஒருவர் மற்றவருக்கும், நமக்கும் பிரபஞ்சத்திற்குமான ஒருங்கியக்கம் தடைபடும்போதெல்லாம் இறைவன் அங்கே இருக்கின்றார் என்பதை நாம் மறந்துவிட வேண்டாம். சில நேரங்களில் அவர் யோபுவிடம் பேசியது போல இறங்கிவந்து பேசுகின்றார். சில நேரங்களில் தலையணை வைத்துத் தூங்குகின்றார்.

திருப்பாடல் ஆசிரியரோடு இணைந்து, 'ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள், ஏனெனில் அவர் நல்லவர். என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு ... புயல் காற்றை அவர் பூந்தென்றலாக மாற்றினார். கடல் அலைகளும் ஓய்ந்துவிட்டன' (திபா 107) என்று பாடுவோம்.

அக்கரைக்கு நாம் செல்ல வேண்டிய தூரம் நிறைய உள்ளது. அவருடைய உடனிருப்பு நம் இருத்தலையும் இயக்கத்தையும் உறுதி செய்கிறது.