இவ் மறையுரையை வழங்குபவர்

அருட்பணி.இயேசு கருணாநிதி
Archbishop’s House, K. Pudur, Madurai 625 007, India
Email: yesu@live.in

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)









கிறிஸ்து பிறப்பு பெருவிழா - நள்ளிரவுத் திருப்பலி

கிறிஸ்து பிறப்பு அனுபவம்

எசாயா 9:2-7
தீத்து 2:11-14
லூக்கா 2:1-14

எஸ். இராமகிருஷ்ணன் அவர்கள் தன்னுடைய நூலில் 'துறவியும் மீனும்' என்ற குறும்படம் பற்றி எழுதுகின்றார். புத்த மடாலயம் ஒன்று இருந்தது. அதன் நடுவில் அழகிய குளம். அந்தக் குளத்தில் சில மீன்கள் இருந்தன. அவற்றுள் ஒரு மீனை அங்கிருந்த துறவி ஒருவருக்கு மிகவும் பிடித்தது. அந்த மீனை பிடித்துவிடவும் இவருக்கு ஆசை. 'மீன் பிடிப்பது எப்படி?' என்ற புத்தகம் வாங்கிப் படிக்கிறார். மீன் பிடிப்பவர்கள் பலரைச் சந்தித்துக் கேட்கின்றார். நண்பர்கள், விருந்தினர்கள் என யார் வந்தாலும் இவருடைய பேச்சு அந்த மீனைப் பற்றியதாகவே இருக்கிறது. அவரின் மீன்பிடி முயற்சிகள் எல்லாம் வீணாகிக்கொண்டே இருக்கின்றன. ஒருநாள் இவரே அத்தண்ணீருக்குள் குதித்துவிடுகின்றார். அந்த மீனோடு இணைந்து நீந்த ஆரம்பிக்கின்றார். சில நிமிடங்களில் அவரும் மீனும் அந்தக் குளத்தின் தண்ணீரோடு தண்ணீராய்க் கரைந்து மறைந்துவிடுகிறார்கள்.

மனித குலத்திற்கு வெளியே இருந்த கடவுள் மனித வரலாற்றுக்குள் நுழைந்து தன்னையே மனிதத்தோடு கலந்த கிறிஸ்து பிறப்பு பெருவிழாவைக் கொண்டாடுகிறோம்.

நாம் இன்று முதலில் கேட்க வேண்டிய கேள்வி: 'கிறிஸ்துமஸ் என்பது எனக்கு ஒரு நிகழ்வா? அல்லது அனுபவமா?' - நிகழ்வு என்றால் அது கேரல்ஸ், கேண்டில்ஸ், கேக், க்ரீட்டிங்ஸ் என நின்றுவிடும். அனுபவம் என்றால்தான் அது என் உள்ளத்தைப் பாதிக்கும்.

இன்றைய வாசகங்கள் கிறிஸ்து பிறப்பு பெருவிழாவை மூவகை அனுபவங்களாகப் பகிர்கின்றன:

அ. மகிழ்ச்சியின் அனுபவம் (காண். முதல் வாசகம்)

- அடிமைத்தனத்தில் இருந்த மக்களுக்கு

ஆ. மீட்பின் அனுபவம் (காண். இரண்டாம், மூன்றாம் வாசகம்)

- கடைநிலையில் இருந்த ஆடு மேய்ப்பவர்களுக்கு

இ. அமைதியின் அனுபவம் (காண். மூன்றாம் வாசகம்)

- நன்மனத்தவர் அனைவருக்கும்

முதல் வாசகம் எசாயா 9:2-7

1. இலக்கிய பண்பு

எபிரேய இலக்கியத்தில், குறிப்பாக செய்யுளில், அதிகமாக பயன்படுத்தப்படும் ஒரு இலக்கியப் பண்பின் பெயர் 'இருசொல் இயைபணி' அல்லது 'இணைவுநிலை' (synonymous parallelism). அதாவது, முதல் வரியில் சொல்லப்படும் கருத்தே இரண்டாம் வரியிலும் வேறு வார்த்தைகளில் சொல்லப்படுவது. இன்றைய முதல் வாசகத்தில் நான்கு இடங்களில் இது பயன்படுத்தப்பட்டிருக்கின்றது.

காரிருளில் நடந்து வந்த மக்கள் பேரொளியைக் கண்டார்கள். சாவின் நிழல்சூழ் நாட்டில் குடியிருப்போர்மேல் சுடர் ஒளி உதித்துள்ளது. (இந்த இரண்டு வாக்கியங்களின் பொருள் ஒன்றே)

அவர்கள் பலுகிப் பெருகச் செய்தீர். அவர்கள் மகிழ்ச்சியை பெருகச் செய்தீர். (இந்த இரண்டு வாக்கியங்களின் பொருள் ஒன்றே)

நுகத்தை நீர் உடைத்தெறிந்தீர். தடியைத் தகர்த்துப் போட்டீர். கொடுங்கோலை ஒடித்தெறிந்தீர். (இந்த மூன்று வாக்கியங்களின் பொருள் ஒன்றே)

ஒரு குழந்தை நமக்குப் பிறந்துள்ளது. ஓர் ஆண்மகவு நமக்கு தரப்பட்டுள்ளது. ((இந்த இரண்டு வாக்கியங்களின் பொருள் ஒன்றே)

2. உருவகங்கள்

மெசியாவின் வருகை தரும் மகிழ்ச்சிக்கு இரண்டு உருவகங்களைத் தருகின்றார் எசாயா: (அ) அறுவடை நாள், (ஆ) போரில் வெற்றி பெறும் நாள்.

(அ) அறுவடை நாளில் எதற்கு நிறைவு கிடைக்கிறது? உண்பதற்கான உணவு கிடைத்துவிடுகிறது.

(ஆ) போரின் வெற்றி நாளில் கிடைப்பது என்ன? பாதுகாப்பு. அதாவது, எதிரிகளின் அழிவு. ஆக, உண்பதற்கு உணவும், இருக்குமிடத்தில் பாதுகாப்பும் இருந்தால் மகிழ்ச்சி நிறைவடையும். இல்லையா? நம் வாழ்க்கைக்கு இந்த இரண்டுதாம் அவசியம். நாம் வைத்திருக்கும் மற்ற அனைத்தும் வெறும் 'தேவைகளே.'

மேலும், மகிழ்ச்சி என்ற உணர்வை இரண்டு உவமைகள் வழியாகவும் சொல்கிறார் எசாயா:

(அ) அறுவடை நாளில் மகிழ்ச்சியுறுவதுபோல.

(ஆ) கொள்ளைப் பொருளை பங்கிடும்போது இருப்பது போல. (கொள்ளைப் பொருள் இங்கே திருடிய பொருட்களை குறிப்பது அல்ல. மாறாக, எதிரிகள் அழிந்தால் வெற்றி பெற்ற வீரர்கள் அந்த எதிரி நாட்டின் ஆலயம், அரண்மனை, வீடுகளில் உள்ள அனைத்து நபர்களையும், பொருட்களையும் உரிமையாக்கிக் கொள்வது. இது போர் மரபும் கூட. இந்த அடிப்படையில்தான், பாரவோனின் அடிமைத்தனத்திலிருந்து இஸ்ரயேல் மக்களை விடுவிக்கின்ற கடவுள் அவர்களை தன் உரிமைப் பொருளாக்கிக் கொள்கின்றார்). (நம் உழைப்பு இல்லாத ஒரு பொருளை நாம் பெறுவதால் வரும் இன்பத்தை எசாயா இங்கே குறிப்பிடவில்லை!)

3. மகிழ்ச்சிக்கான மூன்று காரணங்கள்

அ. அடிமைத்தனம் ஒழிந்தது. அடிமைத்தனத்தின் அடையாளமாக இருக்கும் நுகம், தடி, கொடுங்கோல் ஒடிக்கப்படுவது மட்டுமல்லாமல், போர் வீரனின் ஆடைகள், காலணிகள் அனைத்தும் நெருப்பிட்டு அழிக்கப்படுகின்றன. அதாவது, ஒரு பொருளை முழுமையாக அழிக்க வேண்டுமானால் அதில் நெருப்பிடுதல் வேண்டும். நெருப்பிலடப்பட்ட பொருள் அதன் இயல்பை மீண்டும் பெறுவது சாத்தியமல்ல. (இந்த அடிப்படையில்தான் கிறிஸ்தவ மரபில் இறந்தோரை நெருப்பில் இடுவது அல்லது இறந்தோர் மேல் நெருப்பிடுவது தவறு என்று கருதப்பட்டது!) அடிமைத்தனத்தின் தடயமே இல்லாமல் ஆக்கிவிடுகிறது மெசியாவின் வருகை.

ஆ. குழந்தை பிறந்துள்ளது. குழந்தை புதிய நம்பிக்கையின் அடையாளம். இந்த குழந்தை ஒருவேளை உடனே வரவிருக்கும் அரசரைக் குறித்தாலும், இந்த குழந்தையைப் பற்றி முன்னுரைத்த அமைதியை எந்த அரசராலும் தரமுடியவில்லை. ஆக, இந்த குழந்தை வரவிருக்கும் மெசியாவைத்தான் குறிக்க முடியும். இந்த குழந்தைக்கு நான்கு பெயர்கள் தரப்பட்டிருக்கின்றன. அதாவது, அரசர்கள் தலைப்புகள் இட்டு அழைக்கப்படுவது மரபு - இராஜாதி ராஜ, இராஜ குலோத்துங்க, இராஜ குலதிலக என்பதுபோல. மேலும், 'எதிரிகளை நீ புறமுதுகிட்டு ஓடச் செய்ததால் இன்றுமுதல் நீ ...' என்று அரசனுக்கு பட்டங்கள் கொடுப்பதும் வழக்கம். இங்கே குழந்தைக்கு நான்கு பட்டங்கள் சூட்டி மகிழ்கின்றார் எசாயா:

வியத்தகு ஆலோசகர். அதாவது, எங்கே போக வேண்டும் என்ற வழியைக் காட்டுபவர். வலிமைமிகு இறைவன். இங்கே இறைவன் என்பதற்கு 'எலோகிம்' அல்லது 'யாவே' பயன்படுத்தப்படவில்லை. 'ஏல்' என்று பயன்படுத்தப்பட்டுள்ளது. 'ஏல்' என்றால் 'பெருமான்' அல்லது 'பெருமகனார்' என மொழிபெயர்க்கலாம். இங்கே இந்த குழந்தையை எசாயா கடவுளாக்கவில்லை. மிக நேர்த்தியாக வார்த்தையை கையாளுகின்றார். என்றுமுள தந்தை. ஒரு குழந்தை எப்படி தந்தையாகும்? இது ஒரு வித்தியாசமான தலைப்பு. ஒரு குடும்பத்தின் தந்தை தன் குடும்பத்திற்கு தரும் உணவையும், பாதுகாப்பையும் இது குறிக்கிறது. அமைதியின் அரசர். அடிமைத்தனம் மற்றும் போர் நீக்கி அமைதி தருகிறார்.

இ. நீதியும், நேர்மையும் அவருடைய ஆட்சியின் அடையாளங்கள். இதுதான் காரிருளில் வாழ்ந்த மக்கள் காணும் பேரொளி. அநீதியும், பொய்மையும் இருளின் காரணிகள். இவற்றிற்கு மாற்றான நீதியும், நேர்மையும் ஒளியின் காரணிகள்.

இவ்வாறாக, மெசியாவின் வருகை குறித்தும், அந்த வருகை கொணரும் மகிழ்ச்சி குறித்தும் முன்னுரைக்கிறார் எசாயா.

4. வாழ்வியல் சவால்கள்

அ. மகிழ்ச்சி என்பது ஒரு கொடை என இங்கே சித்தரிக்கப்படுகிறது. யாருடைய கொடை? மெசியாவின் கொடை. அப்படியென்றால் மகிழ்ச்சி நமக்கு வெளியே இருக்கிறது என்று சொல்லலாமா? இல்லை. மகிழ்ச்சி நம் உள்ளே தான் இருக்கிறது. அதை நாம் கண்டடைவதற்கான உதவி வெளியிலிருந்து வருகின்றது.

ஆ. என் பழக்கங்களுக்கு நான் தீயிடுகிறேனா? அதாவது, அடிமைத்தனமும் வேண்டும், மகிழ்ச்சியும் வேண்டும் என்பது மெசியாவின் வருகையில் சாத்தியமல்ல. நாம் ஏதாவது ஒன்றைத்தான் தெரிவு செய்ய முடியும். மகிழ்ச்சியை தெரிவு செய்கிறோம் என்றால், அடிமைத்தனம் தீயிடப்பட வேண்டும். அதாவது நாம் விடமுடியாத கெட்ட பழக்கங்களை சில ஆண்டுகள் நாம் பிடித்திருக்கிறோம். பின் அவைகள் நம்மை பிடித்துக்கொள்ள தொடங்குகின்றன. புதுவருடத்தை எதிர்நோக்கியிருக்கும் நாம் விடமுடியாமல் பிடித்துக்கொண்டிருக்கும் பழக்கங்கள் எவை?

இ. இன்று நான் குடிலில் படுத்திருக்கும் பாலன் இயேசுவைப் பார்க்கும்போது என் மனதில் தோன்றும் பட்டம் என்ன? அவரை நான் என்ன பெயர் கொண்டு அழைப்பேன்? அவர் என் ஆலோசகரா, இறைவனா, தந்தையா, அரசரா?

இரண்டாம் வாசகம் தீத்து 2:11-14

திமோத்தேயுவைப் போலவே பவுலின் நெஞ்சுக்கு நெருக்கமானவர் தீத்து. தீத்து தன் திருஅவைக்கு சொல்ல வேண்டிய 'மறைக்கல்வி' (catechism) என்ன என்பதை பவுலே எழுதிக்கொடுக்கிறார்.

'கடவுளின் அருள் வெளிப்பட்டுள்ளது' என்று தொடங்கி 'கடவுளின் மாட்சி வெளிப்படப்போகிறது' என நிறைவு செய்கின்றார்.

'வெளிப்படுத்துதல்' என்பது கீழைத்திருச்சபையில் மிக முக்கியமான வார்த்தை. அதாவது, லாஜிக் ரொம்ப சிம்ப்பிள். கடவுளை நாமாகவே கண்டுகொள்ள அல்லது அறிந்துகொள்ள முடியாது. அவராகத்தான் தன்னை வெளிப்படுத்த வேண்டும். இந்த வெளிப்படுத்துதல் இயேசுவில் இரண்டுமுறை நிகழ்கிறது: (அ) அவரது பிறப்பில். (ஆ) அவரது உயிர்ப்பில்.

இந்த இரண்டு வெளிப்படுத்துதல்களுக்கும் இரண்டு காரணங்கள் இருக்கின்றன என்றும் தொடர்ந்து எழுதுகின்றார்:

அ. பிறப்பு என்னும் வெளிப்படுத்துதல் நம் இம்மை வாழ்வுக்கு பயன்தருகிறது. அதாவது, கட்டுப்பாட்டுடனும், நேர்மையுடனும், இறைப்பற்றுடனும் வாழ இவ்வருள் பயிற்சி அளிக்கிறது.

ஆ. உயிர்ப்பு என்னும் வெளிப்படுத்துதல் நம் மறுமை வாழ்வுக்கு பயன்தருகிறது. அதாவது, மகிழ்ச்சியோடு எதிர்நோக்கியிருக்க அது கற்றுத்தருகிறது.

இயேசு பிறப்பிற்கும், உயிர்ப்பிற்கும் நடுவே செய்தது என்ன?

'அவர் நம்மை எல்லா நெறிகேடுகளிலிருந்தும் மீட்டு, நற்செயல்களில் ஆர்வமுள்ள மக்களாக நம்மையே தூய்மைப்படுத்தினார்.'

இதுதான், இயேசுவின் இவ்வுலக வாழ்வின் நோக்கமாக இருந்தது. 'நெறிகேடு' என்பதற்கான கிரேக்க வார்த்தை 'அனோமியா' (அதாவது, சட்டம் எதுவும் இல்லாமல், ஏனோ, தானோவென்று வாழ்வது)

மொத்தத்தில், இயேசுவின் பிறப்பு ஒரு வெளிப்படுத்துதல். அந்த வெளிப்படுத்துலுக்கு நோக்கம் இருந்தது. அது வெறும் வரலாற்று விபத்தாக நடந்தது அல்ல. ஆக, அந்த நோக்கம் நம் ஒவ்வொருவரிலும் நிறைவேறினால்தான் நாம் இயேசுவின் வெளிப்படுத்துதலை நம் வாழ்வில் கண்டுணர முடியும்.

நற்செய்தி வாசகம் லூக்கா 2:1-14

1. பாட அமைப்பு

இந்த திருப்பலியின் நற்செய்தி வாசகத்தை இரண்டு உட்பிரிவுகளாகப் பிரிக்கலாம்:

அ. இயேசுவின் பிறப்பு (2:1-7)

ஆ. வானதூதர்கள் இடையர்க்கு அறிவித்தலும், அவர்களின் பாடலும் (2:8-14)

2. இது வரலாற்று நிகழ்வா?

இயேசுவின் பிறப்பை பற்றி எழுதும் மத்தேயு மற்றும் லூக்கா ஒருவர் மற்றவரிடமிருந்து அதிகம் முரண்படுகின்றனர். மாற்கு இயேசுவின் குழந்தைப் பருவம் பற்றி ஒன்றும் பதிவு செய்யவில்லை. யோவானும் வெறும் உருவகங்களில் பேசி முடித்துவிடுகின்றார். லூக்கா பற்றிய ஒரு நாவலில் அவர் மரியாளை சந்தித்ததுபோல குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நாவலை வெறும் நாவலாக மட்டும்தான் பார்க்க வேண்டும். ஏனெனில், அந்த நாவல் உண்மையாக இருந்தால், லூக்கா மரியாளைப் பார்த்திருந்தால், அதை பதிவு செய்துவிட்டு, தான் பார்த்த நட்சத்திரம் பற்றி ஒன்றும் பதிவு செய்யாமல் விட்டது ஏன்? ஆக, இந்த நற்செய்தி பதிவு லூக்கா நற்செய்தியாளர் தன் இறையியலுக்காக உருவாக்கியதாகவே இருக்க வேண்டும்.

ஆனால், இயேசுவை வெறும் புராதணக் கதையாக யாரும் நினைத்துவிடக் கூடாது என்பதற்காகவும், அவரின் பிறப்பில் கடவுள் மனுக்குலத்தின் வரலாற்றுக்குள் நுழைகிறார் என்றும் எழுதுவதில் அதிக ஆர்வம் காட்டுகிறார். ஆகையால்தான், அகுஸ்து சீசரின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பை பின்புலமாக எடுத்துக்கொள்கிறார். ஆனால் இந்தக் கணக்கெடுப்பு வரலாற்றில் நிகழவில்லை என்றே வரலாற்று ஆசிரியர்கள் கருதுகின்றனர். மேலும், கணக்கெடுப்பின் போது மக்கள் எங்கே வாழ்கிறார்களோ, அங்கே வந்துதான் ஆட்சியாளர்கள் அல்லது அதிகாரிகள் கணக்கெடுப்பர். சொந்த ஊருக்கு செல்ல வேண்டும் என்றால், அவர்களின் உடைமைகள் மற்றும் வீட்டை எப்படி தூக்கிக் கொண்டு போக முடியும். ஆக, மெசியா தாவீதின் மரபில்தான் பிறக்க வேண்டும் என்று அறிந்திருக்கின்ற லூக்கா, வளனாரையும், மரியாளையும் பெத்லகேமுக்கு கூட்டி வருகின்றார்.

மேலும், பிறக்கின்ற குழந்தை வானதூதர்கள் வழியாக இடையர்களுக்கு அறிவிக்கப்பட்டபோது, 'சோத்தேர்' (மீட்பர்), 'கிறிஸ்தோஸ்' (மெசியா அல்லது அருள்பொழிவு பெற்றவர்), 'கிரியோஸ்' (ஆண்டவர்) என்ற மூன்று தலைப்புகளை லூக்கா பயன்படுத்துகிறார். ஆனால், மரியாவுக்கு கபிரியேல் சொன்ன பெயர் 'இயேசு'. மேலும், இயேசு என்பதுதான் வரலாற்றுப் பெயர். மற்றவை இறையியல் தலைப்புகளே.

ஆக, லூக்காவின் இந்த பிறப்பு நிகழ்வு பதிவு வரலாற்று நிகழ்வு என்று சொல்வதைவிட, இறையியல் நிகழ்வு என்றே சொல்லாம்.

அடுத்த கேள்வி வரும் இங்கே. அது வரலாற்று நிகழ்வு இல்லையென்றால் அதை ஏன் நாம் சீரியசாக எடுக்க வேண்டும்?

ரொம்ப சிம்ப்பிளான பதில்.

என் அம்மாவும், உங்கள் அம்மாவும் வரலாற்று நிகழ்வுகள். ஆனால், என் அம்மாவின் அன்பும், உங்கள் அம்மாவின் அன்பும் வரலாற்று நிகழ்வுகளா? அவற்றை ஆய்வுக்கூடத்தில் ஆராய முடியுமா? அவற்றை கண்ணால் பார்க்க முடியுமா? சில நேரங்களில் கண்ணுக்குப் புலப்படாதவையே கண்ணுக்குப் புலப்படுபவைகளைவிட உண்மையானவையாக இருக்கின்றன.

3. வார்த்தைகளும், வாழ்வியல் சவால்களும்

அ. 'விடுதியில் அவர்களுக்கு இடமில்லை.' விவிலியத்தில் மிக சோகமான வார்த்தைகள் இவைதாம். உலகத்தையே படைத்த கடவுளுக்கு சத்திரத்தில் இடமில்லை. அங்கே யாருக்கு இடமிருந்தது? சீசரின் ஆட்களுக்கும், அதிகாரிகளுக்கும், படைவீரர்களுக்கும், உண்டு களித்தவர்களுக்கும். ஆனால் இந்த ஏழைத் தம்பதியினருக்கும், அவர்களின் குழந்தைக்கும் இடமில்லை. 'இடமில்லை' என்று மனுக்குலம் சொல்லிவிட்டால், கடவுள் திரும்பிவிடுவாரா என்ன? பின் கதவின் வழியே வரலாற்றுக்குள் நுழைந்துவிடுகிறார் கடவுள். மேலும், இயேசு இறுதியாக தன் சீடர்களிடம் சொல்வது என்ன? நான் உங்களுக்கு இடம் ஏற்பாடு செய்யப் போகிறேன். நாம் அவருக்கு இடமில்லை என்று சொன்னாலும், அவர் நமக்கு இடம் ஏற்பாடு செய்யப்போகிறார்.

கிறிஸ்து பிறப்பு வைக்கும் முதல் சவால் இதுதான்: 'இடம்.' பிறப்பிலிருந்து இறப்பு வரை நாம் இடத்தை வைத்தே அறியப்படுகிறோம். ஆகையால்தான் நம் பிறந்த மண்ணை நமக்கு விட மனமில்லை. புதிய இடம் எவ்வளவு வசதிகளைத் தந்தாலும் மனம் அதில் லயிப்பதில்லை. நாம் எங்கே இருந்தாலும் எனக்கென்ற இடம் இதுதான் என்று நம்மையே வரையறுத்துக்கொள்கிறோம். அந்த இடத்திற்குள் அடுத்தவர் அத்துமீறினால் நமக்கு பிடிப்பதில்லை. இன்று நாம் பயன்படுத்தும் மொபைலில் கூட எல்லாருக்கும் இடம் கொடுப்பதில்லையே. ஒரு சிலருக்கு மட்டும் 'ஃபேவரிட்ஸில்' இடம் கொடுக்கிறோம். சில எண்களை 'ப்ளாக்ட் நம்பர்ஸ்' என்ற இடத்தில் வைக்கிறோம். நம் ஃபேஸ்புக் பக்கத்தில் எல்லாருக்கும் இடம் கொடுக்கிறோமா? நம் வாட்ஸ்ஆப் க்ரூப்பில்? இல்லை. எல்லாருக்கும் நாம் ஒரே இடத்தைக் கொடுப்பதில்லை. கொடுக்கவும் கூடாது.

இன்று நம் இதயம் ஒரு சத்திரம் போலத்தான் இருக்கின்றது. 'யாரோ வருவார், யாரோ போவார், வருவதும், போவதும் தெரியாது' என்றும், 'ஆயிரம் வாசல் இதயம் அதில் ஆயிரம் எண்ணங்கள் உதயம்' என்றும், எண்ணங்களும், ஆட்களும், ஆசைகளும் வந்து போகின்றன. இன்று அங்கே இயேசுவுக்கு இடம் இருக்கிறதா?

ஆ. 'துணிகள்.' 2:7 மற்றும் 2:12 என இரண்டு இடங்களில் இயேசு துணியில் சுற்றப்பட்டிருப்பதை எழுதுகிறார் லூக்கா. படைப்பின் தொடக்கத்தில் ஆதாமும், ஏவாளும் படைக்கப்பட்டபோது ஆடையின்றி இருந்தனர். பாவம் வந்தவுடன் ஆடையும் வந்தது. ஆடை பாவத்திற்கு அடையாளமாக நாம் இன்றும் சுமக்கின்றோம். பாவத்தின் அடையாளமான ஆடையை, மற்றொரு ஆடையாலேதான் எடுக்கப்பட முடியும் என்பதற்காக லூக்கா ஆடைக்கு அழுத்தம் கொடுக்கிறார். மேலும், கல்வாரியில் ஆடை அகற்றப்பட்டு இயேசு நிற்பார். அதை இங்கேயே முரண்படுத்திக் காட்டுகிறார் லூக்கா. இன்று நாம் அணியும் ஆடையும் அடையாளமே - நாம் செய்யும் வேலை, நாம் எடுத்திருக்கும் அழைப்பு நிலை, நம் விருப்பு-வெறுப்பு, வாழ்க்கை நிகழ்வு எல்லாவற்றையும் இந்த ஆடைதான் பிரதிபலிக்கிறது.

இ. 'இரவெல்லாம் காவல் காத்துக்கொண்டிருந்தார்கள்.' விழிப்பாயிருப்பவர்களுக்கு மட்டுமே இறைவன் தன்னை வெளிப்படுத்துகிறார். அந்த குளிர் இரவில் ஊரே தூங்கிக்கொண்டிருந்தபோது, இடையர்கள் காவல் காக்கின்றனர். இங்கே ஒரு முரணையும் காண வேண்டும். இயேசுவின் காலத்தில் இடையர்கள் ஏமாற்றுபவர்கள் எனவும், திருடர்கள் எனவும், அடுத்தவரின் மேய்ச்சலில் ஆடுகளை விட்டு வேடிக்கை பார்க்கும் முரடர்கள் என்றும் கருதப்பட்டனர். அப்படிப்பட்ட ஒரு அடித்தட்டு மக்கள் குலத்தை, தங்கள் வேலையில் கண்ணுங்கருத்துமாய் இருந்தார்கள் என்று மிக நேர்முகமாக பதிவு செய்கின்றார் லூக்கா. இன்று நாம் அடுத்தவரைப் பார்க்கும் பார்வை எப்படி இருக்கிறது?

ஈ. 'செய்தி அறிவிக்கப்பட்ட இடம்.' இயேசுவின் பிறப்பு செய்தி அறிவிக்கப்பட்ட இடமும் கேட்பாரற்ற இடம்தான். வானதூதர்கள் சீசரின் அரண்மனையிலோ, அல்லது சத்திரத்திலோ பிறப்பு செய்தியை அறிவித்திருக்கலாமே? ஏன் அப்படி செய்யவில்லை. அதற்கான பதிலை வானதூதர்களே தருகின்றனர்: 'உங்களுக்காக பிறந்திருக்கிறார்!' ஆக, இயேசு எனக்காக பிறந்திருக்கிறார் என்று நான் ஏற்றுக்கொண்டால் மட்டுமே அவரின் பிறப்பு எனக்கு அர்த்தமுள்ளாகும். அவர் எனக்கு மெசியாக மாறுவார். ஆக, இயேசு என்பவர் ஒரு இறையியல் கோட்பாடு அல்ல. நான்கு சுவர்களுக்குள் அமர்ந்து ஓர் இறையியல் கட்டுரையை எழுதி, 'இதுதான் இயேசு' என்று எல்லாரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று சொல்வது சால்பன்று. இயேசு எல்லா வரையறைகளையும், கட்டுரைகளையும் தாண்டி நிற்பவர்.

உ. 'பாடல்.' லூக்கா நற்செய்தியின் முதல் பிரிவுகளை வாசிக்கும்போதெல்லாம், பழைய திரைப்படம் பார்த்தது போல இருக்கும். அதாவது, எதற்கெடுத்தாலும் பாடலாக இருக்கும்: சக்கரியா பாடுவார். மரியா பாடுவார். வானதூதர்கள் பாடுவார்கள். பின் சிமியோன் பாடுவார். 'உன்னதத்தில் கடவுளுக்கு மாட்சியும், உலகில் உகந்தோருக்கு அமைதியும்' (2:13-14) என்று வானதூதர்கள் பாடுவதை, அப்படியே மாற்றி மக்கள் வாயில் போடுகின்றார் லூக்கா. இயேசு வெற்றி ஆர்ப்பரிப்போடு எருசலேம் நுழையும்போது, அவர்கள் அனைவரும் ஆர்ப்பரித்து, 'விண்ணகத்தில் அமைதியும் மாட்சியும் உண்டாகுக!' என்று குரல் எழுப்புகின்றனர். ஆக, இயேசுவை ஏற்றுக்கொள்ளாதவர்களுக்கு அமைதி கிடைப்பதில்லை. அது கடவுளிடம் திரும்பிவிடுகிறது. ஆக, இறைவனின் வெளிப்படுத்துதலை ஏற்றுக்கொள்பவர்கள் மட்டுமே மகிழ்ந்து பாட முடியும். அந்த பாடல் அவர்களுக்கு மட்டுமே பொருள்தரும்.

ஊ. 'அச்சம் போக்கும் நம்பிக்கை.' வானதூதர்களின் திடீர் பிரசன்னத்தால் அச்சம் கொண்டவர்களுக்கு, 'அஞ்சாதீர்கள்' என்று சொன்ன தூதர் குழு, 'மகிழ்ச்சியூட்டும் செய்தியை' அறிவிக்கின்றது.மேலும், இந்த மகிழ்ச்சி எல்லாருக்கும் உரித்தானது.

இறுதியாக,

இன்று நமக்கு எத்தனை வயதாகிறதோ அத்தனை கிறிஸ்துபிறப்பு விழாக்களைக் கொண்டாடியுள்ளோம். இவ்விழா என்னில் ஏற்படுத்தும் மாற்றம் என்ன?

'இன்று உங்களுக்காக மீட்பர் பிறந்திருக்கிறார்!' - என்னும் வானதூதரின் வார்த்தைகள் என்னில் எழுப்பும் உணர்வுகள் எவை?

கிறிஸ்து பிறப்பு வாழ்த்துக்களும்! மகிழ்ச்சியும்!