இவ் மறையுரையை வழங்குபவர்

அருட்பணி.இயேசு கருணாநிதி
Archbishop’s House, K. Pudur, Madurai 625 007, India
Email: yesu@live.in

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)









உயிர்ப்புக் காலம் 4ஆம் ஞாயிறு

ஆண்டவரால் இது நிகழ்ந்துள்ளது!

திப 4:8-12
1 யோவா 3:1-2
யோவா 10:11-18

இன்றைய பதிலுரைப்பாடல் (திபா 118) ஹல்லேல் (புகழ்ச்சி) பாடல் வகையைச் சார்ந்தது. இங்கே பாடலாசிரியர், தன் வாழ்வின் எதார்த்தங்களைக் காண்கிறபோது, 'ஆண்டவரால் இது நிகழ்ந்துள்ளது. நம் கண்களுக்கு இது வியப்பாயிற்று' என அக்களிக்கின்றார். தன் வாழ்க்கையை நம்பிக்கைக் கண்கள் கொண்டு பார்க்கும் ஒருவரே இப்படிப் பாட முடியும்.

முதல் வாசகத்தில், நாம் பேதுரு மற்றும் யோவானின் விசாரணை நிகழ்வை வாசிக்கின்றோம். 'நாங்கள் செய்த நற்செயல்' என்று தாங்கள் மாற்றுத்திறனாளி ஒருவருக்குச் செய்த நலன் குறித்துப் பேசுகின்றார் பேதுரு. 'நற்செயல்' என்பது இயேசுவின் செயலைக் குறிப்பதாக திப 10:38இல் வாசிக்கின்றோம். இயேசுவின் பெயரால் இப்போது திருத்தூதர்கள் நற்செயல் செய்யத் தொடங்கியுள்ளனர். மேலும், நலம் பெறுவதற்கும் (மீட்பு பெறுவதற்கும்) இயேசுவின் பெயரைத் தவிர வேறு பெயர் இல்லை என்றும் அறிக்கையிடுகின்றனர். இயேசுவின் உயிர்ப்பு அனுபவத்திற்குப் பின்னர், அனைத்தையும் புதியனவாகப் பார்க்கத் தொடங்குகின்றனர் திருத்தூதர்கள். 

இரண்டாம் வாசகத்தில், 'நம் தந்தை நம்மிடம் எத்துணை அன்பு கொண்டுள்ளார் என்று பாருங்கள்' என்று கடவுளின் அன்பு பற்றித் தன் குழுமத்திற்கு நினைவூட்டுகின்றார் யோவான். மேலும், கடவுளுக்கு எதிராக இருக்கின்ற உலகம் அவரை அறிந்துகொள்ளவில்லை என்றும் சொல்வதன் வழியாக, அறிதல் வழியாகவே அன்பு செய்யவும், அன்பு செய்யப்படவும் முடியும் என்கிறார் யோவான்.

நற்செய்தி வாசகத்தில், இயேசுவின் 'நானே' வாக்கியங்களில் ஒன்றை வாசிக்கின்றோம். 'நல்ல ஆயன் நானே' என்று தன்னை முன்வைக்கின்றார் இயேசு. தன்னை நல்ல ஆயன் என்று மூன்று நிலைகளில் முன்னிறுத்துகின்றார் இயேசு: 

(அ) தன் ஆடுகள் உயிர் பெறுவதற்காக ஆயன் தன் உயிரைக் கையளிக்கத் தயாராக இருக்கின்றார். உயிரைக் கையளித்தல் என்பது இயேசுவின் வாழ்வில் வெறும் வாக்குறுதியாக நில்லாமல், சிலுவையில் அரங்கேறும் மேலான செயலாகவும் இருக்கிறது. இப்படிப்பட்ட அர்ப்பணம் 'கூலிக்கு மேய்ப்பவர்களிடம்' இருப்பதில்லை. ஏனெனில், அவர்களுக்கு ஆடுகளின்மேல் உரிமை இல்லை. ஆடுகளுக்கும் அவர்களுக்குமான உறவு அவர்களை மையமாக வைத்து அல்ல, மாறாக, ஆடுகளை மையமாக வைத்தே அங்கு நிகழ்கிறது. ஆனால், ஆயன்-ஆடுகள் உறவில், ஆடுகளும் ஆடுகளின் நலனுமே முதன்மை பெறுகின்றன. 

(ஆ) கடவுளுக்கும் இயேசுவுக்கும் சீடர்களுக்கும் இருக்கின்ற இணைப்பின் அடிநாதமாக இருப்பது அறிதல். எபிரேய விவிலியத்தில், 'அறிதல்' என்றால் 'உறவு கொள்தல்' என்பது பொருள். தந்தைக்கும் இயேசுவுக்கும் இடையே இருக்கும் அறிதல் என்னும் வலைப்பின்னல் நீண்டுகொண்டே போகிறது. ஆக, இந்த வலைப்பின்னலில் அல்லது செடி-கொடி போன்ற இணைந்திருத்தலில் ஆடுகள் வாழ்வு பெறுகின்றன.

(இ) இயேசு தன் உயிர்ப்பு பற்றிப் பேசுகின்றார்: 'நான் உயிரைக் கொடுக்கிறேன். அதை மீண்டும் பெற்றுக் கொள்ளவே. கொடுக்கிறேன்'. இயேசுவின் வாழ்வின் இலக்காக இருந்தது அவருடைய உயிர்ப்பே. இந்த இடத்தில் இயேசு தன் உயிர்ப்பைப் பற்றிப் பேசுவதன் வழியாக, தான் இறப்பின்மேல் கொண்டிருக்கின்ற வெற்றியைப் பற்றிக் குறிப்பிடுவதோடல்லாமல், தன்னோடு இருக்கும் அனைவருக்கும் என்றும் வாழ்வு என்று உறுதியளிக்கின்றார்.

பல நேரங்களில், நாம் நல்லாயன் போல இருக்க விரும்புகின்றோம். இன்று சற்று மாற்றாக, நல்லாயன் கழுத்தில் கிடக்கும் ஆடு போல இருக்க முயற்சி செய்வோம். அவரின் கழுத்தில் படுத்திருக்கும் ஆடு, அனைத்தையும் ஆண்டவரின் கண் கொண்டே பார்க்கும். அவரின் பாதுகாப்பையும், உடனிருப்பையும், அவர் தரும் நலத்தையும் பெற்றுக்கொள்ளும்.

உயிர்ப்புக் காலம் 4ஆம் ஞாயிற்றை, 'நல்லாயன் ஞாயிறு' என்று சிறப்பிக்கும் நாம், இறையழைத்தலுக்காகவும் இன்று சிறப்பாக செபிக்கின்றோம். இறைவன் தன் இதயத்துக்கேற்ற நல்ல தலைவர்களைத் தேர்ந்துகொள்ளுமாறு அவரிடம் மன்றாடுவோம். மேலும், தேர்ந்துகொள்ளப்பட்ட தலைவர்கள் நல்லாயனின் தோள் தவழும் ஆடுகளாய் அவரோடு தங்களை இணைத்துக்கொள்ளவும் மன்றாடுவோம். 

அவரே ஆயன். அவராலேயே இது நிகழ்ந்துள்ளது. 'நம் கண்களுக்கு வியப்பாயிற்று!'