இவ் மறையுரையை வழங்குபவர்

அருட்பணி.இயேசு கருணாநிதி
Archbishop’s House, K. Pudur, Madurai 625 007, India
Email: yesu@live.in

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)









ஆண்டின் பொதுக்காலம் 25ஆம் ஞாயிறு

சின்னஞ்சிறியவைகளில்

ஆமோஸ் 8:4-7
1 திமொத்தேயு 2:1-8
லூக்கா 16:1-13

'நேர்மையற்ற கண்காணிப்பாளன்' எடுத்துக்காட்டை வாசித்து முடித்தவுடன் நம்மில் நிறைய எண்ணங்கள் எழுகின்றன.

ஒன்று. 'நோக்கம் நல்லது என்பதற்காக கெட்ட வழிகளைக் கையாளக்கூடாது' என்பது அறநெறியின் முதல் கொள்கை. அதாவது, நிறைய மதிப்பெண் வாங்க வேண்டும் என்பது நல்ல நோக்கம். ஆனால் அதற்காக திருத்தப்பட்ட விடைத்தாளில் விடையை மாற்றி எழுதுவதோ, இடப்பட்ட மதிப்பெண்களை மாற்றும் வழி சரி என்றாகுமா? அமைதி என்ற நோக்கத்தை அடைவதற்காக அனைவரையும் வன்முறை கொண்டு அழிக்கும் வழி சரியாகுமா? அல்லது அமைதியை அடைய போர் சரியாகுமா?

'ஆகும்!' என்கிறார் இயேசு. செல்வத்தைப் பற்றிய இயேசுவின் போதனை எப்போதும் குழப்பமாகவே இருக்கிறது. ஆகையால்தான் 'ஏழ்மை' என்ற துறவற வார்த்தைப்பாடும் இன்றுவரை குழப்பமாக இருக்கிறது. 'செல்வம் கூடாது! செல்வம் அழிந்துபோகும்!' என்று சொல்லும் இயேசு, 'அழியக்கூடிய செல்வத்தைப் பயன்படுத்தி அழியாத நண்பர்களைச் சம்பாதியுங்கள்' என்கிறார் இன்று. அப்படி என்றால் அழியக்கூடிய செல்வத்திற்கும் ஒரு பயன் இருக்கத்தானே செய்கிறது! செல்வர்களைச் சாடும் இயேசு பயன்படுத்தும் உருவகங்கள் பல நேரங்களில் முத்து, புதையல், வணிகன், செல்வன், திராட்சைத் தோட்ட உரிமையாளன் என்று மேட்டுக்குடி சார்ந்ததாகவே இருக்கின்றது. செல்வத்தை வைத்துக்கொள்வதா? விடுவதா? வைத்துக்கொள்வது என்றால் எந்த அளவிற்கு வைத்துக்கொள்வது? விடுவது என்றால் எந்த அளவிற்கு விடுவது?

இன்று நாம் நற்செய்தியில் (காண். லூக் 16:1-3) வாசிக்கும் உவமை இயேசு தன் சீடர்களுக்குக் கூறுவதாக அமைந்திருக்கிறது. இரண்டு மகன்கள் எடுத்துக்காட்டில் (லூக் 15) உள்ளதைப் போலவே 'ஒரு,' 'பாழாக்கினான்' என்ற சொல்லாடல்கள் இங்கே உள்ளன. வீட்டுப்பொறுப்பாளராய் இருக்கும் ஒருவர் ஏற்கனவே உரிமையாளரின் சொத்துக்களைப் பாழாக்குகின்றார். 'நீ இனி பொறுப்பாளராய் இருக்க முடியாது!' என்ற குற்றம் சுமத்தப்பட்டபோது அவர் என்ன செய்கிறார்? இளைய மகன் தனக்குள் பேசியது போலவே இவரும் பேசுகின்றார். மண்வெட்ட தனக்கு வலிமை இல்லை எனவும், இரந்து உண்ண வெட்கமாய் இருக்கிறது எனவும் உணர்கின்றார். இந்த இரண்டிற்கு மாற்றாக கணக்கை மாற்றி எழுதும்படி கடனாளர்களை அழைக்கின்றார். நூறு குடம் எண்ணெய் ஐம்பது என மாற்றப்படுகிறது. நூறு மூடை கோதுமை எண்பது என மாற்றப்படுகிறது. இவைகள் சின்னப் பொருள்கள் அல்ல. கிரேக்க பதத்தில் நூறு நீச்சல் குளம் (பாதோஸ்) எண்ணெய் என்றும், நூறு களம் கோதுமை (கோர்) என்றும் கொடுக்கப்பட்டுள்ளது. ஆக, இது ஒரு மேக்ரோடீலிங். அம்பானி, அதானி, டாடா குழும கணக்கு வழக்கு சம்பந்தப்பட்டது. இவ்வளவு பெரிய அக்கவுண்ட்டில் மிக எளிதாக மாற்றம் செய்கிறார் கண்காணிப்பாளர். இதைப் பார்க்கும் உரிமையாளர் இவர்மேல் கோபப்படவில்லை. மாறாக, இவரின் முன்மதியை பாராட்டுகின்றார். (சொத்துக்களை அழித்துவிட்டு வந்த மகன்மேல் தந்தை கோபப்படவில்லை. வரவேற்கின்றார்.) இயேசு பயன்படுத்தும் கதாபாத்திரங்கள் எபவ்நார்மலாக இருக்கின்றனர்.

உவமையை இத்துடன் முடித்துக்கொள்ளும் இயேசு மூன்று வாழ்க்கை மேலாண்மை பாடங்களைக் கொடுக்கின்றார்:

அ. நேர்மையற்ற செல்வத்தைக் கொண்டு நண்பர்களைத் தேடிக்கொள்ளுங்கள்.

ஆ. சிறியவற்றில் நம்பிக்கைக்குரியவர் பெரியவற்றிலும் நம்பிக்கைக்குரியரே.

இ. எந்த வீட்டு வேலையாளும் இரு தலைவர்களுக்கு ஊழியம் செய்ய முடியாது.

அ. நேர்மையற்ற செல்வத்தைக் கொண்டு நண்பர்களைத் தேடுதல்

யார் இந்த நண்பர்கள்? 'இவர்கள் முடிவில்லாக் கூடாரங்களில் உங்களை ஏற்றுக்கொள்வார்கள்' என்கிறார் இயேசு. இதன் அடிப்படையில் 'நண்பர்கள்' என்பவர்கள் நம் 'ப்ரண்ட்ஸ்' அல்ல. மாறாக, அழிவில்லாதவைகள். இங்கே மற்றொரு பிரச்சினை இருக்கிறது. அதாவது, நான் ஒரு மளிகைக் கடை வைக்கிறேன். அங்கே கொள்ளை லாபம் வைத்து பொருள்களை விற்கிறேன். அதில் வரும் அதீத லாபத்தை நான் அறக்கட்டளைகளுக்கு தானமாகக் கொடுக்கிறேன் அல்லது ஏழைகளுக்கு உதவி செய்கிறேன் அல்லது ஏதாவது அன்னதானம் செய்கிறேன். நான் செய்வது சரியா? ஒரு அநீதி செய்து மற்றொரு நன்மை செய்வதற்குப் பதிலாக நான் என் லாபத்தைக் குறைத்துக்கொண்டாலே அதுவே நல்ல காரியம்தானே? இந்த இடத்தில்தான் நாம் முதல் வாசகத்தின் (காண். ஆமோ 8:4-7) எச்சரிக்கையை மனத்தில் கொள்ள வேண்டும். தன் சமகாலத்தில் நிலவிய சமூக அநீதியைக் கடிந்து கொள்கின்ற ஆமோஸ், 'வறியோரை நசுக்கி, நாட்டில் உள்ள ஒடுக்கப்பட்டவர்களை அழிக்கின்றவர்களே எச்சரிக்கை' என இறைவாக்குரைக்கின்றார். 'இப்படி செய்கிறவர்களின் செயல்களை ஆண்டவராகிய இறைவன் மறப்பதில்லை' எனவும் எச்சரிக்கின்றார். 'மறப்பதில்லை' என்பதற்கு 'பழிதீர்க்க மறப்பதில்லை' என்ற பொருளும் உண்டு.

ஆக, செல்வத்தை அநீதியாக ஈட்டிவிட்டு அந்த அநீதியை சரி செய்ய இரக்க செயல்கள் செய்வது சால்பன்று. மேலும் அப்படிச் செய்தால் நாம் மனிதர்களைப் பயன்படுத்துபவர்களாக ஆகிவிடுவோம். மனிதர்கள் ஒருபோதும் பயன்பாட்டுப் பொருள்கள் அல்லர்.

மாறாக, இயேசு சொல்ல வருவது என்னவென்றால், அழிந்து போகக்கூடிய செல்வத்தைத் தவிர்த்து, அழியாதவைகளும் இவ்வுலகில் உண்டு என்று நமக்கு அறிவுறுத்துவதே.

ஆ. சிறியவற்றில் நம்பிக்கைக்குரியவர் பெரியவற்றிலும் நம்பிக்கைக்குரியவரே

நம் வாழ்வில் பெரிய மாற்றங்களைக் கொண்டு வருபவை நாம் செய்யும் சின்னச் சின்ன செயல்களே. மற்றொரு பக்கம் நாம் சின்னஞ்சிறியவைகளில் பிரமாணிக்கமாக இருக்கும்போது பெரியவற்றிலும் பிரமாணிக்கமாக இருக்கலாம். எப்படி?

நான் குருமாணவராக மதுரை ஞானா பத்தாம் பத்திநாதர் குருமடத்தில் பயிற்சி பெற்றபோது தினமும் திருப்பலியிலும், காலை தியானத்திலும் தூங்குவேன். தோட்டத்திற்கு தண்ணீர் ஊற்றுவது, இம்போசிஷன் எழுதுவது, ஃபைன் கட்டுவது என நிறைய தண்டனைகள் வழங்கி எதுவும் பலனில்லாததால் சலித்துப் போன என் குருமட அதிபர், ஒவ்வொரு சனியும் காலை உணவு சாப்பிடக்கூடாது என்று தண்டனை வழங்கினார். சனிக்கிழமை காலையில் நாங்கள் விளையாடச் செல்வோம். சாப்பிடாமல் விளையாடப்போனால் எப்படி இருக்கும்? அப்படியே விளையாடிவிட்டு வந்தாலும் இன்னும் அதிகம் பசி இருக்கும். ஒரு மணி வரை எப்படி தாக்குப்பிடிப்பது? கிச்சன் மாஸ்டரை சரி செய்து ஒவ்வொரு வாரமும் சாப்பிட்டு விடுவேன். ஆண்டின் இறுதிநாளில் அந்த ஆண்டு நாங்கள் செய்த அனைத்து தவறையும் எழுதி அதிபரிடம் கொடுக்க வேண்டும். நான் இதை எழுதிக் கொடுத்தேன். இதைப் பார்த்தவுடன், 'சின்னஞ்சிறியதில் நம்பிக்கைக்கு உரியவனாய் இருந்தால் பெரியவற்றிலும் இருப்பாய்!' என்றார். அதாவது, 'இதைச் செய்யக்கூடாது' என்று நானே விரும்பி எடுத்த ஒன்று சின்னதாய் இருந்தாலும் அதில் பிரமாணிக்கம் வேண்டும். அப்படி இல்லாதபோது பெரிய அளவில் உறவு நிலைகளிலும், சில நேரங்களில் குருத்துவ அர்ப்பணத்திலும் கூட பிரமாணிக்கமாய் இருக்க முடிவதில்லை.

காலையில் ஐந்து மணிக்கு எழு வேண்டும் என நானே விரும்பி வைக்கும் அலார்மை மதித்து என்னால் எழ முடியவில்லை என்றால், 'நான் அர்ப்பணத்தோடு இருப்பேன்' என்று விரும்பி ஏற்கும் பெரிய செயலை என்னால் எப்படி செய்ய முடியும்?

இ. நோ டூ மாஸ்டர்ஸ்

கடவுள் அல்லது செல்வம். இரண்டும் வேண்டும் என்று இருக்க முடியாது. செல்வத்தைப் பயன்படுத்தி கடவுளை வாங்கி விடுவதும் தவறு. கடவுளைப் பயன்படுத்தி செல்வம் சம்பாதிப்பதும் தவறு. ஆனால் பல நேரங்களில் இந்த இரண்டும்தான் நடைமுறையில் இருப்பதுபோல தெரிகிறது. இயேசுவின் லாஜிக் ரொம்ப சிம்பிள். நிலையானதும் நிலையற்றதும் ஒன்றோடன்று இருக்க முடியாது. இரும்பும் களிமண்ணும் சேர்ந்து இருக்க முடியாது. அப்படி சேர்க்க முயன்றால் களிமண் இரும்பை கறைப்படுத்திவிடுகிறது. அல்லது துருப்பிடிக்க வைத்துவிடுகிறது.

இறைவனை உண்மைப் பொருள் எனவும், இயேசுவே கடவுளுக்கும், மனிதருக்குமான இணைப்பாளர் எனவும் இன்றைய இரண்டாம் வாசகத்தில் (காண். 1 திமொ 2:1-8) என்றும் தன் அன்புப் பிள்ளை திமொத்தேயுவுக்கு எழுதும் பவுல் மன்றாடுதலையும், பரிந்து பேசுதலையும் உயரிய கடமையாக ஏற்று செயல்படுத்த வேண்டும் என்று பணிக்கின்றார்.

ஆனால் பல நேரங்களில் வாழ்க்கை இவ்வளவு எளிதான சாய்ஸ்களை தருவதில்லை. சில நேரங்களில் கடவுளும் வேண்டும், செல்வமும் வேண்டும் என்னும் நிலையும், உண்மையும் வேண்டும், பொய்மையும் வேண்டும் என்னும் நிலையும் இருக்கிறது.

இயேசுவின் வார்த்தைகள் ரொம்ப கறாராக இருக்கின்றன.

இது அல்லது அது. இரண்டும் வேண்டும் என்பதோ, ஐம்பது-ஐம்பது வேண்டும் என நினைப்பதோ தவறு.

இந்த வாரம் நம்மில் பலர் கப்பல் வாங்க மாட்டோம். இரண்டு நாடுகளுக்கு இடையே நடக்கும் போரை நிறுத்த மாட்டோம். புதிய அமைச்சரவையை நியமனம் செய்து வைக்க மாட்டோம். அரசியோடு அமர்ந்து உணவருந்த மாட்டோம். ஒரு நாட்டையே மனந்திருப்ப மாட்டோம். அல்லது மறைக்காக உயிரைத் துறக்க மாட்டோம். ஆனால், தாகத்தில் இருக்கின்ற யாருக்காவது தண்ணீர் கொடுப்போம். சின்னதாய் டைரிக் குறிப்பு எழுதுவோம். மருத்துவமனையில் இருக்கும் யாரையாவது பார்க்கப் போவோம். ஞாயிறு மறைக்கல்வி எடுப்போம். குழந்தை ஒன்றுக்கு குட்டிக்கதை சொல்வோம். பாடல் பயிற்சிக்கு செல்வோம். பக்கத்து வீட்டு பூனைக்கு சோறு வைப்போம். 'சின்னஞ்சிறியவைகளில் நம்பிக்கைக்குரியவர் பெரியவைகளிலும் நம்பிக்கைக்குரியவரே!’