இவ் மறையுரையை வழங்குபவர்

அருட்பணி. வேத போதக சகாய செல்வராஜ் (கப்புச்சின் )
Burkina Faso, West Africa.
vedasahayam1982@gmail.com

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)









ஆண்டவர் இயேசுவின் திருவுடல் திருஇரத்தம் பெருவிழா

உறவை வளர்க்கும் விருந்து அதுவே நமது திருவிருந்து

தொடக்கநூல் 14:18-20
1கொரிந்தியர் 11:23-26
லூக்கா 9:11-17

இறை இயேசு கிறிஸ்துவின் மிகவும் பிரியமான சகோதர சகோதரிகளே இன்று நாம் ஆண்டவர் இயேசுவின் திருவுடல், திருஇரத்தம் பெருவிழாவை சிறப்பித்துக் கொண்டிருக்கின்றோம். நம்முடைய விண்ணக மற்றும் மண்ணக விருந்து உபசரிப்புகள் நம்முடைய உறவுகளை வளர்த்தன. ஆனால் இன்றைய நாட்களில் விருந்து மருந்தாகிப் போனதால் உறவுகள் சிதைந்து வருகின்றன. உறவுகளை புதுப்பிக்க இன்றைய வழிபாடு நமக்கு அறிவுறுத்துகின்றது.

தமிழர்கள் பல பண்பாடுகளை உலகிற்கு அறிமுகம் செய்தவர்கள். அவற்றில் ஒன்று விருந்து. பசியைப் போக்கி அவர்களின் முகம் மலர்வதைக் கண்டு அகமகிழ்ந்தவர்கள் தமிழர்கள். முன்பின் அறியாதவர்களே விருந்தினர்களாக அமைந்தார்கள். மேலும் விருந்தோம்பல் என்பது சிறந்த கலையாகக் கருதப்பட்டது. விருந்தினர்களுக்குத் தனியாகச் சிறந்த உணவுகள் தயாரிக்கப்பட்டன. மனிதனின் அடிப்படைத் தேவைகளான உணவு, உடை, உறைவிடம் என்ற மூன்றில் முதல் இடம் பிடிப்பது உணவே ஆகும். உணவின் அடிப்படைத் தேவையை நன்கு உணர்ந்த நம் முன்னோர்கள் தாம் உண்பதோடு மட்டுமல்லாமல் உணவில்லாமல் வறுமையில் வாடிய ஏழை-எளியவர்களுக்கும் வீட்டிற்கு வரும் புதியவர்களுக்கும் உணவினை வழங்கி அவர்கள் உண்பதைக் கண்டு மகிழ்ந்தனர். முகத்தை மாறுபட்டு வைத்தாலே விருந்தினர் மனம் வருந்துவர் என்பதால், விருந்தினரை அன்போடு உபசரிக்க வேண்டும் என்பது தமிழர்களின் குறிக்கோளாக இருந்தது. மேலும் அவ்வாறு வரக்கூடிய விருந்தினர்களுக்கு முதலில் உணவு அளித்த பின்னரே தாம் உண்ணுதலை முறையாகக் கடைப்பிடித்தனர் . தமிழர்களின் அடையாளமாகவும், உறவுகளை வளர்த்த விருந்து இன்று சுயநல மோகத்தால் சீரழிந்து வருகின்றது.

இரண்டு நாட்களுக்கு முன்பாக ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தேன். அவரது குடும்பத்தில் போதுமான வசதிகள் இருக்கின்றன. அவருடைய தந்தையானவர் கடந்த வருடம் கொரோனா தொற்றினால் இறந்து போய்விட்டார். இறந்தவருக்கு முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி செலுத்த வேண்டும் என்றார். வருகின்ற இருபத்தி ஐந்தாம் தேதி திருப்பலி வைப்பதாகவும், திருப்பலி முடிந்த பிறகு விருந்து ஏற்பாடு செய்யவேண்டும் என்று பேசிக்கொண்டிருந்தார். இந்த நிகழ்வை அவரது கிராமத்து ஊரில் வைக்கவில்லை அதற்கு மாறாக சென்னையில் உள்ள 5-ஸ்டார் ஓட்டல் ஒன்றை வாடகைக்கு எடுத்து அந்த 5- ஸ்டார் ஹோட்டலில் விருந்து வைக்கலாம் என்று அவர் பேசிக் கொண்டிருந்தார். அவரிடம் உங்களது அப்பாவின் கல்லறை எங்கு இருக்கிறது என்று கேட்டேன். அதற்கு எங்களது கிராமத்து ஊரில் என்றார். அப்பொழுது நான் அவரிடம் “ஏன் உங்கள் கிராமத்திற்குச் சென்று திருப்பலி நிறைவேற்றி கல்லறையை மந்திரித்து விட்டு அந்த ஊர் மக்களுக்கு விருந்து வைக்கக்கூடாது” என்று கேட்டேன் அதற்கு அவர் சொன்ன பதில் எனக்கு ஆச்சரியமாக இருந்தது.

ஊர்ல விருந்து வைத்தோம் என்று சொன்னால் ஊர் முழுவதும் கூடிவிடும். சொந்தங்கள் நிறையபேர் வந்து விடுவார்கள். அதனால் நிறைய செலவு ஆகும். எனவே சென்னையில் விருந்து வைத்தோம் என்றால் ஒரு சிலரை மட்டும் தான் அழைப்போம். அதுவும் அழைக்கும் அனைவரும் சென்னைக்கு வரமாட்டர்கள். அப்போது செலவு மிச்சமாகும் என்றார். 5-ஸ்டார் ஓட்டலில் விருந்து வைப்பது செலவு மிச்சமாகுமா? அல்லது கிராமத்தில் செலவு மிச்சமாகுமா? விருந்து வைப்பதின் நோக்கமே இன்று மறந்து போய் விட்ட சூழலில் நாம் வாழ்ந்து வருகின்றோம். நம்முடைய முன்னோர்கள் விருந்து வைத்ததின் நோக்கமே உறவுகளை பலப்படுத்தவும், ஏழை எளிய மக்கள் நாம் அளிக்கும் விருந்திலாவது வயிரார உணவு உண்ண வேண்டும் என்று விருந்து வைத்தனர். ஆனால் இன்று உறவுகள் இல்லாத விருந்தை பலரும் விரும்புகின்றனர். உறவை வளர்க்க வேண்டிய விருந்து இன்று உறவுகளை சிதைத்துக் கொண்டிருக்கிறது.


ஆம் பிரியமானவர்களே இப்படிப்பட்ட இந்த தருணத்திலே இன்றைய மூன்று வாசகங்களும் விருந்தைப் பற்றி போதிக்கின்றது. கிரேக்க கலாச்சாரத்தில் ஒரு வீட்டுக்கு வெளியே சென்று கொண்டிருக்கும் அந்நியர் ஒருவரை அவ்வீட்டில் வசிப்பவர்கள் இல்லத்தினுள் வருமாறு அழைப்பு விடுப்பர். வீட்டின் தலைவர் அந்த அந்நியரின் பாதங்களைக் கழுவி, உணவு மற்றும் திராட்சை ரசத்தை அளிப்பர். அப்படித்தான் முதல் வாசகத்தில் சாலோம் அரசர் கடவுளின் ஊழியரான மெல்கிசெதேக்குவிற்கு அப்பமும், திராட்சை ரசமும் தந்து விருந்து படைக்கின்றார். அத்தோடு நம்பிக்கையின் தந்தையான ஆபிரகாம் தன்னிடம் உள்ளவற்றில் பத்தில் ஒருபங்கை கொடுக்கின்றார். ஆபிரகாமின் இந்த விருந்து உபசரிப்பு அவருக்கு ஆசீர்வாதத்தை கொடுத்தது. கடவுள் அவரோடு உடன்படிக்கையை ஏற்படுத்துகின்றார்.

இரண்டாவது வாசகத்தில் தூய பவுல் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் உடலும் இரத்தமும் அனைவருக்கும் விருந்தாக அமைகிறது என்று போதிக்கின்றார். நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு மக்கள் மீது பரிவு கொண்டு ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் வைத்து 5000 பேருக்கு விருந்து படைக்கிறார். இன்று நீங்களும் நானும் ஏற்பாடு செய்யும் விருந்து உறவை வளர்க்க கூடியதாக இருக்கிறதா? அல்லது வளர்ந்து வரும் உறவுகளை நம்முடைய விருந்து சிதைக்கக் கூடியதாக இருக்கிறதா? சிந்திப்போம்

விருந்து: என்று சொல்லுகின்ற பொழுது முதல் எழுத்து வி

வி: மண்ணக விருந்து விண்ணக விருந்துக்கான முன் சுவை.

விண்ணக விருந்து எது? மண்ணக விருந்து எது? மருந்தே ஆயினும் விருந்தோடுஉண்” என்கிறார் ஒளவையார் அதாவது நாம் உண்கின்ற உணவை புதிதாய் வருகின்றவர்களுக்கும் கொடுத்து உபசரிக்கும் பண்பு தமிழர்களுக்குரியதாகும். “இட்டு கெட்டவர் யாரும் இல்லை” என்று கூறுவார்கள். அந்தளவிற்கு தானமும் தர்மமும் தலைகாக்கும் என்பது மரபு. ஆனால் விவிலியத்தில் சுயநலமாக விருந்துண்டவர் கொடிய வேதனைக்கு உள்ளாகிறார்.

லூக்கா 16: 14-16 மண்ணக விருந்துக்கு எடுத்துக்காட்டு பணக்காரன்; விண்ணக விருந்துக்கு எடுத்துக்காட்டு ஏழை லாசரும் ஆவர். செல்வர் ஒருவர் இருந்தார். அவர் விலையுயர்ந்த மெல்லிய செந்நிற ஆடை அணிந்து நாள்தோறும் விருந்துண்டு இன்புற்றிருந்தார். மண்ணகத்தில் விருந்துண்ட இவர் மரிக்கின்றார். இந்த செல்வர் பாதாளத்தில் வதைக்கப்பட்டபோது அண்ணாந்து பார்த்துத் தொலைவில் ஆபிரகாமையும் அவரது மடியில் இலாசரையும் கண்டார். அவர், "தந்தை ஆபிரகாமே, எனக்கு இரங்கும். இலாசர் தமது விரல் நுனியை நீரில் நனைத்து எனது நாவைக் குளிரச்செய்ய அவரை அனுப்பும். ஏனெனில் இந்தத் தீப்பிழம்பில் நான் மிகுந்த வேதனைப்படுகிறேன்" என்று உரக்கக் கூறினார். அதற்கு ஆபிரகாம், "மகனே, நீ உன் மண்ணக வாழ்வில் நலன்களையே பெற்றாய். அதே வேளையில் இலாசர் இன்னல்களையே அடைந்தார். அதை நினைத்துக் கொள். இப்பொழுது அவர் இங்கே ஆறுதல் பெறுகிறார். நீயோ மிகுந்த வேதனைப்படுகிறாய்.

மண்ணகத்தில் சுயநலத்தோடு விருந்துண்டு இன்புற்றவர்கள் விண்ணகத்திற்கு நுழையமுடியாத சூழல். அத்தோடு ஒரு சொட்டு தண்ணிக்கு ஏங்குவதை பார்க்கின்றோம். நாம் ஏற்பாடு செய்யும் விருந்து நமக்கு எத்தகைய பரிசை அளிக்கப்போகின்றது. உங்களது விருந்துக்கு யாரையெல்லாம் நீங்கள் அழைக்கின்றீர்கள்?

விரு: விரும்பியவர்களை விருந்துக்கு அழைத்தல் சந்தோசம் மிகுதியாகும்.

வழக்கமாக நம்முடைய விருந்துகளில் நாம் விரும்பியவர்களையே நாம் அழைக்கின்றோம். மார்த்தா யேசுவையும், அவருடைய சீடர்களையும் தங்களது வீட்டிற்கு அழைத்து விருந்து படைக்கின்றார். அவர்களது சந்தோசம் இரட்டிப்பாகின்றது. சக்கேயு இயேசுவை பார்க்க விரும்புகின்றான். விரும்பியவரை அழைத்து வந்து தனது வீட்டில் .யேசுவுக்கு விருந்து அளிக்கின்றார். ஆபிரகாமின் மகனாக மாறுகின்றான். உங்களுக்கு பிடித்தவர்களை மட்டும் விருந்துக்கு அழைத்தால் மீண்டும் உங்களை அழைப்பார்கள் அதனால் உங்களது சந்தோசம் இரட்டிப்பாகும். ஆனால் உங்களுக்கு வரும் கைமாறு என்ன?

விருந்: விருந்தின் மேன்மை விரும்பியவர்களை மட்டுமல்ல விரும்பாதவர்களையும் அழைப்பது தான்

கடந்த மே மாதம் ஒரு குருவனவர் தன்னுடைய 25-வது குருத்துவ நாளுக்கு பல மனிதர்களை வரவழைத்து விருந்து ஏற்பாடு செய்திருந்தார். நாங்களும் அங்கு சென்றிருந்தோம். அந்த விருந்துக்கு ஆயர், குருக்கள், கன்னியர்கள், பங்கு மக்கள் என பலரும் வந்திருந்தனர். ஒருவர் அந்த குருவானவரைப் பார்த்து உங்களது பெற்றோர்கள், உங்களது சகோதர சகோதரிகள் யாரையுமே கானோமே என்றார். அதற்கு அவர் நான் அளிக்கும் விருந்திற்கு அவர்கள் தகுதியற்றவர்கள். சொத்து பிரட்சனையில் என் தந்தை எனது தம்பிகளுக்கும் ஆதரவாக பேசி என்னை அசிங்கப்படுத்திவிட்டார். எனவே அவர்களை நான் அழைக்கவில்லை என்றார். விருந்து என்பது விரும்பியவர்களை மட்டுமல்ல நாம் விரும்பாதவர்களையும் அழைத்து உபசரிப்பது தான் விருந்தின் மேன்மையாகும்.

ஒரு அரசர் தன்னுடைய மகனுக்கு திருமண விருந்து ஏற்பாடு செய்து தான் விரும்பியவர்கள் அனைவரையும் அழைக்கின்றார். ஆனால் அழைப்பு பெற்றவர்களோ ஓதோவொரு காரணத்தைச் செல்லி தங்களது போக்கில் சென்றுவிடுகின்றனர். எனவே அரசர் தான் விரும்பாத அனைவரையும் அழைத்து விருந்து கொடுக்கின்றார். “அரசர் தம் பணியாளர்களிடம், "திருமண விருந்து ஏற்பாடாகி உள்ளது. அழைக்கப் பெற்றவர்களோ தகுதியற்றுப் போனார்கள். எனவே நீங்கள் போய்ச் சாலையோரங்களில் காணும் எல்லாரையும் திருமண விருந்துக்கு அழைத்து வாருங்கள்" என்றார். இவ்வாறு அழைப்புப் பெற்றவர்கள் பலர், ஆனால் தெரிந்தெடுக்கப்பட்டவர்களோ சிலர் (மத்தேயு 22:114)

தமிழர்கள் புதிதாக வரும் வழிப்போக்கர்கள் அமர்ந்து இளைப்பாறி விருந்துண்டு செல்வதற்காகவே வீட்டிற்கு முன்பு திண்ணை அமைத்து வீட்டைக் கட்டியுள்ளனர். இல்லத்தில் இருக்கும் மக்கள் விருந்தினரை அன்போடு உபசரித்தனர். இன்று நாம் விரும்பியவர்களையும் அழைப்பதில்லை, விரும்பாதவர்களையும் நம்முடைய விருந்துக்கு அழைப்பது இல்லை.


விருந்து: நம்முடைய வழக்கப்படி இரண்டு வகையான விருந்துகள் நமது சமூதாயத்தில் உள்ளன. சந்தோச விருந்து, துக்க விருந்து. விருந்தில் மறையும் துக்கம், விருந்தில் மலரும் மகிழ்ச்சி.

விருந்தில் மறையும் துக்கம்: ஆண்டவர் இயேசு தான் பாடுபடுவதற்கு முன்பு அவர் அவர்களை நோக்கி, "நான் துன்பங்கள் படுமுன் உங்களோடு இந்தப் பாஸ்கா விருந்தை உண்பதற்கு மிக மிக ஆவலாய் இருந்தேன் எனக் கூறி தன் சீடர்களுக்கு விருந்து ஏற்பாடு செய்கின்றார். இந்த விருந்து ஆண்டவரின் துக்கத்திற்கு ஆறுதலாய் இருந்தது. அதைப்போலவே துக்க வீடுகளில் நாம் பங்கெடுக்கும் விருந்து துக்க வீட்டாருக்கு ஆறுதலையும், மனதைரியத்தையும் அளிக்கின்றது. கிராமங்களில் யாரவது ஒருவர் இறந்துவிட்டால் வந்திருக்கும் உறவினர்களுக்கு இறந்த வீட்டார் உணவளிப்பது இயலாத காரியம். எனவே அந்த ஊரில் உள்ளவர்கள் விருந்து தயாரித்து தொலைதூரத்தில் இருந்து வந்தவர்களுக்கு உணவளிப்பர். அத்தோடு அடக்க சடங்குகள் முடிந்த பின்பு அனைவருக்கும் விருந்து அளிப்பர். இதைத்தான் சபை உரையாளர் 7 : 2 விருந்து நடக்கும் வீட்டிற்குச் செல்வதைவிடத் துக்க வீட்டிற்குச் செல்வதே நல்லது. ஏனெனில், அனைவருக்கும் இதுவே முடிவு என்பதை உயிருடன் இருப்போர் அங்கே உணர்ந்துகொள்வர்.

விருந்தில் மலரும் மகிழ்ச்சி: இது குடும்பத்திலும், கோவிலிலும் விருந்து பரிமாறப்படும். விருந்து என்றாலே இது ஒரு மகிழ்ச்சியான தருணம். இதை வள்ளுவர் “மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து நோக்கக் குழையும் விருந்து” என்கிறார் வள்ளுவர் அதாவது எம் வீடு தேடி வருகின்ற விருந்தாளிகளை நண்பர்களை உறவினர்களை மகிழ்வோடு இருகரம் கூப்பி வரவேற்கவேண்டும் என்றும் விருந்தினர்களை உபசரிப்பது பெரும்பாக்கியம் அதனால் வரும் மகிழச்சிக்கு எல்லையே இல்லை என்கிறர் வள்ளுவர். லூக்கா நற்செய்தியில் காணாமல் போன மகனை மீன்டும் கண்டுபிடித்த தந்தை காணாமல் போயிருந்த என் மகன் மீண்டும் கிடைத்துள்ளான் வாருங்கள் மகிழ்ந்து விருந்து கொண்டாடுவோம் என்கிறார். தந்தையின் விருந்து மகிழ்ச்சியை கொடுத்தது.

பிரியமானவர்களே ஆண்டவர் இயேசுவும் ஒவ்வொருநாளும் அவருடைய பிள்ளைகளாகிய நமக்கு அவருடைய உடலையும் இரத்தத்தையும் நமக்கு விருந்தாக கொடுக்கின்றார். ஆண்டவரின் விருந்தில் நாம் எப்படிப்பட்ட மனநிலையில் நாம் பங்கெடுக்கின்றோம். மண்ணக வாழ்வில் நாம் கொடுக்கும், பங்கெடுக்கும் ஆண்டவரின் திருவிருந்து நமது விண்ணக வாழ்விற்கு முன்சுவையாக இருக்கின்றது. ஆண்டவரின் திருவிருந்து நமக்கொல்லாம் அருமருந்து. ஆனால் இன்றைய மக்கள் எவ்வாறு திருவிருந்தில் பங்கெடுக்கின்றனர்.

சிகரெட், மது, வெற்றிலை பாக்கு, போன்றவற்றை அருந்திவிட்டு நற்கருணையை பெறும் மக்கள்
தீய வார்த்தைகளை பேசிவிட்டு தீய நாவில் நற்கருணையை பெறும் மக்கள்,
பொய், புறனி பேசிவிட்டு நல்லவர்கள் போல நற்கருணையை பெறும் மக்கள்

ஆனால் ஆண்டவரின் திருவிருந்தில் நாம் எப்படி பங்கெடுக்க வேண்டும் என தூய பவுல் 1 கொரிந்தியர் 11:27-29-ல் “எவராவது தகுதியற்ற நிலையில் இந்த அப்பத்தை உண்டால் அல்லது ஆண்டவரின் கிண்ணத்தில் பருகினால், அவர் ஆண்டவரின் உடலுக்கும் இரத்தத்திற்கும் எதிராகக் குற்றம் புரிகிறார். எனவே ஒவ்வொருவரும் தம்மையே சோதித்தறிந்த பின்பே இந்த அப்பத்தை உண்டு கிண்ணத்தில் பருக வேண்டும். ஏனெனில், ஆண்டவருடைய உடல் என உணராமல் உண்டு பருகுபவர் தம் மீது தண்டனைத் தீர்ப்பையே வருவித்துக் கொள்கிறார்” என நமக்கு தெளிவுபடுத்துகின்றார்.


மண்ணக விருந்தையும், விண்ணக விருந்தையும் அன்றாடம் உட்கொள்ளும் நாம். மண்ணக விருந்தில் மனித உறவுகளையும், விண்ணக விருந்தில் கடவுளின் உறவையும் வளர்ப்போம். உறவை வளர்க்கும் விருந்தில் தூய உள்ளத்தோடு பங்கெடுப்போம்.