இவ் மறையுரையை வழங்குபவர்

அருட்பணி.இயேசு கருணாநிதி
Archbishop’s House, K. Pudur, Madurai 625 007, India
Email: yesu@live.in

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)









ஆண்டின் பொதுக்காலம் 11ஆம் ஞாயிறு

எதுவும் செய்யாமலே!

எசேக்கியேல் 17:22-24
2 கொரிந்தியர் 5:6-10
மாற்கு 4:26-34

எதுவும் செய்யாமலே! 'கொரோனா' என்பது ஒரு புனைகதை என்று பேசப்பட்டது. ஆனால், நம் அன்புக்குரியவர்களை அது அள்ளிக்கொண்டு போவதைப் பார்க்கும்போது, அதை ஓர் எதார்த்தமாக ஏற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளானோம். 'தடுப்பூசி' என்பது ஒரு புனைகதை என்று பேசப்பட்டது. ஆனால், இப்போது தடுப்பூசி தவிர வேறு வழியில்லை என்ற நிலையில் வேகமாக நாம் அதை நோக்கி ஓடிக்கொண்டிருக்கிறோம். நாம் போட்ட தடுப்பூசி நாம் அறியாமலேயே தன் வேலையைச் செய்கின்றது. நிலத்தில் விதைக்கப்பட்ட விதை போல. இன்றைய முதல் மற்றும் மூன்றாம் வாசகங்கள் ஒரு மரத்தின் வளர்ச்சி பற்றிப் பேசுகின்றன. கோவிஷீல்ட் தடுப்பூசியை எடுத்துக்காட்டாகக் கொள்வோம். இந்த ஊசியின் மருந்தின் வழியாக நம் உடலில் செலுத்தப்படுவது சிம்பன்சி குரங்கிலிருந்து எடுக்கப்பட்ட சாதாரண சளியை ஏற்படுத்தும் வைரஸ். இந்த வைரஸூக்கும் கோவித்-19 வைரஸூக்கும் உள்ள புரதக் கோடு ஒன்று போல இருக்கும். உடலுக்குள் செலுத்தப்படும் இந்த வைரஸ் தன்னைத் தானே பெருக்கிக்கொள்ளும். நோய் எதிர்ப்பு சக்திக்குக் காரணமாக இருக்கும் வெள்ளை அணுக்களுடன் இணைந்து கோவித்-19க்கு எதிரான புரதக் கோட்டை உருவாக்கும். கோவித்-19 வகை வைரஸ் உள்ளே நுழையும்போது உள்ளே இருக்கும் எதிர் உடல்கள் (anti-bodies) அதைத் தடுக்கின்றன. இந்த அறிவியல் முழுமையாகப் புரியாவிட்டாலும், 'நமக்கு உள்ளே செலுத்தப்படுகின்ற வைரஸ் நம்மை அறியாமலேயே வளர்கிறது' என்பது மட்டும் தெளிவாக இருக்கட்டும். இயற்பியலில் 'என்ட்ராபி' (entropy) (thermodynamics) என்று ஒரு விதி உண்டு. அதன்படி ஒரு பொருளை நாம் அப்படியே அதன் இருப்பிலேயே (வெப்பநிலையிலேயே) விட்டால் அது தன் இயல்பை இழந்து, மறைந்துவிடும். எடுத்துக்காட்டாக, சுடுதண்ணீரைப் பிடித்து நாம் ஒரு வாளியில் வைக்கிறோம். அந்த நீரின் மேல் மேலும் வெப்பம் செலுத்தப்படாவிட்டால் அது தன் சூட்டை இழந்து விரைவில் குளிர்ந்துவிடும். என் அறையில் ஒரு புத்தகம் இருக்கிறது என வைத்துக்கொள்வோம். அந்தப் புத்தகம் வருடக்கணக்கில் அப்படியே அதே இடத்தில் இருந்தால் அது அப்படியே அழிந்துவிடும். ஆக, ஒன்றை நாம் கண்டுகொள்ளாமல் அப்படியே விட்டால் அது காலப்போக்கில் மறைந்துவிடும். இது பெரும்பாலும் பொருள்களுக்குப் பொருந்தும். இதே விதி சில நேரங்களில் நிறுவனங்களிலும் பயன்படுத்தப்படுகிறது. அதாவது, ஒரு நிறுவனத்தில் ஏதாவது ஒரு பிரச்சினை வருகிறது என வைத்துக்கொள்வோம். அந்தப் பிரச்சினையை அப்படியே கண்டுகொள்ளாமல் விட்டால் அது காலப்போக்கில் அப்படியே மறைந்துவிடும். இதைத்தான், 'காலம் காயங்களை ஆற்றும்' என்ற பழமொழியும் சொல்கிறது. இன்றைய நற்செய்தி வாசகத்தில் (காண். மாற் 4:26-34) இரண்டு உருவகங்களைச் சொல்கின்றார். இரண்டும் இறையாட்சிக்கான உருவகங்கள். ஒன்று, தானாக முளைத்து வளரும் விதை. இரண்டு, கடுகு விதை. மாற்கு நற்செய்தியில் இந்தப் பகுதியில் மட்டுமே உவமைகளைக் கையாளுகின்றார் இயேசு. இந்த இரண்டும் சொல்லக்கூடிய செய்தி என்னவோ ஒன்றுதான்: (அ) விதைக்கு ஆற்றல் உண்டு. (ஆ) விதையின் இயக்கத்தை யாரும் தடுக்கவோ, திருப்பவோ இயலாது. (இ) விதையைப் பற்றி யாரும் கண்டுகொள்ளவில்லை என்றாலும் அது வளரும். இம்மூன்றுமே மேற்காணும் 'என்ட்ரோபி' விதிக்கு எதிர்மாறாக இருக்கிறது. விதைகளுக்கு உள்ளே ஒளித்துவைக்கப்படும் ஆற்றல் நமக்கு மிகுந்த ஆச்சர்யம் தருகிறது. நம் வீட்டில் பப்பாளி வாங்குகிறோம் என வைத்துக்கொள்வோம். பப்பாளியை அறுத்துப் பார்த்தால் உள்ளே ஒரு விதையும் இல்லை. மரபணு மாற்றம் செய்யப்பட்டு, விதைகள் நீக்கப்படுகின்றன. விதைகள் இல்லையேல் அது மலட்டுத்தன்மை உடையதாக இருக்கிறது. பழங்கள், முட்டை என அனைத்தும் மலட்டுத்தன்மை உடையனவாக இருப்பதால், இவற்றை உண்ணும் நாமும் நம் ஆற்றலை இழந்துகொண்டே இருக்கின்றோம். இன்று நம்மைச் சுற்றிப் பார்க்கும் 'செயற்கை கருத்தரிப்பு மையங்களே' இவற்றுக்குச் சான்று. ஒரு காலத்தில் செயற்கைக் கருத்தரிப்பு மையத்திற்குச் செல்வதே குற்றம் என்று கருதப்பட்டது. ஆனால், இன்று அதுவே நாகரீகம் மற்றும் பெருமிதம் என்றாகிவிட்டது. நம் பெண்களின் குழந்தை ஆசையை வியாபாரமாக்கிவிடுகின்ற இந்த மருத்துவமனைகள். இன்றைய நற்செய்தியில் வரும் விதைகள் ஆற்றல் மிக்கவை. இறையாட்சியும் அப்படிப்பட்டதே. இறையாட்சி தன்னிலே மிகுந்த ஆற்றல் கொண்டது. இரண்டாவதாக, விதை வளரத் தொடங்கிவிட்டால் அது தொடர்ந்து வளர்ந்துகொண்டேதான் இருக்கும். அதன் வளர்ச்சியை நான் நிறுத்தவோ, தடுக்கவோ இயலாது. வளர்ந்துவிட்ட விதையை மீண்டும் சுருக்கி விதையாக்க முடியாது. இறையாட்சியின் நிலையும் அப்படித்தான். வளரத் தொடங்கிவிட்டால் அது தொடர்ந்து வளர்ந்துகொண்டே இருக்கும். மூன்றாவதாக, விதைகளை யாரும் கண்டுகொள்ளாவிட்டாலும் அவை வளர்கின்றன. காடுகளிலும் மலைகளிலும் உள்ள மரங்களே இவற்றுக்குச் சாட்சிகள். தோட்டக்காரர் இல்லாமலேயே, உரம் எதுவும் இடாமNலுயே தண்ணீர் எதுவும் பாய்ச்சாமலேயே மரங்கள் வளர்கின்றன. இறையாட்சியும் அப்படியே! இன்றைய முதல் வாசகத்தில் (காண். எசே 17:22-24), இஸ்ரயேல் மக்களை கேதுரு மரத்திற்கு ஒப்பிட்டு இறைவாக்குரைக்கின்றார் எசேக்கியேல். இஸ்ரயேல் என்னும் இனம் அக்கால மக்களின் நடுவில் ஒரு சிறிய நுனிக் கிளை போல இருக்கின்றது. வலுவற்றதாகவும், காற்றால் ஆட்டுவிக்கப்படுவதாகவும் இருக்கிறது. ஆனால், கடவுளின் கரம் பட்டவுடன், கடவுள் அதை எடுத்து நட்டவுடன் அது வளரத் தொடங்குகிறது. அனைத்து வகைப் பறவைகளும் வந்து தங்கும் அளவுக்குப் பெரிய மரமாக வளர்கின்றது. இரண்டாம் வாசகத்தில் (காண். 2 கொரி 5:6-10), புனித பவுல், 'நாம் காண்பவற்றின் அடிப்படையில் அல்ல. மாறாக, நம்பிக்கையின் அடிப்படையிலேயே வாழ்கிறோம்' என எழுதுகின்றார். விதைக்குள் நடக்கும் வளர்ச்சி காணக்கூடியது அல்ல. மாறாக, காண இயலாத தளத்திலேயே அதன் வளர்ச்சியும் இயக்கமும் இருக்கிறது. ஆக, தடுப்பூசி, விதை, கடுகு விதை, கேதுரு மரம் ஒரு பக்கம். சுடுதண்ணீர், பிரச்சினைகள், மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகள். முந்தையவற்றில் வளர்ச்சி உண்டு. பிந்தையதில் வளர்ச்சி இல்லை. இறையாட்சி முந்தையது சார்ந்தது. இன்றைய பதிலுரைப்பாடலின் (காண். திபா 92) ஆசிரியர், நம் ஒவ்வொருவரையும் மரம் என உருவகப்படுத்துகின்றார்: 'நேர்மையாளர் பேரீச்சை மரமெனச் செழித்தோங்குவர். லெபனோனின் கேதுரு மரமெனத் தழைத்து வளர்வர் ... அவர்கள் முதிர் வயதிலும் கனி தருவர். என்றும் செழுமையும் பசுமையுமாய் இருப்பர்.' நம்மைச் சுற்றி நிற்கும் மரங்கள் நமக்கு இறையாட்சியின் வளர்ச்சியையும், நாம் மேற்கொள்ள வேண்டிய வளர்ச்சியையும் நினைவூட்டுவனவாக!