இவ் மறையுரையை வழங்குபவர்

அருட்பணி.இயேசு கருணாநிதி
Archbishop’s House, K. Pudur, Madurai 625 007, India
Email: yesu@live.in

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)









திருவருகைக்காலம் முதல் ஞாயிறு

ஆண்டவரின் மலைக்குச் செல்வோம்!

எசாயா 2:1-5
உரோமையர் 13:11-14
மத்தேயு 24:37-44

ஸ்மார்ட்ஃபோன் மற்றும் ஸ்மார்ட்வாட்ச் பயன்படுத்தும் அனைவரும் பயன்படுத்தியிருக்கும் ஒரு ஆப்ஷன் 'டைமர்' ('timer'). அதாவது, ஒரு குறிப்பிட்ட நேரத்தைக் குறித்து அந்த நேரம் முடிந்தவுடன் நம்மை அலர்ட் செய்யும் இயக்கியே டைமர். குட்டித்தூக்கம், நினைவூட்டல், தியானம், நீராவி பிடித்தல் என எல்லாவற்றுக்கும் இந்த இயக்கியை நாம் பயன்படுத்துகிறோம். நம்மை அறியாமலேயே நாம் டைமர் போட்டு இயங்கிக்கொண்டிருக்கிறோம். எப்படி?

குழந்தையைக் கருவில் தாங்கியிருக்கும் ஒரு பெண் குழந்தை பிறக்கும் தேதி குறிக்கப்பட்டவுடன் அந்த நாள் மற்றும் நேரத்தை மையமாக வைத்து தன்னுடைய வேலைகளைச் செய்ய ஆரம்பிக்கிறாள். அந்த நாளுக்கேற்றாற்போல உணவு வகை, உடற்பயிற்சி, உடல் இயக்கம் என அனைத்தையும் ஒழுங்கு செய்கிறார். ஒவ்வொரு நாளும் கடக்க கடக்க அவளுடைய உள்ளத்தில் இனம் புரியாத மகிழ்ச்சியும் பயமும் ஒருசேர தோன்றி மறைகிறது. நாள் நெருங்க நெருங்க இந்த இரண்டு உணர்வுகளும் அதிகமாகின்றன. குழந்தை பிறக்கும் நாள் வந்தவுடன் அவள் இன்னும் கவனமாக இருக்கிறாள். தன் உடலில் ஏற்படும் மாற்றங்களைக் கவனிக்கிறாள். தன் அம்மா மற்றும் உடன்பிறப்புக்களை துணைக்கு வைத்துக்கொள்கிறாள். வாகனத்தை முன்பதிவு செய்கிறாள். உணவு, தண்ணீரில் மிகக் கவனமாக இருக்கிறாள். தன்னுடைய இயக்கத்தை வீ;ட்டிற்குள் மட்டும் என வரையறுத்துக்கொள்கிறாள்.

திருமணத் தயாரிப்பு, அருள்பணி திருப்பொழிவு தயாரிப்பு, வேலைக்கான தயாரிப்பு, அறுவடைக்கான தயாரிப்பு என அனைத்தும் நாள் குறிக்கப்பட்டு 'டைமர்' ஓடுவதன் பின்புலத்தில்தான் நடைபெறுகின்றன. இப்படி நாம் செயல்படும்போது நம்மையே நன்றாக மேலாண்மை செய்ய முடிகிறது, முக்கியமானவற்றுக்கு மட்டும் நேரம் ஒதுக்கக் கற்றுக்கொள்ள முடிகின்றது.

புதிய திருவழிபாட்டு ஆண்டிற்குள் நுழைகிறோம். இந்த முதல்நாளில் நமக்குத் தரப்படும் வாசகங்கள் கடவுளின் டைமர் பற்றி நமக்கு விளக்குகின்றன.

அது என்ன கடவுளின் டைமர்?

'ஒவ்வொன்றுக்கும் ஒரு நேரமுண்டு. உலகில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் ஒரு காலமுண்டு. பிறப்புக்கு ஒரு காலம், இறப்புக்கு ஒரு காலம்' என முன்மொழிகின்ற சபை உரையாளர் அப்பகுதியின் இறுதியில், 'கடவுள் ஒவ்வொன்றையும் அதனதன் காலத்தில் செம்மையாகச் செய்கிறார். காலத்தைப் பற்றிய உணர்வை மனிதருக்குத் தந்திருக்கிறார். ஆயினும், கடவுள் தொடக்கமுதல் இறுதிவரை செய்துவருவதைக் கண்டறிய மனிதரால் இயலாது' (காண். சஉ 3:1-2,11) என எழுதுகின்றார்.

காலம் என்றும் கடவுள் கையில் இருக்கிறது என்பது நமக்கு மிகப்பெரிய நினைவூட்டலாக இருக்கிறது.

இன்றைய முதல் வாசகத்தில் (காண். எசா 2:1-5), 'இறுதி நாள்களில்' ஆண்டவர் என்ன செய்வார் என்பதை எசாயா இறைவாக்கினர் எடுத்துரைக்கிறார். இரண்டாம் வாசகத்தில் (காண். உரோ 13:11-14), 'இறுதிக்காலம் இதுவே,' 'விழித்தெழும் நேரம் வந்துவிட்டது' என்கிறார் பவுல். நற்செய்தி வாசகத்தில் 'எந்த நாளில் வருவார் என்று உங்களுக்குத் தெரியாது' என்றும், 'நீங்கள் நினையாத நேரத்தில் மானிட மகன் வருவார்' என்றும் மொழிகின்றார் இயேசு.

ஆக, மூன்று வாசகங்களிலும் காலத்தைப் பற்றிய குறிப்பு, 'நாள்,' 'நேரம்,' 'காலம்' போன்ற வார்த்தைகளில் காணப்படுகின்றது.

ஒவ்வொரு டைமரிலும் நேரத்துளிகள் முடிந்தவுடன் நாம் ஒரு வேலையைத் தொடங்குகிறோம். இறுதிநாளில், அல்லது வந்துவிட்ட இந்த நேரத்தில், நினையாத நேரத்தில் நாம் செய்ய வேண்டிய வேலை ஒன்றே ஒன்றுதான்: 'ஆண்டவரின் இல்லத்திற்குப் போவது!'

திருவருகைக்காலத்தின் முதல் ஞாயிற்றின் செய்தி இதுதான்: 'ஆண்டவரின் இல்லத்திற்கு அல்லது மலைக்குப் போவோம்!'

ஆண்டவரின் இல்லத்திற்கு நாம் போக வேண்டும் என்று இன்றைய முதல் வாசகத்தில் எசாயாவும், பதிலுரைப்பாடலில் திருப்பாடல் ஆசிரியரும் கூறுகின்றார் என்றால் நாம் இப்போது இருக்கும் இல்லத்தில் என்ன பிரச்சினை? ஏன் இந்த இல்லத்தை விட்டுவிட்டு ஆண்டவரின் இல்லத்திற்குப் போக வேண்டும்?

நாம் இப்போது வாழும் இந்த உலகம் அல்லது இல்லத்தில் உள்ள மூன்று பிரச்சினைகளைப் பதிவு செய்கின்றன:

அ. ஆண்டவரின் நெறியை விட்டு நம் நெறியில் வாழ்வது

நீதித்தலைவர்கள் நூலில் ஒரு வாக்கியம் அடிக்கடி வரும்: 'அந்நாள்களில் இஸ்ரயேலுக்கு அரசன் கிடையாது. ஒவ்வொருவரும் அவரவர் பார்வையில் நேர்மையெனப்பட்டதைச் செய்துகொண்டிருந்தனர்' (காண். நீத 21:25). இவர்கள் நேர்மையெனப்பட்டதைச் செய்தார்கள் என்றால் நேர்மையானவற்றைச் செய்தார்கள் என்று பொருள் அல்ல. மாறாக, தங்களுக்கு நேர்மையெனப்பட்டதைச் செய்தனர். இறுதிநாள்களில், 'நாம் ஆண்டவரின் நெறியில் நடப்போம்' என்று மக்கள் சொல்வதாக எசாயா எழுதுகின்றார். அப்படி என்றால், இப்போது அவர்கள் தங்கள் நெறியின்படி வாழ்கின்றனர். திருச்சட்டத்தை மறந்தவர்களாகவும், வன்முறை, போர் போன்றவற்றால் அலைக்கழிக்கப்பட்டவர்களாகவும் இருக்கிறார்கள்.

ஆ. இருளின் செயல்களை அணிந்திருத்தல்

உரோமைத் திருச்சபையில் உள்ளவர்கள் இருளின் செயல்களை - அதாவது, களியாட்டம், குடிவெறி, கூடாஒழுக்கும், காமவெறி, சண்டைசச்சரவு - அணிந்துகொண்டிருக்கின்றனர். இருளின் செயல்கள் இவை மட்டுமல்ல. நம் தனிப்பட்ட வாழ்வில் நாம் கொண்டிருக்கின்ற தாழ்வு மனப்பான்மை, கோபம், பயம், தன்மதிப்பு குறைவு போன்றவையும் இருளின் செயல்களே.

இ. தயார்நிலை அல்லது விழிப்புநிலை இல்லாமல் இருத்தல்

நோவாகாலத்து மக்கள் உலகம் அழியப்போகிறது என்ற விழிப்புநிலை இல்லாமல் இருந்ததால் அவர்கள் அதற்கென எதுவும் தயாரிக்கவில்லை. மேலும், தயார்நிலை அல்லது விழிப்புநிலையில் இல்லாதவரின் வாழ்வு சூறையாடப்படும். அவர் மானிடமகனால் தேர்ந்துகொள்ளப்பட மாட்டார்.

இந்த மூன்று பிரச்சினைகளிலிருந்து நாம் விடுபட்டால்தான் ஆண்டவரின் இல்லம் நோக்கி நாம் திரும்ப முடியும். மேற்காணும் மூன்று பிரச்சினைகளும் இன்று நம் இல்லத்தில் அல்லது உள்ளத்தில் இருந்தால் அவற்றை நாம் அப்படியே விட்டுவிட்டுச் செல்தல் அவசியம்.

அப்படி நாம் ஆண்டவரின் இல்லத்திற்குச் செல்வதால் நாம் அடையும் பயன்கள் எவை?

அ. தலைகீழ் மாற்றம்

தலைகீழ் மாற்றத்தை உருவகமாகப் பதிவுசெய்கின்றார் எசாயா: 'வாள்கள் கலப்பைக் கொழுக்களாகும். ஈட்டிகள் கருக்கரிவாள்களாகும். போர்ப்பயிற்சி நடைபெறாது.' ஆக, முந்தைய நிலை முற்றிலும் மாறிப்போகிறது. மேலும், அழிவின் காரணிகளாக இருந்தவை விவசாயத்தின், ஆக்கத்தின் கருவிகளாக மாறுகின்றன. ஆண்டவரின் இல்லத்தை நோக்கி நாம் பயணத்தைத் திருப்பும்போது நம்முடைய வாழ்விலும் தலைகீழ் மாற்றம் நிகழும்.

ஆ. கிறிஸ்துவை அணிந்துகொள்வோம்

'அணிந்துகொள்தல்' என்பது முற்றிலும் ஆட்கொள்ளப்படுதலைக் குறிக்கும். இருளை அணிந்துகொண்டவர்கள் இனிமேல் கிறிஸ்துவை அணிந்துகொள்ளவேண்டும். நாம் அணியும் எதுவும் நமக்கு மதிப்பு தருகிறது. ஆகையால்தான் சிறந்தவற்றையும், சிறந்த பிராண்ட்களையும் நாம் அணிந்துகொள்ள விரும்புகிறோம். பார்க் அவென்யு, க்ரோகொடைல் போல 'கிறிஸ்து' என்ற பிராண்டை நாம் அணிந்துகொண்டால், நம் வெளி இயல்பும் உள்ளே உள்ள இயல்பும் ஒன்றாக இருக்க வேண்டும்.

இ. மானிடமகனால் எடுத்துக்கொள்ளப்படுதல்

வயலில் இருக்கும் இருவரில் ஒருவர், மாவரைக்கும் இருவரில் ஒருவர் எடுத்துக்கொள்ளப்படுகின்றார். மற்றவர் விடப்படுகின்றார். எடுத்துக்கொள்வது இறைவனின் தெரிவு. ஆனால், ஆயத்தமாய் இருப்பவர்களையே அவர் எடுத்துக்கொள்கின்றார். ஆயத்தம் இல்லாதவர் தொடர்ந்து வயலிலும் திரிகையிலும் வேலை செய்துகொண்டே இருக்க வேண்டும். ஆண்டவரின் மலைக்குச் செல்ல நாம் என்ன செய்ய வேண்டும்?

அ. அவர் நெறியில் நடக்க வேண்டும்

ஆ. விழித்தெழ வேண்டும்

இ. தயார்நிலையில் இருக்க வேண்டும்

''ஆண்டவரது இல்லத்திற்குப் போவோம்' என்ற அழைப்பை நான் கேட்டபோது அகமகிழ்ந்தேன்' என்று பாடுகின்றார் திருப்பாடல் ஆசிரியர் (காண். 122:1). அந்த இல்லத்தில் நீதியும், அமைதியும், நல்வாழ்வும் இருக்கிறது.

நமக்கு முன் நிறைய நேரம் இருக்கிறது என நினைத்து நம் வாழ்வை வாழ்ந்துகொண்டிருப்பதை நிறுத்துவோம். ஆண்டுகள் நிறையத் தெரியலாம். ஆனால், பத்தாண்டுகளாகப் பிரித்தால் நம் வாழ்வு வெறும் ஏழு அல்லது எட்டு பத்தாண்டுகளே. நம்முடைய வாழ்வின் நேரம் குறைவு என்று நினைக்கத் தொடங்கும் அந்த நாளில்தான் நாம் புதிதாய்ப் பிறக்கிறோம். இந்த எண்ணம் நமக்கு பயத்தை அல்ல, எதிர்நோக்கையே தர வேண்டும்.

'ஆண்டவரின் இல்லத்திற்குப் போவதை' நான் என்னுடைய வாழ்வின் இலக்காக நினைத்து, அதற்கான டைமர் ஓடிக்கொண்டிருப்பதை கருத்தில் கொண்டு, வாழ்வை நான் அன்றாடம் வாழ்ந்தால் வீண் சண்டை சச்சரவுகளில் நேர மற்றும் ஆற்றல் விரயமும், பயமும், கோபமும், பாதுகாப்பின்மையும், வன்மமும், தீய இச்சையைத் தூண்டும் ஊனியல்பும், சோம்பலும், தூக்கமும் இருக்காது.

நாம் இன்று ஏற்றும் 'எதிர்நோக்கு' என்னும் மெழுகுதிரி 'ஆண்டவரின் இல்லத்திற்குப் போவோம்!' என்ற எதிர்நோக்கை நம் உள்ளத்தில் ஏற்றுவதாக!