இவ் மறையுரையை வழங்குபவர்

அருட்பணி.இயேசு கருணாநிதி
Archbishop’s House, K. Pudur, Madurai 625 007, India
Email: yesu@live.in

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)









ஆண்டின் பொதுக்காலம் 33ஆம் ஞாயிறு

உண்மையைக் கற்றுக் கொள்ளுங்கள்!

தானியேல் 12:1-3
எபிரேயர் 10:11-14,18
மாற்கு 13:24-32

'பிறப்புக்கு ஒரு காலம், இறப்புக்கு ஒரு காலம்.
நடவுக்கு ஒரு காலம், அறுவடைக்கு ஒரு காலம்' (சஉ 3:2) என்று சொல்லும் எபிரேயக் கவிஞர் சபை உரையாளர் என்றாலும் சரி,

'பிறந்தன இறக்கும், இறந்தன பிறக்கும்
தோன்றின மறையும், மறைந்தன தோன்றும்
பெருத்தன சிறுக்கும், சிறுத்தன பெருக்கும்
உவப்பன வெறுப்பாம், வெறுப்பன உவப்பாம்' என்று சொல்லும் தமிழ் ஞானி பட்டினத்தார்
என்றாலும் சரி,

வாழ்வின் இருதுருவ நிலைகளை மிக அழகாக உணர்ந்தவர்களாகவும், உணர்த்தியவர்களாகவும் இருக்கின்றனர்.

இந்த உண்மையைக் கற்றுக் கொள்ளுங்கள் என்று இன்றைய இறைவாக்கு வழிபாடு நமக்கு அழைப்பு விடுக்கிறது.

நாம் இரண்டு மணி நேரங்கள் பார்க்கும் சினிமா, அல்லது இரண்டு நாள்கள் படிக்கும் நாவல் கூட, 'முடிவு எப்படி இருக்கும்?' என்ற ஆவலை நம்மில் எழுப்பிவிடும்போது, நாம் 70 ஆண்டுகள், 80 ஆண்டுகள் வாழும் வாழ்க்கை, 'என் முடிவு எப்படி இருக்கும்?' என்ற கேள்வியையும், பல லட்சக்கணக்கான ஆண்டுகளாக வளர்ந்துவரும் இப்பிரபஞ்சத்தின் முடிவு எப்படி இருக்கும்? என்ற கேள்வியையும் நம்மில் எழுப்பாமல் இருக்காதா?

உலகம் முடியுமா? முடியாதா? எப்போது முடியும்? எப்படி முடியும்? மனித இனம் தன்னைத் தானே அழித்துக் கொள்ளுமா? அல்லது அண்ட சராசரத்தின் ஆக்கம், அழிவு போல பூமி தானாகவே அழிந்து விடுமா? கடவுள் வருவாரா? எப்படி வருவார்? எல்லாருக்கும் தீர்ப்பு வழங்குவாரா? நம் இந்தியப் பின்புலத்தில் கேள்விகள் இன்னும் அதிகமாகின்றன: எந்தக் கடவுள் வருவார்? கிறிஸ்தவரல்லாதவருக்கு என்ன நடக்கும்? ஒருவேளை எல்லாக் கடவுளர்களும் சேர்ந்து வருவார்களா?

'சட்டென்று மாறுது வானிலை' என்பதுபோல, 'இதெல்லாம் பார்க்க நாம இருக்க மாட்டோம்' என்ற எண்ணமும் நம் மூளையில் மின்னி மறைகின்றது.

ஒத்தமைவு நற்செய்தியாளர்கள் என அழைக்கப்படுகின்ற மத்தேயு, மாற்கு, லூக்கா என்னும் மூவரும் உலகின் இறுதி பற்றியும், மானிடமகனின் இரண்டாம் வருகை பற்றியும் பதிவு செய்கின்றனர். யோவான் இறுதி நாட்கள் பற்றியும், செம்மறியின் இரண்டாம் வருகை பற்றியும் திருவெளிப்பாடு என்ற புதிய நூலையே படைக்கின்றார்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (காண். மாற் 13:24-32) காணப்படும் பகுதி 'வெளிப்பாட்டு நடை' என்னும் இலக்கியக் கூற்றைப் பயன்படுத்தி எழுதப்பட்டடிருந்தாலும், இப்பகுதியில் வரும் நிகழ்வுகள் அனைத்தும் தனி மனித வாழ்வில் நடக்கின்றன என்றும் நாம் உருவகித்துக்கொள்ள முடியும்.

'அந்நாள்களில்' - 'நம் வாழ்வின் இறுதி நாள்களில்'

'வேதனைகளுக்குப் பிறகு' - 'நாம் வாழ்ந்த வாழ்க்கைக்குப் பிறகு'

'கதிரவன் இருண்டுவிடும்' - 'நம் கண்கள் மூடிவிடும் அல்லது மங்கிவிடும்'

'நிலா ஒளிகொடாது' - 'நம் உடலில் வெப்பம் இருக்காது'

'விண்மீன்கள் வானத்திலிருந்து விழும்' - 'நாம் பெற்ற அனைத்து உறவுகளும் நம்மைவிட்டு அகலும்'

'வான்வெளிக் கோள்கள் அதிரும்' - 'நாம் வாழும் குடும்பத்தில், சமூகத்தில் ஒரு வெற்றிடம் ஏற்படும்'

'மானிடமகன் மாட்சியோடு மேகங்கள் மீது வருவார்' - 'நம் உயிர் தன்னைப் படைத்த இறைவனிடம் திரும்பிச் செல்லும்'

இந்த உருவகம் சாத்தியமா என்று நாம் கேட்கலாம்?

சாத்தியம். ஏனெனில், இத்தகைய உருவகத்தைத்தான் நாம் சஉ 12:1-6ல் வாசிக்கின்றோம்.

ஆக, இயேசு குறிப்பிடும் நிகழ்வுகள் எல்லாம் என் வாழ்விலும், உங்கள் வாழ்விலும் நடந்தேறும் நிதர்சனமான நிகழ்வுகள்.

இவ்வறிகுறிகளைச் சொல்லிவிட்டு, 'அத்திமரத்திலிருந்திலிருந்து உண்மையைக் கற்றுக் கொள்ளுங்கள்' என்கிறார். அந்த உண்மை என்ன?

இலையுதிர்காலத்தில் தன் இலைகளை எல்லாம் இழந்து, பனிக்காலத்தில் வெறும் குச்சிகளாக நின்று பனியைத் தாங்கி, வசந்தகாலத்தில் மெதுவாக தளிர்விட்டு, கோடைகாலத்தில் பச்சைப் பசேலென இருக்கிறது அத்திமரம். ஆனால், இப்பச்சை இலைகள் நிரந்தரமல்ல. மீண்டும் சக்கரம் சுற்றும். இலைகள் உதிரும், மலரும், மலரும், உதிரும். வாழ்க்கையின் ஓட்டத்தை 'ஃப்ரீஸ்' செய்ய முடியாது. அப்படிச் செய்தால் அது இறந்துவிடும். (இறந்ததை மட்டும்தான் நாம் ஃப்ரீஸ் செய்கிறோம். இல்லையா?)

ஆக, அத்திரமரம் நமக்கு உணர்த்தும் உண்மை என்ன?

'மாற்றம் ஒன்றே நிலையானது'

மாற்றத்திற்கு ஒத்துழைக்கும் உயிர்தான் வாழ முடியும். மறுவாழ்விற்குப் பிறக்க முடியும்.

மேலும், என் உடலின், மனதின் மாற்றம் என்னைத் தவிர வேறு எவருக்கும் தெரியாது. ஆக, மாற்றம் என்பது ஒரு தனிநபர் அனுபவம்.

இறந்தன உயிர்க்கும், இருப்பன இறக்கும் என்ற இதே செய்தியைத்தான், இதே மாற்றத்தைத்தான் இன்றைய முதல் வாசகத்திலும் (காண். தானி 12:1-3) நாம் வாசிக்கிறோம். பல்த்தசார் என்று அழைக்கப்பட்ட தானியேல், பாரசீக மன்னன் சைரசின் காலத்தில் காட்சி ஒன்று காண்கின்றார். அந்தக் காட்சியில் முடிவின் காலம் அவருக்கு அறிவிக்கப்படுகிறது. அந்த முடிவின் காலம் எப்படி இருக்கும் என்று தென்திசை மன்னனுக்கு (பெயரில்லாத மன்னன்!) தானியேல் அறிவிப்பதே இன்றைய முதல் வாசகம். இன்றைய முதல் வாசகம் இறுதிநாளைப் பற்றிச் சொல்லும்போது ஐந்து கூறுகளைக் குறிப்பிடுகிறது: (அ) தலைமைக் காவலர் மிக்கேல் எழும்புவார், (ஆ) துன்ப காலம் வரும், (இ) வாழ்வின் நூலில் பெயர் எழுதப்பட்டவர்கள், (ஈ) நல்லவர்கள் பரிசு பெறுவர், மற்றும் (உ) கெட்டவர்கள் தண்டனை பெறுவர். இன்ப காலம் மறைந்து துன்ப காலமும், அது முடிந்து மீண்டும் இன்ப காலமும் வருவதைச் சொல்கிறது தானியேலின் காட்சி.

'பிறப்பு இறப்பு' 'வளர்ச்சி தளர்ச்சி' 'இன்பம் துன்பம்' எனச் சுற்றிவரும் வாழ்க்கைச் சக்கரத்தை நாம் எப்படி நகர்த்துவது?

இன்றைய இரண்டாம் வாசகமும் (காண். எபி 10:11-14,18), பதிலுரைப் பாடலும் (திபா 16:5) நமக்கு மூன்று பாடங்களைக் கற்பிக்கின்றன:

1. 'ஒரே பலியைச் செலுத்துவது'

கடந்த 6 வாரங்களாக நாம் வாசித்துக்கொண்டுவரும் எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமடல் பகுதி இன்று நிறைவு பெறுகிறது. இயேசுவைத் தனிப்பெரும் தலைமைக்குருவாக முன்வைக்கும் ஆசிரியர், பழைய ஏற்பாட்டுக் குரு நாள்தோறும் செலுத்தும் பலியையும், இயேசுவின் ஒரே பலியையும் ஒப்பிடுகின்றார். இந்த ஆன்மீகச் செய்தியை நம் வாழ்வுப் பாடமாக எப்படி மாற்றுவது? நம் வாழ்க்கையை இரண்டு நிலைகளில் வாழ நம்மால் முடியும்: (அ) நாள்தோறும் ஒரே மாதிரி வாழ்வது - இவ்வகை வாழ்வில் புதுமை இருக்காது. எல்லாரையும் போல மற்றவர்கள் எதிர்பார்ப்பதை மட்டும் நாம் செய்துவிட்டு ஓய்ந்திருப்போம். (ஆ) ஒரே முறை வாழ்வது - இனிமையாக, முழுமையாக வாழ்வது. இவ்வகை வாழ்வில் புதுமையும், புத்துணர்ச்சியும் இருக்கும். இந்த வாழ்க்கை நம் கையெழுத்தைப் போல நமக்கே உரிய தனிப்பட்ட ஒன்றாக இருக்கும்.

நாள்தோறும் ஒரே மாதிரி வாழ்வது எளிது. ஏனெனில் இத்தகைய வாழ்வு சாவி கொடுத்த பொம்மை போல ஒரே இடத்தில் ஆடிக்கொண்டிருப்பது போல, அல்லது ஒரே இடத்தில் ஆடிக்கொண்டிருக்கும் ஓய்வுநாற்காலி போல இருக்கும். ஓய்வுநாற்காலி விடிய விடிய ஆடினாலும் ஒரு இன்ச் கூட நகர்வதில்லை. ஆனால், ஒரே முறையில் தள்ளப்படும் நடைவண்டி புதிய இடத்திற்குப் போவது மட்டுமல்லாமல், அது குழந்தை நடை பழகுவதற்கும் காரணமாக அமைந்துவிடுகிறது. மேலும், நாம் ஒரே முறை செய்யும் செயலில் நம் முழு மனம், சிந்தனை, மற்றும் ஆற்றலைப் பயன்படுத்துகிறோம்.

ஆக, நாம் கேட்க வேண்டிய முதல் கேள்வி: 'நாள்தோறும் போல வாழ்கிறேனா?' அல்லது 'ஒரே முறை போல வாழ்கிறேனா?'

2. 'நிறைவுள்ளவரா(க்கு)தல்'

செடியில் மலரும் ஒரு பூ அப்படியே வாடிவிட்டால் அது வாடிவிட்டது என்கிறோம். ஆனால், அது பிஞ்சாகி பழுத்துவிட்டால் வெம்பிவிட்டது என்கிறோம். ஆனால், முழுவதும் கனியானால் அதை இரசிக்கிறோம். ஆக, கனி என்பது வேரின் நிறைவு. அதுபோலவே, இறப்பு என்பது பிறப்பின் நிறைவு. இந்த நிறைவு உண்மையிலேயே நிறைவாக இருத்தல் வேண்டும். 'இறப்பு உன்னிடம் வரும்போது உயிரோடு இரு' என்பது ஆப்பிரிக்க பழமொழி. அதாவது, வாழும்போதே இறந்துவிடாதே! அல்லது உன்னை நீயே அழித்துவிடாதே! அல்லது வெறும் நடைபிணம் போல வாழாதே!

நேற்றைய என் நாளை விட நான் இன்று நிறைவுள்ளவனாக இருக்க வேண்டும். அதுதான் வளர்ச்சி. நேற்று நான் எடுத்த முடிவுகள் இன்று நான் எப்படி இருக்கிறேன் என்பதை உறுதி செய்கின்றன. அதுபோல, இன்று நான் எடுக்கும் முடிவுகள் நாளை நான் எப்படி இருப்பேன் என்பதை உறுதி செய்கின்றன. அப்படி என்றால், என் முடிவுகளும், தெரிவுகளும் சரியானதாக இருக்க வேண்டும். நேற்றைய காரணத்தால் இன்றைய காரியம் நடக்கிறது. காரியத்தை நான் கட்டுப்படுத்த காரணத்தைக் கட்டுப்படுத்த வேண்டும. இறப்பு என்னும் காரியத்தை நான் கட்டுப்படுத்த வாழ்க்கை என்ற காரணத்தை நான் கட்டுப்படுத்த வேண்டும். ஆக, ஒவ்வொரு பொழுதும் நான் நிறைவு பெறுகிறேனா? என்று கேட்க வேண்டும். அதே நேரத்தில், நம் குறைவுத்தன்மையை அறிந்து உணர்ந்து, அதை நிறைவின் காரணியாகப் பார்த்தல் நலம்.

3. 'ஆண்டவர்தாமே என் உரிமைச் சொத்து. அவரே என் கிண்ணம். எனக்குரிய பங்கைக் காப்பவர் அவரே.'

நம் வாழ்க்கை இனிமையான அனுபவமாக இருக்க கடவுள், விதி, மறுபிறப்பு என எதையாவது ஒன்றை நம்பியே ஆக வேண்டும். இந்த நம்பிக்கையில் நாம் திரும்பிப் பார்க்கும்போதுதான் வாழ்வின் ஒவ்வொரு புள்ளிகளும் மிக அழகாக இணையும். என் வாழ்வில் நடக்கும் நிகழ்வுகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு புள்ளியாக வளர்ந்துகொண்டே வரும். அது கடவுள், விதி, மறுபிறப்பு என்னும் ஒற்றைப் புள்ளியில் இணையும். வெறும் கோலமாவை அள்ளித் தெளிப்பதால் கோலம் வந்துவிடுமா? இல்லை. நிதானமாக, அளந்து, பொருத்தி வைக்கப்படும் புள்ளிகளே கோலத்தை உருவாக்கும்.

என் வாழ்வின் சொத்து என நான் வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் ஒவ்வொன்றை நினைக்கிறேன். சிறு குழந்தையாக இருந்தபோது நிறைய சிகரெட் அட்டைகள் வைத்திருக்கும் சிறுவன் விளையாட்டில் பணக்காரன் எனக் கருதப்படுவான். ஆனால், வயது வந்து நான் வளர்ந்தவடன் சிகரெட் அட்டைகள் சேகரித்தால் அது விளையாட்டுத்தனமாகத் தெரியும். வளர்ந்த நான் நிறைய ரூபாய் நோட்டுக்களைச் சேகரிக்க ஆரம்பிக்கிறேன். மற்றவர்கள் என்னைப் பணக்காரன் என்று சொல்வார்கள். ஒரு காலத்தில் நானே எண்ணிச் சேகரித்த சிகரெட் அட்டைகளை இன்று நான் ஏன் குப்பையில் போடுகிறேன்? வாழ்வில் சேகரிக்கும் சொத்துக்கள் அனைத்தும் மாறக்கூடியவை. என் உடல் நலம், அழகு, படிப்பு, வேலை, பதவி, சமூக நிலை, உறவு என நான் சேகரிக்கும் அனைத்தும் ஒருநாள் காலாவதியாய்ப் போகும். நான் ஓடி ஓடி நிறைக்கும் கிண்ணம் கடைசியில் வெறுமையாய் இருக்கும். நான் இவ்வளவு நாள் போட்டது இந்த ஓட்டைக் கிண்ணத்திலா? என்று மனம் குற்றவுணர்வு கொள்ளும். ஆனால், ஆண்டவரை உரிமைச் சொத்தாகவும், அவரைத் தன் கிண்ணமாகவும் கொண்டிருப்பவர் பேறுபெற்றோர். அவர் ஏமாற்றமடையார். ஏனெனில் அவரின் பங்கைக் காப்பவர் கடவுள்.

உலகம் முடியுமா? முடியாதா? மானிட மகன் வருவாரா? வரமாட்டாரா? என்ற கவலையும், ஏக்கமும் வேண்டாம். 'இதோ சீக்கிரம் வருகிறார்' என யாராவது தெருவில் முழக்கமிட்டுப் போனால், நீங்கள் பதற வேண்டாம். 'மனம் மாறு. அவரிடம் திரும்பி வா' என எவராவது கத்தினால் பயப்பட வேண்டாம். நிதானமாகவும், பொறுமையாகவும் நம் வாழ்வு முடிவு பெறுவதை எண்ணிப் பார்ப்போம்.

'நன்றாக நல்ல வேலை செய்த நாள் நல்ல தூக்கத்தைத் தருவதுபோல, நன்றாக நல்ல நிலையில் வாழ்ந்த வாழ்க்கை நல்ல இறப்பைத் தரும்' என்பார் டாவின்சி.

வரட்டும் அவர் எப்போது வேண்டுமானாலும்! அவருக்கே தெரியாது அவரின் வருகை!
பின் ஏன் நாம் கவலைப்பட வேண்டும்?

அத்திமரத்திலிருந்து நாம் கற்கும் உண்மை இதுதான்: தளர்வன வளரும், வளர்வன தளரும்!