இவ் மறையுரையை வழங்குபவர்

அருட்பணி.இயேசு கருணாநிதி
Archbishop’s House, K. Pudur, Madurai 625 007, India
Email: yesu@live.in

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)









ஆண்டின் பொதுக்காலம் 23ஆம் ஞாயிறு

மனம் உவந்து முன் வா!

சாஞா 9:13-18
பிலமோன் 9-10, 12-17
லூக்கா 14:25-33

ஷேர் மார்க்கெட் பற்றிய விளம்பரங்கள் டிவியில் வரும்போதெல்லாம் வேகமாக ஒரு வாய் விளம்பரம் வரும்: மார்க்கெட் இன்வெஸ்ட்மென்ட்ஸ் ஆர் சப்ஜெக்ட் டு ரிஸ்க்ஸ். ப்ளீஸ் ரீட் ஆல் த டாகுமென்ட்ஸ் கேர்ஃபுல்லி பிஃபோர் யு இன்வெஸ்ட். இந்த வாய்ஸ் ஓவரைக் கேட்டவுடன் நம் மனதில் இரண்டாம் எண்ணம் வந்துவிடும். 'எதற்கு ரிஸ்க்?' என்று ஒதுங்கிவிடுவோம். அல்லது வாய்ஸ் ஓவரை கேட்காமல் தவறான முதலீட்டில் போய் மாட்டிக் கொள்வோம்.

இது ஒரு பக்கம் இருக்கட்டும்.

இன்னொரு பக்கம் இயேசுவைப் பற்றிய அல்லது இயேசுவின் செய்தியை போதிக்கும் டிவி நிகழ்வுகளை நாம் இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம்: ஒரு வகை நிகழ்ச்சிகள் பயம் மற்றும் குற்ற உணர்வை மையப்படுத்தியவை. மறு வகை நிகழ்ச்சிகள் கட்டின்மையை மையப்படுத்தியவை. இரண்டாம் வகை நிகழ்ச்சிகள் பல நேரங்களில் இயேசுவின் செய்தியை நீர்த்துப் போகச் செய்கின்றனர். இயேசுவைப் பின்பற்றுவது எளிது, கடவுள் நம்மைத் தண்டிப்பவர் அல்லர், கடவுளை நாம் எப்படி வேண்டுமானாலும் வாழ்த்தலாம், பாடலாம் என வெறும் ஆடல்-பாடல் நிகழ்வாக ஆன்மீகத்தை மாற்றுகிறது இரண்டாம் வகை டிவி நிகழ்ச்சி. இதில் என்ன விநோதம் என்றால், இரண்டாம் வகை நிகழ்வுகளை நோக்கி, அத்தகைய போதகர்களை நோக்கியே மக்கள் அதிகம் செல்கின்றனர்.

இயேசுவின் அழைப்பு ரொம்ப ஈஸியானதா?

'இல்லை' என்று சொல்கிறது இன்றைய நற்செய்தி வாசகம்.

இன்று நிலையாக இருந்து நாளைக்கு நிலையற்று மாறும் ஷேர் மார்க்கெட் முதலீட்டுக்கே அனைத்து டாக்குமென்ட்களையும் படிக்க வேண்டியுள்ளது என்றால், என்றும் நிலையாக இருக்கும் அவரைப் பின்பற்ற இன்னும் முழுமையாக, கவனமாக படிக்க வேண்டும். இல்லையா?

இன்று அன்னை தெரசா புனிதர் நிலைக்கு உயர்த்தப்படுகின்றார். அல்பேனியா நாட்டில் பிறந்தாலும் நம் தாய்த்திருநாட்டிற்கு வந்து பிறரன்புப் பணிகள் செய்து இயேசுவை இறுதிவரை அன்பு செய்த அன்னை தெரசா இன்று புனிதர் நிலைக்கு உயர்த்தப்படுவது நமக்குப் பெருமகிழ்ச்சி தருகிறது. அன்னை தெரசாவால் மட்டும் இயேசுவை முழுமையாக எப்படி பின்பற்ற முடிந்தது?

'என்னிடம் வருபவர் ... என்னைவிட மேலானதாகக் கருதினால் என் சீடராயிருக்க முடியாது!' (வ. 26)

'தம் சிலுவையைச் சுமக்காமல் என் பின் வருபவர் என் சீடராயிருக்க முடியாது!' (வ. 27)

'தம் உடைமையை எல்லாம் விட்டுவிடாத எவரும் என் சீடராக இருக்க முடியாது!' (வ. 33)

என்று சீடத்துவத்தின் மூன்று பாடங்களை வைக்கின்றார் இயேசு.

இயேசுவின் இந்த சீடத்துவ போதனை யாருக்காக? அவரைப் பின்பற்றிச் செல்லும் அவரால் தெரிந்து கொள்ளப்பட்ட திருத்தூதர்கள், சீடர்கள், மற்றும் அருள்நிலை இனியவர்களுக்காக மட்டுமா?

இல்லை. ஏனெனில், இயேசுவின் போதனை இங்கே ஒட்டுமொத்தமான பெருந்திரள் மக்கள்தொகையை நோக்கியதாக இருக்கிறது. ஆக, இயேசுவின் போதனை அனைவருக்குமானது.

அவரின் வார்த்தைகளைக் கேட்டு அவரைப் பின்தொடரும் அனைவரும் இம்மூன்று செயல்களையும் செய்யத் தயாராக இருக்க வேண்டும்:

இயேசுவின் இரண்டாவது மற்றும் மூன்றாவது அழைப்புக்கிடையே இரண்டு உருவகங்கள் கொடுக்கப்பட்டுள்ளன: 'கோபுரம் கட்டும் ஒருவர்' (வவ. 28-30) 'படைக்குச் செல்லும் அரசன்' (வவ. 31-32). இந்த இரண்டு உருவகங்களையும் தொடர்ந்து வரும் இரண்டு கேள்விகளுக்கும் பதில் 'இல்லை' என்றே இருக்கிறது.

'தந்தை, தாய், மனைவி, பிள்ளைகள், சகோதரர், சகோதரிகள் ஆகியோரையும், தம் உயிரையும் விட்டுவிட வேண்டும்' என்று இயேசு சொல்வது அவரின் பிறரன்புக் கட்டளைக்கு எதிராக இருக்கிறது. இல்லையா?

தொப்புள் கொடி உறவுகளையும், தாலிக்கொடி உறவுகளையும் விட்டுவிட வேண்டும் என்று இயேசு சொல்கின்றார். மனிதர்களாகிய நாம் உறவுகளுக்காகவே படைக்கப்பட்டவர்கள். அப்படி இருக்க, உறவுகளே வேண்டாம் என்று இயேசு சொல்வது நம்மை நம் மனித குணத்திலிருந்தே அந்நியப்படுத்திவிடாதா? இயேசுவின் இந்தப் போதனையை இரண்டு வரலாற்றுப் பின்புலத்தோடு புரிந்து கொள்ள வேண்டும்:

அ. இங்கே 'மிகைப்படுத்துதல்' என்ற இலக்கியக்கூறு பயன்படுத்தப்படுகிறது. 'ஒன்றை வெறுத்து மற்றொன்றை பிடித்துக்கொள்ளுங்கள்' என்று சொல்லப்படும்போது, அங்கே அந்த ஒன்று வெறுக்கப்பட வேண்டும் என்பது பொருள் அல்ல. மாறாக, 'பிடித்துக் கொள்ளுங்கள்' என்று சொல்ல வருவதற்கு எதிர்ப்பதமாக பயன்படுத்தப்படும் வார்த்தையே 'வெறு!' என்பது. அதாவது, இறையரசா அல்லது உறவுகளா என்ற கேள்வி வரும்போது ஒருவர் இறையரசிற்கும், இயேசுவைப் பின்பற்றுவதற்கும் முதலிடம் கொடுக்க வேண்டும்.

ஆ. தொடக்ககால திருச்சபையில் இயேசுவின் சீடர்கள் நாடோடிகளாக இருந்தார்கள். இயேசுவின் இரண்டாம் வகை சீக்கிரம் வரும் என அவர்கள் எதிர்நோக்கி இருந்ததால், தங்களிடம் உள்ள உடைமைகள், உறவுகள் அனைத்தையும் துறந்தவர்களாக, ஊர் ஊராகச் சென்று கொண்டிருந்தனர். காலப்போக்கில் இயேசுவின் இரண்டாம் வருகை தாமதமானதால் அவர்கள் அப்படியே தங்க ஆரம்பித்தனர். இந்த நாடோடி வாழ்விற்கு மக்களை ஊக்குவிக்கும் விதமாக எழுதப்பட்ட பகுதியே இன்றைய இறைவாக்குப் பகுதி.

இயேசுவின் சீடத்துவ போதனைக்கு இடையே வரும் இரண்டு உவமைகளும் வித்தியாசமாக இருக்கின்றன:

அ. 'எல்லாவற்றையும் விட்டுவிடச் சொல்லும் இயேசு கோபுரம் கட்டுவதைப் பற்றிப் பேசுகின்றார்'

ஆ. 'உயிரையும் விட்டுவிட வேண்டும் என்று சொல்லும் இயேசு போரில் உயிரைக் காத்துக் கொள்வது எப்படி என்று சொல்கின்றார்'

இந்த இரண்டு உவமைகள் வழியாக இயேசு சீடத்துவத்திற்குச் சொல்வது 'தயாரிப்பு நிலை.'

முன்தயாரிப்பு இன்றி கோபுரம் கட்டுவது அடுத்தவரின் கேலிப்பேச்சையும், போருக்குச் செல்வது உயிருக்கே இழப்பையும் பெற்றுத்தரும். அதுபோல, முன்தயாரிப்பு இன்றி இயேசுவைப் பின்தொடர முயல்வதும் ஆபத்தாக முடியும்.

உடைமைகளை விடுதல் என்பதற்கு 'பிரியாவிடை கொடுங்கள்' என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது. அதாவது, 'நோ திரும்பிப் பார்த்தல்!' அல்லது 'திருப்பிப் பார்த்தல்!'

'உறவுகளை விடுங்கள்,' 'உடைமைகளை விடுங்கள்' என்று சொல்லும் இயேசு நடுவில், சிலுவையைத் தூக்குங்கள் என்கிறார். 'சிலுவை' என்பது இயேசுவைப் பொறுத்தவரையில் அது நேரிடையான சிலுவை. அதை அவர் கல்வாரிக்குச் செல்லும் வழியில் தூக்குகின்றார். ஆனால், நமக்கு அது ஓர் உருவகம். ஏனெனில் இன்று சிலுவைகள் கிடையாது. சிலுவை மரணம் கிடையாது. சிலுவை என்று நாம் எதை எடுத்துக் கொள்வது? நமக்கு துன்பம் தரும் எதுவும் நம் சிலுவை என்றால், சிலுவையின் அர்த்தத்தை நாம் 'துன்பம்' என்று சுருக்கிவிடுகிறோமே! இயேசுவுக்கு சிலுவை மகிழ்ச்சியாகவும்தானே இருந்தது. ஆக, சிலுவை என்பது நம் வாழ்க்கையை அப்படி எடுத்துக் கொண்டு வாழ்வதுதான் என்பதே சரியான பொருளாக இருக்கும்.

இன்றைய முதல் வாசத்தில் (காண். சாஞா 9:13-18) மனித வாழ்வை, மனித உடலை மண்கூடாரம் என உருவகம் செய்து, மனித எண்ணங்கள் மற்றும் எதார்த்தங்களையே நம்மால் புரிந்து கொள்ள முடியாமல் இருக்க, இறை எண்ணங்களையும் அவரின் திருவுளத்தையும் எப்படி புரிந்து கொள்வது என்ற கேள்வியை எழுப்புகிறது. ஆக, இறைவனைப் பின்பற்ற முதலில் அவரின் திருவுளம் அறிவது அவசியம். அவரின் திருவுளத்தை அறிவதும்கூட அவரின் கொடையே.

இன்றைய இரண்டாம் வாசகத்தில் (காண். பில 9-10, 12-17) தன் தலைவரிடமிருந்து தப்பித்து வந்த அடிமை ஒனேசிமுவை தலைவரிடமே திருப்பி அனுப்பும் பவுல், 'நீர் செய்யும் நன்மையை கட்டாயத்தினால் அல்ல, மனமாரச் செய்ய வேண்டும்' என அறிவுறுத்துகின்றார். ஆக, எதைச் செய்தாலும் - அது சீடத்துவமே என்றாலும் - அதை கட்டாயத்திற்காக செய்யக்கூடாது. மாறாக, மனமுவந்து செய்ய வேண்டும்.

இன்று நாம் புனிதர் நிலைக்கு உயர்த்தி மகிழும் ஆக்னஸ் கொன்ஸ்கா போயாக்யு என்னும் அன்னை தெரசா மேற்காணும் மூன்று சீடத்துவத்தின் கூறுகளை தன் வாழ்வில் செயல்படுத்தினார்.

'கொன்ஸ்கா' என்றால் அல்பேனிய மொழியில் 'சிறுமலர்' என்பது பொருள். அந்தச் சிறுமலரையே தன் சபையில் மாற்றுப் பெயராகக் கொள்ள விரும்பியதால் 'மேரி தெரசா' என்ற பெயரை தெரிவு செய்கின்றார்.

அ. தன் உறவுகளை விட்டுவிட்டு அல்பேனியாவில் இருந்து இந்தியா வந்தார். புதிய கலாச்சாரம், புதிய பண்பாடு, புதிய உணவுப் பழக்கம் என்றாலும் அனைத்தையும் விரும்பி ஏற்றுக்கொள்கின்றார்.

ஆ. தன் சிலுவையைச் சுமந்தார். அவரின் இன்பம், துன்பம், வாழ்வியல் எதார்த்தம் அனைத்துமே அவரின் சிலுவைகளாக இருந்தன. ஆனால் அவற்றை மனமுவந்து சுமந்தார்.

இ. தன் உடைமைகளை விட்டுவிட்டார். இறுதிவரை எளிய ஆடை, எளிய உணவுப்பழக்கம், எளிய வாழ்க்கை முறை என பற்றுக பற்றற்றான் பற்றினை மட்டும் பற்றிக் கொண்டார்.

இந்தச் சிறுமலரிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் ஒன்றே ஒன்றாக இருக்க வேண்டும்:

வரலாறு மற்றும் புவியியல் ஆசிரியராக கல்கத்தா நகரில் வலம் வந்த ஆக்னஸ் வரலாறே பேசும் அளவிற்கு அன்னை தெரசவாக உயர்ந்தது எப்படி?

ஒரே காரணம்தான். 'இறைவனின் உந்துதல் நாளை உணர்ந்தார்.'

'உன் வேலை ஆசிரியப்பணி அல்ல!' என்று அவருக்கு உள்ளுணர்வு உணர்த்தியதை மிகவும் பொறுப்புணர்வோடு எடுத்துக்கொண்டு அதன்படி வாழத் தொடங்குகின்றார். தான் செய்கின்ற ஒன்றை விரும்பி, அதை முழு அர்ப்பணத்தோடு செய்கின்றார். இதை நாம் நம் வாழ்க்கைப்பாடமாக எடுத்துக் கொள்ளலாம்.

பல நேரங்களில் நம்மால் இந்த உள்ளுணர்வை சரியாக அடையாளம் காண முடிவதில்லை. சில நேரங்களில் நம்மால் அடையாளம் காண முடிந்தாலும் அதை நாம் சீரியசாக எடுத்துக் கொள்வதில்லை.

தான் கட்ட விரும்பிய கோபுரம், தான் செய்ய வேண்டிய போர் அனைத்திற்கும் தயாராக இருந்தார் தெரசா. அவரின் தயாரிப்பாக இருந்தவர் இறைவன் மட்டுமே. இறைவன் இல்லாத நேரங்களை தானும் உணர்ந்ததாக, தன் கிணறும் வற்றிப்போன தருணங்கள் இருந்ததாக அவர் பதிவு செய்கிறார்.

இன்றைய நாள் நிகழ்வும் இறைவாக்கு வழிபாடும் நமக்கு வைக்கும் வாழ்க்கைப் பாடங்கள் எவை?

1. இயேசுவை பல நேரங்களில் நாம் மிக சாதாரணமாக அல்லது நமக்கு எளிமையாகப் படுவதாக முன்வைக்கிறோம். இயேசு கடினமானவர். இயேசுவைப் பின்பற்றுவது கடினமானது. ஏனெனில் வாழ்க்கையும் கடினமானது. இதில் நாம் கடினத்தன்மையை மறுக்கும்போது இயேசுவை நாம் ரொம்ப சிம்ப்ளிஃபை செய்யத் தொடங்குகிறோம். இது தவறு!

2. 'சிலுவை சுமப்பது' என்பது இன்று நாம் அடிக்கடி பயன்படுத்தும் சொல்லாடலாக மாறி அதன் அர்த்தம் போய்விட்டது. குளிர்காலத்தில் பச்ச தண்ணியில குளிப்பது கூட சிலுவை சுமப்பது என்று சொல்லும் அளவிற்கு சிலுவையின் அர்த்தத்தை நாம் மிகவும் சுருக்கிவிட்டோம். குணமாக்க முடியாத புற்றுநோய், மன உலைச்சல், குடும்ப கஷ்டம், திருமண அல்லது வேலை தோல்வி, அருள்பணி நிலையில் வரும் துன்பங்கள் என அனைத்தும் சிலுவை என்று சொல்லத் தொடங்கிவிட்டோம். இவைகள் சிலுவைகள் அல்ல. மாறாக, சிலுவை என்பது இயேசுவை பின்பற்றுவதற்காக ஒருவர் தானாகவே முன்வந்து செய்யும் ஒரு செயல். இப்படி சிலுவை சுமக்க ஒருவர் தியாகம் செய்வது அவசியம். தியாக வாழ்க்கைக்கான ஒரு அர்ப்பணம் அல்ல இது. மாறாக, இயேசு என்ற மனிதரோடு நாம் கொள்ளும் உறவிற்காக செய்யும் அர்ப்பணம். மனித உறவுகளுக்கே அர்ப்பணமும் தியாகமும் தேவைப்படுகிறது எனில், இறையுறவிற்கு இன்னும் எவ்வளவு அதிகம் தேவை!

3. முழுமையான அர்ப்பணத்தை தன் சீடரிடம் எதிர்பார்க்கும் இயேசு அதை ஒவ்வொருவரின் தனிப்பட்ட தெரிவுக்கு விட்டுவிடுகின்றார். அர்ப்பணம் என்பது நாம் அன்றாடம் எடுத்துவைக்கும் அடி. அது ஒரே நாளில் நிகழ்ந்துவிடுவது அல்ல என்பது இயேசுவுக்கும் தெரியும். ஆக, கோபுரம் கட்டுபவரைப் போல, போருக்குச் செல்பவரைப் போல ஒவ்வொரு நாளும் ஒருவர் சுய ஆய்வு செய்து தன் அர்ப்பணத்தைப் புதுப்பித்துக் கொண்டே இருத்தல் வேண்டும்.

4. சீடத்துவத்தின் விலை என்பது ஒவ்வொருவரைப் பொறுத்து வித்தியாசப்படுகிறது. சிலருக்கு ஆற்றல் தியாகமாக, நேரம் தியாகமாக அது இருக்கலாம். இன்னும் சிலருக்கு உறவுநிலைகளில் மாற்றமாக இருக்கலாம். சிலருக்கு அழைத்தலில் மாற்றமாக இருக்கலாம். எந்த நிலையில் சீடத்துவம் இருந்தாலும் மதிப்பீடுகள் மாற்றம் மிகவும் முக்கியமானது. இந்த மதிப்பீடுகள் மாற்றத்திற்கான அர்ப்பணம் பகுதியாக அல்ல முழுமையாக இருத்தல் வேண்டும்.

5. 'நீர் செய்யும் நன்மையை கட்டாயத்தினால் அல்ல, மனமுவந்து செய்யும்' என பிலமோனுக்கு எழுதுகிறார் பவுல். நம் வாழ்க்கையை மட்டுமல்ல, நம் சீடத்துவத்தையும் கட்டாயத்தினால் அல்ல, மனமுவந்து செய்யலாமே!