இவ் மறையுரையை வழங்குபவர்

அருட்பணி.இயேசு கருணாநிதி
Archbishop’s House, K. Pudur, Madurai 625 007, India
Email: yesu@live.in

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)









ஆண்டின் பொதுக்காலம் 28ஆம் ஞாயிறு

திரும்பி வருதல்

2 அரசர்கள் 5:14-17
2 திமொத்தேயு 2:8-13
லூக்கா 17:11-19

அவள் பெயர் அன்னா. அவளுக்கு நீண்ட காலமாக குழந்தை இல்லை. அவளுடைய ஓரகத்தி அவளைக் கேலி செய்கின்றாள். அவளுடைய கணவன் கண்டுகொள்ளாமல் இருக்கின்றான். அவள் ஆண்டவருடைய சந்நிதிக்கு ஓடுகின்றாள். மண்டியிட்டுச் செபிக்கின்றாள். சந்நிதியில் இருந்த குருவும் இவளைச் சாடுகின்றார். இறுதியில் நம்பிக்கை வார்த்தைகள் கூறுகின்றார். அன்னா வீடு திரும்புகிறாள். ஆண்மகவைப் பெற்றெடுக்கிறாள். குழந்தையின் பால்குடி காலம் முடிந்ததும் குழந்தையைத் தூக்கிக்கொண்டு ஆண்டவரின் இல்லம் ஓடுகிறாள். கடவுளிடம் சென்றவள் அவரிடமே திரும்பிச் செல்கின்றாள்.

அவர் பெயர் அலங்காரம். அவருடைய மகளுக்குத் திருமணம். திருமண நாள் நெருங்கி வர அவர் சேமித்து வைத்திருந்த நிதி நிறுவனம் தலைமறைவாகிவிட்டது. திருமண நாளை மாற்றவும் விருப்பமில்லை. திருமணத்திற்குப் பணமும் கைவசம் இல்லை. கையறுநிலையில் இருக்கின்ற அவரிடம் வருகின்ற அவருடைய நண்பர் அவருக்குத் தேவையான பணத்தைக் கொடுத்து, 'திருமணத்தை நன்றாக நடத்து. அப்புறம் பார்க்கலாம்!' என்று சொல்லிவிட்டுச் செல்கின்றார். திருமணம் நன்றாக முடிந்தது. அலங்காரம் தன் மகளையும் மருமகனையும் அழைத்துக்கொண்டு முதல் வேலையாக அந்த நண்பரின் இல்லம் நோக்கிச் செல்கின்றார். 'உன் உதவியால் திருமணம் நடந்தது' என்கிறார் அலங்காரம். 'உன்னுடைய நட்பால் திருமணம் நடந்தது' என்று வழியனுப்புகிறார் நண்பர். நண்பரிடம் சென்றவர் அவரிடமே திரும்பிச் செல்கின்றார்.

மேற்காணும் அனுபவங்கள் நமக்கும் நடந்திருக்கலாம். வேளாங்கண்ணி அல்லது பூண்டி திருத்தலத்தில் நாம் செய்த நேர்ச்சை நிறைவேறி, நாம் நன்றிக்கடன் செலுத்த அத்திருத்தலங்களுக்குத் 'திரும்பச் செல்கின்றோம்.' அல்லது நமக்குத் தேவையில் உதவியவர்களிடம் திரும்பச் சென்று அவர்களுக்கு நன்றி கூறுகின்றோம்.

இவ்வாறு திரும்பி வருதலின் இனிமையை நமக்கு எடுத்துரைக்கின்றது இன்றைய திருவழிபாடு.

இன்றைய முதல் வாசகத்தின் (காண். 2 அர 5:14-17) கதாநாயகன் நாமான். இவர் சிரிய நாட்டுப்படைத்தலைவர். 'வலிமைமிக்க வீரர். மதிப்பிற்குரிய தலைவர். ஆனால், தொழுநோயாளர்.' மற்ற நோய் என்றால் கூட மூடி மறைத்துவிடலாம். தோல் தொடர்பான நோய் என்பதால் எளிதாக மற்றவர்களுக்குத் தெரியக்கூடிய, அதனால் மற்றவர்கள் விலகி ஓடக்கூடிய ஒரு நோய். இவருடைய வீட்டில் அடிமைச் சிறுமியாக இஸ்ரயேல் சிறுமி ஒருத்தி இருந்தாள். அவள் நாமானின் மனைவியிடம், 'என் தலைவர் சமாரியாவில் இருக்கும் இறைவாக்கினர் முன்னிலையில் சென்றால் அவர் இவரது நோயைக் குணமாக்குவார்' என்கிறார். இங்கே சிறுமியின் வார்த்தைகள் நமக்கு ஆச்சர்யமாக இருக்கின்றன. ஒருவன் தன்னை அடிமையாகக் கடத்தி வந்திருக்கிறான் என்ற கோபம் அந்தச் சிறுமிக்கு இல்லை. தன்மேல் விழும் கடப்பாரையைத் தாங்கும் நிலம் போல தன் தலைவனைத் தாங்குகிறாள் அவள். தலைவனின் நலத்தை நாடுகிறாள். நாமான் இதை உடனடியாகச் செயல்படுத்துகிறார். ஆனாலும், அவரிடம் மூன்று தயக்கம் இருந்திருக்க வேண்டும்: ஒன்று, சிறுமியின் பேச்சைக் கேட்பதா? என்பது. இரண்டு, வேற்று நாட்டுக்குச் செல்வதா? அப்படி என்றால், என் ஊர் மருத்துவத்தை நான் கேலி செய்வது போல் ஆகாதா? மூன்று, ஒருவேளை அங்கு சென்று சரியாகாவிட்டால் இந்த ஊர் இன்னும் அதிகம் கேலி பேசுமே? தயக்கங்களை ஒதுக்கிவிட்டு உடனே செல்கின்றார் என்றால் அவருடைய அவசியம் நமக்குப் புரிகிறது. சிரியா மன்னரும் பரிந்துரைக் கடிதம் கொடுத்து அனுப்புகின்றார். நாமான் ஏறக்குறைய 400 கிலோ வெள்ளிக்காசு, 6000 பொற்காசுகள், 10 பட்டாடைகள் என எடுத்துக்கொண்டு புறப்படுகிறார். இறைவாக்கினருக்கு இவர் வழங்க நினைத்த பரிசாக இருக்கலாம் இது. இஸ்ரயேல் அரசன் பரிந்துரைக் கடிதம் பெற்றவுடன், ஆடைகளைக் கிழித்துக் கொண்டு சிரியா அரசன் தன்னை வம்புக்கு இழுப்பதாக நினைக்கிறார்: 'நானென்ன கடவுளா?' என்று கேட்கின்றார். அக்காலத்தில் தொழுநோய் குணமாக்க முடியாத நோயாக இருந்தது. கடவுள் மட்டுமே குணமாக்க முடியும் என்ற நம்பிக்கையும் மக்களிடம் இருந்தது. அரசன் தன்னுடைய ஆடைகளைக் கிழித்ததை எலிசா அறிகின்றார். கடவுளின் மனிதர் எப்படி தொடர்பில் இருக்கிறார் என்று பாருங்கள்! நாம் கடவுளோடு தொடர்பில் இருக்கும்போது மற்ற எல்லாத் தொடர்புகளும் மிகவும் பொருத்தமாகவும், ஒருங்கமைந்தும் இருக்கின்றன. ஆளனுப்பி, 'நீர் ஏன் உம் ஆடைகளைக் கிழித்துக் கொண்டீர்? அவன் என்னிடம் வரட்டும். இஸ்ரயேலில் ஓர் இறைவாக்கினர் உள்ளார் என அவன் அறியட்டும்' என்கிறார் எலிசா. 'இறைவாக்கினர் ஒருவர் உள்ளார்' என்றால், 'இறைவன் ஒருவர் உள்ளார்' என்று பொருள். ஆக, இப்போது சிரியாவின் கடவுளுக்கும் இஸ்ரயேலின் கடவுளுக்குமான போட்டியாக மாறுகிறது நிகழ்வு.

நாமான் படை பரிவாரங்களுடன் எலிசாவின் வீட்டு வாசலில்முன் வந்து நிற்கிறார். எலிசா பதற்றமில்லாம் வீட்டிற்குள் அமர்ந்திருக்கிறார். படை பரிவாரங்களைக் கண்டு பயப்படவோ, அவனுடன் வந்திருக்கும் பரிசுகளைக் கண்டு கையேந்தவோ இல்லை. அவருடைய தன்மதிப்பைக் காட்டுகிறது இது. அல்லது கடவுளே போதும் என்றிருப்பவருக்கு வேறு எதுவும் தேவை இல்லை என்பதும், கடவுளுக்கு பணிகிற ஒருவர் வேறு எவருக்கும் பணியத் தேவையில்லை என்பதும் தெரிகிறது. தன்னுடைய வேலைக்காரர் ஒருவரை அனுப்பி, 'நீ போய் யோர்தானில் ஏழு முறை மூழ்கினால் உன் உடல் நலம் பெறும்' என்று சொல்லி விடுகின்றார். கூடவும் பேசவில்லை, குறைவாகவும் பேசவில்லை. நாமானுக்கு கோபம், சினம்! தன்னை இறைவாக்கினர் அவமானப்படுத்திவிட்டார் என்றும், என் படைவீரர்கள்முன் அவமானப்படுத்திவிட்டார் என்றும் கோபம்! மேலும், 'எங்க ஊர் ஆறுகளைவிடவா யோர்தான் சிறந்தது?' என்கிறார். யோர்தான் வெறும் ஓடைதான்! அப்பொழுது, அவருடைய வேலைக்காரருள் ஒருவர், 'எம் தந்தையே! இறைவாக்கினர் இதைவிட அரிதான ஒன்றை உமக்குச் சொன்னால் செய்திருப்பீர் அல்லவா! குளிக்கிறதுதானே! குளித்துவிடுங்கள்!' என்கிறார். அங்கே சிறுமி! இங்கே வேலைக்காரர்! கடவுள் சின்னஞ்சிறியவர்கள் வழியாக அவரைத் தொடுகின்றார். நாமானின் குழந்தையுள்ளத்தை இங்கே பார்க்கிறோம். 'நீ யாருடா எனக்கு புத்தி சொல்ல!' என்று வேலைக்காரரைப் பார்த்துக் கோபிக்காமல், உடனே போய் யோர்தானில் மூழ்கி எழுகின்றார் ஏழுமுறை! அதிசயம்! அற்புதம்! அவருடைய தோல் சிறுபிள்ளையின் உடல் போல் மாறினது. சிறுமியின் வார்த்தையைக் கேட்ட வந்த பெரியவர் ஒருவரின் உடல் சிறுபிள்ளையின் உடல் போல மாறுகிறது - மிகப்பெரிய அற்புதம்! அந்த நேரம் அவர் தன்னுடைய அவமானம் எல்லாம் அழிந்ததாக உணர்ந்திருப்பார்! ஆனந்தக் கண்ணீர் வடித்திருப்பார்! எல்லாரையும் கட்டிப்பிடித்துக் கதறியிருப்பார்! அங்கேயே மண்ணில் புரண்டு கொண்டாடியிருப்பார்! 'அவர் கடவுளின் அடியவரிடம் திரும்பினார்' என்று சொல்கிறார் ஆசிரியர். 'இஸ்ரயேலைத் தவிர வேறு எந்த நாட்டிலும் கடவுள் இல்லை என உறுதியாக அறிந்துகொண்டேன்' என்கிறார். எவ்வளவு பெரிய வார்த்தைகள் இவை! தொழுநோயைக் கடவுள்தான் குணமாக்க முடியும். நான் எங்கெங்கோ சென்று குணமாகவில்லை. இங்கே குணமாகியிருக்கிறது. ஆக, இங்கே மட்டுமே இறைவன் இருக்கிறார். திரும்பி வந்தவர் அன்பளிப்புக்கள் கொடுக்கிறார் எலிசாவுக்கு. ஆனால், 'நான் எதையும் ஏற்றுக்கொள்ளேன்!' என்கிறார் எலிசா. வற்புறுத்தியும் ஏற்றுக்கொள்ளவில்லை. இப்போது நாமான் ஒரு வேண்டுகோள் வைக்கிறார். 'இங்கிருந்து இரண்டு பொதி மண் எடுத்துச் செல்ல அனுமதியும்!' அந்த மண்ணில் இறைவன் குடியிருக்கிறார் எனவும், அந்த இறைவனைத் தான் வணங்க விரும்புவதாகவும் சொல்கின்றார். இறைவாக்கினரும் அனுமதிக்கின்றார். நாமான் நம்பிக்கையால் கடவுளின் அடியவரிடம் திரும்பி வருகின்றார். அவருக்கு நிகழ்ந்த அற்புதம் அவருடைய நம்பிக்கையை உறுதி செய்கிறது. அவர் உடல் அளவில் தொழுநோய் நீங்குகிறார். உள்ளத்தளவில் உண்மையான கடவுளைக் கண்டு கொள்கிறார். இவ்வாறாக, முதல் வருகை அவருடைய உடல் நோயையும், திரும்பி வருதல் அவருடைய உள்ளத்து நோயையும் குணமாக்குகிறது.

இன்றைய இரண்டாம் வாசகத்தில் (காண். 2 திமொ 2:8-13), நம்பிக்கையில் தான் பெற்றெடுத்த பிள்ளை திமொத்தேயுவிடம், 'நீ ஒரு நல்ல படைவீரனாய், விளையாட்டு வீரனாய், நிலத்தில் பாடுபட்டு உழைக்கும் தொழிலாளராய் இருக்க வேண்டும்' என்று அறிவுறுத்துகின்ற பவுல், தான் சிறைப்பட்டிருப்பதையும் சொல்கின்றார். தொடர்ந்து, அக்காலத்தில் பரவலாக மொழியப்பட்ட இறையியல் கூற்று ஒன்றை மேற்கோள் காட்டுகின்றார்: 'நாம் அவரோடு இறந்தால் அவரோடு வாழ்வோம். அவரை மறுதலித்தால் அவர் நம்மை மறுதலிப்பார்' - இரண்டு நிபந்தனை வாக்கியங்கள் இவை. 'இதைச் செய்தால் அது நடக்கும்' என்று சொல்லிவிட்டு, 'நாம் நம்பத்தகாதவரெனினும் அவர் நம்பத்தகுந்தவர். ஏனெனில் தம்மையே மறுதலிக்க அவரால் இயலாது' என்று கடவுளின் நம்பகத்தன்மையை அடிக்கோடிடுகின்றார். இங்கே, 'அவரோடு இறத்தல்' என்பதை 'அவரிடம் திரும்பி வருதல்' என்று நாம் பொருள்கொள்ளலாம். நம்பிக்கை கொண்டால்தான் ஒருவர் அவரிடம் திரும்பி வர முடியும்.

திமொத்தேயு தன்னுடைய நம்பிக்கையால் கடவுளிடம் திரும்பி வர வேண்டும் என்று சொல்வதோடு, இதையே அவர் தன்னுடைய சபையிலும் கற்பிக்க வேண்டும் என்றும் சொல்கின்றார் பவுல்.

இன்றைய நற்செய்தி வாசகம் (காண். லூக் 17:11-19) முதல் வாசகத்தின் நீட்சியாக இருக்கிறது. இயேசு தொழுநோயாளர் ஒருவரைக் குணமாக்குவதை (காண். மத் 8:1-4) அல்லது தொழுநோயாளர்களைக் குணமாக்கும் அதிகாரத்தை திருத்தூதர்களுக்கு வழங்குவதை (காண். மத் 10:8) மத்தேயு நற்செய்தியில் பார்க்கிறோம். ஆனால், இயேசு பத்து தொழுநோயாளர்களைக் குணமாக்கும் நிகழ்வு லூக்கா நற்செய்தியில் மட்டுமே உள்ளது. இயேசு நயீன் நகர நுழைவாயிலில் கைம்பெண்ணின் மகனுக்கு உயிர்தந்த நிகழ்வின் இறுதியில், 'நம்மிடையே பெரிய இறைவாக்கினர் ஒருவர் தோன்றியிருக்கிறார். கடவுள் தம் மக்களைத் தேடி வந்திருக்கிறார்' என்று மக்கள் ஆர்ப்பரிக்கின்றனர். இஸ்ரயேலில் பெரிய இறைவாக்கினர்கள் என்று மக்களால் எண்ணப்பட்டவர்கள் எலியாவும், எலிசாவும். இந்த இரண்டு இறைவாக்கினர்கள் செய்ததை இயேசுவும் செய்ததாக எழுதுவதன் வழியாக, இயேசுவை பெரிய இறைவாக்கினர் என்று அறிமுகம் செய்கிறார் லூக்கா. எலியா சாரிபாத்துக் கைம்பெண்ணின் மகனுக்கு உயிர் தருகிறார் (காண். 1 அர 17:17-24). அதே போல இயேசு நயீன் நகரப் பெண்ணின் மகனுக்கு உயிர் தருகின்றார். எலிசா தொழுநோயாளர் நாமானுக்கு நலம் தருகிறார் (காண். முதல் வாசகம்). அது போல இயேசு பத்துத் தொழுநோயாளர்கள் நோயை நீக்குகின்றார். நாமான் சிரிய நாட்டினர் - புறவினத்தவர். இங்கே, திரும்பி வருகின்ற ஒருவர் சமாரியர் - புறவினத்தவர். அங்கே நாமான் யோர்தான் ஆற்றில் ஏழு முறை மூழ்கி ஏழுகின்றார். இங்கே இவர்கள் குருக்களை நோக்கிச் செல்கின்றனர். அங்கே நாமான் திரும்பி வந்து இஸ்ரயேலின் கடவுளே உண்மையான கடவுள் என அறிக்கையிடுகின்றார். இங்கே இவர் இயேசுவின் காலில் முகங்குப்புற விழுகின்றார் - கடவுளைத் தொழுதலின் அடையாளம். ஆக, ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கிறார் லூக்கா. தொழுநோய் நீக்கிய அந்த நொடியில் அவரை எலிசா போன்ற இறைவாக்கினர் எனவும், தொழுநோய் நீங்கியவர் காலில் விழுவதால் யாவே கடவுள் போல இயேசுவே ஆண்டவர் என்றும் சொல்கின்றார்.

திரும்பி வந்த அந்த நபரை மட்டும் எடுத்துக்கொள்வோம். 'மற்ற ஒன்பது பேர் எங்கே?' மற்ற ஒன்பது பேர் இங்கே இல்லை. அவ்வளவுதான் விடை. மற்றவர்கள், 'இன்னும் நாங்கள் நலமாகவில்லை' என்றோ, அல்லது 'அவர் சொன்னபடி குருக்களிடம் செல்வோம்' என்றோ, அல்லது 'நலம் பெற்றாயிற்று. நாம் வீட்டிற்குச் செல்வோம்' என்றோ நினைத்திருக்கலாம். யாரையும் இயேசு திரும்பிவரச் சொல்லவில்லையே. அப்புறம் ஏன் இந்த ஒரு நபர் திரும்பி வந்தார்? இவர் சமாரியர் என்பதால் குரு இவரைச் சோதிக்கமாட்டார் என எண்ணி இயேசுவிடம் இவர் திரும்பினாரோ? ஆனால், ஒன்று மட்டும் நிச்சயம். இவர் மற்றவர்களைப் போல இருக்கவில்லை. வித்தியாசமாக இருந்தார். அவர்கள் குருவைத் தேடிச் சென்றனர். இவரோ கடவுளைத் தேடி வந்தார். இதுதான் அந்த வித்தியாசம். முதலில், 'இயேசுவே நலம் தந்தார்' என நம்புகிறார். இரண்டாவது, 'நான் திரும்பிப் போவேன்' என முடிவெடுக்கின்றார். மூன்றாவது, 'நான் திரும்பிப் போனால் இவர் என்ன நினைப்பார் அவர் என்ன நினைப்பார்' என்று தன் கூட்டத்தைப் பற்றிக் கவலைப்படாமல் துணிவுடன் இயேசுவிடம் வருகின்றார். நான்காவது, 'நலம் பெற்ற பிறகு ஏன் தொழுநோயாளரின் குழு? உடனே புது வழியைத் தேடுவேன்' என தேடுகிறார் இயேசுவை. ஆக, இந்தச் சமாரியர் நமக்கு நன்றிக்கான பாடம் அல்ல. அதைவிட, நம்பிக்கைக்கான பாடம். மேற்காணும் நான்கு வழிகளும்தான் நம்பிக்கைக்கான வழிகள்.

ஆக, முதலில் இயேசுவிடம் வந்தபோது உடல்நலம் பெற்றவர், திரும்பி வந்தபோது உள்ள நலம் பெறுகின்றார்.

இன்று நாம் ஒவ்வொரு நாளும் அல்லது ஒவ்வொரு வாரமும் கடவுளிடம் வருகின்றோம். ஆனால், என்றாவது ஒருநாள் திரும்பி வந்திருக்கிறோமா? திரும்பி வருதலுக்கான அற்புதம் நம் வாழ்வில் நடந்ததா? நாம் கடவுளிடம் தினமும்கூட வரலாம். ஆனால், அவரிடம் திரும்பி வரும் அந்த ஒரு நாளே நம் வாழ்வைப் புரட்டிப் போடும். சில நேரங்களில் அற்புதங்கள் பெற்ற நமக்கு மற்ற வேலைகள் வந்துவிட்டதால் அல்லது மற்ற கவனச் சிதறல்கள் வந்துவிட்டதால் அவரிடம் திரும்பி வருவதற்கு நாம் தாமதம் செய்யலாம். அல்லது அவரிடம் திரும்பி வந்தார் இன்னும் அவர் நம்மைக் குணமாக்கிவிடுவார் என்ற பயத்தில், 'அரைகுறை குணமே போதும்' என்று ஓய்ந்திருந்து, நாமே நம் நோய்க்கு மருந்திட்டுக் கொள்ளும் மடமையில் இருக்கலாம்.

இன்று அவரிடம் திரும்பி வர நாம் என்ன செய்ய வேண்டும்?

அ. அவரால்தான் எல்லாம் என்ற உறுதியான நம்பிக்கை வேண்டும் - இந்த நம்பிக்கை நாமானுக்கும், பவுலுக்கும், திமொத்தேயுவுக்கும், சமாரியருக்கும் இருந்தது. தொழுநோய் என்பது தோலை மூடும் அல்லது சிதைக்கும் ஒரு திரை. நம்பிக்கையின்மைகூட தொழுநோய்தான். கடவுளை அது நம் வாழ்விலிருந்து மூடிவிடுகிறது அல்லது கடவுளின் முகத்தை அடையாளம் தெரியாதவாறு சிதைத்துவிடுகிறது. இதிலிருந்து வெளிவர நாம் சில நேரங்களில் கொஞ்சம் நடந்தால் போதும். இன்னும் சில நேரங்களில் நாம் ஏழு முறை மூழ்கி எழ வேண்டிய நிலையும் வரும். ஆனால், அற்புதம் நடந்தவுடன் அங்கே அவரின் கைவன்மையைக் காண வேண்டும். 'ஆண்டவரால் இது நிகழ்ந்துள்ளது. நம் கண்களுக்கு இது வியப்பாயிற்று!' (திபா 118:23) என்று ஆச்சர்யப்பட வேண்டும்.

ஆ. அவரோடு இணைய வேண்டும் - முதலில் 'அவரால்தான்' என்று அறிகின்றோம். பின், 'அவரோடு' என இணைந்துகொள்ள வேண்டும். இரண்டு பொதி மண் எடுத்துக் கொண்டு தன் நாட்டிற்குச் செல்வதன் வழியாக எப்படியாவது இஸ்ரயேலின் கடவுளோடு தன்னை இணைத்துக்கொள்கிறார் நாமான். இயேசுவின் காலடிகளில் விழுந்து நன்றி செலுத்துவதன் வழியாக அவரோடு தன்னை இணைத்துக்கொள்கிறார் சமாரியர். இன்று நான் இயேசுவோடு என்னை இணைத்துக்கொள்கின்றேனா? எந்த அளவிற்கு?

இ. அவரே என்று நம் வழி புறப்பட வேண்டும் - குணம் பெற்ற நாமான் எலிசாவிடமும், சமாரியர் இயேசுவிடமும் தங்கிவிடவில்லை. தங்கள் வழி திரும்புகின்றனர். மீண்டும் தங்கள் வாழ்வை வாழப் புறப்படுகின்றனர். 'நானே' என்று வாழ்ந்தவர்கள் 'அவரே' என்று வாழப் புறப்படுகின்றனர்.

இவ்வாறாக, 'அவரால்,' 'அவரோடு,' 'அவரே' என்ற இறைமையமே நம்மை திரும்பி வரச் செய்கிறது. நலமுடன் திரும்பி வருக! ஏனெனில், திரும்பி வருதலே நலம்!