இவ் மறையுரையை வழங்குபவர்

அருட்பணி.இயேசு கருணாநிதி
Archbishop’s House, K. Pudur, Madurai 625 007, India
Email: yesu@live.in

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)









ஆண்டின் பொதுக்காலம் 11ஆம் ஞாயிறு

துடைத்தெடுக்கும் தூய்மை!

2 சாமு 12:7-10,13
கலா 2:16-19,21
லூக் 7:36-8:3

கடவுள் நல்லவர் என்றால், அந்த நல்லவர் நம்மையும் நம் உலகையும் படைத்தார் என்றால், எல்லாவற்றையும் நல்லது எனக் கண்டார் என்றால், இந்த உலகிலும், நம்மிலும் பாவம் எப்படி வந்தது?

பாவத்தைச் செய்யும் சுதந்திரமும் கொடுத்துவிட்டு, பாவத்தை தண்டிக்க அவர் நம்மேல் கையை நீட்டுவது ஏற்புடையதா?

பாவத்திலிருந்து நாம் பெறும் விடுதலை கடவுளின் இரக்கத்தால் வருகிறதா? அல்லது நம் நற்செயல்களால் வருகிறதா? மீட்பால் வருகிறது என்றால் நம் நற்செயல்களின் அவசியம் என்ன? அல்லது நற்செயல்களால் வருகிறது என்றால் கடவுள் இரக்கமற்றவரா?

முதல் ஏற்பாட்டு இஸ்ரயேல் மக்களுக்கு அடையாளமாக இருந்தது அவர்களின் உடன்படிக்கை. அந்த உடன்படிக்கையில் நிலைத்து நிற்க மக்கள் கட்டளைகளைக் கடைப்பிடிக்க வேண்டும். இக்கீழ்ப்படிதல் அவர்களை கடவுளுக்கு ஏற்புடையவர்கள் ஆக்கியது. மேலும், முதன்மையான கட்டளை எது? என்ற கேள்வி கேட்கப்படும்போது, இயேசுவும், 'இறையன்பு,' மற்றும் 'பிறரன்பு' பற்றிய இக்கட்டளை மேற்கோள் காட்டுகின்றார். அப்படி இருக்க, இன்றைய இரண்டாம் வாசகத்தில், 'திருச்சட்டம் தேவையல்ல என்றும், திருச்சட்டம் பாவத்திற்கு வழிகோலுகிறது' என்றும் பவுல் சொல்வதை நாம் எப்படி எடுத்துக்கொள்ள வேண்டும்?

இன்றைய வாசகங்களின் பின்புலத்தில் இந்தக் கேள்விகளை வைத்துப் பார்ப்போம்.

முதல் வாசகத்தில் நாத்தான் மற்றும் தாவீது கதைமாந்தர்களை நாம் சந்திக்கின்றோம். இவர்களின் உரையாடலை நான்கு பகுதிகளாகப் பிரிக்கலாம்:

அ. கடவுளின் பரமாரிப்பு
ஆ. தாவீதின் பாவச்செயல்களும் தண்டனையும்
இ. தாவீதின் மனமாற்றம்
ஈ. கடவுளின் மன்னிப்பு

அ. கடவுள் தாவீதைத் தேர்ந்து கொண்டு திருப்பொழிவு செய்கின்றார். எதிரியின் கையிலிருந்து அவரைக் காப்பாற்றகின்றார். இஸ்ரயேல் மற்றும் யூதா என்று ஒட்டுமொத்த அரசையும் அவரின் உடைமையாக்கின்றார். நிறைய மனைவியரையும் கொடுக்கின்றார்.

ஆ. கடவுளின் பார்வையில் தாவீது செய்த தீமைகள் இரண்டு: (1) பிறன் மனையாளை தன் உடைமையாக்கியது. (2) உரியாவை வாளுக்கு இரையாக்கியது. இதற்குத் தண்டனை என்ன? தாவீதின் வீட்டின்மேல் ஓர் வாள் தொங்கிக் கொண்டே இருக்கும். தாவீதின் மகன்கள் தங்களுக்குள் அடித்துக்கொண்டு இறக்கின்றனர். எதிரியின் கை ஓங்குகின்றது.

இ. 'நான் ஆண்டவருக்கு எதிராக பாவம் செய்துவிட்டேன்' என மனம் மாறுகிறார் தாவீது.

ஈ. 'ஆண்டவர் உன் பாவத்தை நீக்கிவிட்டார். நீ சாகமாட்டாய்' என கடவுளின் மன்னிப்பை உறுதியளிக்கின்றார் தாவீது.

தன் தவற்றை உணர்ந்தவுடன் தாவீதை முழுமையாக மன்னிக்கின்றார் கடவுள்.
இந்த உரையாடல் நமக்கு இரண்டு விடயங்களை நினைவுபடுத்துகிறது.
அ. மனித கட்டின்மை (human freedom) அல்லது கட்டற்ற மனித உள்ளம். கடவுள் தாவீதின் எல்லாமாக இருந்தாலும், தாவீது அவர் போக்கில் செயல்படுவதற்கு அவருக்கு அனுமதி அளிக்கின்றார். அல்லது நாம் கடவுளின் சாயல் மற்றும் நன்மைத்தனத்தில் உருவாக்கப்பட்டிருந்தாலும், அந்த சாயலை அழித்துக்கொள்ளவும், நன்மைத்தனத்திலிருந்து விலகிச்செல்லவும் நமக்கு வாய்ப்பு இருக்கிறது.

ஆ. மனமாற்றம் என்ற ஒன்று மனித உள்ளத்தில் வந்துவிட்டால் கடவுள் மனிதரை முழுமையாக மன்னிக்கின்றார். நம் பழைய இயல்பை அப்படியே துடைத்தெடுத்துப் புதுப்பிக்கின்றார்.
இன்றைய இரண்டாம் வாசகத்தை மேலோட்டாமாகவும், ஆழமாகவும் பார்க்கலாம்:
மேலோட்டமான பார்வையில், திருச்சட்டம் மற்றும் நம்பிக்கை என்ற இரண்டு கூறுகளுக்கு இடையேயுள்ள முரண்பாட்டைச் சுட்டிக்காட்டி, 'திருச்சட்டம்' தன்னிலே வலிமையற்றது மற்றும் தாழ்வானது என்றும் சொல்லி, 'நம்பிக்கையை' உயர்த்திக் காட்டுகின்றார். 'நம்பிக்கை' என்ற வார்த்தை இங்கே முழுமையான கிரேக்கப் பொருளைச் சொல்லவில்லை. இங்கே பவுல் எதைக் குறிப்பிடுகின்றார்? மனிதர்கள் கடவுள்மேல் கொண்டிருக்கின்ற நம்பிக்கையையா? அல்லது அந்த நம்பிக்கையைத் தூண்டி எழுப்பும் கடவுளின் நம்பகத்தன்மையையா? கடவுளின் நம்பகத்தன்மை என்ற பொருளைத் தெரிவு செய்வதே சால்பு. மேலும், திருச்சட்டத்தின் இயலாமையை பவுல் விளக்குவதை வைத்து திருச்சட்டம் தேவையில்லை என்றும் சொல்லிவிட முடியாது. கலாத்திய திருச்சபையில் நிலவிய விருத்தசேதனம் என்னும் சட்டத்தின்மேல் எழுந்த பிரச்சினையைப் பின்புலமாக வைத்தே பவுல் இதை எழுதுகின்றார். ஆக, எழுதப்பட்ட இந்த இலக்கிய சூழலிலிருந்து (literary context) இதை வெளியே எடுத்துப் பார்க்கக் கூடாது.

ஆழமான பார்வையில், கடவுள் பவுலின் பழைய இயல்பைத் துடைத்துத் தூய்மையாக்கின்றார். அதாவது, ஒரு காலத்தில் திருச்சட்டத்தால் ஆட்கொள்ளப்பட்டு, ஆட்சி செய்யப்பட்ட பவுலை, கடவுள் ஆட்கொண்டு நிரப்புகின்றார். ஆக, இனி பவுலில் வாழ்வது 'திருச்சட்டம் அல்ல. கிறிஸ்துவே!' பழைய இயல்பில் இறந்து புதிய இயல்பில் பிறக்கின்றார் பவுல்.

பவுலின் மனமாற்றம் கடவுள் செயல்பட வழிவகுக்கிறது.
நற்செய்தி வாசகத்தைப் பார்ப்போம். மற்ற நற்செய்தி நூல்களில் மூன்று நிகழ்வுகளாகப் பதிவு செய்யப்பட்டதை ஒரே நிகழ்வாகச் சுருக்கிப் பதிவு செய்கின்றார் லூக்கா. (அல்லது ஒருவேளை ஒரே நிகழ்வாக இருந்ததை மற்ற நற்செய்தியாளர்கள் பிரித்து மூன்று நிகழ்வுகளாக்கிவிட்டனரா?)

அந்த மூன்று நிகழ்வுகள் எவை?
அ. இயேசு விருந்துண்பது
ஆ. பாவங்களை மன்னிக்கும் அதிகாரம் இயேசுவுக்கு உள்ளதா என்று மற்றவர்கள் எழுப்பும் கேள்வி
இ. பாவியான பெண் நறுமணத் தைலம் பூசுவது

'ஒரு ஊர்ல பரிசேயர் ஒருவர் இருந்தார். அவர் இயேசுவைச் சாப்பிட அழைத்தார்' என்று சொல்லும் லூக்கா, தொடர்ந்து, 'அதே ஊர்ல பாவியான பெண் ஒருவரும் இருந்தார்' என்கிறார்.

விருந்துக்கு அழைத்த பரிசேயர் இயேசுவுக்கு என்ன செய்தார் என்பதையோ, யார் யார் விருந்துக்கு வந்தார்கள், என்ன பரிமாறப்பட்டது என்பதையோ பற்றிச் சொல்லாமல், அழையாத விருந்தாளியாக உள் நுழைந்த அந்தப் பெண்ணைப் பற்றியே சொல்கின்றார் லூக்கா. பரிசேயர் என்னை செய்தார் (என்ன செய்யவில்லை?) என்பதை இயேசுவே பின் சுட்டிக்காட்டுகின்றார்.

பாவியான பெண் இயேசுவுக்குச் செய்ததை ஐந்து வினைச்சொற்களில் எழுதுகின்றார்: தொடுதல், கண்ணீர் விடுதல், நறுமணத் தைலம் பூசுதல், கண்ணீரால் துடைத்தல், மற்றும் முத்தமிடுதல். இயேசுவின் சமகால இலக்கியம் தொட்டு இன்று வரை பெண்கள் ஆண்களை தன்வசப்படுத்தும் இந்த ஐந்து செயல்களையும் ஒட்டுமொத்தமாகச் செய்கின்றார் இந்தப் பெண்.

இதைப் பார்த்த பரிசேயரின் உள்ளத்தில் ஒரு கேள்வி எழுகின்றது: 'இவர் ஓர் இறைவாக்கினர் என்றால் இப்படி நடக்க விடுவாரா?' என சந்தேகம் எழுப்புகின்றார். தப்பான ஆளை விருந்துக்குக் கூப்பிட்டுவிட்டோமோ என்றுகூட நினைத்திருப்பார். 'இவள் பாவியாயிற்றே' என தன் உள்ளத்தில் அப்பெண்ணைத் தீர்ப்பிடுகின்றார். இயேசுவையும், அந்தப் பெண்ணையும் எப்படி வெளியே அனுப்புவது என்று யோசிக்கத் தொடங்கியிருப்பார்.

'சீமோனே' என பரிசேயரை அழைக்கும் இயேசு விடுகதை ஒன்றைச் சொல்கின்றார். இங்கேதான் பரிசேயரின் பெயரை வாசகர் அறிந்து கொள்கின்றார். ஆனால் பெண்ணின் பெயரைக் குறிப்பிட மறுக்கின்றார் லூக்கா. விருந்துகளின்போது விருந்தினர்கள் ஒருவர் மற்றவருக்கு விடுகதைகள் சொல்லி பரிசுகள் கொடுப்பது வழக்கம். ஆனால் இன்று இல்லங்களுக்கு வரும் விருந்தினர்கள், வந்தவுடன் 'வைஃபை பாஸ்வேர்ட் சொல்றீங்களா?' என்றுதான் கேட்கிறார்கள். 'நீங்களே கண்டுபிடியுங்கள்!' என்று அதையே நாம் விடுகதையாகச் சொல்லலாம்!

இரண்டு கடனாளிகள். முதலாமவர் 500 தெனாரியமும் (5 இலட்சமும்), இரண்டாமவர் 50 தெனாரியமும் (50 ஆயிரமும்) கடன்படுகின்றனர். இருவருடைய பாவங்களையும் மன்னிக்கின்றார் கடன் கொடுத்த அந்த நல்ல மனிதர். இந்த இருவரில் யார் அவர் மீது அன்பு செலுத்துவார்? நிறைய கடன் வாங்கியவர்தான். இதுதான் மனித கணக்கீடு. கடன் மன்னிப்பு முதலிலும், அன்பு இரண்டாவதும் நடக்கிறது.

தொடர்ந்து சீமோனையும், அந்தப் பெண்ணையும் தராசின் இரண்டு தட்டுகளில் வைக்கும் இயேசு, அவர்கள் செய்ததையும், செய்யாததையும் பட்டியல் இடுகின்றார். தண்ணீர், முத்தம், தைலம் இந்த மூன்றும் சீமோனின் விருந்தோம்பலில் இல்லை. பாலைவன வாழ்க்கை முறையில் மணலிலும், வெயிலிலும், தூசியிலும் நடந்து வரும் ஒருவரின் பாதங்கைத் தண்ணீர் கொண்டு கழுவி வரவேற்பார் விருந்தோம்புபவர். அவரால் செய்ய முடியாதபோது, அவரின் வேலைக்காரர் அல்லது அடிமை இந்த வேலையைச் செய்வார். 'முத்தம் கொடுத்தல்' ஒரு வாழ்த்து மரபு. தலைக்கு தைலம் அல்லது எண்ணெய் தேய்த்தல் என்பது அழகியலை விட மருத்துவம் சார்ந்த செயலாகவே பார்க்கப்பட்டது.

அப்படிச் சொல்லி முடித்துவிட்டு, அன்பை முதலிலும், மன்னிப்பை இரண்டாவதிலும் வைக்கின்றார் இயேசு. இதுதான் கதையின் டுவிஸ்ட். ஒருவேளை இயேசு, 'இந்தப் பெண் அதிகம் மன்னிப்பு பெற்றார். ஆக, அதிகம் அன்பு செய்தார்' என்று இயேசு சொன்னால் என்ன நடக்கும்? பரிசேயர் தன் நன்மைத்தனம் குறித்து தற்பெருமை கொள்ளத் தொடங்கிவிடுவார். தன்னிம் குறைவான பாவங்களே இருப்பதாகவும், அந்தப் பெண்ணே பெரிய பாவி என்றும் சொல்வார். மேலும், மறைமுகமாக இயேசுவும் அந்தப் பெண்ணை 'பாவி' என்று சொல்வதுபோல ஆகிவிடும்.

'உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன,' என்று சொல்வதோடல்லாமல், 'உன் நம்பிக்கை உன்னை மீட்டது' என்கிறார் இயேசு.

'இவர் ஓர் இறைவாக்கினரா?' என்று பரிசேயர் எண்ணிக்கொண்டிருக்க, அந்தப் பெண்ணுக்கு மன்னிப்பையும், மீட்பையும் தந்து தான் ஒரு கடவுள் என்பதை குறிப்பாகச் சொல்கிறார் இயேசு.

தொடர்ந்து இயேசுவின் இறையாட்சிப் பணியையும், அந்தப் பணியில் அவரோடு உடனிருந்து அவருக்கு ஊக்கம் கொடுத்த பெண்களையும் குறிப்பிடுகின்றார் லூக்கா. இவர்களில் சிலர் இயேசுவால் நலம் பெற்றவர்கள். நோய் மற்றும் பேய்கள் நீங்கியவர்கள்.

தன் கண்ணீரால் இயேசுவின் பாதங்களைக் கழுவி, அவற்றைத் தன் கூந்தலால் துடைத்தெடத்த அதே நொடியில், அந்தப் பெண்ணின் பாவத்தையும் பழைய இயல்பையும் துடைத்தெடுக்கின்றார் இயேசு.

இன்றைய வாசகங்கள் நமக்கு விடுக்கும் வாழ்வியல் சவால்கள் எவை?
1. சூழலின் கைதிகளா நாம்?
எல்லாரும் போர்க்களத்தில் இருக்க, மதிய வேளையில் வீ;ட்டு மாடியில் உலாவிக்கொண்டிருக்கிறார் தாவீது. அவரின் பார்வையில் படுகின்றார் பெத்சேபா. தன் ஆட்சிக்கு உட்பட்ட எல்லாப் பொருள்களும், ஆட்களும் அரசரின் உடைமைகள் என்றாலும், அவள் மாற்றானின் மனைவியாக இருப்பதால் இங்கே பாவமாகச் சொல்லப்படுகின்றது. தாவீது சூழலின் கைதியா? ஒருவேளை அவர் போருக்குப் போயிருந்தாலோ, அல்லது வீட்டுக்குள் ஒதுங்கியிருந்தாலோ, அல்லது பெத்சேபா அந்த நேரத்தில் குளிக்க வராமல் இருந்தாலோ அவர் பாவம் செய்யும் வாய்ப்பு இல்லையோ?

பவுல் யூதராய் பிறந்ததால்தான் திருச்சட்டத்திற்குக் கட்டுப்பட்டவராக இருக்கிறார். யூதரல்லாதவர்களுக்கு திருச்சட்டம் பொருந்துவதில்லையே. பவுலின் சூழல்தான் அவரைப் பாவியாக்கியதோ?

பாவியான பெண் வேறு ஓர் வாழ்க்கைச் சூழலில் பிறந்திருந்தால், அல்லது பரிசேயரின் வீட்டில் பிறந்திருந்தால் தூய்மையாக இருந்திருக்க வாய்ப்பு இருக்குமோ?

நம் குடும்பம், பின்புலம், சூழல் போன்றவை நம் இருப்பு மற்றும் செயல் ஆகியவற்றைப் பாதித்தாலும், நம்மால் அச்சூழலையும் கடந்து முடிவெடுக்க முடியும். அதுதான் நம் பலம்.

2. பாவத்தின் குழந்தை பாவம்
உரியாவின் மனைவியை உரிமையாக்கி முதல் பாவம் செய்கின்றார் தாவீது. அந்தத் தவற்றை மறைக்க பொய் மற்றும் ஏமாற்று வேலையில் ஈடுபடுகின்றார். தவற்றை மறக்க முடியாமல் உரிiயாவையும் கொன்றழிக்கத் துணிகின்றார்.

இதுதான் பாவத்தின் இயல்பு.
பாவம் செய்யும் நானும் சில நேரங்களில் அதை மறைக்க அடுத்தடுத்து பாவம் செய்கிறேன். அல்லது, 'எல்லாரும் செய்கிறார்கள். நான் செய்தால் என்ன?' என்று எனக்கு நானே சமாதானம் செய்து கொள்கிறேன். பாவத்தோடு சமரசம் செய்து கொள்கிறேன்.

ஆக, பாவத்தை விட்டுவிடுதல் என்பது அதை மறைக்க ஒரு பிளாஸ்டிக் கோட்டிங் போடுவது அல்ல. மாறாக, அதை முழுமையாகத் துடைத்தெடுப்பது. இதைச் செய்ய நிறைய மனக்கட்டுப்பாடும், விடாமுயற்சியும் அவசியம்.

3. இறந்த காலம் அல்ல, இருக்கும் காலமே இறைவனின் காலம்!
பரிசேயர் சீமோன் பெண்ணின் இறந்தகாலத்தைப் பார்த்து அவரை, 'பாவி' என்கிறார். ஆனால், இயேசுவோ அவரின் இருக்கும் காலத்தை, நிகழ்காலத்தை மட்டுமே பார்க்கின்றார். தாவீதின் இறந்தகாலத்தைச் சுட்டிக்காட்டுகின்றார் நாத்தான். தாவீது மனம் மாறியவுடன் இறந்தகாலத்தை அப்படியே மறந்துவிடுகின்றார் கடவுள். தன் இறந்த காலத்தை இயேசுவின் சிலுவையில் அறைந்துவிடுகின்றார் பவுல்.
என் இறந்தகாலத்தை நான் நினைத்துப்பார்ப்பது அந்நிகழ்வுகளால் பாடம் கற்கவே மட்டுமே அன்றி, அந்நினைவுகளால் பின்னிழுக்கப்படுவதற்காக இருக்கக் கூடாது.

4. 'வாழ்வது நானல்ல. என்னில் கிறிஸ்துவே வாழ்கின்றார்'
இவ்வார்த்தைகளைச் சொல்லும் அளவிற்கு பவுல் எப்படி துணிச்சல் பெற்றார்?
இதே வார்த்தைகளை இன்று நான் சொல்ல முடியுமா? இன்று என்னில் வாழ்பவர் யார்?
அல்லது எது? கிறிஸ்து மட்டுமே என்னில் வாழ்ந்தால் எத்துணை நலம்!

5. அதிகக் கடனை மன்னிப்போம்!
இயேசுவின் விடுகதையில் வரும் அந்த கடன் கொடுப்பவரைப்போலத்தான் நம் உறவுநிலைகளில் நாம் இருக்க வேண்டும். நம் உறவு மற்றும் நட்பு நிலைகளில் ஒருவர் மற்றவரைக் காயப்படுத்தும் சூழல்கள் வரும்போது, துணிந்து அந்தக் கடனை மன்னிக்க வேண்டும். நிறைய கடனை மன்னிப்பவர் நிறைய அன்பைப் பெறுவார்.

6. துடைத்தெடுக்கும் தூய்மை!
கடவுளின் தூய்மை அவரின் இரக்கமாக வெளிப்படுகின்றது. கரும்பலகை என்னும் என் மனத்தை அவர் துடைக்க நான் என்னையே அவர் முன் நிறுத்தினால் போதும். அவர் தன் கரம் நீட்டித் துடைத்துத் தூய்மையாக்கிவிடுவார். கடவுளின் இரக்கம் கணக்குப் பார்ப்பதில்லை.

7. பணிவிடை செய்யும் பெண்கள்!
பெண்கள் மிக உன்னதமானவர்கள். புதிய உயிரைப் படைக்கும் சக்தி அவர்களில் இருப்பதால்தாம் என்னவோ, தங்களின் உடைமை மற்றும் உடனிருப்பு அனைத்தையும் கொண்டு தன் அன்பிற்குரியவரைப் புதிய படைப்பாக்கிவிடுகின்றனர்.

இறைவனின் இரக்கம் என்னும் தூய்மை என்னைத் தொட்டு துடைத்துவிட்டால், நானும் அதைப்பரவாலக்கம் செய்யலாமே!