இவ் மறையுரையை வழங்குபவர்

அருட்பணி.இயேசு கருணாநிதி
Archbishop’s House, K. Pudur, Madurai 625 007, India
Email: yesu@live.in

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)









ஆண்டின் பொதுக்காலம் 22ஆம் ஞாயிறு

கடவுளை 'unfriend' செய்வது

எரேமியா 20:7-9
உரோமையர் 12:1-2
மத்தேயு 16:21-27

நண்பர்களை நீக்குதல் (unfriending) - இன்று மிக எளிதான செயல்!

நம் கைபேசி மற்றும் சமூக வலைத்தளங்கள் நண்பர்களை நீக்குவதை எளிதாக்கியதுடன், 'நண்பர்களை நீக்கிவிடவா?' என்று நம்மிடம் அடிக்கடி கேட்கின்றன. நமக்கு வரும் மின்னஞ்சல்கள், அழைப்புகள், குறுஞ்செய்திகள், அறிவிப்புகள் என அனைத்தையும் நாம் 'ப்ளாக்' ('block') செய்வதுடன், அப்படி அனுப்புபவர்களை நாம் 'அன்ஃப்ரண்ட்' செய்யவும் முடியும்.

  நீண்டகால அர்ப்பணமும் அந்த அர்ப்பணத்தோடு வரும் தியாகமும் இன்றைய உலகத்திற்குப் பிடிக்காத ஒன்றாகிவிட்டது.

தன்மேம்பாடு (self-development) பற்றிப் பேசுகின்ற உளவியல் மற்றும் மேலாண்மையியல் காணொளிகள், 'அடுத்தவரை நம் வாழ்விலிருந்து நீக்குவதையும், அடுத்தவர்கள் நமக்குச் சுமையாக மாறிவிட்டால் அவர்களை அகற்றிவிடுவதையும், இந்த ஒரே வாழ்க்கையை நாம் தனியாக, இன்பமாக வாழ வேண்டும்' என்றும் கற்றுக்கொடுக்கின்றன. இத்தகைய தன்மையப் போக்கினால் இன்று நட்பு வட்டங்கள் மட்டுமல்ல, குடும்ப உறவுகளும் மிகவே சுருங்கிவிட்டன. உறவினர்கள் இணைந்து உருவாக்கும் வாட்ஸ்ஆப் குழுவிலும், ஒருவர் மற்றவரை, 'ப்ளாக்' செய்துவைக்கும் வழக்கம் பல இடங்களில் இருக்கிறது.

  இன்னொரு பக்கம், இந்த உலகம் நமக்கு நிறையத் தெரிவுகளை (choices) முன்வைக்கிறது (overchoice syndrome). ஒரு சூப்பர் மார்க்கெட் சென்று குளிர்பானம் வாங்க நினைத்தால், ஏறக்குறைய ஒரு நீண்ட அறை முழுவதும் குளிர்பானங்கள் அடுக்கிவைக்கப்பட்டுள்ளன. எதை வேண்டுமானாலும் நாம் எடுத்துக்கொள்ளலாம். இன்று நான் விரும்புவதையே நாளை நான் வாங்க வேண்டும் என்றல்ல. என் ரசனைக்கு ஏற்றவாறு நான் மாற்றிக் கொள்ளலாம். இதே மனப்பாங்கு என் வாழ்க்கையிலும் தொடர்கிறது. உறவுகளில் புதுமை விரும்பியும், புதிய அனுபவங்களை விரும்பியும் இன்று நிறைய தம்பதியினர் ஒருவர் மற்றவரை விட்டுப் பிரிந்து இன்னொருவருடன் செல்கின்றனர். கத்தோலிக்கத் திருஅவையினரையும் இது விட்டுவைக்கவில்லை. இந்தச் சபையிலிருந்து அந்தச் சபை, அதிலிருந்து இன்னொன்று என 'ஆன்மீகச் சுற்றுலா'  செல்லும் கிறிஸ்தவர்களும் இன்று நிறைய உருவாகிக்கொண்டிருக்கிறார்கள்.

அர்ப்பணம், பிரமாணிக்கம், தியாகம் - இந்த மூன்றுக்கும் நாம் தயாராக இல்லாதபோது, நம் மனித உறவுநிலைகளில் மட்டுமல்ல, கடவுளுக்கும் நமக்கும் உள்ள உறவு நிலையிலிருந்தும் தப்பி ஓடவே செய்கிறோம்.

கடவுளை நாம் நம் நட்புவட்டத்திலிருந்து நீக்கிவிடவும், அவரிடமிருந்து தப்பி ஓடவும் விரும்புகின்றோம்.

நாம் புனிதர்கள் மற்றும் மேன்மையானவர்கள் என வணக்கம் செய்யும் அனைவரும் ஒரு பக்கம் கடவுளோடு இணைந்து, அவருக்குப் பிரமாணிக்கமாய் இருந்ததோடு, இன்னொரு பக்கம், அவர்கள் சந்தேகங்களாலும், சோதனைகளாலும் அலைக்கழிக்கப்பட்டார்கள் என்பதை நாம் அறிவோம். அவர்கள் தங்கள் துன்பங்களை எப்படிக் கையாண்டார்கள் என்பது பற்றியும், கடவுளிடமிருந்து தப்பி ஓட விரும்பிய அவர்கள் கடவுளோடு எப்படி மீண்டும் இணைந்தார்கள் என்பதையும் எடுத்துரைக்கிறது இன்றைய இறைவாக்கு வழிபாடு.

இன்றைய முதல் வாசகப் பகுதி (காண். எரே 20:7-9), 'எரேமியாவின் கெத்சமனி' என்னும் பகுதியிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. பஸ்கூர் என்ற குருவுக்கும் எரேமியாவுக்கும் எழும் வாக்குவாதத்தில், பஸ்கூர், எரேமியாவைத் தாக்கிச் சிறையில் அடைக்கின்றார் (காண். எரே 20:1-2). எரேமியா எருசலேமுக்கும் அதன் ஆலயத்திற்கு எதிராக இறைவாக்கு உரைத்ததற்காகவும் பஸ்கூர் அவரைத் தண்டிக்கிறார். இஸ்ரயேல் மக்கள் தங்களுடைய பிரமாணிக்கமின்மையாலும், உடன்படிக்கை மீறுதலாலும் ஆண்டவராகிய கடவுளுக்கு எதிராகச் செயல்பட்டதாலேயே எரேமியா அவ்வாறு இறைவாக்குரைக்கின்றார். ஆனால், அதை பஸ்கூர் விரும்பவில்லை. இஸ்ரயேல் மக்கள் தங்கள் நெஞ்சுக்கு நெருக்கமாகக் கருதி அன்பு செய்த நகரமும் ஆலயமும் அழிந்துபோகும் என்ற செய்தியை, தெய்வநிந்தனையாகவும், நாட்டிற்கு எதிரான சதியாகவும் கருதினார் பஸ்கூர். தான் பிறந்த ஊருக்கு எதிராக தானே இறைவாக்குரைக்கின்ற நிலைக்கு ஆளான எரேமியா, தன்னை மக்கள் ஏற்றுக்கொள்ளாததோடு தனக்கு எதிராகக் கிளர்ச்சி செய்வதையும் உணர்ந்து, ஆண்டவராகிய கடவுளிடம் முறையிடுகின்றார்: 'ஆண்டவரே, நீர் என்னை ஏமாற்றிவிட்டீர்! நானும் ஏமாந்து போனேன்!'

எருசலேம் நகரையும், நகரின் மக்களையும், ஆலயத்தையும் எரேமியா மிகவே விரும்பினார். ஆனால், தன் மக்கள் ஆண்டவராகிய கடவுளுக்கு எதிராக சிலைவழிபாடு செய்து, உடன்படிக்கையை மீறியதால் வந்த தீங்கைத் தடுக்க அவர் இயலவில்லை. மாறாக, அந்தத் தீங்கை அவரே அறிவிக்க வேண்டிய கட்டாயத்திற்கு உட்படுத்தப்படுகின்றார். நகரின் அழிவைச் சொன்னாலாவது மக்கள் மனம் மாறுவார்கள் என நினைக்கிறார் எரேமியா. ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை. அவருடைய பணி தோல்வியில் முடிவதோடு, அவர் நிந்தைக்கும், அவமானத்திற்கும், சிறைத்தண்டனைக்கும், மரண தண்டனைக்கும் ஆளாகின்றார். இந்தத் தோல்வியில்தான் ஆண்டவராகிய கடவுள்முன் முறையிடுகின்றார் எரேமியா.

சிறு பிள்ளையாக இருந்தபோதே, எரேமியாவைத் தன் பணிக்கெனத் தெரிவு செய்கிறார் கடவுள். ஆனால், இளவலாக இருக்கின்ற எரேமியாவுக்கு இறைவாக்குப் பணி இப்போது கடினமாக இருக்கிறது: 'நான் நாள் முழுவதும் நகைப்புக்கு ஆளானேன். எல்லாரும் என்னை ஏளனம் செய்கின்றார்கள்.' 'அவர் பெயரைச் சொல்ல மாட்டேன்' என்று இறைவாக்குப் பணியைத் துறக்க நினைக்கின்றார். ஆனால், அவருடைய கிணறு வறண்டுபோன அந்தப் பொழுதில் தன் உள்ளத்தில் எழும் போராட்டத்தைக் கண்டுகொள்கின்றார்: 'உம் சொல் என் இதயத்தில் பற்றியெரியும் தீ போல இருக்கின்றது. அது என் எலும்புகளுக்குள் அடைபட்டுக் கிடக்கின்றது. அதனை அடக்கி வைத்துச் சோர்ந்து போனேன். இனி என்னால் பொறுத்துக்கொள்ள முடியாது.'

ஆக, வலியும் துன்பமும், ஏமாற்றமும், சோர்வும், விரக்தியும் தன்னைச் சூழ்ந்தாலும், தன் இறைவாக்குப் பணியைத் தொடரவே விரும்புகிறார் எரேமியா.

இன்றைய இரண்டாம் வாசகத்தில் (காண். உரோ 12:1-2), உரோமையருக்கு எழுதப்பட்ட திருமடலின் இறுதிப் பகுதியான அறிவுரைப் பகுதி தொடங்குகிறது. அறிவுரைப் பகுதியின் தொடக்கமாக, பவுல் இரண்டு வகை வாழ்க்கை நிலைகளை ஒப்பிட்டு, நம்பிக்கையாளர்கள் மேன்மையானதைத் தெரிவு செய்ய அழைப்பு விடுக்கின்றார். உலகப் போக்கிலான ஒழுக்கம் ஒருவகை, உடலைப் பலியாகப் படைத்தல் இன்னொரு வகை. 'உங்களைக் கடவுளுக்கு உகந்த தூய, உயிருள்ள பலியாக உங்களைப் படையுங்கள்' என்கிறார் பவுல். 'பலியாதல்' என்பது மிக முக்கியமான வார்த்தை. பலியாகின்ற ஒன்று தனக்கென எதையும் வைத்துக்கொள்ள இயலாது. பலியாக்கப்பட்ட ஒன்றை நாம் மீண்டும் பெற்றுக்கொள்ள இயலாது. ஆக, செல்வம், பெருமை, புகழ் என உரோமை அலைந்து திரிந்த அந்தக் காலத்தில், அவற்றுக்கு மாறாக, 'பலியிடுதல்' என்னும் செயலை முன்வைக்கிறார் பவுல். மேலும், தூய்மை அல்லது புனிதத்தில் வளர்வது என்பது, தானாகவே நடக்கிற ஒரு செயல் அல்ல, மாறாக, ஒருவர் தானே தெரிவு செய்து மேற்கொள்ள வேண்டிய ஒன்று என்பது பவுலின் கருத்து. இப்படி, ஒருவர் தன்னையே பலியாகத் தருவதன் வழியாகவே, அல்லது துன்பம் ஏற்பதன் வழியாகவே, அல்லது கடவுளிடமிருந்து தப்பி ஓடாமல் இருப்பதன் வழியாகவே, 'உள்ளம் புதுப்பிக்கப் பெற்று மாற்றம் அடைந்து, எது நல்லது, எது உகந்தது, எது நிறைவானது என்பதை' அறிந்துகொள்ள இயலும்.

நற்செய்தி வாசகம் (காண். மத் 16:21-27) கடந்த வார வாசகப் பகுதியின் தொடர்ச்சியாக இருக்கிறது. இயேசுவை மெசியா என அறிக்கையிட்ட பேதுரு, அந்த மெசியா நிலையானது துன்பத்தின் வழியாகவே வரும் என்பதை ஏற்றுக்கொள்ளத் தயங்குகிறார். 'ஆண்டவரே! இது உமக்கு வேண்டாம்! இது உமக்கு நடக்கவே கூடாது' என ஆண்டவரிடமிருந்து விலகிக்கொள்ள நினைக்கின்றார். இந்த நேரத்தில் அவர் அப்படி இருந்தாலும், இயேசுவின் உயிர்ப்புக்குப் பின், தலைமைச் சங்கத்தில் துணிந்து அனைவரையும் எதிர்கொள்கின்றார். துன்பத்திலிருந்து விலகத் துடிக்கும் பேதுருவுக்கு, துன்பத்தின் வழியாகவே சீடத்துவம் சாத்தியம் என எடுத்துரைக்கின்றார் இயேசு. 

மனித வாழ்வில் நாம் ஒருவர் மற்றவர்மேல் காட்டும் அர்ப்பணம் எந்த அளவுக்கு விலைமதிப்புள்ளதோ, அதே அளவுக்கு விலைமதிப்புள்ளது கடவுள்மேல் காட்டும் அர்ப்பணம். அல்லது அர்ப்பணத்திற்கு ஒவ்வொருவரும் ஒரு விலையைக் கொடுக்க வேண்டும். எடுத்துக்காட்டாக, ஒரு புத்தகம் எழுத வேண்டும் என்பது என் அர்ப்பணம் எனில், அந்த அர்ப்பணத்திற்காக நான் என் நேரம், ஆற்றல் என்னும் விலையைக் கொடுக்க வேண்டும். அல்லது என் நேரம் மற்றும் ஆற்றலை இழப்பதற்கு என்னையே கையளிக்க வேண்டும். இந்த இழப்பு தரும் துன்பத்திலிருந்து நான் விலகி நின்றால் அர்ப்பணம் எனக்குச் சாத்தியம் அல்ல.

மனித உறவுநிலைகளிலும் ஒருவர் மற்றவருக்கு இடையே உரசல் ஏற்படும்போது, அந்த வலியிலிருந்து உடனே தப்பித்து ஓடிவிட நினைக்காமல், அந்த அர்ப்பணத்தைச் சரிசெய்ய முயற்சி செய்ய வேண்டும். 'நீ ஏமாற்றிவிட்டாய்! நானும் ஏமாந்துபோனேன்!' என்ற எரேமியாவின் புலம்பல் நம் உதடுகளிலும் ஒலித்தாலும், கொஞ்சம் பொறுமையோடு இறைவனின் குரலைக் கேட்பது நலம்.

இன்றைய இறைவார்த்தை வழிபாடு விடுக்கும் வாழ்வியல் சவால்கள் எவை?

1. இன்று நான் எதிலிருந்து ஓடுகிறேன்?

எனக்குத் துன்பம் தருவது எது? அல்லது நான் எதிலிருந்து என்னையே நீக்கிக்கொள்ள நினைக்கிறேன்? எனக்குத் தீங்கிழைக்க நினைக்கும் உறவு அல்லது என் வளர்ச்சிக்குத் தடையாக இருக்கின்ற உறவு நிலையிலிருந்து நான் விலகி நிற்பது நலம். அது அர்ப்பணத்திற்கு எதிரானது அல்ல. மாறாக, அது தேவையான ஒன்று. ஆனால், வலி மற்றும் துன்பத்தின் காரணமாக நான் ஒன்றிலிருந்து தப்பி ஓடினால் அது தவறு. நம் மனம் பல நேரங்களில், சரியானவற்றை விட, இன்பம் தருபவற்றையே தெரிவு செய்ய விரும்புகிறது. 

2. வலியே மாற்றத்தைக் கொண்டுவருகிறது

நம் சமூக மற்றும் அரசியல் தளங்களில், வலி அல்லது துன்பம் ஏற்றல்தான் மாற்றத்தைக் கொண்டுவந்துள்ளது. நம் நாட்டின் விடுதலைப் போராட்டம் அல்லது அடிமைப்படுத்தப்பட்ட மக்களின் போராட்டம் என அனைத்திலும், வலியே மாற்றத்தின் வினையாற்றியாக இருக்கிறது. வலி ஏற்றல் நல்லது.

3. கடவுளைப் பற்றிக் கொள்வது

'கடவுளா? அல்லது மக்களா?' என்ற உள்ளப் போராட்டம் எரேமியாவின் உள்ளத்திலும், 'உலகம் சார்ந்த செயலா? அல்லது கடவுள் சார்ந்த செயலா?' என்ற உள்ளப் போராட்டம் உரோமைத் திருஅவையினரின் உள்ளங்களிலும், 'துன்பம் வழி மெசியா நிலையா? அல்லது சிலுவையில்லாத வாழ்வியல் நிலையா?' என்ற போராட்டம் பேதுருவின் உள்ளத்திலும் எழும்போது, கடவுளை அன்ஃப்ரண்ட் செய்யும் சோதனை அவர்களில் எழவே செய்கிறது. ஆனால், அச்சோதனையை அவர்கள் வென்றெடுக்கிறார்கள் - தங்கள் பொறுமையால்!

இறுதியாக,

கடவுளிடமிருந்து நம்மையே நீக்கிக் கொள்ளும், அல்லது நம் கிணறுகள் வற்றிப் போகும் நிலை வரும்போது, இன்றைய பதிலுரைப்பாடலை (காண். திபா 63) நினைவுகூர்தல் நலம். திருப்பாடல் ஆசிரியரோடு நாமும், 'கடவுளே! நீர் எனக்குத் துணையாய் இருந்தீர்! உம் இறக்கைகளின் நிழலில் மகிழ்ந்து பாடுகிறேன். நான் உம்மை உறுதியாய்ப் பற்றிக் கொண்டேன். உமது வலக்கை என்னை இறுகப் பிடித்துள்ளது' எனச் சொல்ல முடிந்தால், கடவுளோடு நாம் என்றும் நண்பர்களே!