இவ் மறையுரையை வழங்குபவர்

அருட்பணி.இயேசு கருணாநிதி
Archbishop’s House, K. Pudur, Madurai 625 007, India
Email: yesu@live.in

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)









ஆண்டின் பொதுக்காலம் 22ஆம் ஞாயிறு

பணிவும் பரிவும்!

சீராக்கின் ஞானம் 3:17-18,20,28-29
எபிரேயர் 12:18-19,22-24
லூக்கா 14:1,7-14

தாழ்ச்சி என்ற மதிப்பீட்டுக்குப் பல நேரங்களில் எடுத்துக்காட்டுக்களை நாம் நமக்கு வெளியில் தேடுகிறோம். ஒபாமா தன்னுடைய உதவியாளருக்கு கை கொடுத்தார், போப் பிரான்சிஸ் தன்னுடைய காவலாளருக்கு நாற்காலி கொடுத்தார், அவர் தன்னுடைய காலணிகளுக்குத் தாமே பாலிஷ் போட்டார், இவர் தன்னுடைய வீரர் ஒருவருக்குத் தானே உதவி செய்தார். இப்படி நாம் நினைக்கும் பெரியவர்கள் தங்கள் வாழ்வில் தாழ்ச்சியாக இருந்த தருணங்களையே எண்ணிப் பார்க்கிறோம். மேற்காணும் நிகழ்வுகளில் தாழ்ச்சி இருப்பது உண்மைதான். ஆனால், தாழ்ச்சியோடு கலந்து பரிவு நமக்கு அருகிலேயே இருக்கிறது.

'ஏம்மா! உனக்கு அறிவே இல்லையா?' என்று கேட்கும் தன் குழந்தையிடம் தாய் ஒருபோதும் தன்னுடைய கல்லூரி கோல்ட் மெடலைக் கொண்டுவந்து காட்டுவதில்லை. அப்படிக் கேட்கும் குழந்தையிடம் சிரித்துக் கொண்டே குனிந்து குழந்தையின் காலணிகளை மெதுவாக அவிழ்ப்பாள் தாய். இதுதான் தாழ்ச்சியுடன் கூடிய பரிவு. அல்லது பரிவுடன் கூடிய தாழ்ச்சி.

வெறும் தாழ்ச்சியாக (பணிவாக) இருப்பதால் யாருக்கும் எந்தப் பயனும் இல்லை? தாழ்ச்சியோடு பரிவும் சேரும்போதுதான் அது மற்றவரின் மேல் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

இன்றைய இறைவாக்கு வழிபாடு பணிவும் பரிவும் இணைந்து செல்ல வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகின்றது.

இன்றைய முதல் வாசகம் (காண். சீஞா 3:17-18,20,28-29) இரண்டு பிரிவுகளாக அமைந்துள்ளது: (அ) அறிவுரைப் பகுதி, (ஆ) பழமொழி. அறிவுரைப் பகுதியில், ஒருவர் பணிவை அல்லது தாழ்ச்சியைத் தனதாக்க என்ன செய்ய வேண்டும் என்பதை, ஆசிரியர் மூன்று எளிதான முறைகளாகக் கற்பிக்கின்றார்: (அ) பணிவான அல்லது தாழ்ச்சியான மனிதர் சமூகத்தில் தனக்குள்ள கடமைகளைப் பொறுப்புடன், மனச்சான்றுக்குக் கட்டுப்பட்டும் செய்வார். இதற்கு முரணானவர்கள் தங்களுடைய கடமைகளைப் பற்றி அக்கறையின்றி இருப்பார்கள். (ஆ) பணிவு அல்லது தாழ்ச்சி கொண்ட மனிதர் தன்னுடைய சமூக நிலை அல்லது அந்தஸ்தைப் பயன்படுத்தி மற்றவர்கள்மேல் அதிகாரம் செலுத்த மாட்டார். எந்த அளவுக்குத் தன்னுடைய அந்தஸ்து உயர்கிறதோ அந்த அளவுக்கு அவர் பணிசெய்பவராக இருப்பார். (இ) பணிவுகொண்டிருப்பவர் தன்னுடைய ஆற்றலுக்கும் திறனுக்கும் அப்பாற்பட்ட எதையும் பெற அல்லது செய்ய பேரார்வம் காட்டமாட்டார். இங்கே பணிவு என்பது ஒருவர் தான் பெற்றிருக்கின்ற ஆற்றல்கள் மற்றும் திறன்களை முழுமையாகப் பயன்படுத்துவதையும், தன் ஆற்றலுக்கு அப்பாற்பட்டதன்மேல் தன்னுடைய நேரம் மற்றும் ஆற்றலைச் செலவிடாத மனப்பக்குவத்தையும் குறிக்கிறது.

இவ்வறிவுரைகளை முடித்தபின், சீராக், நீதிமொழிகள் அல்லது பழமொழிகளுக்குச் செவிமடுப்பவரைப் பாராட்டுகின்றார். பழமொழிகள் என்பவை ஒருவர் தனிமனித அல்லது சமூக அறநெறியுடன் வாழப் பயிற்றுவிக்கும் ஞானத்தின் சிறிய மாத்திரைகள். சில கிரேக்கப் பதிப்புக்களில், 'எரியும் நெருப்பைத் தண்ணீர் அவிக்கும். தருமம் செய்தல் பாவங்களைப் போக்கும்' என்ற வசனம் 29ஆவது வசனமாகத் தரப்பட்டுள்ளது. தண்ணீரும் தர்மமும் ஒரே ஆற்றலைக் கொண்டிருக்கிறது. நெருப்பு ஒன்றைச் சாம்பலாக்குகிறது. பாவம் ஒருவரைக் கடவுளிடமிருந்து அந்நியமாக்குகிறது. தண்ணீர் நெருப்பை அணைக்கிறது. தர்மம் கடவுளுக்கும் மனிதருக்கும் இடையே இருக்கும் இடைவெளியைக் குறைத்துவிடுகிறது. மேலும், கண்டுகொள்ளாத்தன்மை, மேட்டிமை உணர்வு போன்ற பாவங்களையும் தர்மம் அகற்றிவிடுகிறது.

ஆக, ஒருவரின் பணிவு அல்லது தாழ்ச்சி பரிவோடு இணைந்து தர்மம் செய்தல் அல்லது பிறரன்புச் செயல்கள் செய்தல் என்று மாறும்போது அங்கே மாற்றம் உண்டாகிறது.

இன்றைய இரண்டாம் வாசகத்தில் (காண். எபி 12:18-19,22-24), எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமடலின் ஆசிரியர் இரண்டு மலைகளை ஒப்பிடுகின்றார்: சீனாய் மலை, சீயோன் மலை. சீனாய் மலை பயம் அல்லது குற்றவுணர்வை மையப்படுத்தியது என்றும், சீயோன் மலை இரக்கம் அல்லது மன்னிப்பை மையப்படுத்தியது என்றும் எழுதுகின்றார். மேலும், சீயோன் மலையில் நாம் அனைவரும் உடன்படிக்கையின் இணைப்பாளராகிய இயேசுவின் முன்னிலையில் நிற்கிறோம். உடன்படிக்கையின் இணைப்பாளராக இயேசு மாறக் காரணம் அவருடைய தாழ்ச்சியான சிலுவை மரணமே. இயேசு சிலுவையில் அறைந்துகொள்ளத் தம்மையே தாழ்த்தினார் என பவுல் பிலிப்பியருக்கு எழுதிய திருமுகத்தில் பதிவு செய்கிறார். இயேசுவின் தாழ்ச்சி அவருடைய பரிவில் நிறைவு பெறுகிறது.

ஆக, தாழ்ச்சியோடு கொண்ட பரிவு இயேசுவை உடன்படிக்கையின் இணைப்பாளராக மாற்றுகிறது.

நற்செய்தி வாசகம் (காண். லூக் 14:1,7-14) இயேசு பரிசேயர்களோடு உண்ணும் மூன்றாவது மற்றும் இறுதி உணவு நிகழ்வைப் பதிவு செய்கிறது. மேலும், 'நீங்கள் விருந்துக்குச் சென்றால் என்ன செய்ய வேண்டும்?' 'உங்களை யாராவது விருந்துக்கு அழைத்தால் நீங்கள் என்ன செய்ய வேண்டும்?' என்னும் இரண்டு பிரிவுகளாக அமைந்துள்ளது நற்செய்தி வாசகம். இயேசுவின் சமகாலத்தில் விருந்தோம்பல் மிக முக்கியமான நிகழ்வாகக் கருதப்பட்டது. விருந்தில் பங்கேற்பவர்கள் என்ன செய்ய வேண்டும், எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று நிறைய அறிவுரைகள் இருந்தன. இவ்வறிவுரைகளை நாம் ஞானநூல்களில் நிறைய வாசிக்கின்றோம். மேலும், விருந்திற்கு வருபவர் ஒவ்வொருவரும் எங்கே அமர வேண்டும் என்ற வரிசை அமைப்பும் முன்கூட்டியே தரப்படும். இப்படி இருக்க, இன்றைய நிகழ்வில் விருந்துக்கு வரும் விருந்தினர்கள் வித்தியாசமாகச் செயல்படுகின்றார்கள். முன்னுக்குப் பின் முண்டியடித்துக் கொண்டு முதன்மையான இடத்தை அடைய முயற்சிக்கிறார்கள். மேலும், விருந்திற்கு அழைத்தவரிடம் எதுவும் சொல்லாமல் தாங்களே தங்களுடைய இடத்தை எடுத்துக்கொள்கிறார்கள். இப்படிப்பட்ட செயல்பாடு பொதுவிடத்தில் அவமானத்தையும் வெட்கத்தையும் தரும் என்று சுட்டிக்காட்டுகின்ற இயேசு, முதன்மையான இடத்தில் அமர்ந்திருப்பவர்கள் கீழே இறக்கப்படவும், மற்றவர்முன் அவமானப்படவும் வாய்ப்பு இருக்கிறது என்று சுட்டிக்காட்டுகின்றார்.

ஒருவரின் மதிப்பு என்பது அடுத்தவரை ஒதுக்கி வைத்து முடிவுசெய்யப்படுவதல்ல என்கிறார் இயேசு. இந்த நிகழ்வில், விருந்திற்கு அழைத்தவரே ஒவ்வொருவரையும் அவரவர் நிலையில் குறித்து வைக்கிறார். வாழ்விலும் ஒருவர் தன்னைப் பற்றிக் கொண்டிருக்கின்ற எண்ணம் மற்றவரோடு அவர் கொண்டுள்ள உறவோடு இணைத்துப் பார்க்கப்பட வேண்டும். இயேசுவைப் பொறுத்தவரையில், ஒருவர் தன்னை மற்றவரோடு இணைத்துப் பார்க்கும்போதுதான் கடவுள் முன்னிலையில் உயர்வு பெறுகிறார். மாறாக, தங்களைத் தாங்களே உயர்வாக நினைப்பவர்கள் தாழ்த்தப்படுவார்கள் என்பது உறுதி. தாழ்ச்சியான நிலையைத் தழுவுபவர்கள் உயர்வைக் கண்டடைவார்கள் என்பதும் உறுதி.

இரண்டாவது பகுதியில் இயேசு அவரது சமகாலத்தில் இருந்த மற்றொரு பண்பை எடுத்துரைக்கின்றார்: விருந்திற்கு கைம்மாறு செய்வது. நம்ம ஊரில் மொய் செய்வது போல. ஒருவர் மற்றவருடைய வீட்டில் விருந்து உண்டு மொய் செய்திருக்கிறார் என்றால், இவரும் ஒரு விருந்து அளித்து அவரை மொய் செய்ய வைக்க எனக்கு கடமையும் உரிமையும் உண்டு. கைம்மாறு செய்ய முடிபவர்களுக்கே விருந்து வைக்காமல் கைம்மாறு செய்ய இயலாதவர்களுக்கு விருந்து வைக்குமாறு சொல்கிறார் இயேசு - ஏழைகளுக்கும் இயலாதவர்களுக்கும். மேற்காணும் தாழ்ச்சி இங்கே பரிவாக வெளிப்படுகின்றது. ஏழைகளுக்கும், உடல் ஊனமுற்றவர்களுக்கும், கால் ஊனமுற்றவர்களுக்கும், பார்வையற்றவர்களுக்கும் விருந்து அளிப்பது மற்றவர்கள் பார்வையில் தாழ்வானதாகத் தெரியலாம். ஆனால், இவர்களோடு தன்னை இணைத்துக் கொள்ளும் அளவுக்கு ஒருவர் தம்மையே தாழ்த்திக் கொண்டால் கடவுள் முன்னிலையில் அவர் உயர்த்தப் பெறுவார். கடவுளே இவர்களுக்கு விருந்து படைக்கும் பேற்றை இவர்கள் பெறுவர்.

இவ்வாறாக, மேற்காணும் மூன்று வாசகங்களுமே பணிவையும் பரிவையும் மிக அழகாக இணைத்து இவ்விரண்டையும் அணிகலன்களாக அணிந்துகொள்ள நம்மைத் தூண்டுகின்றன. சீராக்கின் ஞானநூலில் ஒருவர் தன்னைப் பற்றி அறியும் பணிவு தர்மம் செய்யும் பரிவாக வெளிப்பட வேண்டும். எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமடலைப் பொறுத்தவரையில் இயேசுவின் சிலுவைச் சாவு அவருடைய பணிவு மற்றும் பரிவின் வெளிப்பாடாக அமைந்து நம்மைக் கடவுளோடு ஒப்புரவாக்குகிறது. நற்செய்தி வாசகத்தில், தன்னை மற்றவரோடு இணைத்துப் பார்த்து தன் நிலையை அறிந்துகொண்டு தன்னைத் தாழ்த்துகிற ஒருவர் மற்றவர் முன்னிலையில் உயர்த்தப் பெறுவார். அந்தத் தாழ்ச்சி அவரைத் தனக்குக் கீழ் இருப்பவர்களோடு இணைத்துக்கொள்ளத் தூண்டியதென்றால் அவருடைய பரிவுக்குக் கடவுளிடமிருந்து கைம்மாறு பெறுவார்.

இன்றைய வாசகங்கள் காட்டும் பணிவையும் பரிவையும் நாம் எப்படி வாழ்வாக்குவது?

1. உனக்கு கடினமாக இருப்பதைத் தேடாதே

இப்படி ஞானநூல் ஆசிரியர் தன் மாணவனுக்கு அறிவுரை கொடுக்கிறார். இது சரியான அறிவுரையா? கடினமாக இருப்பதைத் தேடி, அதற்கு நம் உழைப்பைச் செலுத்தினால்தானே நல்லது. இல்லையா? இல்லை என்கிறார் ஆசிரியர். ஏனெனில், ஆற்றலுக்கு மிஞ்சியதை ஆராய்வதும், தேடுவதும் ஒருவருடைய விரக்தி மற்றும் சோர்வின் நிலையைக் கூட்டிவிடும். மனித உறவிற்கு இதைப் பொருத்திப் பார்க்கும்போது, 'உனக்கு மேலிருப்பவர்களோடு விருந்துண்ணாதே. நீ அவப்பெயரைச் சந்திக்க நேரிடும்' என்கிறது ஞான இலக்கியம். ஒருவர் தன்னைப் பற்றிய சரியான அறிதல் அல்லது புரிதல் இல்லாமல் இருந்தால் அவர் தன் ஆற்றலுக்கு அப்பாற்பட்ட செயல்களையும், நபர்களையும் நாடுவார். இதுவே அவருக்கு இறுமாப்பு அல்லது செருக்கு உணர்வைக் கொடுக்கும். இறுதியில் அவர் அவமானப்படுவது உறுதி. இதற்கு மாற்றாக இவர் தன்னை அறிந்தவராய், தன் ஆற்றலை உணர்ந்து செயல்படுபவராய் இருந்தால் ஆண்டவர் முன்னிலையில் அவருக்குப் பரிவு கிடைக்கும்.

2. இரக்கமும் மன்னிப்பும்

சீனாய் மலை போல நெருப்பும் கோபமும் கொண்டிருப்பவர்கள் பணிவாகவும் பரிவாகவும் இருக்க முடியாது. இந்த இடத்தில் பயமும் குற்றவுணர்வுமே இருக்கும். ஆனால், சீயோன் மலை போல இருப்பவர்கள் இரக்கமும் மன்னிப்பும் கொண்டிருப்பார்கள். இரக்கம் கொண்டிருக்கும் ஒருவரே மற்றவரோடு இறங்கிவந்து அவரோடு நிற்க முடியும். மன்னிக்கும் ஒருவரே பரிவு காட்ட முடியும். ஆக, என் வாழ்வில் நான் பணிவும் பரிவும் கொண்டிருக்க இரக்கமும் மன்னிப்பும் கொண்டிருக்கின்றேனா?

3. விட்டுக் கொடுப்பதும் வீட்டுக்கு அழைப்பதும்

விட்டுக் கொடுப்பவர் கெட்டுப் போவதில்லை என்பது பழமொழி. உடனடியாக இது பலன் தரவில்லை என்றாலும் காலப்போக்கில் பலன் தரும் என்பது உறுதி. எனக்கு மேலிருப்பவருக்கு நான் ஒன்றை விட்டுக்கொடுப்பது எளிது. எடுத்துக்காட்டாக, ஒரு நாற்காலி இருக்கிறது. நானும் என்னுடைய அதிபரும் அங்கே அழைக்கப்பட்டுள்ளோம். நான் உடனடியாக அந்த இருக்கையை என் அதிபருக்கு விட்டுக் கொடுக்கிறேன். ஆனால், நானும் என் மாணவனும் செல்லும் இடத்தில் என்னால் அந்த இருக்கையை அந்த மாணவனுக்கு விட்டுக்கொடுக்க முடியுமா? அப்படி விட்டுக் கொடுப்பதுதான் தாழ்ச்சி. இங்கே மாணவனால் கைம்மாறு செய்ய முடியாது. அங்கே எனக்கு அதிபரிடமிருந்து கைம்மாறு கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. மேலும், எனக்குக் கீழிருப்பவர்களை என்னோடு உறவுகொள்ள, அல்லது என் வீட்டிற்கு விருந்துக்கு அழைக்கும்போது அது என்னுடைய தரத்தைக் குறைக்கலாம். உலகப் பார்வையில் அது தவறு என்றுகூடத் தோன்றலாம். ஆனால், சமூகப் பார்வையை உடைப்பதுதான் இயேசுவின் கருத்தியலாக இருக்கிறது. இன்று நான் யாரை எல்லாம் என்னோடு உறவுகொள்ள அழைக்கின்றேன்? எனக்கு மேலிருப்பவர்களை மட்டுமே - பணத்தில், பதவியில், பலத்தில் - நான் நாடுகிறேனா? அப்படி நாடினால் நான் அவர்களுடைய பரிவில் இருக்கும் நிலைதான் உருவாகுமே தவிர நான் பரிவுகாட்ட இயலாது.

இறுதியாக,

பணிவு, பரிவு என்னும் இவ்விரண்டு வார்த்தைகள் நம் அன்றாட வாழ்வியல் உறவுநிலைகளில் இருந்தால் உறவுகளில் மதிப்பும் உறுதியும் இருக்கும்.

லேய்ஸ் சிப்ஸ் பாக்கெட் போன்று இல்லாத ஒன்றை நான் இருப்பதாகக் காட்டிக்கொண்டால் நான் உடைவதும், என்னுள் இருப்பது மண்ணில் வீழ்வதும் உறுதி.

'கைகள் சுத்தமாக வேண்டுமென்றால் இரு கைகளையும் சேர்த்துக் கழுவு' என்பது ஆப்பிரிக்க பழமொழி. ஒரு கை மற்றொரு கைக்குக் கீழ் பணிந்தால்தான், பரிவு என்னும் தண்ணீர் விழுந்து கைகள் சுத்தமாகும்.