இவ் மறையுரையை வழங்குபவர்

அருட்பணி.இயேசு கருணாநிதி
Archbishop’s House, K. Pudur, Madurai 625 007, India
Email: yesu@live.in

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)









கிறிஸ்து பிறப்பு பெருவிழா (நள்ளிரவுத் திருப்பலி)

இதுவே உங்களுக்கு அடையாளம்

எசாயா 9:2-7
தீத்து 2:11-14
லூக்கா 2:1-14

இன்றைய ஜிபிஎஸ் கட்டுப்படுத்தும் உலகில் நாம் ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்குச் செல்ல ஒரு ஓலா அல்லது ஊபர் டாக்ஸி பதிவு செய்தாலோ, அல்லது ஸ்விக்கி, ஸ்ஸேமாட்டோ போன்ற உணவு கொணரும் செயலிகளில் உணவு பதிவு செய்தாலோ, அவர்கள் கேட்கும் சில கேள்விகளுள் ஒன்று: 'உங்கள் இருப்பிடத்திற்கான அடையாளம் (லேன்ட்மார்க்) என்ன?' அடையாளங்கள் அல்லது லேன்ட்மார்க்குகள் பெரும்பாலும் பெரியனவையாகவே இருக்கின்றன - பலரும் வந்து போகும் வங்கி, குழந்தைகள் படிக்கும் பள்ளி, ரவுண்டானா வலது புறம், ஆஞ்சநேயர் கோவில், மருத்துவனை பின்புறம் என நாம் நம் அடையாளங்களை வரையறுத்துக்கொள்கின்றோம். அல்லது இந்த அடையாளங்களே நம்மை வரையறை செய்ய நாம் அனுமதித்துவிடுகின்றோம். அடையாளங்கள் இல்லாமல் நம்மால் வாழ முடிவதில்லை. ஃபோனில் 'லோ பேட்டரி' என்ற எச்சரிக்கை வந்தால், அது ஃபோன் அணைந்து போவதற்கான அடையாளம். வாட்ஸ்ஆப்பில் 'ஆன்லைன்' என வந்தால், அடுத்த நபர் இணைப்பில் இருக்கிறார் என்று அடையாளம். நம் தகவலுக்கு மேலே 'டைபிங்' என்று வந்தால், அவர் உரையாடலைத் தயாரித்துக் கொண்டிருக்கின்றார் என்று அடையாளம். கதவில் பூட்டு தொங்கினால் 'வீட்டில் யாரும் இல்லை' என்று அடையாளம். 'கறுப்பு' சோகத்திற்கான அடையாளம். 'வெள்ளை' அமைதிக்கான அடையாளம். 'பச்சை' பசுமைக்கான அடையாளம். இப்படி அடையாளங்களை நாம் அடுக்கிக்கொண்N;ட போகலாம்.

ஆனால், இந்த அடையாளங்கள் அடையாளங்களே தவிர அவை தாங்கள் குறித்துக்காட்டுவதைச் செய்ய முடிவதில்லை. எடுத்துக்காட்டாக, சாலையில் சிகப்பு விளக்கு என்பது 'நில்' என்பதற்கான அடையாளம். 'நில்' என்பதற்கான அடையாளமாக அது இருக்கிறதே தவிர, அது ஒருபோதும் நம் வாகனத்தின் முன்னால் வந்து நின்று, 'போகாதே' என்று சொல்வதில்லை. 'தண்ணீர்' தூய்மையின் அடையாளம். ஆனால், அத்தண்ணீரை நாம் பயன்படுத்தினால்தான் தூய்மை ஆவோமே தவிர, வெறும் தண்ணீரை வைத்திருப்பதால் நமக்குத் தூய்மை வந்துவிடாது. 'பேட்டரி லோ' என்று நம் மொபைல் காட்டுமே தவிர, அதுவே சார்ஜரில் ஏறி உட்கார்ந்து தன்னைச் சார்ஜ் செய்து கொள்ளாது. நாம்தான் சார்ஜரில் போட வேண்டும். இவ்வாறாக, அடையாளங்கள் தங்களிலேயே வலுவற்றவை.

கிறிஸ்து பிறப்பு செய்தியை இடையர்களுக்கு அறிவிக்கும் வானதூதர், 'இன்று ஆண்டவராகிய மெசியா என்னும் மீட்பர் உங்களுக்காகத் தாவீதின் ஊரில் பிறந்திருக்கிறார். குழந்தையைத் துணிகளில் சுற்றித் தீவனத் தொட்டியில் கிடத்தியிருப்பதைக் காண்பீர்கள். இதுவே உங்களுக்கு அடையாளம்' (லூக் 1:11-12) என்கிறார். இதற்கு மேலும் ஒரு வார்த்தைகூட பேசவில்லை வானதூதர்.

பிறந்திருப்பவர் யார்? ஆண்டவராகிய மெசியா என்னும் மீட்பர்.

எங்கே? தாவீதின் ஊரில் (பெத்லகேம்)

என்ன அடையாளம்? 'குழந்தை' 'துணிகளில் சுற்றி' 'தீவனத் தொட்டியில் கிடத்தப்பட்டிருக்கும்'

ஒரு நட்சத்திரத்தைப் பார்த்துக்கொண்டே எருசலேம் வந்து சேர்ந்த ஞானியர்களின் அறிவு ஆடுகள் மேய்த்துக்கொண்டிருந்த இடையர்களுக்கு இருந்திருக்குமா? 'மெசியா' பற்றி புரிதல் இருந்திருக்குமா? 'தாவீதின் ஊர்' என்றால் 'பெத்லகேம்' என்று தெரிந்திருக்குமா? அந்த இரவில் எத்தனை குழந்தைகளை அவர்கள் தேட முடியும்? பெரியவர்கள் சிறியவர்கள் வீட்டின் கதவுகளை எளிதாகத் தட்ட முடியும். இவர்களோ சமூகத்தில் சிறியவர்கள். இவர்களால் எத்தனை பேர் வீட்டுக் கதவுகளைத் தட்ட முடியும்?

மரியாவுக்கு வானதூதர் கபிரியேல் இயேசுவின் பிறப்பை முன்னறிவித்தபோது, 'அவருக்கு இயேசு என்னும் பெயரிடுவீர். அவர் பெரியவராயிருப்பார். அவர் உன்னத கடவுளின் மகன் எனப்படுவார். அவருடைய தந்தை தாவீதின் அரியணையை ஆண்டவராகிய கடவுள் அவருக்கு அளிப்பார். அவருடைய ஆட்சிக்கு முடிவே இராது' (லூக் 1:31-32) என்று சொல்கிறார். ஆனால், அங்கே சொன்ன ஒரு வார்த்தைகூட இடையர்களுக்குச் சொல்லப்படவில்லை. வானதூதர்களுக்குள் கம்யூனிகேஷன் இடைவெளி இருந்ததா? ஒருவேளை இவ்வார்த்தைகள் எல்லாம் இடையர்களுக்குச் சொல்லப்பட்டால் அவர்கள் அலறி அடித்துக்கொண்டு ஓடியிருப்பார்கள்.

- 'இயேசு' என்று அங்கே பெயர் 'ஆண்டவர், மெசியா, மீட்பர்' என இங்கே தரப்படுகிறது.

- 'பெரியவராயிருப்பார்' என்று அங்கே சொல்லப்பட்டது, 'குழந்தை' என்று இங்கே சொல்லப்பட்டுள்ளது.

- 'தாவீதின் அரியணை' என்று அங்கே இருப்பது, 'தாவீதின் ஊர்' என்று இங்கே இருக்கிறது.

- 'கடவுளின் மகன்' என்று அங்கே சொல்லப்பட்டது, பாவத்தின் விளைவால் வந்த 'துணிகளால் சுற்றப்பட்டு' என்று இங்கே உள்ளது.

- 'அவர் ஆட்சி செய்வார்' என்று அங்கே இருப்பது, 'தீவனத் தொட்டியில் கிடத்தியிருப்பார்கள்' என்று இருக்கிறது.

வானதூதர் அங்கே மரியாவுக்கு முன்மொழிந்ததற்கும், இங்கே இடையர்களுக்கு முன்மொழிந்ததற்கும் ஏன் முரண்பாடு?

மேலோட்டாகப் பார்த்தால்தான் இவை முரண்பாடுகள். ஆனால், கொஞ்சம் ஆழமாகப் பார்த்தால் இங்கே அடையாளங்களாகச் சொல்லப்படுபவை அங்கே நேருக்கு நேராகச் சொல்லப்படுகின்றன. ஆக, மற்ற அடையாளங்களுக்கும் இயேசு என்ற அடையாளத்திற்கும் உள்ள வித்தியாசம் இதுதான். இந்த அடையாளம் தான் சுட்டிக்காட்டுவதை அப்படியே வாழும்.

எப்படி?

- 'இயேசு' என்றால் 'மீட்பர்' - 'பாவங்களிலிருந்து இவர் மீட்பார்;'

- 'குழந்தை' தன் வலுவின்மையில் 'பெரியவராகும்'

- 'தாவீதின் ஊரில்' இவர் சிலுவை என்னும் 'அரியணை ஏறுவார்'

- 'துணிகளால் சுற்றப்பட்ட' மனுக்குலத்தை தன் நிர்வாணத்தினால் மீட்டு 'கடவுளின் மகன்' என்ற நிலைக்கு உயர்த்துவார்.

- 'தீவனத் தொட்டியில்' பிறந்ததால் என்னவோ, தன் உணவு நிகழ்வுகள் வழியாக (உணவுப் பகிர்வு, உணவுப் பலுகச் செய்தல், விருந்துக் கொண்டாட்டங்கள், நற்கருணை) என உறவாடி, தன்னையே பிறருக்கான உணவாக வழங்குவார்.

இவைகள் இடையர்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. முதல் கிறிஸ்து பிறப்பு கொண்டாடப்பட்ட அன்றைய நாளில் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனாலும், வானதூதர்களின் வார்த்தைகளுக்குள் முரண்கள் இல்லை.

இன்றைய முதல் வாசகத்தை (எசாயா 9:2-7) எடுத்துக்கொள்வோம். எபிரேய இலக்கியத்தில், குறிப்பாக செய்யுளில், அதிகமாக பயன்படுத்தப்படும் ஒரு இலக்கியப் பண்பின் பெயர் 'இருசொல் இயைபணி' அல்லது 'இணைவாக்கியம்.' அதாவது, முதல் வாக்கியத்தில் சொல்லப்படும் கருத்தே இரண்டாம் வாக்கியத்திலும் வேறு வார்த்தைகளில் சொல்லப்படுவது. இன்றைய முதல் வாசகத்தில் நான்கு இடங்களில் இது பயன்படுத்தப்பட்டிருக்கின்றது.

- காரிருளில் நடந்து வந்த மக்கள் பேரொளியைக் கண்டார்கள். சாவின் நிழல்சூழ் நாட்டில் குடியிருப்போர்மேல் சுடர் ஒளி உதித்துள்ளது. (இந்த இரண்டு வாக்கியங்களின் பொருள் ஒன்றே) - அவர்கள் பலுகிப் பெருகச் செய்தீர். அவர்கள் மகிழ்ச்சியை பெருகச் செய்தீர். - நுகத்தை நீர் உடைத்தெறிந்தீர். தடியைத் தகர்த்துப் போட்டீர். கொடுங்கோலை ஒடித்தெறிந்தீர். - ஒரு குழந்தை நமக்குப் பிறந்துள்ளது. ஓர் ஆண்மகவு நமக்கு தரப்பட்டுள்ளது.

மெசியாவின் வருகை தரும் மகிழ்ச்சிக்கு இங்கே இரண்டு அடையாளங்கள் தரப்படுகின்றன: (அ) அறுவடை நாள், (ஆ) கொள்ளைப் பொருளைப் பங்கிடும் நாள். (அ) அறுவடை நாளில் எதற்கு நிறைவு கிடைக்கிறது? அன்ற, உண்பதற்கான உணவு கிடைத்துவிடுகிறது. (ஆ) போரின் வெற்றி நாளில் கிடைப்பது என்ன? பாதுகாப்பு. அன்று, எதிரிகள் அழிகிறார்கள். 'அறுவடை நாளில் மகிழ்வது போல' 'கொள்ளைப் பொருளைப் பங்கிடுவது போல' என மகிழ்ச்சிக்கு இரண்டு உருவகங்களைத் தருகின்றார் எசாயா. 'கொள்ளைப் பொருள்' என்பது இங்கே திருடிய பொருள் அல்ல. மாறாக, எதிரி நாட்டை வெற்றி கொண்டு, அந்நாட்டில் உள்ளவர்களின் உரிமைப் பொருள்களை நம் உரிமைப்பொருள்கள் ஆக்குதல். நம் உழைப்பு இல்லாத பொருளைக் குறிப்பிடவில்லை எசாயா. மேலும், சார்புநிலையும், அடிமைத்தனமும் ஒழிகிறது. பழையன அனைத்தும் நெருப்பில் இடப்படுகின்றன.

அதே வேளையில், 'குழந்தை பிறந்துள்ளது' என்று சொல்லப்படுகிறது. இந்தக் குழந்தைக்கு நான்கு பெயர்கள் தரப்பட்டிருக்கின்றன. அதாவது, அரசர்கள் தலைப்புகள் இட்டு அழைக்கப்படுவது மரபு - இராஜாதி ராஜ, இராஜ குலோத்துங்க, இராஜ குலதிலக என்பதுபோல. மேலும், 'எதிரிகளை நீ புறமுதுகிட்டு ஓடச் செய்ததால் இன்றுமுதல் நீ ...' என்று அரசனுக்கு பட்டங்கள் கொடுப்பதும் வழக்கம். இங்கே குழந்தைக்கு நான்கு பட்டங்கள் சூட்டி மகிழ்கின்றார் எசாயா:

- வியத்தகு ஆலோசகர். அதாவது, எங்கே போக வேண்டும் என்ற வழியைக் காட்டுபவர்.

- வலிமைமிகு இறைவன். இங்கே இறைவன் என்பதற்கு 'எலோகிம்' அல்லது 'யாவே' பயன்படுத்தப்படவில்லை. 'ஏல்' என்று பயன்படுத்தப்பட்டுள்ளது. 'ஏல்' என்றால் 'பெருமான்' அல்லது 'பெருமகனார்' என மொழிபெயர்க்கலாம். இங்கே இந்த குழந்தையை எசாயா கடவுளாக்கவில்லை. மிக நேர்த்தியாக வார்த்தையை கையாளுகின்றார்.

- என்றுமுள தந்தை. ஒரு குழந்தை எப்படி தந்தையாகும்? இது ஒரு வித்தியாசமான தலைப்பு. ஒரு குடும்பத்தின் தந்தை தன் குடும்பத்திற்கு தரும் உணவையும், பாதுகாப்பையும் இது குறிக்கிறது.

- அமைதியின் அரசர். அடிமைத்தனம் மற்றும் போர் நீக்கி அமைதி தருகிறார்.

இந்த இறைவாக்கு மெசியா இறைவாக்காக இயேசுவின் பிறப்பை முன்னறிவிக்கிறது.

ஆக, மெசியா என்பதற்கு குழந்தை ஒரு அடையாளமாகத் தரப்படுகிறது. அந்தக் குழந்தையின் பிறப்பின் பின்புலத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கிறது. இதையே இன்றைய நற்செய்தி வாசகத்தில், 'எல்லா மக்களுக்கும் பெரும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தி' என்றும் 'உலகில் அவருக்கு உகந்தோருக்கு அமைதி' என்றும் வானதூதர்கள் அக்களிக்கிறார்கள்.

மெசியா, தான் எதை அடையாளப்படுத்துகிறாரோ, அதை அப்படியே தரவும் செய்கின்றார்.

இன்றைய இரண்டாம் வாசகம் (தீத்து 2:11-14), 'வெளிப்படுத்துதல்' என்ற முக்கியமான வார்த்தையைக் கொண்டிருக்கிறது. இவ்வுலகம் சார்ந்தவற்றை - புவிஈர்ப்பு விசை, அமெரிக்கா, செல்ஃபோன், எலெக்ட்ரிசிட்டி - இவ்வுலகில் இருப்பவர்களே கண்டுபிடிக்க முடியும். ஆனால், இவ்வுலகம் சாராதவை வெளிப்படுத்தப்பட்டால் ஒழிய அவைகள் பற்றி நமக்குத் தெரியாது. ஆக, கிறிஸ்து இவ்வுலகிற்கு வந்தது, இவ்வுலகம் சாராத 'கடவுளின் அருளையும், மாட்சியையும்' வெளிப்படுத்தவே என்கிறார் புனித பவுல். இதையே நாம் கிறிஸ்து பிறப்பு திருப்பலியின் தொடக்கவுரையில், 'வாக்கு மனிதர் ஆனார் என்னும் மறைநிகழ்வின் வாயிலாக உமது மாட்சியின் ஒளி எங்கள் மனக் கண்களுக்குப் புதிதாய் ஒளி வீசியது. இதனால் கண் காணாத கடவுளை நாங்கள் காண்கின்றோம். கண் காணாதவை மீதுள்ள பற்று எங்களை ஆட்கொள்கிறது' எனப் பாடுகிறோம். கடவுளின் வெளிப்படுத்துதல் இயேசுவில் இரண்டுமுறை நிகழ்கிறது: (அ) அவரது பிறப்பில். (ஆ) அவரது உயிர்ப்பில். (அ) பிறப்பு என்னும் வெளிப்படுத்துதல் நம் இம்மை வாழ்வுக்கு பயன்தருகிறது. அதாவது, கட்டுப்பாட்டுடனும், நேர்மையுடனும், இறைப்பற்றுடனும் வாழ இவ்வருள் பயிற்சி அளிக்கிறது. (ஆ) உயிர்ப்பு என்னும் வெளிப்படுத்துதல் நம் மறுமை வாழ்வுக்கு பயன்தருகிறது. அதாவது, மகிழ்ச்சியோடு எதிர்நோக்கியிருக்க அது கற்றுத்தருகிறது. இவ்வாறாக, தான் எதை அடையாளப்படுத்தினாரோ அதையே வாழ்ந்து காட்டுகிறார் இயேசு.

'இதுவே உங்களுக்கு அடையாளம்' என்று வானதூதர் இடையர்களுக்கு மூன்று அடையாளங்களைக் கொடுக்கின்றனர். (அ) குழந்தை - வலுவின்மையின், சார்புநிலையின், பாதுகாப்பின்மையின் அடையாளம். (ஆ) துணிகள் - மனித வரலாற்றுக்குள் பாவம் நுழைந்ததன் அடையாளம் (காண். தொநூ 2:25, 3:21). (இ) தீவனத் தொட்டி - வெறுமையான தீவனத்தொட்டி வறுமையின் அடையாளம். நிறைவான தீவனத்தொட்டி மகிழ்வின் அடையாளம். இங்கே குழந்தை தீவனத்தொட்டியின் வெறுமையை நிறைக்கிறது. இவை குழந்தையை அடையாளம் காண காட்டப்பட்ட அடையாளங்கள் மட்டுமல்ல. இந்த அடையாளங்களே இயேசுவின் வாழ்க்கையாக மாறுகின்றன. தானே வலுவின்மையில், சார்புநிலையில், பாதுகாப்பின்மையை உணர்ந்ததால் அந்த உணர்வோடு இருக்கிறவர்களோடு நெருக்கமாகிறார். பாவத்தால் வந்த ஆடையை சிலுவையில் தன் நிர்வாணத்தால் களைகிறார். தன் வாழ்வு முழுவதும் தன்னிடம் வந்தவருக்கு நிறைவு தந்து, இன்றும் நற்கருணையில் நமக்க ஆன்மீக விருந்தளிக்கிறார். அவரின் அடையாளங்கள் அவரின் வாழ்க்கை நிலைகள்.

இன்று, நாம் குடில், நட்சத்திரம், கேரல், கேக், கிஃப்ட், புத்தாடை என கிறிஸ்து பிறப்பு விழா அடையாளங்களைப் பார்க்கிறோம். ஆனால், இந்த அடையாளங்கள் தாங்கள் சுட்டிக்காட்டுவதை ஒருபோதும் நமக்குத் தருவதில்லை. கிறிஸ்துவைப் பற்றிய அடையாளத்தை நாம் கிறிஸ்து பிறப்பில் கண்டுகொண்டால் மட்டுமே நாம் மகிழ்ச்சியும், நிறைவும் பெறுவோம். இரண்டாவதாக, கிறிஸ்து பிறப்பின் அடையாளம் நாம் பெறுவதற்கு நாம் அரிய பெரிய காரியங்களைச் செய்ய வேண்டியதில்லை. ஒரு சிறிய இடையராய், நம் ஆடுகளுக்குக் காவல் காத்துக்கொண்டு, நம் அன்றாட வேலைகளைப் பொறுப்புணர்வோடு செய்துகொண்டு, விழித்துக்கொண்டிருந்தாலே போதும். மூன்றாவதாக, இன்று நான் எதன் அடையாளமாக இருக்கிறேன்? என்னைப் பற்றி ஒருவர் மற்றவரிடம் சொன்னால் என்ன அடையாளத்தைக் கொண்டு என்னைச் சொல்வார்?

'இதுவே உங்களுக்கு அடையாளம்' - கிறிஸ்து பிறப்பு பெருவிழா வாழ்த்துக்களும், செபங்களும்.