இவ் மறையுரையை வழங்குபவர்

அருட்பணி.இயேசு கருணாநிதி
Archbishop’s House, K. Pudur, Madurai 625 007, India
Email: yesu@live.in

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)









தவக்காலம் நான்காம் ஞாயிறு

நாங்களுமா பார்வையற்றோர்?

1 சாமுவேல் 16:1,6-7,10-13
எபேசியர் 5:8-14
யோவான் 9:1-41

இரண்டு வருடங்களுக்கு முன் மதுரை பேராயரின் செயலராக இருந்தபோது, ஒரு நாள் ஏறக்குறைய இரவு 9 மணிக்கு, 'ஃபாதர், பேராயரைப் பார்க்க ஒருவர் வந்திருக்கிறார். உடனே வாருங்கள்' என்று வாட்ச்மேன் அழைத்தார். 'யாராயிருக்கும்?' என்ற எண்ணத்தில் கீழே இறங்கினேன். வந்திருந்தவர் பார்வையற்றவர். 'இந்த நேரத்தில் என்ன அவசரம்?' என்ற கேட்டபோது, 'பேராயரைச் சந்திக்க வேண்டும்' என்று மட்டும் பதிலளித்தார். அன்றைய நாளில் பேராயர் இல்லாததால், 'நாளை காலை வாருங்கள். சந்திக்கலாம்' என்று சொல்லிவிட்டு, அவரை மெதுவாக மெயின் கேட் வரை அழைத்துச் சென்றேன். கேட்டைச் சாத்தும்போது, 'ஏன் இப்படி இரவில் வெளியில் நடமாடி கஷ்டப்படுகிறீர்கள்?' என்று கேட்டேன். 'எனக்கு பகலும் இரவுதான். வெளிச்சமும் இருள்தான்' என்றார். என்னை யாரோ கன்னத்தில் அறைந்தது போல இருந்தது. 'பார்வையற்றோரின் உலகம் நிறைய ஆச்சர்யங்களைக் கொண்டிருக்கிறது' என்கிறார் ஹெலன் கெல்லர். பார்வையற்றோரின் ஆச்சர்யங்களைக் காண வேண்டுமென்றால், அந்த உலகத்திற்குள் நாம் நுழைய வேண்டும். தவக்காலத்தின் நான்காம் ஞாயிறு வாசகங்கள் பார்வை பெறுதலை மையமாக வைத்துச் சுழல்கின்றன. இவ்வாசகங்களில் நான்கு வகையான பார்வையற்ற நிலையைப் பார்க்கிறோம்: அ. பிறவியிலேயே கண்பார்வையற்ற நிலை - பார்வையற்ற நபர் - இவரை இயேசு குணமாக்குகின்றார். ஆ. கடவுள் பார்ப்பது போல பார்க்க இயலாத பார்வையற்ற நிலை - சாமுவேல் - ஆண்டவராகிய கடவுள் இவருக்கு அறிவுறுத்துகிறார். இ. இருளில் அல்லது தூக்கத்தில் இருக்கும் நிலை - எபேசு நகரத் திருஅவை - விழிப்போடிருக்குமாறு பவுல் அவர்களுக்கு அழைப்பு விடுக்கிறார். ஈ. இயேசுவை மெசியா என்று ஏற்றுக்கொள்ளாத நிலை அல்லது பாவ நிலை - யூதர்கள் அல்லது பரிசேயர்கள் - இவர்களை இயேசு நற்செய்தியின் இறுதியில் எச்சரிக்கிறார். இன்றைய முதல் வாசகத்திலிருந்து (காண். 1 சாமுவேல் 16:1,6-7,10-13) நம்முடைய சிந்தனையைத் தொடங்குவோம். முதல் வாசகத்தின் தொடக்கத்தில் ஆண்டவர் சாமுவேலைக் கடிந்துகொள்கின்றார். ஏனெனில், ஆண்டவர் சவுலை வெறுக்கிறார் என்று தெரிந்தும் சாமுவேல் அவருக்காகத் தொடர்ந்து துக்கம் கொண்டாடுகின்றார். 'பால் கொட்டிடுச்சு' என்று கவலைப்பட்டு, கொட்டிய பாலையும் துடைக்காமல், காய்ந்த பாத்திரத்தையும் கழுவாமல் அமர்ந்திருந்த சாமுவேலை எழுப்பிவிடும் ஆண்டவர், 'புதிய பாத்திரமும், புதிய பாலும் வாங்கிக் காய்ச்சு! கொட்டியதைப் பற்றிக் கவலைப்படாதே! கொட்டியது கொட்டியதுதான்' என்று பெத்லகேமில் உள்ள ஈசாயின் இல்லத்திற்கு அனுப்புகின்றார். இஸ்ரயேலின் முதல் அரசராக சவுல் ஆண்டவரால் நியமிக்கப்படுகின்றார். ஆனால், தொடக்கமுதல் ஆண்டவருக்குக் கீழ்ப்படிய மறுக்கின்றார் சவுல். மனிதப் பார்வையில் சவுல் மிகவும் சிறந்த ஆளுமையாகத் தெரிந்தார்: 'அக்காலத்தில் சவுலை விட அழகும் பொலிவும் உடையவர் இஸ்ரயேலில் எவரும் இல்லை. மற்ற எல்லாரோடும் அவர் நின்றபோது மற்றெல்லாரையும் விட அவரே உயரமாக இருந்தார். மற்றவர்கள் அவருடைய தோள் உயரமே இருந்தனர்' (காண். 1 சாமு 9:2). மனித பார்வையில் அழகானவராகவும், பொலிவானவராகவும், உயரமானவராகவும் தெரிந்தாலும், அவருடைய கீழ்ப்படியாமையால் கடவுளின் பார்வையில் அழகற்றவராகவும், பொலிவற்றவராகவும், சிறியவராகவும் தெரிகின்றார் சவுல். அவரை அரசாட்சியிலிருந்து நீக்கிவிடுகின்ற கடவுள் அவருடைய இடத்தில் தான் நியமிக்க இருந்தவரைத் திருப்பொழிவு செய்யுமாறு இறைவாக்கினர் சாமுவேலை அனுப்புகிறார். எருசலேமிலிருந்த ஈசாயின் இல்லத்திற்கு ஆண்டவரின் கட்டளைப்படி வருகின்றார் சாமுவேல். ஈசாயின் முதல் மகன் எலியாபைப் பார்த்தவுடன், அவன் வாட்டசாட்டமாக இருக்கக் கண்டு, 'இவனே அவன்!' என்று சொல்லி, தைலக் குப்பியை எடுத்துக்கொண்டு ஓடுகின்றார். ஆண்டவர் குறுக்கிட்டு, 'தம்பி! பொறு! இவனல்ல அவன்! அவனுடைய தோற்றத்தையும் உயரத்தையும் கண்டு மதிப்பிடாதே. ஏனெனில் அவனை நான் ஒதுக்கி விட்டேன். மனிதர் பார்ப்பதுபோல கடவுள் பார்ப்பதில்லை. அவர்கள் புறத்தைப் பார்க்கின்றனர். ஆண்டவரோ அகத்தைப் பார்க்கின்றார்' என்று சொல்லி அமர்த்துகின்றார். சாமுவேல் சவுலுக்காக கொண்டாடிய துக்கத்தை மட்டுமல்ல, அவர் தன்னுடைய பார்வையையும் மாற்றிக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்துகின்றார் கடவுள். சாமுவேல் சவுலுக்காக அழுத கண்ணீரின் ஈரம் அவருடைய பார்வையை மங்கலாக்கிற்றோ என்னவோ? ஆண்டவர் பார்ப்பதுபோல அவர் பார்க்க வேண்டும். ஆண்டவருடைய பார்வை மனித புறத்தை ஊடுருவிப் பாய்கிறது. காணக்கூடியவற்றைத் தாண்டி காண முடியாதவை நோக்கிப் பயணிக்கும் அவருடைய பார்வை மனித இதயத்திற்குள் நுழைந்து அங்கே இருப்பதை ஆராய்கிறது. தாவீதைக் கடவுள் தெரிந்துகொள்வதன் பொருள் இதுதான். மேலோட்டமான பார்வையில் அவர் நிறைய தவறுகள் செய்தாலும், தன்னுடைய உள்ளத்தில் ஆண்டவருக்கு பிரமாணிக்கமாவும் நம்பிக்கைக்கு உரியவராகவும் இருக்கிறார். ஈசாயின் எட்டாவது மகனாக, வயல் வெளியில் ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்த தாவீது அழைத்துவரப்பட்டபோது, தாவீது 'சிவந்த மேனியும் ஒளிரும் கண்களும் கொண்டிருந்தான்' என்று சொல்கிறது விவிலியம். தாவீதின் பிரமாணிக்கமான உள்ளம் அவருடைய ஒளிரும் கண்களில் தெரிந்தது. ஆக, மனிதர் பார்ப்பதுபோல பார்த்த சாமுவேலின் பார்வையற்ற நிலையைக் குணமாக்குகின்ற ஆண்டவராகிய கடவுள், தான் பார்ப்பது போல சாமுவேலை மாற்றுகின்றார். இன்றைய இரண்டாம் வாசகம் (காண். எபே 5:8-14) இரண்டு பகுதிகளைக் கொண்டிருக்கின்றது. முதல் பகுதியில், 'ஒரு காலத்தில் இருளாய் இருந்த நீங்கள் ... ஒளிபெற்ற மக்களாய் வாழுங்கள்' என அறிவுறுத்துகின்றார் பவுல். இரண்டாம் பகுதியில், 'தூங்குகிறவனே விழித்தெழு! கிறிஸ்து உன்மேல் ஒளிர்கின்றார்' என்ற தொடக்கத்திருஅவையின் திருமுழுக்கு வழிபாட்டில் பயன்படுத்தப்பட்ட பாடல் வரிகளை மேற்கோள் காட்டுகின்றார். காணுதல் என்பதை ஒளி, ஒளிர்தல், இருள் போன்ற உருவகங்களாகப் பதிவு செய்கிறது இவ்வாசகம். 'ஒரு காலத்தில் இருளாய் இருந்த நீங்கள் இப்போது ஆண்டவருக்குள் ஒளியாய் இருக்கிறீர்கள்' என்று சொல்கின்ற பவுல், அவர்களுடைய கடந்தகால வாழ்வையும், இப்போது பெற்றிருக்கின்ற புதிய வாழ்வையும் நினைவுபடுத்துகின்றார். இருள் என்பது இங்கே எபேசு நகர மக்களின் அறநெறிபிறழ் வாழ்வையும், பாவ வாழ்வையும் குறிக்கிறது. குறிப்பாக, சிலைவழிபாடு (காண். எபே 5:5) அவர்களுடைய பெரிய பாவமாக இருந்தது. இச்செயல்களால் எந்தவொரு பயனும் இல்லை என்கிறார் பவுல். 'ஒளி பெற்ற மக்களாக இருப்பது' என்பது நன்மையான, நேரிய, மற்றும் உண்மையான கனிகளைக் கொடுப்பதில் இருக்கிறது. ஒளி பெற்ற மக்களாக வாழ்தல் நம்பிக்கையாளருக்கு மிகப்பெரிய சவால். ஏனெனில், அவர் 'ஆண்டவருக்கு உகந்தது எது?' என்று கண்டு அதன்படி வாழ வேண்டும். ஆண்டவருக்கு உகந்ததைக் கண்டறிய கூரிய பார்வையும், அவருடைய வார்த்தையால் உந்தப்பட்ட இறைவேண்டலும், ஒருவர் மற்றவரை நேர்மையாக நடத்துதலும் அவசியம். இவற்றின் வழியாகவே ஒருவர் ஒளிக்குள் வரவும், இருளோடு போராடவும் முடியும். ஆக, இருள் அல்லது தூக்கத்தில் இருக்கும் நிலையில் ஒருவர் தான் செய்கின்ற தவற்றை மீண்டும் செய்கிறார் அல்லது பயனற்ற செயல்களைச் செய்கின்றார். ஆண்டவருக்கு உகந்ததை நாடும், செய்யும் ஒருவர் பார்வை பெற்றவர் ஆகிறார். அவர் தூக்கத்திலிருந்து விழித்தெழுகிறார். இன்றைய நற்செய்தி வாசகத்தில் (காண். யோவா 9:1-41), பிறவியிலேயே பார்வையற்ற நபர் பார்வை பெறும் நிகழ்வை வாசிக்கின்றோம். தன்னிடம் வருகின்ற பார்வையற்ற நபரின் கண்களில் தன்னுடைய உமிழ்நீரால் உருவாக்கிய சேறு பூசி, சிலோவாம் குளத்தில் கழுவுமாறு அவரை அனுப்பிவிடுகின்றார் இயேசு. இயேசுவின் சமகாலத்தில் உமிழ்நீரால் குணமாக்குவது வழக்கமாக இருந்தது. ஆக, வழக்கத்திற்கு உரிய செயலையே இயேசு செய்திருந்தாலும், தன்னைக் குணமாக்கியவர் இயேசு என்று அறிக்கையிடுகின்றார் பார்வையற்ற அந்த நபர். இன்றைய நற்செய்தி வாசகம் 'இயேசு - பார்வைற்ற நபர் - பரிசேயர்கள்' என்று மூன்று முதன்மையான கதைமாந்தர்களை மையமாகக் கொண்டும், 'பார்வையற்ற நபரின் பெற்றோர் - யூதர்கள்' என்னும் இரண்டு சிறுகதைமாந்தர்களைக் கொண்டும் நகர்கிறது. மேலும், இயேசு-பார்வையற்ற நபர், பார்வையற்ற நபர்-பரிசேயர்கள், பரிசேயர்கள்-பெற்றோர்கள், பார்வையற்ற நபர்-இயேசு, இயேசு-பரிசேயர் என்று கதைமாந்தர்கள் நாடகத்தின் அடுத்தடுத்த காட்சிகளாக அறிமுகம் செய்யப்படுகின்றனர். தொடர்ந்து, 'நம்பிக்கை-நம்பிக்கையின்மை, ஏற்றுக்கொள்ளுதல்-ஏற்றுக்கொள்ளாமை, அறிக்கையிடுதல்-நிராகரித்தல்' என்ற முரண்புள்ளிகளாவும் நகர்கிறது நிகழ்வு. உடல் அளவில் பெறும் பார்வை என்ற நிலையில் நிகழ்வு தொடங்கினாலும், நம்பிக்கையின் வழியாக இயேசுவை மெசியா என ஏற்றுக்கொள்ளும் பார்வை என்று நிகழ்வு மாறுகிறது. இறுதியில், பார்வையற்ற நபர் உடலளவிலும் உள்ளத்தளவிலும் பார்வை பெற்றவராக இருக்கின்றார். பரிசேயரோ உடலளவில் பார்வை பெற்றிருந்தும், உள்ளத்தளவில் பார்வையற்றவர்களாக, பாவிகளாக இருக்கின்றனர். இயேசுவைப் பற்றிய இந்த மனிதரின் பார்வை ஐந்து நிலைகளில் வளர்கிறது: முதலில், 'இயேசு எனப்படும் மனிதர்' என்றும், இரண்டாவதாக, 'இயேசு' என்றும், மூன்றாவதாக, 'அவர் ஓர் இறைவாக்கினர்' என்றும், நான்காவதாக, 'இவர் கடவுளிடமிருந்து வந்தவர்' என்றும், இறுதியாக, 'ஆண்டவர்' என்றும் அறிக்கையிடுகின்றார் அவர். இன்னொரு பக்கம், இந்த மனிதரின் உடனடி கீழ்ப்படிதல் (இயேசு சொன்னபடி உடனே செய்வது), எதார்த்தமான வாழ்வியல் நிலை (தன்னுடைய பழைய வாழ்வை அப்படியே ஏற்றுக்கொள்கின்றார்), வெகுளித்தனம் (அறியாமை பற்றி வருந்தாத நிலை), மற்றும் துணிச்சல் (பரிசேயர்களை எதிர்த்துக் கேள்வி கேட்டல்) நமக்கு ஆச்சர்யம் தருகிறது. ஆக, நற்செய்தி வாசகம் உடல் அளவில் பார்வையற்ற நபர் இயேசுவின் உடனிருப்பால் பார்வை பெற்றதையும், மேலும் அவர் இயேசுவை நம்பியதால் உள்ளத்தளவில் பார்வை பெற்றதையும், பரிசேயர்கள் இயேசுவை நம்பாததால் இறுதிவரை பார்வை பெறாமலேயே இருப்பதையும் நமக்குக் காட்டுகிறது. அல்லது கடவுள் பார்ப்பதுபோல பார்ப்பதே பார்வைபெற்ற நிலை என்று முதல் வாசகமும், ஆண்டவருக்கு உகந்ததைச் செய்வதே பார்வைபெற்ற நிலை என்று இரண்டாம் வாசகமும், இயேசுவை மெசியா என்று நம்புதலே பார்வைபெற்ற நிலை என்று நற்செய்தி வாசகமும் நமக்குச் சொல்கிறது. தன்நிலை அறியாத பரிசேயர்கள், 'நாங்களுமா பார்வையற்றோர்?' எனக் கேட்கின்றனர். இம்மூன்று பார்வையும் இல்லாவிடில் ஒருவர் பார்வையற்றவரே என்று சொல்கிறது இன்றைய இறைவார்த்தை வழிபாடு. இன்றைய இறைவார்த்தை வழிபாடு நமக்கு விடுக்கும் சவால் என்ன? இன்று நான் என்னையும் மற்றவர்களையும் எப்படிப் பார்க்கிறேன்? இன்றைய உலகம் கடவுள் பார்ப்பது போல யாரையும் பார்ப்பது இல்லை. நான் மற்றவர்களை அவர்களுடைய வெளிப்புறத் தோற்றத்தையும், காணத்தகு விதத்தில் அவர் பெற்ற வெற்றிகளை வைத்தும் அவரை பல நேரங்களில் மதிப்பிடுகிறேன். இன்று தோற்றத்திற்கு நிறைய முக்கியத்துவம் தரப்படுகிறது: 'நான் எப்படி இருக்கிறேன்?' 'ப்ரசன்ட்டபிளாக இருக்கிறேனா?' 'நவநாகரீகத்தின் அடையாளங்கள் என்னில் இருக்கின்றனவா?' 'சந்தையில் மிகவும் அண்மையில் வெளிவந்த ஸ்மார்ட்ஃபோன் என்னிடம் இருக்கிறதா?' 'என்னுடைய வீட்டின் அழகையும் பிரமாண்டத்தையும் பார்த்து எத்தனை பேர் வியக்கிறார்கள்?' 'நான் பயன்படுத்தும் காஸ்மெடிக் பொருள்கள் எனக்கு அழகு தருகின்றனவா? அவற்றை நான் மாற்ற வேண்டுமா?' - இன்றைய உலகம் பார்ப்பதற்கு இப்படித்தான் சொல்லிக்கொடுக்கிறது. ஆனால், கடவுள் அப்படி அல்ல. கண்ணாடியைப் பார்க்க இந்த உலகம் கற்பிக்கிறது என்றால், உள்ளத்தைப் பார்க்க என்னை அழைக்கின்றார் கடவுள். என் தோலின் நிறத்தையோ, வழுவழுப்பையோ, தலைமுடியின் நிறத்தையோ, ஆளின் உயரத்தையோ அல்ல, மாறாகாக என்னுடைய இதயத்தின் உணர்வுகளை, பிரமாணிக்கத்தை, நம்பகத்தன்மையைக் காண அழைக்கிறார். நான் என்னையே மூன்று நிலைகளில் பார்க்க வாய்ப்பு இருக்கிறது: ஒன்று, எதிர்மறை பார்வை. 'நான் கெட்டவன். நான் பாவி. கடவுளுக்கு என்னைப் பிடிக்காது' என்று பார்க்கும் இந்த நிலையில் என்னுடைய பார்வை என்னுடைய நிழல்களை மையப்படுத்தியதாக இருக்கும். இரண்டு, ஏமாற்றுப் பார்வை. 'நான் மற்றவர்களை விட சிறந்தவன். கடவுளின் பார்வையில் சிறந்தவன். அவனிடம் இல்லாத பல என்னிடம் இருக்கின்றன' என்று மேட்டிமை உணர்வோடு பார்ப்பது. மூன்று, எதார்த்தப் பார்வை. 'மேன்மைக்கும் தாழ்மைக்கும், குறைவுக்கும் நிறைவுக்கும் இடைப்பட்டவன் நான்' என்று சொல்லி என்னுடைய வரையறைகளையும் வடுக்களையும் வலிந்து ஏற்றுக்கொள்ளும் நிலை இது. என்னைப் பற்றிய பார்வையே நான் மற்றவர்களையும், கடவுளையும் பார்ப்பதை நிர்ணயிக்கிறது. இறுதியாக, இன்று புறக்கண்களால் பார்க்கும் வாய்ப்பைப் பெற்றிருக்கும் நாம், இவ்வாய்ப்பைப் பெறாத, அல்லது இவ்வாய்ப்பை நோயினாலும், முதுமையினாலும் இழந்து கொண்டிருக்கும் இனியவர்களை எண்ணிப்பார்ப்போம். 'ஒளிபடைத்த கண்ணினாய் வா! வா!' என்றழைத்த பாரதியின் வார்த்தைகள் நம் காதுகளில் ஒலிக்கின்றன. கடவுள் பார்ப்பதை போல நானும் பார்க்க முடிந்தால், தூக்கத்திலிருந்து இருளிலிருந்து நான் எழுந்து நின்றால், இயேசுவின் மேல் நம்பிக்கை கொண்டு அவரை ஏற்றுக்கொண்டால், நான் ஒளிபெறுவேன். ஒளிபெற்ற நான், திருப்பாடல் ஆசிரியரோடு நின்று, 'மேலும் சாவின் இருள்சூழ் பள்ளத்தாக்கில் நான் நடக்க நேர்ந்தாலும், நீர் என்னோடு இருப்பதால் எத்தீங்கிற்கும் அஞ்சிடேன்' (காண். திபா 23) என்று சொல்ல முடியும். இல்லையெனில், நாமும் கேட்க நேரிடும் - 'நாங்களுமா பார்வையற்றோர்?'