இவ் மறையுரையை வழங்குபவர்

அருட்பணி.இயேசு கருணாநிதி
Archbishop’s House, K. Pudur, Madurai 625 007, India
Email: yesu@live.in

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)









ஆண்டவரின் விண்ணேற்றப் பெருவிழா

ஆண்டவரின் உடனிருப்பும் செயலாற்றுதலும்

திருத்தூதர் பணிகள் 1:1-11
எபேசியர் 4:1-13
மாற்கு 16:15-20

'ஆண்டவராகிய இயேசு, மகிமையின் மன்னர், பாவத்தையும் இறப்பையும் தோற்கடித்த வெற்றி வீரர், வானதூதர் வியப்புற வானங்களின் உச்சிக்கு ஏறிச் சென்றார். இவ்வாறு அவர் சென்றது எங்கள் தாழ்நிலையை விட்டு அகல வேண்டும் என்பதற்காக அன்று. மாறாக, எங்கள் தலைவரும் முதல்வருமாகிய அவர் முன்னரே சென்ற அவ்விடத்திற்கு அவர் உறுப்பினர்களாகிய நாங்களும் அவரைப் பின் தொடர்ந்து செல்வோம் என்று நம்பிக்கை கொள்வதற்காகவே' புனித அகுஸ்தினாரின் மேற்காணும் வார்த்தைகள் இன்றைய திருப்பலியின் தொடக்கவுரையாக அமைந்து, இன்றைய நாளின் முக்கியத்துவத்தை மிக அழகாக நமக்குக் காட்டுகின்றன. இயேசு திருத்தூதர்களை விட்டு மறைகின்றார். அல்லது இயேசு அவர்களிடமிருந்து மறைந்து விண்ணேற்றம் அடைகின்றார். ஒருவருடைய மறைவை நாம் கொண்டாட முடியுமா? நம்மோடு உடனிருந்து, நம்மை அழைத்து, தேர்ந்தெடுத்து, வழிகாட்டி, புதியதொரு வாழ்க்கையை அமைத்துக் கொடுத்து நம்மிடமிருந்து ஒருவர் மறைகின்றார் என்றால், அவருடைய மறைவை நாம் கொண்டாட முடியுமா? இந்த நாள்களில் நாம் எதிர்கொள்ளும் பெருந்தொற்று மிகப் பெரிய உளவியல் தாக்கத்தை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது. நம் அன்புக்குரியவர்கள் வேகமாக நம்மிடமிருந்து மறைந்துகொண்டிருக்கிறார்கள். இயேசுவின் உயிர்ப்புக்கும் விண்ணேற்றத்துக்கும் இடையே இருந்த நாற்பது நாள்கள் இடைவெளி கூட, ஒருவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படுவதற்கும், அவர் இறப்பதற்கும் இடையே இல்லை. நம் வாட்ஸ்ஆப் செயலியில் மற்றவர் வைக்க நாம் காணும் ஸ்டேடஸில் ஒரு டிக் டாக் சிரிப்பு வீடியோ கடந்து செல்வது போல, நம் அன்புக்குரியவர்கள் அடுத்தடுத்த நிழற்படங்களாகக் கடந்து செல்கிறார்கள். யாருக்கும் யாரிடமும் பேசப் பிடிக்கவில்லை. யாருக்கு யார் ஆறுதல் சொல்வது? எல்லார் வீட்டிலும் இழப்பு என்றால் யார் யாருக்கு தேற்றுதல்மொழி பகர முடியும்? கடந்த இரு வாரங்களுக்குள் நடந்த இருவரின் இறப்பு என்மேல் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திவிட்டது. கடந்த மாதம் 27ஆம் தேதி அருள்திரு டோமா ஜோஜி ரத்னாகர், விஜயவாடா மறைமாவட்ட அருள்பணியாளர், நேற்று (மே 12), அருள்திரு கிளமென்ட் ஃப்ராங், பெங்களுரு உயர்மறைமாவட்ட அருள்பணியாளர், இயற்கை எய்தினர். நான் புனே பாப்பிறை அருள்பணி பயிற்சி மையத்திற்கு 2000 ஆவது ஆண்டில் சென்றபோது முதன் முதலாகச் சந்தித்த வேற்று மாநிலத்தவர் ரத்னாகர். ரொம்ப ஸ்டைலாக இருப்பார். அன்று தொடங்கிய எங்கள் நட்பு உரோமையில் நான் பயின்றபோதும் தொடர்ந்தது. தன் படிப்புடன் இணைந்து எப்போதும் தன் குடும்பத்தையும் சிந்திப்பவர். வந்த புதிதில், தனக்கு இங்கு கிடைக்கும் நல்ல உணவு தன் தங்கைக்கும் தாய்க்கும் கிடைக்காதே என்று புலம்பிக்கொண்டு, வெறும் தட்டுடன் சாப்பாட்டு அறையில் அமர்ந்திருப்பார். கடந்த ஆண்டுதான் தன் முனைவர் பட்ட படிப்பை முடித்து தன் ஊர் திரும்பினார். நிறையப் பணி செய்ய வேண்டும் என்ற ஆர்வம் கொண்டவர். கிளமென்ட்-ஐ நான் முதன்முதலாக உரோமையில் உள்ள பாப்பிறை விவிலியக் கழகத்தில் சந்தித்தேன். நான் அட்மிஷன் போடச் சென்ற அதே நாளில் அவரும் வந்திருந்தார். 'தமிழாப்பா நீ?' என்று கேட்டு, மிக அழகாகப் புன்முறுவல் செய்தார். 'நாம நல்லாப் படிச்சு தமிழ்த்திருச்சபைக்கு நிறையச் செய்யணும்!' என்று சொன்னார். என்னைவிட வயதில் மூத்தவர். அவருடைய குடும்பம் அறிமுகம் இல்லை. எனக்கு அருகில் வகுப்பில் அமர்ந்திருப்பார். ஜெகன், அந்தோனிசாமி, கிளமென்ட், நவீன், நான் என்னும் ஐவர் அணி இணைந்துதான் தினமும் கஃபேடேரியா செல்வோம். ஓடிக்கொண்டே இருப்பார். தன் பங்குப் பணிகள் அனுபவம் பற்றியும் பகிர்வார். கிடைக்கின்ற கொஞ்ச நேரத்தையும் நூலகத்தில் செலவிடுவார். கடந்த சில வாரங்களுக்கு முன்னர்தான் தன் சொந்த மறைமாவட்டம் திரும்பினார். விவிலியத்தைக் கற்பிப்பதில் நிறைய ஆர்வம் கொண்டிருந்தார். விவிலிய மற்றும் மேற்கத்தேய மொழிகளை நன்கு கற்றவர். நிறையப் பயணம் செய்தவர். திருஅவை மேல் மிகுந்த பற்றுக்கொண்டவர். அன்னை கன்னி மரியா மேல் அவர் கொண்டிருந்த அதீதப் பற்றுறுதியால் என்னவோ, பாத்திமா அன்னை திருநாள் அன்றே விண்ணகம் திரும்பிவிட்டார். நிற்க. தங்களுடைய தலைவரும் போதகரும் ஆண்டவருமான இயேசு தங்களை விட்டு மறைந்ததைத் திருத்தூதர்கள் எப்படி எடுத்துக்கொண்டார்கள்? 'அவர்கள் வானத்தை அண்ணாந்து பார்த்துக்கொண்டே நின்றார்கள்' என்று லூக்கா பதிவு செய்கின்றார். நம் அன்புக்குரியவர்கள் மண்ணுக்குள் புதைக்கப்பட, நாமோ குனிந்து பார்த்துக்கொண்டிருக்கிறோம். அண்ணாந்து பார்ப்பதிலும், குனிந்து பார்ப்பதிலும் இருக்கும் உணர்வு ஒன்றுதான். 'எப்படியாகிலும் அவரை நான் எட்டிப் பிடித்துவிட மாட்டேனா?' என்ற ஏக்கம்தான் அப்போது திருத்தூதர்கள் பார்வையில் இருந்தது. இன்று நம் பார்வையில் இருக்கிறது. 'அவர் விண்ணேறிச் சென்றவாறே மீண்டும் திரும்பி வருவார்!' என்று திருத்தூதர்களுக்கு வானதூதர்கள் ஆறுதல் மொழி சொல்கின்றனர். நாமோ இன்று ஆறுதலின்றி நிற்கின்றோம். இயேசுவின் விண்ணேற்றம் மூன்று நிலைகளில் முக்கியத்துவம் பெறுகிறது: (அ) அவர் தன் மண்ணக வாழ்வுப் பயணம் முடித்து தந்தையின் இல்லம் திரும்புகிறார். (ஆ) திருஅவையின் பணி இங்கே தொடங்குகிறது. (இ) தூய ஆவியார் உடனிருந்து திருஅவையை வழிநடத்துகின்றார். தன் விண்ணேற்றத்தின் கொடையாக இயேசு, அவர் வாக்களித்தவாறே, தூய ஆவியாரை அனுப்புகிறார். விண்ணேற்றம் திருத்தூதர்களுக்குச் சொன்ன செய்தி என்ன? இன்றைய முதல் வாசகத்தில், லூக்கா பதிவு செய்வது போல, அவர்கள் எருசலேமை விட்டு நீங்குதல் கூடாது. மேலும், அவர்கள் கடவுளது வல்லமை பெற்று எருசலேமிலும் யூதேயா, சமாரியா முழுவதிலும் சாட்சியாக இருப்பார்கள். இயேசு பணியை நிறுத்திய இடத்திலிருந்து திருத்தூதர்கள் தங்கள் பணியைத் தொடங்க வேண்டும். இன்றைய நற்செய்தி வாசகத்தில் மாற்கு நற்செய்தியாளரும் அப்படியே பதிவிடுகிறார்: 'இயேசு விண்ணேற்றம் அடைந்த பின்னர் அவர்கள் புறப்பட்டுச் சென்று எங்கும் நற்செய்தியைப் பறைசாற்றினர்.' விண்ணேற்றம் நமக்குச் சொல்லும் செய்தி என்ன? (அ) இயேசுவின் உடனிருப்பு. 'கடவுள் நம்மோடு' என்று இறங்கி வந்தவர், 'கடவுள் நமக்காக' என்று ஏறிச்செல்கின்றார். அவர் நம்மை விட்டு நீங்கிவிடவில்லை. இதையே இன்றைய இரண்டாம் வாசகத்தில், புனித பவுல், 'எங்கும் நிறைந்திருக்கும்படி எல்லா வானுலகங்களுக்கும் மேலாக ஏறிச் சென்ற அவரே சிலரைத் திருத்தூதராகவும், சிலரை இறைவாக்கினராகவும், சிலரை நற்செய்தியாளர்களாகவும், ஆயர்களாகவும், போதகர்களாகவும் ஏற்படுத்தினார்' என எழுதுகிறார். ஆக, ஆண்டவர் எப்போதும் எங்கும் நிறைந்திருக்கிறார். அவர் தன் உடனிருப்பை பல்வேறு நபர்கள் வழியாகவும், திருஅவையில் உள்ள தன் இருத்தலின் வழியாகவும் வெளிப்படுத்திக்கொண்டே இருக்கின்றார். (ஆ) இயேசுவின் செயல்பாடு. நற்செய்தி வாசகத்தில், 'ஆண்டவரும் உடனிருந்து செயல்பட்டு, நிகழ்ந்த அரும் அடையாளங்களால் அவர்களுடைய வார்த்தையை உறுதிப்படுத்தினார்' என மாற்கு பதிவு செய்கின்றார். 'உடனிருப்பு' என்பது இருத்தல் என்றால், 'செயல்படுதல்' என்பது இயக்கம். ஆண்டவர் செயல்படுகின்றார். எப்படி? நம் செயல்கள் வழியாக. நம் செயல்கள் அவருடைய செயல்களாக இருந்தால் அவர் அவற்றை உறுதிப்படுத்துகின்றார். அவற்றுக்குச் சான்றாக நிற்கின்றார். எளியோரைத் தூக்கி விடுவதில், உள்ளம் உடைந்தோரைக் குணமாக்குவதில், ஒருவர் மற்றவரைப் புரிந்துகொள்வதில், வாழ்வின் சின்னஞ்சிறிய நிகழ்வுகளில் அவர் நம்மோடு செயல்படுகின்றார். ஆக, 'உடனிருப்பும்' 'செயல்படுதலும்' ஆண்டவர் நமக்குத் தருகின்ற செய்தி. உடனிருப்பு மட்டும் இருந்து செயல்படுதல் இல்லை என்றால், அடுத்தவர் நமக்குச் சுமையாகி விடுவார். செயல்படுதல் மட்டும் இருந்து உடனிருப்பு இல்லை என்றால், அடுத்தவர் நம்மை எண்ணத்தை விட்டு எளிதாக மறைந்துவிடுவார். இரண்டும் இணையும்போது, அங்கே வல்ல செயல் (அரும் அடையாளம்) நடக்கிறது: பேய்கள் ஓட்டப்படுகின்றன. புதிய மொழிகள் பேசப்படுகின்றன. பாம்புகள் கைகளால் பிடிக்கப்படுகின்றன. கொல்லும் நஞ்சு தீங்கிழைப்பதில்லை. நலமற்றவர்கள் மேல் கைகள் வைக்கப்பட்டவுடன் அவர்கள் நலம் பெறுகின்றனர். மறைதல் என்றால் இறைமை. இதையே பவுலும், 'நாங்கள் காண்பவற்றை அல்ல, நாங்கள் காணாதவற்றை நோக்கியே வாழ்கிறோம். காண்பவை நிலையற்றவை. காணாதவை என்றும் நிலைத்திருப்பவை' (காண். 2 கொரி 4:18) என எழுதுகின்றார். காணக்கூடிய நிலையில் இருந்த இயேசு திருத்தூதர்களின் பார்வையிலிருந்து மறைகின்றார். நிலையற்ற தன்மையிலிருந்து நித்தியத்திற்கு இயேசு கடந்து செல்கின்றார். காண முடியாத நிலைக்குக் கடந்து செல்லும் அனைவரும் நித்தியத்திற்குள் கடந்து செல்கின்றனர். இனி இவர்கள் காலத்திற்கும் இடத்திற்கும் அப்பாற்பட்டவர்கள். எனவே, இவர்களால் எந்தக் காலத்திற்குள்ளும் எந்த இடத்திற்குள்ளும் இனி நுழைய முடியும். ஆகையால்தான், உயரே ஏறுகின்ற ஆண்டவர் குறித்து, 'அல்லேலூயா' பாடி அக்களிக்கின்றார் திருப்பாடல் ஆசிரியர் (காண். 47). இறுதியாக, 'எங்கள் கண்கள் முன்பாக இயேசு எடுத்துக்கொள்ளப்பட்டார்' எனக் கூறும் முதல் வாசகம், அதே கண்களை நாம் இந்த உலகத்தின்மேல் பதிக்கவும், 'கிறிஸ்துவிடம் காணப்பட்ட நிறைவைப் பெறும் அளவுக்கு நாம் முதிர்ச்சியடைவோம்' என்று சொல்லும் இரண்டாம் வாசகம், விண்ணேற்றம் என்பது நாம் அடையும் நிறைவு என்றும், இன்றே நம் எண்ணங்களும் செயல்களும் முதிர்ச்சி பெற்று மேன்மையுடன் இருக்க வேண்டும் எனவும் ஊக்கம் தருகிறது. ஆண்டவரின் உடனிருப்பும், செயலாற்றுதலும் இன்றும் என்றும் நம்மோடு! நம்மைவிட்டு மறைந்து இறைமையில் கலக்கும் நம் அன்புக்குரியவர்களின் உடனிருப்பும் செயலாற்றுதலும் என்றும் நம்மோடு! இன்று விண்ணேற்றம் அடையும் இறைவன் தன் அரும் அடையாளங்களால் பெருந்தொற்றிலிருந்து நம்மை விடுவிப்பாராக! மனுக்குலத்தின் துன்பத்தை அவர் அங்கிருந்து பார்க்கவில்லை. மாறாக, இங்கே நம்மோடு, நம்மில் ஒருவராக அதை அனுபவித்தார். அவர் நமக்காக விண்ணேறிச் செல்தல் சிறப்பு. அருள்திரு யேசு கருணாநிதி மதுரை உயர்மறைமாவட்டம்