இவ் மறையுரையை வழங்குபவர்

அருட்பணி.இயேசு கருணாநிதி
Archbishop’s House, K. Pudur, Madurai 625 007, India
Email: yesu@live.in

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)









ஆண்டின் பொதுக்காலம் 19ஆம் ஞாயிறு

நம்பிக்கை என்பது!

சாஞா 18:6-9
எபி 11:1-2, 8-19
லூக் 12:32-48

'நம்பிக்கை என்பது நாம் எதிர்நோக்கி இருப்பவை கிடைக்கும் என்னும் உறுதி, கண்ணுக்குப் புலப்படாதவை பற்றிய ஐயமற்ற நிலை' (11:1) என்று நம்பிக்கையை வரையறுக்கிறது இன்றைய இரண்டாம் வாசகம் (காண். எபி 11:1-2, 8-19).

நம்பிக்கை என்றால் என்ன என்பதைப் புரிந்து கொள்ளுமுன், 'நம்பிக்கை' என்ற சொல்லாடலைப் புரிந்து கொள்வோம். 'நம்பிக்கை' என்ற சொல்லாடல், நாம் ஏற்கனவே பயன்படுத்திய 'விசுவாசம்' என்னும் சொல்லாடலின் மாற்றுச்சொல். உதாரணத்திற்கு, 'ஆக, நம்பிக்கை, எதிர்நோக்கு, அன்பு ஆகிய மூன்றுமே நிலையாய் உள்ளன' என்று நாம் இன்று வாசிப்பதை (1 கொரி 13:13) இதற்கு முந்தைய மொழிபெயர்ப்பில், 'எனவே, விசுவாசம், நம்பிக்கை, அன்பு ஆகிய மூன்றுமே நிலையாய் உள்ளன' என்று வாசித்தோம். 'விசுவாசம்' என்பது 'நம்பிக்கை' எனவும், 'நம்பிக்கை' என்பது 'எதிர்நோக்கு' என்றும் மாறிவிட்டது.

அப்படி என்றால், 'நம்பிக்கை' என்ற வார்த்தை 'விசுவாசம்' மற்றும் 'எதிர்நோக்கு' என்னும் இரண்டு பொருளையும்; குறிக்க முடியுமா?

நம்பிக்கை என்றால் என்ன? என்ற கேள்விக்கு இரண்டு பதில்களைச் சொல்கின்றார் எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமடலின் ஆசிரியர்:

அ. நம்பிக்கை என்றால் எதிர்நோக்கி இருப்பவை கிடைக்கும் என்னும் உறுதி

ஆ. கண்ணுக்குப் புலப்படாதவை பற்றிய ஐயமற்ற நிலை

எடுத்துக்காட்டாக, நான் மாட்டுத்தாவணியிலிருந்து ஆரப்பாளையம் செல்ல வேண்டும் என வைத்துக் கொள்வோம். நீதிமன்றம் பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டு மாட்டுத்தாவணி பேருந்து வரும் திசையை நோக்கி பார்த்துக் கொண்டே இருக்கிறேன். இப்போது நான் எதிர்நோக்கி இருப்பது பேருந்து. நான் எதிர்நோக்கி காத்திருக்கும் பேருந்து வரும் என்று உறுதியாக நான் நினைப்பதே நம்பிக்கை. மேலும், பேருந்து இப்போது என் கண்ணுக்குப் புலப்படவில்லை. அப்படி புலப்படாவிட்டாலும் அதைப் பற்றிய ஐயமற்ற நிலையே நம்பிக்கை.

ஆக, நம்பிக்கை என்பதில் எதிர்நோக்கும், காத்திருத்தலும் இருக்கின்றன. மற்ற பக்கம், நம்பிக்கை என்பது புலன் அனுபவங்களுக்கு அப்பாற்பட்டது. எந்தவித ஐயத்திற்கும் அங்கே இடமில்லை.

சில விஷயங்களுக்கு நம்பிக்கை தேவையில்லை. உதாரணத்திற்கு, இரண்டு மடங்கு ஹைட்ரஜனும், ஒரு மடங்கு ஆக்ஸிஜனும் சேர்ந்தால் தண்ணீர் உருவாகும் என்பதற்கு நம்பிக்கை தேவையில்லை. ஏனெனில், அப்படிப்பட்ட சேர்க்கை தண்ணீரை மட்டுமே உருவாக்க முடியும். அல்லது மரத்திலிருந்து விழும் ஆப்பிள் பழம் தரையைத் தொடும் என்பதற்கு நம்பிக்கை தேவையில்லை. அது தரையைத் தான் தொடும்.

இவ்வாறாக, கண்ணுக்குப் புலப்படக்கூடியவை, ஆய்வுக்கூடத்தில் ஆய்வுக்குட்படுத்தப்பட்டு அறியப்பட்ட அறிவியல் உண்மைகளுக்கு நம்பிக்கை தேவையில்லை.

இங்கே அடுத்த கேள்வி வருகிறது. அப்படி என்றால் நம்பிக்கை எதற்குத் தான் தேவை? இறைவன் மற்றும் இல்லாதவை சார்ந்தவற்றிற்கு மட்டும் நம்பிக்கை போதும் என்றால், அதற்கான நுண்ணிய கோட்டை எப்படி வரைவது?

நம்பிக்கைக்கு வரையறை தருகின்ற ஆசிரியர் தொடர்ந்து, ஆபிரகாம் கொண்டிருந்த நம்பிக்கை பற்றி எழுதுகின்றார். ஆபிரகாமின் நம்பிக்கையை மூன்று நிலைகளில் எடுத்துரைக்கின்றார் ஆசிரியர்:

அ. 'தாம் எங்கே போகவேண்டும் என்ற தெரியாதிருந்தும் அவர் புறப்பட்டுச் செல்கின்றார்'

ஆ. 'உயிரற்றவர்போல் இருந்தாலும் தந்தையாவோம் என உறுதியாயிருக்கின்றார்'

ஆ. 'இறந்தோரைக் கடவுள் உயிரோடு எழுப்ப வல்லவர் என அவர் உணர்ந்திருந்தார்'

நாடு, மக்கட்பேறு, மகன் என மூன்றும் அவருக்குக் கிடைத்தது அவர் கொண்டிருந்த நம்பிக்கையின் பயனாலே என்கிறார் ஆசிரியர்.

  ஆபிரகாமின் இந்த நம்பிக்கைக்கு அடித்தளமாய் இருந்தவை இரண்டு:

அ. 'வாக்களித்தவர் நம்பிக்கைக்குரியவர்'

ஆ. 'இவ்வுலகில் தான் அன்னியர் என்பதையும் தற்காலிகக் குடி என்பதையும் ஏற்றுக்கொண்டார்'

நிலையற்றவைகளை நிலையற்றவைகள் என ஏற்றுக்கொள்ளும், இறைவனின் நம்பகத்தன்மை உணர்ந்து கொள்ளும் ஒருவரால் மட்டுமே நம்பிக்கை கொள்ள முடியும்.

இறைவனின் நம்பகத்தன்மைக்கு எடுத்துக்காட்டு அவரின் வாக்குப்பிறழாமை. அதாவது, அவரின் சொல்லுக்கும், செயலுக்கும் முரண் இருக்காது.

அவரின் வாக்குப்பிறழாமைக்கு ஓர் உதாரணம் தருகின்றது இன்றைய முதல் வாசகம் (காண். சாஞா 18:6-9). இறைவன் அளித்த வாக்குறுதிகளை மக்கள் நம்புகின்றனர். அந்த நம்பிக்கை அவர்களை எதிர்நோக்கியிருக்கத் தூண்டியது. இந்த நம்பிக்கை மோசேயின் தலைமையில் நிறைவேறவும் செய்கின்றது. இவர்களின் நம்பிக்கை வீண் போகவில்லை. இறைவன் மக்களை விடுவித்து அவர்களை கானான் நாட்டிற்கு அழைக்கின்றார்.

இன்றைய நற்செய்தி வாசகம் (லூக் 12:32-48) விழிப்பாயிருத்தலை வலியுறுத்துவது போலத் தோன்றினாலும், அதை நெருக்கமாக வாசிக்கும்போது அதன் செய்தியும் 'நம்பிக்கை' என்பதைப் பற்றியே.

இன்றைய நற்செய்திப் பகுதியை மூன்று அறிவுரைப் பகுதிகளாக எடுத்துக்கொள்ளலாம்:

அ. 'விண்ணுலகில் செல்வத்தை தேடிக்கொள்ளுங்கள்!'

ஆ. 'ஆயத்தமாய் இருங்கள்!'

இ. 'உங்கள் பணியைச் செய்துகொண்டிருங்கள்!'

இந்த மூன்றும் யாருக்குச் சாத்தியமாகும்? நம்பிக்கையைக் கொண்ட ஒருவருக்குத்தான் இம்மூன்றும் சாத்தியமாகும். ஏனெனில் இந்த மூன்றிலுமே எதிர்நோக்கும், காத்திருத்தலும், ஐயமற்ற நிலையும் இரண்டறக் கலந்திருக்கின்றன.

'மண்ணுலகில் செல்வம் சேர்க்க வேண்டாம்' என எச்சரிக்கும் இயேசு, 'உடைமைகளை விற்றுத் தர்மம் செய்யுங்கள்' என அறிவுறுத்துகின்றார்.

'வெளியே சென்றிருக்கும் தலைவனின் வருகைக்குக் காத்திருத்தலையும்,' 'திருடர்கள் திருடாதவண்ணம் கவனமாய் இருத்தலையும்' எடுத்துக்காட்டி 'ஆயத்தமாய் இருக்க' அழைக்கின்றார்.

'இரண்டாவது அறிவுரைப் பகுதியின் தொடர்ச்சியாக மூன்றாம் பகுதி இருந்தாலும், இங்கே, 'ஒவ்வொருவரும் தனக்குக் கொடுக்கப்பட்ட பணியில் அக்கறையாக இருக்க வேண்டும்' என அழைப்பு விடுக்கப்படுகின்றது.

இன்றைய இறைவாக்கு வழிபாடு நமக்கு வைக்கும் சவால்கள் ஐந்து:

அ. 'அஞ்சாதிருங்கள்!'

  'சிறுமந்தையே' என் தன் சீடர்களை அழைக்கின்றார் இயேசு. இந்த அறிவுரைப் பகுதியில் பேதுரு மட்டுமே இயேசுவோடு பேசுகின்றார். ஆக, இந்த இறைவாக்குப் பகுதி இயேசு தன் சீடர்களுக்கு, அல்லது திருச்சபையின் முதல் உறுப்பினர்களுக்குச் சொல்வது. இயேசுவை ஏற்றுக்கொள்ளாதவர்களுக்கு நம்பிக்கை என்பது ஓர் அடையாளம். ஆனால், இயேசுவை ஏற்றுக்கொண்டு அவரில் திருமுழுக்கு பெற்ற அனைவருக்கும் நம்பிக்கை என்பது ஓர் அனுபவம். நம்பிக்கையின் முதல் எதிரி அச்சம். தனக்குப் பிறந்த முதல் மகன் இஸ்மாயேல் தன் வீட்டை விட்டு துரத்தப்பட்டபோது ஆபிரகாம் பயந்திருப்பார். 'இறைவனின் வாக்குறுதி நிறைவேறாதோ?' என அச்சம் கொண்டிருந்திருப்பார். இறைவனின் பத்து அறிகுறிகளை எகிப்து நாட்டில் கண்டாலும், செங்கடலைக் கண்டவுடன் இஸ்ரயேல் மக்களுக்கு அச்சம் வந்துவிடுகிறது. அச்சம் இல்லாத உள்ளமே நம்பிக்கை கொள்ள முடியும்.

ஆ. 'ஆயத்தநிலை'

'இடையை வரிந்துகட்டிக் கொள்ளுங்கள்,' 'விளக்குகள் எரிந்து கொண்டிருக்கட்டும்,' 'தூங்காமல் இருங்கள்!' - ஆயத்தநிலையின் மூன்று கூறுகள் இவை. திருமண விருந்துக்குச் சென்ற வீட்டுத்தலைவன் என்று உருவகத்தைத் தொடங்கி மானிட மகன் என முடிக்கின்றார் லூக்கா. 'இயேசுவின் இரண்டாம் வருகை' உடனடியாக இருக்கும் என தொடக்கக் கிறித்தவர்கள் நம்பியிருந்தார்கள். ஆனால், இயேசு இன்னும் வராததால் நம் நம்பிக்கை தளர்ந்து கொண்டே வருகின்றது.

இ. 'நம்பிக்கைக்கு உரியவர்'

தன் உள்ளத்தில் நம்பிக்கை கொண்டிருந்து ஆயத்தமாக விழித்திருந்து எதிர்நோக்கியிருந்ததால், தன் தலைவருக்கு ஏற்புடையவராகிறார் அவரின் பணியாளர். இந்தப் பணியாளரின் நம்பிக்கை, அவரின் நம்பகத்தன்மையாக விரிகின்றது. ஒரு காலத்தில் ரூபாய் நோட்டுக்களும், வீட்டு உபயோகப் பொருள்களும்தாம் போலியாக அல்லது நம்ப முடியாதவையாக இருந்தன. ஆனால் இன்று, நாம் குடிக்கும் பால், தண்ணீர், பயன்படுத்தும் எண்ணெய், படிக்கும் பாடம், சம்பாதிக்கும் உறவு அனைத்திலும் நம்பகத்தன்மை குறைந்துகொண்டே வருகின்றது. 'நான் எப்படியிருந்தால் உனக்கென்ன?' என்ற கேள்வியை நம்பகத்தன்மையின் தோல்விக்கு அடையாளம். 'உன்னை யார் நம்பச் சொன்னது?' என்றும் நாம் கேட்கிறோம். நம்பகத்தன்மையை ஒருவர் இழக்கும்போது அவர் இரண்டு வாழ்வு வாழ்கின்றார். ஆகையால்தான் நம்பகத்தன்மை இழந்தவர் இரண்டாக வெட்டப்படுவார் என எச்சரிக்கிறார் இயேசு.

ஈ. 'காணாதவவை'

கதவுக்கு வெளியே நிற்கும் தலைவன் பற்றி பணியாள் தன் உள்ளத்தில் நினைத்துக் கொண்டே இருத்தல் வேண்டும். காண்பது மட்டுமே உண்மையல்ல. காணாதவையும் உண்மையே. கண், காது, மூக்கு, நாக்கு, தோல் என்னும் ஐம்புலன்களை வைத்து நாம் காண, கேட்க, நுகர, சுவைக்க, தொட முடியாதவைகள் இருக்கின்றன என்ற ஐயமற்ற நிலைதான் நம்பிக்கை.

உ. 'பொறுப்பும், எதிர்பார்ப்பும்'

யாரிடம் அதிக பொறுப்பு கொடுக்கப்படுகிறதோ, அவரிடம் அதிகம் எதிர்பார்க்கப்படும். பொறுப்பற்றவர் தண்டிக்கப்படுவார். பொறுப்பானவர் தலைவனின் நல்லெண்ணத்தைச் சம்பாதிப்பார். ஆக, நாம் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும், நாம் எடுக்கும் ஒவ்வொரு முடிவுக்கும், எதிர் செயலும், முடிவும் இருக்கின்றது.

இறுதியாக,

வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் இந்த நம்பிக்கை ஒன்றே நம்மை வழிநடத்துகின்றது. ஏனெனில் அடுத்த நொடி என்ன நடக்கும் என்பது நமக்கு காண இயலாத ஒன்றாக இருக்கின்றது. 'நான் எப்போதும் நன்றாக இருக்க வேண்டும்' என்று என்னை மையப்படுத்தி வாழ்வது மட்டும் நம்பிக்கை அல்ல. இந்த காண இயலாத நிலையிலும் என் பொறுப்பை உணர்ந்து செயல்படுவதே நம்பிக்கை.

நம்பிக்கை எப்போதும் மலர்ப்படுக்கை அன்று. நம்பிக்கையைக் குலைக்கின்றவாறு, நம்ப முடியாதவாறு நிகழ்வுகள் அமையும். அந்த நேரங்களில்தாம் நாம் அதிகக் காத்திருத்தலோடு இருக்க வேண்டும்.

அந்த நம்பிக்கை என்ன என்பதை நாம் தொடர்ந்து கற்றுக்கொண்டே இருக்கின்றோம்.

வாழ்த்துக்களும், செபங்களும்.