இவ் மறையுரையை வழங்குபவர்

அருட்பணி.இயேசு கருணாநிதி
Archbishop’s House, K. Pudur, Madurai 625 007, India
Email: yesu@live.in

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)









ஆண்டவரின் உயிர்ப்பு பெருவிழா (நள்ளிரவுத் திருப்பலி)

கல்லை நமக்கு யார் புரட்டுவார்?

விப 14:15-15:1
உரோ 6:3-11
மாற் 16:1-7

யாராவது ஒருவர் இறந்த செய்தி கேட்டால், நாம் உடனடியாக, அவர் இறந்தது நல்ல சாவா? அல்லது கெட்ட சாவா? எனக் கேள்வியெழுப்பி வரையறுக்க முயல்கிறோம். ஒரு மனிதரின் நல்ல சாவு என்பதை யூத சமயம் பின்வருமாறு வரையறுத்தது: இறக்கின்ற மனிதர் நீண்ட நாள் வாழ்ந்தவராக இருக்க வேண்டும். அவருக்கென நிறைய வழிமரபை விட்டுச் செல்ல வேண்டும். அவருக்கென சொந்தமான கல்லறை இருக்க வேண்டும். மேற்காணும் மூன்று வரையறைகளின்படி பார்த்தால் இயேசுவின் சாவு கெட்ட சாவே. தன் சக சமயத்தவர்களின் பார்வையில் கெட்ட சாவையும், ஆள்வோரின் பார்வையில் பெருந்தண்டனையையும், சாமானியர்களின் பார்வையில் ஓர் அரசியல் மற்றும் சமூகப் படுகொலையையும் கண்ட இயேசு இன்று உயிர்த்துவிட்டார். 

'கிறிஸ்து உயிருடன் எழுப்பப்படவில்லை என்றால் நாங்கள் பறைசாற்றிய நற்செய்தியும் நீங்கள் கொண்டிருக்கிற நம்பிக்கையும் பொருளற்றதாயிருக்கும்' (காண். 1 கொரி 15:14) என்ற புனித பவுலின் கூற்றுப்படி, கிறிஸ்துவின் உயிர்ப்பே நம் நம்பிக்கையின் அடித்தளமாக இருக்கிறது. இந்த உயிர்ப்பை 'வெறும் வதந்தி' என்று இயேசுவின் எதிரிகள் பரப்பி விட்டதாகவும், அது இந்நாள் வரை யூதரிடையே பரவி இருப்பதாகவும் பதிவு செய்கின்றார் மத்தேயு (மத் 28:15). 

இயேசுவின் உயிர்ப்பு நம் நம்பிக்கையின் அடித்தளமா? அல்லது ஒரு வதந்தியா? 

இன்று நாம் எங்கு பார்த்தாலும் வைத்திருக்கும் கண்காணிக்கும் சிசிடிவி காமராக்கள் அன்று இயேசுவின் கல்லறைக்கு வெளியே பொருத்தப்பட்டிருந்தால் இயேசுவின் உயிர்ப்பை நாம் எளிதாக அறிந்திருக்கலாமே என்று சொல்கிறது நம் மூளை.  

ஆனால், மூளையையும் தாண்டிய விடயங்களை இதயம் நம்புகிறது என்ற கூற்றுக்கிணங்க உயிர்ப்பு என்னும் உண்மையை நம் இதயம் மூன்று நிலைகளில் நம்புகிறது: 

ஒன்று, உயிர்ப்பு கதையாடல்கள். இயேசுவின் உயிர்ப்பை ஒட்டி நிகழ்ந்த கதையாடல்கள் - மகதலா மரியா, தோமா, சீடர்கள், பேதுரு, எம்மாவு போன்ற கதையாடல்கள் - இயேசுவின் உயிர்ப்புக்குச் சான்றாக அமைகின்றன. அவை இயேசு உயிர்த்தார் என்பதைச் சொல்வதோடல்லாமல், இயேசு உயிர்த்தபோது அவர் எத்தகைய உடலைக் கொண்டிருந்தார், அந்த உடல் எப்படி பூட்டிய கதவுகளை ஊடுருவியது, அந்த உடல் எப்படி வழி நடந்தது, மீன் சாப்பிட்டது, தழுவிக்கொள்ளும் நிலையிலும் விரலை இடும் நிலையிலும் இருந்தது என்று பதிவு செய்கின்றன. 

இரண்டு, அறிக்கை கதையாடல்கள். தொடக்கத் திருஅவையில், திருமுழுக்கு பெறுகின்ற ஒவ்வொருவரும் இயேசுவின் உயிர்ப்பு பற்றிய நம்பிக்கையை அறிக்கை செய்தனர். இப்படிப்பட்ட நம்பிக்கை அறிக்கையை புனித பவுல் எழுதுகின்றார்: 'நான் பெற்றுக்கொண்டதும் முதன்மையானது எனக்கருதி உங்களிடம் ஒப்படைத்ததும் இதுவே: மறைநூலில் எழுதியுள்ளவாறு கிறிஸ்து நம் பாவங்களுக்காக இறந்து அடக்கம் செய்யப்பட்டார். மறைநூலில் எழுதியுள்ளவாறு மூன்றாம் நாள் உயிருடன் எழுப்பப்பட்டார்' (1 கொரி 15:3-4). இயேசுவின் உயிர்ப்பு என்பது ஓர் அறிக்கைக் கோட்பாடாகத் தொடக்கத் திருஅவையில் இருந்தது இயேசுவின் உயிர்ப்புக்கு இரண்டாவது சான்றாக அமைகின்றது. 

மூன்று, மாற்றக் கதையாடல்கள். அதாவது, இயேசுவின் திருத்தூதர்கள் ஒரு மாபெரும் மாற்றத்திற்கு ஆளாகிறார்கள். யூதர்களுக்கு அஞ்சி கதவுகளை அடைத்துக்கொண்டிருந்தவர்கள், தலைமைச்சங்கத்தையும் எதிர்த்து நிற்கும் அளவுக்குத் துணிவு பெறுகின்றனர். பெரிய மக்கள் கூட்டத்திற்கு கற்பிக்கின்ற அவர்கள், 'நீங்கள் நாசரேத்து இயேசுவைச் சிலுவையில் அறைந்தீர்கள். ஆனால், கடவுள் அவரை உயிர்த்தெழச் செய்தார். இதற்கு நாங்கள் சாட்சிகள்' என சான்று பகர்கின்றனர். 'உயிர்ப்புக்குப் பின் தோன்றிய இயேசுவைக் கண்ட திருத்தூதர்கள் புதிய மனிதர்களாக மாறுகின்றர். பயம், தயக்கம், கோபம் மறைந்து, நம்பிக்கை, துணிச்சல், மற்றும் மன்னிப்பு அவர்கள் உள்ளங்களில் பிறப்பதால் கிறிஸ்து திருத்தூதர்களின் உள்ளங்களில் உயிர்க்கிறார்' என்று கூறுகின்றார் இறையியலாளர் ஷில்லிபெக்ஸ். திருத்தூதர்களின் வாழ்வியல் மாற்றமே இயேசுவின் உயிர்ப்புக்குச் சான்றாக அமைகின்றது. 

ஈஸ்டர் திருநாளுக்கு அறிவியல் மற்றும் வரலாற்றுப் பூர்வமான பின்புலமும் உண்டு: 

உங்கர் விவிலிய அகராதி, 'ஈஸ்டர்' என்ற சொல் ஒரு ஆங்கிலோ-சாக்ஸன் சொல்லாடல் என்றும், இதன் மூலச் சொல் 'ஈஸ்த்ரா' என்ற வசந்தகாலத் தேவதையின் பெயர் என்றும், இந்த தேவதைக்கு ஒவ்வொரு ஆண்டின் பாஸ்கா காலத்திலும் பலிகள் செலுத்தப்பட்டன என்றும், ஏறக்குறைய எட்டாம் நூற்றாண்டின் இறுதியில் இந்தப் பெயர் கிறிஸ்துவின் உயிர்ப்பை அடையாளப்படுத்தப் பயன்படுத்தப்பட்டது என்றும் வரையறுக்கிறது. குளிர்காலத்தில் 'இறக்கின்ற' கதிரவன் வசந்தகாலத்தில் 'மறுபிறப்பு' எடுக்கின்றான் என்ற பின்புலத்தில், கதிரவன் உதிக்கும் திசையான 'ஈஸ்ட்டிலிருந்து' (கிழக்கு) கிறிஸ்து எழுவதால், கிறிஸ்துவின் உயிர்ப்பை 'ஈஸ்டர்' என்று அழைப்பவர்கள், இயேசுவின் இறப்பை 'குளிர்காலத்திற்கும்,' இயேசுவின் உயிர்ப்பை 'வசந்தகாலத்திற்கும்' ஒப்பிடுகின்றனர். 

வசந்தகாலத் தேவதையான 'ஈஸ்த்ரா' ('எயோஸ்தர்,' 'ஒஸ்தாரா,' 'அவ்ஸ்த்ரா') திருநாள் மார்ச் மாதத்தின் 21ஆம் நாள், வசந்தகாலத்தின் உத்தராயணம் (இரவும் பகலும் சமமான நாள், சூரியன் நிலநடுக்கோட்டைக் கடந்துசெல்லும் நாள்) அன்று கொண்டாடப்பட்டது. நீண்ட இருள்சூழ் பனிக்காலத்திற்குப் பின் வெளிச்சத்தைக் கொண்டுவரும் இத்தேவதையை முயல் அடையாளப்படுத்தியது. ஏனெனில், முயல் என்பது வசந்தகாலத்தையும் வளமையையும் குறித்தது. க்ரிம் என்ற ஜெர்மானிய புராண ஆய்வாளரின் கூற்றுப்படி, 'உயிர்ப்பு என்னும் கருதுகோள் ஈஸ்த்ரா திருநாளில் மையம் கொண்டுள்ளது. ஏனெனில், வைகறையின் கடவுளாம், வசந்தத்தையும் வளமையையும் அறிவித்து, மகிழ்ச்சியையும் ஆசீரையும் கொண்டுவரும் ஈஸ்த்ராரை தங்களுடைய கடவுளில் கிறிஸ்தவர்கள் கண்டார்கள்.' சில ஐரோப்பிய மொழிகளில் 'ஈஸ்டர்' என்பது 'பாஸ்கா' (யூதர்களின் பெருவிழா) என்று அழைக்கப்பட்டாலும், ஆங்கிலோ-சாக்ஸன் குடும்ப மொழிகளில் 'ஈஸ்டர்' என்ற சொல்லே வழங்கப்படுகிறது. 

அடையாளம் மற்றும் பொருளாலும், நாள்காட்டியாலும் யூத பாஸ்காவும் கிறிஸ்தவ ஈஸ்டரும் இணைந்தே செல்கின்றன. மார்ச் மாத உத்தராயணத்தைத் தொடர்ந்து வரும் பௌர்ணமிக்கு அடுத்த ஞாயிறு அன்று ஈஸ்டர் கொண்டாடப்படுவதால் - மார்ச் 22க்கும் ஏப்ரல் 25க்கும் இடையில் - திருவழிபாட்டு ஆண்டில் இது 'நகரும் திருவிழா' என அழைக்கப்படுகிறது. இந்த நாளில்தான் 'ஈஸ்டர்' கொண்டாடப்பட வேண்டும் என்பது பேரரசர் கொன்ஸ்தாந்தின் அவர்கள் 325ஆம் ஆண்டு கூட்டிய நிசேயா திருச்சங்கத்தில் முடிவெடுக்கப்பட்டது. அன்றுமுதல் பாஸ்கா பெருவிழாவின் தொடக்கத்தைக் குறிக்கும் பௌர்ணமி நாளை ஒட்டியே ஈஸ்டர் கொண்டாடப்படுகிறது. வழிபாடு மற்றும் சமய நிலைகளில் பெஸா மற்றும் ஈஸ்டர் திருநாள்கள் வேறுபட்டாலும் இரண்டுமே மறுபிறப்பையும் புதுவாழ்வையுமே – கிறிஸ்தவத்தில் இயேசுவின் உயிர்ப்பாலும், யூத சமயத்தில் இஸ்ரயேல் மக்கள் அடிமைத்தனத்திலிருந்து பெற்ற வாழ்வாலும் (காண். விப 14-15) - அடையாளப்படுத்துகின்றன. 

இத்திருவிழிப்புத் திருப்பலியில் நாம் வாசிக்கக் கேட்ட முதல் வாசகங்கள், குளிர்காலத்திலிருந்து வசந்தகாலத்திற்கு பூவுலகும் மானுடமும் கடந்து வந்த பாதையை நம் கண்முன் கொண்டு வந்தன. முதல் வாசகத்தில் (தொநூ), 'இல்லாமையிலிருந்து இருத்தலுக்கும், குழப்பத்திலிருந்து தெளிவுக்கும், இருளிலிருந்து ஒளிக்கும்' உலகம் கடந்து வருகிறது. இரண்டாம் வாசகத்தில் (விப) 'எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து வாக்களிக்கப்பட்ட நாட்டுக்கும், பாரவோனை அரசனாகக் கொண்டதிலிருந்து யாவேயை அரசராகக் கொள்வதற்கும், வாக்குறுதிக்கான காத்திருத்தலிலிருந்து வாக்குறுதி நிறைவேறியதற்கும்' இஸ்ரயேல் மக்கள் கடந்து வருகின்றனர். மூன்றாம் வாசகத்தில் (எசே) 'உலர்ந்த நிலையிலிருந்து உயிர்பெற்ற நிலைக்கும், பாபிலோனிய அடிமைத்தனத்திலிருந்து சொந்த நாட்டிற்கும்' திரும்புகின்றனர் இஸ்ரயேல் மக்கள். இது அவர்களுடைய இரண்டாம் மீட்பு. முந்தைய நிலை மறைந்து புதிய நிலை மலர்கிறது. இதுவே பிரிஹதாரண்யக உபநிடதத்தில் நாம் காணும் இறைவேண்டலாகவும் இருக்கிறது: 'பொய்மையிலிருந்து மெய்மைக்கு, இருளிலிருந்து ஒளிக்கு, சாவிலிருந்து வாழ்வுக்கு இறைவா என்னை அழைத்துச் செல்!' 

இன்றைய நற்செய்தி வாசகத்தில் பெண்கள் சிலர் இயேசுவின் கல்லறைக்கு வருகின்றனர். இறந்த உடலுக்கு மூன்று நாள்கள் நறுமணத் தைலம் பூசுவது அவர்களுடைய அடக்கச் சடங்கின் ஒரு பகுதியாக இருந்தது. 'வாரத்தின் முதல் நாள் கதிரவன் எழும் வேளையில்' என்னும் சொல்லாடல் வழியாக இருண்டு நேர்முகமான காரணிகளைச் சுட்டுகிறார் மாற்கு: 'புதிய வாரம் தொடங்குகிறது, புதிய ஒளி எழுகின்றது.' பழைய வாரத்தின் நிகழ்வுகள் மறைந்துவிட்டன, பழைய இருள் மறைந்துவிட்டது. இருந்தாலும் அந்தப் பெண்களின் உள்ளத்தில் ஒரு கலக்கம்: 'கல்லறை வாயிலிலிருந்து கல்லை நமக்கு யார் புரட்டுவார்?'  

நம் வாழ்விலும் ஏதோ ஒரு கல் நம்மை அடைத்திருப்பதாக நாம் அடிக்கடி உணர்ந்து, அந்தக் கல்லை அகற்றுபவர் யார் எனப் புலம்புகின்றோம். முதல் வாசகத்தில், இருள் ஒரு கல் போல இருக்கிறது. இரண்டாம் வாசகத்தில், எகிப்தின் அடிமைத்தனம் கல் போல இருக்கிறது. மூன்றாம் வாசகத்தில், பாபிலோனிய நாடுகடத்துதல் கல் போல இருக்கின்றது. ஆனால், 'கல்லை நமக்காக யார் புரட்டுவார்?' என்று கலங்கத் தேவையில்லை. கற்கள் புரட்டப்படும் நாள்தான் ஈஸ்டர். மிகவும் கடினமான கற்கள் என நினைக்கும் இறப்பு, பாவம், பயம், மற்றும் உலகியல் பேரார்வம் அனைத்தையும் கடவுள் மிக எளிதாகப் புரட்டிவிடுகின்றார். மானுட வரலாறு ஒரு கல் முன் பயந்து நிற்பதில்லை. ஏனெனில், அது வாழ்வின் கல்லான (காண். 1 பேது 2:4) கிறிஸ்துவின்மேல் கட்டப்பட்டுள்ளது. நாம் ஒவ்வொருவரும் இன்று இரவு உயிர்த்த ஆண்டவரைக் காண வேண்டும் - தனித்தனியாக. முதலில், நான் அகற்ற விரும்பும் அல்லது அகற்ற வேண்டிய கல் எது என்று அந்தக் கல்லுக்குப் பெயரிடுவோம். 

நம் நம்பிக்கையைத் தடுக்கின்ற கல் ஊக்கமின்மைதான். வாழ்வின் நிகழ்வுகள் நம் கைகளை மீறிச் செல்லும்போது, எல்லாம் நம்மை விட்டுப் போய்விட்டது போலவும், இறப்பு சூழ்ந்துவிட்டது போலவும் உணர்கின்றோம். நம்மேல் நாமே கற்களை அடுக்கிக்கொண்டு நம்பிக்கையைப் புதைத்துவிடுகிறோம். அந்த நேரத்தில் நம்மை எதிர்கொள்கின்ற தூதர், 'வாழ்பவரை இறந்தோரிடம் தேடுவதேன்?' எனக் கேள்வி கேட்கின்றார். நம் இதயத்தை மூடிவிடும் இன்னொரு கல் பாவம். பாவம் நம்மை மயக்குகிறது. எளிதான மற்றும் வேகமான வழியில் நமக்கு இன்பத்தையும், வெற்றியையும், வளமையையும் வழங்குகிறது. ஆனால், சற்று நேரத்தில் தனிமையையும் சாவையும் விட்டுச் செல்கின்றது. பாவம் இறப்பின் நடுவே வாழ்வைத் தேடுகிறது. தேடிச் சோர்ந்து போய், நம்மைச் சோர்வுக்கு ஆளாக்குகிறது. இன்று ஏன் பாவத்தை நாம் விடக் கூடாது? பாவம் என்னும் கல்லை இன்னும் நாம் ஏன் நம் இதயக் கதவுக்கு முன் வைக்க வேண்டும்? 

கல்லறைக்குச் செல்கின்ற பெண்கள் திகிலுறுகிறார்கள். அச்சத்தின் பெரிய நிலைதான் திகில்.  

'உங்களுக்கு முன்பாக கலிலேயாவுக்குப் போய்க்கொண்டிருக்கிறார்' என்று சொல்கின்றார் வெண்தொங்கல் ஆடை அணிந்த இளைஞர் ஒருவர். 

கல்லறைக்குள் குனிந்து பார்க்கும் நம்மிடமும் இன்று தூதர் பேசுகின்றார். சில நேரங்களில் நாமும் இத்தூதர் போல மற்றவர்களுக்கு நம்பிக்கையின் செய்தியைத் தருகின்றோம். 

'கலிலேயாவுக்குப் போங்கள்!' என அனுப்புகின்றார் தூதர். 

கலிலேயா என்பது எருசலேமின் எதிர்ப்பதம். கலிலேயா இயேசுவின் பணித் தொடக்கம். அங்கேதான் திருத்தூதர்களை இயேசு அழைத்தார். தங்கள் தலைவரின் இறுதியைக் கண்டு பயந்து போய்க் கிடந்த திருத்தூதர்களை மீண்டும் தொடக்கத்துக்கு அழைத்துச் செல்கின்றார் இயேசு.  

உடனடியாக வெளியேறுகின்ற பெண்கள் ஓட்டம் பிடிக்கின்றனர். நடுக்கமும் அச்சமும் கொள்கின்றனர். திருத்தூதர்களுக்குச் செய்தியை அறிவிக்கவில்லை.  

இயேசுவின் அருகிலிருந்தவர்கள் அவரை இறுதிவரை புரிந்துகொள்ளவில்லை என்பதைக் காட்டுவே மாற்கு எதிர்மறையான உணர்வோடு நற்செய்தியை முடிக்கின்றார். 

ஆனால், யோவான் நற்செய்தியாளர் வேறொரு நிலையில் இதைப் பதிவு செய்கின்றார். மகதலா மரியா இயேசுவைத் தோட்டக்காரர் என நினைத்து அவரோடு உரையாடிக் கொண்டிருக்கின்றார். 'மரியா!' என்று இயேசு அழைத்தவுடன், 'இரபூணி' எனத் திரும்புகின்றார். அவர் ஏற்கெனவே இயேசுவைப் பார்த்துக்கொண்டே தானே இருக்கின்றார். பின் ஏன் அவர் திரும்ப வேண்டும்? 'தன் திசையை அல்ல, தன் இதயத்தை அவரை நோக்கித் திருப்பினாள்' என இதற்கு விளக்கம் தருகின்றார் புனித அகுஸ்தினார். நம் இதயத்தை நாம் அவரை நோக்கித் திருப்பினால், நாம் வாழ்க்கையை கலிலேயா நோக்கித் திருப்ப முடியும். 

நாம் பல நேரங்களில் நம் கல்லறையின் திசை நோக்கியே செல்கின்றோம். வாழ்பவரை இறந்தோரிடம் தேடுகிறோம். அல்லது இயேசுவைக் கண்டாலும் நாம் இறந்தவற்றின் பக்கமே நம் இதயத்தைத் திருப்பிக் கொள்கின்றோம். ஏனெனில், பழைய பாதை நமக்கு இனிக்கிறது, இன்பம் தருகிறது. அல்லது நம் குற்றவுணர்வு, காயம், அதிருப்தி ஆகியவற்றைத் தழுவிக்கொள்கிறோம். அவை நமக்கு பாதுகாப்பு வளையும் என உணர்கின்றோம். 

தனிப்பட்ட மனிதர்களும், ஒட்டுமொத்த மனுக்குலமும் தங்கள் கல்லறைகளிலிருந்து வெளியே வந்த கதையாடல்களைத்தான் விவிலியம் தாங்கி நிற்கிறது. எல்லாம் முடிந்தது என்ற கல்லறையிலிருந்து இனிதான் எல்லாம் தொடக்கம் என்ற வாழ்வுக்கு நகர்கின்றனர் நம் முதற்பெற்றோர். நம்பிக்கையின்மையிலிருந்து நம்பிக்கைக்கு நகர்கின்றார் ஆபிரகாம். ஏமாற்றுகின்ற நிலையிலிருந்து பிளவுபடாத வாழ்வுக்கு மாறுகின்றார் யாக்கோபு. பெலிஸ்தியச் சிறையில் தள்ளப்பட்ட சிம்சோனின் தலைமுடி முளைக்க ஆரம்பிக்கின்றது. தாவீது தன் பிரமாணிக்கமின்மையிலிருந்து உடன்படிக்கை அன்புக்கு கடவுளால் நகர்த்தப்படுகின்றார். திருத்தூதர்கள், சக்கேயு, பவுல் போன்றோர் தங்கள் வாழ்வுப் பாதையை மாற்றுகின்றனர். 

உயிர்ப்பு என்பது நம் வாழ்வியல் அனுபவமாக மாறாத வரை அது ஒரு வதந்தியே. உயிர்ப்பின் ஆற்றல் நம்மைப் புதிய மனிதர்களாக்கும். துன்பங்களை எதிர்கொள்ள நமக்குக் கற்றுக்கொடுக்கும். ஆகையால்தான் புனித பவுல், 'கிறிஸ்துவையும் அவர்தம் உயிர்த்தெழுதலின் வல்லமையையும் அறியவும் விரும்புகிறேன்' (பிலி 3:10)  என்கிறார். 

'மேலும் சாவின் இருள்சூழ் பள்ளத்தாக்கில் நான் நடக்க நேர்ந்தாலும், நீர் என்னோடு இருப்பதால் நான் எத்தீங்கிற்கும் அஞ்சிடேன்' (காண். திபா 23:4) என்கிறார் தாவீது. அவரின் உடனிருப்பில் நமக்கு எல்லா நாளும் உயிர்ப்பு நாளே. 

உயிர்ப்புப் பெருநாள் வாழ்த்துகள்!