இவ் மறையுரையை வழங்குபவர்

அருட்பணி.இயேசு கருணாநிதி
Archbishop’s House, K. Pudur, Madurai 625 007, India
Email: yesu@live.in

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)









ஆண்டின் பொதுக்காலம் 25ஆம் ஞாயிறு

எங்களோடு இவர்களையும் இணையாக்கிவிட்டீரே!

எசாயா 55:6-9
பிலிப்பியர் 1:20-24,27
மத்தேயு 20:1-16

மனித உணர்வுகளில் மேலோங்கி நிற்கின்ற உள்ளுணர்வு 'முக்கியமாக உணர்தல்' என்பதுதான். பசி மற்றும் பாலியல் உணர்வுகளைவிட சில நேரங்களில் இது நம்மேல் அதிக தாக்கத்தை ஏற்படுத்துகிறது. ஏனெனில், நம்மில் சிலர் பசியைக்கூடப் பொறுத்துக்கொள்வோம். ஆனால், மற்றவர்களைப் போல நடத்தப்படுவதை நாம் எளிதில் பொறுத்துக்கொள்வதில்லை. இது மனித உணர்வுகளில் காணப்படும் ஒரு பெரிய முரண். 'அனைவரும் சமம்' என்று எல்லா இடங்களிலும் முழங்கும் நாம், மற்றவரோடு சமமாக்கப்படுவதை விரும்புவதில்லை. அப்படி ஆக்கப்படுவது அநீதி என உணர்கிறோம்.

எடுத்துக்காட்டாக, நான் வங்கிக்குச் செல்கிறேன். நான் ஓர் அருள்பணியாளர் என்பதை உடனே அங்கிருக்கும் அனைவரும் அறிந்துகொண்டு, நான் எந்த வரிசையிலும் நிற்காமல் வேலை முடித்து வீடு திரும்ப வேண்டும் என நினைக்கிறேன். நான் செல்வதற்கு முந்தின தினம் வங்கியில் வேலை மாறுதல்கள் நடந்திருக்கிறது என வைத்துக்கொள்வோம். நான் அங்கே செல்கின்ற போது என்னை யாருக்கும் தெரியவில்லை. நான் எல்லாரோடும் அமர்ந்து என் வேலையை முடித்துவிட்டு வீடு திரும்பும் நிலை ஏற்படுகிறது. 'நான் ஒரு ஃபாதர். உங்கள் வங்கிக் கிளைக்குப் பின்னால் உள்ள கல்லூரியில் இருக்கிறேன்' எனச் சொன்னாலும், அங்கிருந்த பணியாளர், 'டோக்கன் எடுத்துட்டு உட்காருங்க! நம்பர் வந்தவுடன் போங்க!' என்று சொன்னால் எனக்குக் கோபம் வரும். 'என்னை மற்றவரோடு இணையாக்கிவிட்டீரே!' என்று என் உள்ளமும் கொதிக்கும். இனி இந்த வங்கிக்கு வரக்கூடாது என்று அவசர முடிவு தோன்றி மறையும். 

ஆக, மனிதர்களாகிய நம்மில் மேலோங்கி இருக்கும் 'முக்கியமாக உணர்தல்' என்னும் உணர்வு, நாம் நம்முடைய தான்மை அடிப்படையிலும், வேலை அடிப்படையிலும், திறன்கள் அடிப்படையிலும் மற்றவர்களைவிட மேலானவர்கள் என்ற உணர்வைத் தருவதோடு, நாம் ஒருவர் மற்றவரோடு இணையாக்கப்பட்டால் நம் உள்ளம் நெருடல் கொள்கிறது. நம் சமூகத்தில் உள்ள சாதியம் இந்த வேறுபாட்டை இன்னும் அதிகம் வளர்க்கிறது. இந்த சாதிய மேட்டிமை எண்ணம் இன்னும் பல்வேறு பரிணாமங்களைக் கொண்டிருக்கிறது. நாம் அனிச்சை செயலாகவே நம் மேட்டிமை உணர்வைக் காத்து வருகின்றோம்.

மத்தேயு நற்செய்தியாளரின் குழுமத்தில் இப்படிப்பட்ட ஒரு பிரச்சினை இருந்தது. ஏற்கெனவே யூதர்களாக இருந்து கிறிஸ்தவர்களாக மாறியவர்கள் அல்லது கிறிஸ்தவ நம்பிக்கைக்குள் பின்னர் வந்த புறவினத்தாரையும் மற்றவர்களையும் தாழ்வானவர்களாகக் கருதினர். மேலும், முதலில் வந்த தங்களுக்கே தலைமைத்துவம் கிடைக்க வேண்டும் எனக் கருதினர். இந்தப் பின்புலத்தில்தான் இன்றைய நற்செய்திப் பாடம் (காண். மத் 20:1-15) அமைகிறது.

இந்தப் பாடத்தின் கதையாடல் இரண்டு தளங்களில் அமைந்துள்ளது: 

(அ) திராட்சைத் தோட்டத்திற்கு வெளியே: (1) நேரம் இங்கே 6, 9, 12, 3, 5 என நகர்கிறது. (2) தோட்டப் பணியாளர்கள் ஒரே இடத்தில் நிற்க, நிலக்கிழார் உள்ளேயும் வெளியேயும் செல்கின்றார். (3) எல்லாருக்கும் வேலை செய்யும் ஆர்வம் இருக்கிறது. பின்னவர்கள் வேலைக்கு அமர்த்தப்படவில்லை. அவர்கள் சோம்பேறிகள் அல்லர். 

(ஆ) திராட்சைத் தோட்டத்திற்கு உள்ளே: (1) நேரம் இங்கே 5, 3, 12, 9, 6 என தலைகீழாக மாறுகிறது. கடைசியில் வந்தவர்கள் முதலில் கூலி பெறுகின்றனர். (2) நிலக்கிழார் இங்கே ஒரே இடத்தில் நிற்க, பணியாளர்கள் உள்ளேயும் வெளியேயும் செல்கின்றனர். (3) அதிகம் வேலை செய்தவர்கள் தங்கள் வேலைக்கு மதிப்பு குறைந்துவிட்டதாக முணுமுணுக்கின்றனர்.

'முன்னவரையும் பின்னவரையும் இணையாக்குதல்' - இதுவே இயேசுவின் எடுத்துக்காட்டின் மையப்பொருள். 

'கடைசியானோர் முதன்மையாவர், முதன்மையானோர் கடைசியாவர்' என்றால், இன்று ஆதிக்கம் செலுத்துபவர் நாளை அடிபணிவர் என்றும், இன்று அடிபணிபவர் நாளை ஆதிக்கம் செலுத்துவார் என்பதும் இதன் பொருள் அல்ல. மாறாக, முதல் மற்றும் கடைசி என இல்லாமல் அனைவரும் சமம் என்பதே இதன் பொருள். 

நிலாக்கிழார் மற்றும் தோழர் ஒருவரின் உரையாடல் மிகவும் எதார்த்தமாக உள்ளது:

'கடைசியில் வந்த இவர்கள் ஒரு மணி நேரமே வேலை செய்தனர். பகல் முழுவதும் வேலைப் பளுவையும் கடும் வெயிலையும் தாங்கிய எங்களோடு இவர்களையும் இணையாக்கிவிட்டீரே!'

'தோழரே, நான் உமக்கு அநியாயம் செய்யவில்லை. நீர் என்னிடம் ஒரு தெனாரியம் கூலிக்கு ஒத்துக்கொள்ளவில்லையா? உமக்குரியதைப் பெற்றுக்கொண்டு போய்விடும். உமக்குக் கொடுத்தபடியே கடைசியில் வந்த இவருக்கும் கொடுப்பது என் விருப்பம். எனக்குரியதை நான் என் விருப்பப்படி கொடுக்கக் கூடாதா? அல்லது நான் நல்லவனாய் இருப்பதால் உமக்குப் பொறாமையா?'

இந்த உரையாடலை, உளவியல் அடிப்படையில் பொருள்கொண்டால், நிறைய உணர்வுகள் இங்கே பரிமாறப்படுவதை நம்மால் உணர முடிகிறது. முதலில் வேலைக்கு வந்து, இப்போது முணுமுணுப்பவர்கள் தங்கள் மூளையிலிருந்து பேசுகின்றனர். மற்றவர்களை விமர்சனம் செய்கின்றனர். தங்கள் கஷ்டத்தை முன்வைக்கிறார்கள். தங்கள் உழைப்பு சுரண்டப்பட்டதாக அங்கலாய்க்கிறார்கள். ஒரு மணி நேரம் வேலை செய்தவருக்கு ஒரு தெனாரியம் என்றால், 12 மணி நேரங்களுக்கு 12 தெனாரியங்கள் என மனக்கணக்குப் போட்டதால் ஏமாற்றம் அடைகின்றனர்.

ஆனால், நிலாக்கிழாரின் அளவுகோல் வேறு மாதிரியாக இருக்கிறது. அவர் மனத்திலிருந்து வேலை செய்கிறார். அவர் எதையும் கணக்குப் பார்க்கவில்லை. கடைசியில் வந்தவர்களின் தேவை அறிந்த அவர், அனைவருக்கும் ஒரே ஊதியத்தை நிர்ணயிக்கின்றார். தான் சொன்ன வார்த்தையை தான் மதிப்பதாக அவர் மறுமொழி கூறுகிறார். மேலும், தானே நிலக்கிழார் என்பதையும், மற்றவர் வெறும் ஊழியர் என்பதையும் நினைவூட்டுகிறார். மேலும், 'இவர்களை எங்களுக்கு இணையாக்கிவிட்டீரே' என்று சொல்லும் அவர்கள், தலைவனுக்கு இணையானவர்கள் அல்லர் என்றும் மறைமுமாகச் சுட்டிக்காட்டுகிறார். 

ஆக, இன்றைய நாள் நமக்கு ஒரே நேரத்தில், நாம் ஒருபோதும் நம் தலைவருக்கு இணையானவர்கள் அல்ல என்றும், பணியாளர்கள் என்ற நிலையில் நாம் ஒருவர் மற்றவருக்கு இணையானவர்கள் என்றும் கற்றுத்தருகிறது.

இன்றைய முதல் வாசகத்தில் (காண். எசா 55:6-9), ஆண்டவராகிய கடவுள், தமது எண்ணங்களுக்கும் மனிதர்களின் எண்ணங்களுக்கும் உள்ள மலையளவு வித்தியாசத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றார். இரண்டாம் வாசகத்தில் (காண். பிலி 1:20-24,27), பவுல், தனது எண்ணங்களால் ஏற்படும் இழுபறி நிலையைச் சுட்டிக்காட்டுகின்றார்.

இன்றைய இறைவார்த்தை வழிபாடு முன்வைக்கும் வாழ்வியல் பாடங்கள் எவை?

(அ) தலைவன் - ஊழியக்காரன் வரையறை

நம் கிராமங்களில், ஆடு மேய்க்கும் தொழில் செய்பவர்களைப் பார்த்திருப்போம். ஆட்டு உரிமையாளர்கள் அமைதியாக இருப்பார்கள். ஆனால், ஆடு மேய்ப்பவர்களுக்கு இடையே சண்டை நடக்கும். 'தலைவனே அமைதியாய் இருக்கிறான். ஊழியக்காரனுக்கு என்ன சத்தம்?' என்ற சொலவடையும் இதையொட்டி உருவானதே. இந்த வரையறை நாம் சரியாக உணராதபோது நிறைய நிர்வாகம்சார் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். ஒவ்வொரு தளத்திலும் நான் யார், என் வரையறை என்ன என்பதை உணர வேண்டும். நிகழ்வில் வரும் முணுமுணுப்பவர் தன் வரையறையை மீறுகிறார். தலைவன் எப்படி நடக்க வேண்டும் என அவன் வரையறுக்க முயல்கிறான். 12 மணி நேரங்கள் தோட்டத்தில் நிற்பதால் அவன் ஒருபோதும் தலைவன் ஆகிவிட முடியாது. பல நேரங்களில் ஊழியக்காரர்கள் தங்களையே தலைவர்கள்போல எண்ணிக்கொள்வதால் நிறைய பிரிவினைகளும், பொறாமை மற்றும் போட்டி உணர்வுகளும் எழுகின்றன.

(ஆ) இணையாக்குதல்

ஒரு பக்கம் வாழ்க்கை நமக்கு தலைவன்-ஊழியக்காரன் வரையறையை வைத்திருந்தாலும், இன்னொரு பக்கம் அது நம் அனைவரையும் ஒன்றாகவே நடத்துகிறது. தலைவனுக்கும் ஊழியக்காரனுக்கும் பிறப்பு, இறப்பு, நேரம் என அனைத்தும் சமமே. அப்படி இருக்க, நான் என்னையே மற்றவருக்கு இணையாக்குவது குறித்து முணுமுணுத்தல் கூடாது. நான் என் கையில் இருக்கிற காசைப் பார்ப்பதை விடுத்து, எனக்கு அடுத்திருப்பவரின் கையில் உள்ள காசைப் பார்க்கும்போதுதான் முணுமுணுக்கத் தொடங்குகிறேன். மாறாக, அவன் கையும் என் கையும் ஒன்று என நினைத்தால் நான் வேற்றுமை பாராட்ட மாட்டேன். ஆக, இன்று நான் எந்த நிறுவனத்தின் அல்லது குழுமத்தின் அல்லது குடும்பத்தின் தலைமை நிலையில் இருந்தாலும், எனக்குக் கீழிருக்கும் மற்றவர்களோடு என்னை வைத்துப் பார்த்து, கொஞ்சம் பணிதல் நலம். ஏனெனில், நான் மேலிருப்பது என் தகுதியால் அல்ல. மாறாக, எனக்கு மேலிருப்பவரின் அருளால்தான். பாம்புக் கட்டத்தில், பாம்பு எப்போதும் கொத்தலாம்!

(இ) வாழ்வை இரண்டு நிலைகளில் வாழ்தல்

ஆங்கிலத்திலேயே இதை எழுதுகிறேன். 'To live because of' மற்றும் 'To live in spite of' என்னும் இரண்டு நிலைகளில் நம் வாழ்வை நாம் வாழலாம். முதல் நிலையில், என் விருப்பு-வெறுப்பு அனைத்தையும் மற்றவர் கன்ட்ரோல் செய்வார். நான் நன்றாக இருப்பேன், because அடுத்தவர் எனக்கு நன்றாக இருக்கிறார். ஆனால், இரண்டாம் நிலையில், என் விருப்பு-வெறுப்பு அனைத்தையும் நான் கன்ட்ரோல் செய்வேன். அடுத்தவர் என்னிடம் நன்றாக இல்லை என்றாலும் (in spite of), நான் அவரிடம் நன்றாக இருப்பேன். நிலக்கிழாருக்கு எதிராக முணுமுணுத்த அந்த இனியவர், முதல் நிலையில் வாழ்ந்தால் அடுத்த நாள் வேலைக்கு வர மாட்டார். இரண்டாம் நிலையில் வாழ்ந்தால் புன்முறுவலோடு வேலைக்கு வருவார். வாழ்க்கை என்னை நன்றாக நடத்தினால்தான், மற்றவர்கள் என்னை ஏற்றுக்கொண்டு எனக்கு முக்கியத்துவம் தந்தால்தான், என் உழைப்பு மதிக்கப்பட்டால்தான் நான் மகிழ்ச்சியாக இருப்பேன் என்றால் அது இயலாத காரியம். ஆனால், வாழ்க்கை என்னை நன்றாக நடத்தவில்லை என்றாலும், மற்றவர்கள் என்னை ஏற்றுக்கொள்ளவில்லை என்றாலும், என் உழைப்பு சுரண்டப்பட்டாலும் நான் எனக்குரிய கடமையைச் செய்வேன் என நினைத்தால் அங்கே மகிழ்ச்சி என் கையில். அதை எந்த நிலக்கிழாரும் என்னிடமிருந்து பறித்துவிட முடியாது! மேலும், நிலக்கிழாரும் இரண்டாம் நிலையில்தான் தன் வாழ்க்கையை வாழ்கிறார்.

இறுதியாக,

வாழ்க்கை என்ற திராட்சைத் தோட்டத்தில் நாம் நிற்பது அவரின் அழைப்பால்தான்.

அழைப்பால் வந்த நாம் உழைப்பால் அதை நமதாக்கிக்கொள்ள நினைத்தல் தவறு.

உழைத்த நாம் கையை நீட்டி வாங்கத்தான் முடியும்.

கையை விரித்துக் கொடுப்பவர் அவர்.

முணுமுணுக்க வேண்டாம்!

முடிந்தால், அவரின் தாராள உள்ளத்தை நாமும் பெற்றுக்கொள்வோம்!

எதையும் விமர்சித்து, எதையும் திறனாய்வு செய்து, எவருடைய தவற்றையும் சுட்டிக்காட்டி நாம் எதையும் சாதிப்பது இல்லை. ஏனெனில், நிலக்கிழார் தான் விரும்பியபடியே செய்கிறார். அவரின் விருப்பப்படி செய்ய அவருக்கு உரிமை உண்டு. ஏனெனில், அவர் நிலக்கிழார்!

'அவர் அனைத்திலும் நீதி உள்ளவர். அவர்தம் செயல்கள் யாவும் இரக்கச் செயல்களே!' (காண். திபா 145:17)