இவ் மறையுரையை வழங்குபவர்

அருட்பணி. வேத போதக சகாய செல்வராஜ் (கப்புச்சின் )
Burkina Faso, West Africa.
vedasahayam1982@gmail.com

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)









பொதுக்காலத்தின் ஆறாம் ஞாயிறு

சபிக்கப்பட்டோரெல்லாம் பேறுபெற்றோர் ஆகலாமா?

எரேமியா 17:5-8
1கொரிந்தியர் 15:12,16-20
லூக்கா 6:17,20-26

பொதுக்காலத்தின் ஆறாம் ஞாயிறு இறையேசுவில் பிரியமானவர்களே இன்று நாம் ஆண்டின் பொதுக்காலத்தின் ஆறாம் ஞாயிறை சிறப்பிக்கின்றோம். இன்றைய வாசகங்கள் அனைத்தும் சபிக்கப்பட்ட அனைவரும் பேறுபெற்றோராக வாழவும், பேறுபெற்றவர்கள் தங்கள் ஆசீர்வாதத்தில் நிலைத்து நிற்க்கவும் இன்றைய வாசகங்கள் நமக்கு அழைப்பு விடுக்கின்றது.

ஒருமுறை உளவியல் வகுப்புகள் நடந்து கொண்டிருந்த நேரம் அது. அந்த வகுப்பில் 20 மாணவர்கள் பங்கேற்றார்கள். அதை வழிநடத்துபவர் இவர்களை இரண்டு குழுவாகப் பிரித்து ஒவ்வொரு குழுவிற்கும் ஒரு வேலையானது கொடுக்கப்பட்டது. அதாவது முதல் குழுவில் உள்ள பத்து நபர்கள் அங்கு அந்த தோட்டத்தில் உள்ள ஒரு பகுதிக்கு சென்று ‘இந்த ரோஜாப்பு செடி எவ்வளவு அழகாக இருக்கிறது! இதனுடைய இதழ்கள் எவ்வளவு மென்மையாக இருக்கின்றன! இந்த பூக்கள் அனைத்துமே வெவ்வேறு விதமான வண்ணங்களில் பூத்துக் குலுங்குகிறது! இந்த ரோஜாப்பு செடி மிகவும் அழகாக இருக்கிறது!’ என்று அந்த ரோஜாச் செடியை இவர்கள் பாராட்ட வேண்டும். அதே வேளையில் மற்ற பத்து நபர்கள் மற்றொரு இடத்திற்குச் சென்று மற்ற ரோஜாச் செடிகளை பார்த்து ‘இந்த செடியில் முட்கள் நிறைய இருக்கின்றன… இதழ்கள் எல்லாம் வாடி தொங்குகின்றன… இந்த வண்ணங்கள் எதுவுமே சரியாக கிடையாது… பூக்களெல்லாம் பூச்சி அரித்து கிடக்கின்றன…’ என்று சொல்லி அந்த பத்து நபர்களும் செடிகளிடம் பேசவேண்டும். இப்படியாக ஒரு வாரம் கடந்து சென்றது. ஒரு வாரத்திற்கு பிறகு வகுப்பிலே இருந்த எல்லா மாணவர்களும் ரோஜா தோட்டத்திற்குச் சென்று பார்த்த பொழுது அவர்களுக்கு ஆச்சரியம் மேலோங்கி இருந்தது.

பாராட்டிய ரோஜ செடிகள் எல்லாம் பூத்து குலுங்கியது. இன்னும் அதிக மொட்டுக்கள் அந்த ரோஜாச் செடிகள் முழுவதும் இருந்தன. மற்ற அனைத்து செடிகளைக்காட்டிலும் இந்த செடிகள் பார்ப்பதற்கு அழகாக இருந்தது. அதே நேரத்தில் சபிக்கப்பட்ட ரோஜா செடிகள் அனைத்துமே கருக ஆரம்பித்து விட்டன . பூக்களெல்லாம் வாடி தொங்கிக் கொண்டிருந்தன. ஒரு சில செடிகள் பட்டு போகின்ற அளவிற்கு சென்றுவிட்டன. இதை பார்த்த அந்த ஆசிரியர் சொன்னார் நாம் ஒன்றை பாரட்டும் போது அது அழகுபெறுகிறது. ஆனால் நாம் ஒன்றை சபிக்கும் போது அது அழியத்தொடங்குகின்றது.

ஆம் பிரியமானவர்களே இன்று நாம் பேறுபெற்ற மனிதர்களாக இருக்கின்றோமா? அல்லது சபிக்கப்பட்வர்களாக இருக்கின்றோமா? என்று சிந்தித்துப் பார்க்க கடவுள் நமக்கு அழைப்பு விடுக்கின்றார்.
இன்றைய முதல் வாசகத்தில் எரேமியா இறைவாக்கினரும், நற்செய்தியில் ஆண்டவர் இயேசுவும் பேறுபெற்றவர்களையும், சபிக்கப்பட்டவர்களையும் நமக்கு கோடிட்டு காட்டுகின்றார்.


பேறுபெற்ற மனிதர்கள்:
01. முதலாவதாக ஏழைகள் அனைவரும் பேறுபெற்றோர்.
யாரெல்லாம் ஏழைகள்?
இந்தியாவில் 2020 ம் ஆண்டு கணக்குப்படி 130 கோடி மக்களில் 80 கேடி பேர் ஏழைகள் என நிதியமைச்சரும், பிரதமரும் கூட்டாக அறிவித்திருந்தனர். இவர்கள் அனைவரும் வறுமை கோட்டிற்கு கீழே உள்ளவர்கள். இவர்களை ஏழைகள் என அரசாங்கம் முடிவுசெய்து அறிவித்தது. இது முதல் வகையான ஏழைகள். இவர்களுக்கு கடவுள் மட்டுமே துணை. எந்நேரமும் கடவுளை நம்பியே வாழ்பவர்கள். எனவே இவர்களை பேறுபெற்றவர்கள் என்கிறார் கடவுள்.

இரண்டாவது வகை ஏழைகள்
இவர்களிடத்திலே சொத்துகள் இருக்கலாம், பணம், பதவி, பட்டங்கள் இருக்கலாம். வசதி வாய்புகள் இருக்கலாம். ஆனால் இவைகள் எல்லாம் இருந்தும் ஒருகட்டத்தில் இவர்கள் சம்பாதித்த, சேர்த்துவைத்த எந்த சொத்துகளும் இவர்களை காப்பாற்றாத போது எல்லாம் இருந்தும் ஏழைகளே!. கொரோனா நோயின் போது மக்களின் சொத்துக்களும், அவர்கள் சேர்த்த வைத்த எதுவும் அவர்களை காப்பாற்றவில்லை. இந்த நேரத்தில் கடவுள் மட்டுமே துணை என்று நம்பி வாழ்ந்தவர்கள் பேறுபெற்றவர்களே!. எல்லாம் இருந்தும் கடவுளின் முன் ஏழைகளே!

02. பட்டினியாய் இருப்போரே நீங்கள் பேறுபெற்றவர்கள்:
உடலுக்கு உணவு கிடைக்காமல் பசித்திருபோர் அனைவரும் பட்டினியாய் இருப்போர் ஆவர். கொடுமையிலும் மிக கொடுமையானது பசியாய், பட்டினியாய் இருப்பது தான். இதை உணர்ந்த இயேசு மாற்கு 8:3-ல் இந்த மக்கள் மூன்று நாட்களாக என்னோடு இருக்கின்றனர். நான் இவர்களை பட்டினியாக அனுப்ப முடியாது நீங்களே இவர்களுக்கு உணவு கொடுங்கள் என்கிறார். இப்படி பசியாலும், பட்டினியாலும் உள்ள மனிதர்கள் அனைவரும் பேறுபெற்றவர்கள் என்கிறார் கடவுள். இவர்கள் முதல் வகை பட்டினி உடல் பசியை கொண்டவர்கள்.

இண்டாவது பசியாக இருப்போர் இறைவார்த்தையின் தாகத்தில் பட்டினியாய் இருப்போர். தொடக்ககால கிறித்தவர்களைப் போன்று இன்றும் இறைவார்த்தை தாகத்தில், பட்டினியாய் இருப்போர் பேறுபெற்றவர்கள். உதாரணமாக ஜெபிக்க மனம் இருந்தும் அதற்கான சூழ்நிலை இல்லாத போது அவர்களும் பேறுபெற்றவர்களே! திருப்பலிக்குச் சென்று நற்கருணை உட்கொள்ள வேண்டும் என்ற ஆவல். ஆனால் உடல் நிலை காரணமாக ஆசை நற்கருணை பெறுபவர்கள் பேறுபெற்றவர்களே!. வெளிநாடுகளில் ஞாயிறு திருப்பலி காண முடியாத சூழலில் அன்று இறைவார்த்தை படித்து தியானிக்கும் போது அவர்கள் பேறுபெற்றவர்களே!

03.அழுது கொண்டிருப்போரே நீங்கள் பேறுபெற்றவர்கள்.
அழுகை என்பது மனிதர்களின் கூடப்பிறந்த குணங்களில் ஒன்று. அழுது கொண்டே பிறக்கிறோம். அழுதுகொண்டே வாழ்கிறோம். அழுதது போதுமென்று அடங்குகிற போது அழுதே நம்மை அனுப்பி வைக்கிறது நமது உறவும் நட்பும். அழுகை என்பது உணர்வுகளின் வெளிப்பாடு. அது வார்த்தைகளற்ற உணர்வின் மொழி என்றும் கூறுவதுண்டு. மகிழ்ச்சியாக இருந்தாலும், மனவருத்தமாக இருந்தாலும், வலியாக இருந்தாலும் அது அழுகையால் வெளிப்பட்டுவிடும். வெளிப்படாமல் மனதில் அழுத்தி வைக்கப்பட்டால் அது மன இறுக்கத்தையும் மனநலக்குறைவையும் ஏற்படுத்திவிடும். அழுதுகொண்டே பிறக்கிற குழந்தைகள்தான் ஆரோக்கியமான குழந்தைகள் என்கிறது மருத்துவ ஆய்வு. அதேநேரத்தில் அழுவதென்னவோ கோழைத்தனமென்று தவறான கருத்து நம்மிடத்தில் இருக்கிறது. அதிலும் குறிப்பாக ஆண்கள் அழலாமா? என்றுகூட நம்மிடம் கேட்பதுண்டு. அழுவது கோழைத்தனம் அல்ல அது ஆசீர்வாதம் என்கிறார் நமதாண்டவர். அழுதுகொண்டிருப்போரே நீங்கள் பேறுபெற்றவர்கள் என்கிறார் கடவுள்.

குறிப்பாக திருவாசகத்தை இயற்றிய மாணிக்கவாசகர், இறைவனிடத்தில் அழுதே காரியத்தைச் சாதித்துக்கொள்ளலாம் என்று உணர்த்தியவர். 'திருவாசகத்துக்கு உருகார் ஒரு வாசகத்துக்கும் உருகார்' என்று சொல்லப்படுவதுண்டு. 'காதலாகிக்கசிந்து கண்ணீர் மல்கி' என்று இறைவனிடத்தில் உருகும் அவர் “அழுதால் அவனைப் பெறலாமே” என்றும் நம்மை ஆற்றுப்படுத்துகிறார். உலகப்புகழ் வாய்ந்த நகைச் சுவை நடிகர் நம்மையெல்லாம் சிரிக்க வைத்தவர் சார்லி சாப்ளின். ஆனால் அவருடைய வாழ்க்கையோ சோகமயமானது. அடிக்கடிஅழுது விடுவார் அவர். “மழையில் நனைவது எனக்குப் பிடிக்கும் ஏனெனில் என் கண்ணீர் அப்போதுயாருக்கும் தெரியாது” என்பார் அவர். தன்வலி, தன்துயரம், தனதுசோகம், தனது இழப்பு, தனது தோல்விக்காகவும் அழவேண்டும். அழுகை மனதுக்கு இதம் தரும். இவர்கள் தனக்காக அழக்கூடியவர்கள். இவர்களின் அழுகைக்கு கடவுள் மட்டுமே ஆறுதல். எனவே இவர்கள் பேறுபெற்றவர்கள்.

இரண்டாவதாக அடுத்தவர்களுக்காக அழுபவர்கள். அடுத்தவருக்காகவும் கொஞ்சம் அழுங்கள். அதனால் மானுடம் மாண்புறும்.புனித மோனிக்கா தன்னுடைய மகனுக்காக அன்றாடம் அழுது புலம்பி அழுதார். அவருடைய அழுகை பேறுபெற்றது. தன் மகன் திருந்தி வாழ உதவியது. கவிக்கோ அப்துல் ரஹ்மான்,'தட்டாதே திறந்திருக்கிறது' என்ற நூலில் ‘கண்ணீர் உப்பு கலக்காவிட்டால் வாழ்க்கை சுவைக்காது’ என்பார். எனவே அடிக்கடி இல்லையென்றாலும் அவ்வப்போது அழுங்கள். பாரத்தை இறக்கி வைத்துவிட்டு பயணத்தைத் தொடருங்கள். அழுபவர்களே நீங்கள் அனைவரும் பேறுபெற்றவர்கள்.


யாரெல்லாம் சபிக்கப்பட்வர்கள்?
1. செல்வர்களே நீங்கள் சபிக்கப்பட்டவர்கள் உங்களுக்கு ஐயோ கேடு
கடந்த வாரம் திரு ராகுல் காந்தி அவர்கள் தற்பொழுது இருவேறு இந்தியாவில் நாம் வாழந்து வருகின்றோம். ஒன்று பணக்காரர்களுக்கான இந்தியா மற்றொன்று ஏழைகளுக்கான இந்தியா. 80 சதவீதமான மக்களின் வாழ்வாதாரத்தை 20 சதவிதமான மக்கள் அனுபவித்து வருகின்றனர். ஏழைகள் அடிமட்ட ஏழைகளாகவும், பணக்காரர்கள் பில்லியனர்களாகவும் மாறி வருகின்றனர். அதிலும் குறிப்பாக மக்கள் அனைவரும் கொரோனாவால் வருவாய் இழந்து தவித்த போது பெருமுதலாளிகளின் வருவாய் மட்டும் விண்ணைத்தொடும் உயரத்திற்கு வளர்ந்துள்ளது.
உதாரணமாக அதானி குழுமத்தின் சொத்து மதிப்பு 2020- 2021ம் ஆண்டில் ரூ.5.06 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. ஒவ்வொரு நாளும் ரூ.1002 கோடி சம்பாதிக்கிறது. ஆசியாவின் 2வது பணக்காரர் என்ற பெருமையையும் அதானி பெற்றுள்ளார். நாட்டின் முதல் பணக்காரரான ரிலையன்ஸ் நிறுவனத்தின் சொத்து ஒரு நாளைக்கு ரூ.163 கோடி உயர்ந்துள்ளது. தற்போது, இவர்களின் குடும்பத்தின் சொத்து மதிப்பு ரூ.7 லட்சத்து 18 ஆயிரம் கோடியாக உள்ளது. 2021 ம் ஆண்டின் கணக்குப்படி இந்தியாவில் மக்கட்தொகை 121 கோடியே இரண்டு இலட்சம் மக்கள். இந்தியாவில் ஆயிரம் கோடிக்கு மேல் சொத்து வைத்திருந்த பணக்காரர்களின் எண்ணிக்கை 1,007 ஆக உயர்ந்துள்ளது. ஒருபக்கம் ஏழைகள் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது. இன்னொரு பக்கம் பெரும் பணக்காரர்களின் சொத்து மதிப்பு, வருவாய் உயர்ந்து கொண்டே செல்கிறது.


ஆண்டவர் செல்வத்திற்கும், செல்வந்தர்களுக்கும் எதிரானவர் அல்ல; மாறாக அவர்களின் சுயநல எண்ணத்திற்கு எதிரானவர். காந்தியடிகள் சொல்வது போல இந்தியாவில் எல்லாருக்கும் போதுமான சொத்துகள் இருக்கின்றன. ஆனால் பகிர்ந்தளிகாத சூழலில்தான் இந்தியா ஏழைநாடாக இருக்கின்றது என்பார். இன்று நாம் அனைருமே ஏதோ ஒருவகையில் செல்வந்தர்கள் தான். ஆரோக்கியமான உடல் நலம், அன்பான பெற்றோர்கள், பாசமான பிள்ளைகள், தூக்கிவிடும் நண்பர்கள், இவையத்துமே நமக்கு கடவுள் கொடுத்த செல்வங்கள் தான். இந்த செல்வங்கள் அனைத்தும், தான், எனது, ஏனக்கு என்று இருக்கும் போது நாம் சபிக்கப்பட்டவர்கள். தங்களிடம் உள்ளதை இல்லாதவர்களோடு பகிரும் போது ஆசீர்வாதமிக்கவர்கள் அல்லது பேறுபெற்றவர்கள். சாபத்தை தரும் செல்வத்தை பிறருக்காக பயன்படுத்தி பேறுபெற்ற மனிதர்களாக வாழ்வோம்.

02. உண்டு கொழுத்திருப்போரே ஐயோ கேடு.
லூக்கா நற்செய்தி16:19-ல் செல்வரும் எழை இலாசரும் என்ற உவமையில் ஏழைக்கு இலாசர் என்ற பெயர் உண்டு. ஆனால் உண்டு கொழுத்த பணக்காரருக்கோ பெயர் கிடையாது. இந்த செல்வரோ நாள்தோரும் விருந்துண்டு இன்புற்றிருந்தார். ஆனால் செல்வரின் மேசையில் இருந்து கீழே விழும் உணவால் தன்னுடைய பசியாற்ற விரும்பினார். ஆனால் அது கூட இலாசருக்கு கிடைக்க வில்லை. உண்டு கொழுத்த பெயரில்லா பணக்காரன் கடவுளால் சபிக்கப்பட்டு எரிநரகத்திற்குள் தள்ளப்படுகின்றார். பசியாலும், உண்ண உணவில்லாமலும் வாழ்ந்தவர் ஆபிரகாமின் மடியில் அமர்ந்திருக்கின்றார்.

இரண்டாவதாக உண்டு கொழுத்திருப்போர் தன்னுடைய வலிமையை வலுவற்ற மனிதரின் மீது காண்பிக்கும் போது அவரும் சபிக்கப்பட்டவர் என்கிறது முதல் வாசகம். கோலியாத்தும், தாவீதும். கோலியாத் தன்னுடைய வலிமையை சிறுகுழந்தையாகிய தாவீதின் மீது காண்பிக்க தாவீதோ உண்டு கொழுத்த கோலியாத்தை கடவுளின் வல்லமையில் சாகடிக்கின்றார். எனவே உண்டு கொழுத்திருப்போரோ உங்களுக்கு ஐயோ கேடு. எனவே உங்களது வலிமையை மக்களின் நலன்களுக்காவும், கடவுளின் மாட்சிக்காகவும் பயன்படுத்துங்கள். சாபத்தில் இருந்து புண்ணியத்திற்கு வாருங்கள்.

3. சிரித்து இன்புறுவோரே ஐயோ கேடு
மகிழ்ச்சி என்பது தூய ஆவியானவரின் கொடை. தூய பவுல் எப்போதும் மகிழ்ச்சியாய் இருங்கள் என கூறுகின்றார். ஆனால் இன்று சிரித்து மகிழ்ச்சியாய் இருப்போரே உங்களுக்கு ஐயோகேடு என்கிறார் கடவுள். காரணம் சிரித்து மகிழ்வது கடவுளின் ஆசீர்வாதம் ஆனால் மற்றவர்கள் துன்பத்திலும், துக்கத்திலும், வேதனையிலும் இருக்கும் போது நாம் மகிழ்ந்து இன்புற்றிருந்தால் நாம் சபிக்கப்பட்டவர்கள்.

4. மக்கள் உங்களை புகழ்ந்து பேசும் போது ஐயோ உங்களுக்கு கேடு
மாட்சியும் புகழ்ச்சியும் கடவுள் ஒருவருக்கே. இதை உணர்ந்த ஏ.ஆர். ரகுமான் தன்னுடைய ஆஸ்கார் வெற்றியின் போது எல்லா புகழும் இறைவனுக்கே என்றார். நாம்முடைய உடல் கடவுள் உருவாக்கியது, நம்முடைய உயிர் கடவுளின் உயிர் முச்சு. இதிலே நமக்கு ஏது மாட்சி, புகழ்ச்சி. லூக்கா 17:10-ல் “நீங்களும் உங்களுக்குப் பணிக்கப்பட்ட யாவற்றையும் செய்தபின், "நாங்கள் பயனற்ற பணியாளர்கள்; எங்கள் கடமையைத்தான் செய்தோம்" எனச் சொல்லுங்கள் என இயேசு கூறுகின்றார்.

ஆம் பிரியமானவர்களே கடவுளின் பிள்ளைகளாகிய நம் அனைவரும் பேறுபெற்ற மக்களாக வாழ கடவுள் விரும்புகின்றார். எனவே சாபங்களையும், சாபத்திற்கும், கேடுகெட்ட வாழ்க்கைக்கு .இட்டுச்செல்லும் எல்லா தீய வழிகளையும் விட்டவிட்டு கடவுள் மீது நம்பிக்கை கொண்டு வாழுவோம். பேறுபெற்ற புண்ணிவார்களாக மாறுவோம்.