இவ் மறையுரையை வழங்குபவர்

அருட்பணி. வேத போதக சகாய செல்வராஜ் (கப்புச்சின் )
Burkina Faso, West Africa.
vedasahayam1982@gmail.com

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)

புனித வெள்ளி முதலாம் ஆண்டு

யாரெல்லாம் இயேசுவின் அன்பு சீடர்கள்

ஏசாயா 52:13-53:12
எபிரேயர் 4:14-16;5:7-9
யோவான் 18:1-19,42

இறை இயேசுவில் பிரியமானவர்களே இன்றைய நாள் கிறிஸ்தவத்தின் ஒரு முக்கியமான நாள். அன்பிற்கு இலக்கணத்தை எழுதியநாள் தான் இந்நாள். அன்பின் உச்சக்கட்டம் எதில் இருக்கிறது என்றால்இ தான் அன்பு செய்தவர்களுக்காக தனது உயிரை கொடுப்பது தான் அன்பின் உச்சகட்டமாகும். இயேசு தான் அன்பு செய்த மக்களுக்காக தனது உயிரை தியாகம் செய்கிறார். யோவான் நற்செய்தி 15:13-ல் “தன் நண்பர்களுக்காக உயிரைக் கொடுப்பதைவிட மேலான அன்பு யாரிடமும் இல்லை” என்று அன்புக்கு இலக்கணம் வகுத்தவர் நமது இயேசு இதோ இன்று தயாம் திருச்சபையானது புனித வெள்ளியை சிறப்பிக்கறது. காரணம் புனித வெள்ளி என்பது சாதரண வெள்ளி போன்றது அல்ல. இன்று நமது சிந்தனைகள் அனைத்தும் சிலுவையை நோக்கிய வண்ணம் இருக்க வேண்டும். ஏதேன் தோட்டத்தில் ஒரு மரத்தின் கனியை பரித்து உண்டதால் பாவம் உலகிற்கு வந்தது. இன்று எவரெல்லாம் சிலுவை மரத்தை உற்றுநோக்குகின்றனரோ அவர்கள் அனைவருமே மீட்பை பெற்றுக்கொள்கின்றனர். பாலைவனத்தில் இஸ்ராயேல் மக்கள் வெண்கலப் பாம்பை உற்றுநோக்கியபோது உயிர் பிழைத்துக் கொண்டனர். அதைப்போலவே இன்று சிலுவையை உற்றுநோக்குவோர் அனைவரும் மீட்பை பெற்றுக்கொள்வர். இயேசுவின் பாடுகளையும் இறப்பையும் ஆழமாக சிந்தித்தவர்களாக இன்றைய வழிபாட்டிலே பக்தியோடு பங்கேற்போம்.

இன்றைய வழிபாடானது நான்கு பிரிவுகளை உடையதாக அமைந்துள்ளது
1.இறைவார்த்தை வழிபாடு
2. பொது மன்றாட்டுக்கள்
3. திருச்சிலுவை ஆராதனை
4. நற்கருணை விருந்து

யாரெல்லாம் இயேசுவின் அன்பு சீடர்கள்
இயேசு இந்த உலகத்தில் வாழ்ந்தபோது இலட்சக்கணக்கான மக்களுக்கு மத்தியில் வெறும் 12 பேரை மட்டும் தேர்வு செய்து அவர்களை தனது சீடர்களாக மாற்றுகிறார். இந்த 12 பேரில் ஒருவர் அதாவது யோவன் மட்டுமே இயேசுவின் அன்புச்சீடராக அழைக்கப்படுகிறார். இன்று கோடிக்கணக்கில் மக்கள் இருந்தாலும் ஆண்டவர் உங்களையும் என்னையும் திருமுழுக்கு வழியாக இயேசுவின் அன்புச்சீடர்களாக வாழ அழைப்பு விடுக்கிறார். இயேசுவின் சீடத்துவத்தில் பங்கெடுக்க யாரெல்லாம் தயாராக இருக்கிறோம்.

சீடன் என்பன் யார்?
ஒரு சீடன் என்பவன் ஒரு குருவை பின்பற்ற கூடியவன் அந்த குரு கட்டளையிடுவதையும், அவர் சொல்வதை கேட்டு செயல்படக் கூடியவன். இன்னும் சொல்லப்போனால் குருவைப் போல தனது வாழ்க்கையையும் மாற்றி குரு எப்படியோ அப்படியே சீடனும் நடக்க முயற்சிப்பவன்.

இயேசுவின் சீடர்கள் எப்படிப்பட்டவர்கள்?
யாரெல்லாம் நான் இயேசுவை பின்பற்றுகிறேன் என முடிவெடுத்து இயேசுவை பின்பற்றுகின்றரோ அவர்கள் அனைவருமே இயேசுவின் சீடர்கள் தாம். குறிப்பாக இயேசு இவ்வுலகில் வாழ்ந்த போது தனது சீடர்கள் எப்படி வாழவேண்டும் என்று மத்தேயு 16:24-ல் இயேசு தனது சீடரைப் பார்த்து “என்னை பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து, தம் சிலுவையை தூக்கிக்கொண்டு என்னை பின்பற்றட்டும்” என்று தெளிவாக விளக்குகிறார். ஆக இயேசுவின் சீடத்துவம் என்பது பூக்கள் நிறைந்த பாதைகள் கிடையாது. மாறாக கல்லும், முள்ளும் நிறைந்த பாதை என இயேசு தெளிவாக அறிவுருத்துகிறார். அத்தோடு மட்டுமல்லாமல் இயேசுவின் சீடராக இருக்க வேண்டுமென்றால் தங்களது உயிரையே கையளிக்க வேண்டும் “தம் உயிரை காத்துக்கொள்ள விரும்பும் எவரும் அதை இழந்துவிடுவர். மறாக என்பொருட்டு தம்மையே அழித்துக்கொள்பவர் வாழ்வு அடைவர்”. இவையனைத்தையும் நன்கு தெரிந்தவர்கள் தான் இயேசுவின் சீடர்களாக இருக்க முடியும்.

இயேசுவின் அன்புச் சீடர்கள் யார்?
ஆயிரக்கணக்காண மக்களில் இயேசு 12 பேரை தனது சீடர்களாக மாற்றுகிறார். இந்த 12 பேரில் ஒருவர் மட்டும் தான் இயேசுவின் அன்புச்சீடராக அழைக்கப்படுகிறார். நற்செய்தியை புரட்டிப் பார்த்தோமானால் ஐந்து இடங்களில் திருத்தூதர் யோவான் மட்டுமே இயேசுவின் அன்புச்சீடராக அழைக்கப்படுகிறார்.

01. இயேசுவின் சீடருள் ஒருவர் அவர் அருகில் மார்புப் பக்கமாய் சாய்ந்திருந்தார். அவர் மேல் இயேசு அன்புக் கொண்டிருந்தார். யோவான் 13:23 இயேசுவின் அருகில் மார்புப் பக்கமாய் சாய்ந்திருந்த அவர் ஆண்டவரே அவன் யார்? என்று கேட்டார். யோவான் 13:25.

02. மகதலா மரியா சீமோன் பேதுருவிடமும், இயேசு தான் அன்பு கொண்டிருந்த மற்ற சீடரிடமும் வந்து… யோவான் 20:2

03. இயேசுவின் அன்புச் சீடர் அதைக் கண்டு பேதுருவிடம் அங்கு நிற்பவர் ஆண்டவர் தாம் என்றார் யோவான் 21:7

04. பேதுரு திரும்பி பார்த்த போது இயேசுவின் அன்புச் சீடரும் பின்தொடர்கிறார் என்று கண்டார். யோவான் 21:20

05. இயேசு தம் தாயையும் அருகில் நின்ற தம் அன்புச் சீடரையும் கண்டு தம் தாயிடம் “அம்மா இவரே உன் மகன்” என்றார். பின்னர் தம் சீடரிடம் “இவரே உம் தாய் என்றார்”. அந்நேரம் முதல் அச்சீடர் மரியாவை தம் வீட்டில் ஏற்று ஆதரவு அளித்து வந்தார். யோவான் 19:26-27.


இப்படியாக யோவான் மட்டுமே இயேசுவின் அன்புச் சீடராக அழைக்கப்படுகிறார். இது யோவானுக்கு கிடைத்த மாபெரும் பாக்கியம். இன்று ஆண்டவர் இயேசு நம் ஒவ்வொருவரையும் அவரின் அன்புச் சீடராக வாழ அழைப்புவிடுக்கிறார்.

அன்புச் சீடரின் முக்கிய பண்புகள்
01. இயேசுவின் அன்புச் சீடர்கள் மிகவும் துடிப்பானவர்கள்
சாதரணமாக துடிப்பானவர்கள் அனைவருமே வல்லமை நிறைந்தவர்கள். ஏதாவது சாதிக்க வேண்டும் என நினைப்பவர்கள். மாற்கு நற்செய்தி 3:17-ல் இயேசு யோவனுக்கும், யாக்கோபுக்கும் பொவனேர்க்கேசு என பெயரிடுகிறார். பொவனேர்க்கேசு என்றால் இடியைப் போன்றவர்கள் என்று பொருள்படும். அதாவது யோவானின் பேச்சும் அவரது செயல்பாடுகள் அனைத்தும் இடியைப் போல இருக்கும். அந்த அளவிற்கு துடிப்பானவர்கள். இப்படிப்பட்ட துடிப்புள்ள மனிதர்கள் மட்டும் தான் இயேசுவின் அன்புச் சீடராக சீடத்தியாக இருக்க முடியும். இன்றும் நமது சமுதாயமானது துடிப்புள்ளவர்களைத் தான் தேடிக்கொண்டிருக்கிறது. அதனால் தான் அப்துல் கலாம் சொல்வார்கள் துடிப்புள்ள இளைஞர்களால் மட்டுமே இந்தியாவை வல்லரசாக முடியும் என்று. இன்று நாமும் நமது பிள்ளைகளும் துடிப்புள்ளவர்களா? அல்லது சோம்பேரிகளா? சிந்திப்போம்.

இன்றை உலகில் மனிதன் உருவாக்கிய அனைத்து கருவிகளும் உதாரணமாக கம்யூட்டர், செல்போன்கள்… பல துடிப்பாக செயல்படுகின்றன. மனிதனைத் தவிர. மனிதர்கள் நாளுக்கு நாள் சோம்பேரிகளாக மாறிவருவது தான் நிதர்சன உண்மையாகும்.

02. இயேசுவின் அன்புச் சீடர்கள் தைரியசாலிகள்
இயேசுவின் சீடர்கள் தைரியசாலிகளாக இருக்க வேண்டும். எதையும் தைரியமாக எதிர்கொள்ளும் உள்ளம் படைத்தவர்களாக இருக்க வேண்டும். ஒருமுறை இயேசுவின் கூட்டத்தை சேராதவர் இயேசுவின் பெயரை வைத்துக்கொண்டு பேய்களை ஓட்டுகிறார். யோவான் தைரியமாக அவரை எதிர்த்து நிற்கிறார் மாற்கு 9:38. உதாரணமாக மத்தேயு நற்செய்தி 19:21-ல் நிலைவாழ்வை பெற்றுக்கொள்ள நான் என்ன செய்ய வேண்டும் என்று ஓர் இளைஞன் கேட்டபோது இயேசு அவரிடம் நிறைவுள்ளவராக விரும்பினால் நீர் போய் உம் உடமைகளை விற்று ஏழைகளுக்கு கொடும். அப்போது விண்ணகத்தில் நீர் செல்வராய் இருப்பீர் பின்னர் வந்து என் சீடாராய் இரும்; என்றார். அவர் சொன்னதைக் கேட்ட அந்த இளைஞன் வருத்தத்தோடு சென்றுவிட்டான். காரணம் அவருக்கு ஏராளமான சொத்து இருந்தது.

அதேவேளையில் எகிப்துக்கு அருகில் கோமா என்னும் சிற்றூரில் மிக வசதி படைத்த செல்வம் மிக்க குடும்பத்தில் பிறந்த ஒரு மனிதர் நீர் போய் உம் உடமைகளை விற்று ஏழைகளுக்கு கொடும் என்ற இறைவார்த்தையை ஆலயத்திலே வாசிக்க கேட்கிறார். திருப்பலி முடிந்து வீட்டிற்கு சென்றபின் தன்னிடம் இருந்த ஏராளமான சொத்துகளை விற்று ஏழைகளுக்கு கொடுத்துவிட்டு, தன் தங்கையை காப்பகம் ஒன்றில் தங்கவைத்துவிட்டு இயேசுவைத் தேடி தனிமையில் கடுந்தவ வாழ்க்கை மேற்கொண்டு தைரியமாக இயேசுவுக்காக முடிவெடுத்ததால் இன்று மிகப்பெரிய புனிதராக இருக்கிறார். அவர் தாம் புனித வனத்து அந்தோணியார் .

இன்று நமது பிள்ளைகளை தைரியசாலிகளாக வளர்கிறோமா? அல்லது கோழைகளாக வளக்கிறோமோ? தைரியசாலிகள் என்றால் உங்கள் பிள்ளைகளை ஏன் குருத்துவத்திற்கு அனுப்ப தயங்குகிறீர்கள்?

03. இயேசுவின் அன்புச் சீடர்கள் இயேசுக்கு அருகிலே இருக்க விரும்புவார்கள்
வழக்கமாக யாரை நாம் அதிகமாக அன்பு செய்கின்றோமோ அவர்களோடு சேர்ந்து இருப்பதைத் தான் நாம் விரும்புவோம். காரணம் அன்பு செய்தவர்கள் நமது அருகில் இருந்தால் அது நமக்கு ஆனந்தத்தையும் உற்சாகத்தையும் வாழ்க்கையில் வெல்ல வேண்டும் என்ற தைரியத்தையும் தருகிறது. ஆனால் அன்பு செய்தவர்கள் நம்மை விட்டு பிரிந்து சென்றால் அதைவிட சோகமான நிகழ்வு வாழ்க்கையில் எதுவும் கிடையாது. உதாரணமாக எருசலேம் ஆலயத்தில் இயேசு காணாமல் போனபோது தனது மகனை தேடி அழைந்த மரியாள் “மகனே ஏன் இப்படி செய்தாய்? நானும் உன் தந்தையும் உன்னை மிகுந்த கவலையோடு தேடிக்கொண்டிருந்தோமே” லூக்2:48 என்றார்

எனவேதான் மாற்கு நற்செய்தி 10:35-37 வரை உள்ள இறைவார்த்தையில் யோவானும், யாக்கோபும் இயேசுவிடம் சென்று தைரியமாக உமக்கு வலப்புறம் ஒருவரும், இடப்புறம் ஒருவரும் அமர்ந்து கொள்ள எங்களுக்கு அருளும் என கேட்கின்றர். ஆண்டவருக்கு அருகில் இருந்து அவர் செல்வதை கேட்பது எத்துணை அழகானது. அதை அனுபவித்தவர்களுக்குத்தான் தெரியும் அந்த அருமை. குறிப்பாக நேற்றிலிருந்து இன்று வரை திவ்ய நற்கருணை ஆராதனை நடைபெற்றது. நம்மில் எத்தனை பேர் ஆண்டவருக்கு அருகில் அமர்ந்திருந்தோம். அவருக்காக நமது நேரத்தை செலவிட்டோம். நாம் பயன்படுத்தும் செல்போன்களுக்கு செலவிடும் நேரத்தை காட்டிலும் அதிகமாக ஆண்டவருக்கு செலவிட்டிருந்தால் நிச்சயம் நாமும் இயேசுவின் அன்புச் சீடர்கள் தாம்.

04. இயேசுவின் அன்புச் சீடர்கள் இயேசுவின் மார்போடு சாய்ந்திருப்பவர்கள்
இயேசுவின் சீடருள் ஒருவர் அவர் அருகில் மார்புப் பக்கமாய் சாய்ந்திருந்தார். அவர் மேல் இயேசு அன்பகொண்டிருந்தார். யோவான் 13:23. இயேசுவின் மார்போடு யாரெல்லாம் சாய்ந்திருக்கிறார்களோ அவர்கள் அனைவரையும் இயேசு அன்பு செய்கிறார். இன்று நம்மில் எத்தனை பேர் இயேசுவை மார்பில் சுமக்க தயாராக இருக்கிறோம். உதாரணமாக சிலுவைதான் இயேசு மரித்தார்இ சிலுவையில் இருந்து தான் மீட்பு வந்ததுஇ இயேசுவின் சீடனாக சீடத்தியாக இருக்க வேண்டுமென்றால் சிலுவை மிக முக்கியம். கிறிஸ்தவர்களின் அடையாளம் என்றாலே சிலுவைதான். இப்படிப்பட்ட முக்கியமான சிலுவையை எத்தனை பேர் நமது கழுத்தில் அணிந்திருக்கிறோம். சற்று உங்கள் கழுத்தை உற்றுப் பாருங்கள்.

ஒருமுறை ஒருவர் என்னிடம் வந்து கழுத்தில் அணிந்து கொள்வதற்கு ஒரு சுருபம் கேட்டார். அப்பொழுது என்னிடம் சிலுவை வடிவில் உள்ள டாலர் மட்டும் தான் இருந்தது. உடனே நானும் அவருக்கு சிலுவை வடிவில் இருந்த அந்த சுருபத்தை கொடுத்தேன். அதற்கு அவர் ‘இது வேண்டாம் வேறு சுருபங்கள் அதாவது மாதா படம் அல்லது புனிதர் உருவம் தாங்கிய டாலர் இருந்தால் கொடுங்கள்’ என்றார். நான்இ ‘ஏன் சிலுவையை வேண்டாம்’ என்கிறீர்கள் என்று கேட்டேன். அதற்கு அவர் ஏற்கெனவே எனது வீட்டில் சுமக்க முடியாத அளவிற்கு சிலுவைகள் இருக்கின்றன. இப்பொழுது கழுத்தில் அணிந்து கொள்வதற்கும் சிலுவையா? எனக்கு வேண்டவே வேண்டாம் என்றார். ஆக சிலுவை என்பது 2000 வருடங்களாக ஏன் இன்றும் அவமானத்தின் சின்னமாக விளங்குகிறது. எனவே இன்று உண்மையிலே இயேசுவின் அன்பு சீடர்களாக இருப்பதற்கு நாம் தகுதியானவர்களா?

05 இயேசுவின் அன்புச் சீடர்கள் அன்னை மரியாளோடு சேர்ந்து செயல்படுபவர்கள்
அன்னை மரியாவை கன்னி மரியாள் என்று அழைக்கிறோம். அப்படியானால் கடவுள் அவரை எந்த அளவிற்கு அன்பு செய்திருந்தால் பிறக்கும்போதே பாவக்கரையில்லாமல் அவரை படைத்திருப்பார். உதாரணமாக பாவசங்கீர்தனம் செய்து விட்டு ஒரு ஒருவாரம் நம்மால் பாவம் செய்யாமல் இருக்கமுடிகிறதா? இல்லையே. ஆனால் அன்னை மரியாள் தான் கருவில் உருவான தொடக்கமுதல் தன்னுடைய கடைசி முச்சுவரை பாவக்கரையேதும் படாமல் வாழ்ந்து வந்தாள். வளர்ப்புத் தந்தையாக வந்த சூசையப்பர் பாதியிலே சென்று விட்டார். இந்த இயேசுவுக்கு கல்வி புகட்டிஇ அறிவுரை சொல்லிஇ அன்போடும்இ பாசத்தோம் வளர்த்து வந்தவள் தாய் மரியாள் மட்டுமே. அப்படிப்பட்ட தனது தாயாரை, தனியாக விட்டுச்செல்வதற்கு மனமில்லாமல் விண்ணுக்கும் மண்ணுக்கும் இடையில் சிலுவையில் வேதனையோடு தொங்கிக் கொண்டிருந்போது தனது அன்புச் சீடரைப் பார்த்து “இவரே உம் தாய் என்றார்” தம் தாயிடம் “அம்மா இவரே உன் மகன்” என்கிறார்.; அந்நேரமுதல் அச்சீடர் மரியாவை தம் வீட்டில் ஏற்று ஆதரவு அளித்து வந்தார். யோவான் 19:26-27. என வாசிக்கிறோம்.

ஆக இயேசுவின் அன்புச் சீடர் மரியாளை தன் தாயாக ஏற்று ஆதரவு அளித்தார் அப்படியானால் இன்றைய அன்புச் சீடர்களாகிய நாம் எப்படிப்பட்ட முறையில் அன்னை மரியாளுக்கு மரியாதை தருகிறோம். அன்னை மரியாளை புறக்கணிப்பவர் எவரும் இயேசுவின் அன்புச்சீடராக இருக்கமுடியாது. ஒருநிமிடம் உங்களது கரங்களையும்இ பைகளையும் பாருங்கள் எத்தனை பேர் ஜெபமலையை எடுத்து வந்திருக்கிறோம்? எத்தனைபேர் தினமும் ஜெபமாலை ஜெபிக்கிறோம் செல்போன்களையும் அல்லது பணத்ததையும் நாம் மறக்காமல் எடுத்துச் செல்கிறோம். காரணம் ஜெபமாலையைக் காட்டிலும் செல்போன், வாகனம், பணம் அனைத்தும் முக்கியமாக இருக்கிறது. அது நமது பயணத்திற்கு நிச்சயம் தேவையாக இருக்கிறது. ஆனால் ஜெபமாலை எப்போது நாம் கஸ்டத்தில் இருக்கிறோமோ அப்போது தான் தேவையுள்ளதாக இருக்கிறது. உண்மையிலேயே இன்று ஆலயம் வந்துள்ள நாம் அனைவரும் இயேசுவின் அன்புச் சீடர்களா? அன்புச் சீடர்களுக்கான தகுதி நம்மிடத்தில் இருக்கிறதா?

ஒருமுறை ஒரு குழந்தை வெகுளித்தனமாக தன் தாயை கேட்டது... அம்மா நம் வீட்டு வேலைக்காரி கிட்ட உன்னுடைய தங்கத் தோட, வைர மூக்குத்திய, பீரோவில இருக்கிற பணத்த கொஞ்ச நேரம் குடுத்து பாத்துக் கொள்ள சொல்லுவியா..?

அம்மா : ம்ஹும் அவள்மேல் எனக்கு நம்பிக்கையில்லை...
குழந்தை : அப்படினா என்னை தங்கம் வைரம்னு சொல்ரிங்கள்ள அப்பறம் ஏன் என்னை மட்டும் அவகிட்ட விட்டு போற ..! நான் தங்கத்தை விட மதிப்பு கொறஞ்சு போய்டனா என்று அந்த குழந்தை கேட்டதாம்.

அந்த குழந்தை கேட்டது சரியா, தவறா. இன்று நாமும் இயேசுவை அன்பு செய்கிறோம், நாங்களெல்லாம் இயேசுவின் அன்புச் சீடர்கள் என்று வாயார சென்னாலும் உண்மையிலே ஆண்டவர் இயேசுவுக்கு சீடர்களாக விளங்க தகுதியானவர்களா? செல்போனுக்கு மதிப்பு அதிகம் தான் ஆனாலும் அதைக்காட்டிலும் இயேசுவின் சிலுவை மதிப்பு வாய்ந்தது என எப்போது நாம் உணர்கிறோமோ அப்போது தான் இயேசுவின் சீடர்களாக முடியும். இன்று கல்வாரியில் நமக்காக உயிர்விட்ட இயேசுவிடம் என்னையும் உமது அன்புச் சீடராக மாற்றும் எனச் சொல்லி மன்றாடுவோம். இயேசுவின் மரணச்சடங்கில் பக்தியோடு பங்கெடுப்போம்.