இவ் மறையுரையை வழங்குபவர்

அருட்பணி.இயேசு கருணாநிதி
Archbishop’s House, K. Pudur, Madurai 625 007, India
Email: yesu@live.in

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)









ஆண்டின் பொதுக்காலம் 12ஆம் ஞாயிறு

சிட்டுக்குருவிகளை விட

எரேமியா 20:10-13
உரோமையர் 5:12-15
மத்தேயு 10:26-33

ழான் பால் சார்த் அவர்கள் எழுதிய 'நோ எக்ஸிட்' என்ற இருத்தியல் நாவலில் ஒரு வசனம் வரும். கதாநாயகன் தன்னுடைய காதலியைப் பற்றி, 'அவள் என்னைப் புழுவைப் போல உணரச் செய்கிறாள்' தன் நண்பனிடம் சொல்வான்.

இந்தக் கொரோனா காலத்தில் நாமும் ஏறக்குறைய புழுவைப் போல ஒருவர் மற்றவரால் கருதப்படுகிறோம். கைகொடுக்க கையை நீட்டிவிட்டு, அதைச் சட்டென இழுத்துக் கொள்வது, என் அறைக்குள் ஒருவர் வந்து சென்றவுடன் நான் அவர் கைவைத்த இடங்களை எல்லாம் துடைப்பது, மற்றவரைத் தள்ளி நிற்கச் சொல்வது, அருகில் வந்து யாராவது தும்மல் போட்டால் பதறி ஓடுவது என நிறையச் செய்கிறோம். ஆக, நம் அன்பிற்குரியவர்கள் அனைவரும் இன்று கொரோனா ஏந்தும் வாகனங்களாகப் பார்க்கப்படுகிறார்கள். அவ்வாறே நம்மையும் மற்றவர்கள் பார்க்கிறார்கள்.

ஆனால், இதற்கு நாம் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. நாம் வாழும் இச்சூழல் நம்மை இந்த நிலைக்கு ஆக்கிவிட்டது.

ஆக, நீங்களும் நானும் நம்மையே ஒரு புழுவைப் போல உணரும் இந்நாள்களில், இன்றைய இறைவார்த்தை வழிபாடு, நாம் புழு அல்ல என்பதை, 'நாம் சிட்டுக்குருவிகள் அல்ல' என்ற உருவகம் வழியாக எடுத்துச் சொல்கிறது.

இதைப் புரிந்துகொள்ளுமுன் மனித வாழ்க்கையின் நிலையை விவிலியம் சொல்லக் கேட்போம். சீராக்கின் ஞானநூல் ஆசிரியர், மனிதரின் பரிதாபத்துற்குரிய நிலையைப் பின்வருமாறு பதிவு செய்கிறார்: 'மேன்மைமிகு அரியணையில் அமர்ந்திருப்போர் முதல் புழுதியிலும் சாம்பலிலும் உழலத் தாழ்த்தப்பட்டோர் வரை ... எல்லாருக்கும் சீற்றம், பொறாமை, கலக்கம், குழப்பம், சாவுபற்றிய அச்சம், வெகுளி, சண்டை ஆகியவை உண்டு ... எல்லாருக்கும் எல்லா உயிரினங்களுக்கும் சாவு, படுகொலை, சண்டை, வாள், பேரிடர், பஞ்சம், அழிவு, நோவு ஆகியவை உண்டு' (காண். சீஞா 40:3-4,8-9). இதுதான் மானுடத்தின் நிலை. இதை மாற்ற முடியாது. இதை நாம் மாற்றிவிட்டதாக இறுமாந்திருக்க முடியாது.

ஆக, நாம் எல்லாருமே சிட்டுக்குருவிகள் போல, புழு போல உணரலாம்.

'ஓ பாசிட்டிவ்' இரத்த வகையினரைக் கொரோனா தீண்டாது என்றும், பெண்களைவிட ஆண்களைத்தான் கொரோனா தாக்குகிறது என்றும் சொன்னாலும், கொரோனா பற்றிய அச்சம் அனைவருக்கும் பொதுச்சொத்தாகவே இருக்கிறது.

'அச்சம்' அல்லது 'பயம்' - இது ஒரு கொடூரமான உணர்வு. உளவியலில், 'கோபம், பயம், தாழ்வு மனப்பான்மை, மற்றும் குற்றவுணர்வு' என்று நான்கு எதிர்மறை உணர்வுகளைக் குறிப்பிடுகிறார்கள். இந்த நான்கு உணர்வுகளில் மையமாக அல்லது அடிப்படையாக இருப்பது பயம். பயத்திற்கும் மற்ற மூன்று உணர்வுகளுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது: எனக்கு இன்னொருவர் மேல் இருக்கிற பயம் அவர்மேல் கோபமாக வெளிப்படுகிறது, என்னை நான் முழுமையற்றவனாகக் கருதி பயம் கொள்வதால் தாழ்வு மனப்பான்மை பிறக்கிறது, மற்றும் நான் செய்த தவற்றின் விளைவு பற்றிப் பயப்படுவதால் குற்றவுணர்வு வருகிறது.

ஆனால், பயம் என்பது எதிர்மறை உணர்வு என்று சொல்லி நாம் ஒதுக்கிவைக்க முடியாது. பயத்திற்கு நேர்முகமான பண்புகளும் இருக்கின்றன. தேர்வைக் கண்டு பயப்படுகின்ற மாணவன் கடினமாக உழைக்கிறான். தன் குடும்பத்தின் எதிர்காலம் பற்றி அச்சப்படுகின்ற குடும்பத் தலைவர் தேவையான சேமிப்பை மேற்கொள்கிறார். கொரோனா பற்றிய பயத்தால் நாம் நிறைய சுகாதார முறைகளைக் கடைப்பிடிக்கிறோம். மறுவாழ்வு பற்றிய பயம் இருப்பதால்தான் கொஞ்சம் மனிதாபிமானத்தோடு வாழ்கிறோம். இப்படியாக பயத்தினால் நிறைய நல்விளைவுகளும் ஏற்படுவது உண்டு.

இன்றைய முதல் வாசகத்திலும், நற்செய்தி வாசகத்திலும் பயம் தவிர்த்தல் அல்லது அச்சத்தை மேற்கொள்தல் வலியுறுத்தப்படுகிறது. இணைச்சட்ட நூலில் போர்கள் பற்றி அறிவுரை வழங்குகின்ற மோசே, 'உங்களில் அச்சமுற்று உள்ளம் சோர்ந்திருப்பவன் தன் வீட்டிற்குத் திரும்பிப் போகட்டும். இல்லையெனில், அவன் தோழனும் அவனைப் போல ஊக்கம் இழந்து விடுவான்' (காண். இச 20:8) என்று கூறுகின்றார்.

நம்பிக்கையின் மிகப் பெரிய எதிரி பயம். பயத்தைப் போக்குவதற்கான மிக நல்ல மருந்து நம்பிக்கை.

இன்றைய முதல் வாசகத்தில் (காண். எரே 20:10-13), எரேமியாவின் ஒப்புகை அல்லது முறையீட்டின் இரண்டாவது பகுதியை வாசிக்கின்றோம். இது ஓர் இறைவேண்டல் போலவும், அருட்புலம்பல் போலவும் இருக்கிறது: 'ஆண்டவரே! நீர் என்னை ஏமாற்றிவிட்டீர். நானும் ஏமாந்துபோனேன் ... என் நண்பர்கள்கூட என் வீழ்ச்சிக்காகக் காத்திருக்கிறார்கள் ... அவனைப் பழிதீர்த்துக்கொள்ளலாம் என்கிறார்கள்.' 'சுற்றிலும் ஒரே திகில்' என்னும் சொல்லாடல், ஆண்டவர் பஸ்கூர் என்ற குருவுக்குக் கொடுத்த பெயர். இவர் கோவில் காவலர்களின் தலைவர். இவர் எரேமியாவைப் பிடித்துச் சிறையில் அடைக்கின்றார். ஏன்? எரேமியா எருசலேம் நகர் அழிந்துவிடும் என்றும், நெபுகத்னேசர் அரசர் தலைமையில் பாபிலோனியர்கள் எருசலேமை முற்றுகையிட்டு, அதைச் சாம்பலாக்குவார்கள் என்றும் இறைவாக்குரைக்கின்றார். அப்படி அவர் நிறுத்திக்கொண்டால் பரவாயில்லை. தொடர்ந்து, எருசலேமின் அழிவுக்குக் காரணம் அதன் தலைவர்களும், அவர்களின் சிலைவழிபாடும் கீழ்ப்படியாமையும்தான் என்று சொல்கின்றார். இதனால் அவர் நாட்டின் அமைதியைக் குலைக்கிறார் என்று மக்கள் சொல்ல, அவர் சிறையில் அடைக்கப்படுகின்றார். பஸ்கூர் என்னும் குரு இவரைச் சிறையில் அடைத்ததால், அந்தப் பெயரைச் சொல்லியே, 'சுற்றிலும் ஒரே திகில்' என்று சொல்லியே மக்கள் இவரை ஏளனம் செய்கின்றனர். ஆக, இவரைப் பயம் ஆட்கொள்கிறது.

எரேமியா மூன்று காரணங்களுக்காக பயம் கொள்கின்றார்:

(அ) அவருடைய சொந்த ஊராரும், நண்பர்களும் அவருடைய சொற்களை ஏற்றுக்கொள்ள மறுக்கின்றனர். ஆக, உச்சக்கட்ட புறக்கணிப்பை உணர்கின்றார்.

(ஆ) தான் இறைவாக்குரைப்பது நடக்காமல் போனால் என்ன ஆகும்? என்று கடவுள்மேல் உள்ள நம்பிக்கையிலும் தளர்கிறார். ஏனெனில், பல நேரங்களில் அப்படித்தான் நடந்திருக்கிறது. கடவுள் ஒரு நகரைத் தண்டிப்பதாகச் சொல்லி இறைவாக்கினர்களை அனுப்புவார். பின் அதைத் தண்டியாமல் விடுவார். அவர் நல்ல பெயர் எடுத்துக்கொள்வார். அவருக்காக வரிந்து கட்டிக் கொண்டு சென்ற இறைவாக்கினர் கொல்லப்படுவர் அல்லது விரக்திக்கு உள்ளாவர்.

(இ) உள்ளச் சோர்வு. தான் செய்கின்ற வேலைக்கான பயனை உடனே காண இயலாதபோது சோர்வு வருகிறது. இதை அருள்பணியாளர்கள் வாழ்வில் காணலாம். ஒரு கணவனும் மனைவியும் திருமணம் முடித்தவுடன் அவர்களின் அன்பின் கனி ஒரு வருடத்தில் குழந்தையாக மலர்கிறது. ஆனால், ஓர் அருள்பணியாளர் ஒரு பங்குத்தளத்தில் 5 ஆண்டுகள் வேலை செய்தாலும், அவர் செய்த வேலையின் பயனை அவர் காண இயலாது, அல்லது அதைக் காணுமுன் அவர் மாற்றலாகிச் செல்வார். சில நேரங்களில் இறந்தும் போவார். இக்காரணத்தால் அருள்பணியாளர்களுக்கு இயல்பாகச் சோர்வு வருவதுண்டு. எரேமியாவும் அப்படிப்பட்ட சோர்வைத்தான் உணர்கின்றார்.

எரேமியாவின் பயம் எப்படி மறைகின்றது?

அவருடைய நம்பிக்கையால். எப்படி?

'ஆனால், ஆண்டவர் வலிமை வாய்ந்த வீரரைப் போல என்னோடு இருக்கிறார்' என்று நம்பிக்கை கொள்கின்றார் எரேமியா. ஆண்டவரின் உடனிருப்பு எரேமியாவுக்கு நம்பிக்கை கொடுக்கின்றது.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (காண். மத் 10:26-33), இயேசுவின் மறைத்தூதுப் பணி அறிவுரைப் பகுதியை வாசிக்கின்றோம். தன்னுடைய சீடர்களைப் பணிக்கு அனுப்புகின்ற இயேசு, அவர்கள் சந்திக்கப் போகும் தீமைகள் குறித்து எச்சரிக்கின்றார். தான் எதிர்கொள்ளும் சிலுவையைத் தன் சீடர்களும் எதிர்கொள்ள வேண்டும் என அறிவுறுத்துகின்றார்:

'காசுக்கு இரண்டு சிட்டுக் குருவிகள் விற்பது இல்லையா? ... எனவே அஞ்சாதிருங்கள்!'

இயேசுவின் சமகாலத்தில் இருந்த ஒரு பறவை சிட்டுக்குருவி. செல்ஃபோன் கோபுரங்கள் வந்த நாள் முதல் சிட்டுக்குருவிகள் மறைந்துவிட்டன. சிட்டுக்குருவிகளைக் கொல்வதற்கு அம்புகளும் குச்சிகளும் தேவையில்லை. கண்ணுக்குத் தெரியாத வான் அலை கூட அதைக் கொன்றுவிடும். அந்த அளவிற்கு வலுவற்றவைகள். அதாவது, அவை தம்மிலே வலுவானவை என்றாலும், வலுவற்ற ஒன்றின்முன் அவை விரைவாக வலுவிழந்துவிடுகின்றன. சீடர்களின் நிலையும் அப்படிப்பட்டதே. அவர்கள் தம்மிலே நிறைய ஆற்றல்களையும் திறன்களையும் கொண்டிருந்தாலும் எதிரிகள்முன் அவர்கள் வலுவற்றவர்களே.

இந்த உருவகத்தின் பொருள் என்ன?

(அ) கொசுறுக் குருவி

நாம் காய்கறிக் கடையில் கொசுறு கேட்பது உண்டு. நிறையக் காய்கறிகளுக்கு கறிவேப்பிலை கொசுறுவாகக் கொடுப்பது உண்டு. நகைக்கடையில் நாம் வாங்கும் நகைக்கு பை கொசுறு. துணிக்கடையில் கட்டைப் பை கொசுறு. கொசுறு அல்லது இலவசமாக வருவதை நாம் கண்டுகொள்வது கிடையாது. நாம் விலைகொடுத்த வாங்கிய தக்காளியில் புழு இருந்தால் முகம் வாடும் நாம், கறிவேப்பிலை வாடி இருந்தால் ஒன்றும் சொல்வது கிடையாது. லூக்கா நற்செய்தியில் இயேசு, 'இரண்டு காசுகளுக்கு ஐந்து குருவிகள்' (காண். லூக் 12:6) என்கிறார். இங்கே, 'காசுக்கு இரண்டு குருவிகள்' என்கிறார். காசுக்கு இரண்டு குருவிகள் என்றால், இரண்டு காசுக்கு நான்கு குருவிகள்தானே. இந்த ஐந்தாவது குருவிதான் கொசுறுக் குருவி. இலவசமாக வந்த குருவியைப் பராமரிக்கின்றார் கடவுள்.

(ஆ) ஆய்வுக் குருவி

சந்தையில் குருவிகள் வாங்க வருவோர், குருவிகளின் தரத்தைச் சோதிப்பது உண்டு. அப்படிச் சோதிப்பதற்காக, ஒரு குருவியைப் பறக்க விடுவர். சில நேரங்களில் அது பறக்கும். அல்லது குஞ்சாக இருந்தால் அது தரையில் விழும். தரையில் விழும் குருவிகூட 'தந்தையின் விருப்பம் இன்றி தரையில் விழாது' என்கிறார் இயேசு. ஆக, நாம் ஆய்வுக் குருவியாக இருந்தாலும் அச்சப்படத் தேவையில்லை.

(இ) எடுப்பார் கைப்பிள்ளை

நம் இல்லங்களில் செல்லப் பிராணிகள் வளர்ப்போர் சில நேரங்களில் தங்களின் கோபத்தை அவற்றின்மேல் காட்டுவார்கள். ஊரெல்லாம் சுற்றி வரும் கிளியைப் பிடித்து வளர்க்கிறேன் என்று சொல்லிவிட்டு, நாம் கோபம் கொள்ளும் நாட்களில் அதற்கு உணவளிக்க மறுக்கும்போது, அக்கிளி எடுப்பார் கைப்பிள்ளை ஆகிவிடுகிறது.

இயேசு தன்னுடைய சீடர்கள் இந்த மூன்று நிலைகளிலும் அச்சத்தை உணரலாம் என்று அவர்களை எச்சரிக்கின்றார்: அவர்கள் மற்றவர்களின் பார்வையில் இலவசங்களாகவும், ஆய்வுப் பொருள்களாகவும், எடுப்பார் கைப்பிள்ளைகளாகவும் தெரிவார்கள். அப்படிப்பட்ட நிலையில் அவர்கள் மிகுந்த அச்சத்திற்கு உள்ளாவார்கள். இந்த அச்சத்தைக் களைகின்றார் இயேசு.

'சிட்டுக்குருவிகள் பலவற்றைவிட நீங்கள் மேலானவர்கள்' என்கிறார்.

ஆக, நான் என்னுடைய இயல்பை விட நான் என்னையே பெரிதாக்கிப் பார்த்தால் இறுமாப்பு கொள்கிறேன், சிறியதாக்கிப் பார்த்தால் அச்சம் கொள்கிறேன். இறுமாப்பும் அச்சமும் ஆபத்தானவை.

நான் என் இயல்பு என்ன என்பதைப் புரிந்துகொண்டால் அங்கே அச்சத்திற்கு இடமில்லை.

ஆக, சீடர்கள் தங்களுடைய பணிவாழ்வில் தாங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் பற்றி அச்சம் கொள்ளும் சீடர்கள் கடவுளின் பராமரிப்பை உணர்ந்தால் அவர்களின் அச்சம் மறைந்துவிடும்.

இன்றைய இரண்டாம் வாசகத்தில் (காண். உரோ 5:12-15) பவுல் தன்னுடைய திருமடலில், நம்பிக்கை என்ற கருதுகோளிலிருந்து எதிர்நோக்கு என்ற கருதுகோளுக்குச் செல்கின்றார். 'குற்றத்தின் தன்மை வேறு, அருள்கொடையின் தன்மை வேறு' என்று எழுதுகின்றார். 'குற்றம்' என்பது ஆதாமை மையப்படுத்தியதாகவும், 'அருள்கொடை' என்பது கிறிஸ்துவை மையப்படுத்தியதாகவும் இருக்கிறது. 'குற்றம்' என்பதில் உள்ள பயம், 'அருள்கொடை' என்பதில் அது மறைகிறது.

இறுதியாக,

முதல் வாசகத்தில், தன்னைச் சிட்டுக்குருவி போல உணர்ந்தவர், ஆண்டவரைத் தன்னுடன் நிற்கும் வலிமை மிகுந்த வீரராகப் பார்த்து பயம் களைகின்றார்.

நற்செய்தி வாசகத்தில், பணியில் தாங்கள் சந்திக்கும் சவால்களால் தங்களைச் சிட்டுக்குருவிகள் போல உணர்ந்தவர்கள், கடவுளின் பராமரிப்பை உணர்ந்தவர்களாக அச்சம் தவிர்க்கின்றனர்.

இரண்டாம் வாசகத்தில், நம் அச்சம் அகன்றுபோகும் என்ற எதிர்நோக்கைத் தருகின்றார்.

கொரோனா காலத்தில் நாம் அனைவரும் சிட்டுக்குருவிகள்போலக் கையறுநிலையில் இருக்கின்றோம். கண்ணுக்குத் தெரியாத செல்ஃபோன் அலைகள் சிட்டுக்குருவிகளைக் கூட்டம் கூட்டமாகக் கொல்வதுபோல, இந்தக் கிருமி நம்மைக் கொல்கின்றது.

ஆனால், நாம் நினைவில் கொள்வோம்: 'சிட்டுக்குருவிகளைவிட நாம் மேலானவர்கள்.' ஏனெனில், திருப்பாடல் ஆசிரியர் கூறுவதுபோல, 'கடவுளை நாடித் தேடுகிறவர்களே, உங்கள் உள்ளம் ஊக்கமடைவதாக!' (காண். திபா 69:32).