இவ் மறையுரையை வழங்குபவர்

அருட்பணி.இயேசு கருணாநிதி
Archbishop’s House, K. Pudur, Madurai 625 007, India
Email: yesu@live.in

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)









ஆண்டின் பொதுக்காலம் 31ஆம் ஞாயிறு

கண்கள் சந்தித்தால்!

சாஞா 11:22-12:2
2 தெச 1:11-2:2
லூக் 19:1-10

நம் நம்பிக்கை வாழ்வில் சில நேரங்களில் 'சந்தேகம்' என்னும் கார்மேகம் சூழ்ந்து கொள்கிறது. நாம் நிறைவான மகிழ்ச்சியையும், அமைதியையும் உணர நினைக்கிறோம். ஆனால், உள்ளுக்குள் ஏதோ கலக்கம் இருந்து கொண்டே இருக்கின்றது. கூட்டமாக அமர்ந்து பேசும் போது வாய்நிறைய சிரிக்கிறோம். ஆனால் தனிமையில் சோகம் நம் கன்னத்தை அறைகின்றது. எல்லாம் இருப்பது போல தெரிகிறது. ஆனால் எதுவுமே இல்லாத உணர்வு கவ்விக் கொண்டிருக்கிறது. 'நாளை எல்லாம் மாறிப்போகும்!' என்று நாமும் நம்புகிறோம். ஒவ்வொரு நாளும் அந்த நாள் வந்துகொண்டே இருக்கிறது. நாமும் மாற்றம் எதுவும் இல்லாமல் கடந்துபோய்க்கொண்டே இருக்கிறோம்.

'எனக்கு எல்லாம் மீட்பே இல்லை!' என்ற அவநம்பிக்கையும் சில நேரங்களில் நமக்கு வந்துவிடுகிறது. நான் நினைப்பது எதுவும் நடப்பதில்லை. நான் நல்லவனாக இருக்க நினைத்தாலும் இருக்க முடிவதில்லை. நான் விழுந்த துன்பத்திலேயே மீண்டும் விழுகிறேன் என புலம்புவோம்.

சில நேரங்களில் மற்றவர்கள் நம்மைப் பார்த்து, 'இவன் அவன்!' 'இவன் அவள்!' 'இவன் இப்படித்தான்!' 'அவள் அப்படித்தான்!' என்ற வரையறைகளையும் கட்டிவிடுகின்றனர்.

நமக்கு நாமே கட்டிக்கொண்ட வரையறைகள் அல்லது அவநம்பிக்கை என்றாலும், அடுத்தவர்கள் நம்மேல் கட்டுவிக்கும் வரையறைகள் என்றாலும் அவற்றை நாம் கடக்க முடியும், அதுவும் 'இன்றே' கடக்க முடியும் என்ற நம்பிக்கையைத் தருகிறது இன்றைய இறைவாக்கு வழிபாடு. இன்றே கடப்பதற்கு அடிப்படையான தேவை நம் கண்களும், இறைவனின் கண்களும் நேருக்கு நேர் சந்திக்க வேண்டும்.

நாம் இந்த ஆண்டு கொண்டாடும் இரக்கத்தின் யூபிலி ஆண்டின் இலச்சினையில் இயேசுவின் கண்களில் ஒன்றும், மனிதரின் கண்களில் ஒன்றும் ஒன்றோடொன்று பொருந்தி நிற்பதாக இருக்கிறது. இந்த நிலை வர வேண்டுமென்றால் முதலில் இயேசுவின் கண்களும், நம் கண்களும் நேருக்கு நேர் சந்திக்க வேண்டும்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (காண். லூக் 19:1-10) சக்கேயு என்ற கதைமாந்தரை நாம் சந்திக்கின்றோம். சக்கேயு என்றால் 'தூய்மை' என்பது பொருள். சக்கேயுவைப் பற்றிய கற்பனை கதை ஒன்று உண்டு.

மார்கழி மாதத்தின் குளிர் இரவு ஒன்றில் இரண்டு குழந்தைகள் பிறந்தன. ஒன்று பெத்லகேமில். மற்றொன்று எரிக்கோவில். பெத்லகேமில் பிறந்த குழந்தைக்கு இயேசு என்றும், எரிக்கோவில் பிறந்த குழந்தைக்கு சக்கேயுஸ் என்றும் பெயரிட்டனர். இயேசு என்ற குழந்தை வேகமாக வளர்ந்தது. சக்கேயுஸ் வளரவேயில்லை. இயேசுவின் பெற்றோர்கள் அவரை உற்சாகப்படுத்தினர். சக்கேயுசின் பெற்றோர்கள் அவரைக் கண்டுகொள்ளவே இல்லை. இயேசுவுக்கு நல்ல நட்பு வட்டம் இருந்தது. சக்கேயுசின் நட்பு வட்டம் தீயவர்களால் நிறைந்திருந்தது. கோவில், மலை, செபம், அற்புதம் என்று மக்களைச் சுற்றி வந்தார் இயேசு. உரோமை, வரி, பதவி, பணம், அடிதடி என மக்களைச் சுற்றி வந்தார் சக்கேயுஸ். எல்லாரும் இயேசுவை விரும்பினர். எல்லாரும் சக்கேயுஸை வெறுத்தனர். வரி கொடுக்க வந்த ஒரு கலிலேய விவசாயிடம் இயேசுவைப் பற்றிக் கேள்விப்படுகின்றார் சக்கேயுஸ். 'நான் வாழ்வதெல்லாம் ஒரு வாழ்க்கையா? அவரைப்போல நான் ஏன் வாழக்கூடாது!' என்ற ஒரு கேள்வி உள்ளத்தில் ஒலித்துக் கொண்டே இருக்கின்றது. இருந்தாலும் கால ஓட்டத்தில் அதன் ஒலி அடங்கி விடுகிறது. ஒரு நாள் இயேசு எரிக்கோவிற்கு வருவதாக ஊரெங்கும் பேச்சு. அடங்கிய ஒலி மறுபடியும் அவரின் உள்ளத்தில் கேட்கத் தொடங்குகிறது. 'நீ போய்ப்பார்!' 'நீ போய்ப்பார்!' என்று உள்மனம் சொல்கிறது. இவரின் மனதிற்குள் போரட்டம். எப்படி போவது? எங்கே அவரைச் சந்திப்பது? தன் அலுவலகத்தைப் பூட்டிவிட்டு கிளம்புகின்றார். நான்கைந்து அடிகள் எடுத்து வைத்தவுடன் மனதில் ஒரு நெருடல். 'நான் போயும் அவரைப் பார்க்க முடியாவிட்டால் என்ன செய்வது? இங்கிருந்தால் யாராவது பணம் கொண்டு வந்து கொடுப்பார்கள். ஒருவேளை இன்று உரோமை அதிகாரிகள் சோதனைக்கு வந்துவிட்டால் என்ன செய்வது?' மறுபடியும் அலுவலகத்தை திறந்து அமர்கின்றார். ஆனால் மனம் எதிலும் லயிக்க மறுக்கின்றது. 'இயேசு' என்ற பெயர் மட்டும் உள்ளத்தில் கேட்டுக்கொண்டே இருக்கிறது. ஒரு கட்டத்தில் அப்படியே எழுந்து ஓட ஆரம்பிக்கின்றார். சரி! வேகமாகப் போய்விட்டு வேகமாக வந்துவிடுவோம்! என்ற எண்ணத்தில் ஓடுகின்றார். எல்லாரும் வேடிக்கை பார்த்து சிரிக்கின்றனர். வயதுக்கு வந்த ஒருவர் ஓடுவது யூத மரபில் ஏற்றுக்கொள்ள முடியாதது. இவர் அந்தச் சிரிப்பை பொருட்படுத்தவில்லை. எங்கும் மக்கள் கூட்டம். தான் கூட்டத்தோடு கூட்டமாக நின்றால் மக்கள் இன்னும் நம்மைக் கேலிசெய்வார்கள் என்ற எண்ணமும், கூட்டத்தின் மிகுதியால் இயேசுவைப் பார்க்க முடியாமல் போய்விடுமோ என்ற எண்ணமும் அவரை மரத்தில் ஏற்றுகிறது. ஏறினார். பார்த்தார். மகிழ்ந்தார்.

சக்கேயு காட்டு மரத்தில் ஏறினார் எரிக்கோவில். இயேசு கல்வாரி மரத்தில் ஏறினார் எருசலேமில். சக்கேயு ஏறியதால் அவருக்கு மீட்பு கிடைத்தது. இயேசு ஏறியதால் மனுக்குலம் அனைத்திற்கும் மீட்பு கிடைத்தது.

இயேசு என்ற குழந்தையும், சக்கேயு என்ற குழந்தையும் மரத்தால் ஒன்றாயினர்.

இன்றைய நற்செய்தியில் ஒரு வேகம் இருக்கின்றது. எல்லா நிகழ்வுகளும் வேகமாக நடக்கின்றன. 'சக்கேயு வேகமாக முன்னே ஓடுகின்றார்,' 'சக்கேயுவே, விரைவாய் இறங்கி வா!' என்கிறார் இயேசு. 'அவரும் விரைவாய் இறங்கி வருகிறார்.' எதற்காக இந்த வேகம்? எருசலேமிலிருந்து எரிக்கோ 24 கிமீ தூரத்தில் இருக்கின்றது. இந்த நிகழ்விற்கு வரும் 20ஆம் பிரிவில் இயேசுவின் எருசலேம் நுழைதலைப் பதிவு செய்கிறார் லூக்கா. ஆக, வெறும் பத்து வசனங்களுக்குள் இயேசுவை எரிகோவிலிருந்து எருசலேமிற்கு லூக்கா அழைத்துச் செல்லவேண்டும். ஆகையால் அவர் வேகம் காட்டுகின்றார். மேலும், இயேசுவின் பணி லூக்காவைப் பொறுத்தவரையில் சக்கேயு நிகழ்வுடன் நிறைவேறுகிறது. இனி அவர் துன்புற்று, இறந்துவிடுவார். ஆக, இறையரசு உள்ளடக்கிய வேகமும் இங்கே புலப்படுகிறது.

கதையின் நுணுக்கங்களைக் கொஞ்சம் பார்ப்போம்.

'அவர் ஒரு செல்வர்,' 'அவர் வரிதண்டுவோருக்குத் தலைவர்' என்ற இரண்டு அடைமொழிகளால் சக்கேயு என்னும் கதைமாந்தரை அறிமுகம் செய்கின்றார் லூக்கா.

'செல்வர்' என்பவர் லூக்கா நற்செய்தியில் எதிர்மறையாகவே பார்க்கப்படுகின்றார். 'செல்வர் இறையரசில் நுழைவது ஊசியின் காதில் ஒட்டகம் நுழைவதை விடக் கடினமானது.' 'செல்வர் பாதாளத்தில் நெருப்பில் வாடுகின்றார். ஏழை இலாசர் ஆபிரகாமின் மடியில் இளைப்பாறுகின்றார்.' இப்படிப்பட்ட எதிர்மறையான பின்புலத்தில் வாசகரின் ஆர்வம் கூடுகிறது. இந்த 'செல்வருக்கு' என்ன நடக்கும்? என்ற கேள்வி எழுகின்றது.

'வரிதண்டுவோருக்குத் தலைவர்'. இதற்கு முந்தைய பிரிவில் 'வரிதண்டுபவர் இறைவனுக்கு ஏற்புடையவராகி வீடு திரும்புவதாக' பதிவு செய்கின்றார் லூக்கா. வரிதண்டுபவர்கள் லூக்காவைப் பொறுத்தவரையில் ஒட்டுமொத்த பாவிகள், ஒடுக்கப்பட்டோர், மற்றும் புறவினத்தாரின் உருவகம். இயேசுவின் மேல் 'பாவிகளின் பாசக்காரர்' என்ற பட்டம் ஒட்டிக்கொண்டே இருக்கிறது.

ஆக, செல்வர் என்பதால் இவர் தள்ளப்படுவாரா? அல்லது பாவி என்பதால் ஏற்றுக்கொள்ளப்படுவாரா? என்று வாசகரின் கேள்வி இன்னும் ஆழமாகிறது.

சக்கேயு செய்த செயல்கள் ஆறு. இயேசுவைப் பார்ப்பதற்கு முன் மூன்று. பார்த்த பின் மூன்று.

இயேசுவைப் பார்ப்பதற்கு முன் அவர் செய்தது என்ன?

அ. இயேசுவைப் பார்க்க விரும்புகின்றார்.

ஆ. முன்னே ஓடிச் செல்கின்றார்.

இ. காட்டு அத்திமரத்தில் ஏறுகின்றார்.

இயேசுவைப் பார்த்த பின் அவர் செய்தது என்ன?

அ. விரைவாய் இறங்கி வருகின்றார்.

ஆ. மகிழ்ச்சியோடு இயேசுவை வரவேற்கின்றார்.

இ. எழுந்து நின்று பேசுகின்றார்.

இயேசுவை சந்தித்தபின் சக்கேயு செய்யும் செயல்கள் எல்லாம் அவர் முன்பு செய்தவற்றின் புரட்டிப்போடுதலாக இருக்கின்றது:

அ. ஏறிச் சென்றவர் இறங்கி வருகின்றார்.

ஆ. ஓடிச் சென்றவர் கூடி வருகின்றார்.

இ. ஒளிந்து பார்க்க விரும்பியவர் நின்று பேசத் தொடங்குகின்றார்.

ஐந்து பாடங்கள்:

1. தனியாய் நிற்கும் பெட்டிகள் ஒன்றாகின்றன

இறைவனை மனிதன் சந்திக்கும்போது, மனித மனம், உடல், சிந்தனை, சொல், செயல் போன்ற தனித்தனியான பெட்டிகள் ஒன்றாகின்றன. இவை அனைத்தும் ஒருங்கே செயல்பட ஆரம்பிக்கின்றன. தான் வேறு, தன் வரிதண்டுதல் பணி வேறு, தன் செல்வம், தன் சொத்து வேறு, தன் அறநெறி வேறு, தன் வாழ்க்கை வேறு என தனித்தனியாக இருந்த சக்கேயு ஒன்றாகின்றார். இதை எபிரேயத்தில் 'சலோம்' என அழைக்கின்றனர். அதாவது, பிளவுபடாத நிலை அல்லது விரிசல் விழாத நிலை. இந்த நிலையில்தான் அமைதி, மகிழ்ச்சி, நிறைவு கிடைக்கிறது. இந்த முழுமை நிலை அடைய இறைவனின் தொடுதல் அவசியமாகிறது. வானத்தில் நின்று கொண்டிருந்தவரை பூமிக்கு இறக்கி தனக்கு நிகராக அவரை நிறுத்துகின்றார் இயேசு. இதையே இன்றைய முதல் வாசகம் (காண். சாஞா 11:22-12:2) நமக்கு வேறு வார்த்தைகளில் சொல்கிறது. இறைவனின் கண்பார்வை மனுக்குலத்தின் மேல் உள்ளது. தீமை, பாவம், குற்றம் என விரிசல் விழும் நேரங்களில் அங்கே அவரின் பரிவிரக்கம் நிறைவையும், முழுமையையும் கொண்டுவருகிறது.

2. மனித ஆர்வமும், கடவுளின் பேரார்வமும்

இயேசுவை சந்திக்க நிறையப்பேர் ஆர்வம் கொண்டிருப்பதாக நற்செய்தி நூல்கள் சொல்கின்றன. இடையர்கள், கீழ்த்திசை ஞானியர், ஏரோது, கிரேக்கர்கள், கெனசரேத் நகர மக்கள், திருத்தூதர்கள் என நிறையப்பேர் அவரை நாடி வருகின்றனர். அவர்களின் எல்லா ஆர்வங்களுக்கும் இயேசு பதில் கொடுக்கவில்லை. ஆனால், சக்கேயுவின் ஆர்வத்திற்குப் பதில் கொடுக்கின்றார். இயேசுவைக் காண சக்கேயு ஆர்வம் கொண்டாரெனில், சக்கேயுவுடன் தங்க இயேசு பேரார்வம் கொள்கின்றார். இதுதான் கடவுளின் பெருந்தன்மை. பத்துத் தொழுநோயாளர்கள் இயேசுவை நோக்கி, 'எங்களுக்கு இரங்கும்' என வெறும் பிச்சைதான் கேட்கின்றனர். ஆனால், இயேசு அவர்களுக்கு முழுமையான நலம் தருகின்றார். என்னே அவரின் பெருந்தன்மை! 'நான் அவரைப் பார்த்தால் போதும்!' என ஒதுங்கி நின்ற சக்கேயுவை, பெயர் சொல்லி அழைக்கின்றார் இயேசு. மற்றவர்கள் அவரை பாவி என்றும், வரிதண்டுபவன் என்றும் அடையாளப்படுத்த இயேசு அவரது பெயரைச் சொல்லி, 'தூய்மையானவனே!' என அழைக்கின்றார். மேலும், நாம் நம் வாழ்க்கை ஓட்டங்களில் கொஞ்சம் ஓய்வெடுத்து நிற்கும்போது அங்கே கடவுளும் நிற்கின்றார். இன்றைய கலாச்சாரம் நம் வாழ்வை நிறைய வேலைகளைக் கொண்டு நிரப்புகிறது. எந்நேரமும் நாம் எதையாவது செய்து கொண்டே இருக்க வேண்டும் என்ற ஒரு நிபந்தனையோடு ஓடிக்கொண்டிருக்கிறோம். ஆனால், வாழ்ந்த வாழ்க்கையை அமர்ந்து இரசிக்க நமக்கு நேரமில்லை. இடமில்லை. ஆனால், சக்கேயுவுக்கு நேரமும் இருக்கின்றது. இடமும் இருக்கின்றது. அவர் நின்றதால் அங்கே இயேசுவும் நிற்கின்றார். அவர் குனிந்து பார்க்க இயேசு அண்ணாந்து பார்க்கின்றார். இதில் உள்ள முரணைக் கவனிக்க வேண்டும். குட்டையார் இருப்பவர்களை எல்லாரும் குனிந்துதான் பார்ப்பார்கள். ஆனால், இயேசு அவரின் நிலையை உயர்த்தி அண்ணாந்து பார்க்கின்றார்.

3. தடைகளைத் தாண்டி - உள்ளே வெளியே

இறையனுபவம் பெற, இறைவனின் கண்களை நம் கண்கள் சந்திக்க நாம் இரண்டு எதிர்மறை உள்ளுணர்வுகளிலிருந்து விடுதலை பெற வேண்டும்: ஒன்று, பயம். இரண்டு, குற்றவுணர்வு. இந்த இரண்டும் இருந்தால் நம் கண்கள் எப்போதும் தரையை நோக்கியே இருக்கும். சக்கேயு இந்த இரண்டு உள்ளுணர்வுகளிலிருந்தும் விடுதலை பெறுகின்றார். அவருக்கு வெளியிலும் தடைகள் இருக்கின்றன. மக்கள் கூட்டம், மக்களின் முற்சார்பு எண்ணம் மற்றும் எதிர்மறை பார்வை அவருக்கு தடையாக இருக்கின்றன. ஆனால், அவர் அவற்றைக் கடக்கும் பக்குவம் பெற்றிருக்கின்றார். இன்று நான் கடக்க வேண்டிய தடைகள் எவை? நான் அடுத்தவர்கள் என்னைப் பற்றி நினைப்பதை முதன்மைப்படுத்திக் கொண்டு என்னையே நான் ஒதுக்கி வைக்கின்றேனா?

4. எனது காட்டு அத்திமரம் எது?

காட்டு அத்திமரம் சக்கேயுவுக்கு இயேசுவைப் பற்றி முழுமையான பார்வையை வழங்கியது. மற்ற யாரும் பார்க்க முடியாது அளவிற்கு சக்கேயு இயேசுவை முழுமையாகப் பார்க்கின்றார். மேலும் காட்டு அத்திமரம் அவரை மற்றவர்களுக்கு மேலாக உயரச் செய்கிறது. நாம் எங்கிருந்து பார்த்தால் இயேசு முழுமையாகத் தெரிகிறார்? அல்லது எனக்கும் இயேசுவுக்கும் இடையே பார்வையை மறைக்கும் தடைகள் எவை? சக்கேயு மரத்தில் இருந்து இறங்கியபோது அவர் அனைவருக்கும் கேலிப்பொருளாகத் தெரிந்திருப்பார். ஆனால் அதைக் கண்டுகொள்ளவில்லை. தன் முகத்தை மறைத்துக்கொள்ளவில்லை. 'இல்லை! வேண்டாம் இயேசுவே!' என அழைப்பை மறுக்கவில்லை. 'இன்னொரு நாளைக்கு வாருங்கள்!' என்று இயேசுவிடம் சமரசம் செய்யவுமில்லை. இயேசுவைக் கண்டுகொள்ள நான் ஏறும் அத்திமரம் எது? அல்லது மற்றவர்கள் இயேசுவைக் காண நான் ஓர் அத்திமரமாக இருந்திருக்கின்றேனா.

5. இன்று

லூக்காவின் இந்தக் கதையாடலில் நிறைய வினைச் சொற்கள் நிகழ்காலத்தில் இருக்கின்றன. குறிப்பாக, 'என் உடைமைகளில் பாதியை ஏழைகளுக்கு கொடுக்கிறேன். எவர்மீதாவது பொய்க் குற்றம் சுமத்தி எதையாவது கவர்ந்திருந்தால் நான் அதை நான்கு மடங்காகத் திருப்பிக் கொடுக்கிறேன்' என்னும் சக்கேயுவின் வார்த்தைகள் நிகழ்கால வினைச்சொற்களாக உள்ளன. 'இன்று நான் உன் வீட்டில் தங்க வேண்டும்,' 'இன்று இந்த வீட்டிற்கு மீட்பு உண்டாயிற்று' என்னும் இயேசுவின் வார்த்தைகளில் முதன்மையாக இருப்பது 'இன்று' என்ற நிகழ்கால வார்த்தை.

கடவுளின் இரக்கம் என்றும் நம்மை நமது இன்றுகளில் மட்டுமே நிறுத்துகிறது. நான் நேற்று எப்படி இருந்தேன் என்பதை கடவுள் பார்ப்பதில்லை. அல்லது நீ நாளை இப்படி இருந்தால் நான் உன்னிடம் வருவேன் என நிபந்தனையும் அவர் விதிப்பதில்லை. இன்று நீ எப்படி இருக்கிறாயோ, அப்படியே நான் உன்னிடம் வருகிறேன் என நிகழ்காலத்தின் இறைவனாக இருக்கின்றார் நம் இறைவன்.

ஆண்டவரின் இரண்டாம் வருகைக்காக எதிர்நோக்குடன் காத்திருந்த தெசலோனிக்கிய திருச்சபைக்கு அறிவுறுத்தும் பவுலும் இன்று உங்கள் அழைப்புக்கு ஏற்ப உங்களைத் தகுதியாக்குங்கள் என்றும் நல்லெண்ணத்தால் தூண்டப்பெறும் நற்செயல்களில் நிலைத்திருங்கள் எனவும் இன்றைய இரண்டாம் வாசகத்தில் (காண். 2 தெச 1:11-2:2) எழுதுகின்றார்.

அவரின் பார்வை இயேசுவின் மேல், இயேசுவின் பார்வை அவரின்மேல் என்று ஆன போது, சக்கேயுவின் உள்ளம் ஒரு நொடிப்பொழுதில் புதுப்பிக்கப்பட்டது.

நம் கண்களும், அவர் கண்களும் சந்தித்தால்...