இவ் மறையுரையை வழங்குபவர்

அருட்பணி.இயேசு கருணாநிதி
Archbishop’s House, K. Pudur, Madurai 625 007, India
Email: yesu@live.in

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)









ஆண்டவரின் இராவுணவுத் திருப்பலி

இறுதிவரையும் அன்பு செலுத்தினார்!

விடுதலைப் பயணம் 12:1-8,11-14
1 கொரிந்தியர் 11:23-26
யோவான் 13:1-15

நேற்று மாலை 'திராவிடம் 100' என்னும் யூட்யூப் அலைவரிசையில், றே;றும்-இன்றும் என்ற தொடர்நிகழ்ச்சியில், திரு. சுபவீ அவர்களின் உரையைக் கேட்டேன். உரையின் தலைப்பு 'நாங்களும் நன்னாத் தெருக் கூட்டுவோம்'. உரை, கடந்த ஏப்ரல் 5 அன்று இரவு 9 மணிக்கு 9 நிமிடங்கள் நடந்தேறிய தீப்பந்த நிகழ்வு பற்றி இருந்தாலும், உரையின் தொடக்கம் மிகவும் கவனிக்கத்தக்கது. அவரின் வார்த்தைகளை நான் இங்கே அப்படியே பதிவு செய்கிறேன்:

'இந்தக் கரோனோ கெடுபிடி தளர்ந்தபின்பு ஒருமுறை கேரளாவுக்குப் போய், ரேஷ்மா என்கிற செவிலியரை நேராகப் பார்த்து தலைதாழ்ந்த வணக்கங்களைச் சொல்லிவிட்டு வர வேண்டும் என்று தோன்றுகிறது. யார் அந்த ரேஷ்மா என்று பலருக்கும் தெரிந்திருக்கலாம். நாளேடுகளில், குறிப்பாக மலையாள நாளேடுகள் அனைத்திலும் அந்த செய்தி வந்திருக்கிறது. தமிழில் ஒன்றிரண்டில்தான் பார்க்க முடிந்தது. அந்த செவிலியருடைய முழுப் பெயர் ரேஷ்மா மோகன்தாஸ் என்றிருக்கிறது. கோட்டயத்தில் ஒரு மருத்துவமனையில் பணியாற்றிய அவர் வயதான பெரியவர்கள் இரண்டு பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டபோது, ஒரு பிள்ளையைப் போல, செவிலியைப் போல அல்ல, ஒரு பிள்ளையைப் போல அருகிருந்து பார்த்துக்கொண்டிருக்கிறார். பெரியவர் பெயர் ஆபிரகாம், வயது 93. அந்த அம்மாவின் பெயர் மாரியம்மா, வயது 88. இரண்டு பேருக்கும் அந்த முகக் கவசத்தைக் கூட அவர்கள் வயது காரணமாக மாட்டிக்கொள்ள இயலவில்லை. அதை மாட்டினால் எங்களுக்கு மூச்சு திணறுகிறது என்று சொன்னதற்குப் பிறகு, அதுவும் வேண்டாம் பார்த்துக்கொள்ளலாம் என்று சொல்லிவிட்டு, அவர்களுக்கு ஒவ்வொரு முறையும் என்ன தேவையோ, அவர்களோடு கேட்டு, பேசி, வேண்டியதைச் செய்துகொடுத்து, இப்படி எங்களுக்கு ஒரு மகள் இருந்தால்கூட செய்யமாட்டாள் என்று அந்தப் பெரியவர்கள் சொல்கிற அளவுக்கு, அத்தனை அன்பும் பாசமும் கனியக் கனிய பார்த்துக்கொண்ட அந்த செவிலி ரேஷ்மாவுக்கு வயது வெறும் 32. அந்தப் பெரியவர்கள் இரண்டு பேரும் நலம் பெற்று கொரோனாவிலிருந்து மீண்டுவிட்டார்கள். இந்த ரேஷ்மாவுக்கு கொரோனா தொற்றிக்கொண்டது. இதுதான் அதனுடைய மிகப்பெரிய சோகம். நேற்றைக்கு மருத்துவமனையிலிருந்து அவர் வெளியேறுகிறார். நிமிர்ந்த தலையோடு. ஹோல்டிங் ஹெர் ஹெட் ஹை என்றுதான் அந்தப் பத்திரிக்கை எழுதியிருக்கிறது. கொஞ்சமும் வருத்தமோ தாழ்வு மனப்பான்மையோ எதுவும் இல்லாமல், நான் அவர்களுக்குப் பணியாற்றுகிறபோது எனக்குத் தொற்றிக்கொள்ளக் கூடும் என்று கருதினேன். இருந்தாலும் குற்றவுணர்வு இல்லை. இரண்டு பெரியவர்களைக் காப்பாற்றிவிட்ட பெரிய மகிழ்ச்சி எனக்கு இருக்கிறது. கண்டிப்பாக மீண்டும் வருவேன். இந்தக் கொரோனாவைத் தோற்கடித்துவிட்டு மறுபடியும் இந்த மருத்துவமனைக்கு வருவேன். இதே மருத்துவமனையில் மறுபடியும் பெரியவர்களை, மற்றவர்களை நான் பணியாற்றிக் காப்பாற்றுவேன் என்று சொல்லிவிட்டு, அந்தப் பெண் புறப்படுகிறபோது, நமக்கு அப்படியே சிலிர்த்துப் போகிறது. இன்னமும் மனிதர்கள் இந்த உலகத்தில் இருக்கிறார்கள். மனித நேயம் மிச்சப்பட்டுக் கிடக்கிறது என்று தோன்றுகிறது.'

நிற்க.

இன்று நாம் ஆண்டவரின் இராவுணவுத் திருப்பலியைக் கொண்டாடுகிறோம். இன்றைய நாள் பெரிய வியாழன் என்றும், கட்டளை வியாழன் என்றும் அழைக்கப்படுகிறது. 'இது என் உடல், இது என் இரத்தம்' என்று சொல்லி, இயேசு நற்கருணையை ஏற்படுத்தியதை, 'இதை என் நினைவாகச் செய்யுங்கள்' என்று பணிக்குருத்துவத்தை ஏற்படுத்தியதை, 'நீங்களும் ஒருவர் மற்றவருடைய பாதங்களைக் கழுவ வேண்டும்' என்று பணிவிடை செய்வதை முதன்மைப்படுத்தியதை, 'நீங்கள் ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள்' என்று அன்புக் கட்டளை கொடுத்ததை இன்று நாம் நினைவுகூர்கின்றோம்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (காண். யோவா 13:1-15) வரும் ஒரு அருள்வாக்கியத்தை நம்முடைய சிந்தனையின் மையப்பொருளாக எடுத்துக்கொள்வோம்: 'உலகில் வாழ்ந்த தமக்குரியோர்மேல் அன்பு கொண்டிருந்த அவர் அவர்கள்மேல் இறுதிவரையும் அன்பு செலுத்தினார்' (யோவா 13:1).

'தமக்குரியோர்' என்றால் யார்?

இயேசு 'தமக்குரியோர்மேல்' மட்டும்தான் அன்பு செலுத்தினாரா? எல்லாரையும் அன்பு செலுத்தவில்லையா? 'பகைவருக்கும் அன்பு காட்டுங்கள்' (காண். மத் 5:44) என்று சொன்னவர் எப்படி 'தமக்குரியோரை' மட்டும் அன்பு செய்ய முடியும்? என்று கேட்கத் தோன்றலாம். யோவான் நற்செய்தியாளரைப் பொறுத்தவரையில் 'தமக்குரியோர்' என்பவர்கள் உலகில் உள்ள அனைவரையும் குறிக்கிறது. ஏனெனில், 'அவர் தமக்குரியவர்களிடம் வந்தார். அவருக்கு உரியவர்கள் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை' (காண். யோவா 1:11) என்று முன்னுரைப் பாடலில் எழுதுகிறார் யோவான். இங்கே, 'தமக்குரியோர்' என்பது இயேசுவால் தெரிவு செய்யப்பட்டு அன்பு செய்யப்பட்டவர்களை அல்ல, மாறாக, எல்லாரையும் குறிக்கிறது.

'இறுதிவரை' என்னும் சொல்லாடலின் பொருள் என்ன?

இரண்டு நிலைகளில் பொருள் கொள்ளலாம்: ஒன்று, நேரம்-இடம் அடிப்படையில். அதாவது, ஒரு மாணவர் இறுதிவரை தேர்வு எழுதினார் என்றால், தேர்வு முடிகின்ற ஒரு மணி வரை எழுதினார் என்று பொருள். அல்லது, இந்த நீள அறையை முதலிலிருந்து இறுதிவரை அளந்து கொடுங்கள் என்று வண்ணம் பூசுபவர் கேட்டால், அது வெளி அல்லது இடம்சார் அளவில் கடைசி என்று பொருள்கொள்ளப்படுகிறது. இரண்டாவதாக, பகுதி-முழுமை அடிப்படையில். இறுதிச் சொட்டு இரத்தம் வரை அவர் நமக்காகச் சிந்தினார் என்று சொல்லும் வாக்கியத்தில், இறுதி என்பது முழுமையைக் குறிக்கிறது.

நம் பாடத்தில், 'இறுதிவரை' என்பதை மேற்காணும் இரண்டு நிலைகளிலும் புரிந்துகொள்ள முடியும்: (அ) நேர அடிப்படையில் இயேசு, தொடக்கமுதல் இறுதிவரை தமக்குரியவர்களை அன்பு செய்கின்றார். (ஆ) பகுதி-முழுமை அடிப்படையில், இயேசு தன்னையே முழுமையாகக் கொடுத்து இறுதிவரை அன்பு செய்கின்றார்.

'இறுதிவரை' என்ற சொல்லாடல் நேர அடிப்படையில் பயன்படுத்தப்படும் இன்னொரு நிகழ்வு, 'கானாவூர் திருமணம்.' அங்கே, பந்தி மேற்பார்வையாளர் மணமகனிடம், 'நீர் நல்ல இரசத்தை இதுவரை (இறுதிவரை) பரிமாறாமல் ஏன் வைத்திருந்தீர்?' எனக் கேட்கின்றார்.

இயேசு தம் சீடர்களின் பாதம் கழுவும் நிகழ்வையும், கானாவூர் திருமணத்தில் அவர் நிகழ்த்திய முதல் அறிகுறியையும் சற்றே ஒப்பீடு செய்வோம்: (அ) இங்கே (பாதம் கழுவுவதில்) தன் நேரம் வந்துவிட்டது என இயேசு உணர்கிறார். அங்கே (கானாவில்) தன் நேரம் இன்னும் வரவில்லை என்கிறார். (ஆ) இங்கே தானே எழுகின்றார், களைகின்றார், கழுவுகின்றார். அங்கே மரியா அழைக்கின்றார், அறிவுறுத்துகின்றார், பணியாளர்கள் நிரப்புகின்றனர், பரிமாறுகின்றனர். (இ) இங்கே தண்ணீர் பாதங்களைத் தூய்மையாக்குகிறது. அங்கே தூய்மைச் சடங்கிற்கான தண்ணீர் வைக்கப்பட்டுள்ளது. (ஈ) இங்கே தானே நீர் எடுத்துக் கழுவுகின்றார். அங்கே, 'மொண்டு போங்கள்' எனக் கட்டளையிடுகிறார் இயேசு. (உ) இங்கே சீடர்கள் (பேதுரு தவிர) அமைதி காக்கிறார்கள். அங்கே இயேசுவிடம் நம்பிக்கை கொள்கிறார்கள். (ஊ) இங்கே இறுதிவரை அன்பு செய்யும் இயேசு பாதம் கழுவுகிறார். அங்கே இறுதிவரை நல்ல இரசம் பரிமாறாமல் வைக்கப்படுகிறது. (எ) இங்கே பாதம் கழுவும் ஆண்டவரும் போதகராகவும் இருக்கிறார் இயேசு. அங்கே அறிகுறி நிகழ்த்தும் ஆண்டவராக இருக்கிறார். (ஏ) இங்கே தம் சீடர்களை மையமாக்குகின்றார். அங்கே இயேசு மையமாக இருக்கின்றார்.

இந்த ஒப்பீட்டில் ஒன்று தெளிவாகிறது. 'இறுதிவரை அன்பு செய்தல்' என்பது அறிகுறிகள் நிகழ்த்துவதில் அல்ல, போதனையில் அல்ல, மற்றவர்களுக்குக் கொடுக்கும் அறிவுரையில் அல்ல, மாறாக, பாதம் கழுவுதலில்தான் இருக்கிறது.

இன்றைய முதல் வாசகத்தில் (காண். 12:1-8,11-14) ஆண்டவராகிய கடவுள், மோசே வழியாக, இஸ்ரயேல் மக்களுக்கு முதல் பாஸ்கா விழாவுக்கான அறிவுரை வழங்குவதை வாசிக்கின்றோம். ஆண்டவர் தான் எகிப்து நாட்டில் நிகழ்த்தவிருக்கும் 'இறுதி' வல்லசெயலுக்கு முன், அவர்களுக்குத் தன் உடனிருப்பைக் காட்டுகின்றார். முதல் பாஸ்கா பூட்டிய அறைக்குள், இருளில் நடந்தேறுகிறது. அவர்கள் உண்ணும் ஆட்டின் இரத்தம் மட்டும் அவர்களுடைய கதவுநிலைகளில் பூசப்பட்டிருக்க, அவர்களைக் கடந்து செல்கிறார் கடவுள். மேலும், இப்போது அவர்களைக் கடந்து சென்று அவர்களை அழிக்கமால் விடுபவர், இறுதிவரை அவர்களோடு நடந்து செல்கிறார். இறுதிவரை அவர்களோடு ஆண்டவர் நடக்க வேண்டுமெனில், அவர்கள் இறுதிவரை ஆண்டவருக்குப் பணிபுரிய வேண்டும். மற்ற தெய்வங்களுக்கோ, சிலைகளுக்கோ பணிபுரிதல் கூடாது. ஆக, இறைவனின் இறுதிவரை உடனிருப்பை உறுதி செய்வது, இறுதிவரை பணிசெய்தலே.

இன்றைய இரண்டாம் வாசகத்தில் (காண். 1 கொரி 11:23-26), கொரிந்து நகர திருஅவையில் விளங்கிய பிரிவினைகளையும், நற்கருணைக் கொண்டாட்டத்தில் விளங்கிய பிறழ்வுகளையும் கண்டிக்கின்ற பவுல், இயேசு நற்கருணையை ஏற்படுத்திய நிகழ்வை அவர்களுக்கு எடுத்துச் சொல்லி, கூடிவருதலில் மையமாக இருக்க வேண்டியவர் இயேசுவே அன்றி, ஒருவர் மற்றவர் அல்லர் என எடுத்துரைக்கின்றார். ஏனெனில், இந்த அப்பத்தை உண்டு கிண்ணத்திலிருந்து பருகும்போதெல்லாம் ஆண்டவருடைய சாவை அவர்கள் 'இறுதிவரை' அறிவிக்கிறார்கள். ஆக, அவர்களுடைய நற்கருணை பங்கேற்பு இயேசுவைப் பற்றிய அறிவிப்பாக 'இறுதிவரை' இருத்தல் வேண்டும்.

இறுதிவரை அன்பு செலுத்துதல் என்றால் என்ன?

இறுதிவரை அன்பு செலுத்துதலின் பொருளை, இயேசு, வெறும் வார்த்தைகளில் சொல்லாமல், ஒரே ஒரு செயலால் செய்து காட்டுகின்றார். அச்செயல் நான்கு நிலைகளில் நடந்தேறுகிறது.

1. அறிதல்

(அ) தந்தை அனைத்தையும் தன்னிடம் ஒப்படைத்துள்ளார், (ஆ) தான் கடவுளிடமிருந்து வந்தவர், (இ) தான் கடவுளிடம் திரும்பிச் செல்ல வேண்டும். இந்த மூன்றையும் அறிகின்றார் இயேசு. அறிதல் இல்லாமல் அன்பு செலுத்த இயலாது. இங்கே அறிதல் என்பது நாம் அன்பு செய்யும் அடுத்தவரை அறிதல் அல்ல. மாறாக, தன்னை அறிதல். இதையே திருத்தந்தை பிரான்சிஸ், 'கிறிஸ்து வாழ்கிறார்' என்னும் தன் திருத்தூது ஊக்கவுரையில், 'நான் யார்?' என்ற கேள்வியைவிட, 'நான் யாருக்காக?' என்ற கேள்வியை இளைஞர்கள் கேட்க வேண்டும் என அறிவுறுத்துகின்றார். 'நான் யார்?' என்னும் அறிதல் என்னைத் தன்மையமாக்கி விடும். ஆனால், 'நான் யாருக்காக?' என்ற கேள்விதான் தன்னை பிறர்மையத்திற்கு நகர்த்தும். இயேசு தான் யாருக்காக என்பதை அறிகின்றார்.

இன்று, நாம் மற்றவர்களை அன்பு செய்வதில், என்னை நான் அறிந்துகொள்வதற்குப் பதிலாக அடுத்தவரை அறிந்துகொள்ளவே முயல்கிறேன். அதுவே பல நேரங்களில் உறவுச் சிக்கல்களை ஏற்படுத்துகிறது. ஏனெனில், உறவில் வரும் பிரச்சினைக்கு அடுத்தவர் காரணமல்ல. என் உள்ளம்தான் காரணம். என் உள்ளத்தில் எழும் குறுகிய மனப்பான்மை, கோபம், ஒப்பீடு, பொறாமை, தாழ்வு மனப்பான்மை போன்றவற்றை நான் அறிந்துகொண்டால், நான் அடுத்தவரை அன்பு செய்வது எளிதாகும். அவ்வாறே, என்னுடைய பணிக்குருத்துவத்தில், 'நான் யார்?' என்ற அறிதலை நான் முழுமையாக விடுத்து, 'நான் யாருக்காக?' என்ற அடையாளத்திற்கு நகர வேண்டும. ஏனெனில், 'நான் யார்?' என்ற அடையாளம் என்னை சாதி, கொள்கை, படிப்பு, பதவி, பணம், உறவு நெருக்கம் அடிப்படையில் என்னை சக அருள்பணியாளரிடமிருந்தும், நான் பணிசெய்யும் மக்களிடமிருந்தும் என்னை அந்நியப்படுத்திவிடும். ஆனால், 'நான் யாருக்காக?' என்ற நிலையில் என்னை அறியும்போது என் இலக்கும், வாழ்வின் நோக்கும் போக்கும் தெளிவாகும்.

இறுதிவரை அன்பு செய்ய முதல் படி 'அறிதலே.'

2. பந்தியிலிருந்து எழுதல்

இயேசுவின் பாஸ்கா நிகழ்வுப் பதிவில் லூக்கா இயேசுவின் வார்த்தைகளை இவ்வாறு பதிவு செய்கிறார்: 'யார் பெரியவர்? பந்தியில் அமர்ந்திருப்பவரா? அல்லது பணிவிடை புரிபவரா? பந்தியில் அமர்ந்திருப்பவர் அல்லவா? நான் உங்கள் நடுவே பணிவிடை புரிபவனாக இருக்கிறேன்' (காண். லூக் 22:27). ஆக, 'பெரியவர்' என்ற நிலையிலிருந்து இயேசு எழுந்து, பந்தியில் அமர்ந்த எல்லாரையும் பெரியவராக்குகிறார்.

இதுதான் அன்பின் இரண்டாம் படி. இன்று நான் என்னுடைய நிலையிலிருந்து எழுந்து அடுத்தவர் நிலைக்கு இறங்கலாம் எளிதாக. ஆனால், அடுத்தவரைப் பெரியவர் நிலையில் வைத்துப் பார்ப்பது கடிமான இருக்கும். ஏனெனில், நான் அடுத்தவரைப் பெரியவராக்கி அவருக்குக் கீழ் நான் அமரும்போது நான் வலுவற்றவன் ஆகிவிடுகிறேன். அவர் என்னை எத்தி உதைக்கலாம், மிதிக்கலாம், தலையில் குட்டலாம், கன்னத்தில் அறையலாம், என்மேல் எச்சில் உமிழலாம். என் கழுத்தைப் பிடிக்கலாம். ஆக, இத்தகைய வலுவற்ற நிலைக்கு நான் என்னை உட்படுத்தினால்தான் என்னால் அடுத்தவரை அன்பு செய்ய முடியும். நான் பந்தியிலிருந்து எழுந்தாலும், அடுத்தவரைப் பந்தியில் அமர வைத்துப் பார்க்கும் தாராள உள்ளம் வேண்டும் நமக்கு.

3. மேலுடையைக் கழற்றிவிட்டு துண்டை இடுப்பில் கட்டி

ப்ராக்டிக்கல் காரணத்திற்காக இயேசு மேலுடையைக் கழற்றியிருக்கலாம். துண்டை இடுப்பில் கட்டியிருக்கலாம். உருவகமாகப் பார்த்தால் இங்கே இயேசு தன்னையே நொறுங்குநிலைக்கு உட்படுத்துகின்றார். நிர்வாணம் அல்லது அரைநிர்வாணம் என்பது நம்முடைய நொறுங்குநிலையைக் காட்டுகிறது. ஏனெனில், நம்முடைய ஆடைகள் நம்மை நொறுங்காவண்ணம் காத்துக்கொள்கின்றன. மேலும், துண்டை இடுப்பில் கட்டுவது அடிமையின் ஆடையை இயேசு அணிவதையும் குறிக்கிறது எனச் சொல்ல முடியும்.

அன்பில், நான் என் நொறுங்குநிலையை ஏற்க வேண்டும். நான் என் அடையாளங்களைக் களைய வேண்டும். என்னைக் காத்துக்கொண்டிருக்கும் என் அடையாளங்களை நான் கழற்ற வேண்டும். என்னுடைய பணிவாழ்வில் என் நொறுங்குநிலை என்பது என்னுடைய எளிய அல்லது வறிய குடும்பப் பின்புலமாகவோ அல்லது என்னுடைய பாவம் அல்லது தவறாகவோ இருக்கலாம். நான் துண்டை இடுப்பில் கட்டி வந்த நிலையில் இருந்துகொண்டு, திருவுடை என்னும் மேலாடைதான் என்னுடைய ஆடை என்று வலிந்து பற்றிக்கொண்டிருக்கும்போது, நான் என்னுடைய நொறுங்குநிலையை மறைப்பவனாகவும் அல்லது அதோடு போராடுபவனாகவும் இருப்பேன். 'இதுதான் நான்' என என்னை அடுத்தவருக்கு காட்டுவதில் நிறைய கட்டின்மை இருக்கவே செய்கிறது. ஏனெனில், அப்படிக் காட்டிவிட்டால், நான் ஒவ்வொரு முறையும் என்னை மற்றவருக்கு 'ப்ரூவ்' பண்ணத் தேவையில்லை.

4. தண்ணீர் எடுத்து, காலடிகளைக் கழுவி, துண்டால் துடைத்தார்

கானாவூரில் பணியாளர்கள் தண்ணீர் நிரப்பி, பணியாளர்களே மீண்டும் முகந்து சென்றனர். சமாரிப் பெண்ணின் குடத்திலிருந்து ஒற்றைத் தண்ணீரையும் இயேசு பருகவில்லை. இலாசரின் இறப்பில் தன்னுடைய கண்ணீர் என்னும் தண்ணீரைத் தொட்டவர், இப்போது தானே தண்ணீரை எடுத்து சீடர்களின் காலடிகளைக் கழுவுகின்றார். தண்ணீர் நலம் தரும், தூய்மை தரும். காலடி என்பது நம் ஒவ்வொருவரின் ஆதாரம். நம்மை நிலத்தோடு இணைக்கும் இணைப்புக் கோடு நம் பாதம். நாம் இம்மண்ணில் வேரூன்றி நிற்க உதவுவது பாதம். மருத்துவத்திலும் நம்முடைய பாதங்களில்தான் நரம்பு மற்றும் இரத்த நாளங்களின் இணைப்பு இருப்பதாகச் சொல்கிறார்கள். காலடிகள் ஒருவரின் ஒட்டுமொத்த ஆளுமையைக் குறிக்கின்றன. ஆகையால்தான், நாம் அடுத்தவரின் காலடிகளில் விழுகின்றோம். கடவுளின் காலடியைத் தொட்டு வணங்குகின்றோம். ஆக, தம் சீடர்களின் முழு ஆளுமையைத் தூய்மைப்படுத்தி, துண்டால் துடைக்கின்றார் இயேசு.

இன்று நான் என் அன்பிலும், அருள்பணியிலும் என் கண்ணீரை முதலில் தொட வேண்டும். என் கண்ணீரை நான் தொட்டால் அன்றி, அடுத்தவரின் காலடிகளில் தண்ணீர் ஊற்ற முடியாது. மேலும், என்னுடைய நற்குணம் என்னும் தண்ணீரால் நான் அடுத்தவரின் முழு ஆளுமையையும் கழுவ வேண்டும்.

நம் சிந்தனையின் தொடக்கத்தில் கண்ட ரேஷ்மா இந்த நான்கு நிலைகளையும் மிக அழகாகக் கடக்கின்றார். தான் யாருக்காக என்பதை அறிகிறார். தன்னுடைய செவிலியப் பணியால் தனக்குக் கிடைத்த அதிகாரத்திலிருந்து எழுகின்றார். தன்னையே நொறுங்குநிலைக்குக் கையளிக்கின்றார். தன்னுடைய கனிவாலும் பரிவாலும் முதியவர்கள் இருவரையும் கழுவித் துடைக்கின்றார். ஆனால், பாவம், மீண்டும் பந்தியில் அமர முடியாமல், அவர் நோய்வாய்ப்பட்டு காலடிகளில் படுத்துக்கிடக்கும் நிலைக்குத் தள்ளப்படுகிறார். பந்தியில் மீண்டும் அமரத் தேவையில்லை என்பதை இவர் நமக்குக் காட்டுகிறார்.

இறுதிவரை அன்பு செய்ய நம்மிடம் உள்ள தடைகள் எவை?

ரொம்ப எளிது.

1. யூதாசு போல கடின உள்ளம் கொண்டிருத்தல். யூதாசு முதலிலேயே அன்பு செய்யவில்லை. அவர் எப்படி இறுதிவரை செய்வார்?

2. பேதுரு போல சூழல் கைதியாக இருத்தல். அன்பு செய்தார். அன்பு செய்யும் ஆர்வம் இருந்தது. ஆனால், சூழல்கைதியாக அன்பிலிருந்து பின்வாங்கினார். ஆனால், மீண்டும் தண்டவாளத்தில் ஏறியது இவருடைய இரயில்.

3. சீடர்கள் போல கண்டுகொள்ளாமல் இருத்தல். சீடர்களுக்கு இன்னும் எதுவும் புரியவில்லை. 'உங்களுக்கு இப்போது புரியாது' என்கிறார். வாழ்க்கையில் கடைசி வரை தாங்கள் யார், யாருக்காக, மற்றவர்கள் யார் என்று புரியாமலேயே இருந்து மறைபவர்களும் இருக்கிறார்கள்.

இந்த மூன்று தடைகளையும் தாண்டி, இயேசு போல, ரேஷ்மா போல இருந்தால், அன்புக் கட்டளை, பணிக்குருத்துவம், நற்கருணை நமக்கு இன்றும் என்றும் பொருள்தரும்.

கொரோனாவால் வந்த சமூக விலகலில், தன்னடைப்பில், தற்காப்பில்,

நாம் பணிக்குருத்துவம் இல்லாமல் இருக்க முடியும் என்றும், நற்கருணை இல்லாமல் இருக்க முடியும் என்பதையும் ஏற்றுக்கொண்டோம். ஆனால், பணி இல்லாமலும், நல் கருணை இல்லாமலும் இருக்க முடியாது என்பதை குட்டி வைரஸ் நமக்கு உணர்த்திவிட்டது.

பணியால் இறுதிவரை நம் திராட்சை இரசத்தை காத்துக்கொள்வோம். அவர் நமக்கு முன்மாதிரி காட்டினார்.