இவ் மறையுரையை வழங்குபவர்

அருட்பணி.இயேசு கருணாநிதி
Archbishop’s House, K. Pudur, Madurai 625 007, India
Email: yesu@live.in

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)









ஆண்டின் பொதுக்காலம் 22ஆம் ஞாயிறு

பிறர்மையம்

சீஞா 3:17-18, 20, 28-29
எபி 12:18-19, 22-24
லூக் 14:1, 7-14

'பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டம்
சால மிகுத்துப் பெயின்' (குறள் 475)

'மயில் தோகையே ஆனாலும், அளவுக்கு அதிகமாக ஏற்றினால் வண்டியின் அச்சு முறிந்துவிடும்' என்று திருவள்ளுவர் சொல்வது, மயில் தோகையைப் பற்றியோ, வண்டியைப் பற்றியோ அல்ல. மாறாக, நம் மனதில் ஏற்றும் சின்னச் சின்னப் பாரங்களும் பெரிய அளவில் ஆகி நம்மையே சாய்த்துவிடும் அபாயம் உண்டு என்று எச்சரிக்கவே.

ஒரு பொருளைப் பயன்படுத்தி மற்றொரு பொருளைப் புரியச் செய்தல் என்பது ஓர் இலக்கியக் கூறு.

அப்படிப்பட்ட ஓர் இலக்கியக்கூறைத்தான் இன்றைய நற்செய்தி வாசகத்தில் (காண். லூக் 14:1, 7-14) பார்க்கின்றோம். இன்றைய நற்செய்தியின் சூழல் விருந்து. விருந்திற்கு அழைக்கப்படும் இயேசுவை எல்லாரும் கூர்ந்து கவனித்துக் கொண்டிருக்கின்றனர். இயேசு எப்படி விருந்தில் நடந்து கொள்கிறார் என்று அங்கிருந்தவர்கள் கூர்ந்து பார்த்துக் கொண்டிருக்க, இயேசு அவர்களைக் கூர்ந்து நோக்கியவராய் அவர்களுக்கு அறிவுறுத்தத் தொடங்குகின்றார். இயேசுவின் அறிவுரை இரண்டு பகுதிகளாக அமைந்துள்ளது: (அ) விருந்துக்கு அழைக்கப்படும்போது எப்படி நடக்க வேண்டும்? (ஆ) விருந்துக்கு அழைக்கும்போது எப்படி நடக்க வேண்டும்?

மேலோட்டமாகப் பார்த்தால் இந்த வாசகம் 'விருந்தோம்பலை' முன்னிறுத்துவதாக உள்ளது. ஆனால், சற்று ஆழமாக வாசித்தால் இயேசுவின் அறிவுரையின் நோக்கம் 'விருந்தோம்பல்' அல்ல. மாறாக, 'தன்மையமா?' அல்லது 'பிறர்மையமா?' என்ற கேள்வி.

இரண்டு வாரங்களாக விறுவிறுப்பாக நடைபெற்ற ரியோ ஒலிம்பிக் விளையாட்டுக்கள் இனிதே நிறைவிற்கு வந்துள்ளன. ஒரு வெள்ளியும், ஒரு வெண்கலமும் வாங்கி 67வது இடத்தைப் பிடித்து நாடு திரும்பிவிட்டனர் நம் நாட்டு இளவல்கள். ஒவ்வொரு விளையாட்டின் இறுதியில் பதக்கங்கள் வாங்க இளவல்கள் மேடையில் ஏறும்போதும், அவர்கள் தங்களுக்கு அணிவிக்கப்பட்ட பதக்கங்களை உற்சாகமாக முத்தமிடும்போதும், கடிக்கும் போதும், கண்ணீர் வடிக்கும்போதும் அங்கே அவர்களின் முதுகிற்குப் பின்னால் நின்றுகொண்டிருப்பவர்கள் அவர்களின் பயிற்சியாளர்கள். பயிற்சியாளர்களுக்கு இந்த இளவல்களை விட அதிக திறனும், ஆற்றலும் இருந்தால் கூட அவர்கள் தங்களை பின்னால் நிறுத்திக் கொள்வதிலேயே ஆர்வம் கொள்கின்றனர்.

தன்னிடம் பயின்ற ஒரு மாணவனோ, மாணவியோ ஐஏஸ் அல்லது ஐபிஎஸ் தேர்வில் வெற்றி பெற்றோ, அல்லது மருத்துவர், விஞ்ஞானி என பணி இடம் பெற்றோ வரும்போது, அவர்களுக்குப் பள்ளியில் பாடம் எடுத்த ஆசிரிய-ஆசிரியைகள் உச்சி முகர்ந்து வரவேற்கின்றனர். மேற்காணும் தேர்வுகளை இவர்கள் எழுதினாலும் எளிதாக தேர்ச்சி பெற்றுவிடுவார்கள். ஏனெனில் இவர்களுக்கு அறிவும் உண்டு. அனுபவமும் உண்டு. இருந்தாலும் மற்றவர்களை மேலே ஏற்றிவிட்டு இந்த ஏணிகள் பள்ளிகளின் வகுப்பறைகளிலேயே நின்றுகொள்கின்றன.

தனக்கு சோறு இல்லையென்றாலும் தன் பிள்ளைகளுக்கு எல்லாவற்றையும் வழித்து வைத்துவிட்டு, ஒரு டம்ளர் தண்ணீரைக் குடித்துவிட்டு உறங்கச் செல்கின்றார் நம் வீட்டு அம்மா. தான் பிய்ந்து போன செருப்பை ஒட்டுப் போட்டு போட்டிருந்தாலும் தன் மகனின் கால்களுக்கு ஷூக்கள் அணிவித்து அழகு பார்க்கிறார் நம் வீட்டு அப்பா.

'எனக்கு இடம் கிடைக்கவில்லையென்றாலும் பரவாயில்லை. உனக்கு கிடைத்ததே' என மகிழும் நம் நண்பர்கள். நம் தேவையில் அருகிருந்து உதவி செய்யும் உற்றவர்கள்.

விளையாட்டுப் பயிற்சியாளர்கள், ஆசிரியர்கள், அம்மா, அப்பா, நண்பர்கள் எல்லாருமே தங்கள் வாழ்வை தங்களை மையப்படுத்தி வாழாமல் பிறரை மையப்படுத்தியே வாழ்கின்றனர். அதில் மகிழ்வும் நிறைவும் காண்கின்றனர்.

இன்றைய நற்செய்தி நமக்கு வைக்கும் கேள்வி இதுதான்: 'உன் வாழ்வின் மையம் யார்? நீயா? அல்லது அடுத்தவரா?'

விருந்திற்கு அழைக்கப்படுபவர்கள் வேகமாக முதல் இருக்கைகளைப் பிடித்துக் கொள்கின்றனர். இவர்களின் கண்களுக்குத் தெரிந்ததெல்லாம் 'நான்' என்ற ஒன்று மட்டும்தான். விருந்திற்கு நண்பர்களை, உறவினர்களை அழைப்பவர்களும் 'தன்மையம்' என்ற நிலையில் தனக்கு வேண்டியவர்களை, நண்பர்களை, உயர்ந்தவர்களை மட்டுமே அழைக்கின்றனர்.

இயேசு இந்த நிலையைப் புரட்டிப் போடுகின்றார்:

விருந்து என்ற உருவகத்தின் வழியாக, நல்விருந்திற்கும் நல்வாழ்விற்கும் அடிப்படை 'தன்மையம்' அல்ல, 'பிறர்மையமே' என அறிவுறுத்துகின்றார் இயேசு.

இன்றைய நற்செய்தியில் இயேசு தரும் அறிவுரையை இரண்டு பகுதிகளாகப் பிரிக்கலாம்:

அ. நீங்கள் விருந்திற்குச் செல்லும்போது

- 'உட்காராதீர்கள்'
- 'உட்காருங்கள்'
- 'நீங்கள் பெருமை அடைவீர்கள்'
- 'உயர்த்துபவர் தாழ்த்தப்படுவார். தாழ்த்துபவர் உயர்த்தப்படுவார்'

ஆ. நீங்கள் விருந்திற்கு அழைக்கும்போது

- 'அழைக்காதீர்கள்'
- 'அழையுங்கள்'
- 'நீங்கள் பேறு பெறுவீர்கள்'
- 'நேர்மையாளர் உயிர்த்தெழும்போது கைம்மாறு கிடைக்கும்'

முதல் பகுதியில் இயேசுவின் அறிவுரை நீதிமொழிகள் 25:6-7ஐ ஒத்திருக்கிறது: 'அரசர் முன்னிலையில் உன்னைப் பெரியவரென்று காட்டிக்கொள்ளாதே. பெரியோருக்குரிய இடத்தில் நில்லாதே. பெரியவர் ஒருவருக்கு இடமுன்டாகும்படி நீ கீழிடத்திற்கு அனுப்பப்படுவதைவிட, 'நீ மேலிடத்திற்கு வா' என்று அழைக்கப்படுவதே மேன்மை'' விருந்தில் முதல் இடத்தில் உட்கார்ந்திருப்பவரை, 'இவருக்கு இந்த இடத்தைக் கொடு!' என்று சொல்கிறார் விருந்து வைப்பவர். ஆனால், கடைசி இடத்தில் உட்கார்ந்திருப்பவரிடம், 'நண்பரே, முதல் இடத்திற்கு வாரும்!' என்று மரியாதையுடன் அழைக்கிறார். ஆக, 'மரியாதை' என்பது அடுத்தவரால் தரப்பட வேண்டியது. தானே விரும்பி எடுத்துக்கொள்வது அன்று. ஆக, அவமானத்திற்கும் மரியாதைக்கும் உரிய இருதுருவ நிலையை இப்பகுதி எடுத்துக்காட்டுகிறது.

இந்த இடத்தில் நாம் ஒரு கேள்வியை எழுப்ப வேண்டும். முதல் இடத்திற்கும், மரியாதைக்கும் இயேசு குறுக்குவழியை சொல்லிக் கொடுக்கிறாரா? இல்லை. கடைசி இடத்தில் அமர்வது அல்லது கடைசியாக இருப்பது முதலாகச் செல்வதற்கான குறுக்கு வழி அல்ல என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். நாம் முதல் இடத்திற்கு அழைக்கப்படவில்லை என்றாலும் நாம் அதைப் பற்றிக் கண்டுகொள்ளக் கூடாது. 'நமக்கு எது வரவேண்டுமோ, அது தானாகவே வரும்!'

இயேசுவின் இரண்டாம் அறிவுரை விருந்துக்கு அழைத்தவரை நோக்கித் திரும்புகிறது. 'நண்பர்கள், சகோதரர்கள், உறவினர்கள், செல்வம் படைத்த அண்டை வீட்டார்' என்ற நான்கு குழுக்களை அழைக்க வேண்டாம் என்கிறார் இயேசு. இந்த நான்கு வகை மக்கள்தாம் ஏரோதின் விருந்துக்கு அழைக்கப்படுகின்றனர் (காண். மாற் 6:21). இந்த நான்கு குழுக்களுக்கு மாற்றாக மற்றொரு நான்கு குழுக்களை முன்வைக்கிறார் இயேசு: 'ஏழைகள், உடல் ஊனமுற்றோர், கால் ஊனமுற்றோர், பார்வையற்றோர்.' இந்த நான்கு வகை மக்களும் குருக்களாக மாற தகுதியற்றவர்கள் (காண். லேவி 21:17-23). இந்த நான்கு குழுக்களும் தங்களின் உறுப்பினர்களாக மாற தகுதியற்றவர்கள் எனக் கருதியது கும்ரான் குழுமம். முதல்வகை குழுக்களால் மீண்டும் கைம்மாறு செய்ய முடியும். மீண்டும் இவர்களுக்கு விருந்து வைக்க முடியும். ஆனால் இரண்டாம்வகை குழுக்களுக்கு அது சாத்தியம் அல்ல. இவர்களால் கைம்மாறு செய்ய முடியாவிட்டாலும், கடவுள் இவர்கள் சார்பாக கைம்மாறு செய்வார்.

இவ்வாறாக, முதல் அறிவுரை விருந்துக்குச் செல்வதைப் பற்றியும், இரண்டாம் அறிவுரை விருந்துக்கு அழைப்பதை அல்லது விருந்து வைப்பதைப் பற்றி இருந்தாலும், இயேசுவின் செய்தி விருந்தையும் கடந்து நிற்கின்றது. அதாவது, 'தன்மையம்' தவிர்த்து 'பிறர்மையம்' கொள்தல் வாழ்விற்கு அவசியம்.

இயல்பாகவே நம் உணர்வுத் தூண்டல் தன்மையம் பற்றிய எண்ணங்களுக்கும், செயல்களுக்குமே முன்னுரிமை கொடுக்கின்றது. ஏனெனில், நம் உயிர் தன்னைப் பாதுகாத்துக் கொள்வதைப் பற்றியே அக்கறைப்படுகின்றது. இன்றைய நவீனக் கலாச்சாரமும், 'தன்னலத்தை முக்கிய மதிப்பீடாக' கற்பிக்கிறது. இயேசுவின் 'தன்மறுப்பு' போதனை இங்கே 'தன்மையம் மறுத்தலாக' வெளிப்படுகிறது.

இன்றைய முதல் வாசகம் (சீஞா 3:17-18, 20, 28-29) இதையே தாழ்ச்சி என்ற பண்பாக முன்வைக்கிறது. தாழ்ச்சி ('humility') என்ற ஆங்கில வார்த்தை 'humus' என்ற இலத்தீன் வார்த்தையிலிருந்து வருகிறது. 'Humus' என்றால் 'சகதி' அல்லது 'மண்' என்று பொருள். ஆக, 'humility' என்பது 'நாம் மண் போன்றவர்கள்' என்று உணர்வது, அல்லது 'நாம் மண்ணிலிருந்து உருவாக்கப்பட்டோம் என்ற எதார்த்தத்தை' (our soilness) உணர்ந்து கொள்வது. 'இறுமாப்பு' என்ற குணத்தை 'தாழ்ச்சி' என்ற மதிப்பீட்டிலிருந்து வேறுபடுத்திக் காட்டும் சீராக்கின் ஞானநூல் ஆசிரியர் 'இறுமாப்பை' விட்டவிட வேண்டியும், 'தாழ்ச்சியை' தழுவிக் கொள்ளவும் அறிவுறுத்துகின்றார். தாழ்ச்சி என்பது மூன்று நிலைகளில் வெளிப்பட வேண்டும்:

அ. 'செய்வது அனைத்தையும் பணிவோடு செய்ய வேண்டும்'

ஆ. 'கடினமானதையும் ஆற்றலுக்கு மிஞ்சியதையும் நாடாமை வேண்டும்'

இ. 'பிடிவாதம் அல்லது அடங்கா மனம் களைதல் வேண்டும்'

இன்றைய இரண்டாம் வாசகத்தில் (காண். எபி 12:18-19, 22-24) சீனாய் மலையையும், சீயோன் மலையையும் வேறுபடுத்திக் காட்டும் ஆசிரியர், முதலாவது மலையில் பயம் மேலோங்கி இருந்தது எனவும், இரண்டாவது மலையில் பரிவு மேலோங்கி இருந்தது எனவும் சொல்கின்றார். முதலாவது மலை ஒருவர் மற்றவரை பிரித்தது. இரண்டாவது மலை ஒருவர் மற்றவரை இணைக்கிறது. இந்த இணைப்பை சாத்தியமாக்குபவர் 'புதிய உடன்படிக்கையின் இணைப்பாளரான' இயேசுவே. முதல் மலையில் 'தன்மையம்' மேலோங்கி இருந்தது. இரண்டாம் மலையில் 'பிறர்மையம்' முதன்மையிடம் பெறுகிறது. 'பிறர்மையம்' கொண்ட இயேசுவால் தான் தன்னைப் போன்ற மக்கள்மேல் பரிவு கொள்ளவும், அன்பு காட்டவும் முடிந்தது.

'தன்மையம்' என்ற நிலையிலிருந்து 'பிறர்மையம்' என்ற நிலைக்கு நாம் எப்படி கடந்து செல்வது?

1. தன்மதிப்பை உணர்தல்

எனக்கு தன்மதிப்பு என்னுள்ளிருந்து வரவேண்டும். என் தன்மதிப்பை நான் எனக்கு அடுத்திருப்பவர்மேலும், நான் பார்க்கும் வேலையிலும் கட்டி வைக்கக் கூடாது. அப்படி நான் கட்டி வைக்கும்போது அடுத்தவர்கள் அல்லது அடுத்தவைகளைப் பொறுத்தே எனக்கு மதிப்பு இருப்பதாக நான் கருதத் தொடங்குகிறேன். என் தன்மதிப்பிற்காக மற்றவர்களை திருப்திப்படுத்தவும், அல்லது மற்றவர்களிடம் பயந்து நிற்கவும் தொடங்குகிறேன். விருந்திற்கு செல்லுமிடத்தில் அல்லது முக்கியமான நிகழ்வுகளில் முதன்மையான அல்லது நடுவிலான இருக்கைகளை நாடத் தொடங்குகிறேன். அந்த இடம் அல்லது இருக்கை கிடைக்காதபோது ஏமாற்றம் அடையவும், அது கிடைத்தவரைப் பார்த்து பொறாமைப்படவும் தொடங்குகிறேன். இதற்கு மாறாக, என் மதிப்பை நான் என்னுள்ளே கண்டுகொண்டேன் என்றால் நான் இயல்பாகவே என் மரியாதையை என்னுள்ளே கண்டுகொள்வேன். அடுத்தவருடன் என்னை ஒப்பிடவோ, வேறுபடுத்திக்காட்டவோ மாட்டேன்.

2. தன்மையம் மறுப்பு

ஒலிம்பிக் விளையாட்டு பயிற்சியாளர்கள், பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள், நம் அம்மா, அப்பாக்கள், நண்பர்கள் இவர்களால் எப்படி தங்களையே மறுக்க முடிகிறது? எப்படி அடுத்தவர்களை மட்டுமே மையப்படுத்த முடிகிறது? தன்மையம் மறுத்து பிறர்மையம் பிறக்க வேண்டுமென்றால் தன்னிறைவு மிக அவசியம். தன்னிறைவு பெற்ற ஒருவர்தான் அடுத்தவரைப் பற்றி நினைக்க முடியும். ஒரு குடும்பத்தில் ஆணும், பெண்ணும் திருமணத்தில் இணையும் போது தன்மையம் மறந்து பிறர்மையம் நாடுகின்றனர். இரண்டு பேரும் ஒருவர் மற்றவரால் நிறைவு பெற்றவுடன் அந்த நிறைவின் மிகுதியால் தங்கள் அன்பை தங்கள் குழந்தைகள்மேல் பொழிகின்றனர். அருள்நிலையில் இருப்பவர்களுக்கும் இத்தகைய தன்னிறைவு மிக அவசியம். தன்னிறைவு குருத்துவ அருட்சாதனத்தால் அல்லது துறவற வார்த்தைப்பாட்டினால் தானாக வந்துவிடுவது அல்ல. மாறாக, ஒருவரே முயற்சி செய்து அடைய வேண்டியது.

3. பிறரில் நற்குணங்களைக் காணுதல்

என்னிடம் மட்டுமே நற்குணங்கள் உண்டு என்றோ, அல்லது நான் மட்டுமே நல்லவன் என நினைப்பதும், அல்லது என்னால் மட்டுமே இது இயலும் என்று நினைப்பது மிகவும் தவறு. அடுத்தவரிடம் நற்குணங்கள் உண்டு, அடுத்தவரும் நல்லவர், அடுத்தவராலும் இது இயலும் என்ற பக்குவம் நம்மில் வர வேண்டும். இதை நாம் ஒரு பயிற்சியாகக் கூட செய்யலாம். எல்லாவற்றிலும் நல்லதை மட்டுமே காண முயற்சி செய்யலாம்.

4. அநீதியைப் பொறுத்துக் கொள்ளுதல்

சில நேரங்களில் நம்மில் சில எண்ணங்கள் எழும்: 'அவன் அந்த வேலைக்கு லாயக்கு அற்றவன்,' அல்லது 'பாலிடிக்ஸ் செய்து வேலையை வாங்கி விட்டான்,' அல்லது 'எனக்கு அநீதி இழைக்கப்பட்டுவிட்டது.' சில நேரங்களில் வாழ்க்கை தகுதியற்றவர்களை முதன்மைப்படுத்திவிட்டு, தகுதியானவர்களை கடைசியிலேயே வைத்திருக்கலாம். இம்மாதிரி நேரங்களில் என்ன செய்வது? இன்னும் தாழ்ந்து போவதா? அல்லது அநீதிக்கு எதிராக குரல் கொடுப்பதா? அநீதிக்கு எதிராக குரல் கொடுக்கலாம். ஆனால், அநீதி இழைப்போரிடம் ஆற்றல் இருந்தது என்றால் நாம் இன்னும் கொஞ்சம் பொறுமை காத்தல் சால்பு. நான் கடைசி இடத்தில் வைக்கப்பட்டுக்கொண்டே இருந்தாலும், ஒரு கட்டத்தில் நான் என் நாற்காலியை அப்படியே திருப்பி மறுபக்கமாய் போட்டேன் என்றால் நான் முதல்வனாகிவிடுவேன். அநீதி இழைக்கப்பட்ட போதிலும் தன்மதிப்பை இழந்துவிடாமல் இருத்தல் அவசியம்.

5. அந்த நான்கு பேர்

நாம் விருந்துக்கு அழைப்பவர்களைப் பற்றி கவனமாக இருக்க வேண்டும் எனச் சொல்கிறார் இயேசு. பல நேரங்களில் விருந்து மட்டுமல்ல, நம் பழக்கம் மற்றும் நட்பு கூட 'நண்பர்கள், சகோதரர்கள், உறவினர்கள், செல்வம் படைத்த அண்டை வீட்டார்' என்ற நான்கு குழுக்கள்கூடவே இருக்கின்றது. நமக்கேற்றவர்களைத் தேடியே அல்லது நம் நட்பை நமக்கு திரும்ப கொடுப்பவர்களைத் தேடியே நாம் போகின்றோம். ஒரு சவாலாக மற்ற நான்கு பேரையும் நாம் தேடிப்போகலாமே: 'ஏழைகள், உடல் ஊனமுற்றோர், கால் ஊனமுற்றோர், பார்வையற்றோர்.' இந்த நான்கு பேரும் தங்கள் உயிர்வாழ்வுக்கும், உடல்நலத்திற்கும், பாதுகாப்பிற்கும் மற்றவர்களைச் சார்ந்து இருப்பவர்கள். இவர்கள் தங்களிலேயே இல்லாமையைக் கொண்டிருப்பவர்கள். இவர்களால் கைம்மாறு செய்ய முடியாது. இவர்களுக்கு நாம் செய்யும்போது நாம் இறைவன் நிலைக்கு உயர்கின்றோம். ஏனெனில் இறைவனுக்கு யாராலும் கைம்மாறு செய்ய முடியாது. இல்லையா? அதே நேரத்தில் இறைவனிடம் கைம்மாறு பெறுவதற்காக என்ற நிலையில் இந்த நான்கு பேரையும் நம் மீட்புக்காக நாம் பயன்படுத்திக் கொள்ளவும் கூடாது. மனிதர்கள் மனிதர்களாக மதிக்கப்படவேண்டியவர்கள். அன்பு செய்யப்படவேண்டியவர்கள். அவர்கள் ஒருபோதும் பயன்பாட்டுப்பொருள்கள் அல்லர்.

'தாழ்ச்சி' என்னும் வெள்ளி முளைத்து,

'தன்மையம்' என்ற சனி மறைந்தால்,

'பிறர்மையம்' என்ற ஞாயிறு பிறக்கும்...

அந்தக் ஞாயிறே இறைமையமாய் ஒளிவீசும்...