இவ் மறையுரையை வழங்குபவர்

அருட்பணி.இயேசு கருணாநிதி
Archbishop’s House, K. Pudur, Madurai 625 007, India
Email: yesu@live.in

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)









தவக்காலம் முதல் ஞாயிறு

கீழ்ப்படிதல்

தொடக்கநூல் 2:7-9, 3:1-7
உரோமையர் 5:12-19
மத்தேயு 4:1-11

நல்வாழ்வு தரும் கீழ்ப்படிதல் நோக்கி நம்மை அழைக்கிறது தவக்காலத்தின் முதல் ஞாயிறு.

இன்றைய முதல் வாசகம் (காண். தொநூ 2:7-9, 3:1-7) விவிலியத்தின் முதல் பக்கங்களிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. மனிதர்கள் உருவான வரலாற்றின் பதிவே இப்பக்கங்கள். இரண்டு கதையாடல்கள் வழியாக மனித வாழ்வின் தொடக்கத்தை விளக்குகிறது விவிலியம். இவ்விரண்டு கதையாடல்களையும் ஒன்றுக்கொன்று அருகில் வைத்துப் பார்க்கும்போது மனிதர்கள் என்றால் யார்? அவர்களுக்கும் கடவுளுக்கும் உள்ள உறவு என்ன? அவர்கள் தங்களுக்குள் கொண்டிருக்கும் உறவுநிலை என்ன? அவர்களுக்கும் இயற்கைக்கும் உள்ள தொடர்பு என்ன? போன்ற கேள்விகளுக்கு விடைகளை நாம் கண்டறிய முடியும்.

முதல் வாசகத்தின் முதல் பகுதி படைப்பின் இரண்டாம் கதையாடல் பகுதியிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. கடவுளின் படைப்புச் செயலின் முதற்கனியாக முதல் மக்களை முன்வைக்கிறது இது. மனிதர்கள் கடவுளின் மூச்சையே தங்களுக்குள் கொண்டிருக்கின்றனர். இதுவே மனிதர்கள் கடவுள்மேல் கொண்டிருக்கும் சார்புநிலையின் அடையாளம். கடவுளின் மூச்சை இழப்பது என்பது ஒருவரை இறக்கச் செய்யும். இச்சார்புநிலையின் மற்றொரு பக்கம் கடவுள் அவர்களுக்கு இட்ட நிபந்தனை அல்லது விதிமுறை. கடவுள் படைப்பில் சில வரையறைகளை நிர்ணயித்து, மனிதர்களின் நலனை முன்னிட்டும், ஒட்டுமொத்தப் படைப்பின் ஒழுங்கிற்காகவும் சிலவற்றைத் தடைசெய்கின்றார். நன்மை-தீமை அறியும் மரத்தின் கனியை உண்ண வேண்டாம் என்று முதல்மனிதர்களுக்குக் கட்டளையிடுகிறார் கடவுள். ஏனெனில், இத்தகைய அறிவை மனிதர்களால் கையாள முடியாது. மேலும், இது அவர்களை அழிப்பதோடு, கடவுளின் படைப்பில் தொய்வையும் ஏற்படுத்திவிடும்.

ஆனால், முதல் மனிதர்கள் கடவுளின் கட்டளையை மீறுகின்றனர். அவர்கள் கடவுள் தங்களுக்குத் தந்த கொடைகளை மறந்துவிட்டனர். கடவுள் கனியை விலக்கிவைத்ததை உரிமை மீறலாகப் பார்த்தனர். தாங்கள் உண்ணுமாறு கடவுள் கொடுத்த அனைத்து மரங்களையும் அவற்றின் கனிகளையும் மறந்துவிட்ட இவர்கள் விலக்கப்பட்ட கனியை நாட ஆரம்பிக்கின்றனர். தாங்கள் ஏற்கனவே கடவுளின் சாயலில் இருக்கிறோம் என்பதை மறந்து, பாம்பின் சூழ்ச்சிக்கு இரையாகின்றனர். அவர்கள் தங்கள் கைகளை நீட்டி உண்ட அக்கனியால் முதலில் அவர்களின் கண்கள் திறக்கப்பட தாங்கள் ஆடையின்றி - நிர்வாணமாக - இருப்பதை உணர்கின்றனர். அவர்களின் ஆடையற்ற நிலை அவர்களுடைய வலுவின்மையையும், நொறுங்குநிலையையும் அடையாளப்படுத்துகிறது. அன்றிலிருந்து அதுவே அவர்களின் வாழ்க்கை அனுபவமாகவும் மாறிவிடுகிறது. விலக்கப்பட்ட கனியை உண்டதால் அவர்கள் கடவுளிடமிருந்தும் ஒருவர் மற்றவரிடமிருந்தும் அந்நியப்பட்டு நிற்கின்றனர்.

ஆக, அவர்களின் கீழ்ப்படியாமை அவர்களை இந்நிலைக்கு ஆளாக்குகிறது.

இன்றைய இரண்டாம் வாசகத்தில் (காண். உரோ 5:12-19), ஆதாம்-இயேசு, பாவம்-விடுதலை, குற்றம்-அருள்கொடை என்னும் முரண்களைப் பட்டியலிடுகின்ற பவுல், ஆதாமின் கீழ்ப்படியாமை பாவத்தைக் கொணர்ந்தது என்றும், இயேசுவின் கீழ்ப்படிதல் கடவுளுக்கு நம்மை ஏற்புடையவர் ஆக்கியதும் என்றும் நிறைவு செய்கின்றார்.

ஆக, கீழ்ப்படியாமையால் பிறழ்வுபட்ட உறவுநிலைகள் இயேசுவின் கீழ்ப்படிதலால் சரிசெய்யப்படுகின்றன.

இன்றைய நற்செய்தி வாசகம் (காண். மத் 4:1-11) இயேசு பாலைவனத்தில் சோதிக்கப்பட்ட நிகழ்வை நமக்குக் காட்டுகிறது. திருமுழுக்கு பெற்றவுடன் இயேசு அலகையால் சோதிக்கப்படுவதற்காக பாலை நிலத்திற்கு அழைத்துச் செல்லப்படுகிறார். திருமுழுக்கின்போது அவர் 'அன்பார்ந்த மகன்' என்று அழைக்கப்பட்டார். பாலைவனத்தில் சோதிக்கிறவன் மூன்றுமுறை சோதித்தபோது நம்பிக்கைக்கும் பிரமாணிக்கத்திற்கும் உரியவராக இருந்து மகன் என்ற நிலையைக் காத்துக்கொள்கின்றார். இயேசுவின் பாலைநில அனுபவம் 40 நாள்கள் நீடிக்கின்றன.

நாற்பது என்ற எண் இஸ்ரயேல் மக்கள் எகிப்திலிருந்து புறப்பட்டு வந்த பயணத்தைக் குறிக்கிறது. செங்கடலைக் கடந்த இஸ்ரயேல் மக்கள் மூன்று சோதனைகளுக்கு உள்ளாகின்றனர்: (அ) உணவு வேண்டி அவர்கள் கடவுளுக்கு எதிராக முணுமுணுத்தது (காண். விப 16) இயேசுவின் முதல் சோதனையில் எதிரொலிக்கிறது. (ஆ) கடவுள் நம்மோடு இருக்கிறாரா? என்று அவர்கள் கேட்ட கேள்வி (காண். விப 17) இரண்டாம் சோதனையில் தெரிகிறது. (இ) பொன்னாலான கன்றுக்குட்டியை அவர்கள் வணங்கியது (காண். விப 32) மூன்றாம் சோதனையில் எதிரொலிக்கிறது. இஸ்ரயேல் மக்கள் ஆண்டவராகிய கடவுளின் அளப்பரிய செயல்களை எகிப்தில் கண்டாலும் அவரை நம்பவில்லை. ஆனால், இயேசுவோ இறுதிவரை நம்பிக்கைக்குரியவராகவும், கீழ்ப்படிபவராகவும் விளங்கினார்.

தவக்காலத்தின் முதல் ஞாயிறு கீழ்ப்படிதல் என்ற மதிப்பீட்டைக் கற்றுக்கொள்ள நம்மை அழைக்கிறது. முதல் மக்கள் கடவுளை நம்ப மறுத்தனர். ஆகையால் கீழ்ப்படிய மறுத்தனர். அதற்கு மாற்றாக இயேசு தந்தையின் திருவுளத்திற்கு முற்றிலும் கீழ்ப்படிந்தார். நம்பிக்கையின்மை-நம்பிக்கை, கீழ்ப்படியாமை-கீழ்ப்படிதல் ஆகியவற்றுக்கான போராட்டம் எப்போதும் நீடித்துக்கொண்டே இருக்கும். நம்பிக்கையாளர்கள் தாங்கள் இப்படி அலைக்கழிக்கப்படும்போதெல்லாம் இன்றைய பதிலுரைப்பாடல் வரிகளை நினைவில்கொள்ள வேண்டும்: 'கடவுளே, தூயதோர் உள்ளத்தை என்னுள்ளே படைத்தருளும். உறுதிதரும் ஆவியை, புதுப்பிக்கும் ஆவியை என்னுள்ளே உருவாக்கியருளும்' (திபா 51:10).

எந்தவொரு பயணம் தொடங்குமுன்னும் இலக்குத் தெளிவு அவசியம். இலக்கு தெளிவானால் பாதை தெளிவாகும். கடவுளுக்குக் கீழ்ப்படிந்த வாழ்வை நம்முடைய தவக்காலத்தின் இலக்காக அமைத்துக்கொண்டு, அதற்கேற்ப நம்முடைய வாழ்வின் தெரிவுகளை நாம் மாற்றிக்கொள்ள இன்று நாம் அழைக்கப்படுகின்றோம்.

இன்று நாம் மாற்றிக்கொள்ள வேண்டிய செயல்பாடுகள் எவை? நமக்கு விலக்கிவைக்கப்பட்ட கனிகள் எவை? அவற்றை நோக்கி நாம் எப்போதெல்லாம் கையை நீட்டுகின்றோம்? அப்படி நீட்டும்போது நாம் செய்யும் சமரசம் என்ன?

இன்று நாம் கடவுள்மேல் நம்பிக்கை கொள்ளாதவண்ணம் நம்மைத் திசைதிருப்பும் சோதனைகள் எவை? என்னுடைய வேலைகளே என்னைக் கடவுளிடமிருந்து பிரிக்கின்றனவா?

சோதனைகளிலிருந்து விடுபடுவதற்கான எளிதான வழி நிறைய நல்ல வேலைகளை நாமே செய்ய முற்படுவது. அப்படிச் செய்யும்போது, நாமும் இயேசுவைப் போல, 'அகன்று போ, சாத்தானே!' என்று சொல்ல முடியும்.