இவ் மறையுரையை வழங்குபவர்

அருட்பணி.இயேசு கருணாநிதி
Archbishop’s House, K. Pudur, Madurai 625 007, India
Email: yesu@live.in

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)









ஆண்டவரின் திருக்காட்சிப் பெருவிழா

சிறியதில் பெரியதைக் காண்பது

எசாயா 60:1-6
எபேசியர் 3:2-3,5-6
மத்தேயு 1:1-12

ஜென் மடாலயத்திற்கு இளவல் ஒருவர் வந்தார். அவருக்கு ஞானம் பெற வேண்டும் என்ற ஆசை. மடலாயத்தின் தலைவரைச் சந்திக்கின்றார் அவர்.

'ஐயா! நான் ஞானம் பெற வேண்டும்!'

'வருக! இதோ, இந்த கைப்பிடி அரிசியில் விளைந்திருக்கும் நெற்கதிர்களை அறுத்து வருக!' என்று சொல்லி, ஒரு கைப்பிடி அரிசையைக் கொடுக்கின்றார் தலைவர்.

'கைப்பிடி அரிசியில் நெற்கதிர்களா?' - வியக்கின்றார் இளைஞர்.

'இது எப்படி ஐயா இயலும்?' - கேட்கின்றார் இளைஞர்.

'நீ வீட்டிற்குப் போகலாம். ஞானம் பெறும் ஆசை உன்னிடம் பேரார்வமாக மாறும் வரை அங்கேயே இரு!' - அனுப்புகின்றார் தலைவர்.

'பேரார்வம் வந்ததை நான் எப்போது உணர்வேன்?' - கேட்கின்றார் இளைஞர்.

'நீ தயாராக இருக்கும்போது நட்சத்திரம் தோன்றும். அப்போது வா!'

நிற்க.

கீழைத்தேய திருஅவைகளின் கிறிஸ்து பிறப்பு விழா என்று சொல்லப்படும் திருக்காட்சிப் பெருவிழாவைக் கொண்டாடுகிறோம்.

'பிற இனத்தாருக்கு ஒளியாகிய கிறிஸ்துவில் எமது மீட்பின் மறைபொருளை இன்று வெளிப்படுத்தினீர். சாவுக்கு உரிய எங்களது மனிதத்தன்மையில் அவர் தோன்றியபோது அவருக்கு உரிய சாகாத்தன்மையின் மாட்சியால் எங்களைப் புதுப்பித்தீர்' என்று இன்றைய நாளை இறையியலாக்கம் செய்கிறது திருப்பலியின் தொடக்கவுரை.

லூக்கா நற்செய்தியாளரின் பதிவின்படி இடையர்கள் என்னும் யூதர்களுக்குத் தம்மை வெளிப்படுத்திய கிறிஸ்து, இன்று, மத்தேயு நற்செய்தியாளரின் பதிவின்படி ஞானியர் என்னும் புறவினத்தாருக்குத் தம்மை வெளிப்படுத்துகின்றார். இயேசுவின் சமகாலத்தவருக்கு இது ஒரு பெரிய அதிர்ச்சியாக இருந்திருக்க வேண்டும். ஏனெனில், 'யூதர்களுக்கு மட்டுமே மீட்பு உண்டு. யூதர்கள் மட்டுமே கடவுளால் தெரிவுசெய்யப்பட்டவர்கள். யூதர்கள் மட்டுமே தூய்மையானவர்கள். யூதர்களுக்கு மட்டுமே மெசியா' என்று எண்ணிக்கொண்டிருந்த காலத்தில், புறவினத்தாருக்கும் மீட்பு, புறவினத்தாரும் தெரிவுசெய்யப்பட்டவர்கள், புறவினத்தாரும் தூய்மையானவர்கள், அவர்களுக்கும் மெசியா தோன்றுவார் என்று முன்வைக்கப்படும் கருதுகோள் அவ்வளவு ஏற்புடையதாக இருந்திருக்காது.

இந்தக் கருதுகோளையே இன்றைய இரண்டாம் வாசகத்தில் (காண். எபே 3:2-3,5-6) நாம் வாசிக்கின்றோம். யூதர்களுக்கு மட்டுமே மீட்பு என்ற எண்ணம் மேலோங்கியிருந்த காலத்தில், பவுல் எபேசுநகர் திருஅவைக்கு எழுதுகின்ற திருமடலில், 'நற்செய்தியின் வழியாக, பிற இனத்தாரும் கிறிஸ்து இயேசுவின் மூலம் உடன் உரிமையாளரும், ஒரே உடலின் உறுப்பினரும், வாக்குறுதியின் உடன் பங்காளிகளும் ஆகியிருக்கிறார்கள்' என எழுதுகின்றார். இந்த ஒற்றை வரியால்தான் நாம் அனைவரும் கிறிஸ்தவர்களாக இருக்கின்றோம். ஏனெனில், நாம் பிறப்பிலேயே யூதர்கள் அல்லர். ஆக, இன்றைய நாள் நம்முடைய கிறிஸ்து பிறப்பு பெருவிழா.

திருக்காட்சிப் பெருவிழாவின் பொருள் என்ன?

இவ்விழா நமக்குத் தரும் வாழ்க்கைப் பாடம் ரொம்ப எளிதான ஒன்று: 'சிறியதில் பெரியதைக் காண்பது'

'நட்சத்திரத்தில் மெசியாவின் பிறப்பு அடையாளத்தைக் காண்பது’

'முன்பின் தெரியாத ஒருவரில் உடன்பயணியைக் காண்பது'

'குழந்தையில் யூதர்களின் அரசரைக் காண்பது'

'கனவில் இறைவனைக் காண்பது'

- இப்படியாக சிறியதிலும் பெரியதைக் காண்பது.

மனித குலத்தில் எவ்வளவோ பேர் ஞானிகளாக வாழ்ந்து மறைந்தாலும் உலகம் முழுவதும் ஞானியர் என்று கொண்டாடப்படுபவர்கள் கீழ்த்திசை ஜோதிட நிபுணர்கள் அல்லது வானியல் அறிஞர்கள் மட்டுமே.

'சிறியதில் பெரியதைக் காண்பதே ஞானம்' என்று உணர்ந்தனர் இவர்கள். அல்லது 'சிறியதில் பெரியதைக் காண்பதே' ஞானம்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (காண். மத் 2:1-2) மூன்று வகையான மனிதர்களைப் பார்க்கின்றோம்:

அ. ஏரோது - இவர் பெரியதில் சிறியதைக் பார்க்கின்றார் - 'யூதர்களின் அரசர்' அல்லது 'மெசியா' என்று சொல்லப்பட்டவரை, 'குழந்தை' என்று பார்க்கின்றார்.

ஆ. மறைநூல் அறிஞர்கள் - இவர்கள் 'சிறியதில் சிறியதையும் பெரியதில் பெரியதையும் பார்க்கின்றனர்' - விண்மீனை வெறும் விண்மீனாகவும், மெசியா பற்றி மறைநூலில் எழுதப்பட்டதை மெசியா பற்றிய குறிப்பு என்றும் பார்க்கின்றனர்.

இ. ஞானியர் - இவர்கள் சிறியதில் பெரியதைப் பார்க்கின்றனர் - குழந்தையில் யூதர்களின் அரசரையும், விண்மீனில் மெசியாவின் வருகையயும், மனித வலுவின்மையில் இறைவனையும், கனவில் கடவுளையும் பார்க்கின்றனர்.

நாம் பல நேரங்களில் பெரியதில் சிறியதையும், நன்மையானவற்றில் தீமையானதையும், நல்லவற்றில் கெட்டதையும், அல்லது மனிதர்களிடம் குறைகளையும் காண்பது ஏன்?

இதற்குக் காரணம் மூன்று பண்புகள். இந்த மூன்று பண்புகளையும் ஏரோது கொண்டிருக்கின்றார்:

1. அச்சம் அல்லது கலக்கம்

ஞானியரின் வார்த்தைகளைக் கேட்டதும் 'ஏரோது அஞ்சினான் அல்லது கலங்கினான்' எனப் பதிவு செய்கிறார் மத்தேயு. இந்த அச்சம் என்பது கரப்பான் பூச்சியைப் பார்த்தோ, அல்லது இருட்டைப் பார்த்தோ கொள்ளும் அச்சம் அல்ல. மாறாக, வாழ்வா? சாவா? என்ற சூழலில் - எடுத்துக்காட்டாக, புயலால் பாதிக்கப்பட்டு - கொள்ளும் அச்சம். ஒருவரின் அச்சம் அடுத்தவரையும் பற்றிக்கொள்ளும் என்பதுபோல ஏரோதுவின் அச்சம் எருசலேம் நகரத்தாரையும் பற்றிக்கொள்கிறது - 'அவனோடு எருசலேம் முழுவதும் கலங்கிற்று!' அச்சம் வரும்போது மூளை தன்னைக் காத்துக்கொள்ளும் தற்காப்பு கவசம் ஒன்றை அணிந்துகொண்டு, 'வெளியில் இருக்கும் பெரியதை சிறியது போல' நமக்குக் காட்டும். அதனால்தான், அச்சம் கொண்ட ஏரோதுவுக்கு 'யூதர்களின் அரசர்' ஒரு 'குழந்தையாகத்' தெரிகின்றார்.

இன்று நாம் யாரைப் பார்த்து அச்சம் கொள்கின்றோமோ அவர்களின் இருப்பை, இயக்கத்தை குறைத்தே மதிப்பிடுவோம். 'அவர்களால் ஒன்றும் செய்ய முடியாது! அவர்கள் வெறும் பிள்ளைப்பூச்சிகள் அல்லது சில்லுவண்டுகள்' என்றே நினைக்கின்றோம்.

2. விசாரணை

தன்னுடைய கலக்கத்திலும் அச்சத்திலும் தான் கேட்டது உண்மையா? என்று பார்க்க உடனடியாக மறைநூல் அறிஞர்களை விசாரிக்கின்றார் ஏரோது. 'தான் கேட்கின்ற செய்தி பொய்யாக இருக்க வேண்டும்' என்று நினைத்துக்கொண்டேதான் விசாரித்திருப்பார் ஏரோது. ஏனெனில், நாம் அச்சப்படுகின்ற செய்தி பொய்யாக இருக்க வேண்டும் என்றே நம் மனம் விரும்புகிறது. 'நம் நண்பர் ஒருவருக்கு விபத்து' என்று கேள்விப்படும் செய்தி பொய்யாக இருக்க வேண்டும் என்றே நினைக்கிறோம். இல்லையா? ஆனால், சில நேரங்களில் சிலர் தாம் கேட்பது உண்மையாக இருக்க வேண்டும் என்று நினைத்தே விசாரிப்பது உண்டு. இந்த விசாரணை அச்சத்தினால் அல்ல, மாறாக, ஒருவரின் தீய எண்ணத்தால் வருவது. ஏரோது முதல் வகை மனிதராக இருக்கிறார். ஆனால், பொய்யாய் இருக்க வேண்டும் என்று அவர் நினைப்பது உண்மையாகிவிடுகின்றது.

இன்று நாம் மற்றவர்களைப் பற்றி அதிகம் விசாரிக்கும்போது, அல்லது நம்முடைய மூளையால் ஆராய்ச்சி செய்யும்போது அவர்களிடமிருக்கும் நல்லதைச் சிறியதாக்கி, சிறியது ஒன்றைப் பெரியதாக்கி பூதாகரமாக்கிவிடுகின்றோம். கடவுளைப் பற்றிய அதிக விசாரணையும் நம்முடைய நம்பிக்கையைக் குறைக்கிறது.

3. பொய்

இது அச்சத்தின் அடுத்த குழந்தை. அச்சம் வந்தவுடன் பொய் வந்துவிடுகிறது. தன் அம்மா அடிப்பாள் என்று அச்சப்படுகின்ற குழந்தை தான் செய்த ஒன்றை, 'செய்யவில்லை' என்று பொய் சொல்லிவிடுகின்றது. 'நீங்கள் சென்று குழந்தையைக் குறித்துக் கேட்டு எனக்கு அறிவியுங்கள் ... நானும் சென்று அக்குழந்தையை வணங்குவேன்' என்கிறார் ஏரோது. ஆனால், நிகழ்வின் பிற்பகுதியில் ஏரோது குழந்தையை வணங்குபவராக அல்ல, மாறாக, குழந்தையைக் கொல்பவராக மாறுகின்றார். உள்ளத்தில் ஒன்றும் உதட்டில் வேறொன்றும் வைத்திருக்கிறார்.

பொய் இருக்கின்ற இடத்தில் பெரியதை நாம் சிறியதாகவே கண்டு அதை ஒன்றுமில்லாமல் செய்துவிட நினைப்போம். பிறரிடம் சொல்லும் பொய் தற்காப்புக்காக இருக்கலாம். ஆனால், எனக்கு நானே சொல்லும் என்னுடைய தன்மதிப்பைக் குறைப்பதால், பெரிய மனிதனாக இருந்தாலும் என் மனத்தின் பார்வைக்கு சிறிய தௌ;ளுப்பூச்சியாகவே தெரிவேன். பிறரிடம் சொல்லும் பொய் மன்னிக்கப்படலாம். ஆனால், தனக்குத் தானே சொல்லப்படும் பொய் ஒருவரை உள்ளிருந்தே கொல்லும். ஏரோது தனக்குத் தானே பொய் சொல்கின்றார்.

இதற்கு மாறாக, சிறியதில் பெரியதைக் காணவும் நமக்கு மூன்று பண்புகள் தேவை. அவற்றை கீழ்த்திசை ஞானியர் கொண்டிருக்கின்றனர்:

1. இறைக்கண்களால் காணுதல்

இறைவனே ஒன்றை வெளிப்படுத்தினால் அன்றி நாம் சிறியதைப் பெரிதாகக் காண முடியாது. இறைவெளிப்பாடு என்பது திடீரென்று தோன்றும் வெளிச்சம் அல்ல. மாறாக, இறைவனின் கண்கள் கொண்டு நாம் மற்றவர்களையும் மற்றதையும் பார்ப்பதே இறைவெளிப்பாடு. ஞானியர் தங்களுடைய கண்களால் அல்ல, மாறாக, இறைவனின் கண்களால் பார்த்ததால்தான், 'விண்மீனில் மெசியாவின் பிறப்பையும்,' 'மனிதக் குழந்தையில் கடவுளையும்' காண்கின்றனர். இறைவெளிப்பாடு பெற்றவர்கள் தீமையைக் கண்டு வணங்கமாட்டார்கள். ஆகையால்தான், யூதர்களின் அரசரை பெத்லகேம் குடிலில் வணங்கிய அவர்கள் ஏரோதிடம் திரும்பிச்செல்லவில்லை.

இன்று நான் மற்றவரிலும், மற்றவற்றிலும் சிறியவற்றில் பெரிதானதைக் காண வேண்டும் என்றால் எனக்குத் தேவை இறைவனின் கண்கள். இன்றைய முதல் வாசகத்தில் (காண். எசா 60:1-6), பாபிலோனியாவில் அடிமைகளாக, இருளிலும் குளிரிலும் நொறுங்குண்ட நிலையிலும் வாழ்ந்த இஸ்ரயேல் மக்களிடம், 'ஒளிரும் மக்களை, தோளில் தூக்கிவரப்படுதலை, பிற இனத்தாரின் தேடி வருதலை' காண்கின்றார் கடவுள். சிறியவற்றில் பெரியவற்றைக் காணவும், சிறியவற்றில் பெரியவற்றைக் கொண்டாடவும் கடவுளின் கண்கள் தேவை.

2. ஏற்றுக்கொள்ளுதல்

விசாரிக்கும் மனம் ஏற்றுக்கொள்ளாது. ஏற்றுக்கொள்ளும் மனம் விசாரிக்காது. ரொம்ப எளிதான லாஜிக். சிறிய குழந்தையில் கடவுளையும், வலுவற்ற குழந்தையில் யூதர்களின் அரசரையும், யூதர்களின் அரசரில் தங்கள் அரசரையும் ஏற்றுக்கொள்கின்றனர் ஞானியர். 'எங்கே?' என்று ஏரோதிடம் கேட்ட கேள்விகூட, விசாரணை அல்ல, தேடலின் நீட்சி அல்லது ஏற்றுக்கொள்தலின் நீட்சி.

இன்று நான் மற்றவர்களை அவர்கள் இருப்பதைவிட பெரியதாக ஏற்றுக்கொள்ளவில்லை என்றாலும், இருப்பவர்களை அப்படியே ஏற்றுக்கொள்கிறேனா? என்பது நான் கேட்க வேண்டிய கேள்வி.

3. வணங்குதல்

'வணங்குதல்' என்பதில் 'ஒருவரின் மதிப்பைக் கண்டுணர்தல்' அடங்கியிருக்கிறது. நாம் வணங்குகின்ற ஒன்றை நாம் மிதிப்பதில்லை. அதை நாம் மிகுந்த மதிப்போடு வைத்திருக்கின்றோம். ஒன்று சிறியதாக இருந்தாலும் அதற்கு மதிப்பு இருக்கின்றது என்று அறியும் ஒருவரே சிறியதை இரசிக்கவும், வணங்கவும் முடியும். 'நாங்கள் வணங்க வந்திருக்கிறோம்' என்று ஏரோதிடம் அவர்கள் சொன்னது, குழந்தையை வணங்குவதில் நிறைவேறுகிறது. வணங்குதலில் உண்மையும் அடங்கியிருக்கிறது. தாங்கள் எதற்காக வந்தார்களோ அதைச் செய்கிறார்கள் ஞானியர்.

இன்று நான் மற்றவர்களின் அல்லது மற்றவற்றின் மதிப்பைக் கண்டு அவர்களை, அவற்றை வணங்குகிறேனா? உயிரற்ற ஒன்றிற்குக்கூட பயன்பாடு என்ற மதிப்பு இருக்கிறது. சில நேரங்களில் நாம் பயன்படுத்தும் பொருள்களுக்கு அதிகமாக உயிர் இருப்பதுபோலத் தோன்றுகிறது: எ.கா. நம்முடைய ஸ்மார்ட்ஃபோன், மடிக்கணிணி.

இன்றைய உலகத்தில் நாம் சிறியதில் பெரியதைப் பார்க்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம். குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறை, அல்லது வன்முறை, வயது வந்த முதியவர்களுக்கு எதிரான ஒதுக்குதல்கள் போன்றவற்றுக்குக் காரணம் நாம் இவர்களில் பெரியதைப் பார்ப்பது இல்லை. இன்றைய நம் நாட்டின் அரசியல் சூழல் பெரிய நாடு, பெரிய மொழி, பெரிய மதம் என்று ஒற்றைமயமாக்கும் மடமையில் இருப்பதால், அரசியல் தலைவர்கள் ஏரோது போல அனைத்திற்கும் அஞ்சுகின்றனர். அல்லது அச்சுறுத்துகின்றனர். சிறிய மதம், சிறிய பொருளாதாரம், ஏழைகள், எளியவர்கள் போன்றோர் வாழத் தகுதியற்றவர்கள் என்ற நிலையில் அனைவரையும் அழித்துவிடுவதில் மும்முரமாயிருக்கிறது நாடு.

இன்றைய திருவிழா நமக்குக் கற்றுத்தரும் இந்த மேலான வாழ்க்கைப் பாடத்தைக் கற்றால் - சிறியதிலும் பெரியதைப் பார்த்தால் - நான் என்னைப் பற்றிய, பிறரைப் பற்றிய, இறைவனைப் பற்றிய நேர்முகமான புரிதலைப் பெற்றுக்கொள்ள முடியும். அந்நேர்முகப் புரிதலின் பின்புலத்தில் வாழ்க்கையை அமைத்துக்கொண்டால் ஒவ்வொரு நாளும் நானும் ஞானியாக விளங்க முடியும்.

ஞானியரின் வாழ்வில் 'நிலா உள்ளவரை மிகுந்த சமாதானம் நிலவும்' என்கிறது இன்றைய பதிலுரைப் பாடல் (காண். திபா 72:7)

சிறியதிலும் பெரியதைக் காணும் ஞானியருக்கு ஒவ்வொரு காட்சியும் திருக்காட்சியே!