இவ் மறையுரையை வழங்குபவர்

அருட்பணி.இயேசு கருணாநிதி
Archbishop’s House, K. Pudur, Madurai 625 007, India
Email: yesu@live.in

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)









பாஸ்கா திருவிழிப்பு

கதிரவன் எழும் வேளையில்!

xxx
xxx
லூக்கா 24:1-12

நேற்றைய இரவு நம் அனைவருக்கும் சோகமாக முடிந்தது. நண்பகல் முதல் பிற்பகல் மூன்று மணி வரை இருள் உண்டாயிற்று. கதிரவன் ஒளி கொடுக்கவில்லை. இயேசுவின் சீடர்கள் நிம்மதியாகத் தூங்கவில்லை - தங்களையும் பிடித்துக் கொண்டு போய்க் கொன்றுவிடுவார்களோ என்று பயந்துகொண்டிருந்தனர். இயேசுவின் எதிரிகளும் நிம்மதியாகத் தூங்கவில்லை - 'ஒருவேளை சொன்னபடி உயிர்த்தெழுந்துவிடுவானே இந்த எத்தன்?' (காண். மத் 5:28) என்று எண்ணி கல்லறைக்குக் காவல்காத்துக் கொண்டிருந்தனர். இயேசுவின் சிலுவைச் சாவைப் பார்த்தவர்கள் - 'இன்று இவர், நாளை யாரோ?' என்று அரைத்தூக்கத்தில் இருந்தனர். இயேசுவின் நண்பர்கள் - விடிந்தும் விடியாமல் அவரின் கல்லறையை நோக்கி ஓடுகிறார்கள். இயேசுவின் உயிர்ப்பின் மேல் இவர்களுக்கும் நம்பிக்கை இல்லை. ஆகையால்தான், தாங்கள் ஆயத்தம் செய்திருந்த நறுமணப் பொருள்களை எடுத்துக்கொண்டு செல்கின்றனர். எல்லாவற்றிற்கும் மேலாக, இயேசுவும் தூங்கவில்லை. அவர் உயிர்த்துவிட்டார்.

இதையே இன்றைய வாசகத்தில், உரோமை நகருக்கு எழுதும் திருமடலில், பவுலடியார், 'இறந்து உயிருடன் எழுப்பப்பட்ட கிறிஸ்து இனிமேல் இறக்கமாட்டார்' என்று எழுதுகின்றார்.

இன்றைய நற்செய்தி வாசகமே மிகவும் நம்பிக்கை தரக்கூடிய வார்த்தைகளோடு தொடங்குகிறது: 'வாரத்தின் முதல் நாள் விடியற்காலையில்'. மாற்கு இதை இன்னும் எளிய வார்த்தைகளில் தருகிறார்: 'வாரத்தின் முதல் நாள் காலையிலேயே கதிரவன் எழும் வேளையில்' என எழுதுகின்றார். 'கதிரவன் எழத் தொடங்கியிருந்தான்' என்ற இதே சொல்லாடல் முதல் ஏற்பாட்டில் தொடக்கநூல் 32:31ல் வாசிக்கிறோம்: 'யாக்கோபு பெனியேலுக்கு அப்பால் சென்றவுடன் கதிரவன் தோன்றினான்!'

இஸ்ரயேல் இனத்தின் தலைமகன் யாக்கோபு தன் புதிய வாழ்வைத் தொடங்கியபோது அங்கே கதிரவன் தோன்றினான். புதிய இஸ்ரயேல் இனத்தின் தலைமகன் இயேசு இறப்பிலிருந்து உயிர்த்தபோதும் அங்கே கதிரவன் தோன்றினான். அங்கே, 'யாக்கோபு' என்ற பெயர் 'இஸ்ரயேல்' என்று மாறுகிறது. இங்கே, 'இயேசு' என்ற பெயர் 'கிறிஸ்து' என மாறுகிறது. அங்கே, யாக்கோபின் இயல்பு முழுவதும் மாறுகிறது. இங்கே இயேசுவின் உடல் இயல்பு மாறுகிறது. யாக்கோபைப் பொறுத்த வரையில் அது ஒரு தனிநபர் மனமாற்றம். இயேசுவைப் பொறுத்தவரையில் இது ஒட்டுமொத்த மனுக்குலத்தின் மன்னிப்பு மாற்றம்.

கிழக்கில் எழுந்த சூரியனாய் இன்று இயேசு உயிர்த்த பெருவிழாவைத்தான் இன்று நாம் 'ஈஸ்ட்-டர்' (கிழக்கிலிருந்து உதித்தவர்) என்று கொண்டாடுகின்றோம். முடிவு என்று எல்லாரும் நினைக்க விடிவு என எழுகிறார் இயேசு. உயிர்ப்பு என்பது சிலுவையின் மறுபக்கம். உயிர்ப்பு என்பது இறப்பின் மறுபக்கம். உயிர்ப்பு என் நம் வாழ்வின் மறுபக்கம்.

'இருள் மறைந்து ஒளி பிறக்கும்' என்பதையே இன்றைய திருவழிபாட்டு நிகழ்வுகள் அடையாளங்களாகவும், இறைவாக்கு வழிபாடு இறைவார்த்தையாகவும் நமக்கு முன்வைக்கிறது. இன்றைய திருநிகழ்வின் தொடக்கத்தில் ஆலயத்தின் விளக்குகள் அணைக்கப்பட, நாம் புதிய நெருப்பிலிருந்து பாஸ்கா திரியை ஏற்றினோம். மறையுரை முடிந்து நாம் திருமுழுக்கு வாக்குறுதிகளைப் புதுப்பிக்கும்போதும் எரியும் திரிகளுடன் நிற்போம். பாஸ்கா காலத்தின் இறுதி ஞாயிறாகிய பெந்தெகோஸ்தே திருவிழாவில் திருத்தூதர்கள்மேல் இறங்கி வந்த நெருப்பு நாவுகளோடு நாம் பாஸ்கா மகிழ்ச்சியை நிறைவு செய்வோம். ஆக, ஒளியில் தொடங்கும் பாஸ்கா ஒளியில் முடிகிறது. இன்றைய வாசகங்களில் தொடக்க நூல், விடுதலைப் பயண நூல், மற்றும் லூக்கா நற்செய்தி வாசகங்கள் 'ஒளி' என்ற வார்த்தையை மையமாகக் கொண்டுள்ளன.

படைப்பின் தொடக்கத்தில், மண்ணுலகு உருவற்று, வெறுமையாக, ஆழத்தின்மேல் இருள்சூழ்ந்து இருந்தபோது, 'ஒளி தோன்றுக!' என்கிறார் கடவுள். ஒளி உண்டாகிறது (காண். தொநூ 1:1). விடுதலைப் பயண நிகழ்வில், முன்னால் கடல், பின்னால் எகிப்தியர் என்ற இறப்பின் நிலையில் இஸ்ரயேல் மக்கள் இருந்தபோது, 'எகிப்தில் சவக்குழிகள் இல்லையென்றா நீர் எங்களைப் பாலைநிலத்தில் சாவதற்கு இழுத்து வந்தீர்?' (காண். விப 14:11) என்று மோசேயிடம் முறையிட்டபோது, 'ஆண்டவரே உங்களுக்காகப் போரிடுவார். நீங்கள் சும்மாயிருங்கள்!' (காண். விப 14:14) என்று மோசே அவர்களுக்கு நம்பிக்கையைத் தருகின்றார். இந்த நம்பிக்கையை உடனடியாக கடவுள் உறுதிப்படுத்துகிறார். எப்படி? 'நெருப்புத்தூண் எகிப்தியருக்கு இருளாகவும் இஸ்ரயேலருக்கு இரவில் ஒளியாகவும் அமைந்தது.இதனால் இரவில் எந்நேரத்திலும் அவர்கள் இவர்களை நெருங்கவில்லை' (காண். விப 14:20). தொடர்ந்து, இன்றைய நற்செய்தி வாசகத்தில், வாரத்தின் முதல் நாள் காலையிலேயே அவர்கள் கல்லறைக்குச் சென்றபோது, 'கதிரவன் எழத் தொடங்கியிருந்தான்' (காண். மாற் 16:1, லூக் 24:1).

இந்த மூன்று ஒளியின் பின்புலத்தில் நாம் கைகளிலும் உள்ளத்திலும் நாம் இன்று ஏந்தும் பாஸ்கா ஒளியைச் சிந்திப்போம்.

1. படைப்பின் தொடக்க ஒளி

தொடக்கநூலில் நாம் இரண்டு படைப்பு நிகழ்வுகளை வாசிக்கின்றோம். தொநூ 1ன்படி, வெறுமையாய் இருந்த, தண்ணீர் சூழ்ந்த ஓரிடத்திலிருந்து பூமி ஒளியை நோக்கி எழுகிறது. தொநூ 2ன்படி மண்ணுலகு மழை பெய்யாத பாலைநிலம் போல இருக்கிறது. இவை ஒன்றோடொன்று முரண்பட்டது என நினைக்காமல், இரண்டையும் இணைத்துப் பார்ப்போம். இம்மண்ணுலகு இவ்விரண்டு அனுபவங்களுக்கும் உட்பட்டதாகவே இருக்கிறது. சில நேரங்களில் மழை பொழிந்து வெள்ளமாக நிறைக்கிறது. சில நேரங்களில் ஒன்றும் இல்லாமல் காய்ந்து பாலையாக வறண்டு கிடக்கிறது. படைப்பு நிகழ்வு நடக்கும்போது முன்னிருப்பது மறைகிறது. அதுதான் படைப்பு. முன்னிருந்த இருள் மறைகிறது. முன்னிருந்த வறட்சி மறைகிறது.

இன்றைய முதல் வாசகம் ஒளி தோன்றுவதற்கு முன் உலகம் இருந்த நிலையை மூன்று அடைமொழிகளால் சொல்கிறது: 'உருவற்று இருந்தது,' 'வெறுமையாய் இருந்தது,' 'இருள் சூழ்ந்திருந்தது.' உருவம் அல்லது வடிவம் என்பது ஒரு பொருளுக்கு அழகு தருகிறது. அதனால் தான், 'வடிவு' என்றால் 'அழகு' என்று தமிழ் பொருள்கிறது. உருவற்ற நிலை என்பது அழகற்ற நிலை. அழுகு என்றால் என்ன? 'அழகு என்றால் தன்னிலேயே முழுமை பெற்றிருப்பதும், மற்றதோடு இசைவாகப் பொருந்துவதும்' என்கிறார் அகுஸ்தினார். அவரே உதாரணமும் தருகின்றார். ஒருவர் ஒரு ஷூ அணிந்திருக்கிறார். அது அவருக்கு 'அழகாயிருக்கிறது' என்று நாம் எப்போது சொல்கிறோம்? அந்த காலணி தன்னிலேயே முழுமை பெற்றிருக்க வேண்டும். அதே வேளையில் அது அணிபவரின் காலோடு பொருந்த வேண்டும். காலணியின் மேற்பகுதி இல்லாமல் இருந்தாலோ, அல்லது கிழிந்திருந்தாலோ, அல்லது அணிபவரின் காலுக்குப் பொருந்தாமல் பெரியதாக இருந்தாலோ நாம் அதை அழகு என்று சொல்வதில்லை. நாம் அன்றாடம் அழகு என்று வர்ணிக்கும் பொருள்கள் அல்லது நபரும் அப்படித்தான். ஒரு பெண்ணோ, ஃபோனோ அழகாக இருக்கிறார்-இருக்கிறது என்று சொல்லும்போது, அங்கே இருக்கிற முழுமையையும், அதன் பொருத்தத்தையும் வைத்தே சொல்கிறோம். மண்ணுலகில் எதுவும் நிறைவாகவும் இல்லை, பொருத்தமாகவும் இல்லை. இரண்டாவதாக, 'வெறுமை' இருந்தது. 'வெறுமை' என்பது 'யாதுமற்ற நிலை.' கடவுளால் மட்டும்தான் வெறுமையிலிருந்து படைக்க முடியும். ஒரு கவிதை எழுதுபவரை படைப்பாளி என்கிறோம். ஆனால், அவர் உருவாக்கிய கவிதை அவருடையது என்றாலும், அவர் பயன்படுத்தும் வார்த்தைகளை அவர் உருவாக்கவில்லையே. ஏற்கனவே இருந்த ஒன்றிலிருந்துதான் அவர் மற்றொன்றை உருவாக்குகிறார். 'யாதுமற்ற நிலையை' இன்று நம்மால் எண்ணிப்பார்க்க முடியாது. அப்படிப்பட்ட எண்ணத்திற்கு உட்படாத ஒன்றே வெறுமை. மூன்றாவதாக, 'ஆழத்தின்மேல் இருள் பரவியிருந்தது.' ஒளி செல்ல முடியாத இடமே ஆழம். அப்படிப்பட்ட ஆழத்தில் இன்னும் இருள் இருந்தால் எவ்வளவு இருளாயிருக்கும். அந்த இடத்தின் குளிர்ச்சியில் உயிர் எழுதலும் வளர்தலும் சாத்தியமில்லாமல் இருக்கும்.

உருவற்ற நிலை, வெறுமை, இருள் இம்மூன்றும் இஸ்ரயேல் மக்கள் பாபிலோனியாவில் அடிமைப்பட்டுக்கிடந்தபோது அவர்கள் அனுபவித்த அனுபவங்களே. இவ்வனுபவங்களையே அவர்கள் உருவகமாக படைப்பு நிகழ்வில் பதிவு செய்கின்றனர். இஸ்ரயேல் என்ற உருவை அவர்கள் இழந்தார்கள். ஓய்வுநாள், சட்டம், கடவுள், ஆலயம், நகரம் என்று எதுவும் இல்லாமல் வெறுமையாக இருந்தனர். அந்நிய நாட்டில் மொழி புரியாத இடத்தில் ஊமையாய், உயிரற்ற இருந்தனர்.

இந்தப் பின்புலத்தில், 'கடவுள் ஒளி தோன்றுக' என்கிறார். அவர் சொல்லும்போதே ஒளி தோன்றுகிறது. அழகு பிறக்கிறது. வெறுமை மறைகிறது. இருள் அகல்கிறது. உயிர் வளர்கிறது.

2. விடுதலைப் பயண நெருப்புத் தூண் ஒளி

'ஒளி' என்ற அடையாளம் விடுதலைப் பயண நூலின் தொடக்கம், நடு, இறுதி என மூன்று இடங்களில் முதன்மையாக நிற்கிறது. நூலின் தொடக்கத்தில், கடவுள் இஸ்ரயேல் மக்களின் கூக்குரலைக் கேட்டு இறங்கி வந்த, மோசேயை எகிப்திற்கு அனுப்பும் நிகழ்வில் 'எரியும் முட்புதரை' பார்க்கிறோம்: 'அப்போது ஆண்டவரின் தூதர் ஒரு முட்புதரின் நடுவே தீப்பிழம்பில் அவருக்குத் தோன்றினார். அவர் பார்த்தபோது முட்புதர் நெருப்பால் எரிந்துகொண்டிருந்தது. ஆனால் அம்முட்புதர் தீய்ந்துபோகவில்லை' (விப 3:2). நூலின் இறுதியில், 'மேகம் சந்திப்புக் கூடாரத்தை மூடிற்று. ஆண்டவரின் மாட்சி திருஉறைவிடத்தை நிரப்பிற்று ... பகலில் ஆண்டவரின் மேகம் இருப்பதையும் இரவிலோ அதில் நெருப்பு இருப்பதையும் இஸ்ரயேல் வீட்டார் கண்டார்கள்' (காண். விப 40:34, 38). நூலின் நடுவில் இன்றைய வாசகத்தில், ஆண்டவராகிய கடவுள் 'நெருப்புத்தூணாக' இஸ்ரயேல் மக்களோடு வழிநடக்கின்றார். மேலும், இந்நெருப்பு பகைவர்களிடமிருந்து இஸ்ரயேல் மக்களைக் காப்பாற்றும் அரணாக, வேலியாக இருக்கின்றது.

கடவுள் ஒளியைத் தேர்ந்துகொண்டதன் நோக்கம் என்ன? அவர் ஒரு தூதராகவோ, ஒரு நபராகவோ, ஒரு வாளாகவோ உடன் வந்திருக்கலாமே? 'ஒளி' அடிமைகளின் வாழ்வில் மிக முக்கியமானது. பண்டைக்காலத்தில் 'ஒளி' என்பது எல்லாருடைய பயன்பாட்டில் இருந்தாலும், 'ஒளி' என்பது அரண்மனையை அலங்கரிக்கக் கூடியதாகவும், 'இருள்' என்பது அடிமைகளின் வீடுகளை அலங்கரிக்கக்கூடியதாகவும் இருந்தது. நம் ஊரிலேயே பாருங்களேன். இருபது ஆண்டுகளுக்கு முன் 'ஒளி' என்பது ஏழைகளின் வீட்டின் அடுப்பில் இருக்குமே தவிர, அவர்களின் வீட்டின் கூரையில் இருக்காது. 'மின் ஒளி' வந்ததும்தான் நம் ஊரில் சமத்துவம் வந்தது. கடவுள் எகிப்தியரின் மேல் கொண்டுவந்த பத்து வாதைகளில் தலைப்பேறு இறப்பதற்கு முந்தையதாக, ஒன்பதாவது கொள்ளை நோயாக, அதிகம் துன்பம் தருவதாக எகிப்தியரை வாட்டுவது 'மூன்று நாள் காரிருள்.' இருளில் இயக்கம் இருப்பதில்லை (தாயின் கருவறையின் இருள் விதிவிலக்கு). தொடர்ந்து, ஏறக்குறைய இருபத்து நான்கு இலட்சம் பேர் (ஆறு லட்சம் என்பது சிலரின் கருத்து) எகிப்திலிருந்து வெளியேறுகின்றனர். இவ்வளவு பேருக்கும் ஒரே நேரத்தில் தெரியக்கூடியதாக இருக்கின்ற ஒரு அடையாளம் மேகமும் நெருப்பும் தூணும்தான். ஆக, இங்கே ஒளி என்பது கடவுள் தருகின்ற பாதுகாப்பாகவும், உடனிருப்பாகவும் இருக்கின்றது.

ஆக, பாதுகாப்பற்ற இஸ்ரயேல் மக்களுக்கு பாதுகாப்பு தருகிறது நெருப்புத் தூண். அவர்களோடு பயணத்திலும், பாளையத்திலும் உடனிருக்கிறது நெருப்புத் தூண்.

3. வாரத்தின் முதல் நாளில் கதிரவனின் ஒளி

லூக்கா நற்செய்தியாளரின் பதிவின் படி கல்லறைக்குச் செல்பவர்கள் பெண்கள். இவர்கள் நறுமணப் பொருள்களோடு - அதாவது, அடக்கச் சடங்கின் நிறைவிற்காக - செல்கின்றனர். இவர்கள் மூன்று அதிர்ச்சிகளை எதிர்கொள்கின்றனர்: 'கல்லறை வாயிலிலிருந்த கல் புரட்டப்பட்டுள்ளது,' 'ஆண்டவர் இயேசுவின் உடலைக் காணவில்லை,' 'மின்னலைப் போன்ற ஒளிவீசும் ஆடை அணிந்த இருவர் தோன்றுகின்றனர்.' முதலில் 'விடியல்-கதிரவன்' என்று சொன்ன லூக்கா, 'மின்னல்' என்ற இன்னொரு ஒளியையும் பதிவு செய்கின்றார். 'அவர் இங்கு இல்லை' என்று சொல்கின்றனர் அந்த இரண்டு பேரும். மேலும், மறைநூலை அப்பெண்களுக்கு நினைவூட்டுகின்றனர் அவர்கள். பெண்களும் சென்று பதினொருவருக்கு அறிவிக்கின்றனர். ஆனால், திருத்தூதர்கள் பெண்கள் வார்த்தைகளை, 'பிதற்றல்கள்' என எடுத்துக்கொண்டதால் நம்பவில்லை. மேலும், கல்லறைக்கு ஓடிவரும் பேதுரு, இயேசுவின் உடலைச் சுற்றியிருந்த துணிகளை மட்டும் பார்த்துவிட்டு, தமக்குள் வியப்புற்றவராக வீடு திரும்புகின்றார்.

ஆக, வெளியில் இருந்த கதிரவனும், மின்னலின் ஒளியும் பெண்களையும், திருத்தூதர்களையும் பாதிக்கவில்லை. இந்த இடத்தில்தான் அகுஸ்தினார், 'கல்லறையின் கல் புரட்டப்பட்டது இயேசுவை வெளியேற்ற அல்ல. மாறாக, சீடர்களை உள்ளே அனுப்பவே!' என்கிறார். கல்லறைக்கு உள்ளே அடித்த வெயில் திருத்தூதர்களின் உள்ளத்தில் அடிக்கவேயில்லை. யோவான் மட்டுமே, 'கண்டார், நம்பினார்' எனப் பதிவு செய்கின்றார்.

சீடர்கள் உடனடியாக நம்பவில்லை என்றாலும், அவர்களின் உள்ளத்தில் அந்த அதிகாலை ஒளி பல நல்ல உணர்வுகளை எழுப்புகிறது. அடக்கச் சடங்கிற்கு சென்றவர்கள் உடல் இல்லாமல் வியப்புறுகின்றனர். கல் மூடியிருக்கும் என நினைத்தவர்களுக்கு கல்லறை திறந்து கிடக்கிறது. அசாதாரண நிகழ்வுகள் நடக்கின்றன. சாதாரண கதிரவன் தோன்றும் நிகழ்வு அவர்களுடைய வாழ்வில் அசாதாரணங்களுக்கு அவர்களின் கண்களைத் திறக்கிறது.

4. பாஸ்கா திரி ஒளி

படைப்பின் ஒளி, விடுதலைப் பயண நெருப்புத் தூண் ஒளி, விடியற்காலை கதிரவன் ஒளி என்ற மூன்று ஒளியையும் நமக்கு நினைவுபடுத்துவது இப்போது நாம் ஏந்தி நிற்கும் பாஸ்கா திரியின் ஒளி. 'பாஸ்கா' என்றால் 'கடத்தல்.' படைப்பு இருளைக் கடந்த இந்த இரவில், இறைவன் இஸ்ரயேல் மக்களைக் கடத்திய இந்த இரவில், இயேசு இறப்பைக் கடந்த இந்த இரவில் நாமும் பாஸ்கா திரியின் ஒளியோடு இரவைக் கடந்துகொண்டிருக்கிறோம்.

பாஸ்கா திரியைப் புனிதப்படுத்தும் செபத்தில் அருள்பணியாளர், 'காலங்கள் அவருடையன, யுகங்களும் அவருடையன' என்கிறார். ஒளியால் காலத்தைப் பிரித்த கடவுள் ஒவ்வொன்றையும் அதனதன் நேரத்தில் செம்மையாகச் செய்துமுடிக்கிறார் (காண். சஉ 3:11).

இந்த பாஸ்காத் திரி நமக்குக் கொடுக்கும் பாடங்கள் மூன்று:

1. ஒளி வாழ்வின் உருவகம்

இருளாய் இருந்த திரி ஒளி பெறுகிறது. தொடர்ந்து எரியும் திரி ஒரு கட்டத்தில் இல்லாமல் இருளுக்குள் மறைந்துவிடும். ஆனால், இருக்கும் ஒவ்வொரு பொழுதும் அது தானும் ஒளிர்ந்து மற்றவர்களையும் ஒளிர்விக்கிறது. ஆக, ஒளி எப்போதும் இருக்கும் என்ற நம்பிக்கையைத் தரவில்லை பாஸ்கா. ஏனெனில், பாலைவனத்தில் இஸ்ரயேல் மக்களை ஒளிர்வித்த ஒளி, பாபிலோனியாவுக்கு நாடுகடத்தப்பட்டபோது இருண்டது. ஆனால், மீண்டும் 'ஒளி உண்டாயிற்று.'ஆக, ஒளியும், இருளும், கதிரவனும், நிலவும், பகலும், இரவும் மாறி மாறி வரக்கூடியவை. இன்று சிலுவை என்றால், நாளை உயிர்ப்பு. நாளை மறுநாள் மீண்டும் சிலுவை வரலாம். ஆனால், அடுத்த நாள் உயிர்ப்பு வரும் என்பதுதான் ஒளி தருகின்ற நம்பிக்கை. இதையே தான் சபை உரையாளரும், 'ஒளி மகிழ்ச்சியூட்டும். கதிரவனைக் கண்டு கண்கள் களிக்கும். மனிதன் எத்தனை ஆண்டுகள் வாழ்ந்தாலும் அவன் தன் வாழ்நாளெல்லாம் மகிழ்ச்சியுடன் இருக்கட்டும். இருள்சூழ்ந்த நாள்கள் பல இருக்கும் என்பதை அவன் மறக்கலாகாது' (காண். சஉ 11:7-8) என்கிறார். 2. ஒளியும் சார்பு நிலையும்

மெழுகுதிரியின் ஒளியோ, எண்ணெய் விளக்கின் ஒளியோ தானாகவே ஒளிர்வதில்லை. திரி மெழுகோடு அல்லது எண்ணையோடு கொண்டுள்ள சார்பு நிலையில்தான் ஒளி பிறக்கிறது. ஆக, நம் வாழ்வு ஒளிர்வதும் அவர்மீதுள்ள சார்புநிலையில்தான். ஒளிக்கு அருகில் வரும் அனைத்தும் ஒளி பெற்றுவிடுகிறது. ஒளியைச் சார்ந்து நிற்கும் அனைத்தும் ஒளிர்கிறது. இதையே யோவான், 'தீங்கு செய்யும் அனைவரும் ஒளியை வெறுக்கின்றனர். தங்கள் தீச்செயல்கள் வெளியாகிவிடும் என அஞ்சி அவர்கள் ஒளியிடம் வருவதில்லை' (காண். யோவா 3:20). ஆக, தாவீதின் மன்றாட்டு போல இன்று நம் மன்றாட்டு இருக்கட்டும்: 'ஆண்டவரே, நீர் என் விளக்குக்கு ஒளியேற்றுகின்றீர். என் கடவுளே, நீர் என் இருளை ஒளிமயமாக்குகின்றீர்' (காண். திபா 18:28). 3. திரியின் தோற்றம் அல்ல, ஒளியே முக்கியம்

இயேசு என்ற திரியின் தோற்றம் கண்டு அவரைத் தீர்ப்பிட்டனர் அவருடைய எதிரிகள். மெழுகுதிரியின் உயரம், தடிமன், வடிவம், நிறம் எதுவும் ஒளியைப் பாதிப்பதில்லை. மேலும், மெழுகுதிரி ஒரு அலங்காரப் பொருள் அல்ல. மேலும், தன்னைச் சுற்றி எவ்வளவு இருள் இருக்கிறது என்று மெழுகுதிரி பயப்படத் தேவையில்லை. ஏனெனில், அதிகமான இருளின்தான் அது அதிக ஒளியுடன் எரியும். ஒளி எரியும்போது தன்னையே இழக்க நேரிடும். ஆனால், அந்த ஒளி மனிதர் முன் ஒளிரும்போது 'மற்றவர்கள் நம் நற்செயல்களைக் கண்டு விண்ணகத் தந்தையைப் போற்றிப் புகழ்வார்கள்' (காண். மத் 5:16). அல்லது பவுலின் வார்த்தைகளில், 'தூங்குகிறவனே, விழித்தெழு. இறந்தவனே, உயிர்பெற்றெழு. கிறிஸ்து உன்மீது ஒளிர்ந்தெழுவார்' (காண். எபே 5:14).

இறுதியாக,

'இருளிலிருந்து ஒளி தோன்றுக!' என்று சொன்ன கடவுளே நம் உள்ளங்களில் அவருடைய ஒளியை வீசச் செய்தார் (காண். 2 கொரி 4:6). இந்த ஒளியால் ஒளிபெற்ற நாம் 'உலகில் ஒளிரும் சுடர்களாகத் திகழ' (காண். பிலி 2:16) இறைவன் அருள்கூர்வாராக.

அனைவருக்கும் உயிர்ப்பு பெருநாள் வாழ்த்துக்களும், மகிழ்ச்சியும், அமைதியும்!