இவ் மறையுரையை வழங்குபவர்

அருட்பணி.இயேசு கருணாநிதி
Archbishop’s House, K. Pudur, Madurai 625 007, India
Email: yesu@live.in

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)









ஆண்டவரின் திருப்பாடுகளின் கொண்டாட்டம்

இதோ மனிதன்!

எசாயா 52:13-53:12
எபிரேயர் 4:14-16, 5:7-9
யோவான் 18:1-19:42

இயேசு முள்முடியும் செந்நிற மேலுடையும் அணிந்தவராய் வெளியே வந்தார். பிலாத்து அவரிடம், 'இதோ! மனிதன்!' என்றான் அவரைக் கண்டதும் தலைமைக் குருக்களும் காவலர்களும், 'சிலுவையில் அறையும், சிலுவையில் அறையும்' என்று கத்தினார்கள்.

நவம்பர் 18, 1998 அன்று அமெரிக்க ஐக்கிய நாடுகளின் லிங்கன் சென்டரில் வயலின் கச்சேரி ஒன்று நடந்தது. அதனால் என்ன? அரங்கம் என்றால் கச்சேரிகள் நடக்கத்தானே செய்யும். அன்றைய நாளில் வயலின் வாசிக்க இட்ஸாக் பெர்ல்மன் என்பவர் அழைக்கப்பட்டிருந்தார். இவர் பெரிய வயலின் இசைக் கலைஞர். ஆனால், போலியோ நோயினால் அவதியுற்றதால் மிகவும் சூம்பிய கால்களை உடையவர். கைத்தடிகள் இன்றி அவரால் நடக்க முடியாது. அரங்கமே நிறைந்த அன்று தன் கைத்தடிகளை ஊன்றி மேடைக்கு வந்தார் இட்ஸாக். அனைவரின் கண்களும் இவர்மேல் இருந்தன. சபையோரை வணங்கிவிட்டு வயலினைக் கையில் எடுத்த இவர் வாசிக்கத் தொடங்கினார். வாசிக்கத் தொடங்கிய நொடியில் வயலினின் நான்கு கம்பிகளில் ஒன்று அறுந்து தொங்கியது. அரங்கம் சற்றென அதிர்கிறது. 'இவர் மறுபடியும் கைத்தடிகள் கொண்டு கீழே இறங்கி வந்து இதைச் சரி செய்து வாசிக்கத் தொடங்குவார்' என்று அவர்கள் எண்ணிக் கொண்டிருந்த வேளையில், ஒரு நொடியும் இடைவெளி இல்லாமல் வெறும் மூன்று கம்பிகளைக் கொண்டு நாற்பத்தைந்து நிமிடங்கள் தொடர்ந்து அழகாக வாசிக்கின்றார் இட்ஸாக். அரங்கமே எழுந்து நின்று அவரை வாழ்த்துகிறது. 'ஒரு கம்பி அறுந்தவுடன் நீங்கள் அதை மாற்றிவிட்டுத்தான் வாசிப்பீர்கள் என்று நாங்கள் நினைத்தோம்' என்கிறார் நிகழ்ச்சி தொகுப்பாளர். அதற்கு இட்ஸாக், 'நல்ல இசைக்கலைஞனின் இசை அவனுடைய கையில் இருக்கும் வீணையில் அல்ல. அவனிடம்தான் இருக்கிறது' என்றாராம்.

வயலினில் மூன்று நரம்புகள் இருந்தாலும் இனிமையாக வாசிக்க முடியும்!

குறை என்று அடுத்தவர்களின் கண்களுக்குப் படுவதையும் வைத்து நிறைவாக்க முடியும்!

இதுதான் இன்று நாம் கொண்டாடும் சிலுவையின் செய்தி.

'இவர் இறங்கி வந்து கம்பியை மாற்றிவிட்டுத்தான்' என்று நினைத்தவர்கள் நடுவில் தொடர்ந்து வாசித்த இட்ஸாக் போல, 'இவர் இறங்கி வந்தால்தான் நாங்கள் இவரை நம்புவோம்' என்று எண்ணிய மக்கள் நடுவில், சிலுவையில் மூன்று ஆணிகளில் தொங்கி இந்த உலகம் இன்று அனுபவிக்கும் மீட்பு என்னும் இசையைத் தந்தவர் இயேசு.

'இதோ! மனிதன்!'

- இப்படித்தான் இயேசுவை மக்களுக்கு அறிமுகம் செய்கின்றான் பிலாத்து.

'இதோ! கன்னி கருவுற்று ஒரு மகனைப் பெறுவார்!' 'இதோ! இயேசு!' 'இதோ! இறைமகன்!' 'இதோ! மெசியா!' 'இதோ! மீட்பர்!' என்று இயேசுவின் வாழ்விலும் பணியிலும் அவரைப் பற்றி மக்கள் சொன்ன தலைப்புக்கள் எல்லாம் மறைந்து போயின. இறுதியாக, 'இதோ! மனிதன்' என்ற பிலாத்துவின் அழைப்புதான் நிலைத்து நிற்கிறது.

'இதோ! மனிதன்'

யார் இந்த மனிதன்? இவரே துன்புறும் ஊழியன். இவரே நம் தலைமைக் குரு. இவரே யூதர்களின் அரசன். இவரே சிலுவையில் அறையப்பட்டவர்.

'இதோ! மனிதன்'

இன்று நாம் யாரையாவது இப் பெயர் கொண்டு அழைத்திருக்கிறோமா?

நாம் பார்க்கும் சினிமாவில் 'இதோ! அந்த நடிகன்!' என்கிறோம். அரசியலில், 'இதோ! அத்தலைவன்' என்கிறோம். விளையாட்டில், 'இதோ! பேட்ஸ்மேன்!' என்கிறோம். 'இதோ! என் தாய்!' 'இதோ! என் மகள்!' 'இதோ! என் அப்பா!' 'இதோ! ஒரு சிறைக்கைதி!' 'இதோ! இறந்தவர்!' 'இதோ! ஒரு நோயாளி!' 'இதோ! ஒரு குடிகாரர்!' 'இதோ! ஓர் ஏழை!' 'இதோ! ஆட்டோக்காரர்!' 'இதோ! தமிழர்!' 'இதோ! ஆடு!' என்று நாம் ஒருவருடைய இருப்பு, இறப்பு, உறவு, வேலை, இனம், பாலினம் போன்ற அடையாளங்களை வைத்து நாம் மனிதர்களையும் விலங்குகளையும் அழைக்கின்றோம்.

ஆனால், அடையாளங்கள் அகற்றப்பட்ட ஒருவன், நிர்வாணமாய் நிற்கும் ஒருவன், தனக்குப் பொருந்தாத முள்முடியையும், செந்நிற மேலுடையையும் அணிந்தவன் தான் மனிதன் என்கிறது இன்றைய நற்செய்தி வாசகம்.

'இதோ! மனிதன்!'

இவனை நாம் இன்று எங்கும் பார்க்கலாம்: தன் குழந்தைக்குப் பால் வாங்க முடியவில்லை என்று தவிக்கும் தாயின் தவிப்பில், இந்த ஆண்டு குழந்தைக்கு படிக்க இடம் கிடைக்குமா, பெண்ணுக்கு கல்யாணம் நடக்குமா, மகனுக்கு வேலை கிடைக்குமா என்று ஏங்கும் தந்தையின் தவிப்பில், பேருந்துக்குப் பணம் இல்லாமல் நடந்தே செல்லும் பயணியின் கால்களில், நீதி கிடைக்கும் வரை போராடும் போராளியில், தான் அடக்கப்பட்டாலும் எழுந்து நிற்கும் ஊமை மனிதரில், நம் தனிமையில், நம் நோயில், நம் வெறுமையில், மற்றவர்கள் நம்மை விமர்சிக்க நாம் சோர்ந்து விழும் நேரத்தில், தெருமுனைகளில், இரவின் நீண்ட பயணங்களில், நாட்டின் எல்கைகளில் இருக்கின்றான் இந்த மனிதன்.

ஆக, தன் வாழ்வில் முரண்களை அனுபவிக்கின்ற, உறுதியற்ற தன்மையை அனுபவிக்கின்ற, நொறுங்குநிலையை அனுபவிக்கின்ற எல்லாருமே 'இதோ! மனிதன்' என்று சொல்லப்படுபவர்களே.

இதையொத்த ஒரு சொல்லாடலை நாம் தொடக்கநூலில் பார்க்கின்றோம். ஆண்டவராகிய கடவுள் தாம் மனிதனிடமிருந்து எடுத்த விலா எலும்பை ஒரு பெண்ணாகச் செய்து மனிதனிடம் அழைத்து வரும்போது மனிதன், 'இதோ! இவளே என் எலும்பின் எலும்பும் சதையின் சதையும் ஆனவள். மனிதனிடமிருந்து எடுக்கப்பட்டதால் மனுஷி என அழைக்கப்படுவாள்' என்கிறார் (காண். தொநூ 1:22-23). பெண்ணைக் கண்ட மனிதன், 'இதோ! மனுஷி!' என்கிறாள்.

'இதோ! மனிதன்' என்று பிலாத்து சொல்லும்போது, அவன் இதுவரை இயேசுவைப் பற்றிக் கேள்வியுற்ற அனைத்து அடையாளங்களையும் - 'இறைமகன்,' 'யூதர்களின் அரசன்,' 'மெசியா,' 'மானிட மகன்,' 'மீட்பர்' என்ற எல்லா அடையாளங்களையும் அகற்றி, 'இதோ! நிர்வாணம்!' 'இதோ! மனிதன்!' என்கிறான்.

இப்படிப்பட்ட ஒரு மனிதனைத்தான் இன்றைய முதல் வாசகத்தில் (காண். எசா 52:13-53:12) நாம் பார்க்கிறோம். 'துன்புறும் ஊழியன்' பாடல் அல்லது 'நான்காவது பணியாளன் பாடல்' என்றழைக்கப்படும் இப்பாடல், நேர்மையாளர் ஒருவர் நேர்மையற்றவரின் கைகளில் அனுபவிக்கும் துயரங்களை எடுத்துரைக்கிறது. எசாயாவின் வாசகர்களைப் பொறுத்தவரையில் இப்பகுதி இஸ்ரயேல் மக்களையே குறித்தது. ஆனால், யூத நம்பிக்கையில் மிகவும் தேர்ந்திருந்த நற்செய்தியாளர்கள் (குறிப்பாக, யோவான்) இப்பகுதியை இயேசுவுக்குப் பொருத்தி எழுதுகின்றனர். இன்றைய நற்செய்தி வாசகத்தில் - பாடுகளின் வரலாற்றில் - நாம் வாசித்த பல சொல்லாடல்களை நாம் இங்கே பார்க்கின்றோம்: 'நாம் பார்ப்பதற்கேற்ற அமைப்போ அவருக்கில்லை. நாம் விரும்பத்தக்க தோற்றமும் அவருக்கில்லை. அவர் இகழப்பட்டார். மனிதரால் புறக்கணிக்கப்பட்டார். வேதனையுற்ற மனிதராய் இருந்தார். இழிவுபடுத்தப்பட்டார். நம் பிணிகளைத் தாங்கிக் கொண்டார். நம் துன்பங்களைச் சுமந்துகொண்டார் ... ஒடுக்கப்பட்டார். சிறுமைப்படுத்தப்பட்டார். ஆயினும் அவர் வாய் திறக்கவில்லை. கைது செய்யப்பட்டு, தீ;ர்ப்பிடப்பட்டு, இழுத்துச் செல்லப்பட்டார். கொலையுண்டார். வன்செயல் யாவும் அவர் செய்ததில்லை.'

எசாயா இறைவாக்குப் பகுதியில் நாம் சந்திக்கும் இந்த மனிதன் முழுக்க முழுக்க மற்றவர்களின் கையில் இருக்கிறார். அதாவது, இவருக்கென்று எந்த விருப்பு வெறுப்பும் இல்லை. இவராக எந்த முடிவும் எடுக்க முடியாது. இவர் எதுவும் பேசவில்லை.

இன்றைய இரண்டாம் வாசகத்தில் (காண். எபி 4:14-16, 5:7-9) இயேசுவின் இரண்டு முகங்களைக் காண்கிறோம்: ஒரு முகம் நம் பக்கம் திரும்பி நமக்கு இரக்கம் காட்டுவதாக, நம் வலுவின்மையில் பங்கேற்பதாக இருக்கிறது. மறுபக்கம், கடவுளிடம் திரும்பி அவரை நோக்கிக் கண்ணீர் எழுப்புவதாக, அவரிடம் மன்றாடி வேண்டுவதாக, இறுதியில், இருப்பதை அப்படியே ஏற்றுக்கொள்வதாக இருக்கிறது.

இன்றைய நற்செய்தி வாசகம், மகிமையின் அல்லது மாட்சிமையின் நூல் என்று சொல்லப்படும் யோவான் நற்செய்தியின் இறுதியிலிருந்து எடுக்கப்படுகிறது. பிலாத்துவுக்கும் இயேசுவுக்குமான உரையாடலை மிக நீண்டதாகப் பதிவு செய்பவர் யோவான் மட்டுமே. யோவானின் பிலாத்து மதில்மேல் பூனையாக, உள்ளும் வெளியும் ஆடும் கதவாக மக்களுக்கும் இயேசுவுக்கும் இடையே ஓடிக்கொண்டே இருக்கிறார். 'உள்ளே' 'வெளியே' என்று நிகழும் கதையமைப்பின் மையமாக இருப்பது, 'இதோ! மனிதன்' என்ற பிலாத்துவின் வார்த்தைகள்தாம். பல நேரங்களில் நாம் இயேசுவை, 'இதோ! கடவுள்' என்று நினைப்பதிலேயே மும்முரமாய் இருப்பதால் இயேசுவின் இந்த முகம் நமக்கு அரிதாக இருக்கிறது. பசியற்றவராக, எல்லாவற்றையும் தாங்கிக் கொள்பவராக, அவமானத்தைப் பொறுத்துக்கொள்பவராக, நோயற்றவராக இயேசுவை நாம் நினைத்து அவரைக் கடவுளாக கொண்டாடுவது மிக எளிதானது. ஆனால், நாம் இப்படிச் செய்யும்போதெல்லாம் அவரை நாம் நம்மிடமிருந்து அந்நியப்படுத்திவிடுகின்றோம். ஆனால், இயேசு நம்மை மீட்கக் காரணமாக இருந்தது அவருடைய 'மனிதன்' நிலையே.

தன்னுடைய நற்செய்தியின் தொடக்கத்தில், 'வாக்கு மனிதர் ஆனார். நம்மிடையே குடிகொண்டார்' (காண். யோவா 1:14) என்று தான் சொன்ன வார்த்தைகளை வைத்தே, 'இதோ! மனிதன்' என்று தன் நற்செய்தியை நிறைவுசெய்கின்றார் யோவான்.

'இதோ! மனிதன்!' என்று சொன்ன பிலாத்துவின் வார்த்தைகளில் அங்கு கூடியிருந்த ஒவ்வொருவரும், தங்களின் பிரதிபலிப்பைப் பார்த்தார்கள். தங்களின் அவமானத்தைப் பார்த்தார்கள். தங்களின் அப்பா, அம்மா, அண்ணன், தம்பி, நண்பன், நண்பி, துரோகி என தாங்கள் வாழ்வில் சந்தித்த அனைவரையும் அந்த நொடியில் பார்த்தார்கள். தாங்கள் தங்களையே பார்த்தது அறுவறுப்பாக இருந்ததால்தான், 'சிலுவையில் அறையும் சிலுவையில் அறையும்' என்று கத்துகிறார்கள்.

தொடக்கநூலில் போல, கனியை உண்டு பாவம் செய்த ஆதாமும் ஏவாளும், 'இதோ! மனிதன்!' 'இதோ! மனுஷி!' என்று தங்களைத் தாங்களே பார்த்ததால்தான் மரத்தின் பின்னால் தாங்களே தங்களைக் கொண்டு போய் அறைந்துகொள்கிறார்கள்.

இன்று இயேசு தருகின்ற ஒற்றை வாழ்க்கைப்பாடம் இதுதான்: 'இதோ! மனிதன்' என்று நம்மையே ஏற்றுக்கொள்வது.

'இதோ! மனிதன்' என்று தங்களையே ஏற்றுக்கொள்ளாததால்தான் முதல் மனிதனும் மனுஷியும், 'கடவுளைப் போல ஆக விரும்பிக்' கனியை உண்ணக் கைநீட்டுகின்றனர்.

'இதோ! மனிதன்!' - இந்த மனிதன் எப்படிப்பட்டவன்?

இவன் அவமானத்திற்கு உள்ளாவான். அதே போல இவன் 'இளந்தளிர் போல ஆண்டவர் திருமுன் வளர்வான்.'

இவன் கூக்குரலிட்டு அழுவான். இவன் இரக்கத்தையும் காட்டுவான்.

இவன் சிலுவையில் இறப்பான். இவன் மூன்றாம் நாளில் உயிர்ப்பான்.

இவன் தன் சகோதரர்களால் விற்கப்படுவான். இவன் ஆளுநராக மாறி அவர்கள் எல்லாருக்கும் உணவளிப்பான்.

இவன் எகிப்தியனைக் கொல்வான். எகிப்து நாட்டிலிருந்து மக்களை அழைத்து வருவான்.

இவன் சிங்கத்தையும் கையால் பிளப்பான். யாரையும் எளிதாக நம்பி தன் ஆற்றலை இழப்பான்.

இவன் இன்னொருத்தியை மனைவியாக்கி அவளுடைய கணவனைக் கொல்வான். இவன் ஆண்டவருக்காக ஆலயம் கட்ட முற்படுவான்.

இவன் கடவுளிடம் ஞானம் கேட்பான். இவனே சிலைவழிபாடும் செய்வான்.

இவன் காட்டிக் கொடுப்பான். இவன் கண்ணீர் சிந்துவான்.

இவன் மூன்று முறை மறுதலிப்பான். இவனே மூன்று முறை, 'நான் உன்னை அன்பு செய்கிறேன்' என்பான்.

இவன் ஒரு முரண். சிலுவையைப் போல இவன் ஒரு முரண். நேராக நிமிர்வான். குறுக்காக படுத்துக்கொள்வான்.

இவனிடம் மூன்று கம்பிகளே இருந்தாலும் இவன் தன் வாழ்வை இனிய இசையாக்குவான்.

'இதோ! மனிதன்!' என்ற வெறுமையும் இவனுக்குத் தெரியும்.

'இதோ! உன் தாய், இதோ! உன் மகன்' என்ற உரிமையும் இவனுக்குத் தெரியும்.

வாழ்வின் முரண்களில் தெரியும், வாழ்வின் வெறுமையில் தெரியும், வாழ்வின் வெற்றியில் தெரியும் இவன் விமர்சனம் செய்யப்பட வேண்டியவன் அல்லன். இவன் கொண்டாடப்பட வேண்டியவன்.

ஏனெனில்,

'இதோ! மனிதன்!'

ஆக, நம் வீட்டில் இன்று நம் குழந்தைகள் தவறு செய்தால், 'இதோ! மனிதன் - கடவுள் இல்லையே!', நண்பன் துரோகம் செய்தால், 'இதோ! மனிதன் - கடவுள் இல்லையே,' என்ன நிலையில் யார் இருந்தாலும், 'இதோ! மனிதன்' என்ற நாம் ஏற்றுக்கொண்டால் நம் வாழ்வில் விரக்திகளாவது குறையும்.

கடவுளைப் போல இருக்க நினைத்து பாவம் செய்து மரத்தின் பின்னால் ஒளிந்தவர்களை, மனிதர்களைப் போல இருப்பதும் நல்லது என்று சொல்ல மரத்தின் முன்னால் தன்னை அறைந்துகொள்கிறார் 'இந்த மனிதன் இயேசு!'