இவ் மறையுரையை வழங்குபவர்

அருட்பணி.இயேசு கருணாநிதி
Archbishop’s House, K. Pudur, Madurai 625 007, India
Email: yesu@live.in

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)









ஆண்டின் பொதுக்காலம் 20ஆம் ஞாயிறு

இறையரசுக் காய்ச்சல்!

எரே 38:4-6, 8-10
எபி 12:1-4
லூக் 12:49-53

'உங்கள் குழந்தைகளுக்குத் தடுப்பூசி போடுங்கள்!' என்ற ஒலிபரப்பான தடுப்பூசி விளம்பரத்தில் இப்படிச் சொல்லப்படுகின்றது: 'உங்கள் குழந்தைகளுக்குத் தடுப்பூசி போட்டவுடன் காய்ச்சல் வருகிறது என்றால் கவலைப்படாதீர்கள். பயப்படாதீர்கள். காய்ச்சல் மருந்து வேலை செய்கிறது என்பதன் அறிகுறி!'

இறையரசு என்னும் மருந்து வேலை செய்கிறது என்பதற்கு அறிகுறியாக இருக்கும் காய்ச்சல் எது என்பதை இன்றைய இறைவாக்கு வழிபாடு நமக்குச் சொல்கிறது.

எரேமியா இறைவாக்கினர் தன் சொந்த மக்களாலும் அரசனாலும் புறக்கணிக்கப்பட்டு பாழுங்கிணற்றில் தள்ளப்படுகின்றார். அவரின் இறைவாக்கும், செய்தியும் மக்களுக்கு அச்சம் தருவதாலும், மக்களை மகிழ்ச்சிப்படுத்தாததாலும் இவ்வாறு செய்கின்றனர் மக்கள். இருந்தாலும் எத்தியோப்பியன் ஒருவன் அரசனிடம் முறையிட அரசனும் எரேமியாவை விடுவிக்க ஆணையிடுகின்றான். இவ்வாறாக, ஒரே நகரில் சிலர் எரேமியாவுக்கு சார்பாகவும், பலர் அவருக்கு எதிராகவும் இருக்கின்றனர். ஆக, இறைவனின் செய்தி அல்லது இறைவாக்கு கொண்டு வரும் முதல் காய்ச்சல் மக்களிடையே பிளவு.

நம்பிக்கை என்றால் என்ன என்று வரையறை செய்துவிட்டு, தொடர்ந்து ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு, சிம்சோன் என முதல் ஏற்பாட்டு குலமுதுவர்களைப் பட்டியலிட்டு அவர்கள் வாழ்வில் நம்பிக்கை வேரூன்றியிருந்த விதத்தை எடுத்துச் சொல்லும் எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமடலின் ஆசிரியர் இயேசுவின் மேல் கண்களைப் பதிய வைத்து தொடர்ந்து ஓடுவோம் என்றும், எவ்வித துன்பங்களையும் எதிர்கொள்வோம் என்றும் அறிவுறுத்துகின்றார். இவ்வாறாக, இறைவனின் செய்தி அல்லது பிரசன்னம் கொண்டுவரும் இரண்டாம் காய்ச்சல் துன்பம்.

'மண்ணுலகில் தீமூட்டவே வந்தேன்!' என்று தான் வந்ததை அறிவிக்கும் இயேசு தன் வருகை அமைதியை அல்ல பிளவையே உண்டாக்கும் என்று சொல்வதோ, தான் பெற வேண்டிய இரத்தத் திருமுழுக்கே அந்தப் பிளவின் முதற்கனி என்கின்றார். இறையரசு பற்றிய செய்தி அதை அறிவிப்பவருக்கு அழிவாக முடிகிறது. ஆக, மூன்றாவது காய்ச்சல் அறிவிப்பவரின் அழிவு.

பிளவு, துன்பம், அறிவிப்பவரின் அழிவு - இந்த மூன்றும்தான் இறையரசின் காய்ச்சல்கள்.

இந்தக் காய்ச்சல்கள்தாம் இறையரசு என்னும் மருந்து இவ்வுலகில் வேலை செய்கிறது என்பதை எண்பிக்கின்றன.

இந்த மூன்று காய்ச்சல்களும் இன்று எப்படி நம்மை பாதிக்கின்றன என்றும், இந்தக் காய்ச்சல்களின் பின்புலத்தில் இறையரசின் அன்பு, அமைதி, மகிழ்ச்சி, நம்பிக்கை என்ற மதிப்பீடுகளை எப்படிப் புரிந்து கொள்வது என்றும் நாம் சிந்திப்போம்.

1. பிளவு

இன்றைய முதல் (காண். எரே 38:4-6, 8-10) மற்றும் மூன்றாம் (காண். லூக் 12:49-53) வாசகங்களில் பிளவு மையப்படுத்துகின்றது. எரேமியாவை முன்னிட்டு யூதா நாடு பிளவுபடுகின்றது. இதில் விநோதம் என்னவென்றால், யூதா நாட்டின் பூர்வீகக் குடிகளான, எரேமியாவின் உடன்பிறப்புக்களாகிய யூதர்கள் அவருக்கு எதிராகவும், வெளியிலிருந்து தற்காலிகமாகக் குடியிருக்கும் எத்தியோப்பியனான எபேது மேலக்கு அவருக்கு ஆதரவாகவும் இருக்கின்றார். அரசனின் மனநிலை மதில்மேல் பூனையாக இருக்கின்றது. யூதர்களின் பேச்சைக் கேட்டு எரேமியாவை அழிப்பதற்குக் கையளிக்கும் அவன் சற்று நேரத்தில் மனம் மாறி எத்தியோப்பியன் சொன்னவுடன் எரேமியாவைக் காப்பாற்ற ஆணையிடுகின்றான். எரேமியா இறந்து விடுவார் என்ற எச்சரிக்கையை நினைத்து அஞ்சுகிறான். அரசனிடம் ஒரே நேரத்தில் இரண்டு உணர்வுகள் இருக்கின்றன. இவ்வாறாக, அவன் தன்னிலே பிளவுண்டு நிற்கின்றான். எரேமியாவின் இறைவாக்கு மக்களை இரண்டாகவும், அரசனை இரண்டாகவும் பிளக்கிறது. 'பிளவை உண்டாக்கவே வந்தேன்' என்று சொல்லும் இயேசுவும், 'இதுமுதல் ஒரு வீட்டிலுள்ள ஐவருள் இருவருக்கு எதிராக மூவரும், மூவருக்கு எதிராக இருவரும், தந்தைக்கு எதிராக மகனும், மகனுக்கு எதிராக தந்தையும், தாய்க்கு எதிராக மகளும், மகளுக்கு எதிராக தாயும், மாமியாருக்கு எதிராக மருமகளும், மருமகளுக்கு எதிராக மாமியாரும் பிரிந்திருப்பர்' என்று ஒரு குடும்பத்திற்குள் நடக்கும் பிளவு பற்றிக் குறிப்பிடுகின்றார். இயேசு குறிப்பிடும் இந்தப் பிளவு என்பது குடும்பத்தின் சொத்து அல்லது பணத்தை மையப்படுத்தியது அன்று. மாறாக, இறையரசை மையப்படுத்தியது. இறையரசு பற்றிய செய்தியை அல்லது இறையரசின் மதிப்பீடுகளை ஒருவர் ஏற்றுக்கொண்டு மற்றவர் விடும்போது அங்கே பிளவு வருகின்றது. ஏற்றுக்கொண்டவர்கள் ஒருபுறம், ஏற்றுக்கொள்ளாதவர்கள் மறுபுறம் என்றும் மாறுகின்றனர்.

இந்தப் பிளவு இன்றும் ஒருசில குடும்பங்களில் காணப்படுகின்றது. ஒரே குடும்பத்தில் சிலர் ரோமன் கத்தோலிக்கராகவும், மற்றவர் வேறு சபைகளுக்கும் அல்லது மத வழிபாட்டிற்கும் போவதாக இருக்கின்றது. 'எல்லாரும் ஒரே கடவுளைத்தான் கும்பிடுகிறோம்!' என்று ஒருபக்கம் யாரும் யாரையும் கண்டுகொள்ளாமல் இருந்தாலும், மனதளவில் நாம் பிளவு எண்ணம் கொண்டவராகவே இருக்கின்றோம். புதிய சபைகளுக்குச் செல்வோர் தாங்கள் ஏற்கனவே உறுப்பினராக இருந்த கத்தோலிக்க திருஅவை மற்றும் மற்ற மதங்களைக் குறை சொல்பவர்களாகவும், கேலி செய்பவர்களாகவும் மாறிவிடுவதை நாம் பார்க்கின்றோம்.

மேலும், இந்தப் பிளவை மதம் சாராமலும் பார்க்கலாம். இறையரசின் மதிப்பீடுகள்கூட சில நேரங்களில் பிரிவினைக்குக் காரணமாக அமைகின்றன. உதாரணத்திற்கு, என் வீட்டில் இருக்கும் இருவரில் ஒருவர் உண்மையாக, நேர்மையாக இருக்கிறார் என வைத்துக்கொள்வோம். ஆனால், அவர் உண்மையாக, நேர்மையாக இருப்பதால் நான் இதுவரை அவர் வழியாக அனுபவித்து வந்த பணம் அல்லது செல்வாக்கு இப்போது எனக்குக் கிடைக்காமல் போகின்றது. இப்படி பாதிக்கப்பட்ட நான் அவர்மேல் கோபப்படுகின்றேன். 'நீ லஞ்சம் வாங்கு! எல்லாரும் வாங்கலயா!' என்று சண்டைக்குப் போகின்றேன். இவ்வாறாக, மதிப்பீடும்கூட பிளவுக்குக் காரணமாகிவிடுகிறது.

2. துன்பம்

இன்றைய முதல் (காண். எரே 38:4-6, 8-10) மற்றும் இரண்டாம் (எபி 12:-14) வாசகங்களில் 'துன்பம்' என்ற கருத்தும் மேலோங்கி நிற்கிறது. தன் உடன்பிறப்புக்கள் தன் மேல் கோபம் கொள்ள, அரசனும் அவர்களின் கோபத்திற்கிணங்க எரேமியாவை அவர்களின் கைகளில் கையளிக்க, பாழுங்கிணற்றில் அமிழ்த்தப்படுகின்றார் எரேமியா. 'கிணற்றில் தண்ணீர் இல்லை,' 'நகரில் அப்பம் இல்லை' - இந்த இரண்டு சொற்றொடர்கள், 'எங்கே எது இருக்க வேண்டுமோ, அங்கே அது இல்லை' என்பதைச் சுட்டிக்காட்டுகின்றன. மேலும், எரேமியாவை கிணற்றில் இடுவதால் எங்கே இறைவாக்கினர் இருக்க வேண்டுமோ அங்கே அவர் இல்லை. அவர் வேறொரு இடத்திற்கு, அவர் விரும்பாத இடத்திற்குத் தள்ளப்படுகின்றார். அவரைத் துன்பத்துற்குள்ளாக்கிய அரசன் கொஞ்ச நேரத்தில் மனம் மாற்றம் அடைகின்றான். எத்தியோப்பியனின் சொல்லைக் கேட்டு எரேமியாவை விடுவிக்கின்றான். இன்றைய இரண்டாம் வாசகத்தில் எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமடலின் ஆசிரியர் புதிதாக நம்பிக்கையைத் தழுவியவர்கள் அடைய வேண்டிய துன்பத்தைப் பற்றி எழுதுவதோடல்லாமல், தங்கள் வாழ்வில் வந்த துன்பங்களை எல்லாம் நம்பிக்கையால் வென்றவர்களைப் பற்றிச் சொல்லி அவர்களை முன்மாதிரியாக வைக்கின்றார்.

இறையரசின் விழுமியங்களின் படி வாழ்தல் துன்பத்தையும் உடன் அழைத்துவருகின்றது. துன்பத்தை இன்பமாக மாற்றுவது என்று சொல்லும்போது அதை 'சேடிசம்' மற்றும் 'மேசோகிசம்' என்று இரண்டாகப் பிரிக்கின்றோம். 'சேடிசம்' என்பது 'பிறருக்குத் துன்பம் இழைத்து அதில் இன்பம் காண்பது.' 'மேசோகிசம்' என்பது 'தனக்குத்தானே துன்பம் வருவித்து அதில் இன்பம் காண்பது.' இந்த இரண்டு வகை உணர்வுகளிலும் தனிமனிதரின் 'இன்பமே' முதலிடம் வகிக்கிறது. ஆனால், துன்பத்தில் மற்றொரு வகை உண்டு. அதாவது, துன்பத்தை விட மேலான பண்பு ஒன்றுக்காக துன்பத்தை ஏற்றுக்கொள்வது. ஒரு தாய் தன் குழந்தைக்காகத் துன்புறுகிறாள் என்றால் அது 'மேசோகிசம்' அல்ல. மாறாக, தன் குழந்தையின் நலனை மேலாக நினைத்து, கீழான துன்பங்களைப் பொறுத்துக் கொள்கிறாள். மறைசாட்சியரின் தற்கையளிப்பும் இதை ஒத்ததே.

நம் அன்றாட வாழ்வில் மதிப்பீடுகளை வாழ்ந்து காட்டும்போது துன்பமே மிஞ்சுகிறது. கடின உழைப்பு செய்ய வேண்டும் என்றும், நிறைய முயற்சிகள் செய்து முன்னேற வேண்டும் என நினைக்கின்றோம். ஆனால் நமக்கருகில் இருக்கும் மற்ற ஒருவர் எவ்விதக் கடின உழைப்பும் இல்லாமலேயே குறுக்கு வழியில் சம்பாதித்து விடுகிறார். நாம் துன்பப்படுகிறோம். அவருக்கோ எந்தவித துன்பமும் இல்லை. அப்போது நம் மனம் நம்மையே கேள்வி கேட்கிறது. சில நேரங்களில் நம் மனத்தின் இந்தக் கேள்வி நம்மை விரக்திக்கு உள்ளாக்கிவிடுகிறது.

3. அழிவு அல்லது இறப்பு

இன்றைய முதல் வாசகத்தில் எரேமியாவின் இறைவாக்கு அவருக்கே அழிவைக் கொண்டுவருவதை வாசிக்கின்றோம். இயேசுவும் இன்றைய நற்செய்திப் பகுதியில், 'நான் பெற வேண்டிய திருமுழுக்கு உண்டு. அது நிறைவேறுமளவும் நான் மிகவும் மனநெருக்கடிக்குள்ளாகி இருக்கிறேன்' (லூக் 12:50) என தான் அனுபவிக்க வேண்டிய சிலுவை மரணம் பற்றி எழுதுகின்றார். 'திருமுழுக்கு' என்ற வார்த்தை இயேசுவின் காலத்தில் வழக்கத்தில இருந்தாலும், அதன் பொருள் அவரின் உயிர்ப்புக்குப் பின்தான் நிறைவு பெறுகிறது. அதாவது, 'திருமுழுக்கு' என்பது கிறிஸ்தவ நம்பிக்கையின் முதல் அருளடையாளமாக மாறுகிறது. இயேசுவின் உயிர்ப்புக்குப் பின் முக்கியத்துவம் பெற்ற ஒன்றை எடுத்து, இயேசு வாழ்ந்தபோதே அவர் சொன்னதாக எழுதுகின்றார் லூக்கா. இயேசுவின் இறையரசு பற்றிய போதனை அவர் காலத்திலேயே நிறைய பிளவுகளை ஏற்படுத்துகிறது. 'இயேசுவோடு' என்று ஒரு குழுவும், 'இயேசுவுக்கு எதிராக' என்று மற்றொரு குழுவும் எழும்புகின்றது. இயேசுவுக்கு எதிராக எழும் குழு அவரை அழித்தொழிக்கும் வரை ஓயவில்லை. இயேசுவை அவர்கள் அழிக்கின்றார்கள்.

இயேசுவின் செய்தி அவருக்கே அழிவைக் கொண்டுவருகிறது.

இவ்வாறாக, பிளவு, துன்பம், அழிவு என்பதே இறையரசின் விளைவுகளாக இருக்கின்றன.

இவை மட்டும்தான் இறையரசின் விளைவுகளா?

'அமைதியின் அரசர்' என்று முன்னுரைக்கப்பட்ட இயேசு எப்படி 'நான் அமைதியை ஏற்படுத்தவா வந்தேன்?' என்று கேட்க முடியும்?

இறையரசின் காய்ச்சல் அறிகுறிகளைக் கண்டு நாம் பயந்து ஒதுங்கி விட வேண்டுமா? அல்லது துணிந்து நிற்க வேண்டுமா?

1. இருதுருவ இணைதல்

'ஒவ்வொன்றுக்கும் ஒரு நேரமுண்டு. உலகில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் ஒரு காலமுண்டு ... ... அன்புக்கு ஒரு காலம், வெறுப்புக்கு ஒரு காலம். போருக்கு ஒரு காலம். அமைதிக்கு ஒரு காலம்' (சஉ 3:1, 8) என வாழ்வின் இருதுருவ எதார்த்தங்களைச் சுட்டிக் காட்டுகின்றார் சபை உரையாளர். பல நேரங்களில் நாம் அமைதிக்காகவும், நலன்களுக்காகவும் மட்டுமே வேண்டுகின்றோம். தீமை யாவும் அழிந்து நன்மை விளைய வேண்டும் என விரும்புகிறோம். இப்படி எதிர்பார்ப்பது இயற்கைக்கே முரணானது. நாம் இயற்கையில் காணும் எதுவும் ஒருதுருவம் கொண்டது அல்ல. இருதுருவங்கள் இருப்பதே நியதி. இந்த இருதுருவங்களில் ஒன்றை அழித்து மற்றொன்றை மட்டும் நிலைநாட்ட நினைப்பது இயற்கையோடு போரிடுவது போலாகும். ஆக, இறையரசு என்பது அமைதியையும், இன்பத்தையும், வாழ்வையும் மட்டும் நாடி நிற்பது அன்று. மாறாக, உடன்வரும் பிளவு, துன்பம், அழிவு ஆகியவற்றையும் தழுவிக் கொள்வது. தந்தையும், மகனும் இணைந்திருக்க ஒரு காலம் என்றால், அவர்கள் பிளவுபடும் காலமும் வரும். நாம் கீழிருந்து பார்க்கும்போது 'ஏற்றம்' எனத் தெரிவது, மேலிருந்து பார்க்கும்போது 'இறக்கம்' என நமக்குத் தெரிவதில்லையா? இவற்றில் எது உண்மை? இரண்டும் உண்மையே. இரண்டும் சாத்தியமே. ஆக, பிளவு-அமைதி, இன்பம்-துன்பம், வாழ்வு-அழிவு போன்றவற்றை இணைத்துப் பார்த்தலும், அவைகளை இருப்பது போல ஏற்றுக்கொள்ளுதலுமே சால்பாகும்.

2. உயிரின் ஊற்றுக்கண் துன்பம்

உலகில் ஏற்பட்ட வரலாற்று, அரசியல் மற்றும் பொருளாதார மாற்றங்களுக்குப் பின் இருந்தவை எல்லாம் போராட்டமே. மார்க்ஸ் சொல்வதுபோல 'போராட்டமே வரலாற்றை முன்னேற்றுகிறது.' இரண்டு பேருக்குள் இருக்கும் பிளவு அல்லது போராட்டமே அவர்களில் சிறந்தவர் யார் என்பதை மெய்ப்பிக்கிறது. தாயின் பேறுகாலத் துன்பம், வண்ணத்துப்பூச்சியின் கூட்டுடைக்கும் துன்பம் என அனைத்திலும் துன்பம்தான் புதிய உயிர் உருவாகக் காரணமாகின்றது.

  3. சாய்ஸ் மற்றும் சமரசம்

நம்மை மற்ற உயிர்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டும் ஒரு பண்பு 'சாய்ஸ்' அல்லது 'தேர்ந்தெடுத்தல்.' நம் தேர்விற்குப் பின் நிற்பது நம் சுதந்திரம். வங்கி, தொலைதொடர்பு, ஆடை, அணிகலன், வீடு என எல்லாவற்றிலும் நமக்கு எண்ணிறந்த 'சாய்ஸ்' உள்ளது. ஒன்றை எடுத்துக்கொண்டு மற்றதை நம்மால் விட்டுவிட முடியும். நாம் தேர்ந்தெடுப்பதை அப்படியே பற்றிக்கொள்வது அவசியம். இயேசுவை அல்லது இறையரசை தேர்ந்து கொண்டால் நாம் மற்றதை விட்டுவிடுதல் அவசியம். இதற்குத் தேவை மனத்திடம். தனக்குத் துன்பம் வந்தாலும் தான் தேர்ந்துகொண்ட 'சாய்ஸ்' இதுதான் என்று நிலைத்து நிற்கிறார்கள் எரேமியாவும், இயேசுவும். 'அவரின்மேல் நம் கண்களைப் பதிய வைப்போம்' என்று சொல்லி எபிரேயர் திருமடலின் ஆசிரியரும் தன் மக்களை அழைக்கிறார்.

அவரின் மேல் கண்களைப் பதிய வைப்போம். நம் கண்கள் கசங்கலாம். ஆனால், இறுதியில் நம் பார்வை தெளிவாகும்!