இவ் மறையுரையை வழங்குபவர்

அருட்பணி.இயேசு கருணாநிதி
Archbishop’s House, K. Pudur, Madurai 625 007, India
Email: yesu@live.in

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)









உயிர்ப்புக் காலம் 5ஆம் ஞாயிறு

இணைந்திருத்தல்

திருத்தூதர் பணிகள் 9:26-31
1 யோவான் 3:18-24
யோவான் 15:1-8

இன்று மனித வாழ்வியல் கோட்பாடுகளில் பரவலாகப் பேசப்படும் ஒரு கருத்துரு, 'தனி ஓநாயாக இருத்தல்' ('being a loner' or 'being a lone wolf') அது என்ன தனி ஓநாய்? சர்க்கஸ் விளையாட்டுகளில் சிங்கம் பழக்கப்படுத்தப்பட்டு நிறைய விளையாட்டுகள் விளையாடுவதை நாம் பார்த்திருப்போம். அவ்வாறே, புலி, குரங்கு, யானை என நிறைய விலங்குகள் மனிதர்களால் பழக்கப்படுகின்றன. ஆனால், பழக்கப்படுத்திவிட முடியாத ஒரு விலங்கு ஓநாய். எந்த ஒரு சர்க்கஸ் விளையாட்டிலும் நாம் இதைப் பார்த்திருக்கவே முடியாது. ஏனெனில், ஓநாய் தனக்கென்று உள்ள இயல்பை எந்தச் சூழலிலும் மாற்றிக்கொள்ளாது. 'தனி ஓநாயாக இருத்தல்' என்னும் கருத்துருவைப் பின்பற்றுபவர் யாரையும் சாராமல், தன் இயல்பின்படி தனித்திருப்பார். பிறருடன் வெறும் வணிகத்திற்காக மட்டுமே உறவாடுவாரே தவிர மற்ற எந்த உறவையும் வளர்த்துக்கொள்ள மாட்டார். 'நாம் யாருடைய துணையும் இல்லாமல் வாழ முடியும்' என்பதும், 'சமூகம் என்பது ஒரு பொய். அது புறக்கணிக்கப்பட வேண்டியது. அதன் கொள்கைகள் இடத்திற்கும் நேரத்திற்கும் ஏற்ப மாறக்கூடியவை' என்பதும் இவர்களுடைய வாதம். மொத்தத்தில், மற்றவர்களோடு இணைந்திருத்தல் என்பது நேர விரயம் என்பதும், பயனற்றது என்பதும் இவர்களுடைய கருத்து. இக்கருத்துரு மிக வேகமாக தன் தாக்கத்தை இன்றைய இளவல்கள் நடுவில் ஏற்படுத்திக்கொண்டு வருகிறது.

  'இணைந்திருத்தல்' என்பது தேவையற்றது என்று முன்மொழியப்படும் இவ்வுலகிற்கு, 'என்னோடு இணைந்திருங்கள்' என்று இயேசு சொல்வது ஏற்புடையதாக இருக்குமா?

'இணைந்திருத்தல்' என்னும் சொல்லை மையமாக வைத்து இன்றைய நற்செய்தி வாசகத்தை மூன்று கேள்விகளாகப் பிரிக்கலாம்: (அ) யாரோடு இணைந்திருத்தல்? (ஆ) எப்படி இணைந்திருத்தல்? (இ) எதற்காக இணைந்திருத்தல்?

(அ) யாரோடு இணைந்திருத்தல்?

'நான் உங்களோடு இணைந்திருப்பது போல நீங்களும் என்னோடு இணைந்திருங்கள்' என்று தன் சீடர்களிடம் சொல்கின்றார் இயேசு. 'உங்களோடு நான் இணைந்திருப்பது போல' என்று இயேசு சொல்வதை இயேசுவின் மனுவுருவாதலின் பின்புலத்தில் நாம் புரிந்துகொள்ள முடியும். புனித பவுல் குறிப்பிடுவது போல, 'கடவுள் வடிவில் விளங்கிய அவர், கடவுளுக்கு இணையாயிருக்கும் நிலையை வலிந்து பற்றிக்கொண்டிருக்க வேண்டியதொன்றாகக் கருதாமல் ... தம்மையே வெறுமையாக்கி அடிமையின் வடிவை ஏற்று மனிதருக்கு ஒப்பாகி' (காண். பிலி 2:6-7) மனுக்குலத்தோடு தன்னையே இணைத்துக்கொள்கின்றார் இயேசு. ஆக, இயேசுவின் இணைந்திருத்தலில் விருப்பம் இருக்கின்றது. ஏனெனில், அவரே விரும்பி, எந்தவொரு வற்புறுத்தலுமின்றி, இணைந்திருக்குமாறு நம் நடுவில் வருகின்றார். அதில் இயல்பு விடுத்தல் அல்லது துறத்தல் இருக்கின்றது. மேலும், அதில் இன்னொரு இயல்பு ஏற்றல் அல்லது அந்த இயல்பு எடுப்பதில் உள்ள துன்பம் ஏற்றல் இருக்கின்றது. சீடர்கள் இயேசுவோடு இணைந்திருத்தல் என்பதும் அப்படியே இருக்க வேண்டும்: தாங்களாகவே விரும்பி, தங்கள் இயல்பை விடுத்து, இயேசுவின் இயல்பை எற்பதன் வழியாக. இன்றைய முதல் வாசகத்தில், தமஸ்கு நகருக்குச் செல்லும் வழியில் தடுத்தாட்கொள்ளப்பட்ட பவுலை (சவுலை) தொடக்கத் திருஅவையினர் ஏற்றுக்கொள்ள அஞ்சுகின்றனர். ஆண்டவரோடு அவர் இணைந்துள்ள நிலையை அவர்களுக்கு எடுத்துச் சொல்லி, சீடர்களோடு இணைக்க முன்வருகின்றார் பர்னபா. ஆகையால்தான் இந்த நிகழ்வை, பவுலின் மூன்றாவது அழைத்தல் என்று அறிஞர்கள் சொல்கின்றனர். முதலில், தாயின் வயிற்றில் பவுலை அழைக்கின்றார் கடவுள் (காண். கலா 1:15). இரண்டு, தமஸ்கு வழியில் (காண். திப 7), மூன்று, பர்னபா வழியாக. ஆக, இயேசுவோடு இணைந்திருக்கும் எவரும் ஒருவர் மற்றவரை அந்நியப்படுத்தவோ, அச்சம் கொண்டு விலக்கி வைக்கவோ இயலாது. 

(ஆ) எப்படி இணைந்திருத்தல்?

தனக்கும் தன் சீடர்களுக்கும் உள்ள இணைந்திருத்தல் எப்படி இருக்க வேண்டும் என்பதை இயேசு ஓர் உருவகம் வழியாக விளக்குகின்றார். கிளைகள் திராட்சைக் கொடியோடு இணைந்திருப்பது போல இணைந்திருக்க வேண்டும். இங்கே இயேசு முதலில், 'நானே திராட்சைக் கொடி' என்று தன்னறிக்கை செய்கின்றார். முதல் ஏற்பாட்டில், இறைவாக்கினர் எசாயா, இஸ்ரயேல் மக்களை, 'அன்பரின் திராட்சைத் தோட்டம்' என வர்ணித்து, இஸ்ரயேல் என்னும் திராட்சைத் தோட்டம் கனி தர மறுத்ததைக் குறித்துப் புலம்பி, திராட்சைத் தோட்டம் அழிக்கப்படும் என எச்சரிக்கின்றார் (காண். எசா 5:1-7). கிளைகள் கொடியோடு இணைந்திருக்கும்போது, தங்களுடைய இருத்தலையும், பாதுகாப்பையும், ஊட்டத்தையும் கிளைகளிடமிருந்து பெற்றுக்கொள்கின்றன. கொடியின் இயல்பு ஒன்றாகவும் கிளையின் இயல்பு இன்னொன்றாகவும் இருந்தால் இரண்டும் அழிந்துவிடுவதற்கான வாய்ப்பு இருக்கிறது. ஆகையால்தான், பூச்சியால் ஒரு கிளை அரிக்கப்பட்டாலும் ஒட்டுமொத்த மரமும் அரிக்கப்பட்டுவிடுகிறது. கிளைகள் திராட்சைக் கொடியோடு இணைந்திருத்தல் அவர்கள் பெறும் உரிமை மட்டுமல்ல. மாறாக, அதில் நிறைய பொறுப்புணர்வும் உள்ளது. இன்றைய இரண்டாம் வாசகத்தில், 'கட்டளைகளைக் கடைப்பிடித்தல் என்பது கடவுளை அன்பு செய்வது என்றும், அன்புக் கட்டளையைப் பின்பற்றுவதன் வழியாக நாம் அவரோடும் அவர் நம்மோடும் இணைந்திருக்கிறார்' எனத் தன் குழுமத்திற்கு எழுதுகின்றார் யோவான். ஆக, அன்பு செய்வதன் வழியாக நாம் ஒருவர் மற்றவரோடும் இறைவனோடும் இணைந்திருக்கின்றோம்.

(இ) எதற்காக இணைந்திருத்தல்?

இணைந்திருத்தல் என்பதில் ஒரு நோக்கம் இருக்கிறது. நோக்கம் இல்லாமல் இணைந்திருத்தல் சுமையாக மாறிவிடும். எடுத்துக்காட்டாக, குழியில் ஒருவர் விழுந்து கிடக்கிறார் என்றால், அவரைத் தூக்கிவிடுவதற்காக நான் என் கரங்களை அவருடைய கரங்களோடு இணைக்கின்றேன். கரங்களின் இணைந்திருத்தலால் அவர் காப்பாற்றப்படுகின்றார். அவர் குழியை விட்டு மேலே வந்த பின்னரும் கரங்களை இணைத்துக்கொண்டே இருந்தால் நாங்கள் ஒருவர் மற்றவருக்குச் சுமையாகிவிட வாய்ப்பு உள்ளது. கிளைகள் கொடியோடு இணைந்திருத்தல் கனி தருதல் என்னும் நோக்கத்திற்காகவே. இந்த நோக்கம் நிறைவேறவில்லை என்றால், கிளைகள் கொடிக்கு அல்லது மரத்திற்குப் பாரமாகிவிடும். 'ஒருவர் என்னுடனும் நான் அவருடனும் இணைந்திருந்தால் அவர் மிகுந்த கனி தருவார். என்னை விட்டுப் பிரிந்து உங்களால் எதுவும் செய்ய இயலாது' என்கிறார் இயேசு. இங்கே, இணைந்திருத்தல் கனி தருவதற்காக என்று சொல்வதோடு, இணைந்திருக்க மறுத்து, பிரிந்து நிற்றல் அழிவுக்காக என்று மறைமுமாக எச்சரிக்கின்றார். ஏதென்ஸ் நகரில் உரையாற்றுகின்ற பவுல், இதையே, 'அவர் நம் ஒவ்வொருவருக்கும் அருகிலேயே உள்ளார். அவரைச் சார்ந்துதான் நாம் வாழ்கின்றோம், இயங்குகின்றோம், இருக்கின்றோம்' (காண். திப 17:28) என மொழிகின்றாhர். கனி தருதல் என்பதில் மரம் ஒரு பேறுகால வேதனை அடைகிறது என்று சொல்ல முடியும். எடுத்துக்காட்டாக, தென்னை மரம் தான் உறிஞ்சுகின்ற தண்ணீரை, எடுத்துக்கொள்கின்ற உரத்தை அப்படியே தேங்காய் அல்லது இளநீர் என மாற்றித் தருகின்றது. தேங்காயாக மரம் அவற்றை மாற்றவில்லை என்றால், அது 'வெற்று மரம்' என்று கருதப்பட்டு, இடத்தை அடைத்துக்கொள்ளாமல் இருக்குமாறு அகற்றப்படுகிறது.

இறுதியாக,

இன்றைய நம் உலகம் சொல்வது போல, 'தனி ஓநாயாக இருத்தலா?' அல்லது

இன்று நம் இயேசு சொல்வது போல, 'அவரோடு இணைந்திருத்தலா?' 

என்ற கேள்வி நம் முன் எழுகின்றது.

தனித்திருத்தலில் ஒருவர் தனக்காக என்று சுருங்கிவிடுகின்றார்.

இணைந்திருத்தலில் ஒருவர் மற்றவருக்காக என்று விரித்துக் கொடுக்கின்றார்.

இன்று பாதுகாப்பு மற்றும் உடல்நலம் காரணங்களுக்காக, 'தனித்திருத்தலும், தள்ளி இருத்தலும்' அறிவுரையாக முன்மொழியப்படுகின்றன. நாம் தனித்திருக்கக் காரணம் நாம் எல்லாரும் இணைந்திருக்கவே என்பது நமக்கு வியப்பூட்டுகிறது.

இணைத்திருத்தல் இனிமை.

அது இறைவன் எடுக்கும் முயற்சி.

இதையே இன்றைய பதிலுரைப்பாடலில் (காண். திபா 22), 'இதை அவரே செய்தார்' என அறிக்கையிடுகின்றார்.