இவ் மறையுரையை வழங்குபவர்

அருட்பணி.இயேசு கருணாநிதி
Archbishop’s House, K. Pudur, Madurai 625 007, India
Email: yesu@live.in

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)









திருவருகைக்காலம் நான்காம் ஞாயிறு

ஆண்டவர் உம்மோடு

2 சாமுவேல் 7:1-5,8-12,14-16
உரோமையர் 16:25-27
லூக்கா 1:26-38

நம் திருப்பலிக் கொண்டாட்டங்களிலும், ஆசியுரை போன்ற நிகழ்வுகளிலும், 'ஆண்டவர் உங்களோடு இருப்பாராக!' என்ற அழகிய வாக்கியத்தை நாம் பயன்படுத்துகின்றார். முதல்வர் இந்த வாழ்த்தொலியைக் கூற, கூடியிருப்பவர்கள், 'உம்மோடும் அல்லது உம் ஆன்மாவோடும் இருப்பாராக!' என்று விடையளிக்கின்றனர்.

இன்றைய முதல் வாசகத்தில், இறைவாக்கினர் நாத்தான், தாவீது அரசரிடம், 'நீர் விரும்பியது அனைத்தையும் செய்துவிடும். ஏனெனில், ஆண்டவர் உம்மோடு இருக்கிறார்' என்கிறார்.

நற்செய்தி வாசகத்தில், வானதூதர் மரியாவிடம், 'ஆண்டவர் உம்மோடு இருக்கிறார்' என்று சொல்ல, மரியாவோ, இறுதியில், 'உம் சொற்படியே எனக்கு நிகழட்டும்' என்கிறார்.

முதலில், 'ஆண்டவர் உம்மோடு' என்னும் சொல்லாட்சியைப் புரிந்துகொள்வோம். தொடர்ந்து, தாவீது மற்றும் மரியாவின் வாழ்வில் அந்தச் சொல்லாடல் எந்தத் தாக்கத்தை ஏற்படுத்தியது எனக் கண்டு, இச்சொல்லாட்சி தரும் வாழ்வியல் கருத்துகளை உள்வாங்க முயற்சிப்போம்.

'ஆண்டவர் உம்மோடு' என்னும் சொல்லாடல் முதன்முதலாக எகிப்தியப் பாரவோனால் மோசே மற்றும் ஆரோனுக்குச் சொல்லப்படுகிறது என்பதில்தான் ஆச்சரியம் உள்ளது. தாங்கள் எகிப்தைவிட்டுப் புறப்பட அனுமதி வேண்டி பாரவோனிடம் வந்துநிற்கின்றனர் மோசேயும் ஆரோனும். அந்த நேரத்தில் அவர்களோடு உரையாடுகின்ற பாரவோன், 'உங்களை உங்கள் குழந்தைகளோடு நான் அனுப்பிவைத்தால், ஆண்டவர்தாம் உங்களோடு இருக்க வேண்டும். ஏனெனில் உங்கள்முன் உள்ளது தீமையே!' (காண். விப 10:10) என்கிறார். பாரவோனின் வார்த்தைகள் இரண்டு விடயங்களைச் சொல்கின்றன: ஒன்று, ஆண்டவரின் இருத்தலை அவர் ஏற்றுக்கொள்கின்றார். இரண்டு, ஆண்டவர் உடனிருந்தாலன்றி தீமையை மனிதர்கள் வெற்றிகொள்ள இயலாது என்பதையும் ஏற்றுக்கொள்கின்றார்.

தொடர்ந்து, ஆண்டவராகிய கடவுள் இஸ்ரயேல் மக்களைத் தலைமையேற்று வழிநடத்துமாறு மோசேக்குப் பணிக்கும் நிகழ்வில், 'எனது திருமுன்னிலை உன்னோடு செல்லும். நான் உனக்கு இளைப்பாறுதல் அளிப்பேன்' என, மோசே மறுமொழியாக, 'நீர் எம்மோடு வரவில்லையெனில் எங்களை இங்கிருந்து போகச் செய்யாதீர்!' என இறைஞ்சுகின்றார். மேலும், 'நானும் உம் மக்களும் உம் பார்வையில் தயை பெற்றுள்ளோம் என்பதை எப்படி அறிவோம்?' என்கிறார் (காண். விப 33:14-15). இந்த நிகழ்வில், ஆண்டவரின் உடனிருப்பை மோசே வேண்டுவதோடு, 'ஆண்டவர் நம்மோடு' என்ற அனுபவம் நமக்கு 'தயை பெற்ற அனுபவம்' தரும் என்கிறார்.

அடுத்ததாக, மோசேயின் இறப்புக்குப் பின்னர், வாக்களிக்கப்பட்ட நாட்டிற்குள் மக்களை அழைத்துச் செல்லக்கூடிய பணியை யோசுவாவிடம் ஒப்படைக்கின்ற ஆண்டவராகிய கடவுள், 'மோசேயுடன் இருந்தது போல உன்னோடும் இருப்பேன். உன்னைக் கைநெகிழ மாட்டேன், கைவிடவும் மாட்டேன்' என்கிறார் (காண். யோசு 1:5). ஆண்டவரின் வார்த்தைகளிலிருந்து அவர் ஏற்கெனவே மோசேயுடன் இருந்தார் என்றும், இப்போது யோசுவாவுடன் இருக்கப்போவதாகவும் அவர் வாக்குறுதி தருவது தெளிவாகிறது.

இந்த மூன்று நிகழ்வுகளிலும், 'ஆண்டவர் உம்மோடு இருக்கிறார்!' அல்லது 'ஆண்டவர் உம்மோடு இருப்பாராக!' என்ற சொல்லாட்சி நேர்முகமான தொனியில் சொல்லப்பட்டுள்ளது.

நீதித்தலைவர்கள் நூலில், இஸ்ரயேல் மக்கள் மிதியானியர்களால் வதைக்கப்பட்டபோது, ஆண்டவரின் தூதர் கிதியோனுக்குத் தோன்றி, 'வலிமை மிக்க வீரனே! ஆண்டவர் உன்னோடு இருக்கிறார்' என்றார். கிதியோன் அவரிடம், 'என் தலைவரே! ஆண்டவர் எம்மோடு இருக்கிறார் என்றால் ஏன் இவையெல்லாம் எமக்கு நேரிடுகின்றன? ஆண்டவர் எம்மை எகிப்து நாட்டிலிருந்து வெளியே கொண்டு வரவில்லையா என்று கூறி, எங்கள் தந்தையர் எமக்கு வியந்துரைத்த அவரது வியத்தகு செயல்களெல்லாம் எங்கே? இப்பொழுது ஏன் ஆண்டவர் எம்மை இப்படிக் கைவிட்டுவிட்டார்?' (காண். நீத 1:12-13). இங்கே கிதியோனின் கேள்வி நமக்கு ஏற்புடையதாக இருக்கிறது. 'ஆண்டவர் உம்மோடு இருக்கிறார்' என்ற அனுபவம் செயல்பாடாக இல்லாமல் போனது ஏன்? என்பதே கிதியோனின் ஆதங்கமாக இருக்கிறது.

ஆண்டவர் அல்லது ஆண்டவரின் தூதர் மனிதர்களுக்கு வழங்கிய 'ஆண்டவர் உம்மோடு' என்னும் வாக்குறுதி, காலப்போக்கில், மனிதர்கள் ஒருவர் மற்றவரை வாழ்த்துவதற்காகப் பயன்படுத்தும் வாழ்த்தொலியாக மாறுகிறது. அதற்கு ஓர் அழகிய உதாரணம் ரூத்து நூலில் உள்ளது: சிறிது நேரம் கழித்து, போவாசு பெத்லகேமிலிருந்து வயலுக்கு வந்துசேர்ந்தார். அவர் அறுவடையாளர்களை நோக்கி, 'ஆண்டவர் உங்களோடு இருப்பாராக!' என்றார். அவர்களும், 'ஆண்டவர் உமக்கு ஆசி வழங்குவாராக!' என்றார்கள். (காண். ரூத் 2:4). நம் வீட்டுக்கு வேலைக்கு வருகிறவர்களையும், அல்லது நம் வயலின் பணியாளர்களையும், 'ஆண்டவர் உங்களோடு இருப்பாராக!' என்று நாம் வாழ்த்த, அவர்களும் நமக்குப் பதில்மொழியாக, 'ஆண்டவர் உமக்கு ஆசி வழங்குவாராக!' என்று வாய்நிறைய வாழ்த்தினால் நம் குடும்பமும் தொழிலும் பெருகாதா?

மேற்காணும் நிகழ்வுகளில் வரும், 'ஆண்டவர் உம்மோடு' என்னும் சொல்லாட்சியின் உள்பொருளை நாம் பின்வரும் மூன்று நிலைகளில் புரிந்துகொள்ளலாம். 'ஆண்டவர் நம்மோடு அல்லது உம்மோடு' என்னும் அனுபவம்,

(அ) ஒருவரின் தீங்கு நீக்கும்

(ஆ) ஆண்டவரிடம் தயை (இரக்கம்) பெற்றவர் என்பதை அவரும் மற்றவரும் அறியச் செய்யும்

(இ) இயலாததையும் இயலச் செய்யும் வல்லமை தரும்

இன்றைய முதல் வாசகம் (காண். 2 சாமு 7:1-5,8-12,14-16) இஸ்ரயேல் வரலாற்றின் தொடக்கத்திற்கு நம்மை அழைத்துச் செல்கிறது. ஏறக்குறைய கிமு 10ஆம் நூற்றாண்டில் இஸ்ரயேல் ஓர் ஒருங்கிணைந்த நாடாக உருவாகிறது. அண்டை நாடுகளின் அச்சுறுத்தல் நீங்க, எதிரிகள் எல்லாம் அழிக்கப்பட, தாவீது அரசர் தம் அரண்மனையில் குடியேறுகிறார். 'எல்லா எதிரிகளின் தொல்லையினின்றும் ஆண்டவர் அவருக்கு அமைதி அளித்தார்.' தனக்கு அமைதியையும் வெற்றியையும் தந்த ஆண்டவராகிய கடவுள் உடன்படிக்கைப் பேழையில் மழையிலும் வெயிலிலும் இருப்பதைக் கண்டு, ஆண்டவருக்கு ஓர் இல்லம் அமைக்க விரும்புகின்றார் தாவீது. தன் விருப்பத்தை நாத்தானிடம் தெரிவித்து அவரின் ஒப்புதலை வேண்டுகின்றார். 'ஆண்டவர் உம்மோடு இருக்கிறார். நீர் விரும்பியது அனைத்தையும் செய்துவிடும்' என்று அவரும் உடனடியாக ஒப்புதல் தந்தாலும், அன்று இரவு ஆண்டவரின் வார்த்தை வேறு மாதிரியாக வருகிறது. தாவீதின் எளிய பின்புலத்தைச் சுட்டிக்காட்டுகின்ற ஆண்டவர், தாவீதுக்கு தாம் இல்லம் ஒன்று கட்டப்போவதாக உரைக்கின்றார். 

தனக்கு ஓர் ஆலயம் வேண்டாம் என்று சொல்வதன் வழியாக, கட்டடங்கள் மற்றும் அமைப்புகள் மேல் தனக்கு விருப்பமில்லை என்கிறார் ஆண்டவர். மேலும், வழித்தோன்றல் என்னும் கட்டடத்தை ஆண்டவராகிய கடவுளே தாவீதுக்குக் கட்டுவதாக வாக்களிக்கின்றார்.

ஆக, ஆண்டவர் நம்மோடு என்ற அனுபவம் தாவீதுக்கு இருந்ததால் அவர் வெற்றிகள் பல கண்டார். அந்த அனுபவத்தை ஆண்டவர் தாமே அவருடைய வழித்தோன்றல் வழியாக நீட்டுகின்றார்.

உரோமையருக்கு எழுதிய திருமடலை நிறைவுசெய்கின்ற பவுல், அவர்களுக்குச் சொன்ன அறிவுரையின் நிறைவாக, 'கடவுள் உங்களை உறுதிப்படுத்த வல்லவர்' என்கிறார். அதாவது, ஆண்டவருடைய உடனிருத்தல் அவர்களுக்கு நம்பிக்கையில் உறுதி அளிக்கிறது.

ஆக, ஆண்டவரின் உடனிருப்பு நமக்கு உறுதியளிக்கிறது.

நற்செய்தி வாசகத்தில் (காண். லூக் 1:26-38) இயேசு பிறப்பின் முன்னறிவிப்பு நிகழ்வை வாசிக்கின்றோம். 'ஆண்டவர் உம்மோடு இருக்கிறார்!' என்ற வாழ்த்தொலியோடு மரியாவை எதிர்கொள்கின்ற கபிரியேல், 'கடவுளால் இயலாதது எதுவும் இல்லை' என்று நிறைவு செய்கின்றார். 

ஆக, ஆண்டவர் உடனிருந்தால் அனைத்தும் சாத்தியமாகிறது.

ஆண்டவர் நம்மோடு என்ற அனுபவம் நமக்கு வெற்றியும், உறுதியும் தந்து அனைத்தையும் சாத்தியமாக்குகிறது.

'ஆண்டவர் உம்மோடு இருக்கிறார்' என்னும் சொல்லாட்சி நமக்குத் தரும் வாழ்வியல் பாடங்கள் எவை?

1. வார்த்தைகள் அனுபவமாக மாற வேண்டும்

'ஆண்டவர் உம்மோடு இருக்கிறார்' என்று நாத்தான் இறைவாக்கினரால் எப்படி தாவீதிடம் சொல்ல முடிந்தது? ஒருவரின் செயல்களைக் கொண்டே கணித்துவிடலாம் என்பதால், தாவீது ஆற்றிய அரும்பெரும் செயல்களைக் கண்டு நாத்தான் இந்த முடிவுக்கு வந்திருக்கலாம். இன்னொரு பக்கம், எந்த அரண்மனையின் உச்சியில் நின்று உடன்படிக்கைப் பேழை வெயிலில் காய்வதைக் காண்கிறாரோ, அதே அரண்மனையின் உச்சியில் நின்றுதான் உரியாவின் மனைவி குளிப்பதையும் காண்கின்றார் தாவீது. தாவீது தன்னுடனான ஆண்டவரின் இருத்தலைச் சில நேரங்களில் மறந்தாலும், ஆண்டவர் அவரிடமிருந்து விலகிக்கொள்ளவே இல்லை. இதுதான் ஆண்டவரின் பிரமாணிக்கம். 'நாம் நம்பத்தகாதவர் எனினும் அவர் நம்பத்தக்கவர்.' தாவீது தன் செயலுக்காக மனம் வருந்துகிறார். ஆண்டவரும் அவரை முழுமையாக ஏற்றுக்கொள்கின்றார். ஆக, நாம் ஆண்டவரோடு இல்லை என்றாலும், அவர் நம்மோடு என்பது ஒரு வாழ்வியல் அனுபவமாக மாற வேண்டும்.

2. 'நான் ஆண்டவரின் அடிமை'

'ஆண்டவர் உம்மோடு இருக்கிறார்!' என்று வானதூதர் சொன்னபோது, 'நான் ஆண்டவரின் அடிமை' என்று சரணாகதி அடைகின்றார் மரியா. ஆக, ஆண்டவரின் உடனிருப்பை ஒரு தலைவர்-பணியாளர் உடனிருப்பாகக் காண்கிறார் மரியா. இங்கே ஒட்டுமொத்தமாகத் தன் சுதந்திரத்தைத் தாரை வார்த்துக் கொடுக்கிறார் மரியா. இந்தப் பக்குவம் அல்லது தயார்நிலை அவருக்கு எப்படி வந்தது? இன்று நான் ஆண்டவருக்கு என்னையே சரணாகதி ஆக்கும்போது, 'ஆண்டவர் என்னோடு இருக்கிறார்' என்பதை உணர முடியும். ஏனெனில், தாவீதின் வாழ்வில் பார்க்கிறோம், அவரின் விருப்பமல்ல, ஆண்டவரின் விருப்பமே நிறைவேறுகிறது.

3. ஒருவர் மற்றவரை வாழ்த்துவோம்

'ஆண்டவர் உம்மோடு இருப்பாராக!' என்ற வாழ்த்தொலி அடுத்தவருக்கு நம்பிக்கை தருகிறது, தீமைகளை அகற்றுகின்றது, இயலாததை இயலச் செய்கிறது என்றால், நாம் ஒருவர் மற்றவரை, 'ஆண்டவர் உம்மோடு இருக்கிறார்' என்று வாழ்த்துவோம். இந்த வாழ்த்தொலி மற்றவர்களிடம் நம்பிக்கைக் கீற்றை மின்னச் செய்வதுடன், அந்தக் கீற்றொளியில் அவர்கள் தொடர்ந்து வழிநடக்கவும் துணை செய்யும்.

இறுதியாக, 

ஆண்டவர் நம்மோடு இருந்தால், அவரின் தயை பெற்றவர்கள் நாம் என்பதை மற்றவர்களும் அறிந்துகொள்வார்கள். அவரின் தயை (இரக்கம்) இல்லாமல் தான் இல்லை என்பதை உணர்ந்ததால்தான் திருப்பாடல் ஆசிரியர், 'ஆண்டவரின் பேரன்பைப் பற்றிப் பாடுவேன்' (காண். திபா 89) எனத் துள்ளிக் குதிக்கின்றார்.

'ஆண்டவர் நம்மோடு இருக்கிறார்!' ஆகையால்தான், நாமும் நம் நிலமும் அமைதி காண்கிறது. இந்த அமைதியையே நாம் இன்று ஏற்றும் இறுதி மெழுகுதிரி குறித்துக்காட்டுகிறது.