இவ் மறையுரையை வழங்குபவர்

அருட்பணி.இயேசு கருணாநிதி
Archbishop’s House, K. Pudur, Madurai 625 007, India
Email: yesu@live.in

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)









ஆண்டின் பொதுக்காலம் 26ஆம் ஞாயிறு

சாக்குப் போக்குகள்

எசேக்கியேல் 18:25-28
பிலிப்பியர் 2:1-11
மத்தேயு 21:28-32

'இந்தியாவில் குரங்குகளைப் பிடித்தல்' என்று ஆங்கிலத்தில் ஒரு கதை உண்டு. குரங்கு பிடிப்பவர்கள் ஒரு பெட்டியில் குரங்கின் கை நுழையும் அளவுக்கு சிறிய துவாரம் இட்டு குரங்குகள் நடமாடும் இடத்தில் வைத்துவிடுவர். அந்தப் பெட்டிக்குள் நிறைய பருப்பு வகைகளை வைப்பர். பருப்பு வகைகளைக் காணும் குரங்கு அந்த துவாரத்திற்குள் கையை விட்டு அவற்றைக் கை நிறைய அள்ளும். கை நிறைய அள்ளிவிட்டு கையை வெளியே எடுத்தால் கை வராது. ஏனெனில், கை நுழையும் அளவுக்கு அந்த துவாரம் பெரியதாகவும், மூடிய கை வெளி வராத அளவுக்கு சிறியதாகவும் இருக்கும். குரங்கு என்ன செய்யும்? பருப்புகளை விட்டுவிடுமா? இல்லை. பருப்புகளைப் பற்றிக்கொண்டு எடுக்க முடியாமல் இங்குமங்கும் தவிக்கும்போது, அது வேடர்கள் கையில் அகப்பட்டுக்கொள்ளும்.

நம் வாழ்விலும், நம்மை முன்னோக்கிச் செலுத்தாதவாறு நாமும் சில பருப்புகளை கை நிறையப் பிடித்துக்கொள்கிறோம். 'என்னால் இது முடியாது ஏனெனில் ...' என்று நிறைய சாக்குப்போக்குகளைச் சொல்கின்றோம். 'ஏனெனில்' என்ற வார்த்தைக்குப் பின் வரும் அனைத்தும் சாக்குப் போக்குகளே. நாம் விடமுடியாமல் பற்றிக்கொள்ளும் பருப்புகளே சாக்குப் போக்குகள். வெற்றியாளர்கள் சாக்குப் போக்குகள் சொல்வதில்லை. அவர்கள் விளைவுகள்மேல் கவனம் குவிப்பார்களே தவிர, காரணங்கள்மேல் அல்ல.

சில அலுவலகங்களில் நமக்குக் கீழே வேலை பார்ப்பவர்களிடம், 'ஒரு பிரிண்ட் எடுக்க வேண்டும்' என்று சொன்னால், உடனடியாக, அந்த வேளையை செய்யாமல் இருப்பதற்கான காரணத்தை அவர்கள் கண்டுபிடிப்பார்கள். 'இங்க் இல்லை', 'இணையம் வேலை செய்யவில்லை,' 'மற்ற வேலை ஓடிக்கொண்டு இருக்கிறது,' 'பென் டிரைவ் வேலை செய்யாது.' இங்க் இருக்கிறதா என்று பார்ப்பதும், இணையம் இருக்கிறதா எனப் பார்ப்பதும், வேலைகளை முதன்மைப்படுத்துவதும், கணிணியைச் சரியாக வைத்துக்கொள்வதும் இவர்கள் வேலைதான். ஆனால், அதைப் பற்றி அவர்கள் கண்டுகொள்ள மாட்டார்கள். நம் ஊரில் உள்ள நிறையக் கடைகளில் இதே நிலைதான் இருக்கும். ஏதாவது ஒன்று இருக்கிறதா? எனக் கேட்டுச் சென்றால், 'இல்லை' என்பார்கள். அடுத்த முறை சென்றாலும் அதே விடைதான் கிடைக்கும். இந்தப் பொருள் இந்த இடத்தில் தேவையாய் இருக்கிறது, அதை வாங்கி விற்பனை செய்யலாம் என்ற எண்ணம் அவர்களுக்குத் தோன்றாது. ஒரு வேலையைச் செய்து வெற்றி பெறுவதை விட, வேலை செய்யாமல் இருக்கக் காரணம் கண்டுபிடிப்பர்.

நம் ஆன்மீக வாழ்விலும் நாம் சாக்குப் போக்குகள் சொல்ல வழி இருக்கிறது என்றும், அப்படிச் செய்வது சரி அல்ல என்றும் அறிவுறுத்துகிறது இன்றைய இறைவாக்கு வழிபாடு.

இன்றைய முதல் வாசகம் (காண். எசே 18:25-28) எசேக்கியேல் நூலிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. எசேக்கியேல் இறைவாக்கினர் எரேமியாவின் சம காலத்தவர். இவர் தன் எருசலேம் நகர மக்களோடு பாபிலோனியாவுக்கு நாடுகடத்தப்படுகிறார். தங்களது நகரமும் ஆலயமும் தகர்க்கப்பட்டதை கண்முன்னே கண்டவர்களுள் இவரும் ஒருவர். நாடுகடத்தப்பட்டவர்கள் தங்களுது இந்த நிலைக்குக் காரணம் தங்கள் முன்னோர்களின் பாவம் என்றும், கடவுள் தங்களை அநீதியாக நடத்துகிறார் என்றும் முறையிடுகின்றனர். அந்த முறையீட்டுக்கு ஆண்டவராகிய கடவுள், இறைவாக்கினர் எசேக்கியேல் வழியாகத் தரும் பதிலிறுப்பே முதல் வாசகம். அவர்களின் செயலுக்கு அவர்களே பொறுப்பு என்று எடுத்துரைக்கின்றார் எசேக்கியேல். மேலும், இந்தப் பொறுப்பை அவர்கள் ஏற்றுக்கொண்டு மனம்திரும்ப வேண்டும் எனவும் அழைக்கின்றார்.

இரண்டாம் வாசகத்தில் (காண். பிலி 2:1-11), பவுல் தன் நெஞ்சுக்கு நெருக்கமான பிலிப்பி நகரத் திருஅவைக்கு சில அறிவுரைகளை வழங்குகின்றார். பிலிப்பி நகர மக்கள் தன்னல பேராவல்களாலும், இறுமாப்பு மற்றும் பெருமித உணர்வாலும் அலைக்கழிக்கப்பட்டு, பிரிவினைகள் மற்றும் சண்டை சச்சரவுகளை வளர்த்துக்கொண்டே இருக்கின்றனர். அவர்களுக்கு இரண்டு நிலைகளில் பவுல் அறிவுறுத்துகிறார்: (அ) தாழ்ச்சியோடு ஒருவர் மற்றவரோடு உறவாட வேண்டும். (ஆ) கிறிஸ்துவை முன்மாதிரியாகக் கொண்டு வாழ்ந்து, தங்களுக்குள்ளே சாக்குப் போக்குகள் சொல்வதைக் கைவிட வேண்டும். இரண்டாம் ஏற்பாட்டில் காணப்படும் கிறிஸ்தியல் பாடல்களில் மிகவும் அழகானதாக இருக்கின்ற ஒரு பாடலை எடுத்தாளுகின்ற பவுல், கிறிஸ்து கடவுளுக்கு இணையாக இருக்கும் நிலையை எந்தவொரு சாக்குப் போக்கும் சொல்லிப் பற்றிக்கொள்ளவில்லை என்றும், தன் பாதுகாப்பு வளையத்தை விட்டு வெளியேறி நம்மைப் போல ஒருவரானார் என்றும் நினைவுறுத்துகின்றார் பவுல்.

நற்செய்தி வாசகத்திற்கு (காண். மத் 21:28-32) முன்னர் உள்ள பகுதியில் யூதத் தலைவர்கள் இயேசுவின் அதிகாரம் பற்றி அவரிடம் கேள்வி கேட்கின்றனர். இயேசுவின் ஞானம், ஆற்றல், மற்றும் தாக்கம் கண்டு பொறாமை கொள்கின்ற அவர்கள் தங்களின் நேர்மையற்ற நிலையில் அவ்வாறு செய்கின்றனர். இந்தப் பின்புலத்தில் இயேசு, 'ஒரு தந்தையும் இரு மகன்களும்' என்னும் உவமையை முன்வைக்கிறார். கதையின்படி, மூத்த மகன் திராட்சைத் தோட்டத்திற்கு வேலைக்குச் செல்ல மறுக்கிறான். பின்னர் மனம் மாறி வேலைக்குச் செல்கின்றார். ஆனால், இளைய மகனோ போவதாகச் சொல்லிவிட்டு போக மறுக்கிறான். இரண்டாம் மகன், தொடக்கத்திலிருந்தே நேர்மையற்ற நிலையில் இருக்கிறான். இதன் வழியாக, இயேசு, தன்னை எதிர்த்தவர்களின் நேர்மையற்ற நிலையைச் சுட்டிக்காட்டுகின்றார். இளைய மகன் தோட்டத்திற்குச் செல்லாமல் இருக்க, தனக்கென சாக்குப் போக்குகளைக் கண்டறிவது போல, இயேசுவின் சம காலத்தவர்களும் சாக்குப் போக்குகளைக் கண்டறிகின்றனர்.

நாம் ஏன் சாக்குப் போக்குகள் சொல்கிறோம்?

1. துன்பம் ஏற்பது நமக்குப் பிடிப்பதில்லை. எடுத்துக்காட்டாக, வங்கிக்கு வருமாறு என்னிடம் ஒருவர் உதவி கேட்கிறார் என வைத்துக்கொள்வோம். அவருடன் செல்வதற்கு நான் என்னையே வருத்திச் செல்ல வேண்டும். இத்துன்பம் எனக்கு விருப்பமில்லை என்பதால், நான் ஏதாவது சாக்குப் போக்கு சொல்கிறேன்.

2. பொறுப்புணர்வு இல்லை அல்லது குறைவு. நம் முதற்பெற்றோர் பாவம் செய்தவுடன், ஒருவர் மற்றவரைச் சுட்டிக்காட்டுகின்றனரே தவிர, தங்கள் செயலுக்கான பொறுப்பை தாங்கள் ஏற்கத் தயங்கினர். பொறுப்பு ஏற்கத் தயங்கும் ஒருவர் எளிதாகச் சாக்குப் போக்கு சொல்வார்.

3. விமர்சனத்தைத் தவிர்ப்பதற்காக. நாம் ஒரு செயலைச் செய்து, அதனால் விமர்சனத்திற்கு ஆளாவதை விட, எதுவுமே செய்யாமல் இருத்தல் நலம் என்ற உணர்வும் சாக்குப் போக்குகள் சொல்ல நம்மைத் தூண்டுகிறது.

சாக்குப் போக்குகளால் வரும் தீமைகள் எவை?

1. நாம் வளர முடியாது. ஏனெனில், ஒவ்வொரு பொழுதும் நாம் பொறுப்பைத் தட்டிக் கழித்துக்கொண்டே இருப்பதால் வளர்ச்சி சாத்தியமில்லாமல் போகிறது. எடுத்துக்காட்டாக, நான் நன்றாக மறையுரை வைக்க வேண்டும் என விரும்புகிறேன். மறையுரை வைக்கும் திறனில் நான் வளர நிறைய வாய்ப்புகள் கிடைக்கும்போது, நான் சாக்குப் போக்கு சொல்லி வாய்ப்புகளைத் தள்ளிவிடுகிறேன். அப்படி நான் இருந்தால் வளர்ச்சி சாத்தியம் இல்லை.

2. என் நம்பகத்தன்மை குறையும். ஒன்றைச் செய்வதாக நான் ஒத்துக்கொண்டு, பின் சாக்குப் போக்கு சொல்லி அதிலிருந்து நான் பின்வாங்கினால், நான் பொய்யன் ஆவதோடு, என் நம்பகத்தன்மையும் குறையும்.

3. சாக்குப் போக்குகள் வாழ்வை மலடாக்கிவிடுகின்றன. எந்தவொரு முன்னேற்றமும் இல்லாமல் ஆக்கிவிடுகின்றன. என்னைச் சுற்றியுள்ள சூழலை அல்லது என் பெற்றோரை அல்லது என் சமூகத்தை நான் குறை சொல்லிக் கொண்டே இருந்தால், நான் என் வாழ்வில் கனிதர இயலாது. நான் அடுத்தவரை நோக்கி விரலைக் காட்டும் ஒவ்வொரு பொழுதும் என் வாழ்வை நான் மாற்றத் தயாராக இருப்பதில்லை.

இறுதியாக,

முதல் வாசகத்தில், பாபிலோனியாவில் அடிமைப்பட்டுக் கிடந்தவர்கள், தங்கள் குற்றங்களுக்கு தாங்கள் பொறுப்பில்லை என்று சொல்லி, பொறுப்புணர்வு இன்மை என்ற பருப்புகளைக் கைகளுக்குள் பிடித்துக்கொண்டனர்.

இரண்டாம் வாசகத்தில், பிலிப்பி நகர இறைமக்கள் தங்கள் தன்னலம் மற்றும் இறுமாப்பு உணர்வுகளைப் பருப்புகளாக ஏந்திக் கொண்டனர்.

நற்செய்தி வாசகத்தில், இயேசுவின் சம காலத்து யூதத் தலைவர்கள் தங்களது பொறாமை, முற்சார்பு எண்ணம், பிடிவாத உள்ளம் என்னும் பருப்புகளைக் கைநிறைய வைத்துக்கொண்டனர்.

விளைவு, அவர்கள் கையை வெளியே எடுக்க முடியாமல், வெறும் காரணங்களைத் தேடிக்கொண்டே இருந்தனர்.

ஆங்கிலத்தில், சாக்குப் போக்குகளை, 'lame excuses' என்று அழைக்கிறார்கள். ஏனெனில், சாக்குப் போக்குகள் நம்மை முடமாக்கிவிடுகின்றன.

சாக்குப் போக்குகள் விடுக்க, 'ஆண்டவரே, உம் உண்மை நெறியில் என்னை நடத்தி எனக்குக் கற்பித்தருளும்!' (காண். திபா 25:5) என்று திருப்பாடல் ஆசிரியரோடு இணைந்து செபிப்போம்.