இவ் மறையுரையை வழங்குபவர்

அருட்பணி.இயேசு கருணாநிதி
Archbishop’s House, K. Pudur, Madurai 625 007, India
Email: yesu@live.in

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)









பொதுக்காலம் 10ஆம் ஞாயிறு

ஒரே பாதை, இரண்டு பயணங்கள்!

1 அர 17:17-24
கலா 1:11-19
லூக் 7:11-17

நயீன் என்ற அந்த ஊருக்கு ஒரே பாதை. அந்தப் பாதையில் இரண்டு பயணங்கள். இயேசுவும், அவரின் சீடர்களும், பெருங்கூட்டமும் ஊருக்கு வெளியே இருந்து ஊருக்கு உள்ளே வருகின்றார்கள். ஒரு கைம்பெண்ணும், அவரின் உறவினர்களும் உயிரற்ற ஓர் இளைஞனைப் பாடையில் தூக்கிக் கொண்டு ஊருக்கு உள்ளே இருந்து ஊருக்கு வெளியே வருகின்றார்கள்.

தமஸ்குவுக்கும், எருசலேமிக்கும் இடையே ஒரு பாதை. நடுவில் இருக்கிறார் பவுல். தமஸ்கு நோக்கி சவுலாக பயணம் செய்கின்றார். மனம் மாறி எருசலேம் நோக்கி பவுலாக பயணம் செய்கின்றார். ஒரே வீடு. தான் தங்குவதற்கு இடமளித்த பெண்ணின் உயிரற்ற மகனைத் தூக்கிக் கொண்டு கீழிருந்து மேலே பயணம் செய்கின்றார் எலியா. அதே மகனை உயிருடன் தூக்கிக் கொண்டு மேலிருந்து கீழே பயணம் செய்கின்றார் எலியா.

செபக்கூடத்தலைவர் யாயிரின் மகள் உயிர்பெற்று எழுந்ததை மத்தேயு (9:18-26), மாற்கு (5:35-42), மற்றும் லூக்கா (8:40-56) என்னும் ஒத்தமைவு நற்செய்தியாளர்கள் பதிவு செய்ய, இந்த நிகழ்வில் இயேசுவோடு உடனிருந்த யோவான் இந்த நிகழ்வு குறித்து அமைதி காக்கின்றார். ஆனால், மற்ற மூன்று நற்செய்தியாளர்கள் பதிவு செய்யாத இலாசரின் உயிர்ப்பை அவர் பதிவு செய்கின்றார் யோவான் (11:38-44). மத்தேயு, மாற்கு, யோவான் பதிவு செய்யாத நயீன் நகர கைம்பெண் மகன் உயிர்பெறும் நிகழ்வை (இன்றைய நற்செய்தி) பதிவு செய்கின்றார் லூக்கா.

எலியா (முதல் வாசகம், 1 அரச 17:17-24) மற்றும் எலிசா (2 அரச 4:18-31) இறைவாக்கினர்கள் தங்கள் பணியின்போது, தாங்கள் தங்குவதற்கு இடம் தந்த பெண்களின் மகன்கள் இறந்தபோது அவர்களுக்கு மீண்டும் உயிர் தருகின்றனர். இந்த இரண்டு நிகழ்வுகளும் அவர்களை பெரிய இறைவாக்கினர்களாக மக்களுக்கு முன் வைக்கின்றன.

இந்தப் பின்புலத்தில் நயீன் நகர நிகழ்வைப் பார்க்கும்போது, இந்நிகழ்வு உண்மையில் நிகழ்ந்ததா? அல்லது இயேசுவை இறைவாக்கினர் என்று மக்கள் அறிந்து கொள்வதற்காக (காண். லூக் 7:16), லூக்கா இந்த நிகழ்வை இலக்கியமாக உருவாக்கினாரா? இது அவரின் உருவாக்கம் என்று சொல்வதற்கு மற்றொரு காரணமும் இருக்கிறது. இந்த நிகழ்வுக்குப் பின்வரும் பகுதியில் (7:18-35) திருமுழுக்கு யோவானை மக்கள் இறைவாக்கினர் என்று சொல்லும் பகுதி வருகிறது. ஆக, திருமுழுக்கு யோவானை இறைவாக்கினர் என்று பதிவு செய்வதற்கு முன்பாகவே லூக்கா இயேசுவை 'இறைவாக்கினர்' என்று பதிவு செய்திட ஆர்வம் காட்டுகின்றார். மேலும், 'கடவுள் மக்களைத் தேடி வந்திருக்கிறார்' (7:16) என்ற மக்களின் ஆரவாரம் நமக்கு, திருமுழுக்கு யோவானின் அப்பா சக்கரியாவின் புகழ்ப்பாடலை நினைவுபடுத்துகிறது. 'இருளிலும் இறப்பின் பிடியிலும் இருப்போர்க்கு ஒளிதரவும், நம்முடைய கால்களை அமைதி வழியில் நடக்கச் செய்யவும் நம் கடவுளின் பரிவுள்ளத்தாலும் இரக்கத்தாலும் விண்ணிலிருந்து விடியல் நம்மைத் தேடி வருகிறது' (லூக் 1:78-79) எனப் பாடுகின்றார் சக்கரியா. சக்கரியாவின் இந்த வார்த்தைகளுக்கும், நயீன் நகர நிகழ்வுக்கும் நிறைய பொருத்தங்கள் இருக்கின்றன:

'இருளில், இறப்பின் பிடியில் இருப்பவர்' - 'கைம்பெண்ணின் மகன்’
'ஒளி தர' - 'உயிர் கொடுக்க'
'நம் கால்களை அமைதி வழியில் நடக்கச் செய்ய' - கைம்பெண்ணின் கலக்கம் நீக்க, 'அழாதீர்!' என்கிறார் இயேசு
'கடவுளின் பரிவுள்ளம்' - 'இயேசு கைம்பெண் மீது பரிவு கொள்கின்றார்’
'விண்ணிலிருந்து விடியல்' - 'நாசரேத்திலிருந்து நயீன் வந்த பகலவன் இயேசு' 'இறைவாக்கினர் தோன்றியுள்ளார்'
'தேடி வருகிறது' - 'கடவுள் நம்மைத் தேடி வந்திருக்கிறார்' என ஆர்ப்பரிக்கின்றனர் மக்கள்
மேலும், அங்கே, 'குழந்தாய், நீ உன்னத கடவுளின் இறைவாக்கினர் எனப்படுவாய்' (1:76-77) என்கிறார் சக்கரியா.
இங்கே, 'நம்மிடையே பெரிய இறைவாக்கினர் ஒருவர் தோன்றியுள்ளார்' (7:16) என்கின்றனர் மக்கள்.
இந்த வார்த்தை ஒற்றுமைகளை வைத்துப் பார்க்கும்போது, நயீன் நிகழ்வை ஓர் இலக்கியப் படைப்பு (literary creation) என்றே பார்க்கத் தோன்றுகிறது.

லூக்கா தான் அறிந்திருந்த முதல் ஏற்பாட்டு எலியா நிகழ்வை (முதல் ஏற்பாட்டில் எலியா முதன்மையான இறைவாக்கினராகக் கருதப்பட்டவர்) ஒட்டி இயேசுவை இறைவாக்கினராகக் காட்ட, நயீன் நிகழ்வைப் படைத்திருந்தாலும், இரண்டு நிகழ்வுகளுக்கும் ஒற்றுமைகளும், வேற்றுமைகளும் இருக்கின்றன.

அ. ஒற்றுமைகள்
- இரண்டு பேருமே தங்கள் அன்னையருக்கு ஒரே மகன்
- இரண்டு நிகழ்வுகளின் இறுதியிலும், அதைக் காண்பவர்களின் ஆரவாரம், 'நீர் ஓர் இறைவாக்கினர்!’ என்பதே

ஆ. வேற்றுமைகள்
- இறந்த மகனின் அன்னை தன்னிடம் வேண்டிக்கொண்டபின் உயிர் தருகின்றார் எலியா. ஆனால், அன்னை தன்னிடம் வேண்டிக்கொள்ளாமலே, மகனுக்கு உயிர் தருகின்றார் இயேசு.
- 'என் கடவுளாகிய ஆண்டவரே, இந்தச் சிறுவன் மீண்டும் உயிர் பெறச் செய்யும்' எனக் கடவுளிடம் மன்றாடுகின்றார் எலியா. 'இளைஞனே, நான் உனக்குச் சொல்கிறேன். எழுந்திரு!' என்கிறார் இயேசு.
- அந்நிகழ்வு பூட்டிய அறைக்குள் நடக்கிறது. இந்நிகழ்வு வெட்ட வெளியில் எல்லார்முன்னும் நடந்தேறுகிறது.
- அந்நிகழ்வில் எலியாவின் தொடுதல் அற்புதத்தை நிகழ்த்துகிறது. இந்நிகழ்வில் இயேசுவின் வார்த்தை அற்புதத்தை நிகழ்த்துகிறது.
ஒற்றுமைகளை விட வேற்றுமைகளை அதிகப்படுத்தி, இயேசுவைப் பரிவுள்ளம் கொண்டவராகக் காட்டி, எலியாவை விட பெரிய இறைவாக்கினர் எனப் பதிவு செய்கின்றார் லூக்கா.

முதல் வாசகத்திலும், மூன்றாம் வாசகத்திலும் இரண்டு இளைஞர்கள் உயிர் பெற்றெழுதல் பற்றி இருக்க, இரண்டாம் வாசகம் மட்டும் ஏன் பவுலின் மனமாற்றம் பற்றி இருக்கிறது?

மேலோட்டமாகப் பார்த்தால், பவுலின் மனமாற்றத்திற்கும், இளைஞர்கள் உயிர் பெறும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு இல்லாததுபோல இருந்தாலும், மிக முக்கியமான நூல் ஒன்று இந்த நிகழ்வுகளை இணைக்கிறது. கடவுளை அறியாமல் இருளில் இறந்து கிடந்த சவுல் என்ற இளைஞன், இயேசுவை எதிர்கொண்டவுடன் பவுலாக உயிர்க்கின்றார்.

ஆக, முதல், இரண்டாம், மூன்றாம் வாசகங்கள் என அனைத்திலும், 'கடவுளைச் சந்திக்கும் முன்,' 'கடவுளைச் சந்தித்த பின்' என்ற இரண்டு கால நிலைகள் இருக்கின்றன.

'கடவுள் சந்திக்கும் முன்' இறந்து கிடந்த பணக்காரப் பெண்ணின் மகன், எலியா வழியாக 'கடவுள் சந்தித்த பின்' உயிர் பெற்று எழுகின்றார்.

'கடவுள் சந்திக்கும் முன்' கிறிஸ்தவர்களைக் கொன்றழிக்க வாளேந்திய சவுல், 'கடவுளைச் சந்தித்த பின்' பிறஇனத்தாரின் திருத்தூதராக மாறுகின்றார்.

'கடவுள் சந்திக்கும் முன்' பாடையில் தூக்கி வரப்பட்ட கைம்பெண்ணின் மகன், 'கடவுள் சந்தித்த பின்' உட்கார்ந்து, பேச ஆரம்பிக்கின்றான்.

இவ்வாறாக, 'கடவுள் தேடி வருதல்' அல்லது 'கடவுள் சந்தித்தல்' என்ற லூக்காவின் கருப்பொருள் இன்றைய மூன்று நற்செய்திகளிலும் நூலாக இழைந்தோடுகின்றது.

இன்றைய நற்செய்தி வாசகத்தைக் கொஞ்சம் அழகியல் பார்வையில் பார்ப்போம்.

இரண்டு குடும்பங்களைச் சந்திக்கின்றார் இயேசு: ஒன்று, கைம்பெண்-மகன் என்னும் சிறிய குடும்பம். சீடர்கள்-கூட்டம்-இறப்பு ஊர்வலம் என்னும் பெரிய குடும்பம். இரண்டு குடும்பங்களும் வெறுமையாக இருக்கின்றன. முதல் குடும்பத்தில் கணவன் இல்லை. இன்று மகனும் இல்லை. இரண்டாம் குடும்பத்தின் நிலை இன்னும் மோசம். அங்கே கடவுளே இல்லை. ஆகையால்தான், 'கடவுள் தம் மக்களைத் தேடி வந்திருக்கிறார்' என ஆர்ப்பரிக்கின்றனர்.

'இறந்த ஒருவரை தூக்கிக் கொண்டு வந்தனர்' - இப்படித்தான் இறந்தவரை அறிமுகம் செய்கின்றார் லூக்கா. அவர் ஓர் இளைஞன் என்பது நமக்கு நிகழ்வின் இறுதியில் தான் தெரிய வருகிறது. பெயர், புகழ், வயது, பின்புலம், சொத்து - இவை அனைத்தையும் ஒருசேர அழித்துவிடுகிறது இறப்பு.

'நயீன் ஊரைச் சார்ந்த பலர் இறப்பு ஊர்வலத்தில் கைம்பெண்ணோடு உடனிருந்தனர்' எனப் பதிவு செய்கின்றார் லூக்கா. இதிலிருந்து, இறந்தவர் ஓர் இளைஞன் என்பதை நாம் ஊகிக்க முடிகிறது. இளைஞனின் இறப்பின் காரணம் எதுவும் சொல்லப்படவில்லை. ஆனால், எதிர்பாராத இழப்பு அந்த ஊரையே ஆட்டுவிக்கிறது.

'அவர் ஒரே மகன்,' 'அவருடைய தாய் கைம்பெண்' என கைம்பெண்ணின் இரண்டு இழப்புக்களை - கணவன், மகன் - ஒருசேரப் பதிவுசெய்து, வாசகரை 'உச்' கொட்ட வைக்கின்றார் லூக்கா. யூத மரபில் 'இளவயதில் இறப்பதும்,' 'வாரிசு இன்றி இறப்பதும்' கடவுளின் சாபங்களாகக் கருதப்பட்டன. ஆக, நயீன் நகர மக்களைப் பொறுத்தவரையில், இந்தச் சின்னக் குடும்பம் கடவுளால் சபிக்கப்பட்ட குடும்பம்.

இயேசு சின்னக் குடும்பத்தோடு மட்டுமே உரையாடுகின்றார். 'அழாதீர்' என்று அம்மாவைப் பார்த்தும், 'இளைஞனே, எழுந்திரு!' என்று மகனைப் பார்த்தும் சொல்கின்றார். ஒருவர் இதுவரை செய்து கொண்டிருக்கும் ஒன்றை இப்போது விட வேண்டும் என கட்டளை தருகின்றார் இயேசு - அழுது கொண்டிருக்கும் பெண் இனி அழக் கூடாது. படுத்திருக்கும் மகன் இனி படுக்கக் கூடாது - இதுவே இயேசுவின் கட்டளை. 'அவர்களுடைய கண்ணீர் அனைத்தையும் அவர் துடைத்து விடுவார். இனிமேல் சாவு இராது. துயரம் இராது. அழுகை இராது. துன்பம் இராது' என்ற யோவானின் திருவெளிப்பாட்டு வார்த்தைகள் (21:4) இங்கே முன்னோட்டமாக நடந்தேறுகின்றன.

'பாடையைத் தொடுகின்றார் இயேசு' - முதல் வாசகத்தில் எலியா மகனைத் தொட்டது, மகன் மேல் மூன்று முறை ஏறிப்படுத்ததும், அவருக்கு உயிர் கொடுக்க. ஆனால், இங்கே இயேசுவின் தொடுதல், 'நில்லுங்க' என்று மற்றவர்களை நிறுத்தும் அடையாளமாகத் தான் இருக்கிறது. மெசியா ஒரு குருவாக வருவார் என எதிர்ப்பார்த்திருந்தனர் சில யூதர்கள். இயேசு ஒரு குரு இல்லை என்பதை மறைமுகமாக இங்கே பதிவு செய்கின்றார் லூக்கா. யூதர்களில் குருவாக அருள்பணி செய்பவர் ஒருபோதும் இறந்தவரையோ, அல்லது இறந்தவரின் உடலைத் தொடும் எதையும் தொட்டுத் தன்னையே தீட்டாக்கிக் கொள்ளக்கூடாது என்பது மோசேயின் சட்டம். இங்கே, இயேசு பாடையைத் தொடுகின்றார்.

'எழுந்திரு!' - கடவுளின் 'சொல்' மற்றும் 'செயல்' என இரண்டையும் குறிக்க எபிரேயத்தில் 'தவார்' என்ற ஒற்றைப் பதம் பயன்படுத்தப்படுகின்றது. அதாவது, கடவுளுக்கு சொல்லும், செயலும் ஒன்றே. 'ஒளி உண்டாகட்டும்!' என்று சொல்கிறார். அந்த சொல்லோடு சேர்ந்து ஒளி உண்டாகிறது. இங்கே, 'எழுந்திரு!' என்று சொல்கின்றார் இயேசு. அந்த சொல்லோடு இணைந்து எழுந்து அமர்கின்றார் இளைஞர்.

'இறந்தவர் எழுந்து உட்கார்ந்து பேசத் தொடங்கினார்' - அவர் என்ன பேசினார் என்பதைப் பதிவு செய்யாமல் விடுகின்றார் லூக்கா. இறந்தவர் பேசத் தொடங்கினார் என்பது இங்கே ஓர் உருவகம். அதாவது, இதுவரை ஒன்றும் பேசாமல் இருந்த மக்கள் கூட்டம் பேசத் தொடங்கியது என்பதை இந்த இளைஞர் அடையாளப்படுத்துகிறார்.

'இயேசு அவரை அவர் தாயிடம் ஒப்படைத்தார்' - உயிர் பெற்றவர் இளைஞர் மட்டுமல்ல. அவரின் தாயும்தான். ஏனெனில், 'கைம்பெண்' என்ற நிலையிருந்து 'தாய்' என்ற நிலைக்கு மீண்டும் எழுந்து நிற்கின்றார் அவர். இறந்த இளைஞர் உயிர்பெற்ற நிகழ்வைப் பார்த்த பெரிய குடும்பத்தினர் - சீடர்கள் மற்றும் கூட்டத்தினர் - முதலில் அச்சம் கொள்கின்றனர். பின்னர் கடவுளைப் போற்றிப் புகழ்கின்றனர்.

இறுதியாக, 'வெறுமை' என்ற வார்த்தையிலிருந்து, 'நிறைவு' என்ற வார்த்தையை நோக்கி நகர்கிறது நற்செய்தி வாசகம். 'இல்லாத இளைஞன்' இப்போது 'இருக்கிறார்.' 'பேசாத மக்கள்' இப்போது 'பேசுகின்றனர்.' இயேசுவின் புகழும் யூதேயா நாடு முழுவதும் பரவுகிறது.

இன்றைய வாசகங்கள் எனக்குத் தரும் பாடங்கள் ஐந்து:
1. பாதை ஒன்றுதான், ஆனால், பயணங்கள் இரண்டு. மோசே வழியாக முதல் ஏற்பாட்டு மக்களிடம் பேசும் இறைவன், 'இதோ! உனக்கு முன் வாழ்வையும், சாவையும், நன்மையையும், தீமையையும் வைக்கிறேன். கையை நீட்டித் தேர்ந்துகொள்!' (இச 30:15-16) என்கிறார். வாழ்க்கைப் பாதை ஒன்றுதான். ஆனால், நாம் எதைத் தேர்ந்து கொள்கிறோமோ, அதைப் பொறுத்தே நம் பயணம் அமைகின்றது. மேலும், இந்தப் பயணத்தில் நான் செல்லும் திசை சரியாக இருக்கிறதா என்று நான் கவனமாக இருக்க வேண்டும். இந்தப் பக்கமும் விரும்புகிறேன், அந்தப் பக்கமும் போக விரும்புகிறேன் என்று என் உள்ளம் பிளவுபட்டிருந்தால், நான் ஒரே இடத்தில் தேக்கம் அடைந்துவிடும் ஆபத்து இருக்கிறது. இந்த இடத்தில் இயேசு தரும் நம்பிக்கை என்ன தெரியுமா? நான் ஒருவேளை இறப்பை, இருளை, தீமையைத் தெரிந்து கொண்டாலும், என் எதிரே அவர் வந்து 'என் வாழ்க்கை என்னும் பாடையை' தொட்டு, 'நிறுத்து!' என்று சொல்வார். இதை அவர் என்மேல் கொண்டிருக்கும் கண்டிப்பினால் சொல்வதில்லை. மாறாக, என்மேல் கொண்ட 'பரிவினால்' சொல்கின்றார். என் செயல் எப்படி இருக்க வேண்டும்? 'நிறுத்து!' என்று அவர் சொன்னவுடன், நான் நிறுத்த வேண்டும். 'இல்லை ஆண்டவரே, இன்னும் கொஞ்ச நாள் இப்படியே இருக்கிறேனே!' என்று அவரிடம் சொல்ல முடியாது. அப்படிச் சொல்ல நான் விழைந்து, நிறுத்தாமல் சென்றுகொண்டே இருந்தால், கல்லறை வந்துவிடும். ஆக, பாதையிலேயே என் பயணத்தை நான் சரிசெய்து கொள்ளல் வேண்டும்.

2. 'தடுத்தாட்கொள்ளும் இறைவன்!' - 'நிறுத்துங்கள்!' என்று சொல்லி பாடை சுமந்தவர்களையும், 'அழாதீர்!' என்று சொல்லி கைம்பெண்ணையும், 'எழுந்திரு' என்று சொல்லி இளைஞனையும், 'திரும்பு' என்று சொல்லி பவுலையும் தடுத்தாட்கொள்கிறார் இறைவன். 'ஐயோ! எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது?' என்று கைம்பெண் போல் நான் என் கையறுநிலையில் புலம்பினாலும், 'அவனைக் கொல்லாமல் விட மாட்டேன்!' என்று பவுல் போல் நான் என் கைவலிமையை நினைத்து பெருமை கொண்டாலும், அவர் என்னைத் தடுத்தாட்கொள்ள வல்லவர். என் பயணத்தின் பாதி வழியில் என்னைத் தடுத்தாட்கொண்டு, மீதி வழியின் பயணத்தை முழுமையாக மாற்றுபவர் அவர்.

3. 'கடவுள் சந்திப்புக்கு முன் - கடவுள் சந்திப்புக்குப் பின்.' முதல் வாசகத்துப் பெண்ணின் மகன், இரண்டாம் வாசகத்து பவுல், மூன்றாம் வாசகத்து இளைஞர் இந்த மூவரின் வாழ்க்கைiயும் இப்படிப் பிரித்துவிடலாம். கடவுளைச் சந்தித்தபின் அவர்கள் தங்கள் பழைய நிலையில் இல்லை. புதிய உயிரையும், புதிய பணியையும் பெறுகின்றனர். கடவுள் ஒருவரைச் சந்தித்துவிட்டால் அங்கே அவருக்கு பழைய வாழ்க்கை நிலை தேவையில்லை. அப்படி பழைய வாழ்க்கை நிலையில் இருப்பது எப்படி இருக்கும் தெரியுமா? நன்றாகக் குளித்து, நறுமணத் தைலம் போட்டுவிட்டு, மீண்டும் பழைய அழுக்கு சட்டையை அணிந்து கொண்டு விழாவுக்கோ, கோயிலுக்கோ செல்வது போன்று அது இருக்கும்.

4. 'பரிவு' - இது கடவுளின் முகம். 'ரெகாமிம்' என்ற எபிரேய வார்த்தை 'பரிவைக்' குறிக்கும். இந்த வார்த்தைக்கு தாயின் வயிறு என்றும், தாய் பால் குடிக்கும் குழந்தையைக் குனிந்து பார்த்தல் என்ற பொருளும் உண்டு. இதுதான் கடவுள் நம்மிடம் இறங்கி வரும் இயல்பு. நாம் தவறும்போது, நம் வாழ்வில் ஒளி அணையும்போது, குச்சியை எடுத்து அடிக்க வரும் கண்டிப்பான ஆசிரியர் அல்ல அவர். மாறாக, அணைந்த ஒளியை ஏற்றக் குனியும் தாய். இந்தத் தாயின் பரிவை நான் பெற்றேன் என்றால், அந்தப் பரிவை நான் மற்றவருக்குக் காட்டுதலும் அவசியம்.

5. 'நம்பிக்கை அறிக்கை.' இயேசுவின் அற்புதத்தைக் கண்ட மக்கள் ஆரவாரம் செய்கின்றனர். 'நம்மிடையே இறைவாக்கினர் ஒருவர் தோன்றியுள்ளார். கடவுள் தம் மக்களைத் தேடி வந்திருக்கிறார்' என அக்களிக்கின்றனர். இது மக்களின் நம்பிக்கை அறிக்கை மட்டுமல்ல. இந்த நிகழ்வை வாசிக்கும் ஒவ்வொருவரும் தன் உள்ளத்தில் இந்த நம்பிக்கையை அறிக்கையிட வேண்டும். இந்த நம்பிக்கையை அறிக்கையிட என்னில் தடையாக இருப்பது எது? ஒருவேளை கடவுள் மக்களைத் தேடி வந்ததை நான் இன்னும் அறியாமல் இருக்கிறேனா?

இறுதியாக,
'முடிவு' என்ற நினைப்பவருக்கு 'விடிவு' என்று காட்டுவதுதான் இறைச்செயல். நம் இறைவன் வியப்புக்களின் இறைவன். ஆக, எந்தவொரு எதிர்மறையான நிகழ்வு - இழப்பு, இறப்பு - நிகழ்ந்து நாம் வெறுமை, விரக்தி என உணர்ந்தாலும், நம் வாழ்வின் பாதையின் ஒரு திருப்பத்தில் அவர் வந்து கொண்டிருப்பார். நம்மை எதிர்கொள்வார். நிறுத்துவார். எழுந்து நிற்க வைப்பார்.

'எல்லாம் முடிந்துவிட்டது!' என்று கண்கலங்கி நகரை விட்டு வெளியேறுவோரை எதிர்கொண்டு, அவர்களின் கண்ணீர் போக்கும் கரம் நீட்டினால் என் வழியாகவும் கடவுள் மக்களைத் தேடி வருகிறார்!