இவ் மறையுரையை வழங்குபவர்

அருட்பணி. வேத போதக சகாய செல்வராஜ் (கப்புச்சின் )
Burkina Faso, West Africa.
vedasahayam1982@gmail.com

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)









ஆண்டின் பொதுக்காலம் பதிநான்காம் ஞாயிறு

நவீன ஓநாய்களுக்கு மத்தியில் நற்செய்திப் பணி

ஏசாயா 66:10-14
கலாத்தியர் 6:14-18
லூக்கா 10:1-12இ17-20

இறைஇயேசுவில் மிகவும் பிரியமான சகோதர சகோதரிகளே! இன்று நாம் ஆண்டின் பொதுக்காலம் பதிநான்காம் ஞாயிறை சிறப்பிக்கின்றோம். மேலும் இந்திய திருஅவையின் மக்கள் இயேசுவின் திருத்தூதரான தூய தோமையாரை நாம் நினைவு கூறுகின்றோம். இன்றைய மூன்று வாசகங்களும் கடவுளின் நற்செய்தி வழியாக புதிய உலகை படைக்க கடவுள் நம்மை அழைக்கின்றார். புனித தோமையாரும் கிறிஸ்துவை அறியாத மக்களுக்கு கிறிஸ்துவை அறிவித்து புதிய சமூதாயத்தை படைத்தது போல நாமும் நற்செய்தியை அறிவிக்க புறப்படுவோம்.

ஆண்டவர் இயேசு தன்னுடைய சீடர்களை தாம் போகவிருந்த ஊர்களுக்கு இருவர் இருவராக அனுப்புகின்றார். அதுவும் ஓநாய்களுக்கு மத்தியில் ஆட்டுக்குட்டிகளைப்போல அனுப்புகிறேன் என கூறுகின்றார்.

ஓநாய் என்பது எது.

ஓநாய் என்பது நாய்க்குடும்பத்தை சேர்ந்தது. வீட்டு நாயை விட உருவத்தில் பெரியது. ஓநாய்கள் தனியாக வாழ்வது இல்லை கூட்டமாகவே வாழும் வகையைச் சேர்ந்தது. ஓநாயை பழக்கி வேறு இனமாக திரித்து உருவாக்கியதுதான் வீட்டில் வளர்க்கப்படும் நாய்கள் என்கிறார்கள் உயிரியல் வல்லுநர்கள். சராசரியாக, ஒரு ஓநாய் சுமார் 10 ஆண்டுகள் வாழ்கிறது. உலகில் 2 வகையான ஓநாய்கள் மட்டுமே உள்ளன - சாம்பல் மற்றும் சிவப்புநிற ஓநாய்கள். சிங்கத்தைப் போலவே ஓநாயும் பசித்தால் மட்டுமே உணவை உண்ணும். ஓநாய் தன்னுடைய நாய் குடும்ப வழக்கப்படி தன்னை விட சிறிய மிருகங்களை வேட்டையாடி உண்ணும். ஓநாய் வேட்டையாடும் முறையில் ஒரு நேர்த்தியும், தந்திரமும் இருக்கும். எப்போதும் 'ரு' வடிவ முறையில் ஓநாய் கூட்டமாக வேட்டையாடும். ஒருமுறை குறிவைத்துவிட்டால் சிங்கத்தின் பார்வையில் மட்டுமல்ல, ஓநாயின் பார்வையிலிருந்தும் தப்பிக்கவே முடியாது.


நம்முடைய அன்றாட வாழ்க்கையில் ஒருசில விலங்குகளை நம் பழக்கப்படுத்தினால் மனிதனிடம் நட்புகொள்கின்றன. யானைகள் மட்டுமல்லாமல் புலி சிங்கம் போன்ற கொடிய வன விலங்குகள்கூட மனிதனிடம் நட்போடு இருப்பதை கண்டிருக்கிறோம். காலப்போக்கில் அவை தம் குணத்தை மேம்படுத்திக்கொள்கின்றன. ஆனால் விலங்குகளில் ஓநாய் அப்படி நம்முடன் இணங்கி வாழாது என்று கூறுவார்கள். அது மனிதனால் பழக்கவே முடியாத விலங்கு என கூறப்படுகிறது. எக்காரணம் கொண்டும் அது தன் குணத்தை மாற்றிக் கொள்வதில்லை. அது பின்பற்றும் ஒரே செயல் தன் நலனுக்காக எதை வேண்டுமானாலும் செய்யலாம். அப்படி எதைச் செய்வதிலும் தவறில்லை என்பதுதான் ஓநாயின் சித்தாந்தம். ஓநாய், தன் வாழ்வின் ஒரே நோக்கம் தன் பசியை தீர்த்துக்கொள்வதுதான்.

நவீன ஓநாய்கள்

இன்றைய மனிதர்களும், மனிதர்கள் இன்று பயன்படுத்தும் கருவிகளும் ஓநாய்க்கு சமமாக மாறிவருகின்றது. தன் சுயநலத்துக்காக அல்லது தான் எடுத்துக்கொண்ட ஒரு நோக்கத்திற்காக, தன் கொண்டுள்ள வஞ்சத்திற்கென ஓநாயின் குணத்தை கையிலெடுத்துக் வரலாற்றை அழித்தவர்கள் பலர். உதாரணமாக தனது செயல்களால், வரலாற்றின் பக்கங்களில் தீமை மற்றும் துன்மார்க்கத்தின் அடையாளமாக மாறிய நீரோ மன்னன்; ஒரு பாவமும் அறியாத பல்லாயிரம் உயிர்களை நச்சுப்புகையிட்டு அழித்த ஹிட்லர். இன்றும் கூட தங்களுடைய சுயநலத்திற்காக, தாங்கள் எடுத்த ஒரு நோக்கத்திற்காக பெண்கள் என்று பாராமலும், பெண் குழந்தைகள் என்றும் பாராமல் அன்றாடம் எத்தனை தவறான சம்பவங்கள் நமது மத்தியில் அரங்கேருகின்றன. இப்படி இவர்கள் செய்வது தவறான செயல் என அவர்கள் அறிந்திருக்க மாட்டார்களா என்ன? அறிந்திருந்தும் அவர்கள் அப்படி நடந்துகொள்வதற்கு அவர்கள் கொண்டிருக்கும் இந்த ஓநாயின் சிந்தனை மட்டுமே காரணமாக அமைய முடியும். இரண்டாவதாக மனிதர்கள் பயன்படுத்தும் ஊடகங்கள் ஓநாயின் வெளிப்பாடே!

ஓநாயின் சிந்தனை:

1. ஒருமுறை குறிவைத்துவிட்டால் சிங்கத்தின் பார்வையில் மட்டுமல்ல, ஓநாயின் பார்வையிலிருந்தும் தப்பிக்கவே முடியாது.

அதைப்போலவே பேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ்அப் போன்ற ஊடகங்களில் ஒருமுறை நம் பார்வை திரும்பினால் அதிலிருந்து வெளிவருவது மிக கடினமான செயல். கடந்த வருடம் கொரோனா நோய்த்தெற்று காரணமாக ஆலயங்கள் அனைத்தம் மூடப்பட்டன. மக்களின் ஆன்மீகம் சிதைந்து விடக்கூடாது என்பதற்காக ஊடகங்கள் மூலாக திருப்பலி, ஆராதனையில் பங்கெடுக்கலாம் என்கூறியது திருஅவை. கடந்த வாரம் ஒருவரிடம் ஏன் நீங்கள் திருப்பலிக்கு வரவில்லை என்று கேட்டேன் அதற்கு அவர் டி.வில் திருப்பலி கண்டுவிட்டேன். ஆபீஸ் வேலையை கவனித்துக்கொண்டே திவ்ய நற்கருணை ஆரதனையையும் முடித்துவிட்டேன் எனக் கூறினார். மனிதர்கள் பயன்படுத்தும் ஊடகங்கள் இன்று ஓநாய்களாக மாறிவருகின்றன.

2. ஓநாய் மனிதனால் பழக்கவே முடியாத விலங்கு:

ஓநாய் மனிதனால் பழக்கவே முடியாத விலங்கு; எக்காரணம் கொண்டும் அது தன் குணத்தை மாற்றிக்கொள்வதில்லை. அதைப்போலவே நிறைய மனிதர்கள் தங்களது தவறான குணங்களை மாற்றிக்கொள்வதே கிடையாது. அன்புக்குரியவர்களே ஒருமுறை நம்மையே நாம் சுய ஆய்வு செய்வோமா! பாவசங்கீர்த்தனத்தில் நாம் சொல்லக்கூடிய பாவங்கள் எவை? நான் பொய் சொல்லிவிட்டேன், திருடி விட்டேன், கீழ்படிய மறுத்துவிட்டேன் என பல… இந்த பாவத்தை நாம் எப்பொழுது அறிக்கையிட ஆரம்பித்தோம். நீங்களும் நானும் புதுநன்மை எடுத்த நேரத்தில் சொல்ல ஆரம்பித்த பாவங்கள் இன்று கல்லறை செல்லும் வரை நம்மை பின்தொடர்ந்து வருகின்றது. ஆனாலும் அன்றாம் திருப்பலியில் பங்பெடுக்கின்றோம், நற்கருணை உட்கொள்கின்றோம். ஆனாலும் நாம் நம்முடைய குணத்தை நம் மாற்றிக்கொள்வதில்லை. ஓநாயும் அப்படித்தான் தன்னுடைய சுயநலத்திற்காக தன்னுடைய குணத்தை ஒருபோதும் மாற்றிக்கொள்ளாது. ஊடகங்கள் நல்லதுதான் ஆனால் ஒருமுறை தீய செயலுக்கு அதை பயன்படுத்தினால் அத்தீய குணத்தில் இருந்து நம்முடைய ஊடகங்களை திசைதிருப்புவது கடினமான செயல்.

3. தன் நலனுக்காக எதை வேண்டுமானாலும் செய்யலாம்

தன் நலனுக்காக எதை வேண்டுமானாலும் செய்யலாம் அப்படி எதைச் செய்வதிலும் தவறில்லை என்பதுதான் ஓநாயின் சித்தாந்தம். அன்றும் இன்றும் தன்னுடைய சுயநலத்திற்காக எதையும் செய்யும் துணிச்சலை மக்கள் பெற்றுள்ளனர். ஆதாமும்-ஏவாலும் தங்களுடைய சுயநலத்திற்காக கடவுளின் கட்டளையை மீறி விலக்கப்பட்ட கனியை உன்பதில் தவறில்லை என்ற சிந்தனையில் சாத்தானுக்கு துணைபோகின்றனர். தாவீது அரசர் தன்னுடைய சுயநலத்திற்காக அடுத்தவர் மனைவியை தன்வயப்படுத்துகின்றார். அதற்காக உரியாவை கொல்வதில் தவறில்லை என நினைத்து அவரை கொல்கின்றார். பிலாத்துஅரசன் இயேசுவின் மீது எந்த குற்றமும் நான் காணவில்லை என அறிந்தும் தன்னுடைய சுயநலத்திற்காக இயேசுவை சிலுவையில் அறைய ஒப்படைக்கின்றான். இப்படியாக ஓநாயின் சிந்தனை உள்ளவர்கள் தங்களுடைய சுயநலத்திற்காக எவ்வித பாதக செயலையும் செய்ய துணிவு கொண்டவர்கள். அதைப்போலவே ஊடகங்களை பயன்படுத்தும் அனைவரும் தீய படங்கள் பார்ப்பது தவறு என நம் மனசாட்சி கூறினாலும் தன்னுடைய சுயநலத்திற்காக அதை பயன்படுத்துவதில் தவறில்லை என கூறும் மக்கள் நம்மில் அதிகம்.

4. ஓநாய், தன் வாழ்வின் ஒரே நோக்கம் தன் பசியை தீர்த்துக்கொள்வதுதான்.

ஓநாய், தன் வாழ்வின் ஒரே நோக்கம் தன் பசியை தீர்த்துக்கொள்வதுதான் தன்பசியை தீர்த்துக்கொள்வது நல்லதுதான் அதற்காக மற்றவர்களை அழித்து தன்பசியை போக்குவது எவ்வகையிலும் சரியில்லை. அசிசி நகர்ப் புனித பிரான்சிசின் வாழ்க்கையில் நடந்த நிகழ்வு இது. அசிசி நகருக்குப் பக்கத்தில் குப்பியோ (Gubbio) என்றோர் இடம் உண்டு. இந்த இடத்தில் கொடியதோர் ஓநாய் இருந்தது. இந்த ஓநாய், மக்கள் தங்களுடைய வீடுகளில் வளர்த்து வந்த செல்லப் பிராணிகள் அந்த வழியாக வந்தபொழுது கடித்துக் குதறியது. மட்டுமல்லாமல், அந்த வழியாக வந்த மனிதர்களையும் அது அச்சுறுத்தி வந்தது. இதைப் பொறுத்துப் பொறுத்துப் பார்த்த சுற்றிலும் இருந்த ஊர்மக்கள், அதை ஒரே அடியாக அடித்துக் கொன்றுவிடலாம் என்று திட்டம் தீட்டினார்கள். இச்செய்தி எப்படியோ பிரான்சிசின் செவிகளை எட்டியது. அவர், ஓநாய் கொல்லப்படுவதை விரும்பவில்லை. அதே நேரத்தில் ஓநாய்க்கு உணவு கிடைப்பதற்கும் வழிவகை செய்யவேண்டும் என்பதைப் பற்றியும் சிந்தித்தார். இதைத் தொடர்ந்து அவர், மக்களிடம் சென்று, “ஓநாயைக் கொல்ல வேண்டாம்; அது உங்களைத் துன்புறுத்தாத வண்ணம் நான் பார்த்துக் கொள்கின்றேன். பதிலுக்கு அதற்கு உணவு கிடைக்க ஏதாவது செய்யவேண்டும்” என்று சொல்லிவிட்டு, ஓநாயிடம் சென்று, மக்கள் படுகின்ற வேதனையை அதனிடம் எடுத்துச் சொன்னார். பின்னர் அவர் அந்த ஓநாயிடம், “சகோதரர் ஓநாயே! இனிமேல் நீ யாரையும் துன்புறுத்தக்கூடாது; பதிலுக்கு உனக்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வீட்டிலிருந்து உணவு கிடைக்கும்” என்றார். ஓநாயும் இதற்குச் சம்மதிக்கவே, பிரான்சிஸ் மக்களிடம் சென்று, ஓநாயோடு தான் பேசியதை எடுத்துச் சொல்ல, மக்களும் அதற்குச் சம்மதம் தெரிவித்தார்கள். இதனால் ஓநாய்க்கும் மக்களுக்கும் இடையே சுமூகமான உறவு ஏற்பட்டு, அப்பகுதியில் அமைதியான சூழ்நிலை உருவானது. ஊடகங்களில் நல்ல தலைப்புகளில் சிந்தனைகள் இருக்கும்போது தன்னுடைய பசிக்காக ஆபாச படங்களை பார்த்து கெட்டுப்போகும் சிறுவர் சிறுமியர்களை நினைத்துப் பார்ப்போம்.

பிரியமானவர்களே மனிதர்கள் தங்களது சுயநலத்திற்காக ஓநாயின் சித்தாந்தங்களை செயல் படுத்தும் சூழல் ஒருபுறம். நாம் பயன்படுத்தும் ஊடகங்களில் ஓநாயின் சிந்தனையை உள்வாங்கி கெட்டு சீரழியும் சிறுவர் சிறுமியர்கள். இப்படிப்பட்ட ஓநாய்களுக்கு மத்தியில் நற்செய்தி அறிவிக்க கடவுள் நம்மை அழைக்கின்றார். புனித தோமையார் இந்தியா வந்த போது அன்றைய சூழலில் இருந்த ஓநாய்களுக்கு மத்தியில் நற்செய்தி அறிவித்து கடைசியில் தன்உயிரையும் ஈந்தார். இன்றும் அதே ஆண்டவர் தன்னுடைய நற்செய்தி பணிக்காக தான் போகவிருந்த ஊர்களுக்கு உங்களையும் என்னையும் அனுப்ப திருவுளம் கொண்டுள்ளார். நவீன ஓநாய்களுக்கு மத்தியில் நற்செய்தியை அறிவிக்க நம்மையே நாம் தயார் செய்வோம். அப்போது ஆண்டவர் கூறியது போல நம்முடைய நற்செய்திப்பணி வழியாக ஆறுபோல நிலைவாழ்வை பாய்ந்தோடச் செய்வார். தூய பவுல் கூறுவது போல நாம் நவீன ஓநாய்களுக்கு அடிமையாகமல் நற்செய்திக்கும், சிலுவையில் அறையப்பட்ட இயேசுவுக்கும் சாட்சியாக வாழுவோம்.