இவ் மறையுரையை வழங்குபவர்

அருட்பணி.இயேசு கருணாநிதி
Archbishop’s House, K. Pudur, Madurai 625 007, India
Email: yesu@live.in

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)









ஆண்டின் பொதுக்காலம் 29ஆம் ஞாயிறு

தளராத கை!

விப 17:8-13
2 திமொ 3:14:4:2
லூக் 18:1-8

'கை' என்றால் ஆற்றல். நம் கைகளின் நம் உடலின் ஒரு பகுதியாக இருந்தாலும், அடுத்தவர்களுக்கும், அடுத்தவைகளுக்கும் இடையே உள்ள தூரத்தைக் குறைப்பதும், மற்றவர்களுக்கும் நமக்கும் உள்ள உறவை உருவாக்கவும், அதில் நிலைத்திருக்கவும், தொழில் கருவிகளை பயன்படுத்தி நம் உழைப்பை வெளிப்படுத்தவும் செய்பவை நம் கைகளே.

இன்றைய விஞ்ஞானம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் நம் கைகளுக்கு நாம் தரும் பயன்பாட்டை வேகமாக குறைத்துக்கொண்டே வருகின்றது. அம்மி கொண்டு மசால் அறைத்த கைகள் இன்று மிக்சியை மட்டுமே 'ஆன்' செய்கின்றன. பொத்துப்போகும் அளவிற்கு துணி துவைத்த கைகள் இன்று வாஷிங் மெஷினின் பொத்தானை மட்டும் அழுத்துகின்றன. தொலைபேசியில் எண்களை சுழற்றிய கைகள் இன்று செல்ஃபோன்களில் எண்களைத் தொட மட்டுமே செய்கின்றன. கண்புருவத்தின் அசைவுகளை வைத்து செல்ஃபோனின் தொடுதிரையையும், கணிணியின் தொடுதிரையையும் இயக்கும் தொழில்நுட்பம் நம் வாசலருகே காத்திருக்கின்றது.

கைகளின் பயன்பாடு குறைந்தாலும் கைகள் இல்லாத மனிதரையும், கைகளுக்கு முக்கியத்துவம் இல்லாத மனித வாழ்வையும் நாம் எண்ணிப்பார்க்க முடியாது. மற்றொரு பக்கம் நம் கைகள் சில நேரங்களில் தளர்ந்து போகின்றன. 'உனக்கு ஃபோன் பண்ணி பண்ணி என் கையே உடைஞ்சுடுச்சு!' என்று சில நேரங்களில் சொல்லியிருப்போம்.

'தளர்ந்துபோன கைகளைத் திடப்படுத்துங்கள்.
தள்ளாடும் முழங்கால்களை உறுதிப்படுத்துங்கள்' என முழங்குகின்றார் எசாயா (35:3).

இரண்டு பேரின் கைகளைத்தான் இன்றைய முதல் (காண். விப 17:8-13) மற்றும் மூன்றாம் (காண். லூக் 18:1-8) வாசகங்களில் பார்க்கின்றோம்.

இன்றைய முதல் வாசகம் அமலேக்கியருக்கும் இஸ்ரயேல் மக்களுக்கும் நடந்த போர் பற்றிப் பேசுகிறது. இஸ்ரயேல் மக்களுக்கான வாக்களிக்கப்பட்ட நாடு அவர்களுக்கு தயாராக தட்டில் வைத்து கொடுக்கப்படவில்லை. மாறாக, அவர்கள்தாம் அதை வெற்றி கொள்ள வேண்டும். வாக்களிக்கப்பட்ட நாட்டை நோக்கிச் செல்லும் வழியிலும் அவர்களுக்கு ஏராளமான தடைகள் இல்லை. விப 17 இரண்டு தடைகளைப் பற்றிச் சொல்கிறது: ஒன்று, தண்ணீர் இல்லை. கடவுள் பாறையிலிருந்து தண்ணீர் வரச் செய்கின்றார். இரண்டு, அமலேக்கியர்கள். அமலேக்கியர்கள் மிகவும் கொடுமையானவர்கள். நிறைய ஆயுதங்களையும், வளங்களையும் வைத்திருந்தவர்கள். ஒவ்வொரு ஊரையும் கடக்கும்போது சிலர் இஸ்ரயேல் மக்களுக்கு தாங்களாக வழி விட்டனர். சிலர் அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அப்படி எதிர்ப்பு வந்தபோது இஸ்ரயேல் மக்கள் மாற்று வழியைக் கண்டுபிடித்தனர். சிலர் அவர்களோடு போரிட்டனர். அமலேக்கியர் இந்த மூன்றாம் வகையினர்.

இவர்களோடு போர் நடக்கிறது. போருக்கு யோசுவா தலைமை தாங்குகின்றார். 'நீ அமலேக்கியரை எதிர்த்து போரிடு. நான் கடவுளின் கோலைக் கையில் பிடித்தவாறு குன்றின் உச்சியில் நின்றுகொள்வேன்' என்று யோசுவாவிடம் சொல்கிறார் மோசே. இங்கே ஒன்றை நாம் கற்றுக்கொள்ள வேண்டும். வாழ்வில் வெற்றிக்கு இரண்டும் தேவை: 'நம் செயலும் தேவை', 'இறைவனின் அருள்கரமும் தேவை' - 'யோசுவாவின் ஆற்றலும் தேவை,' 'மோசேயின் செபமும் தேவை.'

குன்றின் மேல் ஏறி நிற்கும் மோசே தம் கோலை வானை நோக்கித் தூக்கியவாறு இருக்கிறார். கோலின் கனமும், வெயிலும், நின்று கொண்டிருத்தலும் மோசேக்கு சோர்வை உருவாக்குகின்றன. கை சற்று தளர்கிறது. கை தளர்ந்து தாழும்போதெல்லாம் இஸ்ரயேல் மக்கள் தோல்வி அடைகின்றனர் என யாரோ கண்டுபிடித்து ஆரோனுக்குச் சொல்ல, ஆரோனும் கூர் என்பவரும் வேகமாக இயங்குகின்றனர். ஒரு கல்லை எடுக்கின்றனர். மோசேயை அதில் அமர வைக்கின்றனர். இவர்கள் இரண்டுபேரும் ஆளுக்கு ஒருபுறமாக நின்று மோசேயின் கரம் தாழாதவாறு பார்த்துக்கொள்கின்றனர். (ஒருவேளை இவர்களுக்கு கை வலித்தால் என்ன நடக்கும்?!!!) யோசுவா போரை முடிக்கின்றார். அமலேக்கியர் அழிந்து போகின்றனர்.

'கைகளை உயர்த்துதல்' என்பது 'இறைவேண்டல் செய்தல்' என்பதற்கான உருவகம். இறைவன் மேலிருக்கின்றார் எனவும், நாம் கீழிருக்கின்றோம் என்றும் உணர்கின்ற மனித மனம் இறைவனை நோக்கி கண்களையும் கைகளையும் உயர்த்துகின்றது. கண்களை உயர்த்துவதற்கு நமக்கு ஆற்றல் தேவையில்லை. ஆனால் கைகளை உயர்த்துவதற்கு நிறைய ஆற்றல் தேவை.

மேலும், கையை ஒருமுறை உயர்த்தினால் மட்டும் போதாது. தொடர்ந்து உயர்த்திக் கொண்டே இருக்க வேண்டும்.

வாழ்வின் வெற்றி இரண்டு விடயங்களில் அடங்கியிருக்கிறது:

அ. யோசுவா போல தொடர்ந்து போராடுவது
ஆ. மோசே போல தொடர்ந்து செபிப்பது
போராடவும் கைகள் தேவை. செபிக்கவும் கைகள் தேவை. இந்த இரண்டு நிலைகளிலும் கைகள் தளர்ந்துவிடவே கூடாது.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (லூக் 18:1-8) கைம்பெண் ஒருவரின் கைகளைப் பற்றி நாம் வாசிக்கின்றோம். யூத சமூகத்தில் கைம்பெண்கள் நிலை மிகவும் மோசமாக இருந்தது. கைம்பெண் என்பவர் கணவனை இழந்த மனைவி. யூத ஆண்கள் ஒருவரை திருமணம் செய்து கொண்டு மனைவியாக்கிவிட்டு, மற்ற நிறைய பெண்களை வைப்பாட்டிகளாக வைத்துக்கொள்வது வழக்கம். கணவர் இறக்குமுன்பே இந்த வைப்பாட்டிகள் தங்களுக்கு வேண்டியதை அவரிடம் எழுதி வாங்கி சாதித்துக் கொள்வார்கள். கணவர் இறந்தவுடன் மனைவிக்கு ஒன்றும் இருக்காது. கொஞ்ச நஞ்ச சொத்துக்களையும் கணவரின் சகோதரர்கள், சகோதரிகளும், பிள்ளைகளும் எடுத்துக்கொள்வார்கள். வாயில்லாப் பூச்சியாக யாரிடமாவது ஒட்டிக் கொண்டு காலத்தைக் கடத்த வேண்டும் கைம்பெண்கள். மேலும் கணவன் முதலில் இறந்து ஒரு பெண் கைம்பெண் ஆனாள் என்றால் அது அவளது பாவம் என்று சொல்லப்பட்டது. ஆக, கணவனும் இல்லை, சொத்துபத்தும் இல்லை, கடவுளும் இல்லை என்ற ஒருநிலையில் நிர்கதியாய் நின்றவர்களே கைம்பெண்கள்.

அப்படிப்பட்ட ஒரு கைம்பெண் தனக்கு உள்ள ஒரு பிரச்சினையை (என்ன பிரச்சினை என்று குறிப்பிடப்படவில்லை) தீர்த்து வைக்குமாறு நடுவர் ஒருவரை நாடுகின்றார். நடுவர் அல்லது நீதித்தலைவர் என்பவர் யாரிடமும் பாரபட்சம் காட்டாமல், ஆண்டவருக்கு அஞ்சி தீர்ப்பு வழங்க வேண்டும் என்பது மோசேயின் சட்டம். ஆனால், நம் நடுவர் இந்த இரண்டையும் கண்டுகொள்ளவில்லை. இன்றைய நற்செய்தியின் உவமையில் வரும் நடுவரின் பண்புகள் இரண்டு வார்த்தைகளில் சொல்லப்படுகின்றன: 'இவர் கடவுளுக்கும் அஞ்சுவதில்லை,' 'மனிதர்களையும் மதிப்பதில்லை.' இந்த இரண்டு பண்புகளை இவரே தனக்குள் சொல்லிக்கொள்வதாக லூக்கா மறுபதிவும் செய்கின்றார்.

இப்படிப்பட்ட ஒருவரிடம்தான் முறையிடுகின்றார் நம் கைம்பெண். நிர்கதியாய் நிற்கும் இவரின் நிலை இன்னும் பரிதாபமாகிறது. ஆனால் அவர் மனம் தளரவில்லை. அவரின் கால்கள் நடுவரின் வீட்டை நோக்கி நடக்க தளரவில்லை. அவரின் கைகள் நடுவரின் வீட்டை தட்டுதவதற்கு தளரவில்லை. அவரின் விடாமுயற்சி அவருக்கு வெற்றியைக் கொடுக்கிறது. ஒரு கட்டத்தில் நடுவர், 'எனக்கு இந்தப் பெண் தொல்லை கொடுத்துக்கொண்டே இருக்கிறாள். என் கண்களுக்கு கீழே குத்திக் கொண்டே இருக்கிறாள் (இப்படித்தான் இருக்கிறது கிரேக்க மொழிபெயர்ப்பு)' என்று சொல்லி தீர்ப்பு வழங்க விருப்பம் தெரிவிக்கின்றார். நேர்மையற்ற நடுவர் நமக்கு நள்ளிரவு நண்பரை நினைவுபடுத்துகின்றார். 'கதவு பூட்டியாயிற்று. என் பிள்ளைகளும் உறங்குகின்றார்கள்' என்று தட்டிக்கழிக்கும் நண்பர் தொந்தரவின் பொருட்டு எழுந்து கதவைத் திறந்து அப்பம் கொடுக்கின்றார்.

தொடர்ந்து இயேசு கடவுளின் நன்மைத்தனத்தை பதிவு செய்கிறார். தம்மை நோக்கி அல்லும் பகலும் அழைப்பவர்களுக்கு கடவுள் இன்னும் வேகமாக நீதியோடு செயலாற்றுகின்றார் என்று சொல்லும் இயேசு, மானிட மகன் மீண்டும் வரும்போது மண்ணுலகில் நம்பிக்கையைக் காண்பாரா? என்ற கேள்வியையும் எழுப்புகின்றார்.

கைம்பெண்ணின் கைகளை தளராமல் வைத்திருந்தது அவரின் நம்பிக்கையே. முதல் வாசகத்தில் மோசேயின் கைகளை தளராமல் வைத்திருந்தது அவரின் நம்பிக்கையும் அவரின் உடனிருந்தவர்களின் நம்பிக்கையுமே.

ஆக, நம்பிக்கை இருந்தால் நம் கைக்கு தளர்ச்சி இல்லை.

இன்றைய இரண்டாம் வாசகத்தில் (காண். 2 திமொ 3:14:4:2) திமொத்தேயுவுக்கான தன் அறிவுரையை தொடர்ந்து பதிவு செய்யும் பவுல், இறைவார்த்தையின் ஆற்றல் பற்றியும், அந்த இறைவார்த்தையைப் போதிப்பதன் அவசியம் பற்றியும் எழுதுகின்றார்.

இறைவன் நமக்கு சொன்ன இறைவார்த்தையின் சாராம்சம் நம்பிக்கையே. அவர் தன்னை நோக்கி நாம் எப்போதும் கரங்களை நீட்ட நம்மை அழைக்கின்றார். 'மலைகளை நோக்கி என் கண்களை உயர்த்துகின்றேன். எங்கிருந்து எனக்கு உதவி வரும்? விண்ணையும் மண்ணையும் உண்டாக்கிய ஆண்டவரிடமிருந்தே எனக்கு உதவி வரும்' (121:1-2) என்னும் திருப்பாடல் ஆசிரியரின் வரிகளும் நமக்கு நம் கண்களையும், கைகளையும் கடவுளை நோக்கி உயர்த்துவதன் அவசியத்தைச் சொல்கின்றன.

மோசே, பவுல், கைம்பெண் கொண்டிருந்ததைப் போன்ற தளராத கரங்களை நாம் பெறுவது எப்படி?

1. கை - உள்ளும், வெளியிலும்

அமலேக்கியரோடு நடைபெற்ற போரில் வெற்றி பெற காரணமாக இருந்தவை இரண்டு கைகள் - மோசேயின் கை, யோசுவாவின் கை. மோசேயின் கை கடவுளை நோக்கி இருந்தது. யோசுவாவின் கை எதிரியை நோக்கி இருந்தது. மோசேயின் கை மேல் நோக்கி இருந்தது. யோசுவாவின் கை கீழ் நோக்கி இருந்தது. நம் கைகளும் இந்த இரு திசைகளில் இருக்க வேண்டும். நம் உள்ளம் என்னும் கை இறைவனை நோக்கியும், வெளியில் இருக்கும் கை ஒருவர் மற்றவரை நோக்கியும் இருக்க வேண்டும். இப்படி இருப்பது எவ்வளவு நாட்கள்? நாம் எண்ணியது நிறைவேறும் வரை. ஆக, விடாமுயற்சியோடும் பொறுமையோடும் நீட்டிக்கொண்டே இருக்க வேண்டும்.

மேலிருந்து சில நேரங்களில் பதில் வராமல் இருக்கலாம். கீழே எதிரிகள் பெருகிக் கொண்டே போகலாம். ஆனால், ஒருபோதும் நாம் விடாமுயற்சியை இழந்துவிடக் கூடாது.

2. இறைவார்த்தையை அறிவி!

'இறைவார்த்தையை அறிவி. வாய்ப்பு கிடைத்தாலும், கிடைக்காவிட்டாலும் இதைச் செய்வதில் நீ கருத்தாய் இரு. கண்டித்துப் பேசு. கடிந்து கொள். அறிவுரை கூறு. மிகுந்த பொறுமையோடு கற்றுக்கொடு' என திமொத்தேயுவுக்கு அறிவுறுத்துகின்றார் பவுல்.

இறைவார்த்தை என்பது நாம் எப்படி இருந்தாலும் பரவாயில்லை என்று புண்ணுக்கு கட்டுப்போடுவது அல்ல. மாறாக, சில நேரங்களில் இறைவார்த்தை நம் புண்ணை தோண்டி விடவும், புண் பரவும் பட்சத்தில் அந்த உறுப்பை நீக்கிவிடவும் கூடியது. இறைவார்த்தையின்படி வாழ்வதற்கும், இறைவார்த்தையைக் கற்றுக்கொள்வதற்கும் நிறைய பொறுமை தேவை.

3. தளரா நம்பிக்கை

'மனந்தளராமல் எப்பொழுதும் இறைவனிடம் வேண்டுவதற்கு இயேசு ஓர் உவமை சொன்னார்' என்றுதான் இன்றைய நற்செய்தி வாசகம் தொடங்குகின்றது. இறைவேண்டலில் மனம் தளரக் கூடாது. நான் கடவுளை ஒருமுறை அழைத்தேன். ஆனால் அவர் பதில் சொல்லவில்லை. அத்தோடு நான் நிறுத்திக் கொள்ளலாமா? இல்லை. தொடர்ந்து அழைத்துக் கொண்டே இருக்க வேண்டும். நாம் ஒருவரிடம் ஒரு விஷயத்தை சொல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கும்போது அடுத்த நபர் லைனில் வரும் வரை நாம் அவரின் எண்ணை அழைத்துக் கொண்டே இருக்கிறோம். அதுபோல இறைவனை நாம் அழைத்துக் கொண்டே இருக்க வேண்டும்.

4. ஒரே குறிக்கோள்

இந்தக் கைம்பெண் நிலையில் நான் இருந்தால் என்ன செய்வேன்? 'அடப்போடா நீ!' என்று நடுவரிடம் சொல்லிவிட்டு, அந்தப் பணம் வந்தால் என்ன, வராட்டா என்ன என ஓய்ந்திருப்பேன். ஏன்? எனக்கு வேறு பணம் இருப்பதால், அல்லது ஆப்ஷன் இருப்பதால். நம் வாழ்வில் நிறைய ஆப்ஷன் இருப்பது ஆபத்தாக முடிகிறது. ஏனெனில் நம்மால் எதையும் முழுவதுமாக செய்ய முடிவதில்லை. இதைச் செய்து முடிக்காவிட்டால் பரவாயில்லை என நினைக்கிறோம். நான் எனக்கே சவால் விடுவதில்லை. சவால் விட்டாலும் சமரசம் செய்து கொள்கிறேன். நம் கைம்பெண்ணுக்கு வேறு வாய்ப்பே இல்லை. ஆகையால் தான் பிடித்த பிடியில் உறுதியாக நிற்கின்றார். வாழ்க்கை நாம் இப்படித்தான் வாழ வேண்டும். ஒலிம்பிக்கில் தங்கம் வாங்கும் வரை ஓயாமல் உழைக்கின்ற வீராங்கனைகள், வீரர்கள் போல குறிக்கோள் ஒன்றை மட்டும் வைத்து அதை நோக்கி ஓட வேண்டும். இப்படி ஓடுவதற்கு நிறைய தியாகங்கள் தேவை. இந்தக் கைம்பெண் பசி மறந்து, தாகம் மறந்து, தூக்கம் மறந்து நடுவரின் வீடே கதியென்று ஓடிக்கொண்டே இருக்கிறார். அவர் சோர்ந்து போகவில்லை.

மற்றொரு பக்கம் பார்த்தால், அடுத்தவரின் பண்பு நம் வாழ்க்கை ஓட்டத்தை நிறுத்திவிடக்கூடாது. 'அவர் கடவுளுக்கு அஞ்சுவதில்லை. மனிதரை மதிப்பதில்லை' என்பதற்காக நானும் அப்படி இருக்கத் தேவையில்லை. அவருக்காக என் குறிக்கோளை விட்டுக்கொடுக்கத் தேவையில்லை.

நான் சில நேரங்களில் மற்றவர்களுக்குப் பிடிக்காது என்பதற்காக என் பண்புகளிலும், குணங்களிலும் சமரசம் செய்து கொள்கிறேன். என் முதன்மையானவைகளையும் நான் இரண்டாம் நிலைக்குத் தள்ளிவிடுகிறேன். அப்படி நான் இருக்கக் கூடாது.

5. நம்பிக்கையைக் காண்பாரோ?

'கிடைக்கும்' என்ற நம்பிக்கைதான் கைம்பெண்ணின் கைக்கு உரம் தருகின்றது. அதில் அவர் சந்தேகப்படவே இல்லை. மேலாண்மையியலில் இதைத்தான் அதிகமாக முன்வைக்கின்றனர். ஒன்றை அடையும்வரை அது கிடைக்கும் என்ற நம்பிக்கை 100 சதவிகத்திற்கு ஒரு புள்ளியும் குறையாமல் இருந்துகொண்டே இருந்தால்தான் வெற்றி கிடைக்கும். 'ஒன்று இல்லை என்றால் இன்னொன்று!' என்று நமக்கு காதல், படிப்பு, பணி, பயணம் என எல்லாவற்றிற்கும் சாய்ஸ் இருப்பதால் நம் நம்பிக்கை சில நேரங்களில் குறைந்துவிடுகிறது. இந்த நம்பிக்கை குறைபாட்டையே இயேசுவின் கேள்வி சுட்டிக்காட்டுகிறது.

நம் மனதில் தட்டியது கிடைக்கும் வரை நம் கைகளை தளரவிட வேண்டாம். தளராத கையை வெற்றி தரும்!