இவ் மறையுரையை வழங்குபவர்

அருட்பணி.இயேசு கருணாநிதி
Archbishop’s House, K. Pudur, Madurai 625 007, India
Email: yesu@live.in

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)









ஆண்டின் பொதுக்காலம் 28ஆம் ஞாயிறு

தூரமும் இனி பக்கமே!

2 அரசர்கள் 5:14-17
2 திமொத்தேயு 2:8-13
லூக்கா 17:11-19

பள்ளிக்கூடத்தில் எல்.கே.ஜி மாணவர்களிடம் ஓர் ஆசிரியை கேள்வி ஒன்று கேட்டாராம்: 'டைகர் பிஸ்கட் பாக்கெட்டில் ஏன் பச்சை நிறத்தில் புள்ளி ஒன்று வைக்கப்பட்டுள்ளது?' மாணவி ஒருத்தி சொன்னாள்: 'டைகர் ஆன்லைனில் இருக்கு மிஸ்!’

'பச்சை புள்ளி' என்றால் 'வெஜிடேரியன் பொருள்கள் உள்ளடக்கம்' என்ற புரிதல் மறைந்து போய், பச்சையாய் தெரியும் புள்ளி ஒருவர் ஆன்லைனில் இருக்கிறார் என்று நாம் புரிந்து கொள்ளக் காரணம் நாம் பயன்படுத்தும் ஃபேஸ்புக், கூகுள்டாக், மற்றும் ஸ்கைப் போன்றவையே.

ஆன்லைனில் இருப்பது என்பதன் பொருள் 'தூரமாக இருந்தாலும் பக்கத்தில் இருப்பது!'

பூமிப்பந்தை ஒரு குக்கிராமம் என்று சொல்லிக் கொண்டிருந்த காலம் போய் இன்று ஒட்டுமொத்த பால்வெளியையும் நாம் குக்கிராமம் என அழைக்கத் தொடங்கிவிட்டோம். பூமியில் நாம் ஒருவர் மற்றவரிடமிருந்து தூரமாக இருந்தாலும், ஒருவர் மற்றவருக்கு இடையேயான நேர அளவு வித்தியாசமாக இருந்தாலும், தகவல் தொழில்நுட்ப சாதனங்கள் இந்த இடைவெளியை மிக வேகமாக குறைத்துக்கொண்டே வருகின்றன. கண்டம் விட்டு கண்டம் பாயும் ராக்கெட்டுகள் மறைந்து இன்று கோள் விட்டு கோள் பாயும் விண்கலங்கள் வந்துவிட்டன. மனிதரல்லாத அல்லது மனிதர்கள்போல இருக்கின்ற ஏலியன்களையும் பக்கத்தில் கொண்டு வந்து அவர்களை நெருக்கமாக்கிக் கொள்ள இன்றைய விஞ்ஞானம் துடித்துக் கொண்டிருக்கிறது.

இப்படி நாம் ஒருபக்கம் தூரத்தைக் குறைத்துக் கொண்டே போனாலும் மற்றொரு பக்கம் தூரத்தை அதிகமாக்கிக் கொண்டே போகின்றோம். உன் இனம் வேறு - என் இனம் வேறு, உன் மொழி வேறு - என் மொழி வேறு, உன் சாதி வேறு - என் சாதி வேறு, உன் படிப்பு வேறு - என் படிப்பு வேறு என்று நம் அடையாளங்களை வைத்து ஒரு பக்கமும், பொருளாதாரம், வாழ்க்கைத்தரம் ஆகியவற்றை வைத்து மறுபக்கமும் நாம் ஒருவர் மற்றவரிடமிருந்து தூரமாகி நிற்கிறோம்.

நிலவிற்கு பத்திரமாகச் சென்று வீடு திரும்பும் நம்மால் பக்கத்து வீட்டிற்குச் சென்று வர முடியவில்லை.

தூரமாக இருப்பது நமக்குப் பாதுகாப்பு என்றும் சில நேரங்களில் நினைத்துக் கொள்கிறோம்.

மனிதர்களுக்கும், மனிதர்களுக்கும் தூரம் ஒரு பக்கம். மற்றொரு பக்கம் கடவுளுக்கும் நமக்கும் கூட தூரத்தை ஏற்படுத்திக் கொண்டுவிடுகிறோம். நாமாக சில நேரங்களில் கடவுளிடமிருந்து தூரமாக நிற்கின்றோம். அல்லது மற்றவர்களால் தூரத்திற்கு அடித்து அனுப்பப்படுகிறோம்.

அப்படி ஒருவர் மற்றவரை தூரத்திற்கு அடித்து அனுப்பிய ஒன்றுதான் தொழுநோய். இன்றைய முதல் (காண். 2 அரச 5:14-17) மற்றும் நற்செய்தி (காண். லூக் 17:11-19) வாசகங்கள் தொழுநோய் பிடித்தவர்கள் பற்றி பேசுகின்றது.

தொழுநோய் பிடித்தவர்கள் - அவர்கள் யூதரானாலும், புறவினத்தாரானாலும் - சமூகத்தில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட வேண்டும் என்று தோரா நூல்கள் கட்டளையிட்டன (காண். லேவி 13:45-46, எண் 5:2-3). இவர்கள் மனிதர்களிடமிருந்து தூரமாக்கப்பட வேண்டும். ஏனெனில் இவர்கள் தங்கள் பாவத்தால் இந்த நோயைப் பெற்றிக்கின்றனர். அல்லது இவர்கள் கடவுளிடமிருந்து தூரமாக்கப்பட்டவர்கள்.

தொழுநோய் பிடித்தவர்கள் மூவகை தூரமாக்குதலுக்கு உட்படுத்தப்பட்டனர்:

அ. அவர்களுக்கென தனியான வாழ்விடம் இருந்தது. அவர்கள் தண்ணீர் மற்றும் உணவை மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ள மறுக்கப்பட்டனர்.

ஆ. அவர்களுக்கென உறவுகள் இல்லை. அவர்கள் தங்களின் குடும்பம், உறவினர்கள், மற்றும் நண்பர்களிடமிருந்தும் அந்நியப்படுத்தப்பட்டனர்.

இ. அவர்கள் கடவுள் வழிபாடு செய்ய முடியாது. ஆலயத்திற்குள்ளும், வழிபாட்டு இடங்களுக்குள்ளும் செல்ல அவர்களுக்கு அனுமதி இல்லை.

இப்படி தூரமாக நின்ற அரமேயன் நாமான் முதல் வாசகத்திலும், சமாரியன் ஒருவர் நற்செய்தி வாசகத்திலும் பக்கத்தில் கொண்டுவரப்படுகின்றனர்.

இன்றைய முதல் வாசகத்தோடு தொடங்குவோம்.

அரம் நாட்டில் தன் வீட்டு வேலைக்காரப் பெண்ணின் பேச்சைக் கேட்டு இஸ்ரயேலில் வாழும் இறைவாக்கினர் எலிசாவிடம் வருகின்றார் படைத்தளபதி நாமான். தான் படைகளுக்கு அதிபதி என்றாலும், அரண்மனையில் முக்கியமான பதவி என்றாலும், எல்லாவித சொத்துக்களையும், வசதிகளையும் பெற்றிருந்தாலும் அவர் தொழுநோயாளர் என்பதால் அந்நியப்படுத்தப்படுகின்றார். எப்படியாவது நலம் பெற வேண்டும் என்றிருந்தவர் இறுதியாக தன் வேலைக்கார சிறுமியின் பேச்சையும் கேட்கத் துணிகின்றார்.

'நான் நலம் பெறுவேன்!' என்ற நம்பிக்கை இவருக்கு அதிகமாக இருக்கின்றது. ஆகையால்தான் நலம்பெற்றவுடன் இறைவாக்கினருக்கு கொடுப்பதற்கு என்று நிறைய பரிசுப் பொருள்களை ஒட்டகங்களிலும், கழுதைகளிலும் ஏற்றிக்கொண்டு வருகின்றார். படைவீரர்களோடு வந்திறங்கிய நாமானை வீட்டின் வாசலிலேயே நிற்க வைத்து அனுப்பிவிடுகின்றார் எலிசா. 'போய் யோர்தான் ஆற்றில் குளி!' என்று சொல்லி அனுப்ப, நாமானுக்கு கோபம். எங்க ஊரில் இல்லாத ஆறா? என்று தன் வேலைக்காரர்களோடு அங்கலாய்க்கின்றார். அப்போது அங்கே உடனிருந்த வேலைக்காரர் ஒருவர், 'சரி! செய்துதான் பார்ப்போமே!' என்று நம்பிக்கை ஊட்டுகின்றார். அந்த வார்த்தைகளை நம்பி ஆற்றுக்குள் இறங்குகின்றார் நாமான். நலம் பெறுகின்றார்.

அப்படி நலம் பெற்றவுடன் அவர் மூன்று காரியங்கள் செய்கின்றார்:

அ. இறைவாக்கினரிடம் திரும்பி வருகின்றார்

ஆ. இறைவாக்கினருக்கு நன்றி சொல்கின்றார்

இ. இஸ்ரயேலின் கடவுள்மேல் நம்பிக்கை கொள்கின்றார்

இறைவாக்கினர் எலிசாவிடம் திரும்பி வரும் நாமான் அவருக்கு நிறைய பரிசுப்பொருள்களை அள்ளிக் கொடுக்கின்றார். ஆனால் அவற்றை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார் எலிசா. ஏனெனில் நாமான் தன் பரிசுகளால் நலத்தைப் பெற்றுவிட்டதாக எண்ணிக்கொள்ளக் கூடாது என்பதற்காகவும், இறைவனின் கொடை விற்பனைக்கல்ல என்பதை உணர்த்தவுமே இப்படிச் செய்கின்றார் எலிசா.

தன் பரிசுகளை ஏற்க மறுத்த எலிசாவிடம், 'இந்த ஊரிலிருந்து ஒரு சாக்கு மண்ணாவது எடுத்துச் செல்லலாமா?' என்று அனுமதி கேட்கின்றார். வாக்களிக்கப்பட்ட நாட்டிலிருந்து மண்ணை எடுத்துச் செல்வதன் வழியாக நாமானும் வாக்களிக்கப்பட்ட நாட்டை உரிமையாக்கிக் கொள்கின்றார்.

இறுதியாக, 'ஆண்டவரே கடவுள்' என்று நம்பிக்கை அறிக்கை செய்கின்றார்.

ஆக, இறைவனுக்கும், மனிதருக்கும் தூரமாக நின்றவர், யாவே இறைவனை ஆண்டவராக ஏற்றுக்கொண்டதால் அவர் அருகிலும், நலம் பெற்றதால் ஒருவர் மற்றவரின் அருகிலும் வருகின்றார்.

நாமானுக்கு இனி தூரமும் பக்கமே!

இதையொத்த நிகழ்வையே இன்றைய நற்செய்தி வாசகத்திலும் பார்க்கின்றோம்:

இயேசுவின் முகம் எருசலேம் நோக்கி இருக்கின்றது. அவர் கலிலேய, சமாரிய பகுதிகள் வழியே செல்லும்போது அப்பகுதியில் உள்ள ஒரு கிராமத்தின் புறம்பே வசித்த தொழுநோயாளர்கள் பத்து பேர் இயேசுவை நோக்கி, 'ஐயா! இயேசுவே, எங்களுக்கு இரங்கும்!' என்று வேண்டுகின்றனர்.

தொழுநோயாளர்கள் மற்றவர்கள் அருகில் வரவோ, அவர்களைத் தொடவோ கூடாது. மேலும் அவர்கள் தங்கள் மேலுதட்டின் மேல் தங்கள் கைகளை வைத்து மூடிக்கொண்டுதான் பேச அல்லது கத்த வேண்டும். தங்கள் முகம் மற்றும் உடலை மூடியிருக்க வேண்டும். தூரத்தில் நிற்க வேண்டும்.

(இதே போன்ற தூரமாக்குதல் நம் நாட்டில் சாதிய தீண்டாமை மேலோங்கியிருந்த காலத்தில் இருந்தது என்பதை நினைவில் கொள்வோம்)

தூரமாக நின்றாலும் அவர்களின் அழுகுரல் இயேசுவின் காதுகளில் விழுகின்றது. அவர்கள் இயேசுவை, 'இயேசு' என்றும், 'தலைவர்' (எபிஸ்டாடெஸ்) என்றும் அழைக்கின்றனர். இயேசுவும் அவர்கள் அருகில் செல்லவோ, அவர்களைத் தொடவோ இல்லை. மாறாக, 'நீங்கள் போய் உங்களைக் குருக்களிடம் காண்பியுங்கள்' என்று மட்டும் சொல்கிறார்.

தொழுநோயிலிருந்து நலம் பெற்றவர் தன்னைக் குருவிடம் காட்டி சான்றிதழ் பெற வேண்டும் என அறிவுறுத்தியது மோசேயின் சட்டம் (காண். லேவி 13:19, 14:1-11).

மறைமுகமாக இங்கே சொல்லப்படுவது என்னவென்றால், 'போங்கள்! நீங்க எல்லாரும் நலம் பெற்றுவிட்டீர்கள்!' என்பதுதான்.

உடல் எல்லாம் தீக்காயம் பட்ட ஒருவர் குளிக்கக் கூடாது. அப்படிப்பட்ட ஒருவரிடம், 'நீ போய் குளி!' என்று சொன்னால் என்ன அர்த்தம்? 'உனக்கு சரியாகிவிட்டது' அல்லது 'உன் காயங்கள் ஆறிவிட்டன' என்றுதானே அர்த்தம். அப்படித்தான் அனுப்பிவிடுகின்றார் இயேசு.

'அவர்கள் புறப்பட்டுப்போகும் போது அவர்கள் நோய் நீங்கியது!' என்று அழுத்தமாக பதிவு செய்கின்றார் லூக்கா. அவர்களில் ஒருவர் மட்டும் இயேசுவிடம் திரும்பி வருகின்றார். இயேசுவின் காலில் முகங்குப்புற விழுந்து நன்றி கூறுகின்றார்.

இந்த இடத்தில் 'அவர் ஒரு சமாரியர்' என்கிறார் லூக்கா.

ஒருவேளை இவர் சமாரியர் என்பதால்தான் யூத குருக்களிடம் செல்ல அஞ்சி இயேசுவிடம் திரும்பினாரா?

மற்ற ஒன்பதுபேரும் யூதர்களா?

மற்ற ஒன்பதுபேரும் தாங்கள் நலம்பெற்றதை உணரவில்லையா?

அல்லது திரும்பி இயேசுவிடம் வர அவர்களுக்கு மனமில்லையா?

அல்லது நலம் பெற்ற மகிழ்ச்சியில் அவர்கள் தங்கள் வீடுகளுக்குச் சென்றுவிட்டார்களா?

இந்தக் கேள்விகளுக்கு விடை நற்செய்தியில் இல்லை.

ஒன்று மட்டும் நிச்சயம். அவர்கள் திரும்பி வரவில்லை. நன்றி சொல்லவில்லை.

வந்தவரிடம் இயேசு ஒரு கேள்வி கேட்கின்றார்: 'பத்துப் பேர்களின் நோயும் நீங்கவில்லையா? மற்ற ஒன்பதுபேர் எங்கே?'

இறுதியாக, 'எழுந்து செல்லும். உன் நம்பிக்கை உனக்கு நலம் தந்தது!' என அனுப்பி வைக்கின்றார் இயேசு.

'உன் நம்பிக்கை நலம் தந்தது' என்று இயேசு சொல்வதன் பொருள், 'இனி நீ நலம் பெறுவாய்' என்பதல்ல. மாறாக, 'உன் நம்பிக்கையால் நீ நலம் பெற்றாய்!' என்று சொல்வதே.

தூரத்தில் இருந்த சமாரியர் இயேசுவுக்கும் தன் சக மனிதர்களுக்கும் பக்கத்தில் வருகின்றார்.

இனி தூரம் இவருக்குத் தூரமில்லை.

இந்த நெருக்கம் மூன்று நிலைகளில் நடந்தேறுகிறது:

அ. திரும்பி வருகின்றார்

ஆ. நன்றி சொல்கின்றார்

இ. நம்பிக்கை கொள்கின்றார்

நமக்கும் இறைவனுக்கும் உள்ள மற்றும் நமக்கும் பிறருக்கும் உள்ள தூரம் நெருக்கமாக இந்த மூன்று நிலைகள் அவசியம்:

1. திரும்பி வருதல்

நாம் பள்ளிக்கூடம் அல்லது கல்லூரியில் படித்து நிறைய மதிப்பெண்கள் பெற்று வெளியேறுகின்றோம். வெகு சிலர்தான் அந்தப் பள்ளிக்கூடம் மற்றும் கல்லூரிக்கு திரும்பிச் செல்கின்றோம். நாம் உடல் நலம் இல்லாமல் மருத்துவரிடம் போகின்றோம். உடல்நிலை சரியாகும் வரை அவரை ஃபோனில் அழைக்கிறோம். நேரில் சென்று பார்க்கிறோம். நிறைய கேள்விகள் கேட்கிறோம். ஆனால் உடல்நிலை சரியானவுடன் அவரை தொடர்பு கொள்வதோ, சென்று பார்ப்பதோ இல்லை. நம் அன்றாட வேலைகளைப் பார்க்கத் தொடங்கிவிடுகிறோம்.

திரும்ப வருவதற்கு அல்லது செல்வதற்கு நிறைய துணிச்சல் தேவை. நம் ஆற்றலையும், நேரத்தையும் செலவழிக்கத் தயாராக இருக்கும் ஒருவரால்தான் திரும்பி வர முடியும்.

நாமானுக்கு அரசவையில் நிறைய வேலைகள் இருந்திருக்கும். தான் நலம் பெற்றதை தன் மனைவி, மக்களிடம் சொல்லி மகிழ விரும்பியிருப்பார். தனக்கு பரிந்துரைக்கடிதம் கொடுத்துவிட்ட அரசனைப் போய்ப் பார்க்க வேண்டும். தன் கடவுளர்களுக்கு பொருத்தனைகள் செலுத்த வேண்டும். இப்படி நிறைய வேலைகள் இருந்தாலும் இறைவாக்கினர் எலிசாவிடம் திரும்பி வருகின்றார்.

அதுபோலவே, நலம் பெற்ற சமாரிய தொழுநோயாளரும் இயேசுவிடம் திரும்பி வருகின்றார். மற்ற ஒன்பதுபேர் தங்களின் வேலைகள் மற்றும் நலன்களை முன்வைத்தவர்களாக தங்கள் வழி செல்கின்றனர்.

இன்று நாம் இறைவனிடம் திரும்பி வருகின்றோமா?

திரும்பி வருவதற்கு முதலில் நாம் நம் பாதையை மாற்ற வேண்டும். மதுரை ஆரப்பாளையத்திலிருந்து மாட்டுத்தாவணி செல்லும் நான், ஆரப்பாளையம் திரும்ப வேண்டும் எனில், என் பாதை முழுவதுமாக மாற வேண்டும். மாட்டுத்தாவணி செல்லும் பாதையிலேயே தொடர்ந்து சென்றுகொண்டு ஆரப்பாளையத்தை அடைவது சாத்தியம் அல்ல. ஆக, பாதை மாற்றம் முதலில் தேவை. நாமானும், சமாரியனும் துணிந்து தங்கள் பாதைகளை மாற்றுகின்றனர்.

2. நன்றி சொல்லுதல்

'நன்றி உள்ள இதயத்தில் இறைவன் உறைகின்றார்' என்பது பழமொழி. நன்றி உள்ள இதயம் எதையும் நிறைவாகவும், நேர்முகமாகவும் பார்க்கும். நிறைவும், நேர்முக எண்ணமும் உள்ள இடத்தில் இறைவனும் இருக்கின்றார். அல்லது நிறைவு மற்றும் நேர்முக எண்ணமே இறைமை.

இயேசு இறுதி இராவுணவில் பயன்படுத்திய 'யூகரிஸ்டேயோ' ('நன்றி சொல்லுதல்') என்ற வார்த்தையையே இங்கும் பயன்படுத்துகின்றார் லூக்கா. லூக்கா நற்செய்தியில் 'யூகரிஸ்டேயோ' செய்யும் முதல் நபர் இந்த சமாரியனே. இந்த அந்நியனே. நாம் ஒவ்வொரு நாள் கொண்டாடும் நற்கருணைக் கொண்டாட்டத்திலும் நமக்கு நன்றி உணர்வே இருக்க வேண்டும்.

இன்று நன்றி சொல்வது என்பது மிகவும் குறைந்து கொண்டே வருகின்றது.

மற்றவர்கள் நமக்கு இதைச் செய்ய வேண்டும் அல்லது இது எனக்கு தேவை என்ற தன்மைய எண்ணம் இருக்குமிடத்தில் நன்றிக்கு இடமில்லை.

நன்றி என்ற உணர்வு எப்போதும் பிறர்மையம் சார்ந்தது.

மற்றொரு பக்கம் அடுத்தவர்கள் நமக்கு செய்யும் உதவியை உடனே அவர்களுக்குத் திரும்பச் செய்து கடனைக் கழித்துவிட வேண்டும் என்ற எண்ணமும் சில நேரங்களில் நம்மிடம் இருக்கின்றது. அதாவது, எனக்கு சேலை எடுத்துக் கொடுத்த ஒருவருக்கு உடனே ஒரு சேலையை எடுத்துக் கொடுத்து கடனை முடித்துவிடுவது. பல நேரங்களில் நாம் அடைக்க முடியாத கடன்கள் நிறையவே இருக்கின்றன.

நம் வாழ்க்கை, நேரம், ஆற்றல்கள், திறன்கள் என அனைத்துமே இறைவன் நமக்கு அளித்த கொடைகள். இவைகளுக்கு நாம் எந்த கைம்மாறும் செய்ய முடிவதில்லை. அதுபோலவே நம் பெற்றோர், உடன் பிறந்தவர்கள், நண்பர்கள் காலத்தால் செய்த உதவிகளுக்கும் பதிலுதவி நம்மால் செய்ய முடிவதில்லை. இந்நேரங்களில் உள்ளம்நிறை நன்றியே சிறந்த பதிலுதவி.

3. நம்பிக்கை கொள்தல்

நலம் பெற்ற நாமான் தன் வீட்டு குட்டி தெய்வங்களை எல்லாம் ஒதுக்கிவிட்டு, 'உங்கள் ஆண்டவரே என் கடவுள்' என்று இஸ்ரயேலின் ஆண்டவராம் யாவே இறைவனை தன் கடவுளாக ஏற்றுக்கொள்கின்றார். அவர்மேல் நம்பிக்கை கொள்கின்றார்.

நற்செய்தியில் நாம் காணும் சமாரியனும் நம்பிக்கை பயணம் செய்கின்றார். அதாவது, 'இயேசுவே,' 'என் தலைவரே' என்று அழைத்தவர் நலம் பெற்றவுடன், தரையில் முகங்குப்புற விழுகின்றார். தரையில் முகங்குப்புற விழுதல் என்பது மனிதர்கள் கடவுளுக்குச் செய்யும் மரியாதை. சமாரியனின் இந்தச் செயல் அவர் இயேசுவை தன் கடவுளாக ஏற்றுக்கொண்டதை வெளிப்படுத்துகிறது.

'உமது நம்பிக்கை உமக்கு நலம் தந்தது' என சமாரியனின் நம்பிக்கையை உறுதி செய்கின்றார் இயேசு.

நம்பிக்கை நமக்கும் இறைவனுக்கும் உள்ள தூரத்தை குறைத்துவிடுகின்றது. நாமானும் ஆண்டவரும், சமாரியனும் இயேசுவும் தூரத்தில் இருந்தவர்கள். இப்போது பக்கத்தில் வந்துவிட்டார்கள்.

இந்த நம்பிக்கையின் மேன்மையைத்தான் இன்றைய இரண்டாம் வாசகத்தில் (காண். 2 திமொ 2:8-13) தூய பவுலடியாரும் தன் அன்புப் பிள்ளை திமொத்தேயுவுக்கு எழுதுகின்றார்: 'நாம் நம்பத்தகாதரெனினும் அவர் நம்பத் தகுந்தவர்.'

இறைவனுக்கும், நமக்கும் மட்டுமல்ல, நமக்கும், நமக்கும் உள்ள தூரத்தை பக்கமாக்குவதற்கும் இந்த மூன்று நிலைகள் தேவை:

அ. நாம் மற்றவரை நோக்கி திரும்ப வேண்டும்.

ஆ. அடுத்தவர்களுக்கு நன்றியுணர்வோடு இருக்க வேண்டும்.

இ. அடுத்தவர்கள்மேல் நம்பிக்கை கொள்தல் வேண்டும்.

இறுதியாக,

இன்று என்னையும் என்னையும், என்னையும் பிறரையும், என்னையும் இறைவனையும் பிரிக்கும் தூரம் நிறைய இருந்தாலும், திரும்பி வருதலும், நன்றி சொல்வதும், நம்பிக்கை கொள்தலும் இருந்தால்,

தூரமும் இனி பக்கமே!