இவ் மறையுரையை வழங்குபவர்

அருட்பணி.இயேசு கருணாநிதி
Archbishop’s House, K. Pudur, Madurai 625 007, India
Email: yesu@live.in

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)









ஆண்டின் பொதுக்காலம் 24ஆம் ஞாயிறு

மன்னிப்பு தேவை!

சீராக்கின் ஞானம் 27:30-28:7
உரோமையர் 14:7-9
மத்தேயு 18:21-35

விவிலியத்தின் நீதித் தலைவர்கள் நூலில் வரும் சிம்சோன் நிகழ்வை வாசிக்கும்போதெல்லாம் எனக்குள் ஒரு கேள்வி எழுவதுண்டு. சிம்சோன் தன்னுடைய வாழ்வில் ஒரே ஒரு பெண்ணைக் காதலிக்கிறார். அந்தப் பெண் அவரை எதிரிகளிடம் விற்றுவிடுகின்றார். தன் வாழ்வில் ஒரே ஒரு முறை நிம்மதியாகத் தூங்கும் சிம்சோனுக்கு அந்த நொடி மடித்தூக்கமே இறுதித் தூக்கமாகிப் போகிறது. ஒருவேளை, சிம்சோன் மீண்டும் தெலீலாவைச் சந்தித்தால் அவரை மன்னித்திருப்பாரா? தெலீலா அவரை எப்படி எதிர்கொள்வார்? இப்படி நாம் நிறையக் கேள்விகளை விவிலியத்தில் எழுப்ப முடியும். தன்னை ஏமாற்றி தன்னிடமிருந்து ஆசியைப் பறித்துச் சென்ற யாக்கோபை ஈசாக்கு மன்னிப்பாரா? தன் மனைவியோடு உறவு கொண்டதோடு தன் உயிரையும் எடுத்துக் கொண்ட தாவீதை உரியா மன்னிப்பாரா? இயேசு கூட, தன் இறுதித் துன்பத்தின்போது, 'தந்தையே இவர்களை மன்னியும். தாங்கள் செய்வது இன்னதென்று அறியாமல் செய்கிறார்கள்' (காண். லூக் 23:34) என்று சொல்கிறாரே தவிர, 'நான் இவர்களை மன்னிக்கிறேன்' என்று அவர் சொல்லவில்லையே? அது ஏன்?

  இன்றைய நற்செய்தி வாசகத்தில் (காண். மத் 18:21-35), நான் எத்தனை முறை மன்னிக்க வேண்டும் எனப் பேதுரு இயேசுவிடம் கேட்கிறார். ஆக, மன்னிக்கும் உள்ளம் பேதுருவுக்கு இருக்கிறது. எத்தனை முறை என்பதுதான் அவரது கேள்வியாக இருக்கிறது. 'ஆண்டவரே, நான் மன்னிக்க வேண்டுமா?' அல்லது 'என்னால் மன்னிக்க முடியுமா?' என்ற கேள்வியை நாம் இப்போது எழுப்புகிறோம்.

நம்மால் ஏன் மற்றவர்களை மன்னிக்க முடிவதில்லை? மூன்று காரணங்கள்: (அ) நினைவாற்றல் - மனநலம் குறைந்தவர்கள் பேறுபெற்றவர்கள் என்றே நான் நினைப்பேன். ஏனெனில், அவர்கள் எதையும் நினைவில் வைத்துக்கொள்வதில்லை. தன்னைக் கடிக்க வரும் நாய்மேலும் அவர்கள் கல்லெறிவதில்லை. தன்னைக் கேலி பேசிய சிறுவர்களையும் அவர்கள் பழிதீர்ப்பதில்லை. நினைவு இல்லாமல் இருப்பது நலம் பல நேரங்களில். (ஆ) நீதியுணர்வு - நான் கஷ்டப்பட்டு ஒரு வேலை செய்கிறேன். அந்த வேலையை யாராவது குலைத்துவிட்டால் என்னால் மன்னிக்க இயலாமல் போய்விடுகிறது. நான் யாருக்கும் தீங்கு நினைக்கவில்லை, ஆனால், மற்றவர்கள் எனக்கு தீங்கு இழைக்கிறார்கள். இது நீதியல்லவே! என்ற கேள்வி மன்னிப்புக்குத் தடையாக இருக்கிறது. (இ) நொறுங்குநிலை உணராமை. தன் நொறுங்குநிலையை உணர்ந்த ஒருவர் அடுத்தவரை எளிதாக மன்னித்துவிடுவார். பேருந்து நிறுத்தம் ஒன்றில் மதுபாட்டில்கள் நிறையச் சிதறிக்கிடக்கின்றன. அங்கே நிற்பவர்களில் ஒருவர், 'இதைச் செய்தவனுகள சும்மா விடக்கூடாது!' எனப் பொங்குகிறார். இன்னொருவரோ, 'பாவம் ஒதுங்க இடம் இல்லாம இங்க உக்காந்து குடிச்சுருக்காங்க!' எனப் புன்முறுவல் பூக்கிறார். இரண்டாமவர், தன் வலுவின்மையை உணர்ந்தவராக இருப்பதால் மற்றவரின் நொறுங்குநிலையை அவரால் ஏற்றுக்கொள்ள முடிகிறது.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் வரும் பணியாளர் தன் சக பணியாளரை மன்னிக்க இயலாமல் போகக் காரணம் மேற்காணும் மூன்றாவது காரணமே. தன் கடன் மன்னிக்கப்பட்டவுடன் தன் வலுவின்மையை மறந்துவிடுகிறான். தானே அரசன் என்பதுபோல நினைத்து மற்றவனது கழுத்தை நெரிக்கிறான்.

முதல் வாசகம், நம் நீதியுணர்வை நெறிப்படுத்துகிறது. அதாவது, நான் வெஜிடேரியன் என்பதற்காக மாடு என்னை முட்டாது என நினைப்பது தவறு. நான் நீதியோடு நடந்தாலும் எனக்கு அநீதி நடக்காது என நினைப்பது அப்படிப்பட்டதுதான். அநீதியை மன்னித்துவிடுமாறு அழைக்கிறார் ஆசிரியர். மன்னிப்பதற்கு மிக எளிய வழியைக் காட்டுகிறது முதல் வாசகம்: 'உன் முடிவை நினைத்துப் பார்.' ஒவ்வொரு நாளையும் இறுதி நாளாக நினைத்து வாழ்பவர்கள் எளிதாக மன்னித்துவிடுவர். ஏனெனில், 'நாளை பழிவாங்கலாம்' என்று அவர்கள் கோபத்தைத் தக்கவைப்பதோ, அல்லது 'நாளை மன்னிக்கலாம்' என மன்னிப்பைத் தள்ளிப்போடுவதோ இல்லை.

பவுல் இரண்டாம் வாசகத்தில் இன்னொரு வழியைக் கற்றுக்கொடுக்கிறார்: 'எனக்கென வாழாமல் ஆண்டவருக்கென வாழ்வது.' ஆக, என்னை எவரும் இழிவுபடுத்தவோ, பெருமைப்படுத்தவோ இயலாது. ஏனெனில், எதையும் நான் பற்றிக்கொள்வதில்லை. ஏனெனில், நான் எனக்குரியவன் அல்லன்.

இறுதியாக, நன்றிகூறும் உள்ளம் எளிதில் யாரையும் மன்னித்துவிடும். ஆகையால்தான், 'என் உயிரே! ஆண்டவருடைய கனிவான செயல்கள் அனைத்தையும் மறவாதே!' என்கிறார் திருப்பாடல் ஆசிரியர் (காண். திபா 103).