இவ் மறையுரையை வழங்குபவர்

அருட்பணி.இயேசு கருணாநிதி
Archbishop’s House, K. Pudur, Madurai 625 007, India
Email: yesu@live.in

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)









கிறிஸ்து - அனைத்துலக அரசர் பெருவிழா

நீ அரசன்தானோ?

தானியேல் 7:13-14
திருவெளிப்பாடு 1:5-8
யோவான் 18:33-37

இன்று கிறிஸ்துவை அனைத்துலகிற்கும் அரசராகக் கொண்டாடுகிறோம். உலகின் பல இடங்களில் அரசாட்சி இன்று மறைந்துவிட்டாலும், 'அரசன்' என்பது நமக்கு ஒரு வார்த்தை-உருவகமாகவே இருக்கிறது. 'அரசன்' என்ற வார்த்தையைக் கேட்டவுடன், பகட்டான ஆடை, தலையில் மணிமுடி, கையில் செங்கோல், பெரிய அரியணை, காலில் பெரிய காலணி, சாமரம் வீசும் இரண்டு பெண்கள், கம்பீரமான பார்வை என எல்லாம் நம் உள்ளத்தில் தோன்றி மறைகின்றன. 'கிறிஸ்து அரசர்' உருவப்படங்களைப் பார்த்துப் பழகிய நம் மனம், கிறிஸ்துவையும் மேற்காணும் உருவத்திலேயே பார்க்கின்றது.

'அரசன்' என்ற சொல்லாடல் அல்லது 'அரசாட்சி' என்ற சொல்லாடல் இஸ்ரயேல் மக்களுக்கு இறைவாக்கினர் சாமுவேலின் காலத்தில்தான் வருகின்றது. '... அனைத்து வேற்றினங்களிடையே இருப்பதுபோல ஓர் அரசனை நியமித்தருளும்' (1 சாமு 8:5) என்று இஸ்ரயேல் மக்கள் சாமுவேலிடம் முறையிட்டபோது, '... அவர்கள் உன்னைப் புறக்கணிக்கவில்லை. அவர்கள் நான் ஆளாதபடி என்னைத்தான் புறக்கணித்துவிட்டனர்' (1 சாமு 8:7) என்கிறார் ஆண்டவராகிய கடவுள். ஆண்டவராகிய கடவுளே அரசாண்ட நிலையில் அவருடைய அரசாட்சியைப் புறக்கணிக்கின்றனர் இஸ்ரயேல் மக்கள். ஆண்டவர் சாமுவேல் வழியாக அவர்களை எச்சரித்தது போலவே அரசர்கள் அவர்களுக்குத் தோல்வியாகவே முடிகின்றனர். இந்தப் பின்புலத்தில் எசேக்கியேல் இறைவாக்கினர் வழியாக இறைவாக்குரைக்கின்ற கடவுள், 'நானே என் மந்தையைத் தேடிச் சென்று பேணிக் காப்பேன்' (எசே 34:11) என்கிறார். அன்று முதல் மெசியா அரசராக வருவார் என்ற நம்பிக்கை இஸ்ரயேல் மக்கள் நடுவில் வளரலாயிற்று. இயேசுவின் சமகாலத்தில் விளங்கிய எஸ்ஸீனியர்கள் என்ற அமைப்பினரும் 'அரச மெசியாவை' எதிர்பார்த்துக் காத்திருந்ததை அவர்களின் குழும வாழ்வு ஏடுகள் காட்டுகின்றன. இந்தப் பின்புலத்தில்தான் இயேசு பிறக்கின்றார்.

மரியாளுக்கு மங்கள வார்த்தை சொல்லும் கபிரியேல், 'அவர் யாக்கோபின் குடும்பத்தின் மீது என்றென்றும் ஆட்சி செலுத்துவார். அவருடைய ஆட்சிக்கு முடிவே இராது' (லூக் 1:33) என்று உரைத்து, இந்த எதிர்பார்ப்பைக் கூட்டுகின்றார். இயேசுவின் பணிவாழ்வு முழுவதும் அவருடன் இருந்தவர்களும், அவரால் பயன்பெற்றவர்களும் இந்த எதிர்பார்ப்பிலேயே வளர்கின்றனர். உண்டு பசியாறியவர்கள் அவரை அரசராக்கிவிடத் துடிக்கின்றனர் (யோவா 6:15). அவரோடு உடனிருந்தவர்கள் அவரின் அரியணையின் அருகில் அமர ஆசைப்படுகின்றனர் (மாற் 10:35-45). ஆனால், கழுவுற மீனில் நழுவுற மீனாக ஓடுகிறார் இயேசு.

இருந்தாலும், இயேசு தன்னை அரசன் என்று சொன்னாரா? ஆம். எப்போது? ஐந்து முறை தன்னை அரசன் என்று சொல்லாமல் சொல்கின்றார்:

1. 'யூதர்களின் அரசராகப் பிறந்திருக்கிறவர் எங்கே?' (மத் 2:2) என்று தேடி வரும் மூன்று ஞானியருக்கு இயேசு மறுப்பு சொல்லவில்லை. அவர் ரொம்ப குட்டிக் குழந்தையாய் இருந்ததால் அவர் சொல்லியிருக்க வாய்ப்பில்லை.

2. 'ஏழையரின் உள்ளத்தோர் பேறுபெற்றோர். ஏனெனில் விண்ணரசு அவர்களதே' (மத் 5:3) என்று தொடங்கி, தன் போதனை, தன் உருவகம், தன் அறிகுறிகள் அனைத்திலும் விண்ணரசை (அல்லது இறையரசு) மட்டுமே முன்னிறுத்துவதன் வழியாக, தன்னை அரசன் என்று மறைமுகமாகச் சொல்கின்றார்.

3. 'ஆண்டவர் பெயரால் அரசராய் வருகிறவர் போற்றப் பெறுக!' (லூக் 19:38) என்று எருசலேம் மக்கள் வெற்றி ஆரவாரம் செய்தபோது மறுப்பேதும் சொல்லவில்லை.

4. 'அப்படியானால் நீ அரசன்தானோ?' (யோவா 18:37) என்று பிலாத்து விசாரித்தபோதும், 'யூதரின் அரசரே வாழ்க!' (யோவா 19:3) என்று பிலாத்தின் அரண்மனை படைவீரர்கள் கன்னத்தில் அறைந்த போதும், 'இதோ, உங்கள் அரசன்!' (யோவா 19:14) என்று மக்களுக்கு அறிமுகம் செய்யப்பட்டபோதும், தன் மௌனத்தால் 'ஆம்' என மொழிகின்றார் இயேசு.

5. 'இயேசுவே, நீர் ஆட்சியுரிமை பெற்று வரும்போது என்னை நினைவிற்கொள்ளும்' (லூக் 23:42) என்ற நல்ல கள்வனுக்கு உடனடியாக பேரின்ப வீட்டில் இடம் தந்ததும் இயேசுவை அரசனாகத்தான் காட்டுகிறது.

மேற்காணும், ஐந்து நிகழ்வுகளில் நான்காம் நிகழ்வின் ஒரு பகுதியைத்தான் இன்றைய நற்செய்தி வாசகத்தில் வாசிக்கிறோம்.

பிலாத்து இயேசுவை விசாரிக்கும் நிகழ்வை நற்செய்தியாளர் யோவான் மிக நீண்டதாகவும், ஆழமாகவும் பதிவு செய்கின்றார். பிலாத்துவின் முன் இயேசு மட்டும் விசாரிக்கப்படுவதாக நினைக்க வேண்டாம். இயேசுவைக் காட்டிக் கொடுத்ததால் இப்போது காட்டிக்கொடுத்தவர்களும் விசாரணை வளையத்திற்குள் வருகின்றனர். இதைப் புரிந்துகொண்டால் நமக்கு இன்றைய திருநாளின் பொருள் புரிந்துவிடும்.

பிலாத்து உரோமை ஆளுநன். யூதேயா, கலிலேயா, சமாரியா போன்ற பகுதிகளுக்கு அரசன் இருந்தாலும், இவர்களை நிர்ணயிக்கும் பொறுப்பை பிலாத்து பெற்றிருந்தார். அன்றைய அகில உலகப் பேரரசின் பதிலி பிலாத்து. ஆக, எங்கும் சீசர்தான் அரசராக இருக்கிறார் என்பதை உறுதி செய்ய வேண்டியவர் பிலாத்து. ஆனால், உரோமையின் ஆட்சி யூதர்களுக்குப் பிடிக்கவில்லை. எனவே, அவ்வப்போது சிலர் எழும்பி உரோமைக்கு எதிராகக் கிளர்ச்சி செய்வர். அவர்களை அடக்க வேண்டியதும், அழிக்க வேண்டியதும் ஆளுநரின் பொறுப்பு. பிலாத்துவிடம் இயேசுவை ஒப்படைக்கும் அவர்கள் அவர்மேல் எந்தவொரு குற்றச்சாட்டையும் வைக்கவில்லை. 'இவன் குற்றம் செய்யாதிருந்தால் இவனை நாங்கள் உம்மிடம் ஒப்புவித்திருக்கமாட்டோம்' (யோவா 18:30) என்று மொட்டையாகச் சொல்கின்றனர். ஆனால், மற்ற நற்செய்தியாளர்களின் கருத்துப்படி, 'இவன் தானே மெசியாவாகிய அரசன் என்று சொல்லிக்கொள்கிறான்' (காண். லூக் 23:2) என்று இயேசுவைக் குற்றம் சாட்டுகின்றனர். இயேசுவிடம் பிலாத்து கேட்கும் முதல் கேள்வியே, 'நீ யூதரின் அரசனா?' (யோவா 18:33) என்பதுதான். இந்தக் கேள்வியின் ஊற்று என்ன? என்று பிலாத்தை விசாரிக்கிறார் இயேசு: 'நீராக இதைக் கேட்கிறீரா? அல்லது மற்றவர்கள் என்னைப் பற்றி சொன்னதை வைத்து கேட்கிறீரா?' பிலாத்து புத்திசாலி. இயேசுவின் கேள்விக்கு மற்றொரு கேள்வியால் விடை தருகிறார்: 'நான் ஒரு யூதனா, என்ன?' இப்படியே விசாரணை நகர, இயேசுவும், 'எனது ஆட்சி இவ்வுலக ஆட்சி போன்றது அல்ல' என்கிறார். பிலாத்துவுக்கு பாதி சந்தேகம் தீர்ந்துவிட்டது. இயேசுவால் சீசரின் ஆட்சிக்கு ஆபத்து இல்லை. ஏனெனில், 'மறுவுலகில் யார் ஆட்சி செய்தால் என்ன? இந்த உலகில் சீசர் தான் ஆள வேண்டும்' என நினைத்தார் பிலாத்து. மீதிச் சந்தேகத்தைத் தீர்க்க, 'அப்படியானால் நீ அரசன் தானோ?' என்று பிலாத்து கேட்க, 'அரசன் என்று நீர் சொல்கிறீர். உண்மையை எடுத்துரைப்பதே என் பணி. இதற்காகவே நான் பிறந்தேன். வளர்ந்தேன். பணி செய்தேன்' என்கிறார். ஆக, அரசன் என்ற டைட்டிலை விடுத்து தன் அரச நிலையைப் பணியாக முன்வைக்கிறார் இயேசு. மீதி சந்தேகமும் தீர்ந்தது. இயேசு யூதர்களின் அரசன் இல்லை.

இப்போது பிலாத்துவுக்கு சந்தேகம் மக்கள் மேல் திரும்புகிறது: 'நீ யூதர்களுக்கு அரசன் இல்லை' என்பது தெளிவாகிறது என்று இயேசுவைப் பற்றி முடிவெடுத்த பிலாத்து, 'இந்த மக்களுக்கு யார் அரசன்?' என்பதை உறுதி செய்ய, இப்போது மக்களை விசாரிக்கிறான். நேருக்கு நேர் விசாரிக்காமல் மற்றொரு யுக்தியைக் கையாளுகின்றார். இயேசுவை நன்றாக அடித்து, மேலுடை, முள்முடி அணிவித்து அவரை வெளியே கொண்டு போய் மக்களிடம், 'இதோ, உங்கள் அரசன்' (யோவா 19:15) என, அவர்கள், 'எங்களுக்கு சீசரைத் தவிர வேறு அரசர் இல்லை' என்று சொல்கின்றனர். மறைமுகமாக மக்களையும் விசாரித்தாயிற்று. சீசரின் அரச நிலையை உறுதி செய்தாயிற்று. உடனே நிகழ்வை முடிக்கின்றார் யோவான்: 'அப்போது பிலாத்து அவரைச் சிலுவையில் அறையுமாறு அவர்களிடம் ஒப்புவித்தான். அவர்கள் இயேசுவைத் தங்கள் பொறுப்பில் ஏற்றுக்கொண்டனர்' (யோவா 19:16). 'ஆண்டவரே எங்கள் அரசர்' (திபா 47:7) என்று வாய்நிறையப் பாடிய இஸ்ரயேல் மக்கள், 'சீசரைத் தவிர எங்களுக்கு வேறு அரசர் இல்லை' என்று பொய்யுரைக்கின்றனர். இயேசு, 'உண்மை' என்ற வார்த்தையால் தன் அரச நிலையை உறுதி செய்தார். ஆனால், மக்கள், 'பொய்' ஒன்றைச் சொல்லி ஆண்டவராகிய கடவுளின் அரச நிலையை மறுதலிக்கின்றனர். இதுதான், யோவான் நற்செய்தியாளரின் இலக்கியத்திறன்.

ஆக, 'இயேசு அரசரா? யூதர்களின் அரசரா?' என்பது இன்றைய கேள்வி அல்ல.

மாறாக, 'எனக்கு அவர் அரசரா?' என்பதுதான் இன்றைய திருநாள் முன்வைக்கின்ற கேள்வி. நாம் ஏற்கனவே கண்ட ஐந்து நிலைகளில் மக்கள் தங்களுக்கு இயேசுவை அரசராக ஏற்றுக்கொண்டனர். அந்த நேரங்களில் அவர் அந்த டைட்டிலை மறுக்கவில்லை. மாறாக, அது தன்னை மையப்படுத்தியதாக இருந்தபோதுதான் இயேசு அதை மறுக்கிறார்.

'எனக்கு அவர் அரசராக இருக்க வேண்டும்' என்றால் நான் சில பண்புகளைக் கொண்டிருக்க வேண்டும் என்று பட்டியலிடுகின்றது இன்றைய இறைவாக்கு வழிபாடு.

1. உண்மையை எடுத்துரைத்தல்

'உண்மையா? அது என்ன?' என்ற பிலாத்துவின் கேள்வி இன்றுவரை நாம் விடை காண இயலாத கேள்வி. ஏனெனில், உண்மை என்பது தனிநபர் சார்ந்தது. இடத்திற்கு இடம், சூழலுக்குச் சூழல் மாறுபடுவது. தண்ணீரின் மூலக்கூறுகள் 2 ஹைட்ரஜன், 1 ஆக்ஸிஜன் என்னும் உண்மை எல்லா இடத்திற்கும், எல்லா சூழலுக்கும் பொருந்தும். ஆனால், உறவுநிலை, அறநெறி, தனிநபர் வாழ்வு, சமூகம் என்று வரும்போது உண்மை எப்போதும் இடம் சார்ந்தே இருக்கிறது. அதனால்தான், ஒரு நபர் கீழிருந்து பார்க்கப்படும்போது போராளியாகவும், மேலிருந்து பார்க்கப்படும்போது தீவிரவாதியாகவும் தெரிகின்றார். இந்த சார்புநிலையைத்தான் பிலாத்து, 'உண்மையா? அது என்ன?' என்று கேட்கிறார். 'உண்மை' என்பதை இயேசுவே மற்றொரு இடத்தில் வரையறை செய்கிறார். 'உண்மையினால் அவர்களை உமக்கு அர்ப்பணமாக்கியருளும். உமது வார்த்தையே உண்மை' (17:17) எனத் தமது சீடர்களுக்காகச் செபிக்கிறார் இயேசு. இங்கே, உண்மை என்பது இறைவனுக்கு ஒருவரை அர்ப்பணமாக்குகிறது என்றும், இறைவனின் பார்வையில் ஒன்றைப் பார்ப்பதே உண்மை என்பதும் பொருளாகிறது. ஆக, ஒரு நிகழ்வை அல்லது நபரை இறைவன் பார்ப்பதுபோல நான் பார்க்கும்போது நான் உண்மை உடையவன் ஆகிறேன். இறைவன் என்றும் மாறாதவர். ஆக, இந்த உண்மையும் சார்புநிலை அற்றது. இறைவன் எப்படிப் பார்க்கிறார்? 'மனிதர் பார்ப்பதுபோல இறைவன் பார்ப்பதில்லை. மனிதர் புறத்தைப் பார்க்கின்றனர். இறைவனோ அகத்தைப் பார்க்கின்றார்' (1 சாமு 16:7). புறத்தையும் தாண்டி அகத்தைப் பார்த்து, அகத்தை நிறைவாகப் பார்த்து, அதில் நிறைவைக் காண்பதே உண்மை. ஆக, நான் என் புறம்சார்ந்த நிறம், உடை, அழகு, ஆபரணம், செயல் ஆகியவற்றை விடுத்து, என் அகத்தில் இருக்கும் இறைவனைக் கண்டு, அதே மனநிலையில் எனக்கு அடுத்திருப்பவரின் இதயத்தின் இறைவனையும் நான் கண்டால் நான் உண்மை உள்ளவன் ஆகிறேன்.

2. பணி செய்தல்

இயேசுவைப் பொறுத்தவரையில் அரசர் என்பவர் பணியாளர். பணியாளருக்கு என்று எந்தவொரு விருப்பு வெறுப்பும் இருக்க முடியாது. அவர் முழுக்க முழுக்க தன் தலைவருக்கு உரியவராக இருக்கிறார். இந்த நிலையை அடைய நிறைய சரணாகதி வேண்டும். ஏனெனில், இயல்பாகவே நம் உடலில் உள்ள ஜீன்கள் ஆளப்பிறந்தவை. அவை எவ்வழியிலும் தங்களைக் காத்துக்கொள்ளும் துணிவு பெற்றவை. அவை தன்னலம் ஆனவை. எந்நேரமும் அவை தங்களை மட்டுமே முன்நிறுத்துபவை. ஆக, நம் உடலின் ஜீன்களுக்கும், உள்ளத்தின் பேரார்வத்திற்கும் எதிர்திசையில் செல்வதுதான் பணியாளர் நிலை. ஏனெனில், பணியாளர் நிலை என்பது ஒரு நொறுங்குநிலை உணர்வு. இங்கே, ஒருவரின் விருப்பு, வெறுப்பு, நல்லது, கெட்டது எதுவும் மதிக்கப்படாது. ஒருவர் எந்நேரமும் கடிந்துகொள்ளப்படலாம், சந்தேகப்படப்படலாம், குற்றம் சுமத்தப்படலாம், பணிநீக்கம் செய்யப்படலாம், தண்டிக்கப்படலாம். அரசநிலைக்கு எதிர்நிலை இது. ஏனெனில், அரசரை யாரும் கடிந்துகொள்ளவோ, சந்தேகப்படவோ, குற்றம் சுமத்தவோ, தண்டிக்கவோ, பணிநீக்கம் செய்யவோ முடியாது. இப்படியாக, பணியாளர் நிலையோடு தன் அரசநிலையைப் பொருத்திப்பார்க்கிறார் இயேசு. என்னை அரசனாக்கும் இரண்டாவது பண்பும் இதுவே.

3. அவரின் குரலுக்குச் செவிமடுத்தல்

'உண்மையைச் சார்ந்தவர் அனைவரும் என் குரலுக்குச் செவிசாய்க்கின்றனர்' (யோவா 18:38). மெல் கிப்ஸன் அவர்கள் இயக்கிய தெ பேஸ்ஷன் ஆஃப் தெ க்ரைஸ்ட் என்ற திரைப்படத்தில் பிலாத்துவுக்கும், அவருடைய மனைவி கிளவுதியாவுக்கும் இடையே ஓர் உரையாடல் நடக்கும்: பிலாத்து: 'உண்மையா அது என்ன கிளவுதியா? எனக்கு நீ அதைச் சொல்வாயா?' கிளவுதியா: 'அதை நீங்களாகக் கேட்கும் வரை உங்களுக்கு யாரும் சொல்ல முடியாது.' ஆக, நானாகக் கேட்காமல் உண்மையை நான் அறிந்துகொள்ள முடியாது. அவரின் குரலே என் மனத்தில் உண்மையாக ஒலித்துக் கொண்டிருந்தால்தான் வெளியில் இருக்கும் உண்மை எனக்குத் தெரியும். இன்று நான் விரும்பிக் கேட்கும் அலைபேசி அல்லது நேரடி உரையாடல்கள், விரும்பாமல் கேட்கும் காணொளி, இசை என குரல்கள் என் காதுகளில் விழுந்துகொண்டே இருக்கின்றன. இந்தக் குரல்களும் என் உள்ளத்தில் கேட்கும் அவரின் குரல்களும் எதிரெதிரே இருக்கின்றன. நான் எக்குரலுக்குச் செவிமடுக்கிறேனோ, அக்குரலைப் பொறுத்தே என் உண்மையை நிர்ணயம் செய்கிறேன். அவரின் குரலை நான் கேட்பதும் அரச நிலைக்கு என்னை உயர்த்தும்.

இறுதியாக,

'அவரை அரசர்' எனக் கொண்டாடும் நான், 'அவரை நான் என் அரசராக ஏற்கிறேனா?' எனக் கேட்டு, அதற்குரிய பண்புகளை என் வாழ்வில் செயல்படுத்தினால், எனக்கும், என் குடும்பம், பணியிடம், சமூகம் என அனைத்து நிலைகளிலும் நான் அரசராக இருக்க முடியும். அவரைக் கொண்டாடும் நான் இன்று என்னையே கொண்டாடுகிறேன். அவரை அரசராக ஏற்கும் நானும் அரசராகிறேன். இதுதான் அவருடைய அரசின் மாற்றம், ஏற்றம், தோற்றம் - இதையே காட்சியில் காண்கின்றனர் தானியேலும் (முதல் வாசகம்), யோவானும் (இரண்டாம் வாசகம்).